Cinema

‘மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு ஊடகங்களும் நல்ல படைப்பு என்ற விமர்சனத்தை வழங்கி வருகிறது. இதனால் இந்த திரைப்படம் மிகப் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த தருணத்தில் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும் , ரசிகர்களுக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நடிகர் ‘லொள்ளு சபா’ சாமிநாதன் பேசுகையில், ” புதிய கலைஞர்களின் முயற்சியை ஊடகங்கள் பாராட்டின. இதனால் இந்த படத்திற்கு வெற்றி கிடைத்தது.

இந்தப் படத்தில் என்னுடைய வழக்கமான பாணியில் நடிக்காமல் இயக்குநர் சொன்னதை கேட்டு நடித்தேன். படப்பிடிப்பு தளத்திற்கு மதியம் ஒரு மணிக்கு சென்றேன். இரண்டு மணிக்கு காட்சிகளை படமாக்க தொடங்கினர். நான்கு மணிக்கு என்னுடைய பங்களிப்பு நிறைவு என்று சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு படத்திற்கு பின்னணி பேசுவதற்காக சென்றேன். அங்கும் எனக்கு வித்தியாசமான அனுபவம் தான் கிடைத்தது. இப்படத்தின் இயக்குநரை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் ரசனையுடன் சொல்லிக் கொடுத்தார்.

படத்தில் நடித்த அனைத்து நடிகர் , நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி. ” என்றார்.

இசையமைப்பாளர் கே. சி. பால சாரங்கன் பேசுகையில், ” அனைவருக்கும் நன்றி. இப்படம் தொடர்பாக இணையத்தில் வெளியான அனைத்து விமர்சனங்களையும் நான் கவனித்து வாசித்திருக்கிறேன். அனைவரும் தங்களின் மேலான ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். படத்தை தங்களுடைய படமாக நினைத்து அனைவரிடமும் பகிர்ந்து கொண்ட ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. இந்த படத்திற்கு சிறப்பான திரையரங்க அனுபவத்தை ஒலி மூலம் வழங்கிய தொழில்நுட்பக் கலைஞர் ரூபனுக்கும் நன்றி. என்றார்.

நடிகர் விஷ்வா பேசுகையில், ” இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றி. வெளியான நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் வித்தியாசமான அனுபவங்களை சந்திக்கிறேன். எனக்கு இந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.

படத்தில் நடிப்பதற்கு ஒவ்வொரு கலைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கிய இயக்குநருக்கு நன்றி. குறிப்பாக என் மீது நம்பிக்கை வைத்து தினேஷ் கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார் .

நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் பேசுகையில், ” சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் எங்களின் கனவு பெரிதாக இருந்தது. கனவும் , ஆசையையும் வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தொடங்கும்போது பேப்பரில் இருந்த இந்த கதையை திரைக்கு கொண்டு வந்து, அந்த உணர்வை அனைவரும் உணர்ந்து ரசித்து பாராட்டும் போது அதை சொல்வதற்கு வார்த்தை இல்லை. நாங்கள் அனைவரும் இணைந்து நடித்த ஒரு படத்திற்கு அனைவரும் தங்களின் இதய பூர்வமான ஆதரவை தெரிவித்ததை நேரில் பார்க்கும் போது உற்சாகமாக இருந்தது. ரசிகர்கள், ரசிகைகள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது. ” என்றார்.

இந்தப் படத்தை வெளியிட்ட ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும், இந்த படத்தை பார்த்து பாராட்டிய திரையுலக பிரபலங்களுக்கும் நன்றி” என்றார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விநியோகிஸ்தர் குகன் பேசுகையில்… இப்படத்திற்கு ஊடகங்களும் , ரசிகர்களும் கொடுத்த ஆதரவும் , வரவேற்பும் மிக அதிகம். இதற்கு எங்கள் நிறுவனத்தின் சார்பில் கோடான கோடி நன்றிகள். இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டிய திரையுலக பிரபலங்களுக்கு நன்றி.

‘மெட்ராஸ் மேட்னி’ நடுத்தர குடும்பத்து மக்களின் கதை. இதில் என்ன கதையை இவர்கள் சொல்ல வருகிறார்கள்..? இது ஒரு சாதாரண கதை. ஆனால் இதை ஒரு திரைப்படமாக உருவாக்குவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். மேலும் இந்த கதை மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்.

சாதாரண கதையை அசாதாரணமான திரைக்கதை மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருந்தார். அதனால் தான் இந்தப் படத்தை பார்த்த மக்கள் அனைவரும் பாராட்டினார்கள். படத்துடன் உணர்வுபூர்வமாக தொடர்பு கொண்டார்கள். படம் வெளியான பிறகு படத்தைப் பார்த்த ரசிகர்களிடத்தில் அதன் தாக்கம் அதிகம் இருந்தது.

