வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் – டாக்டர் ஐசரி கே கணேஷ் -இயக்குநர் சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2 : மகா சக்தி – Mookuthi Amman 2: Mahasakthi’ படத்தின் டீசர் வெளியீடு
தீபாவளி திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் நயன்தாராவின் நடிப்பில் உருவான ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ‘ரைஸ் ஆஃப் மகா சக்தி’ டீஸர் வெளியீடு
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவான ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டீசர் ‘ரைஸ் ஆப் மகாசக்தி – Rise of Mahasakthi’ எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தில் நயன்தாரா, ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், ‘மைனா’ நந்தினி, ‘கருடா’ ராம், அபிநயா, சிங்கம் புலி, வி. ஆர். சுவாமிநாதன், சுனில் வர்மா, வர்ஷினி வெங்கட், பழ. கருப்பையா, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்ள, திரைக்கதை – வசனத்தை வெங்கட் ராகவன் எழுதியிருக்கிறார். மித்தலாஜிக்கல் ஃபேண்டஸி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு குஷ்பூ சுந்தர் – குஷ்மிதா கணேஷ்- இஷான் சக்சேனா- விக்னேஷ் சிவன் – ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் ‘ரைஸ் ஆஃப் மகா சக்தி- Rise of Mahasakthi’ எனும் பெயரில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும்… ரசிகர்களை வியக்க வைத்திருப்பதுடன் பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்பதை உறுதி செய்திருப்பதால்.. இதற்கான வரவேற்பும், டிஜிட்டல் பார்வைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ், சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தனது புதிய படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ என தலைப்பிட்டுள்ளது. இதுவரை ‘சீயான் 63’ என்ற தற்காலிகப் பெயரில் குறிப்பிடப்பட்டு வந்த இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை, ரசிகர்களை கவரும் வகையிலான அட்டகாசமான வீடியோ மூலம் படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
சீயான் விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இதற்கு முன்பு விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணியில் வெளியான ‘இருமுகன்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், சுமார் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
‘பவர்ஹவுஸ்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோ, ஒரு அழகான குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் வகையில் தொடங்குகிறது. கல்யாண ஆர்டர் ஒன்றுக்காக சமையல் நடைபெறும் அழகான வீட்டிற்குள் விக்ரம் நுழைவதில் இருந்து காட்சிகள் நகர்கின்றன. தொடர்ந்து அந்த வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்படுகின்றனர். சம்யுக்தா ஹெக்டே, வி.டி.வி. கணேஷ், ஊர்வசி உள்ளிட்ட கதாபாத்திரங்கள் இடம்பெறும் அந்தப் பகுதி, ஒரு அமைதியான, மகிழ்ச்சியான குடும்பத்தின் சூழலை அழகாக வெளிப்படுத்துகிறது.
ஆனால், வீடியோவின் அடுத்த நொடியிலேயே மொத்த சூழலும் தலைகீழாக மாறுகிறது. குடும்பப் பின்னணியில் இருந்து அதிரடியான ஆக்ஷன் உலகத்திற்குள் காட்சிகள் திடீரென பயணிக்கின்றன. விக்ரம் ஒரு பூட்டிய அறையைத் திறந்து உள்ளே செல்வதும், அங்கு அடிபட்டு கிடக்கும் அடியாட்களுடன் அவர் பேசும் காட்சிகளும் இடம்பெறுகின்றன. இதன் மூலம் ‘பவர்ஹவுஸ்’ என்ற தலைப்புக்கு ஏற்ற வகையில் விக்ரமின் கதாபாத்திரத்தின் மற்றொரு முகத்தை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ அமைந்துள்ளது. குடும்ப உணர்வுகளும் கமர்ஷியல் ஆக்ஷனும் இணைந்த இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
‘பவர்ஹவுஸ்’ அனைவரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஐடியாலஜி செண்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது. விக்ரமின் வழக்கமான மாஸ் அம்சங்களுடன், குடும்ப பார்வையாளர்களைக் கவரும் உணர்வுப்பூர்வமான கதை, பரபரப்பான திரில்லர் திரைக்கதை மற்றும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் இணைந்த படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்தில் எம். எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ், சுபாஷ் செல்வம் மற்றும் விஷ்ணு ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். ஜி. சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணைத் தயாரிப்பாளர்களாக உள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக ஆர்.டி. ராஜசேகர் ISC, தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன், வசன எழுத்தாளராக ஷான் கருப்புசாமி, சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, நடன அமைப்பாளராக பிருந்தா, படத்தொகுப்பாளராக ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, கலை இயக்குநராக சூர்யா ராஜீவன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி, விளம்பர வடிவமைப்பாளராக கோபி பிரசன்னா மற்றும் ஸ்டில்ஸ் புகைப்படக் கலைஞராக தேனி முருகன் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சீயான் விக்ரமின் அடுத்த படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, குடும்பப் பின்னணியில் தொடங்கி அதிரடியான ஆக்ஷன் காட்சிகளாக மாறும் வீடியோவும், ‘பவர்ஹவுஸ்’ என்ற தலைப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.
V6 Film Pvt Ltd சார்பில் தயாரிப்பாளர் வேலாயுதம் தயாரிப்பில், வெற்றிச்செழியன் இயக்கத்தில், மாறுபட்ட சமூக அக்கறை கொண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
முன்னணி இயக்குநர்களான ஹெச். வினோத், சீனு ராமசாமி மற்றும் ஜனநாதன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெற்றிச்செழியன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். தனது முதல் படத்திலேயே சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் கனவுகளுக்கான போராட்டத்தையும் அழுத்தமாகப் பேசும் படைப்பை உருவாக்கியுள்ளார்.
தூய்மை பணியாளராக வாழ்வாதாரத்திற்காக போராடும் ஒரு தாய், தனது மகன் செஸ் விளையாட்டில் சாதித்து கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற கனவுக்காக துணை நிற்கிறார். வறுமை மற்றும் சமூகத்தில் நிலவும் பல்வேறு தடைகளைக் கடந்து, தன் மகனின் கனவை நனவாக்க அந்த தாய் எப்படி போராடுகிறார் என்பதே படத்தின் மையக்கதையாக அமைந்துள்ளது. வழக்கமான கமர்ஷியல் பாதையிலிருந்து விலகி, சமூகத்தின் மற்றொரு பக்கத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில், சதுரங்க கட்டங்கள் நிறைந்த பின்னணியில் தாயும் மகனும் வெவ்வேறு உணர்வுகளுடன் இடம்பெற்றுள்ளனர். செஸ் காயை கையில் ஏந்தியபடி சிறுவன் நம்பிக்கையுடன் மேல்நோக்கிப் பார்க்க, மறுபுறம் தாய் கவலையும் வலியும் கலந்த பார்வையுடன் காட்சியளிக்கிறார். அவர்களைச் சுற்றிலும் நகரும் செஸ் காய்கள், கீழ்ப்பகுதியில் தாய் தனது மகனுடன் சைக்கிளில் பயணிக்கும் காட்சி என போஸ்டர் முழுவதும் கதையின் போராட்டத்தையும் கனவையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இப்படத்தில் அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு, மனோ மதுரை, விசித்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அர்ஜுன் ரவி – ஞானசேகர் ஆர்.எஸ். ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் ஆண்டனி இசையமைத்துள்ளார். ரஞ்சீத் சி.கே. படத்தொகுப்பையும், ராகவன் சஞ்சீவி கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.
