தந்தை, மகன் உறவை பேசும் ஆழமான உணர்வுப்பூர்வ பயணம் ‘ஃபாதர்’ திரைப்பட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!
பிரபல இயக்குநர் R. சந்துரு தயாரிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘ஃபாதர்’. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. தந்தை – மகன் இடையேயான ஆழமானதும், பல நேரங்களில் வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படாததுமான உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
டார்லிங் கிருஷ்ணா மற்றும் பன்முகத் திறமை கொண்ட திரை ஆளுமை பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை ராஜ்மோகன் இயக்கியுள்ளார். டீசர், படத்தின் உணர்வுப்பூர்வமான உலகத்தைப் பற்றிய சுவாரஸ்யமான பார்வையை வழங்குவதோடு, கதையின் மையமாக இருக்கும் தந்தை – மகன் உறவு குறித்த ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
டீசர் படத்தின் முழுக் கதையையும் வெளிப்படுத்தாமல், அதன் உணர்வுப்பூர்வமான களத்தையும், முன்னணி நடிகர்களின் வலுவான நடிப்பையும் மட்டும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் படத்தின் மையக்கருவான தந்தை – மகன் உறவு குறித்த விவாதங்கள் தொடங்கியுள்ளன. தனது இயல்பான நடிப்பாலும், நுணுக்கமான உணர்வுகளை வெளிப்படுத்தும் திறனாலும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் பிரகாஷ் ராஜ், ‘ஃபாதர்’ டீசரிலும் தனது திரை இருப்பால் கவனம் ஈர்த்துள்ளார். அவரது பார்வை, முகபாவனைகள் மற்றும் நடிப்பில் வெளிப்படும் உணர்வுகள் படத்தின் மைய உணர்வுக்கு முக்கியத்துவம் சேர்ப்பதாக அமைந்துள்ளன. மேலும், பிரகாஷ் ராஜ் – டார்லிங் கிருஷ்ணா இருவருக்கும் இடையேயான திரை உறவு குறித்தும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
‘ஃபாதர்’ படத்தின் மையத்தில் இருப்பது ஒவ்வொரு குடும்பத்தினரும் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய தந்தை – மகன் உறவு. ஒரு தந்தை தனது அன்பை எப்போதும் வார்த்தைகளால் வெளிப்படுத்துவதில்லை. பொறுப்பு, கண்டிப்பு, தியாகம், பாதுகாப்பு என குடும்பத்திற்காக அவர் அமைதியாகச் செய்யும் எண்ணற்ற செயல்களிலேயே அந்த அன்பு வெளிப்படும். அதே நேரத்தில், வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் ஒரு மகன் தனது தந்தையை வெவ்வேறு விதமாகப் புரிந்துகொள்ளக்கூடும். இந்த இருவருக்கும் இடையே அன்பு, புரிதலின்மை, எதிர்பார்ப்புகள், கருத்து வேறுபாடுகள் என பல உணர்வுகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி ஆழமான பாசப்பிணைப்பு இருக்கும். இந்த உணர்வுப்பூர்வமான இடத்தையே ‘ஃபாதர்’ திரைப்படம் ஆராய்கிறது.
குடும்பம், உறவுகள் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டுள்ள இப்படம், ரசிகர்களுக்கு மனதைத் தொடும் திரைப்பட அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொழி, நாடு, கலாச்சாரம் என எல்லைகளைக் கடந்தும் பெற்றோர் – பிள்ளைகள் இடையேயான உறவு அனைவராலும் உணரக்கூடியது என்பதால், இப்படத்தின் கதைக்கரு பொதுவான ரசிகர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
‘ஃபாதர்’ குறித்து R. சந்துரு
“‘ஃபாதர்’ எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இந்தக் கதையை கேட்ட அந்த நொடியிலேயே, இதன் மைய உணர்வு ஒவ்வொரு குடும்பத்துடனும் தொடர்புபடுத்தக்கூடியது என்று உணர்ந்தேன். தந்தை – மகன் உறவு மிகவும் தனித்துவமானது. அவர்களுக்குள் அன்பு, எதிர்பார்ப்புகள், புரிதலின்மை, கருத்து வேறுபாடுகள் என அனைத்தும் இருக்கலாம். ஆனால் இறுதியில் அவர்களை இணைப்பது ஆழமான உணர்வுப்பூர்வமான பிணைப்பு. இந்தக் கதையில் என்னை மிகவும் கவர்ந்தது, இந்த உணர்வுகள் அணுகப்பட்ட விதம்தான். ‘ஃபாதர்’ ஒரு உறவைப் பற்றி மட்டுமே பேசவில்லை. குடும்பம், அன்பு, பொறுப்பு, தியாகம் மற்றும் பல நேரங்களில் சொல்லப்படாமல் போகும் உணர்வுகளைப் பற்றியும் பேசுகிறது.
இந்தக் கதை மொழிகளைக் கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் திறன் கொண்டது என்று நான் உறுதியாக நம்பினேன். மிகுந்த நேர்மையுடனும் உணர்வுப்பூர்வமான அணுகுமுறையுடனும் இப்படத்தை உருவாக்கியுள்ளோம். டீசருக்கு கிடைத்து வரும் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. பார்வையாளர்கள் ஏற்கனவே படத்தின் மீது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். முழுத் திரைப்படம் அவர்களுக்கு இன்னும் ஆழமான உணர்வுப்பூர்வமான அனுபவத்தை வழங்கும் என்று நம்புகிறேன்.
டார்லிங் கிருஷ்ணா தனது கதாபாத்திரத்தை மிகுந்த நேர்மையுடன் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் சார் ஒரு அசாத்தியமான நடிகர். அவரது இருப்பு படத்தின் உணர்வுப்பூர்வமான உலகத்திற்கு மிகப்பெரிய ஆழத்தை சேர்த்துள்ளது. இருவரின் கூட்டணி இப்படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று. என்னைப் பொறுத்தவரை சினிமா என்பது இறுதியில் உணர்வுகளைப் பற்றியது. ஒரு கதை பார்வையாளர்களை ஏதோ ஒரு வகையில் உணர வைத்தால், அது அவர்களுடன் நீண்ட காலம் பயணிக்கும். ‘ஃபாதர்’ படத்திலும் அந்த பலத்தை நான் பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
‘ஃபாதர்’ குறித்து இயக்குனர் ராஜ்மோகன்
‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’, ‘அட்ரஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜ்மோகன், ‘ஃபாதர்’ மூலம் தந்தை – மகன் உறவின் ஆழமான உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார்.
“என்னைப் பொறுத்தவரை ‘ஃபாதர்’ ஒரு உணர்வுப்பூர்வமான பயணம். தந்தை – மகன் உறவு என்பது நிஜ வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானது. பல குடும்பங்களில் தந்தைகள் தங்களது அன்பை வெளிப்படையாகக் காட்டுவதில்லை. பொறுப்பு, அக்கறை, கண்டிப்பு அல்லது அவர்கள் செய்யும் தியாகங்கள் மூலமாகவே அந்த அன்பை வெளிப்படுத்துகிறார்கள். அந்த உணர்வுகளை ஒரு மகன் சரியான நேரத்தில் புரிந்துகொள்ளாமல் போகலாம். இந்த உணர்வுப்பூர்வமான இடத்தையே படம் ஆராய்கிறது.
அன்பால் இணைக்கப்பட்டிருந்தாலும், அந்த அன்பை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தத் தெரியாத இரண்டு மனிதர்களின் பயணம்தான் இந்தப் படம். பார்வையாளர்கள் தங்களது வாழ்க்கையில் பார்த்த அல்லது அனுபவித்த ஏதோ ஒன்றை இந்தக் கதையில் உணர வேண்டும் என்பதே எனது நோக்கம். டார்லிங் கிருஷ்ணா தனது கதாபாத்திரத்தில் முழுத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பிரகாஷ் ராஜ் சார் அசாத்தியமான ஆழத்தையும் உணர்வையும் கொண்டு வந்துள்ளார். இவர்களின் உறவுதான் படத்தின் மையம்.
