Breaking
March 1, 2025

Cinema

மெரி கிறிஸ்துமஸ் பத்திரிகையாளர் சந்திப்பு

பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘மெரி கிறிஸ்மஸ்’. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரமேஷ் தௌராணி, சஞ்சய் ரௌத்ரே, ஜெயா தௌராணி, கேவல் கர்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதியன்று வெளியாகிறது.
இதை முன்னிட்டு சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், பட தொகுப்பாளர் பூஜா லதா ஸ்ருதி, நடிகை கத்ரீனா கைஃப், நடிகர் சண்முகராஜன், நடிகர் கவின் பாபு, பாடலாசிரியர் யுகபாரதி, பின்னணி குரல் கலைஞர் தீபா வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் பேசுகையில், ” இந்த திரைப்படத்தைத் தொடங்கும் போது இந்தியில் மட்டும் இயக்குவது என்றும், விஜய் சேதுபதியை இந்தியில் அறிமுகப்படுத்தலாம் என்பது மட்டுமே என்னுடைய எண்ணமாக இருந்தது. மும்பையில் இருந்தாலும் தமிழ் படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணமும், கனவும் இருந்தது. அது ஏன் இந்த படமாக இருக்கக் கூடாது..! என்று சிந்தித்தேன். விஜய் சேதுபதியை வைத்து எப்போதாவது ஒரு தமிழ் படத்தை இயக்க வேண்டும் என்ற திட்டமும் இருந்தது. இப்படத்தினை தொடங்கும் போது கோவிட் காலகட்டமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் என்னுடைய நண்பரான இயக்குநர் தியாகராஜன் குமாராஜாவை சந்தித்தேன். அவர் மும்பை வந்திருந்தபோதும் சந்தித்து உரையாடினோம். இந்த கதையை தமிழிலும் உருவாக்கலாமே..! என அவர் கேட்டார். அதற்கு நான் தமிழ் மொழி மீதான ஆளுமை எனக்கு இல்லை என்றேன். அதற்கு அவர் நான் உதவி செய்கிறேன் என்று சொல்லி எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளிலும் இதனை உருவாக்கலாம் என்று திட்டமிட்டோம். திட்ட மிட்டபடி சற்று கடினமாக உழைத்து இப்படத்தை தமிழிலும், இந்தியிலும் உருவாக்கி இருக்கிறோம்.

நானும் நிறைய தமிழ் படங்களை பார்த்திருக்கிறேன். தற்போது அனைத்து தமிழ் படங்களும் மும்பையிலும் வெளியாகிறது. இதனால் என்னுடைய படங்களும் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தை பார்த்துவிட்டு உங்களது கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். இதற்கிடையே மராத்தி மொழியில் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற கனவும் இருக்கிறது.

மெல்பெர்னில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் நானும் விஜய் சேதுபதியும் சந்தித்து பேசினோம். அவருக்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்ததற்காக அவர் விருதினை பெற்றார். என்னுடைய இயக்கத்தில் வெளியான படத்தில் நடித்த தபுவிற்கும் விருது கிடைத்தது. ஐந்து நிமிட சந்திப்பிலேயே நாங்கள் நண்பர்களாகி விட்டோம். அந்த தருணத்தில் இந்த திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க கத்ரீனா கைஃப் மட்டுமே உறுதியாகி இருந்தார். விஜய் சேதுபதியை சந்தித்த பிறகு மும்பைக்கு திரும்பி, என்னுடைய குழுவினருடன் விஜய் சேதுபதி குறித்தும், விஜய் சேதுபதி அந்த கதாபாத்திரத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விவாதித்தோம். அனைவருமே இந்த ஜோடி குறித்து வியப்புடன் சம்மதம் தெரிவித்தனர். அதன் பிறகு தான் இவர்கள் இருவரும் இந்த திரைப்படத்தில் இணைந்தனர்” என்றார்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி பேசுகையில், ” எனக்கு இந்தப் பட வாய்ப்பு கிடைத்தது கூட ஆச்சரியமாக இருக்கிறது. சில தருணங்களில் நம்முடைய வாழ்க்கையில் சொல்லாமல் கொள்ளாமல் சில விசயங்கள் நடைபெறுவதுண்டு. அது போன்றது தான் ஸ்ரீராம் ராகவனின் சந்திப்பு. மெல்பெர்னில் சந்தித்தோம். பிறகு மும்பையில் இருந்து காணொளியில் பேசுவார். அவருடைய சிறப்பம்சமே காணொளி வாயிலான உரையாடலை வீடியோவாக எடுத்து அனுப்புவது தான்.

அவரது இயக்கத்தில் உருவான முதல் படம் ‘ஏக் ஹசீனா தி’. அது 2004 ஆம் ஆண்டில் என்னுடைய பிறந்தநாளன்று வெளியானது. அப்போது என்னுடைய நண்பர் ஒருவர் இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் உதவியாளர் ஸ்ரீராம் ராகவன் என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார். படம் நன்றாக இருக்கிறது. பார் என்றார். நான் அந்தப் படத்தை பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போது இவரது இயக்கத்தில் நாம் நடிக்க முடியுமா? என்று எண்ணினேன். அதன் பிறகு ஐநாக்சில் அவர் இயக்கத்தில் வெளியான ‘பட்லாபூர்’ எனும் திரைப்படத்தை பார்த்தேன். அந்த படமும் எனக்கு பிடித்திருந்தது.

அதன் பிறகு என்னை சந்தித்து ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தின் கதையை சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது செப்டம்பர் மாதம் நடந்தது. அதன் பிறகு அவரிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. எனக்குள் சிறிய பயம் எட்டிப் பார்த்தது. பிறகு தயாரிப்பாளர் சஞ்சய் அவர்களை தொடர்பு கொண்டு.. ஜனவரி மாதம் என்னுடைய பிறந்தநாள் வருகிறது. அப்போது ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாமா? என கேட்டேன். உடனே அவர்கள் சரி என்று ஒப்புக் கொண்டார்கள். அதன் பிறகு சற்று நம்பிக்கை வந்தது.

அதனைத் தொடர்ந்து அவரை சந்தித்தது.. பேச்சுவார்த்தை நடத்தியது.. அவரது அலுவலகத்தில் அமர்ந்து பல விசயங்களை உரையாடியது.. அனைத்து சந்திப்பின் போதும் எனக்கு ஒரு நடிகனுக்கான சுதந்திரத்தை நிறையக் கொடுத்தார். படப்பிடிப்பு தளத்தில் எங்களிடமிருந்து அவர் வேலை வாங்குவது சௌகரியமானதாக இருக்கும். அவருடன் செலவிடும் நிமிடங்கள் அனைத்தும் இயல்பாக இருக்கும். அவருடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து அவரது உதவியாளரும், கதாசிரியரும், பட தொகுப்பாளருமான பூஜா மேடம். அவர்கள் ஒரு காட்சிக்கு என்ன தேவை என்பதற்கு எளிமையாக விளக்கம் கொடுப்பதும் வியப்பைத் தரும்.

கத்ரீனா கைஃப்பை நேரில் பார்த்ததும் எனக்குள் சிறு ஆச்சரியம். அவர் நம்மை விட சீனியர் ஆர்டிஸ்ட். இரண்டு தசாப்தங்களாக திரைத்துறையில் இருக்கிறார்.. என்ற பயமும் இருந்தது. படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்ததும் அவருக்கான காட்சி குறித்த விசயங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். அவர் அந்த சூழலை மிகவும் இயல்பாக சௌகரியமாக மாற்றினார்.

இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகர் கவின் பாபு கூத்துபட்டறையில் பயிற்சி பெற்றவர். அவரும் நன்றாக நடித்திருக்கிறார்.