படத்தின் கதையை கேட்டு நடித்த நடிகர்கள் அனைவரும் இதனை எப்படி புரிந்து கொண்டிருப்பார்கள். அதை திரையில் வழங்கிய விதம் இன்னும் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.

இயக்குநர் – இசையமைப்பாளர் – ஒளிப்பதிவாளர் – படத்தொகுப்பாளர் – என அனைவரும் புதுமுக கலைஞர்கள். சினிமா மீது அர்ப்பணிப்புடன் கூடிய ஆர்வத்துடன் இருப்பவர்கள். இதன் காரணமாகத்தான் இவர்களால் இப்படி ஒரு படைப்பை உருவாக்க முடிந்தது என நான் நினைக்கிறேன்.

இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனத்துடன் இணைந்து பயணித்த திரையரங்கு உரிமையாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் நிறுவனம் கலந்து கொள்ளும் மூன்றாவது நன்றி அறிவிப்பு விழா இது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் மூன்று படங்களில் பணியாற்றியவர்கள் அனைவரும் புதுமுக படைப்பாளிகள் என்பது தான். ” என்றார்.

இயக்குநர் கார்த்திகேயன் மணி பேசுகையில், ” மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படத்தை ஏன் முதலில் இயக்கினேன் என்றால்.. இது வரை சொல்லப்படாத ஒரு கதை. உண்மையான ஹீரோ யார் என்பதை சொல்லும் கதை இது.

தான் முன்னேற வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும் ஓயாமல் ஓடும் நம்முடைய அப்பா அம்மாக்கள் தான் என்னைப் பொறுத்தவரை ரியல் ஹீரோ.

அவர்களுடைய கதையை ஒரு திரையரங்க அனுபவத்துடன் கூடிய கதையாக சொல்ல வேண்டும் என நினைத்தேன். இந்த நோக்கத்தில் உருவானது தான் இந்த திரைப்படம்.

புது தயாரிப்பு நிறுவனம் – புது இயக்குநர் – புது தொழில்நுட்பக் கலைஞர்கள் – சின்ன பட்ஜெட் படம் – நாங்கள் எளிதாக காணாமல் போயிருக்கலாம். அதற்கான வாய்ப்பும் அதிகம் இருந்தது. ஆனால் இந்த கதை ஒரு அர்த்தமுள்ள கதையாக இருந்ததால்.. ஊடகங்கள் இந்த படத்தை வெகுவாக ஆதரித்தன.‌ இதுதான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எனும் பிரபலமான நிறுவனம் எங்களுடன் இணைந்ததால் இந்த வெற்றி சாத்தியமானது. இதற்காக அந்த நிறுவனத்திற்கும் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு மற்றும் குகனுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதைத்தொடர்ந்து இந்த படத்திற்கு நடிகர்கள் தங்களின் அர்ப்பணிப்புள்ள உழைப்பை வழங்கி கதாபாத்திரத்திற்கு உயிர்ப்பூட்டியதால் இந்த வெற்றி கிடைத்தது. இதற்காக இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் , நடிகைகளுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.

இந்தப் படத்திற்கு ரசிகர்களின் எதிர்வினையை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். படம் வெளியான இரண்டாவது நாள் பல்லாவரத்தில் இரவு காட்சியை பார்த்துவிட்டு திரும்பும் ஒரு பெண் தன் கண்ணீரை அடக்கிக் கொண்டு’ நான் ஒரு டாக்டர் என் அப்பா ஒரு ஆட்டோ டிரைவர் ‘என்று என்னிடம் சொன்னபோது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது.

தமிழ் ரசிகர்கள் உணர்வுபூர்வமானவர்கள் மட்டுமல்ல. அறிவு பூர்வமானவர்களும் கூட. இந்த இரண்டும் இணைந்து கொடுத்தால் அவர்கள் கொண்டாடத் தவறுவதில்லை. மெட்ராஸ் மேட்னி அதற்கு ஒரு சிறந்த உதாரணம். படத்தை திரையரங்கிற்கு சென்று பார்க்கும் ரசிகர்களுக்கு நன்றி.

இந்தப் படம் வெளியான பிறகு, ‘காளி வெங்கட் கொண்டாடப்பட வேண்டியவர்’ என்பதை உணர்ந்தேன். அவர் ஒரு லாபத்தை வழங்கும் நட்சத்திர நடிகர் என்பதையும் ஒரு தயாரிப்பாளராக இங்கு கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன்” என்றார்.

நடிகர் காளி வெங்கட் பேசுகையில், ” இந்தப் படத்திற்கு இதுவரை வழங்கிய ஆதரவிற்கும், இதற்கும் மேலும் தொடர்ந்து வழங்கப் போகும் ஆதரவிற்கும் நன்றி.

இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசரான அபிஷேக் ராஜா மூலம் இயக்குநர் அறிமுகமாகி கதையை சொன்னார். அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தை சொன்னார். அது என்னுடைய தந்தையை நினைவு படுத்தியது. அவருக்கு சமர்ப்பிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்று இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இந்தப் படம் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பை தெரிந்து கொள்வதற்காக திரையரங்கத்திற்கு சென்ற போது, சிலர் என்னை கட்டிப்பிடித்து அழுதனர். என் சட்டை ரசிகர்களின் கண்ணீரால் நனைந்தது. இந்த அனுபவம் புதிதாக இருந்தது மறக்க முடியாததாகவும் ஆகிவிட்டது.

நடிக்கும்போது அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை.

கலையில் மட்டும் தான் அழுவதை கூட ரசிக்க முடியும். இது சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்.

நான் இதற்கு முன்பு அதிகமாக பார்த்த படம் கார்கி. தற்போது அதைவிட அதிகமாக பார்த்த படம் மெட்ராஸ் மேட்னி. ஏனெனில் இந்தப் படத்தின் ஒலி அமைப்பு மிகச் சிறப்பாக இருந்தது.

இந்தப் படத்தில் ஒரு பாடலை பாடிய வடிவேலுக்கு நன்றி. மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை படமாக்குவதில் என்ன இருக்கிறது? என்ற கேள்விக்கு இயக்குநர் இந்த படத்தை பதிலாக அளித்திருக்கிறார். இதனால் நான் இயக்குநரை மனதார பாராட்டுகிறேன். மேலும் இந்தக் கதையை.. அவர் சொன்ன விதத்தை நான் முக்கியமானதாக பார்க்கிறேன்.

ஒரு கவிதையை மொழிபெயர்த்து அதனை திரைப்படமாக உருவாக்குவது போல் இருந்தது. இயக்குநர் கார்த்திகேயன் மணி தொடர்ந்து இது போன்ற படங்களையும் இயக்க வேண்டும். மேலும் இந்தப் படம் ஏராளமானவர்களுக்கு புது நம்பிக்கையை அளித்திருக்கிறது. இதற்காகவும் இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

‘DNA’ படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் S. அம்பேத்குமார் வழங்க, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி – நிமிஷா சஜயன் முன்னணி வேடத்தில் நடித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ஊடாக கடந்த இருபதாம் தேதியன்று வெளியான ‘DNA’ திரைப்படம் – விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி பயணிக்கிறது.

இதை தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் நன்றி அறிவிப்பு விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பட தொகுப்பாளர் சபு ஜோசப் பேசுகையில், ” இந்த ஒரு தருணத்திற்காக நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கஷ்டப்பட்டு உழைத்தோம். இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான நான்கு படங்களுக்கும் நான் தான் படத் தொகுப்பாளராக பணியாற்றினேன். இதற்கு முன்னரான படங்களில் பணியாற்றும்போது வணிகரீதியான வெற்றியை பெறும் படைப்பை வழங்க வேண்டும் என இயக்குநர் என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடைய கனவு இந்த டி என் ஏ படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

ஒளிப்பதிவாளர் பார்த்திபன் பேசுகையில், ” இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஒரு நாள் கூத்து’ படத்திலிருந்து அவரை பின் தொடர்கிறேன் அவர் இயக்கத்தில் வெளியான ‘ஃபர்கானா ‘படத்தின் படப்பிடிப்பின் போது இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எங்கள் இருவருக்கும் இடையே நல்லதொரு புரிதலும், நட்பும் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து’ டிஎன்ஏ ‘ படத்திற்கான வாய்ப்பை வழங்கினார் அவர் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கின்றேன் என நினைக்கிறேன்.

இந்தப் படத்தில் பணியாற்றியதற்காக அனைவரும் பாராட்டுகிறார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் பணியாற்றிய ‘பேச்சி’ எனும் முதல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்தப் படத்தின் உணர்வை சிதைக்காமல் ஒளிப்பதிவு செய்திருப்பதாக நம்புகிறேன். இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. ” என்றார்.

இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா பேசுகையில், ” இது என்னுடைய இருபது ஆண்டுகால கனவு பயணம். இந்த தருணத்திற்காக மகிழ்ச்சியுடன் காத்திருந்தேன்.‌ இதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த கதையில் இடம்பெறும் விசயங்கள் அனைத்தும் உண்மையானவை தான். கடந்த பதினைந்து ஆண்டு கால இதழியல் துறையில் பணியாற்றிய அனுபவம் தான் இந்த கதையை எழுதுவதற்கு உதவியாக இருந்தது. ‘ புனைவுகளில் உண்மைத் தன்மை அதிகம் இருந்தால்.. அந்த புனைவு வெற்றி பெறும்’ என என்னுடைய குரு சொல்லி இருக்கிறார். அந்த வகையில் இந்த கதையில் 90 சதவீதம் உண்மைத் தன்மை இருக்கிறது. பத்து சதவீதம் தான் கற்பனை கலந்திருக்கிறது.