டீசருக்கு கிடைத்துள்ள வரவேற்பு மிகவும் உற்சாகமளிக்கிறது. ஆனால் டீசர் என்பது ஒரு சிறிய பார்வை மட்டுமே. ‘ஃபாதர்’ படத்தின் முழுமையான பயணம் இன்னும் வலுவான உணர்வுப்பூர்வமான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும்” என்று ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
டீசருக்கு கிடைத்துள்ள நேர்மறையான வரவேற்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், படத்தைப் பார்த்து கவரப்பட்ட Macis Productions, ‘ஃபாதர்’ திரைப்படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் உள்ளடக்கம் மற்றும் ரசிகர்களிடம் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தின் மீது விநியோக நிறுவனத்திற்கு இருக்கும் நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது. R. சந்துருவின் தயாரிப்பு, ராஜ்மோகனின் இயக்கம், டார்லிங் கிருஷ்ணாவின் உணர்வுப்பூர்வமான நடிப்பு மற்றும் பிரகாஷ் ராஜின் வலுவான திரை இருப்பு ஆகியவற்றுடன் ‘ஃபாதர்’ ஒரு அர்த்தமுள்ள உணர்வுப்பூர்வமான திரைப்பட அனுபவமாக உருவாகி வருகிறது.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் இயக்குநர் தயாரிப்பாளர் இரா சரவணன் பேசியதாவது..,
“ஆகஸ்ட் 28ஆம் தேதி ‘அன்பே டயானா’ ஓடிடியிலும், ‘ஒன்ஸ்மோர்’ திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்த நாள் என் நண்பர் தயாரிப்பாளர் யுவராஜுக்கு மிக முக்கியமான நாள்.‘அன்பே டயானா’ படத்தில் என்னுடைய பணி எதுவும் இல்லாவிட்டாலும் என்னையும் தயாரிப்பாளராக இணைத்துக்கொண்ட அவரது அன்பை நான் எப்போதும் மதிக்கிறேன். ‘ஒன்ஸ்மோர்’ படத்தைப் பார்த்தபோது, கவிதை போல அவ்வளவு அழகாக இருந்ததால் எங்கேயாவது என் பெயரைப் போட்டுவிடுங்கள் என்று அவரிடம் கெஞ்சினேன்.
அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்தாலே எனக்கு பிடிக்கும். ஆனால் இந்தப் படத்தில் கதாநாயகனாக, ஹீரோவாக அவர் கலக்கியிருக்கிறார். . அவருடைய அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. அதிதி ஷங்கர் எனக்கு மிகவும் பிடித்த நடிகை. இயக்குநர் ஷங்கரின் மகள் நடிக்க வருகிறார் என்று தெரிந்தபோது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர் அறிமுகமாகும்போது சிவகார்த்திகேயனிடம் பேசி, அவருடன் இணைந்து அறிமுகமானால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். பின்னர் அவர் சிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகமாகி நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்திலும் அதிதி மிக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
தயாரிப்பாளர் யுவராஜ் எனக்கு மிகச் சிறந்த நண்பராக மாறியிருக்கிறார். அவருடைய நட்பு கிடைத்த பிறகு என்னுடைய மற்ற நண்பர்கள் எல்லாம் மறைந்துவிட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு அத்தனை நெருக்கமான நண்பராகிவிட்டார்.
ரசிகர்கள் திரையரங்கில் ‘ஒன்ஸ்மோர்’ என்று கேட்கும் அளவுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். என் நெருங்கிய நண்பர் யுவராஜுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தர வேண்டும்.”
நடிகை கலா பேசியதாவது..,
“‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் எனக்கு என்னுடைய கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியது. ‘என்னுடைய கல்லூரி நாட்களும் இப்படி இருந்திருக்கலாமே’ என்று ஏங்க வைக்கும் அளவுக்கு இப்படம் பல நினைவுகளை ஏற்படுத்தியது. ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் என்றும் மறக்க முடியாத கல்லூரி நினைவுகளைப் போல இருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் அதை மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார்.
அர்ஜுன் தாஸை வில்லனாகப் பார்த்தாலே எனக்கு பிடிக்கும். இந்தப் படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிதி எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர். அவரும் அழகாக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.
இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் பேசியதாவது..,
“மலையாளத்தில் ‘ஹிருதயம்’ திரைப்படத்திற்குப் பிறகு, தமிழில் நான் மிகவும் எஞ்சாய் செய்து பணியாற்றிய திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. தமிழில் என் முதல் படம், இப்படத்தின் ஆல்பம் முழுவதிலும் மிகுந்த கொண்டாட்டத்துடன் உழைத்தோம்.அனைவரும் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய ஒரு அழகான கதையை இயக்குநர் மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். படத்தில் பணியாற்றிய அனைவருமே மிகச் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். என்னுடன் பணியாற்றிய இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பாடல்களை எழுதிய கவிஞர் ஸ்ரீகாந்துக்கும் எனது நன்றிகள். இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் ஏற்கனவே கொண்டாடி வருகின்றனர். இந்தப் பாடல்கள் காலம் கடந்தும் ரசிகர்களால் ரசிக்கப்படும் என்று நம்புகிறேன். நன்றி.”
நடிகை சோனா பேசியதாவது..,
“இன்று எனக்கு மிகவும் முக்கியமான நாள். ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்திற்காக நான் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தேன். இப்படத்தில் எனக்கு மிகவும் முக்கியமான இந்திரா கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் மற்றும் தயாரிப்பாளர் யுவராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அர்ஜுன் தாஸ் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். நிறைய சாப்பாடு கொடுத்து என்னை சந்தோஷப்படுத்தினார். அதேபோல் அதிதியும் படப்பிடிப்பின் முதல் நாளிலிருந்தே எனக்கு மிகச் சிறந்த தோழியாக இருந்தார். அவருக்கும் எனது நன்றிகள். இப்படத்தில் உழைத்த அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் அனைவரையும் போலவே நானும் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். கண்டிப்பாக இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.”
தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசியதாவது..,
“இந்த மேடைக்காக நான் பல காலமாக காத்திருக்கிறேன். நானும் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்தும் இதற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தோம். இப்படத்திற்கு பல வெளியீட்டுத் தேதிகளைத் நிர்ணயித்தும், சில காரணங்களால் அது சரியாக அமையாமல் போனது. ஆனால் இம்முறை ஆகஸ்ட் 28ஆம் தேதி படம் திரைக்கு வருவது உறுதியாகிவிட்டது. இயக்குநர் கதை சொன்ன நொடியில் இருந்து, ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் பணியாற்றினார். அவரது திறமைக்கு இப்படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும், அவருக்கு ஒரு முக்கியமான அடையாளமாகவும் இருக்கும்.
இது ஒரு மியூசிக்கல் படம் என்பதால் இசையமைப்பாளர் குறித்து பலருடன் விவாதித்தோம். இறுதியில் ‘ஹிருதயம்’ படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாபை சந்தித்து இப்படத்தை ஒப்புக்கொள்ளச் சொன்னோம். அவர் நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார். அவரது இசையை ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்.அதிதி ஷங்கர் இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘மாவீரன்’ படத்தைப் பார்த்த பிறகு அவரை அணுகினோம். அந்தப் படத்தில் அவர் பெற்ற சம்பளத்துடன் ஒப்பிடும்போது, இப்படத்திற்காக மிகவும் குறைவான சம்பளத்தில் நடித்து, எங்களுக்கு மிகச் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார். அவருக்கு எனது நன்றிகள்.
அதேபோல் அர்ஜுன் தாஸ் இல்லாமல் இந்தப் படமே இல்லை. அவருடைய அர்ப்பணிப்பும் ஆதரவும் இப்படத்தின் மிகப்பெரிய பலம். இது அவருக்கு மிகவும் முக்கியமான பிடித்தமான படம். அவரும் இப்படத்தை மிகவும் ரசித்து நடித்திருக்கிறார். கால்ஷீட் உள்ளிட்ட எதைப் பற்றியும் கவலைப்படாமல், நாங்கள் அழைத்தபோதெல்லாம் வந்து முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.
இவர்கள் அனைவரின் அர்ப்பணிப்பும் உழைப்பும்தான் ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் பலம். எனக்கு ஆதரவாக இருந்த இயக்குநரும் தயாரிப்பாளருமான இரா சரவணன் அவர்களுக்கும், என்னுடன் இருந்து உழைத்த என்னுடைய குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள். வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி இப்படத்தை திரையரங்குகளில் கண்டுகளியுங்கள். அனைவருக்கும் நன்றி!”
இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் பேசியதாவது..,
“இந்த நாளுக்காக நான் பல காலமாகக் காத்திருந்தேன். அழுவதற்கு காலம் வந்தால் மகிழ்ச்சியாக இருக்கவும் ஒரு காலம் வரும். அந்த மகிழ்ச்சியான காலம் இதுதான். ஆகஸ்ட் 28ஆம் தேதி ‘ஒன்ஸ்மோர்’ திரைக்கு வருகிறது. இந்தத் திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அவருடைய படங்களைப் பார்த்துதான் நான் இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவருக்கான என்னுடைய லவ் லெட்டர்தான் இந்தத் திரைப்படம். இப்படத்திற்காக ஆதரவு அளித்த என்னுடைய அப்பா, அம்மா, உறவினர்கள், திரைத்துறை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடன் பயணித்து இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
இப்படத்தை எழுத ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே என் மனதில் இருந்த ஒரே நடிகர் அர்ஜுன் தாஸ். ரகு கதாபாத்திரமாக அவரை மனதில் வைத்துதான் எழுதினேன். அவர் இப்படத்தில் ரகுவாக முழுமையாக வாழ்ந்திருக்கிறார். நான் எதிர்பார்த்ததைவிட எடிட்டிங்கில் அவருடைய நடிப்பு இன்னும் புதிதாகவும் அற்புதமாகவும் இருந்தது. அதேபோல் அதிதி ஷங்கர் அவர்களுக்கும் நன்றி. படப்பிடிப்பில் பல சிரமங்களுக்கு இடையிலும் எங்களுடன் இணைந்து முழு ஆதரவு கொடுத்து மிக அற்புதமாக நடித்துக் கொடுத்தார். இந்திரா கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோனாவுக்கும் நன்றி. அவருக்கும் எனக்கும் இதுதான் அறிமுகத் திரைப்படம். பல காலமாக நாங்கள் இருவரும் இந்த நாளுக்காகக் காத்திருந்தோம். இறுதியாக அந்த நாள் வந்ததில் மகிழ்ச்சி.