திண்டுக்கல், மதுரை, தடா மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SIIMA 2026 விருது விழாவில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்திற்காக நடிகர் சசிகுமார் விருது பெற்றுள்ள நிலையில், ‘காந்தா’ திரைப்படத்திற்காக நடிகர் சமுத்திரக்கனி சிறந்த துணை நடிகர் (தமிழ்) விருதை வென்றுள்ளார்.
நட்பிலும், திரைப்பயணத்திலும் நீண்ட காலமாக இணைந்து பயணித்து வரும் சசிகுமாரும் சமுத்திரக்கனியும், ஒரே விருது விழாவில் தங்களது படைப்புகளுக்காக அங்கீகாரம் பெற்றிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் தனது இயல்பான மற்றும் யதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள சமுத்திரக்கனி, ‘காந்தா’ திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக இந்த விருதை வென்றுள்ளார்.
ஒரு கதாபாத்திரத்தை வெறுமனே நடித்துக் காட்டாமல், அதன் உணர்வுகளையும் தன்மையையும் உள்வாங்கி இயல்பாக வெளிப்படுத்துவது சமுத்திரக்கனியின் தனிச்சிறப்பு. கதாபாத்திரங்களும் மொழிகளும் மாறினாலும், அவரது நடிப்பின் தனித்துவம் தொடர்ந்து நிலைத்து நிற்கிறது.
இந்த அங்கீகாரத்தை வழங்கிய SIIMA குழுவினருக்கும், நடுவர் குழுவினருக்கும் சமுத்திரக்கனி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும், ‘காந்தா’ படத்தின் இயக்குநர் செல்வமணி செல்வராஜ், தயாரிப்பாளர்கள் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி, ஜோம் வர்கீஸ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
நடிப்பில் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பயணித்து வரும் சமுத்திரக்கனி, வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’, மற்றும் ராஜன் வகையறா , முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘இருளன்’, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘மைசா’, பூஜா அபர்ணா கொல்லூரு இயக்கத்தில் அக்ஷய் கண்ணா நடிக்கும் ‘மகாகாளி’, மன்சு மனோஜ் உடன் டேவிட் ரெட்டி மற்றும் கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘NBK 111’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
மேலும், பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் அதேபோல், பிரசாந்த் வர்மாவின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் உருவாகும் ‘மகாகாளி’ திரைப்படத்திலும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே, சமுத்திரக்கனி இயக்கி நடிக்கும் ‘School Bus’ திரைப்படத்தில் சசிகுமார்,கிச்சா சுதீப் , மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கன்னடம் மற்றும் தெலுங்கில் ஏற்கனவே வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழிலும் ‘School Bus’ திரைப்படம் குறித்த பிரம்மாண்டமான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
“மகளே” – சாய் அப்யங்கரின் மெலடி இசையில் மனதை மயக்கும் ‘பத்தா’ முதல் சிங்கிள்! மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்கும், ஸ்டார் ஸ்டுடியோ18,(Star Studio18), ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் (Cine 1 Studios Production) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சாய் அப்யங்கர் இசையமைத்து பாடியுள்ள இப்பாடலுக்கு கவிஞர் கார்த்திக் நேதா வரிகளை எழுதியுள்ளார்.
இன்றைய தலைமுறை ரசிகர்களால் கொண்டாடப்படும் சாய் அப்யங்கர், துள்ளலான பாடல்களால் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வரும் நிலையில், ‘மகளே’ பாடலில் முற்றிலும் மாறுபட்ட மென்மையான மெலடி பாணியை கையாண்டுள்ளார். அவரது இசையில் இதுவரை கேட்டிராத வித்தியாசமான இசை அனுபவமாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
80-களின் இசை உலகை கண்முன் கொண்டு வரும் வீடியோ
80-களின் புகைப்படங்களும், அக்காலகட்ட இசையும் மீண்டும் ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்த நேரத்தில், ‘மகளே’ பாடலின் வீடியோவும் 80-களின் இசை உலகை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. வீடியோவின் தொடக்கமே 80-களில் ஒரு திரைப்படப் பாடல் ரெக்கார்டிங் எப்படி நடைபெற்றிருக்குமோ, அதனை அப்படியே கண்முன் கொண்டு வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பழைய கால இசைக்கூடம், அக்கால ரெக்கார்டிங் முறைகள் என அந்தக் காலகட்டத்தின் சூழலை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. அதேநேரத்தில் சாய் அப்யங்கர் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இரட்டை வேடத்தில் தோன்றியிருப்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரவேற்பைப் பெற்று வருகிறது.
மகளை கொண்டாடும் அழகான பாடல்
ஒரு தந்தை தனது மகளைப் பார்த்து அன்புடன் பேசுவது போன்ற உணர்வில் உருவாகியுள்ள இந்தப் பாடல், மகளின் மீதான பாசத்தையும் அன்பையும் அழகாக வெளிப்படுத்துகிறது. “மகளே, மந்திரச் சிமிழே, மங்கள விளக்கே கேளடி” எனத் தொடங்கும் கார்த்திக் நேதாவின் வரிகள் கவிதையைப் போல அமைந்து, பாடலின் உணர்வை மேலும் அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன.
சாய் அப்யங்கரின் மென்மையான இசையும், அவரது குரலும், கார்த்திக் நேதாவின் கவித்துவமான வரிகளும் இணைந்து ‘மகளே’ பாடலை, ரசிக்க வைக்கும் அனுபவமாக மாற்றியுள்ளது. குறிப்பாக, வழக்கமான இளமைத் துள்ளல் இசையிலிருந்து விலகி, மனதை வருடும் மெலடி பாணியில் சாய் அப்யங்கர் இந்தப் பாடலை உருவாக்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வித்தியாசமான கூட்டணியில், வித்தியாசமான களத்தில் வெளியாகியுள்ள ‘மகளே’ பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான Star Studio18, A for Apple Studios மற்றும் Cine 1 Studios Production நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பது என, பல்வேறு எதிர்பார்ப்புகளை ஒன்றிணைத்துள்ள ‘பத்தா’, வரும் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழக அரசியல் மற்றும் தமிழ் திரையுலக வரலாற்றில் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் நூற்றாண்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. அவரது குடும்பத்தினர் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் அரசியல், திரைத்துறை, கல்வி, நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று, ஆர்.எம்.வீரப்பனின் வாழ்க்கை, அரசியல் பயணம் மற்றும் திரைத்துறைக்கான பங்களிப்புகளை நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தினர்.