இந்தப் படத்தில் இடம்பெறும் பாட்டி கதாபாத்திரத்தில் சாத்தூர் ஜெயலட்சுமி என்பவர் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரமும் என்னுடைய வாழ்வில் சந்தித்த பெண்மணியை முன்னுதாரணமாக கொண்டு எழுதினேன். எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை – கோஷா ஆஸ்பத்திரி – ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் – என உண்மை சம்பவங்களை தழுவித்தான் இப்படத்தின் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு அமைந்திருக்கும். இப்படத்தின் வெற்றிக்கு இத்தகைய உண்மைக்கு நெருக்கமான விசயங்களும் காரணம் என கருதுகிறேன். இதனால் எழுத்தாளர்களையும், அனுபவம் மிக்க பத்திரிக்கையாளர்களையும் இயக்குநர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

இயக்குநர் நெல்சன் தான் என்னை தேடி கண்டுபிடித்து எழுத அழைப்பு விடுத்தார்.

நான் மனதிற்கு நெருக்கமாக உணர்ந்து எழுதிய பல காட்சிகளை திரையில் அற்புதமான நடிப்பால் அதர்வாவும் , நிமிஷாவும் வெளிப்படுத்தி இருந்தார்கள். இதற்காக அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை ஏதேனும் ஒரு கதாபாத்திரம் ..மற்றொரு கதாபாத்திரத்திற்கு உதவும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருப்போம். இந்த உதவி செய்யும் மனப்பான்மை எப்போது வணிகத்தனம் மிக்கதாக மாறுகிறதோ..! அங்கு குற்ற சம்பவம் நிகழ்கிறது.

இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது. கடந்த தசாப்தங்களில் வாகனத்தில் பயணிக்கும் போது ‘லிஃப்ட் ‘ கேட்பார்கள். இன்று ‘லிஃப்ட்’ என்பது ‘பைக் டாக்சி’யாக மாறிவிட்டது.

உதவி என்பது ஆத்மார்த்தமாகவும் , நேர்மையாகவும் இருக்க வேண்டும்.‌ இந்த மனிதநேயத்தை முன்னிறுத்திய இந்த திரைப்படம் ரசிகர்களிடம் சரியான முறையில் சென்றடைந்திருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு துணையாக நின்ற ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

நடிகர் போஸ் வெங்கட் பேசுகையில், ” கேரளாவில் ஒரு படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றால்.. அங்கு ஐந்து கேரவன் இருந்தால், அதில் ஒரு கேரவன் ரைட்டர்ஸ் -காக இருக்கும். அந்த அளவில் கதாசிரியர்களுக்கு அங்கு மதிப்பு இருக்கிறது. அந்த வகையில் இந்தப் படத்தில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றிய அதிஷாவை மேடையேற்றி, பாராட்டு தெரிவித்ததற்காக இயக்குநர் நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.‌ இது ஆரோக்கியமான பயணம். என்னை பொறுத்தவரை கதாசிரியர் – வசனகர்த்தா என்பது தனி பிரிவு. அந்த பிரிவு வலிமையாக இருந்தால் ..எந்த படமும் தோற்காது. இது என்னுடைய கருத்து.

இந்தப் படத்தில் நடித்த வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் , உடன் பணியாற்றிய அனைத்து நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசுகையில், ” தமிழ் சினிமாவின் தற்போதைய சூழலில் ஒரு படத்தின் வெற்றி என்பது ஒரு இயக்குநர் நல்ல படத்தை இயக்குவதில் மட்டுமில்லை. அந்தத் திரைப்படம் சரியான தேதியில் வெளியாக வேண்டும். இது இயக்குநர்களின் கைகளில் கிடையாது. அந்தத் திரைப்படத்திற்கு சரியான விளம்பரம் கிடைக்கப் பெற வேண்டும். அதுவும் இயக்குநர்களின் கைகளில் கிடையாது. அந்தத் திரைப்படம் விநியோகஸ்தர்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் . அதுவும் அந்த இயக்குநரின் கைகளில் கிடையாது. அதனைத் தொடர்ந்து அந்தப் படத்திற்காக போஸ்டர் ஒட்டுவது முதல் விளம்பரப்படுத்துவது வரை உழைப்புதான் வெற்றியை தீர்மானிக்கிறது. அந்த வகையில் ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் பலர் ஒன்று கூட வேண்டியதிருக்கிறது. பலரின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்க வேண்டும். அந்த வகையில் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு பின்னணியில் உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படம் உருவாகுவதற்கு காரணமாக இருந்த இரண்டு, மூன்று இதயங்களுக்கு இந்த தருணத்தில் என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனந்துக்கும், திவ்யாவுக்கும் இடையேயான கதை 2009 ஆம் ஆண்டிலிருந்து என்னிடம் இருக்கிறது. ஆனந்தும், திவ்யாவும் பெயர்தான் வேறு வேறு. ஆனால் இந்த கதாபாத்திரங்களை நான் என்னுடைய வாழ்வில் சந்தித்திருக்கிறேன். அவர்களின் வலியை இதில் பதிவு செய்திருக்கிறேன். இவர்களின் வாழ்வில் திருமணம் என்பது நடைபெறுமா? என என்னுடைய மனதில் எழுந்த கேள்விதான் இந்தப் படத்தின் கதையை எழுத தூண்டியது. இதன் மூலம் ஒரு வலிமையான கதை… ஒரு வலிமையான உணர்வுடன் இணைந்து சொல்லும்போது அதற்கு வெற்றி கிடைக்கிறது. இதனை இன்னும் நான் பத்து ஆண்டுகள் கழித்த பின்னர் சொன்னாலும் வெற்றியைப் பெறும். அதற்கான வரவேற்பும் , அன்பும் மக்கள் அளிப்பார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.