இப்படத்தின் இசை மிகவும் முக்கியமானது. ‘ஹிருதயம்’ படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. காட்சிகளையும் இசையையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு அழகாக ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், என்னுடைய உதவி இயக்குநர்களுக்கும் நன்றி.
இது என்னுடைய முதல் திரைப்படம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஆகஸ்ட் 28ஆம் தேதி திரையரங்குகளில் ‘ஒன்ஸ்மோர்’ படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி!”
நடிகை அதிதி ஷங்கர் பேசியதாவது..,
“முதலில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ‘ஒன்ஸ்மோர்’ போன்ற ஒரு திரைப்படத்தை திரையில் கொண்டு வந்ததற்கும், விக்னேஷ் ஸ்ரீகாந்த் போன்ற ஒரு திறமையான இயக்குநரை அறிமுகப்படுத்தியதற்கும் அவருக்கு நன்றி.
நான் வாழ்க்கையில் மிகவும் கடினமான காலகட்டத்தில் இருந்தபோது இந்தத் திரைப்படம் எனக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து அஞ்சலியாக வாழ்ந்த ஒவ்வொரு நாளும் என்னை மனதளவில் மருந்தாக அமைந்து உற்சாகப்படுத்தியது. எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. அதனால் இந்தப் படம் எனக்கும் மிகவும் முக்கியமானது.
இப்படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஹிருதயம்’ படத்தின் மூலம் எனக்கு மிகவும் பிடித்தவர். இந்தப் படத்தில் எனக்காக ஒரு அழகான பாடலைக் கொடுத்திருக்கிறார். அந்தப் பாடல் என் மனதிற்கு மிகவும் பிடித்த பாடல்.இப்படத்தில் நடித்திருக்கும் சோனா மிகவும் அற்புதமான நடிகை. அவருடைய நடிப்பை நான் மிகவும் ரசித்தேன். அவருக்கு இன்னும் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அர்ஜுன் தாஸை முதன்முதலில் அனிருத் கான்சர்ட்டில் பார்த்தபோது, ரசிகையாக அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அப்போது அவர் என்னைப் பார்த்து சிரித்தார். இப்போது அவருடன் இணைந்து நடித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் எனக்கு மிகச் சிறந்த நண்பராகிவிட்டார். அர்ஜுன் தாஸை வித்தியாசமான கதாபாத்திரத்தில் அனைவரும் ரசித்திருப்பீர்கள். இந்தப் படத்தில் அவரை லவர் பாயாகவும் கண்டிப்பாக கொண்டாடுங்கள். அவர் நிச்சயம் உங்கள் அனைவரையும் கவருவார். ‘ஒன்ஸ்மோர்’ ஒரு அழகான டிராமா. அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்.!”
நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது..,
“விக்னேஷ் ஸ்ரீகாந்த் என்னிடம் கதை சொல்ல வந்தபோது, முதலில் ஒன்லைனை மட்டும் சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்பிறகு முழு திரைக்கதையையும் தயார் செய்துவிட்டு வருவதாகக் கூறினார். ஆனால் அவர் சொல்லாமல் விட்ட ஒரு விஷயம் இருக்கிறது. திரைக்கதையைத் தயார் செய்த பிறகு பல நிறுவனங்களிடம் இந்தக் கதையைப் பிட்ச் செய்திருக்கிறார். அப்போது பலரும், ‘அர்ஜுன் தாஸ் ஹீரோவாக வேண்டாமே, வேறு ஹீரோவை வைத்து செய்யலாமே’ என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் விக்னேஷ், ‘அர்ஜுன் தாஸ் மட்டும்தான் இந்தக் கதையில் ரகுவாக நடிக்க முடியும். அவரை வைத்துதான் இந்தப் படத்தை எடுப்பேன்’ என்று எனக்காக உறுதியாக நின்றிருக்கிறார்.
என்னை முழுமையாக நம்பி இந்தப் படத்திற்காக நின்ற இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்துக்கு எனது நன்றி. ரகு கதாபாத்திரத்தை என்னால் செய்ய முடியும் என்று நான் கூட சில நேரங்களில் நினைக்கவில்லை. ஆனால் அவர் என்னை முழுமையாக நம்பினார்.
அவருக்கு இந்தத் திரைப்படம் எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும். நாங்கள் அனைவரும் படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்த படங்களுக்குச் சென்றுவிட்டோம். ஆனால் இன்றுவரை அவர் இந்தப் படத்திற்காக தொடர்ந்து நின்றுகொண்டிருக்கிறார். இது அவருடைய அறிமுகப் படம். ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகும் இப்படம், அவருடைய திறமையை நிச்சயம் சொல்லும்.
இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஹிருதயம்’ படம் பார்த்து, அவருடைய இசை எனக்கு மிகவும் பிடித்ததால் அவருக்கு போன் செய்து பாராட்டினேன். அப்போது விரைவில் இணைந்து ஒரு படம் செய்யலாம் என்று பேசினோம். விக்னேஷ் இந்தக் கதையைச் சொன்னபோது, இது ஒரு மியூசிக்கல் படம் என்பதால் இசைக்கு முக்கியத்துவம் அதிகம் என்பதால் ஹேஷாமிடம் கேட்கலாம் என்று கூறினேன். அவர் கதையைக் கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டு, இப்படத்திற்கு மிக அற்புதமான இசையைத் தந்திருக்கிறார். அவருக்கு எனது நன்றிகள்.” இந்திரா கதாபாத்திரத்தில் நடித்த சோனாவைப் பற்றி விக்னேஷ் பல்வேறு விதமாகக் கற்பனை செய்து சொல்லிக்கொண்டே இருந்தார். இறுதியாக சோனா இந்திராவாக வந்தார். மிக அற்புதமாக நடித்திருக்கிறார். ஒரு சிறந்த தோழியாகவும் மாறிவிட்டார். இந்தத் திரைப்படம் அவருக்கு மிகச் சிறந்த அடையாளமாக இருக்கும். அதேபோல் அதிதி ஷங்கர் இந்தப் படத்திற்கு தேவையான அந்த எனர்ஜியை அற்புதமாகக் கொண்டு வந்திருக்கிறார். படப்பிடிப்பின் முதல் நாளில் ‘வாங்க சார்’ என்று அழைத்தவர், அடுத்த நாளிலிருந்தே ‘வாடி’ என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கமான தோழியாகிவிட்டார். அவருடைய நட்பு கிடைத்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. பல பிரச்சனைகளைச் சந்தித்தபோதும், இப்படத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் நின்ற தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கும், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும் நன்றி. இந்தப் படம் அந்த நிறுவனத்தின் வெற்றிச் சரித்திரத்தில் இடம்பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். யுவராஜ் கணேசன் அவர்களுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தரட்டும்.‘ஒன்ஸ்மோர்’ அழகான காதலைச் சொல்லும் ஒரு உண்மையான டிராமா. எனக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி!”பான் இந்திய அளவில் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ராஜ்கமல் கலை இயக்கத்தை கவனித்துள்ளார். நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள நிலையில், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ளார்.பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சிதாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தி ஒன் ‘சூர்யா’ நடிப்பில் தயாராகி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் – பிரம்மாண்டமான வெற்றியை பெற்று ரசிகர்களின் பேராதரவுடன் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த படக்குழுவினர், படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதனை முன்னிட்டு, சென்னையில் படக்குழுவினர் பங்கேற்ற பிரத்யேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விநியோகஸ்தர் ஹரிதா லிங்கசாமி, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், நடிகைகள் ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ, மமீதா பைஜூ, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் வெங்கி அட்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
” கடந்த 23 வருடங்களாக பேச்சு தான் என் வாழ்க்கையாக இருந்திருக்கிறது. ஏனெனில் நான் ஒரு ஆர்ஜே (RJ). இதுவரை ஆயிரக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளேன். திரைப்பட இயக்குநராகவும் மேடை ஏறி இருக்கிறேன். இணைய தொடரை இயக்கியதற்காகவும் மேடை ஏறி இருக்கிறேன். ஆனால் முதன்முறையாக பாடலாசிரியராக இந்த முறை மேடை ஏறி இருக்கிறேன். இது எனக்கு மிக முக்கியமான மேடை ஆகும். இது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது.