பெரியார் மற்றும் அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர் ஆர்.எம்.வீரப்பன். பின்னர் எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவைத் தொடங்கியபோது அவருடன் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு முன்னாள் முதல்வர்களின் அமைச்சரவைகளிலும் பணியாற்றிய அவர், 1977 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் ஐந்து முறை தமிழக அமைச்சராக பதவி வகித்துள்ளார். மேலும், மூன்று முறை சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
அரசியலில் மட்டுமின்றி, திரைத்துறையிலும் ஆர். எம். வீரப்பன் அவர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்ததுடன், 20-க்கும் மேற்பட்ட வெற்றித் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிதயாரித்தும் உள்ளார். இவர் திரைக்கதை சித்தர் என்றும் திரையுலகில் அன்போடு அழைக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆர். அவர்களின் காலம் தொடங்கி, தமிழ் சினிமாவின் பல்வேறு தலைமுறைகளிலும் தனது தயாரிப்புகளின் மூலம் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர் ஆர். எம். வீரப்பன் அவர்கள். ‘ரிக்ஷாக்காரன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘தெய்வத் தாய்’ உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்து, எம்.ஜி.ஆர். அவர்களின் திரைவாழ்க்கையில் பெரும் உறுதுணையாக விளங்கினார். குறிப்பாக, ரஜினிகாந்த் நடித்த ‘மூன்று முகம்’, ‘பாட்ஷா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வழங்கியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. அரசியல் மற்றும் திரைத்துறை என இரு வெவ்வேறு களங்களிலும் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கிய ஆளுமையாக ஆர். எம். வீரப்பன் அவர்கள் விளங்கினார்.
ஆர்.எம்.வீரப்பனின் மருமகனான டி.ஜி.தியாகராஜன், தமிழ் திரையுலகில் பல தலைமுறைகளாகப் பயணித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். எம்.ஜி.ஆர். காலம் தொடங்கி ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களைத் தயாரித்து, வணிக வெற்றியுடன் தரமான படைப்புகளையும் வழங்கிய முக்கியமான தயாரிப்பு நிறுவனமாக சத்யஜோதி பிலிம்ஸ் திகழ்கிறது. அந்த வகையில், திரைத்துறையில் ஆர்.எம்.வீரப்பன் விட்டுச் சென்ற பாரம்பரியத்துடன் நெருங்கிய தொடர்புடையவராக டி.ஜி.தியாகராஜனும் தனது தயாரிப்புப் பயணத்தை முன்னெடுத்து வருகிறார்.
இந்தப் பின்னணியில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவை டி.ஜி.தியாகராஜன் முன்னின்று ஒருங்கிணைத்தார். விழாவுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பிரபலங்களை வரவேற்று அவர் உரையாற்றினார். ஆர்.எம்.வீரப்பனின் அரசியல் பயணம், திரைத்துறைப் பங்களிப்பு, அவருடைய தனிப்பட்ட பண்புகள் மற்றும் வாழ்க்கை நெறிகளை நினைவுகூரும் வகையில் விழா அமைந்தது.
விழாவில் சென்னை கம்பன் கழகத் தலைவரும் எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் பேசுகையில், “அரசியலில் ஆர்.எம்.வீ. போல் தூய்மையானவரைப் பார்க்க முடியாது. மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. அவருடைய நினைவுகளைப் பகிரும்போதும், அவர் நம்மிடையே இல்லையே என்ற குறை உள்ளது” என்றார்.
டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் சண்முகம் பேசும்போது, ஆர்.எம்.வீரப்பனுக்கு ‘அரசியல் சாணக்கியர்’ என்ற பெயர் இருந்ததாகவும், அதைக் கடந்து ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவர் வாழ்ந்ததாகவும் குறிப்பிட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுரேஷ்குமார் பேசுகையில், இன்றைய தலைமுறையினர் தியாகம், அன்பு, தனிமனித ஒழுக்கம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை அறியாமல் இருப்பதாகவும், ஆனால் ஆர்.எம்.வீரப்பன் இவை அனைத்திலும் சிறந்து விளங்கியவர் என்றும் தெரிவித்தார். அவருடன் இருந்தவர்களையும் ஒழுக்கசீலர்களாக உருவாக்கிய பெருமை அவரையே சேரும் என்று குறிப்பிட்ட அவர், தமிழக அரசு, ஆர்.எம்.வீரப்பன் வாழ்ந்த சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
மூத்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசுகையில், “இன்று அரசியலில் என்னென்னவோ நடக்கிறது. ஆனால் அரசியலையும் நாகரிகமாக நடத்தியவர் ஆர்.எம்.வீ. அவரைப் போன்ற அரசியல்வாதியை உருவாக்க வேண்டும் என்பதே இவ்விழாவின் நோக்கம்” என்றார்.
இந்த விழாவில் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், கவிஞர் முத்துலிங்கம், எம்.ஜி.ஆர். கழக பொதுச்செயலாளர் ராமலிங்கம், திரைப்பட இயக்குநர் பி.வாசு, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுரேஷ்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் சண்முகம், சென்னை கம்பன் கழகத் தலைவர் ஜெகத்ரட்சகன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
அரசியலில் தூய்மை, நாகரிகம், தனிமனித ஒழுக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தவர்; திரைத்துறையில் பல வெற்றிப் படங்களை வழங்கியவர்; தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட ஆர்.எம்.வீரப்பனின் நூற்றாண்டு விழா, அவரது நினைவுகளைப் போற்றும் நிகழ்வாக மட்டுமின்றி, அவரது வாழ்வியல் மதிப்புகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நிகழ்வாகவும் அமைந்தது.
முன்னணி இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள, இப்படம் காதல் கதைக்களத்துடன், அழகான உணர்வுகளையும் கலந்து, சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார்.
இப்படத்தில் அசோக் செல்வனுடன் ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான ‘ஆசை வரமே’ பாடலுக்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் ‘அன்பில் அவன்’ படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
வரும் செப்டம்பர் 25ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் காதல் கொண்டாட்டத்தை ரசிகர்கள் கொண்டாடலாம்.
GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி திரைப்படம் “ட்ரோன்ஸ்”. இப்படத்தின் மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
வித்தியாசமான கற்பனை உலகம், ஹாரர் மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த கதைக்களம் ஆகியவை “ட்ரோன்ஸ்” படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ உலகில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்யமான கேள்வியை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மேட் சயின்டிஸ்ட், டிடெக்டிவ், ஏஞ்சல், சூனியக்காரி மற்றும் பல புதிரான சம்பவங்கள் நிறைந்த கற்பனை உலகில் பயணிக்கும் வகையில், தமிழ் சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் படத்தின் விநோதமான உலகத்தை அறிமுகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. முதல் போஸ்டரில், அடர்ந்த காடு, முழுநிலவு, மர்மமான கோட்டை, வௌவால்கள் மற்றும் தேவதை போன்ற உருவங்களுக்கு நடுவே கதாநாயகி காட்சியளிப்பதன் மூலம் ஒரு மாயாஜால ஃபேண்டஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது போஸ்டரில், படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒன்றாக இடம்பெற, அருகில் ட்ரோன், மர்மமான வயதான பெண், வித்தியாசமான சாதனங்கள் என சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஃபேண்டஸி கலந்த உலகை வெளிப்படுத்துகிறது. மூன்றாவது போஸ்டரில், எண்ணற்ற பொம்மைகள் சூழ்ந்த இருண்ட அறையில் ஆக்ரோஷமான தோற்றத்தில் ஒரு சூனியக்காரி இடம்பெற்றிருப்பது படத்தின் ஹாரர் மற்றும் திகில் அம்சங்களை மிரட்டலாக எடுத்துக்காட்டுகிறது. மூன்று போஸ்டர்களிலும் மூன்று விதமான மனநிலைகளையும், கதையின் பல அடுக்குகளையும் காட்சிப்படுத்தி படக்குழு ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.
இப்படத்தில் முன்னணி நடிகைகளான சித்தி இத்னானி, அஞ்சலி நாயர் ஆகியோருடன் தேவதர்ஷினி, பரிதாபங்கள் புகழ் டிராவிட் செல்வம், விஜய் டிவி புகழ் குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் மற்றும் இப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகும் ஆர்ஜே தீபக் உள்ளிட்டோர் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவை ஜெயந்த் சேது மாதவன் மேற்கொண்டுள்ளார். ஹரி S.R. இசையமைக்க, சதீஷ் சூர்யா படத்தொகுப்பை கவனித்துள்ளார். R. கிஷோர் கலை இயக்கத்தையும், ஹர்ஷிகா ரமேஷ் ஆடை வடிவமைப்பையும் மேற்கொண்டுள்ளனர். மேலும், தொழில்நுட்ப ரீதியாகவும் பல புதிய முயற்சிகளுடன் படம் உருவாகி வருகிறது.
இதற்கிடையில், முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பாளர் செந்தில், “ட்ரோன்ஸ்” திரைப்படத்தை தன் குடும்பத்துடன் பார்த்து மிகவும் ரசித்ததையடுத்து, உடனடியாக இப்படத்தின் முழு உரிமையை வாங்கியுள்ளார். இதன்மூலம் ஃபைவ் ஸ்டார் நிறுவனம் சார்பில் இப்படத்தை இந்தியாவெங்கும் பல மொழிகளில் வெளியிடுகிறார். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இப்படத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை, “ட்ரோன்ஸ்” படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், “ட்ரோன்ஸ்” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது. ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன், ஹாரர் என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகி வரும் இப்படம், வித்தியாசமான திரையனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கண்டு ரசிக்கலாம்.
‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’. பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், முன்னணி சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ளது.
காதல், காமெடி, மோதல், குடும்ப உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் கலந்து உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, ரசிகர்களுக்கு ஒரு முழுமையான என்டர்டெயின்மென்ட் விருந்தாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
லண்டனில் இயங்கி வரும் முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. ‘சிவாஜி’ படப் புகழ் ஸ்ரேயா, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அதே நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் ஊழியராக விமல் நடித்துள்ளார்.
அதிகாரி – ஊழியர் என இருவரும் எதிரெதிர் துருவங்களில் இருக்கும் நிலையில், இவர்களுக்கு இடையே உருவாகும் சம்பவங்களும், மோதல்களும், எதிர்பாராத திருப்பங்களும் கதையை சுவாரஸ்யமான பாதையில் நகர்த்துகின்றன. காதல், கோபம், ஈகோ என இருவருக்கும் இடையேயான ‘சண்டை’தான் படத்தின் மிகப்பெரிய சுவாரஸ்யமாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இந்த இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் கதாபாத்திரத்தில் சத்யன் நடித்துள்ளார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் விமல் – ஸ்ரேயா இடையேயான மோதலில் சிக்கிக்கொள்ளும் அவரது கதாபாத்திரம், படத்தின் காமெடி ஹைலைட்டுகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமல் – ஸ்ரேயா – சத்யன் கூட்டணி திரையில் மிகப்பெரிய காமெடி கலாட்டாவை உருவாக்கியுள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.
மேலும், பிரபு குணச்சித்திர வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.ஆர். விஜயா மற்றும் புன்னகை பூ கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, படத்திற்கு கூடுதல் சிறப்பை சேர்த்துள்ளார். கிரேன் மனோகர் நகைச்சுவை வேடத்தில் கலக்கியுள்ளார்.
இவர்களுடன் ‘கடலோர கவிதைகள்’ புகழ் ரேகா, ‘மஹதீரா’ வில்லன் நடிகர் தேவ் கில், உமா பத்மநாபன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் அம்ரீஷ் இசையமைத்துள்ளார். குருதேவ் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பையும், ஐய்யப்பன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். சண்டைக்காட்சிகளுக்கு கணல் கண்ணன் சண்டைப்பயிற்சி அமைத்துள்ளார். ஹபீப் நடனங்களை வடிவமைத்துள்ளார்.
காதலில் ஆரம்பித்து… சண்டையில் சிக்கி… காமெடியில் கலக்கும் ‘சண்டக்காரி’!