அந்த உண்மையான ஆனந்திற்கும், அந்த உண்மையான திவ்யாவிற்கும் இந்த திரைப்படத்தின் வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.

இந்த படத்தில் தான் முதன்முதலாக என்னுடைய கதையை தயாரிப்பாளர் அம்பேத்குமார் ..என் முன்னிலையில் மற்றவரிடம் நான் எப்படி சொன்னேனோ…எப்படி சொல்வேனோ.. அதேபோல் சொன்னார். அவருடைய கதை சொல்லும் திறமையை கண்டு வியந்தேன். அப்போது என் கதை பிடித்திருக்கிறது. புரிந்திருக்கிறது.. என்ற சந்தோஷமும் மனதில் எழுந்தது. அந்தத் தருணம் என்னால் மறக்க இயலாது.

இந்தப் படம் உருவானதற்கு காரணமாக இருந்த சுரேஷ் சந்திரா, சந்தோஷ், ஒளிப்பதிவாளர் பார்த்திபன், படத் தொகுப்பாளர் சபு ஜோசப், எழுத்தாளர் அதிஷா, இசையமைப்பாளர்கள், பின்னணி இசையமைத்த ஜிப்ரான், ஒலி கலவை பொறியாளர் தபஸ் நாயக், இணை இயக்குநர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், விஜி சந்திரசேகர், போஸ் வெங்கட், இயக்குநர் சுப்பிரமணிய சிவா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், அதர்வா முரளி, நிமிஷா சஜயன் என நடிகர் , நடிகைகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய சூழலில் ஒரு திரைப்படத்தை காண மக்களையும், ரசிகர்களையும் திரையரங்கத்திற்கு வரவழைக்க வேண்டும் என்றால்.. பல தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கிறது. இதன் மூலம் நிறைய நல்ல சினிமாக்கள் வரவேண்டும் . ஆரோக்கியமான சினிமா சூழல் உருவாக வேண்டும் என்ற இலக்குடன் தான் பயணிக்கிறோம்.

சினிமா மூலம் மக்களும் பயனடைய வேண்டும். அதில் பணியாற்றிய கலைஞர்களும் பயனடைய வேண்டும். அந்த வகையில் ஒரு திரைப்படத்தின் விமர்சனமும் , பார்வையும் அமைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் படைப்பாளிகளும் , விமர்சகர்களும் கைக்குலுக்கி , ஆரோக்கியமான சினிமா சூழலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்பது குறித்து மனம் திறந்து விவாதிக்க விரும்புகிறேன். என்னுடைய திரை பயணத்தில் தொடர்ந்து ஆதரித்து வரும் ஊடகத்தினருக்கும் , ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகை நிமிஷா சஜயன் பேசுகையில், ” பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகும் போது இந்த படம் ஹிட் ஆகுமா? ஹிட்டாகாதா? என்ற பதட்டம் இருந்து கொண்டிருக்கும். ஆனால் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி திரையிட்ட பிறகு கிடைத்த விமர்சனத்தால் படம் வெளியான தருணத்தில் நான் எந்த வித பதட்டமும் இல்லாமல் நிம்மதியாக உறங்கினேன்.
இருந்தாலும் இரண்டு மணி அளவில் இயக்குநர் நெல்சன் போன் செய்து படம் வெற்றி என சொன்ன போது மகிழ்ச்சி அடைந்தேன். இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் என்னுடைய நடிப்பு சிறந்ததாக இருக்கிறது என்று பாராட்டினால்.. அது இயக்குநரைத் தான் சாரும். அவர் சொல்லிக் கொடுத்ததை தான் நான் செய்திருக்கிறேன்.‌ நான் எப்போதும் போல் இயக்குநரின் கலைஞராகத்தான் இருக்க விரும்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து திவ்யா கதாபாத்திரத்தை அளித்ததற்காக நன்றி.

ஒவ்வொரு படத்தில் இருந்தும் ஏதேனும் ஒரு விசயத்தை கற்றுக் கொள்கிறேன். இந்த படத்தில் நான் இரண்டு விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். ஒன்று இயக்குநர். மற்றொன்று அதர்வா.

படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய போது மனதிற்கு நெருக்கமாக இருந்த படங்களில் இதுவும் ஒன்று.‌ சக நடிகரான அதர்வா மிகுந்த திறமைசாலி. அர்ப்பணிப்பு உள்ளவர். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் சொன்னதை கச்சிதமாக செய்தார். அவருடைய ஒத்துழைப்பு மறக்க முடியாது. அவரின் ஆதரவு இல்லை என்றால் திவ்யா இல்லை.

இந்தப் படத்தில் பிறந்து நாற்பது நாட்களான குழந்தையை நடிப்பதற்காக மனமுவந்து வழங்கிய அந்தக் குழந்தையின் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும் , ஊடகத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகர் அதர்வா முரளி பேசுகையில், ” ‌ டி என் ஏ படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு விழாவில் கலந்து கொண்ட உணர்வே மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தப் படத்திற்காக உழைத்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் இந்த ஒரு தருணத்திற்காக தான்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல படத்தில் நடிக்கிறோம் என்ற உணர்வுடன் தான் கலந்து கொண்டேன். இந்தப் படம் எந்த அளவிற்கு வெற்றி பெறும்… எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் … யாருக்கு பிடிக்கும்… என்றெல்லாம் யோசிக்கவில்லை.

படப்பிடிப்பு நிறைவடையும்போது நல்ல படத்தில் நடித்து விட்டோம் என்ற உணர்வு தான் ஏற்பட்டது. இந்த படத்திற்கான பத்திரிக்கையாளர்கள் காட்சி திரையிட்ட போது..‌ படம் நிறைவடைந்த பிறகு சில நிமிடங்கள் கழித்து அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்பை தெரிவித்த போது.. உண்மையில் நெகிழ்ச்சி அடைந்தேன். ஊடகத்தினர் அனைவரும் ஊக்கமளிக்கும் வகையில் பாராட்டு தெரிவித்தனர். அது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது. ‘வேர்ட் ஆஃப் மவுத்’ என்று சொல்வதை இந்தப் படத்தின் வெற்றி மூலம் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.

படம் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பை நேரில் காண்பதற்காக திரையரங்கத்திற்கு சென்றோம். அப்போது வயதான பெண்மணி ஒருவர் என்னை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு படத்தை பாராட்டினார். இந்த படத்தின் வெற்றி எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது எனச் சொன்னார். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தின் வெற்றியை அவர்கள் தங்களின் வெற்றியாக கொண்டாடினார்கள். இதை காணும் போது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது.

இந்தத் தருணத்தில் உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக என்னை நான் உணர்கிறேன்.

இயக்குநர் நெல்சன் என்னை சந்தித்து இப்படத்தை பற்றி சொன்னபோது, ‘உங்களுடைய திரையுலக பயணத்தில் நல்லதொரு திரைப்படத்தை அளிப்பேன்’ என நம்பிக்கையுடன் சொன்னார். அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றி இருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர்- ஒளிப்பதிவாளர் -இசையமைப்பாளர்கள் – பின்னணி இசையமைப்பாளர் – என தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

“குட் டே” பட இசை வெளியீடு !!

New Monk Pictures சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில், ஓர் இரவில் நடக்கும் காமெடி, கலந்த உணர்வுப்பூர்வமான, சமூக படைப்பாக உருவாகியுள்ள படம் “குட் டே”. ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்….

நடிகர் கலை இயக்குநர் விஜய் முருகன் பேசியதாவது…
இந்தப்படம் மிகச் சுவாரஸ்யமான படம், மிக நல்ல கதை. படம் பார்த்து விட்டேன் பிரித்திவி மிக அழகாகச் செய்துள்ளார். ஒரு இரவில் நடக்கும் கதை.உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.

ஜீவா சுப்பிரமணியம் பேசியதாவது…
இந்தப்படத்தில் எனக்கு வித்தியாசமான கதாப்பாத்திரம். இதுவரைக்கும் சேலை கட்டிக்கொண்டு நடித்திருக்கிறேன், ஆனால் இதில் எனக்கு வித்தியாசமாக போலீஸ் உடை தந்தார்கள். ஆடிசனில் எனக்கு போலீஸ் டிரெஸ் தந்தார்கள், எங்கே என்னை தேர்ந்தெடுக்க மாட்டார்களோ என நினைத்தேன், என் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. படப்பிடிப்பில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். எனக்கு வித்தியாசமான கதாப்பாத்திரம் தந்த இந்த “குட் டே” படக்குழுவிற்கு நன்றி. சிவகார்த்திகேயன் அண்ணா சூப்பர்ஸ்டார் எல்லாம் இப்போது வரும் படங்களுக்கு ஆதரவு தருகிறீர்கள், அதுபோல எங்கள் படத்தையும் பார்த்து ஆதரவு தாருங்கள். நீங்கள் தரும் ஆதரவு மிகப்பெரிது. அனைவருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் எடிட்டர் மதன் குணாதேவ் பேசியதாவது…
எல்லாருக்கும் வணக்கம். குட் டே. இந்தப்படம் , ஒரு ஒரு இரவில் நடக்கும் கதை. அதனால் முழுக்க இரவில் தான் ஷூட் செய்தோம். இந்த டீமில் அனைவருமே நண்பர்கள் தான். எல்லோரும் எங்களால் முடிந்த அளவு சிறப்பாகச் செய்துள்ளோம். வரும் 27 ஆம் தேதி படம் வெளியாகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள்.