இந்தப் படத்தில் நானும், அருண் ராஜா காமராஜும் முதன்முறையாக இணைந்து பாடல்களை எழுதி இருக்கிறோம்.
சினிமாவிற்காக எந்த மேடை ஏறினாலும் நான் முதலில் நன்றி சொல்வது ஜி வி பிரகாஷ் குமாருக்கு தான். 2003 ஆம் ஆண்டில் அவர் ‘வெயில்’ படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருந்தபோது, ‘உருகுதே மருகுதே’ பாடலை போட்டுக் காண்பித்து இந்தப் பாடல் ரீச்சாகுமா? என என்னிடம் கேட்டிருக்கிறார். ஆனால் இப்போது அவர் எந்த அளவிற்கு ரீச் ஆகி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். மூன்று தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார்.ஜி வி என்னுடைய நண்பர் என்பதைவிட என்னுடைய ஆசான். தற்போதுள்ள இளம் தலைமுறை இசைக் கலைஞர்களிடையே இசையின் அனைத்து விசயங்களையும் , நுட்பங்களையும் தெரிந்து இந்தியாவில் தயாரான அனைத்து ஜானரிலான படங்களுக்கும் இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் தான். எனக்கு இந்த திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கிய ஜிவிக்கும், இயக்குநர் வெங்கி அட்லூரிக்கும் நன்றி.
ஜி.வி. பிரகாஷ் மூலமாக எனக்கு அறிமுகமான ஆகச் சிறந்த மனிதநேய பண்பாளர் தான் வெங்கி அட்லூரி. நீங்கள் பார்த்து ரசித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம்- வெங்கியுடைய ஆர்ட் அல்ல…. ஹார்ட். இந்த படத்தின் திரைக்கதையை நான் ஓராண்டுக்கு முன்பே வாசித்து விட்டேன். வாசிக்கும் போதே பல இடங்களில் கண்கலங்கினேன். அதை அப்படியே திரையில் நேர்த்தியாக கடத்தி இருக்கிறார். அவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. இந்த வாய்ப்பு வழங்கியதற்காக அவருக்கும் நன்றி.
சூர்யாவை 2003 ஆம் ஆண்டில் ‘கஜினி’ படத்திற்காக நேர்காணல் செய்தேன். நேர்காணலுக்காக ஒப்புக்கொண்ட நேரத்தை விட ஐந்து நிமிடம் தாமதமாக வந்தார். அதற்கும் அவர் காரணம் இல்லை. எங்கள் அலுவலகத்தில் இருந்த – இயங்கிய லிஃப்ட் தான் காரணம். அதற்கு அவர் வந்தவுடன் வருத்தம் தெரிவித்தார். ஐந்து நிமிடம் தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும் என்று சொன்ன அந்த பண்பு… என்னை வியக்க வைத்தது. அவருடைய அந்த மனித நேயம் தான் இன்றும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்வதற்கு காரணம். அதுவும் இந்தப் படத்தில் மக்கள் சூர்யாவை அதிக அளவு நேசித்தார்கள், விரும்பினார்கள், ஒரு குடும்பஸ்தனாக சூர்யாவை திரையில் காண்பித்த இயக்குநர் வெங்கி அட்லூரிக்கு ஒரு நன்றி.
படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பைக் காண திரையரங்கத்திற்கு சென்ற போது அங்கு ரசிகர்களின் அன்பும், ஆதரவும் எங்களை உற்சாகப்படுத்தியது. தி ஒன் ‘சூர்யா’ போன்ற மாபெரும் நட்சத்திர நடிகர் இது போன்றதொரு ஜானரில் ஒரு படத்தில் நடிப்பதற்கு நிறைய துணிச்சல் வேண்டும். அது அவரிடம் இருக்கிறது. அதற்காக அவருக்கும் நன்றி” என்றார்.
நடிகை பவானி ஸ்ரீ பேசுகையில்,
” மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இந்தப் படத்தில் ஒரு சிறிய பங்காக நான் இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு இந்த படத்தில் சிறிய கதாபாத்திரம் தான். ஆனால் அதையும் இயக்குநர் நன்றாக எழுதியிருந்தார். மேக்னா என்ற அந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு நன்றி.
சிறிய வயதிலிருந்து திரையில் பார்த்து வியந்த நட்சத்திர நடிகரான தி ஒன் சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறோம் என்றவுடன் எனக்குள் பயம் இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் இயல்பாக பேசி, ‘மேக்னா கதாபாத்திரம் நல்ல கதாபாத்திரம், அதில் சிறப்பாக நடிக்க வேண்டும்’ என ஊக்கம் கொடுத்தார். அவர் அப்படி சொன்ன பிறகு, எனக்குள் இருந்த பயம் நீங்கி இயல்பாகி விட்டேன். அவருடன் இணைந்து பணியாற்றிய நாட்கள் மறக்க முடியாதது.
இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார் – மமீதா பைஜூவும் இரண்டு பவர் ஹவுஸ். திரையில் பார்த்தபோது இவர்களுடன் இருக்க வேண்டும் என்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் முத்துக்கள் போல் இருந்தது. ரவீனா மேடத்துடன் பணியாற்றியதும் நல்ல அனுபவமாக இருந்தது. ஊட்டியில் படப்பிடிப்பு நடைபெற்ற அனைத்து நாட்களும் மறக்க முடியாதவை. அனைவருக்கும் நன்றி” என்றார்.
நடிகை ராதிகா சரத்குமார் பேசுகையில்,
” இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி.
இந்தக் காலத்தில் மற்றவர்களின் கவனத்தை கவர்ந்து அதை தக்க வைத்துக் கொள்வது என்பது குறைந்துவிட்டது. ஒரு நிமிடத்திற்கு மேல் யாரிடமும் பேச முடிவதில்லை. ஆனால் ரசிகர்களை அன்பாலும் … பாசத்தாலும்… ஒரே சிந்தனையுடன் இந்தப் படத்தை நிதானமாக கதையை சொல்லி.. அதில் ஒரு வெற்றியை பெற்று, அந்த மேடையில் நான் நின்று கொண்டிருக்கிறேன். இதை கேட்கும் போதும்… பேசும் போதும்… பெருமிதமாக இருக்கிறது. இந்த வெற்றியை அளித்த படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
இயக்குநர் வெங்கி இந்தப் படத்தின் கதையை ஒவ்வொரு காட்சியாக சொல்லும் போது அவரிடம், ‘இந்த காட்சிகளில் எல்லாம் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டாரா?’ என கேட்டேன். அவர் இந்த காட்சிகளில் எல்லாம் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டார் என என்னிடம் சொன்னார்.
அதன் பிறகு இயக்குநரிடம் ‘இந்த படத்தில் ஹீரோயின் அழகாக இல்லை என்றால்… இந்த படம் ஓடாது’ என்று சொன்னேன். அப்போது நாங்கள் அதற்காக பொருத்தமான நடிகையை தேடிக் கொண்டிருக்கிறோம் என்றார். அப்போது ஒரு நாள் ‘டியூட்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருந்தேன். அப்போது மமீதாவை அங்கு பார்த்தேன். அதன் பிறகு சரத்குமார் சார் மிகத் திறமையான பெண், நன்றாக நடிக்கிறார் எனச் சொன்னார். அதன் பிறகு இயக்குநர் வெங்கி அட்லூரி மமீதா தான் ஹீரோயின் என்று சொன்னவுடன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இந்தப் படத்தை அனைவரும் பார்த்து இருக்கிறார்கள், ரசித்திருக்கிறார்கள். பல்வேறு விமர்சனங்களும் வந்திருக்கின்றன. அது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தை நானும், சரத் சார் திரையரங்கில் பார்த்தோம் . அவர் எந்த படத்தை பார்த்தாலும் ஏதாவது குறையை கண்டுபிடித்து அதனை இப்படி செய்திருக்கலாம். ..!அப்படி செய்திருக்கலாம் .. !என விமர்சனம் செய்வார். ஆனால் இந்த படத்தை பார்த்தவுடன் ‘ஐ லவ் திஸ் மூவி. நன்றாக இருக்கிறது’ என்றார்.
இந்தப் படத்தில் ஹீரோவிற்கு அவர்களுடைய அம்மா தான் உலகம். அம்மா உயிருடன் இருக்கும் வரை வேறு யாருடனும் பழகமாட்டார். ஆனால் அம்மா உயிரிழந்த உடன் அவருக்குள் ஏற்படும் அதிர்ச்சி… அடுத்த உறவுகளை நோக்கிய அவரது பயணம்.. இந்த காட்சியில் வெங்கியை மனதார பாராட்டுகிறேன். அவருடைய ‘லக்கி பாஸ்கர்’ படத்தை பார்த்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் இந்தப் படத்தில் ஒரு புத்திசாலித்தனமான எழுத்து இருந்தது.