நான் துபாயில் மூன்றாண்டு காலம் பணியாற்றிய போது தான் முதன் முதலாக இந்தியை என்னுடைய பாஸ் பேச கேட்டிருக்கிறேன். அதில் பிறகு சின்ன சின்ன வார்த்தைகளை பேசி இருக்கிறேன். அதன் பிறகு இந்தி பேசி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. ‘ஃபார்ஸி’ படத்தில் பணியாற்றும்போது இந்தி பேசுவதற்கு கஷ்டமாக இருந்தது. அதன் பிறகு சற்று சரளமாக பேசத் தொடங்கினேன். இந்த படத்தில் நான் தான் இந்தி பேசியிருக்கிறேன். அது எப்படி பேசி இருக்கிறேன் என்பதை படம் வெளியான பிறகு தான் தெரிய வரும்.

பணியாற்றும் இடத்தில்தான் மொழிகளுக்கு ஏற்ற ஒலி இருக்கும். அதை கேட்டு பேசுவதில் மட்டும் தான் வேறுபாடு இருக்கும், மற்ற அனைத்தும் ஒன்றுதான். தற்போது டிஜிட்டல் தளங்கள் வந்துவிட்ட பிறகு மொழிகளுக்கு இடையே எந்த சுவரும் இல்லை.

இந்த திரைப்படம் ஜனவரி 12-ம் தேதி அன்று வெளியாகிறது. இப்படத்தை நாங்கள் அனைவரும் பார்த்து விட்டோம். எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ” என்றார்.

நடிகை கத்ரீனா கைஃப் பேசுகையில், ” சென்னை எனக்கு இரண்டாவது வீடு போன்றது. ஏனெனில் என்னுடைய தாயார் ஒன்பது வருடங்கள் மதுரையில் ஆசிரியையாக பணியாற்றினார். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் மிகவும் உற்சாகமடைந்தேன். முதன் முதலில் தமிழில் அறிமுகமாகிறோம். அதுவும் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ரீராம் ராகவனுடன் இணைந்து உருவாக்கும் படத்தில் நடிக்கிறோம். இதற்கு முன் மலையாளம், தெலுங்கு ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் தமிழில் முதல் முதலாக நடித்திருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.

இந்தப் படத்திற்காக நடைபெற்ற ஒர்க் ஷாப்பில் விஜய் சேதுபதியும், நானும் கலந்து கொண்டோம். அதுவும் நல்ல அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதி சில தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொடுத்தார் அதில் ‘ரொம்ப கஷ்டமாக இருந்தது’ என்ற வார்த்தையை பேசுவேன். படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய தமிழ் உச்சரிப்புக்கு நடிகை தீபா வெங்கட் உதவி செய்தார்” என்றார்.

பாடலாசிரியர் யுக பாரதி பேசுகையில், ”
மாடர்ன் லவ் சென்னை என்ற இணைய தொடரில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுடனும், இளையராஜாவுடனும் பணியாற்றும் போது.. நான் தமிழ் திரையுலகில் இரண்டாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியிருந்தாலும் அவருடன் இணைந்து பணியாற்றும்போது வித்தியாசமாக இருந்தது. அதன் போது தான் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இந்தி திரைப்படத்தில் பணியாற்றுகிறீர்களா? என கேட்டார். அப்போது எனக்கு ஹிந்தி தெரியாதே..! என்று சொன்னேன். அப்போது அந்த திரைப்படம் தமிழிலும் உருவாகிறது என்று சொல்லி இயக்குநர் ஸ்ரீராம் ராகவனை பற்றி விவரித்தார். அவரது இயக்கத்தில் வெளியான ‘பட்லாபூர்’ மற்றும் ‘அந்தாதூன்’ படத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவளுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்த போது, தியாகராஜன் தியாகராஜாவிடம் ஸ்ரீராம் ராகவனுக்கு தமிழ் தெரியுமா? என கேட்டேன். அதன் பிறகு அவர், என்னை அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்தப் படத்தில் பணியாற்றும்போது வழக்கமானதை போல் இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. விஜய் சேதுபதி சொன்னது போல் ஸ்ரீராம் ராகவன் அனைவரையும் முதலில் மனதளவில் தயார்ப்படுத்தி விடுவார். இந்தப் படத்தின் காட்சிகளை படமாக்கிய பிறகு பாடல்களை எழுதத் தொடங்கினோம். அவர் படத்தை முழுவதுமாக திரையிட்டு காட்டி விட்டு.. இந்தெந்த இடங்களில் பாடல்கள் வரலாம் என எண்ணியிருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்டதுடன், இந்த சூழலில் தமிழ் படத்தில் இதற்கு முன் என்னென்ன பாடல்கள் வந்திருக்கிறது என்ற காணொளி தொகுப்பையும் காண்பித்தார். அவை அனைத்தும் தமிழில் வெற்றி பெற்ற படங்களில் இடம்பெற்ற ஹிட்டான பாடல்கள். அதுவரை எனக்கு பாடலுக்கான மெட்டு தெரியாது. அதன் பிறகு அந்த மெட்டை கேட்க விட்டு.. இந்தெந்த இடங்களில் இந்த கருத்துக்களை சொல்லலாமா.. அல்லது என்ன சொல்லலாம்? என்பதை யோசியுங்கள். அதன் பிறகு எழுதலாம் என்றார்.

அவரது அணுகுமுறை எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. எனக்கு பணியாற்றுவதற்கு நிறைய நேரம் கிடைத்தது. அதிலும் ஆய்வு பூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் எழுத வேண்டியதிருந்தது. நான் தமிழில் எழுதி அனுப்பியதை அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பர். அதன் பிறகு என்னிடம் சில சந்தேகங்களை கேட்பார். அந்த சந்தேகங்கள் அனைத்தும் இந்தப் பாடலில் எளிமை இடம்பெற வேண்டும் என்பதாக இருந்தது.

மெட்டுக்கள் இந்தியில் இருந்தது. எந்த பாடலும் அந்த மெட்டுக்கு ஏற்ப எழுதாமல் தமிழ் சூழலுக்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டது.

அதன் பிறகு பாடல் பதிவின்போதும் என்னை அழைத்து, மொழி உச்சரிப்பு குறித்த திருத்தத்தை மேற்கொள்ளும் வாய்ப்பையும் வழங்கினர். இதற்காக இசையமைப்பாளர் பிரீத்தம் அவர்களுக்கும், இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் மற்றும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவிற்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் வழங்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் Pre Release Event .

சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. ஜனவரி 12 அன்று திரைக்கு வரவுள்ள, இப்படத்தின் Pre Release Event விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில், படக்குழுவினர், பத்திரிக்கையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்..

நடிகர் இளங்கோ குமரவேல் பேசியதாவது…
இந்தப்படத்தில் தனுஷை நான் பக்கத்திலிருந்து பார்த்தேன். தனுஷ் உழைப்பு பிரமிப்பாக இருந்தது. அவருடன் வேலைபார்த்தது நல்ல அனுபவம். ஷூட்டிங்கில் நாங்கள் ஒரு மலையில் இருப்போம், அவர் அடுத்த மலையில் தூரத்தில் நிற்பார். இப்படத்திற்காக மிகக் கடுமையாக உழைத்துள்ளார். இயக்குநர் அருண் மிகச்சிறப்பாகப் படத்தை உருவாக்கியுள்ளார். எனக்கு இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி.

நடிகர் வினோத் கிஷன் பேசியதாவது..
நான் தனுஷ் சாரின் மிகப்பெரிய ஃபேன். அருண் ப்ரோவுக்கும் நான் ஃபேன், இருவரும் இணையும் இந்தப்படத்தில் வேலைபார்த்தது எனக்கு கிஃப்ட் தான். மிகச்சிறப்பான அனுபவம். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை நிவேதிதா சதீஷ் பேசியதாவது..
எனக்கு இந்தப்படம் கனவு மாதிரி இருக்கிறது. ஒரு இண்டர்வியூவில் எனக்கு ஹிஸ்டாரிகல் படத்தில் நடிக்கணும், பிரம்மாண்ட படத்தில் நடிக்கணும், தனுஷ் படத்தில் நடிக்கணும் என மூன்று ஆசைகளைச் சொல்லியிருந்தேன். அது மூன்றும் இந்தப்படத்தில் எனக்கு நடந்ததுள்ளது. தனுஷ் சாரின் தீவிர ஃபேன் நான். அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். இந்தப்படம் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்.

நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசியதாவது..
ஒரு பிரமாண்ட விழாவில் நானும் இருப்பது மகிழ்ச்சி. தனுஷ் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கிறது. சினிமாவில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு, இயக்குநராக, நடிகராக, பாடகராக கலக்குகிறார். அவர் இயக்கத்தில் ஒரு சில காட்சிகள் நானும் நடித்திருக்கிறேன். மிக நல்ல அனுபவம், நிறையச் சொல்லித்தந்தார். இந்தப்படம் ஒரு புது அனுபவமாக இருக்கும். நடிகர் சிவராஜ் குமார் அவர்களுடன் வேலைப் பார்த்தது மகிழ்ச்சி. சுதந்திர காலத்துக்கு முன் நடக்கும் கதையில், இப்படிப்பட்ட பிரம்மாண்டமான படம் எடுக்க சத்யஜோதி பிலிம்ஸ் மாதிரியான நிறுவனம் வேண்டும். அவர்கள் இன்னும் நிறைய படம் எடுக்க வேண்டும். இம்மாதிரி படைப்பைச் சரியாக எடுத்துச்சென்ற இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி.

நடிகர் காளி வெங்கட் பேசியதாவது..
தனுஷ் சாருடன் இது நாலாவது படம், இன்னும் நிறையக் கற்றுக்கொண்டே இருக்கிறேன். இயக்குநர் அருணை இறுதிச்சுற்று படத்திலிருந்தே தெரியும், ஆனால் இந்தப்படத்தில் தான் வாய்ப்பு தந்துள்ளார். நல்ல ரோல், உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். அனைவருக்கும் நன்றி.

நடிகர் ராம்குமார் பேசியதாவது..
சத்ய ஜோதி தியாகராஜன் சாருக்கு என் வாழ்த்துக்கள். படத்தில் சம்பாதிப்பதை, படத்திலேயே செலவு செய்கிறார். அவருக்கு இப்படம் வெற்றிப்படமாக அமைய வேண்டும். தனுஷ் அறிமுகத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவரது வளர்ச்சி மிகப்பெரியது. அவர் ஹாலிவுட் அவார்டை வெல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன். கேப்டன் மில்லர் 100 நாள் விழா கொண்டாட வேண்டும், அதில் நானும் கலந்துகொள்ள வேண்டும். அனைவருக்கும் நன்றி.

நடிகர் எட்வர்ட் பேசியதாவது…
இந்தப்படத்தில் வில்லன் நான். எல்லாப்படத்தையும் போல, ஹீரோவுடன் சண்டை போட்டுள்ளேன். தனுஷுக்கு நானும் தீவிர ஃபேன். இந்தப்படம் செம்மையான அனுபவமாக இருந்தது. படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். நன்றி.

மாஸ்டர் திலீப் சுப்புராயன் பேசியதாவது..,
தனுஷ் சாருடன் எனக்கு 7 வது படம். மிகப்பெரிய ஜர்னி. கேப்டன் மில்லர் எனக்கு லைஃப் டைம் படம். இதில் சிஜுயெல்லாம் இல்லை, லைவ்வாக நிறைய எடுத்திருக்கிறோம். அருணும் நானும் காலேஜுல் இருந்தே ஃபிரண்ட்ஸ். இதில் நிறைய புதுசாக பண்ணியிருக்கிறோம். தனுஷ் சார் தண்ணீர் மாதிரி. எதில் வைத்தாலும், அதற்கேற்ற மாதிரி மாறிவிடுவார். இந்தப்படத்தில் அவரை நிறைய கஷ்டப்படுத்தியிருக்கிறேன். அதற்காக ஸாரி. சிவாண்ணாவுடன் ரொம்ப நாளாக வேலை பார்க்க ஆசைப்பட்டேன், இப்படத்தில் அது நடந்தது மகிழ்ச்சி. இப்படத்தில் கேர்ள்ஸ்க்கும் நிறைய ஆக்சன் காட்சி இருந்தது, டூப் போடாமல் எடுத்திருக்கிறோம். எல்லோரும் பயங்கரமாக கஷ்டப்பட்டு உழைத்தனர். இப்படம் பொங்கலுக்கு விருந்தாக இருக்கும்.

காஸ்ட்யூம் டிசைனர் காவ்யா பேசியதாவது..
தனுஷ் சாருக்கு நன்றி. இந்தப்படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறேன். இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக ஒரு விருந்தாக இருக்கும். நன்றி.

கலை இயக்குநர் T ராமலிங்கம் பேசியதாவது..
இப்படத்திற்காக 1500 துப்பாக்கிகள் செய்தோம். இந்தப்படம் நிறைய வேலை வாங்கியது. அந்த காலகட்டத்தைத் திரையில் கொண்டு வருவது பெரிய சவால், ஒரு கற்கோயிலைக் கொண்டு வருவது பயங்கர சவாலாக இருந்தது. படம் பார்க்கும் போது எது செட் என்று உங்களுக்குத் தெரியவே தெரியாது. இப்படத்திற்காக என்னுடன் உழைத்த தொழிலாளிகள் அனைவருக்கும் நன்றி. சத்யஜோதி பிலிம்ஸ் புரொடக்சன் தரப்பில் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். அவர்களால் தான் இவ்வளவு பெரிய படம் சாத்தியமானது. தனுஷ் சாருடன் இரண்டாவது படம். கர்ணன் படத்தில் கண்டா வரச்சொல்லுங்க, பாடலில் வரும் படத்தை, நான் தான் வரைந்தேன். நான் தீவிரமான தலைவர் ஃபேன், அவரை நினைத்துத்தான் வரைந்தேன். தலைவருக்குப் பின் ஒரு நடிகராக தனுஷ் சாரை ரசிக்கிறேன். ரஜினி சாருக்குப் பிறகு அவர் தான். என் கல்லூரிக்கால நண்பர் அருண், அவருடன் வேலைபார்த்தது நல்ல அனுபவம். எனக்கு இப்படத்தில் முழுச்சுதந்திரம் தந்தார். இந்தப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும்.

எடிட்டர் நாகூரான் பேசியதாவது..
எல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்துள்ளனர். நானும் கஷ்டப்பட்டு எடிட் செய்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது..,
இந்த மேடையில் இருப்பது, மகிழ்ச்சியாக இருக்கிறது. தனுஷ் சார் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். கேப்டன் மில்லர் விஷுவல் பார்த்தால், எனக்குப் பயமாக இருக்கிறது. அடுத்த படத்தில் அவரை வைத்து என்ன செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை. கர்ணன் முடிந்தவுடன், அவருடன் வேலை பார்க்க சைன் பண்ணினேன். ஆனால் எனக்கு வேறு புராஜக்ட் வந்த போது, என்னை அன்புடன் அனுப்பி வைத்தார். அதற்காக அவருக்கு நன்றி. கர்ணன் செய்யும் போதே, கேப்டன் மில்லர் ஒப்பந்தமாகிவிட்டார். கர்ணனை விட இதில் பயங்கரமாக வேலை பார்த்திருக்கிறார். அடுத்த படத்தில் இதை விட, உங்களுக்குப் பெரிய தீனி தர முயற்சிக்கிறேன். இப்படத்தில் என் நண்பர்கள் பலர் வேலைபார்த்துள்ளனர், அனைவருக்கும் வாழ்த்துக்கள். தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது நான் அங்கு போயிருந்தேன். அப்போது முதல் ஆளாக எனக்குக் கால் பண்ணி விசாரித்தவர் தனுஷ் சார். தனுஷ் சாரிடம் எப்போதும் நல்ல நட்பு இருக்கிறது. அவர் எப்போதும் சினிமாவை கவனித்துக்கொண்டிருக்கிறார். நிச்சயம் கேப்டன் மில்லர் மிகப்பெரிய வெற்றி பெறும் நன்றி.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..,
இது மிகப்பெரிய படம். தனுஷ் சாருடன் இரண்டு தம்பிகள் அமர்ந்திருக்கிறார்கள், அவர்களைப் பார்த்தால் மகன்கள் மாதிரி தெரியவில்லை. அவர்களும் விரைவில் ஹீரோவாக வர வேண்டும். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம், அருண் மற்றும் இந்த டீமை நம்பி, மிகப்பெரிய படைப்பைத் தந்திருக்கிறார்கள். விஷுவல்கள் சூப்பராக இருக்கிறது. கண்டிப்பாக இப்படம் பொங்கலுக்கு பெரிய வெற்றிப்படமாக இருக்கும்.