விமல் – ஸ்ரேயா இணைந்து நடிக்கும் இந்த புதிய கூட்டணி, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய கலகலப்பான ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இப்படத்தின் இந்த சாதனையை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் 50வது நாள் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த நிகழ்வில் படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து, திரைப்படத்திற்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர். படத்தின் வெற்றிக்காக உழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவைச் சேர்ந்தவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு நினைவுப் பரிசுகளாக சீல்டுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர், ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் பயணம் மற்றும் அதன் வெற்றியைப் பற்றிய தங்களது அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில் இயக்குநர் செல்லா அய்யாவு பேசுகையில், “கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி ‘கட்டா குஸ்தி 2’ படத்திற்குப் பூஜை போட்டு படப்பிடிப்பைத் தொடங்கினோம். இன்று செப்டம்பர் 3-ஆம் தேதி, படம் வெளியாகி 50 நாட்கள் ஓடிய வெற்றியைக் கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு படம் தொடங்கி, ஒரு ஆண்டுக்குள் வெளியாகி, 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடுவது பெரிய விஷயம். இந்த வெற்றியை வழங்கிய ரசிகர்களுக்கும், படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்பெல்லாம் 100, 175, 200 நாட்கள் ஓடிய படங்களின் விளம்பரங்களைப் பத்திரிகைகளில் பார்ப்பது வழக்கம். காலப்போக்கில் திரையரங்கு வெளியீட்டு முறைகளும், ரசிகர்கள் படம் பார்க்கும் தளங்களும் மாறிவிட்ட நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ 50 நாட்களைக் கடந்துள்ளது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது,”
மேலும், “இந்த வெற்றியை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருடனும் இணைந்து கொண்டாடி, அவர்களுக்கு சீல்டு வழங்குவது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியான தருணம். எனது உதவி இயக்குநர் காலத்தில் ஒரு படத்தின் வெற்றிக்காக எனக்குக் கிடைத்த நினைவுப் பரிசை புகைப்படத்துடன் சேர்த்து வீட்டில் வைத்திருந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநராக நான் உருவாக்கிய படம் 50 நாட்கள் ஓடி, மீண்டும் ஒரு வெற்றிக்கான நினைவுப் பரிசைப் பெறுவது தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த சீல்டை எனது வீட்டிற்கு எடுத்துச் சென்று, அந்த பழைய நினைவுப் பரிசுக்கு அருகில் வைக்கப் போகிறேன். அதனால்தான் இந்த தருணம் எனக்கு மிகவும் சிறப்பானதாகவும் உணர்வுபூர்வமானதாகவும் இருக்கிறது,”
“இந்தப் படத்தின் மீது ஆரம்பம் முதலே விஷ்ணு விஷால் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். கதை எழுதுவதிலிருந்து நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்வது, படப்பிடிப்பு, தயாரிப்பு, வெளியீடு மற்றும் விளம்பரப் பணிகள் என ஒவ்வொரு கட்டத்திலும் அவர் தீவிரமாக செயல்பட்டார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் இந்தப் படத்தை வெற்றிபெறச் செய்ய முழுமையான ஈடுபாட்டுடன் உழைத்தார். இந்தப் படம் இன்று பெற்றுள்ள வெற்றியில் அவருடைய பங்கு மிக முக்கியமானது. அவருக்கு எனது சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், ‘கட்டா குஸ்தி’ ஒரு பிராண்டாக உருவாக முக்கியமான அடையாளமாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமியின் பங்களிப்பும் மிகப்பெரியது,” இப்படத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் 50வது நாள் வெற்றிக் கொண்டாட்டத்தை இன்று சிறப்பாக நடத்துகிறோம். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களைக் கௌரவிக்கும் வகையில் சீல்டு வழங்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு சீல்டுகளை வழங்குவதற்காக வந்துள்ள அருமை சகோதரர் அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், தொடர்ச்சியாக அமெரிக்கா மற்றும் கனடாவில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு இன்று காலை சென்னை வந்த பத்மஸ்ரீ பிரபுதேவா அவர்கள், ஓய்வெடுக்கக்கூட நேரமில்லாமல் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். எங்களது நட்பின் காரணமாக அவர் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது,” என்றார்.
“இந்தப் படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால், இந்தப் படம் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மிகக் கடினமாக உழைத்தார். தயாரிப்பிலிருந்து படத்தின் வெளியீடு மற்றும் விளம்பரப் பணிகள் வரை அனைத்திலும் அவரது பங்களிப்பு மிகப்பெரியது. இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் ஒரு வாரம் திரையரங்குகளில் ஓடினாலே வெற்றியாகக் கருதப்படும் சூழ்நிலை உள்ளது. ஆனால், ‘கட்டா குஸ்தி 2’ 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. முன்பெல்லாம் 100 நாள், 175 நாள், 200 நாள் என திரைப்படங்களின் வெற்றியைக் கொண்டாடுவார்கள். தற்போது அதுபோன்ற கொண்டாட்டங்களுக்கு வாய்ப்பு குறைந்துவிட்ட நிலையில், இந்த 50வது நாள் விழாவை நடத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த விஷ்ணு விஷாலுக்கு எனது மனமார்ந்த நன்றி. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்று நான் விரும்பினேன்; அதேபோல் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது,” என்றார்.
“இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமான இயக்குநர் செல்லா அய்யாவுக்கு எனது மனமார்ந்த நன்றி. படத்தின் தொடக்கத்திலேயே அவர் உருவாக்கிய புரோமோ பெரிய வரவேற்பைப் பெற்றது; அப்போதே இந்தப் படம் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பல திரைப்படங்களைத் தயாரித்து வருகிறோம்; அடுத்தடுத்த மாதங்களில் எங்களது புதிய படங்களும் வெளியாக உள்ளன. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரம்யா கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி. படத்தின் கிளைமாக்ஸை சிறப்பாக்கியவர், இந்த 50வது நாள் விழாவிலும் கலந்து கொண்டு கொண்டாட்டத்தை நிறைவு செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தின் வெற்றியை உலகம் முழுவதும் கொண்டு சென்ற பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்றார்.
விஷ்ணு விஷால் பேசுகையில், “அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பல படங்களுக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு, நமது ‘கட்டா குஸ்தி 2’ படத்திற்கு கிடைத்திருப்பது சந்தோஷம். இந்த வெற்றிக்கு உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது நன்றி. ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகவும் எனது நன்றியைத் தெரிவிப்பேன். என்னைப் பொறுத்தவரை ரசிகர்கள்தான் ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கியமான சக்தி. அவர்களுக்குப் படம் பிடித்துவிட்டால் அதை எந்த உயரத்திற்குக் கொண்டு செல்வார்கள் என்பதற்கு ‘கட்டா குஸ்தி’ ஒரு சிறந்த உதாரணம். படத்திற்கு ஆதரவளித்த ஊடக நண்பர்களுக்கும் நன்றி. படத்திற்கு மட்டுமல்லாமல், எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரைப்பயணத்திலும் நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த விழாவில் கலந்து கொண்ட ரம்யா கிருஷ்ணன் மேடத்திற்கும் எனது சிறப்பு நன்றி. 15 நிமிட சிறப்புத் தோற்றம் என்று முதலில் அவரிடம் கூறினேன். காட்சிகளை அனுப்பிப் படிக்கச் சொன்னபோதும், என் மீதான அன்புக்காகவே அவர் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.