கமல்ஹாசனை நேற்று கூட சந்தித்தேன். அப்போது அவர் புத்திசாலித்தனமாக எழுதுவது எப்படி? என்பது குறித்து பயிற்சியும் விவாதமும் நடத்தப்பட வேண்டும் என்றார்.
சினிமாவில் ஒவ்வொரு கதைக்கு பின்னால் ஒரு குடும்பம் இருக்கும். அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் கஷ்டப்பட்டு வேலை செய்து வெற்றியடைய செய்ய வேண்டும் என்ற கனவு எல்லோருக்கும் இருக்கும். அந்த குடும்பத்திற்குள் ஒரு பந்தம் இருக்கும். அது சில படங்களில் முழுவதுமாக அமையும். அப்படி ஒரு திரைப்படம் தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படத்தில் அனைவரும் ஒரு குடும்பமாகத்தான் இணைந்து பணியாற்றினார்கள்.
ஜிவி பிரகாஷ் குமார் ஒரு ஜீனியஸ்.சிவக்குமாருடன் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். இந்த திரைப்படம் ‘அவன் அவள் அது’ என்ற திரைப்படத்தின் வேறு ஒரு வெர்சன் என்று சொன்னேன். இதைப்போல் இந்தப் படத்தைப் பார்த்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான நினைவுகளை தூண்டி இருக்கிறது.
ஒரு நல்ல குடும்ப படம் என்று நான் பார்த்தது ‘சூரியவம்சம்’. அது அந்த காலகட்டத்தில். அதற்குப் பிறகு நான் ரொம்ப ரசித்த படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் புத்திசாலித்தனமாக பேசும். ஒவ்வொரு கதாபாத்திரமும் தனக்கான நியாயத்துடன் நேர்மையாக பேசும். இதற்காக மீண்டும் ஒருமுறை வெங்கிக்கு நன்றி சொல்கிறேன். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அவர் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் ” என்றார்.
நடிகை மமீதா பைஜூ பேசுகையில்,
” விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். எனக்கு ஆதரவாக இருந்ததற்கும், வழிகாட்டியாக இருப்பதற்கும் நன்றி. சூர்யா சார்யை மிஸ் செய்கிறோம். இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி.
இதுவரை இந்தப் படத்தை பார்க்காதவர்கள் திரையரங்கத்திற்கு சென்று பாருங்கள் பார்க்க வேண்டும். இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது மனதிற்குள் ஒரு மன நிறைவு ஏற்படும்” என்றார்.
இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் பேசுகையில்,
” இந்தப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி.
அடுத்த நன்றி இயக்குநர் வெங்கி அட்லூரி – க்கு அவருடன் ‘வாத்தி’ படத்தில் தான் முதன் முதலாக இணைந்தேன். அந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது .அதற்குப் பிறகு அவருடன் இணைந்து லக்கி பாஸ்கரில் பணியாற்றினேன். அந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் இணைந்தேன். தொடர்ந்து மூன்று படங்களும் வெற்றி பெற்று, ஹாட்ரிக் அடித்திருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி.
‘வாத்தி’ திரைப்படத்தின் பாடல்- தமிழ், தெலுங்கு என இரண்டு மாநிலங்களிலும் வெளியானது. வெளியாகி வெற்றி பெற்றது. இதற்காக எனக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதன் பிறகு தெலுங்கு திரை உலகில் இருந்து ஏராளமான வாய்ப்புகள் வந்தது. இதற்கு வெங்கி தான் காரணம்.
தற்போது வேறொரு படத்தின் பணிக்காக ஹைதராபாத் சென்றிருந்தபோது என்னை சந்தித்த அனைவரும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இசை பிரமாதம் என பாராட்டினர். அவர்களாக முன் வந்து இப்படத்தின் இசையையும், அதில் என்னுடைய பணியையும் பாராட்டிய போது.. உண்மையில் பெருமிதமாக இருந்தது. இதுதான் உண்மையான வெற்றி என்றும் நான் கருதுகிறேன்.
இந்த திரைப்படம் வெளிநாடுகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. ஆந்திராவில் சூர்யா நடித்த படத்தின் வசூல் புதிய சாதனையை படைத்திருக்கிறது. இது சந்தோஷமாக இருக்கிறது.
சூர்யாவிற்கு இது முக்கியமான வருடம். அடுத்தடுத்து இரண்டு பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். மூன்றாவது திரைப்படத்தையும் விரைவில் வழங்குவார். தீபாவளி அல்லது இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும். இதற்காக சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘சூரரை போற்று’ திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றிருக்கிறேன். மூன்றாவது படத்திலும் இணைந்திருக்கிறேன். எங்கள் ஜோடியும் ஹாட்ரிக் அடிக்கும் என நம்புகிறேன்.
படப்பிடிப்பு தளத்தில் நானும் ராதிகா மேடத்திடம் அடி வாங்கி இருக்கிறேன். அவர் ஒரு ரியல் இன்ஸ்பிரேஷன். சூர்யாவை போல் ராதிகா மேடத்திற்கும் இந்த ஆண்டு முக்கியமான ஆண்டு. அவர்களுடைய நடிப்பில் ‘தாய்க்கிழவி’ மிகப்பெரிய வெற்றி. அதைத் தொடர்ந்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படமும் வெற்றி. இந்த படத்தில் ராதிகா மேடம் நடித்த காட்சிகளை பின்னணி இசைக்காக பார்த்தபோது என்னையும் அறியாமல் நான் அழுதேன்.
இந்தப் படத்திற்காக இறுதிக்கட்டத்தில் மூன்றே நாட்களில் இரண்டு பாடல்களை உருவாக்கினோம். அந்த இரண்டு பாடல்கள் தான் தற்போது மிகப்பெரிய வெற்றியை பெற்று, அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
மேஜிக் மொமென்ட்ஸ் எப்போது வரும் என்று தெரியாது. இசையில் எப்போது வேண்டுமென்றாலும் அந்த மேஜிக் நிகழும். இதற்காக மீண்டும் ஒருமுறை வெங்கிக்கு நன்றி சொல்கிறேன்.
இந்தப் படத்திற்கு இதுவரை ஒரு எதிர்மறையான விமர்சனங்களும் வரவில்லை. அது இதன் மிகப்பெரிய சிறப்பம்சம். இது மிக அரிதாக நிகழக்கூடியவை. ” என்றார்.
இயக்குநர் வெங்கி அட்லூரி பேசுகையில்,
” இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி. இதற்கு முன் ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ என இரண்டு படங்களுக்கும் எனக்கு ஆதரவு அளித்தீர்கள். இந்த படத்தை நான் முதன் முதலாக தமிழில் இயக்கியிருக்கிறேன்.
இந்தப் படத்திற்கான பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டது. படம் நிறைவடைந்து பத்திரிகையாளர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ..? என்ற பதட்டத்தில் என் கால்கள் நடுங்கின. ஆனால் படம் முடிவடைந்ததும் ஒவ்வொருவரும் என்னை பாராட்டினார்கள். கை குலுக்கினார்கள். கட்டி அணைத்தார்கள். அவர்களுடைய அன்பை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். இது என்னால் மறக்கவே இயலாது. இதற்காக அனைவருக்கும் நன்றி.
இந்தப் படத்தில் நடித்த சுனில் ,பவானி ஸ்ரீ ,இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், படத்தை விநியோகம் செய்த லிங்கசாமி, ராதிகா மேடம், மமீதா பைஜூ ஆகியோருக்கு நன்றி.
மமீதா பைஜூ தூய ஆத்மா. எனக்குக் கிடைத்த தங்கை. சினிமாவை தவிர வேறு எதை பற்றியும் சிந்திக்காத அற்புதமான நடிகை. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றுவேன்.
ஜி வி பிரகாஷ் குமாருடன் ‘வாத்தி’ படத்திலிருந்து பயணிக்கிறேன். முதல் நாள் அவரை சந்தித்து, ‘உங்களை…சார்..! ப்ரோ..! என எப்படி அழைக்க வேண்டும்?’ என கேட்டேன். ‘ப்ரோ’ என்று கூப்பிடுங்கள் என்றார். ஆனால் இப்போது நாங்கள் உண்மையிலேயே சகோதரர்கள். நாங்கள் இருவரும் இணைந்து மூன்று படங்களில் பணியாற்றி விட்டோம். ஒரு பாடலை முழுமையாக நிறைவு செய்த பிறகும் அதை வேண்டாம் என்று சொன்னால்… சிறிது கூட முகம் சுழிக்காமல் மீண்டும் புதிதாக ஒரு பாடலை உருவாக்கித் தருவார். இதற்காக கட்டணம் எதையும் வாங்கவும் மாட்டார். அவர் நான் எதைக் கேட்டாலும் அதை மறுக்காமல் வழங்குவார். இந்த புரிதலுக்கு நன்றி.