பாடலாசிரியர் உமாதேவி பேசியதாவது…
கேப்டன் மில்லர் நான் தனுஷ் சாருக்கு எழுதியிருக்கும் ரெண்டாவது பாடல். பட்டாஸ் படத்தில் புது சூரியன் பாடல் எழுதினேன், அவரை மனதில் வைத்துத்தான் எழுதினேன். இரண்டு பாடலும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தந்த வாய்ப்பு. இப்படத்தில் கோரனாரு என்ற பாடல் எழுதியிருக்கிறேன். கோரனாரு என்றால் யானை பலம் கொண்டவர் என்று அர்த்தம். இந்தப் பாடலுக்காக ஜீவி சாருக்கு நன்றி. இந்த வாய்ப்பை தந்த இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோருக்கும் நன்றி.

பாடலாசிரியர் விவேக் பேசியதாவது..
தன் கலைப்படைப்பு மூலம், எனக்கு நான் ராஜாவாக வாழுறேன், என வாழ்பவர் தனுஷ் சார். இளையராஜா சார் போன்ற ஆளுமைகள் கோலோச்சிய காலத்தில் நாம் இல்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கும். ஆனால் தனுஷ் சாரும் மிகப்பெரிய ஆளுமை தான், அவர் காலத்தில் அவருடன் இணைந்து பல படங்களில் பணியாற்றுவது, மிகப்பெரிய பெருமை. ஜீவி சார் மிகப்பெரிய சாதனைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. அருண் மிகப்பெரிய உழைப்பாளி. அவருக்கு என் வாழ்த்துக்கள். இப்படத்தில் வேலைபார்த்த அனைவருக்கும் நன்றி.

நடிகை பிரியங்கா மோகன் பேசியதாவது..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். கேப்டன் மில்லர் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். அருண் சார் கதை சொன்ன போதே, ரொம்ப எக்ஸைட்டாக இருந்தது. எனக்கு ஹிஸ்டாரிகல் படங்கள் என்றாலே பிடிக்கும், அப்படிப்பட்ட படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி. இப்படத்திற்காக அந்த காலகட்டத்தைக் கொண்டு வர, எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர். எனக்குத் துப்பாக்கி பிடிக்கவே தெரியாது, என்னை ஆக்சன் செய்ய வைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் என் நன்றியைச் சொல்ல வேண்டும். இவ்வளவு பெரிய படத்தை புரடியூஸ் பண்ணுவது மிகப்பெரிய வேலை, சத்ய ஜோதி பிலிம்ஸ் தந்த ஆதரவுக்கு நன்றி. ஜீவி சார் அட்டகாசமான இசையைத் தந்துள்ளார். சிவராஜ்குமார் சாருடன் இணைந்து நடித்தது பெருமை. அருண் உண்மையில் செம்ம ஜாலியானவர், கடுமையாக உழைத்திருக்கிறார். நான் தனுஷ் சாருக்கு பெரிய ஃபேன், அவருடன் சேர்ந்து நடித்தது சந்தோஷம். அவர் நடிப்பைப் பார்த்து மிரண்டிருக்கிறேன். இந்தப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இந்தப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும். நன்றி.

ராம்சரண் – இயக்குநர் புச்சி பாபு சனா கூட்டணியில் ஏ. ஆர். ரஹ்மான் இணைந்திருக்கிறார்.

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் – இயக்குநர் புச்சி பாபு சனா – தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு- விருத்தி சினிமாஸ்- மைத்திரி மூவி மேக்கர்ஸ் – சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படத்தில் ‘ஆஸ்கார் நாயகன்’ ஏ. ஆர். ரஹ்மான் இணைந்திருக்கிறார்.

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண்- அடுத்ததாக இளம் மற்றும் திறமையான இயக்குநரான புச்சி பாபு சனாவுடன் இணைகிறார். இயக்குநர் புச்சி பாபு சனா – தனது முதல் படைப்பாளியான ‘உப்பென்னா’ எனும் திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்றார். இந்தத் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இவர்களின் கூட்டணியில் உலகளவிலான தொழில்நுட்ப தரத்தில் தயாராகும் பான் இந்திய திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்குகிறது. இந்தத் திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்தின் மூலம் வெங்கட சதீஷ் கிலாரு திரைப்பட தயாரிப்பில் கால் பதிக்கிறார்.

இந்த மெகா முயற்சிக்கு ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளரான ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மானின் பிறந்த நாளை முன்னிட்டு, படக் குழுவினர் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். உப்பென்னா திரைப்படம் ஒரு மியூசிக்கல் ஹிட். இப்படத்தை இயக்கிய புச்சி பாபு சனாவின் இரண்டாவது படமும் மியூசிக்கல் சார்ட் பஸ்டராக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஏ. ஆர். ரஹ்மான் – இந்திய சினிமா வரலாற்றில் வெற்றிகரமான இசை அமைப்பாளர்களில் ஒருவர். அவர் நாடு முழுவதும் உள்ள இசை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றவர். ஆஸ்கார் விருதினை வென்ற பிறகு உலக அளவில் பிரபலமானார். ரஹ்மானின் இசை உலகளாவியது. அவர் இந்த பான் இந்திய படைப்பிற்கு இசையமைப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் ரசிகர்களை ஈர்க்கும் காரணிகளில் ஒன்றாகவும் அவர் திகழ்வார்.

இயக்குநர் புச்சி பாபு சனா ஆற்றல் வாய்ந்த திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார். அந்தக் கதை உலகளாவிய கவனத்தை கவரும் வகையில் அமைந்திருக்கிறது. இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றிய விவரங்களை தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்.

ஹனு-மான் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு.

பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனு-மான்.

இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் திரைப்பட யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகும் ஹனு-மான் படத்தின் கதை அடிப்படையில் “அஞ்சனாத்ரி” என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க சிஜியில் உலகத்தரத்தில் இந்த ஃபேண்ட்ஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் பம்பரமாகச் சுழன்று வருகின்றனர். இப்படத்தின் தமிழ்ப் பதிப்பினை, விளம்பரப்படுத்தும் வகையில், படக்குழுவினர் சென்னையில், தமிழ் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்

தயாரிப்பாளர் சைத்தன்யா பேசியதாவது…
எல்லோருக்கும் அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் நிரஞ்சன் ரெட்டி, அஸ்ரின் ரெட்டி,, வெங்கட் குமார் ஜெட்டி மற்றும் இயக்குநர் பிரசாந்த் வர்மா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். படத்தின் இறுதிக்கட்ட வேலைகளால் அவர்களால் இங்கு வர முடியவில்லை. திரைப்படத்தின் மீதான எங்களது காதலின் வெளிப்பாடாக இப்படைப்பை உருவாக்கியுள்ளோம். இப்படத்திற்காக அனைவரும் கடுமையான உழைப்பைத் தந்துள்ளனர். இப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. ஒரு சிறு முயற்சியாக துவங்கி பான் வேர்ல்ட் படமாக மாறியுள்ளது. உங்கள் எல்லோருக்கும் இப்படம் புது அனுபவமாக இருக்கும். சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் சார் இப்படத்தை வெளியிடுவது எங்களுக்குக் கூடுதல் பலம். அவருக்கு என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன், படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி.

சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது..
சைதன்யா மேடம் இந்நிகழ்ச்சிக்குக் கிளம்பும்போது செருப்பு போடவில்லை, மொத்த டீமும் அப்படித்தான். ஹனுமான் மீதான அனைவரின் அர்ப்பணிப்பும் அங்கேயே தெரிகிறது. நான் கடந்த ஒரு வருடமாக இப்படத்தைக் கவனித்து வருகிறேன். படத்தை முடித்துவிட்டாலும், ஒரு வருடமாக சிஜி வேலை செய்து வருகிறார்கள். உலகத்தரத்தில் இப்படைப்பினை உருவாக்கியுள்ளனர். இந்தப்படத்தை நான் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இந்த புது வருடத்தில் இப்படத்துடன் ஆரம்பிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பொங்கலை ஹனுமானுடன் ரசிகர்கள் கொண்டாடலாம். பத்திரிக்கை நண்பர்கள் இந்தப்படத்திற்கும் எப்போதும் போல் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் வினய் பேசியதாவது…
இது ஒரு தெலுங்குப்படம், நான் செய்யும் முதல் தெலுங்குப்படமாக இருந்தது, ஒரு வகையில் அப்படித்தான் ஆரம்பமானது. சின்னப்படமாக தான் ஆரம்பித்தது ஆனால் ஹனுமனின் ஆசீர்வாதத்தில் இப்படம் பான் இந்திய அளவில் மிகப்பெரிய படமாக மாறியுள்ளது. இந்தப்படத்திற்காக எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கிறது. தயாரிப்பில் நிரஞ்சன், சைத்தன்யா ஆகியோர் படத்திற்காக ஒவ்வொன்றையும் பார்த்துச் பார்த்து செய்துள்ளனர். நான் இந்தப்படத்தில் வித்தியாசமான காஸ்ட்யூமில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளேன். உங்கள் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும். சக்தி பிலிம் பேக்டரி ஒரு படத்தை வெளியிட்டால் அது வெற்றிப்படமாக இருக்கும், இப்படத்தை அவர்கள் வெளியிடுவது மகிழ்ச்சி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்

நடிகை அம்ரிதா ஐயர் பேசியதாவது…
இப்படத்தை தெலுங்குப்படமாக தான் ஆரம்பித்தோம், கொஞ்ச நாளில் பான் இந்தியப்படமாகி, பின்னர் இப்போது பான் வேர்ல்ட் படமாக மாறியுள்ளது. அனுமனின் ஆசீர்வாதம் தான் அதற்குக் காரணம். இப்படத்தைப் பெரிய அளவில் எடுத்துச்சென்ற தயாரிப்பாளர்களுக்கு என் நன்றி. இந்தப்படம் இந்திய சினிமா பெருமைப்படும் படமாக இருக்கும். ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடும் படமாக இருக்கும். சாதாரண பையனுக்கு அனுமனின் பவர் கிடைத்தால் என்னாகும் என்பது தான் கதை, ஆன்மீக படமல்ல, எல்லோருக்கும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிப்பார்கள். திரையரங்கில் பார்க்க வேண்டிய படம் இது புதுமையான அனுபவத்தைத் தரும். உங்கள் ஆதரவைத் தாருங்கள்

நடிகை வரலட்சுமி பேசியதாவது…
இந்தப்படத்தின் வளர்ச்சி பிரமிப்பாக இருக்கிறது. எல்லோரும் கதை சொல்லும்போது, படம் இப்படி வரும் என நினைப்போம், ஆனால் நாங்கள் யாருமே நினைக்காத அளவு, இப்படம் பிரம்மாண்டமாக வந்துள்ளது. சைத்தன்யா மேடம் பிரசாந்த் கேட்ட அத்தனையும் தந்து, இப்படத்தை மிகப்பெரிய படமாகக் கொண்டு வந்துள்ளார்கள். பிரசாந்த், தேஜா இந்தப்படத்திற்காகக் கடுமையாக, ஒவ்வொரு ஃபிரேமிலும் உழைத்துள்ளனர். இந்தப்படம் இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ படமாக இருக்கும். புதுசாக இருக்கும். டிரெய்லர் பார்த்திருப்பீர்கள், ஆனால் படம் இன்னும் நிறைய ஆச்சரியம் தரும். சில படங்களின் விஷுவலை திரையரங்கில் பார்த்தால் தான் அனுபவிக்க முடியும் இது அப்படியான படைப்பு. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் தேஜா சஜ்ஜா பேசியதாவது…
ஹனுமான் படத்திற்குப் பின்னால் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. இது தெலுங்குப்படமல்ல, நேரடித்தமிழ் படம் மாதிரி தான் இருக்கும். அதற்காக நிறைய உழைத்துள்ளோம். இப்படத்தை மிகப்பெரிய படமாக்கத் தயாரிப்பு தரப்பில்,சைத்தன்யா மேடம், நிரஞ்சன் சார் மிகப்பெரிய ஆதரவைத் தந்துள்ளார்கள். டிரெய்லரிலேயே படத்தின் தன்மை உங்களுக்குத் தெரியும். படம் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். சக்தி பிலிம் பேக்டரி இப்படத்தை வெளியிடுகிறார்கள் அவர்களுக்கு எனது நன்றி. இது முழுக்க முழுக்க கற்பனைக் கதை,”அஞ்சனாத்ரி” என்ற உலகை இப்படத்திற்காக உருவாக்கியுள்ளோம். ஒரு பையனுக்கு அனுமனின் சக்தி கிடைப்பது தான் கதை. வினய், வரலட்சுமி, அம்ரிதா என எல்லோரும் மிகச்சிறப்பாகச் செய்துள்ளனர். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. நம் தென்னிந்தியக் கலாச்சாரத்தில், பொங்கலுக்கு 4,5 படங்கள் பார்க்கும் வழக்கம் இருக்கிறது, அது போல் இந்தப் பொங்கலுக்கு எங்கள் படத்திற்கு ஆதரவு தாருங்கள். இது ஓடிடியில் பார்க்கும் படமல்ல திரையரங்கில் அனுபவிக்க வேண்டிய படம். டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு தந்தீர்கள் படத்திற்கும் ஆதரவு தாருங்கள். நன்றி.

தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் ஹனு-மான் பான் வேர்ல்ட் படமாக வெளியிடப்படவுள்ளது.

இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார், இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர்.

பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்டின் K நிரஞ்சன் ரெட்டி இப்படத்தை பெருமையுடன் தயாரிக்கிறார், ஸ்ரீமதி சைத்தன்யா வழங்குகிறார். அஸ்ரின் ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராகவும், வெங்கட் குமார் ஜெட்டி லைன் தயாரிப்பாளராகவும், குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

இந்த பிரம்மாண்டமான படைப்பின், ஒளிப்பதிவை சிவேந்திரா செய்துள்ளார், இப்படத்திற்கு இளம் திறமையாளர்களான கவுரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ணா சவுரப் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்துள்ளனர். ஸ்ரீநாகேந்திரா தாங்கலா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள இப்படம் ஜனவரி 12, 2024 பொங்கல் அன்று திரைக்கு வரவுள்ளது.

இந்தியா வல்லரசு ஆவதற்கான சூட்சுமங்களை பகிர்ந்த கவிப்பேரரசு வைரமுத்து

குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களின் தமிழ் கீதம் யுனிசெஃப் பாராட்டு பெற்றது குறித்த நிகழ்ச்சியில் ருசிகரம்

மதுரையில் வெற்றிகரமாக இயங்கி வரும் குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களின் தமிழ் கீதம் (வேர்ல்ட் ஸ்டூடென்ட் ஆந்தம்) மும்பையில் நடைபெற்ற யுனிசெஃப் (ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான அமைப்பு) உலகளாவிய குழந்தைகள் தினக் கொண்டாட்டங்களில் பாராட்டுப் பெற்றுள்ளது.