“இந்தப் படத்தின் உயிர்நாடியாக இருந்த ஜாராவை ரசிகர்கள் திரையரங்குகளில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். அவரும் இந்த வெற்றியின் முக்கியமான பகுதியாக இருக்கிறார். இந்த வெற்றியைக் கொண்டாட அனைவரும் ஒன்றாக இருப்பது கூடுதல் மகிழ்ச்சி. ஐசரி கணேஷ் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த வெற்றியை 50வது நாளில் கொண்டாடுவோம் என்று நான் அவரிடம் உறுதியளித்திருந்தேன். தொடர்ந்து எங்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கும், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சிறப்பாக நடத்தி இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக எடுக்கும் முயற்சிக்கும் நன்றி. சினிமாவில் வெற்றி கிடைப்பது எளிதான விஷயம் அல்ல; அது அரிதாகக் கிடைக்கும் ஒன்று. அப்படி ஒரு வெற்றி கிடைக்கும்போது அதை முழுமையாகக் கொண்டாட வேண்டும் என்பதே என் எண்ணம். இந்த வெற்றியை மிகச் சிறப்பாகக் கொண்டாடும் ஐசரி சாருக்கு மீண்டும் நன்றி. இந்த நிகழ்வை சிறப்பிக்க வந்த ராஜ்மோகன் சாருக்கும் நன்றி. அதேபோல், பிரபுதேவா சார் சிறுவயதில் இருந்தே எனது மனதின் மிகப்பெரிய இடத்தில் இருப்பவர். ‘சிக்கு புக்கு’ பாடலுக்கு நடனமாடி பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேன். ஒரு காலத்தில் நடனக் கலைஞராக வேண்டும் என்பதே எனது ஆசை. கால் காயம் காரணமாக அந்தப் பயணத்தைத் தொடர முடியவில்லை என்றாலும், பிரபுதேவா சார் எனது சிறுவயது முன்னுதாரணமாக இருந்தார். அவரது பாடல்களையும் நடனங்களையும் பின்பற்றி வளர்ந்தவன் நான், இன்று அவர் இந்த விழாவில் கலந்து கொண்டது மிகப்பெரிய மகிழ்ச்சி,”.
“செல்லா எனக்கு எப்போதுமே மிகவும் ஸ்பெஷலான இயக்குநர். எனது திரைப்பயணத்தில் ஒரு இயக்குநருடன் நீண்ட பயணம் அமைந்தது என்றால் அது செல்லாவுடன்தான். அவரது வளர்ச்சி மிகவும் இயல்பாகவும் அழகாகவும் அமைந்து வருகிறது. அவர் இன்னும் நீண்ட காலம் இதேபோன்று சிறப்பான வெற்றிகளைப் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். குறிப்பாக குடும்ப ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வரும் இதுபோன்ற படங்களை தொடர்ந்து உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட இயக்குநர்கள் தற்போது மிகவும் குறைவாக இருக்கிறார்கள். நல்ல குடும்பப் படங்களை தொடர்ந்து கொடுங்கள். ‘கட்டா குஸ்தி 3’ படத்தையும் விரைவில் உருவாக்கலாம். வேல்ஸ் நிறுவனம் சார்பில் தொடர்ந்து கிடைத்து வரும் ஆதரவுக்கும் குஷ்மிதாவுக்கும் எனது நன்றி. இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றி,” என்றார்.
தயாரிப்பாளர் குஷ்மிதா கணேஷ் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். இன்று ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த நிகழ்வில் எங்களது சிறப்பு விருந்தினராக மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அதேபோல், சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ பிரபுதேவா சாரும் கலந்து கொண்டுள்ளார். ஒரு படம் வெளியாகி முதல் வாரத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுவது ஒரு விஷயம். ஆனால், அந்தப் படம் திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடுவது மிகவும் சிறப்பான விஷயம். திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து, ஜூலை 31-ஆம் தேதி ஓடிடியிலும் வெளியான இப்படம் இந்திய அளவில் டாப் 10 பட்டியலில் தொடர்ந்து டிரெண்டாகி வருவது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.
“இந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ஒவ்வொருவரையும் கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்வை நடத்துகிறோம். ஒரு வெற்றிப் படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தில் வழங்கப்படும் இந்த விருது வெறும் நினைவுப் பரிசு மட்டுமல்ல; படத்திற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் பெருமையையும் அங்கீகாரத்தையும் அளிக்கும் ஒரு தருணமாகும். வெற்றி விழா நடைபெற்ற நாளிலேயே, படத்தில் பங்காற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்து கௌரவிக்க வேண்டும் என்று என் தந்தை முடிவு செய்திருந்தார். அந்த எண்ணம் இன்று இந்த விழாவின் மூலம் நிறைவேறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.
“‘கட்டா குஸ்தி 2’ படத்தின் வெற்றிக்காக உழைத்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. உங்கள் ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் இந்த வெற்றியின் பின்னால் இருக்கிறது. இன்று வழங்கப்படும் இந்த அங்கீகாரம் உங்களுக்குப் பெருமையான தருணமாக அமையும் என்று நம்புகிறோம். இது ஒரு வெற்றியின் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், இனிவரும் பல வெற்றிகளுக்கான அழகான தொடக்கமாகவும் அமைய வேண்டும். அனைவருக்கும் நன்றி, வணக்கம்,” என்றார்.
நடிகை ரம்யா கிருஷ்ணன் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். ரொம்ப நாட்களுக்குப் பிறகு இதுபோன்ற ஒரு வெற்றி விழாவில் கலந்து கொள்கிறேன். விஷ்ணு விஷால், செல்லா அய்யாவு மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். முதல் பாகம் வெற்றி பெற்ற பிறகு, அதை விட சிறப்பாக இரண்டாம் பாகத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்ற ஆவல் எனக்கு இருந்தது. இந்தப் படம் சிறப்பாக அமைய வேண்டும் என்றும், அதில் நானும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினேன். இன்று படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, படக்குழுவினர் அனைவருக்கும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. இந்தக் காலகட்டத்தில் ஒரு படம் 50 நாட்கள் ஓடுவது என்பது மிகவும் அரிதான விஷயம்,” என்றார்.
“ஐசரி கணேஷ் சாருக்கு ஒரு மிடாஸ் டச் இருக்கிறது; அவர் தொடும் விஷயங்கள் எல்லாம் வெற்றியாக மாறுகின்றன. அந்த அதிர்ஷ்டம் இந்தப் படத்திற்கும் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இந்தப் படக்குழுவின் ஒரு பகுதியாக இருந்ததை மிகவும் ரசித்தேன். செல்லா அய்யாவுவின் எழுத்தில் இயல்பாகவே நகைச்சுவை கலந்த ஒரு தனித்தன்மை இருக்கும். இந்தப் படத்தில் பணியாற்றியது மிகவும் ஜாலியான அனுபவமாக இருந்தது. படத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. ‘கட்டா குஸ்தி 3’ படத்திலும் விரைவில் சந்திப்போம்,” என்றார்.