‘தி ஒன்’ சூர்யா இப்போது இங்கே இல்லை. இருந்தாலும் அவருடைய அன்பும், ஆதரவும் அனைவருக்கும் இருக்கிறது. நான் அவரிடம் கதையை சொன்ன போது அவருடைய எதிர்பார்ப்பு குறித்து எதுவும் சொல்லாமல் இந்த குடும்பக் கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். இயல்பிலேயே அவருக்குள் இருந்த ஒரு துணிச்சல்தான் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என நான் நினைக்கிறேன். ரசிகர்கள் மீதும் அவர் வைத்திருக்கும் அன்பு எதனுடனும் ஒப்பிட முடியாதது.
இப்போதுதான் திரையுலக வணிகர் ஒருவர் சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ 150 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது என்றார். அதைக் கேட்கும் போது எனக்கு சிலிர்த்தது.
சூர்யா ரசிகர்களுக்கு எப்போதும் புதுவிதமான விருந்தை வழங்குவதை தான் முக்கியமானதாக பார்க்கிறார். இதுவும் ரசிகர்கள் மீதான ஒரு வகையான அன்புதான்.
திரையரங்குகளில் விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும்… படத்தை பார்க்கும் ரசிகர்களின் ஒவ்வொரு கரவொலிக்கும்…. நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ அல்ல.. விஸ்வநாதன் குடும்பத்தினருக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள்” என்றார்.
தமிழ் ZEE5-ன் புதிய படைப்புகள் வெளியாகும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிளாக்பஸ்டர் ஜனநாயகன், தளத்தின் மிகவும் சுவாரஸ்யமான பன்மொழித் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுக்கிறது.
தமிழ் ZEE5-ன் புதிய படைப்புகள் வெளியாகும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ஜனநாயகன் திரைப்படத்தை பார்வையாளர்களிடம் கொண்டு வர தளம் தயாராகியுள்ளது. H. வினோத் இயக்கத்தில், மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த அரசியல் ஆக்ஷன் திரைப்படம் ஆகஸ்ட் 21 அன்று தமிழ் ZEE5-ல் பிரீமியர் ஆகிறது. மேலும், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. இதன் மூலம் தென்னிந்தியாவின் நான்கு மொழிப் பார்வையாளர்களையும் இந்த பிரம்மாண்டமான திரை நிகழ்வு சென்றடைகிறது.
ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படம் என்பதைத் தாண்டி, ஜனநாயகன் திரைப்படம் மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. அரசியலில் நுழைந்த பிறகு வெளியாகும் அவரது முதல் திரைப்படமாகவும், பெரிய திரையில் வெளியாகும் அவரது இறுதித் திரைப்படமாகவும் இது அமைகிறது. கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு, தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர்-அரசியல்வாதியின் இறுதித் திரைப்பயணமாக அமையவுள்ள இப்படம், ஒரு உணர்வுப்பூர்வமான விடைபெறலாக அமைகிறது.
H. வினோத் இயக்கியுள்ள ஜனநாயகன் திரைப்படம், வெற்றி கொண்டான் என்ற நேர்மையான முன்னாள் காவல்துறை அதிகாரியை கதாநாயகனாகக் கொண்டுள்ளது. ஊழல் மற்றும் அநீதிக்கு எதிராக அவர் குரல் கொடுக்கிறார். சக்திவாய்ந்தவர்களுக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்தில் அவர் ஈடுபடும்போது, வெற்றி மக்களின் நாயகனாகவும், நம்பிக்கை மற்றும் தலைமைத்துவத்தின் அடையாளமாகவும் உருவெடுக்கிறார். அதிரடி ஆக்ஷன், உணர்வு, குடும்ப உறவுகள் மற்றும் சமூக-அரசியல் கருப்பொருள்களை ஒருங்கிணைக்கும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நாசர் மற்றும் நரேன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ரசிகர்களுக்குப் பிடித்த தருணங்கள், பிரபலமான உடல்மொழிகள் மற்றும் அந்த நட்சத்திரத்துடன் அடையாளம் காணப்படும் தனித்துவமான திரை அம்சங்கள் என பலவற்றை உள்ளடக்கிய ஜனநாயகன், பல தலைமுறை ரசிகர்களை கவர்ந்த அவரது வசீகரத்தையும் மரபையும் நினைவுகூரும் ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. இப்படத்தின் மையத்தில், எது சரி என்பதற்காக குரல் கொடுக்க முன்வரும் ஒரு சாதாரண மனிதனின் கதை இடம்பெற்றுள்ளது. இதனால், இப்படம் அதிரடி நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக மட்டுமல்லாமல், உணர்வுப்பூர்வமான முக்கியத்துவம் கொண்ட ஒரு விடைபெறலாகவும் அமைகிறது.
ZEE5 தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் பிரிவுகளின் பிசினஸ் ஹெட் லாய்ட் C. சேவியர் கூறுகையில், “ஜனநாயகன் திரைப்படம் பார்வையாளர்களுக்கு, குறிப்பாக மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் பல தசாப்த காலப் பயணத்தைப் பின்தொடர்ந்து வரும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு, மிகப்பெரிய உணர்வுப்பூர்வமான மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அவரது இறுதித் திரைப்படமாக, இது தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான தருணத்தைப் பிரதிபலிக்கிறது. மேலும், நட்சத்திரம், நடிகர் மற்றும் அவர் விட்டுச் செல்லும் மரபைக் கொண்டாடுவதற்கான ஒரு வாய்ப்பையும் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. ஆக்ஷன், உணர்வு, குடும்ப மதிப்புகள் மற்றும் சமூகக் கருத்துக்களை ஒருங்கிணைக்கும் இப்படம், பல தலைமுறை ரசிகர்களுக்கும் பொருத்தமான மற்றும் பிரம்மாண்டமான விடைபெறலாக அமைகிறது. இந்த மாபெரும் படைப்பை எங்கள் தளத்திற்குக் கொண்டு வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். மேலும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திரை நிகழ்வை மீண்டும் காணவும், கொண்டாடவும் கோடிக்கணக்கான பார்வையாளர்களுக்கு வாய்ப்பளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படத்தை ZEE5 தமிழ் தளத்திற்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த டிஜிட்டல் பிரீமியர், இன்னும் அதிகமான குடும்பங்களும் ரசிகர்களும் இந்த முக்கியமான திரைப்படத்தை ஒன்றாக அனுபவிக்க வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”
ஜனநாயகன் ஆகஸ்ட் 21 அன்று தமிழ் ZEE5-ல் பிரத்யேகமாக பிரீமியர் ஆகிறது. மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் இப்படம் கிடைக்கும்.
திரைக்கு முந்தைய அறிமுகம் லீ வானல் மற்றும் ஜேம்ஸ் வான் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த புகழ்பெற்ற திகில் திரைப்பட வரிசை, இன்சிடியஸ் (2010) படத்துடன் தொடங்கி, இன்சிடியஸ்: சாப்டர் 2 (2013), இன்சிடியஸ்: சாப்டர் 3 (2015) என தொடர்ந்து, பின்னர் இன்சிடியஸ்: த லாஸ்ட் கீ (2018) மற்றும் இன்சிடியஸ்: த ரெட் டோர் (2023) ஆகிய இரண்டு தொடர் படங்களுடன் தொடர்ந்தது. இன்சிடியஸ்: அவுட் ஆஃப் த ஃபர்தர் இந்த வரிசையின் 6வது பாகமாகும், மேலும் இது 2023 படத்தின் நேரடி தொடர்ச்சியாகும்.
கதைச் சுருக்கம் ‘த ஃபர்தர்’ எனும் ஆவி உலகிற்குள் பயணித்து, தொலைந்து போன ஆன்மாக்களை மீட்டு, அவற்றுடன் தொடர்பு கொண்டு இந்த உலகிற்கு திரும்பக் கொண்டு வரும் ஆற்றலைப் பெறும் ஒரு இளம் பெண்ணைச் சுற்றியே கதை அமைந்துள்ளது! தன் மகளை தங்களது மூதாதையர் வீட்டில் வளர்க்கும் போது அவள் தனது சிறப்பு ஆற்றலை உணர்கிறாள்! ஆனால் விரைவிலேயே, தான் திரும்பக் கொண்டு வரும் இறந்த ஆன்மாக்களின் உண்மையான தன்மையை அவள் அறிந்து கொள்கிறாள், அப்போது சில தீய சக்திகள் அவளைத் துரத்தத் தொடங்குகின்றன! அந்த ஆன்மாக்கள் அவளுடைய ஆற்றலை அறியும் போது ஒரு ஆபத்தான விளையாட்டு தொடங்குகிறது! இப்போது, இந்த உலகமே அவர்களின் விளையாட்டு மைதானமாக மாறுகிறது!