இதைக் கொண்டாடும் வகையிலும் பாடலின் குழுவினரான கவிஞர் திரு. மதன் கார்க்கி, இசையமைப்பாளர் திரு. அனில் சீனிவாசன், பாடல் தயாரிப்பாளரும் பள்ளியின் நிர்வாக இயக்குநருமான திரு. அபிநாத் சந்திரன் உள்ளிட்டோர் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாகவும் சென்னையில் ஜனவரி 3 புதன்கிழமை அன்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இதற்கு தலைமை வகித்த கவிப்பேரரசு திரு. வைரமுத்து பேசியதாவது: “இப்பள்ளியின் தாளாளர் திரு. அபிநாத் சந்திரன் எனது மகனுக்கு நிகரானவர். இன்று நான் பெருமையோடும் பெருமிதத்துடன் நின்று கொண்டிருக்கிறேன். வைகை நதிக்கரையில் இயங்கும் ஒரு பள்ளி உலக சிந்தனையை சிந்தித்து உலகத்தின் மொத்தத்திற்கும் தமிழை கொண்டு சேர்த்திருக்கிறது.

இதற்கு காரணமான திரு அபிநாத் சந்திரன், இசையமைப்பாளர் திரு. அணில் சீனிவாசன், பாடலை இயற்றிய குருவை மிஞ்சிய சிஷ்யனாக விளங்கும் எனது மகன் திரு மதன் கார்க்கி, இதர குழுவினர் மற்றும் மாணவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக அரங்கில், ஐநாவின் துணை நிறுவனமான யுனிசெஃப் வாயிலாக இந்த சாதனையை செய்திருப்பது எளிமையான செயல் அல்ல. என் நண்பரும் என் மைந்தனும் அதற்கு காரணமாக திகழ்கிறார்கள் என்பது எனக்கு பெரிய பெருமை.

வைகை நதிக்கரையில் இருந்து உலகத்தின் அனைத்து நதிக் கரைகளுக்கும் சேர்த்து சிந்தித்து இருக்கிறார்கள். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று சொல்லும் ஒரு தயாரிப்பாளர் தமிழ் சினிமாவில் எளிதில் கிடைப்பதில்லை. ஆனால் அப்படி ஒரு தயாரிப்பாளர் மதுரையில் கிடைத்திருக்கிறார். அவர் தான் இந்த பாடலை தயாரித்துள்ள இளம் கல்வியாளர் திரு. அபிநாத் சந்திரன்.

இந்தப் பாடல் வரிகளில் உள்ள எளிமையும் சத்தியமும் அதை உலக அரங்கில் எடுத்து சென்று இருக்கிறது. அதற்கு காரணமான திரு அபிநாத் கல்விக்காகவே தனது உள்ளத்தை, உடலை, உயிரை, பணத்தை, வாழ்க்கை அர்ப்பணித்திருப்பவர். இவரது நிர்வாக நேர்த்தியையும் நேர மேலாண்மையையும் பார்த்து நான் வியந்திருக்கிறேன். வெளிநாட்டில் மட்டுமே பார்க்கக்கூடிய நேர மேலாண்மையை தமிழ்நாட்டில் கடைபிடிப்பவர் அபிநாத். இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க கல்வியாளர்களின் ஒருவராக அபிநாத் திகழ்வார் என்பது எனது நம்பிக்கை.

அணில் சீனிவாசன் வெறும் இசையமைப்பாளர் மட்டுமல்ல, ஒரு இசை ஆசானும் கூட. எத்தனையோ இளைஞர்களுக்கு அவர் இசையை கற்றுக் கொடுக்கிறார், அவரும் கற்கிறார். மிகவும் தேர்ந்த இசையமைப்பாளராக அவர் திகழ்கிறார்.

இந்தப் பாடலை மதன் கார்க்கி மிகவும் எளிமையான சொற்களை கொண்டு எழுதி இருக்கிறார். உன்னத கருத்துக்களை அனைவருக்கும் புரியும் படியாக சொல்லி இருக்கிறார். ஏனென்றால் இது குழந்தைகளுக்கான பாட்டு. அவர்களுக்கு அது எளிமையாக சென்றடைய வேண்டும், எளிதாக புரிய வேண்டும் என்பதற்காக மிகவும் சிரத்தையோடு எழுதியிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்.

மாணவர்கள் அச்ச சூழலிலேயே வளர்வது என்ன நியாயம் என்று இந்தப் பாடல் உலகை பார்த்து கேட்கிறது. அச்சத்தில் இருந்து பொய்யிலிருந்து இந்த உலகை மீட்டெடுப்பது தான் கல்வி. அந்தக் கல்வி அச்சமின்றி இருக்க வேண்டும், அச்சத்தை கலைவதாக இருக்க வேண்டும் என்று இந்தப் பாடல் கூறுகிறது. மாணவர்கள் நம்பிக்கையோடு வளர்ந்து உலகத்தை எதிர்கொள்ள வேண்டும், அதையும் இந்தப் பாடல் எடுத்துரைக்கிறது.

குயின் மீரா பள்ளி பற்றி எனக்கு தெரியும். அதன் கட்டுமானம், கற்பிக்கும் விதம் என அனைத்துமே மாணவர்களின் நலனை முன்னிறுத்தியே உள்ளன. அவர்களது எண்ணம் பொருள் ஈட்டுவது அல்ல, அறிவு ஈட்டுவது அறம் ஈட்டுவதே ஆகும்.

ஒரு பள்ளியின் மூல மந்திரம் அறம், அறிவு, அச்சமின்மையாக இருந்தால் இந்தியா உலகத்தின் வல்லரசாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. பொருளாதாரம், விஞ்ஞானம், ராணுவம் உள்ளிட்டவற்றில் வல்லரசாக இருப்பது நீண்ட நாட்களுக்கு நிலைக்காது. அறிவு, அன்பு மற்றும் அச்சமின்மை ஆகியவற்றை மூலதனமாகக் கொண்ட நல்லரசு தான் வல்லரசு ஆகும்.

இன்றைக்கு இந்த பாடல் தமிழ் உலக அரங்கில் வெல்லலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. இதற்கு பாடுபட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தக் குழுவினர் உலகப் பெருமையை தமிழுக்கு ஈட்டித் தந்திருக்கிறார்கள். வாழ்க கல்வி, வெல்க தமிழ்.

ஆர் அரவிந்தராஜ் இயக்கத்தில் ஆயிஷா நடிக்கும் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’

ஏ ஆர் ரஹ்மான் இசையில் டிரண்ட்ஸ் சினிமாஸ் ஜெ எம் பஷீர் தயாரிப்பில் ஆர் அரவிந்தராஜ் இயக்கத்தில் ஆயிஷா நடிக்கும் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’

இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையான வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ எனும் தலைப்பில் திரைப்படம் ஒன்று உருவாகிறது.

டிரண்ட்ஸ் சினிமாஸ் பேனரில் ஜெ எம் பஷீர் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ஆர் அரவிந்தராஜ் இயக்க, வேலுநாச்சியாராக முதன்மை வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகம் ஆகிறார் ஆயிஷா.

‘வீரமங்கை வேலுநாச்சியார்’ திரைப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். முக்கிய பாத்திரமான பெரிய மருதாக இப்படத்தின் தயாரிப்பாளரும், ‘தேசிய தலைவர்’ திரைப்படத்தில் பகம்பொன் முத்துராமலிங்க தேவராக நடித்திருப்பவருமான ஜெ எம் பஷீர் நடிக்கிறார். இவரது மகள் தான் ஆயிஷா என்பது குறிப்பிடத்தக்கது.