நடிகர் பிரபுதேவா பேசுகையில், “அனைவருக்கும் எனது வணக்கம். அமைச்சர் அவர்களுக்கும், என் அண்ணன் போன்ற ஐசரி கணேஷ் சாருக்கும், விஷ்ணு விஷால், இயக்குநர் செல்லா அய்யாவு, குஷ்மிதா உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். வெளிநாட்டில் இருந்தபோது கணேஷ் சார் என்னை அழைத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கூறினார். எந்த நேரமாக இருந்தாலும் அவரது அழைப்புக்காக வந்துவிடுவேன் என்று சொன்னேன். அந்த அளவுக்கு எங்களுக்குள் ஒரு அண்ணன்-தம்பி போன்ற உறவு இருக்கிறது. விஷ்ணு விஷாலின் நலனில் அக்கறை கொண்டவர்களில் நானும் ஒருவன். இந்தப் படத்திற்கு மட்டுமல்லாமல், தனது ஒவ்வொரு படத்திற்கும் அவர் இதே உழைப்பையும், 200 சதவீத அர்ப்பணிப்பையும் கொடுத்து வருகிறார். அவர் இன்னும் பெரிய உயரங்களை அடைய வேண்டும் என்பது எனது விருப்பம். அவரது மனைவி ஜ்வாலா கட்டாவின் மிகப்பெரிய ரசிகன் நான். அவர் உலகத் தரம் வாய்ந்த பேட்மிண்டன் வீராங்கனை,” என்றார்.
“இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி, அதையும் வெற்றிப் படமாக மாற்றுவது மிகவும் கடினமான விஷயம். அந்த சவாலை இயக்குநர் செல்லா அய்யாவு சிறப்பாகச் செய்திருக்கிறார். முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் வெற்றி பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. ரம்யா கிருஷ்ணன் மேடம் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் நடித்த மற்ற கலைஞர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கும் எனது வாழ்த்துகள். ‘கட்டா குஸ்தி 2’ படக்குழுவினர் அனைவரும் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற வேண்டும்,”.
“குஷ்மிதாவை சிறு வயதில் இருந்தே பார்த்திருக்கிறேன். இன்று அவர் நிறுவனத்தின் பொறுப்புகளை ஏற்று அடுத்த தலைமுறையாக வளர்ந்து வருவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் இந்த நிறுவனத்தை இன்னும் சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்பது எனது வாழ்த்து. நீண்ட நாட்களுக்குப் பிறகு இதுபோன்ற வெற்றி விழாவிலும், கலைஞர்களுக்கு சீல்டு வழங்கும் நிகழ்விலும் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குறிப்பாக ஒரு முக்கியமான இடத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தி, படத்தின் வெற்றியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வது மிகவும் சிறப்பு. என்னை அழைத்த ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி. ‘கட்டா குஸ்தி 2’ படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்றார்.
அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், “அனைவருக்கும் மாலை வணக்கம். தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே ஒரு சகாப்தமானவர், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அனைவராலும் கொண்டாடப்படும் பத்மஸ்ரீ பிரபுதேவா மாஸ்டர் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. அவருடன் பணியாற்றியபோது பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. படப்பிடிப்பு தளத்தில் அவர் அமைதியாக இருப்பார். ஆனால், கேமரா முன்பு நின்றுவிட்டால் அந்தக் கதாபாத்திரமாகவே முழுமையாக மாறிவிடுவார். இடைவேளையின்போது கூட செல்போனை பயன்படுத்தாமல், புத்தகம் படிப்பது, செஸ் விளையாடுவது என தனது நேரத்தைப் பயன்படுத்துவார். அவரது தொழில்முறை அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் அனைவருக்கும் ஒரு பாடமாகும். வேல்ஸ் நிறுவனம் சார்பில் அவருக்கு வழங்கப்படும் இந்த கௌரவம், அவர்மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடாகும்.
“எங்கள் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அண்ணன் ஒரு உண்மையான சினிமா காதலர். அவருக்குள் எப்போதும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். யாராவது உதவி கேட்டால் உடனடியாக அதை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கும் பெரிய மனம் கொண்டவர். சினிமா மற்றும் கல்வித் துறை என இரண்டிலும் தொடர்ந்து பல சேவைகளை செய்து வருகிறார். ‘கட்டா குஸ்தி 2’ 50 நாட்களைக் கடந்து ஓடுவது இந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய சாதனை. இன்றைக்கு ஐந்து நாட்கள், ஏன் ஒரு நாளில் ஐந்து காட்சிகள் வெற்றிகரமாக ஓடுவதே சவாலான சூழ்நிலையில், 50 நாட்கள் என்பது படக்குழுவுக்கு கிடைத்த பெரிய மணிமகுடம். இப்படிப்பட்ட வெற்றிக்கு விஷ்ணு விஷால் போன்ற கடின உழைப்பாளியும், படத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்ட நடிகரும் தேவை. தனது நடிப்புக்கு இணையாக சக நடிகர், நடிகைகள் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் அவரது மனதை நான் பாராட்டுகிறேன். படத்தின் ஒவ்வொரு விஷயத்திலும், குறிப்பாக விளம்பரப் பணிகளிலும் அவர் காட்டிய அர்ப்பணிப்பு அபாரமானது.
“ஐஸ்வர்யா லட்சுமி இந்தப் படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். அவருடன் சிறுமி ஜாராவின் பங்களிப்பும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது. இவ்வளவு திறமையான கலைஞர்கள் மத்தியில் அவர் காட்டிய தன்னம்பிக்கையும் நடிப்பும் பாராட்டுக்குரியது. படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். அதேபோல், திரையில் தெரியாத தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் இந்த வெற்றிக்கு மிக முக்கியமானது. இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை, மல்யுத்தக் காட்சிகளை சிறப்பாக உருவாக்கிய ஸ்டண்ட் குழு, அதை தத்ரூபமாகப் பதிவு செய்த ஒளிப்பதிவாளர், சிறப்பாக வடிவமைத்த எடிட்டர் என ஒவ்வொருவரின் உழைப்பும் படத்தின் பலமாக அமைந்துள்ளது. அந்த அனைவரையும் மேடைக்கு அழைத்து கௌரவிக்க வேண்டும் என்று நினைத்து இந்த விழாவை நடத்தும் தயாரிப்பு நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோருக்கும் என் வாழ்த்துகள். என் அண்ணன் நம் தமிழக முதல்வர் மாண்புமிகு C. ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சியில் திரைத்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளும் கோரிக்கைகளும் செயல்படுத்தப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி” என்றார்.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் இந்த தருணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக அமைத்து, இந்த மகிழ்ச்சியான தருணத்தை எனக்குக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. விஷ்ணு விஷால் எனக்கு ஒரு அற்புதமான சக நடிகர். படம் வெளியான பிறகு, அவரை ஒரு தயாரிப்பாளராகவும் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அவர் மீது வைத்திருக்கும் மரியாதை மேலும் அதிகரித்துள்ளது. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்ததற்கு நன்றி. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும், சிறுவயதில் இருந்தே பாடல்கள் மூலம் பார்த்து ரசித்த பிரபுதேவா சாருக்கும் எனது நன்றி. நடனமாட வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது. நடனக் கலைஞர்களின் திறமையை எப்போதும் வியப்புடன் ரசிப்பேன். இந்த விழாவில் பிரபுதேவா சார் கலந்து கொண்டது மிகவும் சிறப்பானது,”.