படையணி விவரங்கள் திரைக்கதை மற்றும் இயக்கம் – ஜேக்கப் சேஸ், இவர் கதையையும் இணைந்து எழுதியுள்ளார்
நடிகர்கள் – அமீலியா ஈவ், பிராண்டன் பெரியா, மேசி ரிச்சர்ட்சன்-செல்லர்ஸ், லின் ஷே, லாரா கார்டன் மற்றும் பலர்
ஒளிப்பதிவு – டேவ் கார்பெட் இசை – ஜோசப் பிஷாரா (முந்தைய 5 படங்களுக்கும் இசையமைத்தவர்!)
CC சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியீடு — ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்
இந்தப் படத்தின் மிகப்பெரிய சிறப்பு படத்தை ஒரே நபராக சங்ககிரி ராஜ்குமார் உருவாக்கியிருப்பதுதான். நடிப்பு, இயக்கம் மட்டுமின்றி திரைப்பட உருவாக்கத்தில் 70-க்கும் மேற்பட்ட துறைகளில் தனியாகப் பணியாற்றியதாகப் படக்குழு தெரிவிக்கிறது. கதைப்படி, காட்டுக்குள் சிக்கிக்கொள்ளும் நண்பர்கள் ஒரு விசித்திரமான தொழிற்சாலையை கண்டுபிடிக்கிறார்கள். அங்கு உலகையே சில நாட்களுக்கு உறைய வைக்கும் ஒரு கருவி கிடைக்கிறது. அதை பயன்படுத்திய பிறகு அவர்களுக்கு ஏற்படும் அனுபவங்களும், மனிதர்களின் குணநலன்கள் பற்றிய புரிதலும் கதையின் மையமாகிறது. படத்தின் பலம்: புதுமையான Sci-Fi கதைக்களம் ஒரே மனிதரின் மிகப்பெரிய உழைப்பு தொழில்நுட்ப ரீதியான சோதனை முயற்சி வழக்கமான தமிழ் சினிமாவிலிருந்து மாறுபட்ட அணுகுமுறை குறை: கதை மற்றும் திரைக்கதை சிலருக்கு மெதுவாகத் தோன்றலாம். இது வழக்கமான commercial movie அல்ல; ஒரு experimental film என்ற மனநிலையுடன் பார்த்தால் அனுபவம் சிறப்பாக இருக்கும்.
மொத்தத்தில்: “படம் எப்படி இருக்கிறது?” என்பதைக் காட்டிலும், “ஒரு மனிதர் இவ்வளவு பெரிய படத்தை எப்படி தனியாக உருவாக்கினார்?” என்பதே இந்தப் படத்தின் மிகப்பெரிய ஆச்சரியம்.
சாந்தனு பாக்யராஜ் – சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு முன்னிலையில் வெளியிட்டார். இந்த நிகழ்வு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சாந்தனு பாக்யராஜ் நாயகனாகவும், சீமான் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார்.
மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட கதையாக உருவாகிறது. குடும்ப உறவுகளின் உணர்வுகளுடன் ஆக்சன் மற்றும் விறுவிறுப்பான சம்பவங்களும் இணைந்த கதைக்களமாக இப்படம் அமையவுள்ளது. மதுரையின் வாழ்வியலும், அப்பா – மகன் உறவில் ஏற்படும் உணர்வுப்பூர்வமான மாற்றங்களும் கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெறுகின்றன.
வெளியாகியுள்ள மோஷன் போஸ்டரில் சீமான் மற்றும் சாந்தனுவின் தோற்றங்கள், பின்னணியில் இடம்பெற்றுள்ள மதுரை கோயில் கோபுரங்கள், கையெழுத்துப் பிரதியைப் போன்ற வடிவமைப்பு ஆகியவை படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. ‘ஒரு கைதியின் டைரி’ என்ற தலைப்பும், அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட கதையும் படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
தமிழ் திரையுலகில் தரமான வணிகப் படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் 10வது திரைப்படம் இது. தயாரிப்பாளர் கண்ணன் ரவி, சமீப காலமாக தரமான கதைகளுக்கும் வலுவான படைப்பாளிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து, “தலைவர் தம்பி தலைமையில்” மற்றும் “TN 2026” முதலாக பல வெற்றிப் படங்களை வழங்கி வருகிறார். அந்த வரிசையில், இந்தப் படத்தையும் கதைக்கும் தயாரிப்பு தரத்திற்கும் முக்கியத்துவம் அளித்து உருவாக்கி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவரான சுசீந்திரன், குடும்ப உணர்வுகள், ஆக்சன், கிரைம், எமோஷன் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து ரசிகர்களை கவரும் திறமையால் தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கியவர். நான் மகான் அல்ல, பாண்டியநாடு வெற்றிப் படங்களைப் போல அப்பா–மகன் உறவை மையப்படுத்தி, மீண்டும் அதே பாணியில் விறுவிறுப்பும் உணர்வுகளும் நிறைந்த கதையுடன் இந்தப் படத்தை உருவாக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
சுசீந்திரன் – சாந்தனு பாக்யராஜ் கூட்டணி, சீமானின் முக்கிய கதாபாத்திரம், சாம் சி எஸ் இசை மற்றும் மதுரை பின்னணியில் உருவாகும் ‘ஒரு கைதியின் டைரி’, மோஷன் போஸ்டர் வெளியானதிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.
குடும்பம், காதல், உணர்வு – சூர்யாவின் மற்றொரு இயல்பான பயணம்!
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீணா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம், ஆக்ஷன் மற்றும் மாஸ் அம்சங்களைத் தாண்டி குடும்ப உறவுகள், காதல், தனிப்பட்ட ஆசைகள் என உணர்வுப்பூர்வமான கதைக்களத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. படம் ஆகஸ்ட் 14, 2026 அன்று திரையரங்குகளில் வெளியானது.
40 வயதைக் கடந்த சஞ்சய் விஸ்வநாத் என்கிற ‘மேடி’ கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கிறார். சர்வதேச அளவில் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்ற அவரது கனவும், அதே நேரத்தில் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக உருவாகும் உறவுகளும் கதையின் முக்கியப் பகுதிகளாக அமைகின்றன. தன்னைவிட மிகவும் இளைய பெண்ணான மமிதா பைஜுவின் கதாபாத்திரம் சூர்யாவை காதலிப்பது படத்தின் வித்தியாசமான அம்சமாக இருக்கிறது.
சூர்யா இந்தப் படத்தில் வழக்கமான ஆக்ஷன் ஹீரோவாக இல்லாமல், தனது வயதுக்கும் கதாபாத்திரத்துக்கும் பொருத்தமான முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக கதாபாத்திரத்தின் குழப்பம், தயக்கம், குடும்பத்தின் மீதான பாசம் போன்ற உணர்வுகளை இயல்பாகக் கடத்துகிறார்.
மமிதா பைஜு படத்திற்கு தேவையான உற்சாகத்தைக் கொடுக்கிறார். அவரது துறுதுறுப்பான நடிப்பும், சூர்யாவுடனான கெமிஸ்ட்ரியும் படத்தின் இலகுவான பகுதிகளுக்கு பலம் சேர்க்கின்றன. ராதிகா சரத்குமார் மற்றும் ரவீணா டாண்டன் ஆகியோரின் பங்களிப்பும் கதையின் உணர்வுப்பூர்வமான பகுதிகளுக்கு துணையாக இருக்கிறது.
படத்தின் முதல் பாதி வேகமாக நகர்வதுடன், நகைச்சுவை மற்றும் உறவுகள் சார்ந்த காட்சிகள் இயல்பாக அமைந்துள்ளன. இரண்டாம் பாதியில் உணர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால், சில இடங்களில் வேகம் குறைவதாகத் தோன்றுகிறது. கிளைமாக்ஸ் பகுதி படத்தின் உணர்வை அழுத்தமாகச் சொல்ல முயற்சிக்கிறது. வெளியான பிறகு வந்த ஆரம்பகட்ட பார்வையாளர்கள் கருத்துகளிலும் முதல் பாதி, கிளைமாக்ஸ் மற்றும் குடும்ப உணர்வுகள் பாராட்டப்பட்டுள்ளன; அதே நேரத்தில் சிலர் இரண்டாம் பாதியில் சிறிய தொய்வு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு படத்தின் அழகியலை உயர்த்துகிறது. ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும் பின்னணி இசையும் காட்சிகளின் உணர்வை வலுப்படுத்துகின்றன. குறிப்பாக குடும்பம் மற்றும் காதல் சார்ந்த காட்சிகளில் இசை நல்ல துணையாக இருக்கிறது.
வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் பெரிய திருப்பங்கள் அல்லது அதிரடி சம்பவங்களை மட்டுமே நம்பாமல், கதாபாத்திரங்களின் உணர்வுகளை முன்னிலைப்படுத்தியிருப்பது படத்தின் பலம். ஆனால் சில காட்சிகளின் முடிவுகளை முன்கூட்டியே கணிக்க முடிவதும், இரண்டாம் பாதியில் உணர்ச்சிக் காட்சிகள் சற்று நீளமாக இருப்பதும் குறையாகத் தெரிகிறது.
மொத்தத்தில், விஸ்வநாத் & சன்ஸ் மிகப்பெரிய மாஸ் விருந்தை எதிர்பார்க்கும் சூர்யா ரசிகர்களுக்கான படம் அல்ல. அதற்கு பதிலாக குடும்ப உறவுகள், காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை கலந்து கொடுத்துள்ள ஒரு இலகுவான குடும்ப பொழுதுபோக்கு படம். சூர்யாவின் இயல்பான நடிப்பு மற்றும் மமிதா பைஜுவின் கலகலப்பான பங்களிப்பு படத்தை ரசிக்க வைக்கின்றன.
நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது
தேசியம், ஆகஸ்ட் , 2026: விஜய் ஆண்டனி நடித்துள்ள உணர்வுபூர்வமான குடும்பத் திரைப்படமான நூறு சாமி, ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது. இது அதன் டிஜிட்டல் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. 2026 ஆகஸ்ட் 7 அன்று தமிழ் ZEE5-இல் பிரீமியர் ஆன இந்த திரைப்படம், பார்வையாளர்களின் மனதில் ஆழமான உணர்வுப் பிணைப்பை உருவாக்கியுள்ளது. தாய்மை, துணைநிலை, குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பற்றிய மனிதநேயமிக்க கதையை பல மொழிகளில் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சென்றுள்ளது.
உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு, சசி எழுதி இயக்கியுள்ள நூறு சாமி, காதல் மற்றும் குடும்பத்தை மிகவும் தனிப்பட்ட கோணத்தில் அணுகும் மனதைத் தொடும் கதையாகும். தனது வாழ்க்கையின் பல ஆண்டுகளை குடும்பத்திற்காக அர்ப்பணித்த ஒரு தாயின் பயணமே இதன் மையக் கருத்தாகும். வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கி, ஒரு துணையைத் தேட விரும்பும் அவளது முடிவு, குடும்பம், சமூகத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் தனக்கான மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கத் தேவையான தைரியம் ஆகிய கேள்விகளை அவளுக்கு முன்வைக்கிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், அஜய் திஷன் மற்றும் பாலாஜி சக்திவேல் நடித்துள்ள இந்த திரைப்படம், நுணுக்கமான கதை சொல்லலையும் இயல்பான நடிப்பையும் ஒருங்கிணைத்து, பார்வையாளர்களின் மனதில் நீங்கா இடம் பெறும் ஒரு படைப்பாக உருவாகியுள்ளது. நூறு சாமி தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ZEE5-இல் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. இதன் மூலம், பிராந்திய சந்தைகளில் உள்ள பார்வையாளர்களையும் திரைப்படம் சென்றடைந்துள்ளது.
திரைப்படத்தின் டிஜிட்டல் வெற்றியைப் பற்றி பேசிய ZEE5 தமிழ் & மலையாளம் வணிகத் தலைவர் லாய்ட் சேவியர் கூறுகையில், “நூறு சாமி திரைப்படத்திற்கு தமிழ் ZEE5-இல் பார்வையாளர்களிடமிருந்து கிடைத்துள்ள அன்பான வரவேற்பைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது என்பது ஒரு சிறப்பான மைல்கல், குறிப்பாக மனித உணர்வுகள் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட ஒரு கதைக்கு இது மிகப் பெரிய சாதனையாகும். குடும்பம், காதல் மற்றும் வாழ்க்கையில் மீண்டும் மகிழ்ச்சியை கண்டுபிடிக்கும் வாய்ப்பைப் பற்றி இந்த திரைப்படம் பேசுகிறது. இந்த உணர்வுகள் பல மொழிகளில் உள்ள பார்வையாளர்களுடன் இணைந்திருப்பதைப் பார்ப்பது மனதிற்கு நெகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
தனது நன்றியைத் தெரிவித்த இயக்குநர் சசி கூறுகையில், “நூறு சாமி திரைப்படத்திற்கு ZEE5-இல் பார்வையாளர்களிடமிருந்து இவ்வளவு அன்பு கிடைப்பதைப் பார்ப்பது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. இது எனக்கு மிகவும் தனிப்பட்ட கதை. நேர்மையுடனும் உணர்வுடனும் இந்த திரைப்படத்தை உருவாக்கினோம். இந்த கதை இத்தனை பேருடன் இணைந்து, 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது என்பது உண்மையிலேயே சிறப்பான விஷயம். இந்த திரைப்படத்தை பார்த்து, ஆதரித்து, அன்பைப் பகிர்ந்த அனைவருக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்” என்றார்.
100 மில்லியன் பார்வை நிமிடங்கள் என்ற இந்த மைல்கல், டிஜிட்டல் தளங்களில் உணர்வுபூர்வமான பிராந்திய கதைகளுக்கான பார்வையாளர்களின் வளர்ந்து வரும் வரவேற்பை பிரதிபலிக்கிறது. குடும்பம், உறவுகள் மற்றும் வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்புக்கான விருப்பத்தை நேர்மையாக சித்தரிக்கும் நூறு சாமி, அதன் திரையரங்கு பயணத்தைத் தாண்டியும் புதிய பார்வையாளர்களை தொடர்ந்து சென்றடைந்து, அவர்களுடன் தனது உறவை மேலும் வலுப்படுத்தி வருகிறது.
நூறு சாமி தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ZEE5-இல் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.
துல்கர் சல்மானின் “ஐ ம் கேம்” ( I Am Game) செப்டம்பர் 3-ம் தேதி ரிலீஸ் ஆகிறது – பிரம்மாண்ட உலகளாவிய வெளியீட்டுக்கு திட்டம்!
துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “ஐ ம் கேம்”’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பிரம்மாண்டமான உலகளாவிய வெளியீடாக இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் அதிகமான திரையரங்குகள் மற்றும் சர்வதேச சந்தைகளில் படத்தை வெளியிடுவதற்காக, ரிலீஸ் தேதி இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த பிரம்மாண்ட ஃபேண்டஸி த்ரில்லர், அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது. இப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார்.
துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து Wayfarer Films பேனரில் தயாரித்துள்ள இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபு பக்கர் மற்றும் பிலால் மொய்து ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை சஜீர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் ஆகியோர் எழுதியுள்ளனர்.
ரசிகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்தை இன்னும் பிரம்மாண்டமான திரையரங்க அனுபவமாக கொண்டு வருவதற்காக செப்டம்பர் 3-ம் தேதிக்கு வெளியீடு மாற்றப்பட்டுள்ளதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
மேலும், மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் பான்-இந்தியா அளவில் வெளியாகும் என்றும் துல்கர் சல்மான் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகளவில் அதிகமான ரசிகர்களை சென்றடையும் வகையில் இப்படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளியான இப்படத்தின் டிரெய்லர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான டிரெய்லர், பான்-இந்தியா அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தொடக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ள டிரெய்லரில் பிரம்மாண்டமான காட்சிகள், அதிரடியான ஆக்ஷன் மற்றும் பரபரப்பான சேஸிங் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் மிகப்பெரிய திரையரங்க அனுபவத்தை இப்படம் வழங்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
மலையாள சினிமாவில் இதுவரை பார்த்திராத வகையிலான ஸ்டைலிஷான ஃபேண்டஸி த்ரில்லராக “ஐ ம் கேம்” இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் துல்கர் சல்மான் மிகவும் ஸ்டைலிஷான மற்றும் மாஸ் அவதாரத்தில் தோன்றியுள்ளார்.
தென்னிந்தியா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது.
இந்த பிரம்மாண்ட படத்தில் ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகரும் இயக்குநருமான மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் தமிழ் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை உரிமையை Zee Music நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவு மாஸ்டர்ஸ் வடிவமைத்துள்ளனர். டிரெய்லர் மற்றும் முதல் பாடலுக்கு கிடைத்த வரவேற்பை பார்க்கும்போது, இசையும் ஆக்ஷன் காட்சிகளும் படத்தின் முக்கிய ஹைலைட்டுகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘Lokah: Chapter 1 – Chandra’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு Wayfarer Films தயாரிக்கும் அடுத்த திரைப்படம் ‘ஐ ம் கேம்’. அதேபோல், பிளாக்பஸ்டர் வெற்றிப் படமான ‘RDX’-க்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் அடுத்த திரைப்படம் இதுவாகும்.