‘வீரமங்கை வேலுநாச்சியார்’ திரைப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள தேவர் மஹாலில் ஜனவரி 3 புதன்கிழமை அன்று நடைபெற்றது. திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான ஜெ எம் பஷீர், “வேலு நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரையில் கொண்டு வருவதில் மிகவும் பெருமை அடைகிறோம். இதில் முதன்மை வேடத்தில் எனது மகள் ஆயிஷா நடிப்பது பெரும் மகிழ்ச்சி,” என்றார்.

நமது நாட்டுக்காகவும், தேச விடுதலைக்காகவும் தன்னலம் இன்றி போராடிய மாபெரும் ஆளுமைகள் குறித்து இன்றைய இளைய சமுதாயம் அறிவது அவசியம் என்றும் இதன் காரணமாகவே ‘தேசிய தலைவர்’ மற்றும் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ உள்ளிட்ட திரைப்படங்களை தான் தயாரித்து வருவதாகவும் பஷீர் மேலும் தெரிவித்தார்.

‘தேசிய தலைவர்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ள நிலையில் அதை தொடர்ந்து ‘வீர மங்கை வேலு நாச்சியார்’ படப்பிடிப்பு தொடங்கும் என்று பஷீர் கூறினார். வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்து இப்படத்தின் ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

‘வீர மங்கை வேலு நாச்சியார்’ திரைப்படத்திற்கு ஜெ ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, சண்டைக் காட்சிகளை மிராக்கிள் மைக்கேல் வடிவமைக்கிறார். பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைய உள்ளனர். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் ஜெ எம் பஷீர் கூறினார்.

பிரசாந்த் வர்மாவின் ‘ஹனு- மான்’ படத்தில் இடம்பெற்ற ‘ஸ்ரீ ராமதூத ஸ்தோத்திரம்’ எனும் நான்காவது பாடல் வெளியீடு

இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஹனு-மான்’ படத்தினை விளம்பரப்படுத்துவதிலும், இப்படம் குறித்து ரசிகர்களிடத்தில் உற்சாகத்தை அதிகரிப்பதிலும் படக்குழுவினர் தொடர்ந்து அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். அண்மையில் இப்படத்திற்கான திரையரங்க முன்னோட்டம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘ஹனு-மான்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. தயாரிப்பாளர்கள் இப்படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்களை இதுவரை வெளியிட்டுள்ளனர். அவை அனைத்தும் சார்ட் பஸ்டர்களாக மாறியுள்ளன. ஒவ்வொரு பாடலும் வித்தியாசமான வகையில் உருவாகி.. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது ‘ஸ்ரீ ராமதூத ஸ்தோத்திரம்..’ எனும் நான்காவது பாடலை வெளியிட்டுள்ளனர்.

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்தோத்திரத்தின் பாடல் -இசையமைப்பாளர் கௌரஹரியின் இசை கோர்வையில் உருவாகி இருக்கிறது. இந்தப் பாடலை சாய் சரண் பாஸ்கருணி, லோகேஷ்வர் இடாரா மற்றும் ஹர்ஷவர்தன் சாவேலி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.‌ இப்பாடலுடன் வெளியிடப்பட்டிருக்கும் 3D தொழில்நுட்பத்திலான விளக்கக் காட்சி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதனை நாம் திரையில் காட்சிகளுடன் காணும் போது வியப்பில் ஆழ்த்துவது உறுதி. முதல் மூன்று பாடல்களைப் போலவே ‘ஸ்ரீ ராமதூத ஸ்தோத்திரம்..’ எனும் இந்தப் பாடலும் இசை ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களின் மனதையும் கவரும்.

ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி இப்படத்தை பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். ஸ்ரீமதி சைதன்யா இத்திரைப்படத்தை வழங்குகிறார். குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும், அஸ்ரின் ரெட்டி மற்றும் வெங்கட் குமார் ஜெட்டி ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பணியாற்றியிருக்கிறார்கள்.

தேஜா சஜ்ஜா, அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கலை இயக்க பொறுப்பை ஸ்ரீ நாகேந்திர தாங்கலா ஏற்றுக் கொண்டிருக்கிறார்.‌

இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்சின் முதல் திரைப்படம் ‘ஹனு-மான்’. இத்திரைப்படம் ‘அஞ்சனாத்ரி’ எனும் கற்பனையான உலகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கான்செப்ட் உலகளாவியதாக இருப்பதால் இது உலகம் முழுவதும் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் சிறப்பான வரவேற்பை பெறுவதற்கான சாத்திய கூறு உள்ளது.

பிரசாந்த் வர்மாவின் ‘ஹனு-மான்’ திரைப்படம் ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானிஸ் உள்ளிட்ட உலக மொழிகளிலும், பான்- வேர்ல்ட் திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாகிறது.

உலகளவில் 400 கோடி கிளப்பில் நுழைந்த டங்கி!

இந்தியாவில் 200 கோடி மற்றும் உலகளவில் 400 கோடி கிளப்பில் நுழைந்த டங்கி! இந்த மைல்கற்களை கடக்கும் ஷாருக்கின் இந்த வருடத்தின் 3வது படம் இது இதயம் வருடும் கதை, ரசிகர்களின் அன்பில் உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்று வருகிறது டங்கி !!

ராஜ்குமார் ஹிரானியின் டங்கி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தொடர்ந்து ஆதிக்கம் செய்து வருகிறது! இந்தியாவில் 203.08 கோடி மற்றும் உலகளவில் 409.89 கோடியை குவித்துள்ளது.!

ராஜ்குமார் ஹிரானியின் அன்பை பொழியும் அற்புதமான படைப்பான டங்கி ரசிகர்களின் இதயங்களை மட்டுமல்ல பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற இப்படம் வெளிநாட்டில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பொருத்தமான, நெருக்கமான படைப்பாக அமைந்துள்ளது.

பார்வையாளர்களிடமிருந்து வரும் பாசிட்டிவ் வார்த்தைகளுடன் டங்கி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. நகைச்சுவை மற்றும் அழுத்தமான கதை, பார்வையாளர்களின் இதயங்களைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ள டங்கி, குடும்பங்களை கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு அழைத்து வருகிறது. இந்த குடும்ப பொழுதுபோக்கு படம் வசூலில் இந்தியாவில் மட்டும் 200 கோடியைத் தாண்டியுள்ளது. மேலும் உலகம் முழுவதுமாக 400 கோடியைத் தாண்டியுள்ளது. தற்போது அனைவரும் விரும்பும் ஆக்‌ஷன் இல்லாத படமாக இருந்தாலும், காதல், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளால் நிரம்பிய ராஜ்குமார் ஹிரானியின் சினிமாவுக்கு சான்றாக அமைந்துள்ள இப்படம், வசூலிலும் அதிரடியாக வெற்றிபெற்றுள்ளது.

இப்படத்தில் ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு ‘டங்கி’ திரைப்படத்தில் நடித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ABNORMAL INCREASE IN REGISTERATION COST FOR HOME BUYERS IN TAMIL NADU

We, the members of all the Associations from across the State of Tamil Nadu, are writing to
express our deep concern and disagreement with the recently announced single agreement
system with composite valuation methodology for apartments, both High Rise Building (HRB)
and Non-High-Rise Building (NHRB), as announced by the Tamil Nadu government and
implemented from December 1, 2023, vide G.O. No. 131. We believe that this system will have
a detrimental impact on both homebuyers and the real estate industry as a whole.
It’s noteworthy that the Single Document System has faced legal scrutiny, with the Honourable
Supreme Court striking down its validity in the case of Park View Enterprises vs. State
Govt of Tamil Nadu.
Our primary concerns with the current system are as follows:

  1. Issues in the process of bringing Composite (Land + Building) Single document
    immediately:
    The composite values published by the government appear arbitrary and lack a clear
    scientific basis.
    The implementation of the Single Document System, effective December 1, 2023, lacks
    the essential groundwork required for its seamless execution.
    The system, designed to be based on a composite value comprising both land and
    building assessments, demands a meticulous fixation process.
    This elaborate procedure necessitates the expertise of a Central Valuation Committee,
    adhering to due protocol. As per Sec 47AA of the Indian Stamp Act, the valuation sub-
    committee shall on receipt of the instructions publish the intention of such estimation or
    revision, as the case may be, in the local newspapers and also on the notice board of
    important offices. A period of 15 days may be allowed for receipt of objections and
    suggestions from the public and all such suggestions and objections so received shall be
    considered by the concerned District Registrars and placed before the valuation sub-
    committee for discussion.
    None of the work of the central valuation committee that should have been done has
    been duly followed before the changes were made.
    Even the registrars, responsible for handling document registrations, find themselves
    without clear guidelines on how to process documents related to apartments as this has
    been introduced on such short notice without any application of mind.
  2. Unrealistic Composite (Land + Building) Valuation Rates:
    The composite rates set by the government, apparently as per the G.O. 131 aligned with
    the Karnataka rule are also false.
    Karnataka has a uniform 6.5% rate.
    While Tamil Nadu employs a tiered structure:
     6% for properties below Rs 50 lakhs.