“செல்லா சார், ‘கட்டா குஸ்தி’ படத்தில் கீர்த்தி கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்வு செய்ததற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. நான் எத்தனை படங்களில் நடித்தாலும், கீர்த்தி கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் வரவேற்பும், அந்தக் கதாபாத்திரம் மூலம் மக்களிடம் நான் பெற்ற அன்பும் எப்போதும் எனக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். நீங்கள் நான் பணியாற்றிய மிகவும் அன்பான இயக்குநர்களில் ஒருவர். குஷ்மிதா, நீங்கள் எனக்கு ஒரு நல்ல ஆதரவாக இருந்திருக்கிறீர்கள். தயாரிப்புத் தரப்பில் ஒரு பெண்ணாக எனக்கு நல்ல நண்பராகவும் ஆதரவாகவும் நீங்கள் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் சிறப்பான திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும்; நாம் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தப் படத்தின் வெற்றிக்காக 100 சதவீதம் உழைத்த எனது ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி. நீங்கள் அனைவரும் உங்கள் பணியை சிறப்பாகச் செய்ததால்தான் இன்று இந்த 50வது நாள் கொண்டாட்டத்தில் நாம் இருக்கிறோம்.
“என்னை அழகாகத் திரையில் காட்டியவர்கள், கீர்த்தி கதாபாத்திரத்தை சிறப்பாக உருவாக்கியவர்கள், சண்டைக் காட்சிகளை அற்புதமாக அமைத்தவர்கள் என ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. ரூச்சி, ஸ்ரவந்தி, பரத், பாஸ்கர் சார், என் அன்புக்குரிய ஜாரா மற்றும் மீனு மிஸ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
நடிகை மோக்ஷா பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். தமிழ் மக்களின் அன்புக்கும், தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கும் எனது மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும்தான் ‘கட்டா குஸ்தி 2’ படத்தை இவ்வளவு பெரிய வெற்றியாக மாற்றியுள்ளது. இனியும் இதேபோன்ற ஆதரவு எனக்குத் தேவை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இவ்வளவு பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு பகுதியாக நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஒரு சிறிய எதிர்பார்ப்புடன் வந்த எனக்கு, இன்று வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவான படத்தில் இடம்பெற்றிருப்பது இன்னும் கனவு போலவே இருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த ஐசரி கணேஷ் சார், விஷ்ணு விஷால் சார் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது நன்றி,” என்றார்.
“‘மீனாட்சி’ கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்வு செய்த இயக்குநர் செல்லா சாருக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்தக் கதாபாத்திரம் மக்களிடம் எந்த அளவுக்கு சென்றடைந்துள்ளது என்பதைப் பார்க்கும்போது இன்னும் நம்ப முடியவில்லை. தற்போது என்னைப் பார்க்கும் பலரும் ‘மீனாட்சி’ என்றே அழைக்கிறார்கள். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகு பிற மொழி ரசிகர்களும் அந்தக் கதாபாத்திரத்தை அடையாளப்படுத்துவது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நான் உண்மையில் மீனாட்சி போல நீண்ட தலைமுடியுடன் இருப்பவள் அல்ல; நான் மோக்ஷா என்பதை மக்களுக்கு நம்ப வைப்பதே இப்போது சற்று சவாலாக இருக்கிறது. அந்த அளவுக்கு அந்தக் கதாபாத்திரத்தை மக்கள் ஏற்றுக்கொண்டதற்குக் காரணம், இயக்குநர் என் மீது வைத்த நம்பிக்கையே,‘மீனாட்சி’ கதாபாத்திரம் தனித்துவமான ஒரு அடையாளத்தை வழங்கியுள்ளது. நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும், நான் விரும்பும் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரான பிரபுதேவா சாருக்கும் நன்றி. வேல்ஸ் குடும்பம், ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் தமிழ் ரசிகர்கள் என அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்,” என்றார்.
குழந்தை நட்சத்திரம் ஜாரா பேசுகையில்.., “இந்த சீல்டைப் பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் என்னைத் தேர்வு செய்த எனது பெற்றோர், இயக்குநர், தயாரிப்பாளர், விஷ்ணு விஷால் சார் மற்றும் ஐஸ்வர்யா மேம் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பு தளத்தில் என்னை அன்பாகவும், வசதியாகவும் உணர வைத்த எனது சக நடிகைகளான மோக்ஷா மேம், ஐஸ்வர்யா மேம் மற்றும் ரித்தி மேம் ஆகியோருக்கும் நன்றி. இந்த வாய்ப்பையும் அன்பையும் அளித்த அனைவருக்கும் என் நன்றி,” என்றார்.
நடிகர் யோகி பாபு பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். இயக்குநர் செல்லா அய்யாவுவுடன் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் இருந்து தொடர்ந்து பயணித்து வருகிறேன். அந்தப் படத்தில் எனக்கு முழு நீளக் கதாபாத்திரம் கொடுத்தவர், இந்தப் படத்தில் சிறிய பகுதியாக இருந்தாலும் முக்கியமான ஒரு இடத்தில் என்னை பயன்படுத்தியிருக்கிறார். ‘கட்டா குஸ்தி’ முதல் மற்றும் இரண்டாம் பாகத்துடன் முடிந்துவிடும் என்று நினைத்திருந்த நிலையில், மூன்றாம் பாகத்திற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இறுதியில் அந்த வசனத்தை வைத்தது செல்லா சாரின் திட்டம்தான். அதற்காக அவருக்கு எனது நன்றி,”.
“50வது நாள் வெற்றியைக் கொண்டாடுவது தற்போது மிகவும் அரிதாகிவிட்டது. இந்தப் படத்திற்காக 50வது நாள் விழாவை நடத்தி, கலைஞர்களைக் கௌரவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் 100வது நாள் விழாவையும் கொண்டாடும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். அனைத்து தயாரிப்பாளர்களும் தங்கள் வெற்றிப் படங்களுக்காக இதுபோன்ற விழாக்களை நடத்தி கலைஞர்களை அழைத்துக் கொண்டாடினால் மகிழ்ச்சியாக இருக்கும். படப்பிடிப்பிலிருந்து நேரம் ஒதுக்கி இதுபோன்ற வெற்றி விழாக்களுக்கு வருவதும் எங்களுக்கு ஒரு மகிழ்ச்சிதான். அமைச்சர் ராஜ்மோகன், பிரபுதேவா மாஸ்டர், ஐசரி கணேஷ் சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி,” என்றார்.
முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திற்கும் கிடைத்துள்ள வரவேற்பு படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. சுப்ரா, ஆர்யன் ரமேஷ் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ள இப்படத்தின் 50வது நாள் கொண்டாட்டம், படக்குழுவினரின் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.