திரைக்கதை எழுத்தாளர் பூர்ணா ஜே.எஸ். மைக்கேல் பேசியதாவது…
இது மூன்று வருடம் கஷ்டபட்டு செய்த படம், அனைவரும் நண்பர்கள், எல்லோரும் சிறப்பாக உழைத்துள்ளோம். ரொம்ப பெரிய படம் இல்லை. ரொம்ப சின்ன படம். ஆனால் ரொம்ப அழகான படம். பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா அவரோட கதையை ஒரு முறை சொன்னார். அதிலிருந்து உருவானது தான் இந்த ஒன்லைன். இந்தப்படம் என்டர்டைனும் பண்ணும். உங்களை எங்கேஜும் பண்ணும். இந்தப்படத்தில் புதிதாக ஒன்றை முயற்சி செய்துள்ளோம். இன்டர் கட் இல்லாமல் முழுப்படத்தை சொல்ல முயற்சி செய்துள்ளோம். முதல் ஒரு ரெண்டு நிமிஷம் மட்டும்தான் இன்டர் கட் இருக்கும். அதன் பிறகு முழுக்க கட் ஆகாது. கேமரா ஒரு கேரக்டரை ஃபாலோ செய்யும். இது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். இந்தக்கதை குடி மட்டும் கிடையாது. அந்த குடியால பல மனநிலைகள் பல வாரியா பல அடுக்குகளா மாறும். அந்த மாதிரியான ஒரு பல அடுக்குகள் கொண்ட ஒரு கதாபாத்திரம்தான் இந்த கதையில் இருக்கிற சாந்தகுமார். எழுத்துக்கு வாய்ப்பளித்த என்னுடைய ப்ரொடியூசர் என்னோட டைரக்டர் இருவருக்கும் நன்றி. படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது…
இது என்னுடைய வாழ்வில் நடந்த, கடந்த கால கதை, அன்பால் என்னை இதிலிருந்து மீட்டு கொண்டு வந்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி. அண்ணன் பாலாஜி தரணிதரன் மற்றும் ராஜுமுருகன் ஆகியோர் என் வாழ்வில் முக்கியமானவர்கள். இருவருக்கும் நன்றி. கோவிந்த் வசந்தா இப்படத்தில் அற்புதமான பாடல்கள் தந்துள்ளார். இந்த திரைப்படம் வெறும் குடியை மட்டும் பேசுவதில்லை, குடி ஒரு பக்கம் குற்ற உணர்வையும், இன்னொரு பக்கம் அச்சத்தையும் தரும். இது இரண்டும் பின்னிப் பிணைந்த நம்ம சமூகமே, கில்ட் மேனியக் சொசைட்டி தான். இந்த சமூகத்தில் ஒருவன் எப்படி குடிகாரனா மாறுகிறான் என்பதற்கு, நிறைய நிறையக் காரணங்கள் உண்டு. அப்படி ஒரு காரணத்தில் போய் வீழ்ந்தவன்தான் நானும். ஒரு 20 வருடம் போதைக்குள்ளேயே உழன்று மயக்கத்தில் எல்லாத்தையும் செய்து, அப்படியே இருந்தவன்தான். ஒருவன் குடிகாரனா மாற சமூக கட்டமைப்பு ஒரு காரணமா இருக்கிறது. கடுமையான பொருளாதார ஏற்ற தாழ்வுகள், ஒரு பக்கம், பணம் போய்க்கொண்டே இருக்கிறது, ஒரு பக்கம் பணம் இல்லை. ஆனால் அதே உழைப்புதான் எல்லோராலும் போடப்படுகிறது. ஆனால் பணம் வரலை எனும் போது, கிடைக்கக்கூடிய அந்த ஏமாற்றம் மனிதனை போதைக்குள் தள்ளுகிறது. அந்த விரக்தியை வெளிப்படுத்த முடியாமல், அப்படி வீழ்த்தப்பட்டவர்களில் நானும் ஒருத்தன். சலிப்புணர்வு மற்றொரு முக்கிய காரணம் இன்று எல்லாருமே போதை நோக்கி ஓடிட்டு இருக்கிறோம். இந்த சலிப்புணர்வை எதிர்கொள்ள முடியாமல் இருக்கிறதுதான் காரணம். அப்படி ஒரு குடிகாரனின் வாழ்க்கையை நெருங்கி பேசுகிறது இந்தப்படம். அதிலும் இந்த திரைக்கதை பின்னப்பட்ட விதம் ஆச்சரியம் தருகிறது. இயக்குநர் அரவிந்த் அவர்களுக்கும் கதாசிரியர் மைக்கேலுக்கும் என்னுடைய மிகப்பெரிய நன்றி. வெறுமனே ஒரு கொண்டாட்டமான ஒரு படமா இல்லாமல், குடியை நியாயப்படுத்தவும் செய்யாமல், இது தப்பு அப்படிங்கிறதை ரொம்ப ஆணித்தரமாக சொல்லி, ஆனால் அவன் குடிக்கப் போனதுக்கான காரணம் அவன் மட்டும் கிடையாது, பல பேர் இருக்கிறார்கள் அப்படிங்கறதையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறார்கள். இந்த படம் பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கிறது. இந்த மாதிரியான நிறையப் படங்கள் வரவேண்டும். பெரிய கதை இது ஒரு நாள் இரவு நடக்கறதுனால அந்த இரவுக்குள்ள என்னென்ன சொல்ல முடியுமோ அதைச் சொல்லியுள்ளார்கள். இந்த படம் வெற்றி அடைந்து பொருளாதார ரீதியாகத் தயாரிப்பாளர் நல்ல லாபம் அடைய வேண்டும். இந்தப்படம் எல்லோருக்கும் வெற்றியைத் தரட்டும். அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் அரவிந்தன் பேசியதாவது…
இந்த படத்தில் வேலை செய்த அனைத்து கலைஞர்களுக்கு என் நன்றி. அவர்களால் தான் இந்தப்படம் சாத்தியமானது. பிரித்விராஜ், கார்த்தி அண்ணா, மதன் குணதேவ அண்ணா, பூர்ணா, முக்கியமா எங்கள் கோவிந்த் வசந்தா ஆகியோருக்கு என் நன்றிகள். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசியதாவது…
எல்லாருக்கும் வணக்கம். குட் டே டீம்‌க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் படம் பார்த்து விட்டேன். மிக அருமையான படம். கார்த்திக் நேதா அண்ணா என்ன சொன்னாரோ அதையே தான் நானும் உணர்ந்தேன். இந்த படம் போதையைப் போற்றி பேசுவதில்லை. போதையிலிருக்கும் ஒருவரின் வலியும், அவரைச் சுற்றியவர்களின் துயரங்களும் பற்றியது. படம் பார்த்ததும், எனக்கு “It’s a Wonderful Life” னு ஒரு பழைய ஆங்கில படம் நினைவுக்கு வந்தது. ஒரே நாளில் நடக்கிற கதையாக இருந்தாலும், அதுக்குள்ள அந்த உணர்வின் ஆழம் இருந்தது. படத்தின் இயக்கம், திரைக்கதை, இசை எல்லாமே அருமை. “மின்மினிய ராசாத்தி” பாடல் உண்மையிலேயே நெகிழ வைத்தது. நல்ல படங்கள் ஓடும் – இந்த படமும் நிச்சயமாக ஓடும். நன்றி.