 7% for those between Rs 50 lakhs and Rs 3 crores.
 9% for properties exceeding Rs 3 crores.
The argument of the Government of Tamil Nadu is that this has been done so that the
low-cost houses and their home buyers are burdened less by this tiered structure. While
the explanation looks very convincing on the overall outlook, in reality, the arithmetic is
not in favour of the home buyer. The consequence is that the Home Buyer ends up
paying more than what he was paying prior.
The resulting confusion has prompted questions in the Home Buyers’ minds about the
true intention of the Government of Tamil Nadu and the tangible outcome of benefits, if
any.
These unrealistic valuation rates set by the government pose a direct impact, as
homebuyers will hesitate in their purchasing decisions.

  1. Fixation and Categorization:
    While the Government is reversing the decision of these three categories of “Basic,”
    “Premium,” and “Ultra-Premium” based upon the interactions that they had with all
    Association office bearers on 14 Dec 2023, we still have concerns over the fixation
    values.
    We have clearly given our opinion in the meeting with the Honorable Minister, Secretary,
    and the IG registration of the Commercial Tax and Registration department that if at all
    we have to go with the composite model, then the developer doing the fixation with the
    local registration office for every site will be the best way to go about.
    The Government doing streetwise fixation will again bring in a lot of confusion. This was
    highlighted in the meeting with a simple example. The valuation from one end of the
    street to the other end may not be the same if there is a public toilet or a TASMAC shop
    so to say. Ideally, only the developer will understand the market realities to help arrive at
    a fixation value.
  2. The below Illustrative examples further underscore the financial burden on
    homebuyers:
    i. Before March 2023
    No increase in GLV
    9% Stamp Duty + 2% Reg. Charges (11% on UDS)
    1% Stamp Duty + 1% Reg. Charges (2% on Con. Agreement)
    ii. 1 April 2023 – 31 May 2023
    33% GLV Increased
    7% Stamp Duty + 2% Reg. Charges (9% on UDS)
    1% Stamp Duty + 1% Reg. Charges (2% on Con. Agreement)

iii. Between 1 June 2023 – 30 Nov 2023
GLV Remains
7% Stamp Duty + 2% Reg. Charges (9% on UDS)

1% Stamp Duty + 3% Reg. Charges (4% on Con. Agreement)
iv. 1 Dec 2023 Onwards
Fixation
Composite Valuation
6%, 7% and 9%

These concrete examples vividly highlight the considerable spike in registration charges
under the new composite (Land + Building) valuation methodology coupled with fixation
and categorization, challenging the Government’s claim of reducing prices for
homebuyers.

  1. Executed Construction Agreements that have been registered Pre-December 2023
    and Sale Deed yet to be registered !
    The lack of clear directives from the government has placed all existing Construction
    agreement holders, representing a significant number of homebuyers, in a state of
    uncertainty and potential jeopardy.
    With a substantial number of existing Construction agreement holders affected, the
    ambiguity surrounding the revised property registration system raises concerns about the
    legal and financial implications for these Home Buyers.
  2. Lack of clarity on Sale Agreements Post-December 2023.

In a composite format (Land + Building) registration, the sale deed cannot be executed to
the Home Buyer before the completion of the building.
In Karnataka, there is a Rs 20,000/- flat fee as a registration charge for a sale agreement
when a Home Buyer purchases a home at the beginning of the project. The sale
agreement fee is set off when the final sale deed is executed in favour of the Home
Buyer.
In the new G.O. 131, there is no mention or clarity of sale agreements at all.
Any new sale of homes post-December 2023, now cannot be executed until the project is
completed and ready for handover. Under construction new homes cannot be purchased
and Home loans cannot be availed as per the new G.O. 131.

  1. Stakeholder Consultation:
    Contrary to recent statements from the Commercial Taxes and Registration Department
    regarding consultative meetings with builders’ associations, including CREDAI and
    Circular No. 45438/L1/2023 which mentions that on 27.07.2023, 07.09.2023, and
    12.09.2023 CREDAI was consulted, and a consensus arrived is completely false
    and untrue.
    We would like to clarify that the opinions and concerns raised by CREDAI Chennai were
    not at all considered and have been completely ignored in the decision-making process.
    While the meetings were convened to discuss the possibilities of implementing a new
    Property Registration system in Tamil Nadu, the Home Buyers’ interests have been
    completely overlooked.
    This lack of transparency from the Government side has resulted in a system that is not
    aligned with the realities of the market.
  2. Consequences for Homebuyers:
    The implementation of this system will have a severe negative impact on homebuyers,
    particularly middle-class and first-time buyers, who will now be priced out of the market.
    This will lead to a decline in housing affordability and a decrease in the overall demand
    for homes.
    It is evident that, in its eagerness to enhance revenue, the Registration Department is
    expediting significant changes without fully contemplating their implications. This rush with one
    week’s notice has raised uncertainty and challenges for both the department and the public
    alike.
    We strongly urge the government of Tamil Nadu to reconsider the current composite valuation
    methodology, address the concerns outlined in this representation, and work collaboratively with
    stakeholders to develop a more efficient and equitable system.

‘விதுரன் பார்வை’

அனைவருக்கும் அன்பு வணக்கம்,

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். கடந்த 27 வருடங்களாக தொடர்ந்து எனக்கு தங்களது அன்பையும் ஆதரவையும் அளித்து வருவதற்காக மனமார்ந்த நன்றி.

சினிமா செய்திகளையும் விமர்சனங்களையும் தர வேண்டும் என்று என்னுடைய நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் வலியுறுத்தி வந்த நிலையில், ‘விதுரன் பார்வை’ என்ற செய்தி நிறுவனத்துடன் இதற்காக கைகோர்த்துள்ளேன்.

இதன் வாயிலாக நான் பணியாற்றும் திரைப்படங்கள் மட்டுமில்லாது அனைத்து படங்கள் தொடர்பான செய்திகளும் விமர்சனங்களும் வெளியிடப்படும். செய்திகளில் உண்மை, புதுமை மற்றும் சுவாரசியமும், விமர்சனங்களில் நேர்மை, நடுநிலை மற்றும் தெளிவும் இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன். நவீன தொழில்நுட்பமும், தொழில் தெரிந்த குழுவினரும் இந்த பயணத்தில் என்னுடன் இணைந்து இருப்பது மிக்க மகிழ்ச்சி.

எனது பணி மற்றும் எல்லா முயற்சிகளிலும் உங்கள் ஊக்கத்திற்கும் உற்சாகத்துக்கும் பெரும் பங்குண்டு. இந்த புதிய முன்னெடுப்புக்கும் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். உங்களுக்காக நான், உங்களால் நான். 2024 மிகச் சிறப்பான ஆண்டாக நம் அனைவருக்கும் அமையும் என்று உறுதியாக நம்புகிறேன். மிக்க நன்றி.

அன்புடன்,
நிகில் முருகன்,
நிகில் கம்யூனிகேஷன்ஸ்