கலை இயக்குநர் சங்கர் பேசியதாவது…
அனைவருக்கும் வணக்கம். “குட் டே” என்னுடைய இரண்டாவது படம். இப்படத்திற்கு உரிய கதைக்களம் உருவாக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்பது மிகுந்த மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர் பிரித்திவி அண்ணா, மற்றும் இயக்குநர் அரவிந்தன் பிரதர், இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. படத்தில் வேலை செய்த அனைத்து குழுவினருக்கும் நன்றிகள்.

இயக்குநர் ராஜுமுருகன் பேசியதாவது…
“இந்த படம், ஒரு குடிகாரனின் வாழ்க்கையை ‘glorify’ செய்வதற்கல்ல. குடிக்குப் பின்னால் இருக்கும் சமூக, உளவியல், பொருளாதார வேர்கள் என்னவென்று கேட்கும் படம். எனக்கும் அந்த அனுபவம் இருந்ததால்தான் இதன் அழுத்தம் புரிகிறது. நாகராஜனுடைய ஒரு சிறுகதையை படித்த மாதிரி, வைக்கம் பஷீருடைய அந்த உலகத்துக்குள்ள போய்விட்டு வந்த மாதிரி ஒரு உணர்வை இந்த படம் கொடுத்தது. விஜய் மல்லையாவின் ஒரு வீடியோவைப் பார்த்து குடியை விட்டுள்ளேன் நான். இது போன்ற படங்கள் தான் அந்த அனுபவங்களை மீண்டும் நினைவூட்டுகின்றன. “போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் – அது தவிர்க்க முடியாத சமூக அழுத்தங்களால் உருவாகிறது. இந்த படம் அந்த உண்மையை மிக அழகாகச் சொல்கிறது,” படம் பார்ப்பவர்களில் ஒரே ஒரு இதயத்தையாவது மாற்றக்கூடிய படம்தான் பெரிய படம். இந்த படமும் அந்த வகையிலான படம் தான் .” கார்த்திக் நேதா ஒரு அழகான கவிஞர். கோவிந்த வசந்தா இசை – படம் முழுக்க ஆன்மாவாக இயங்குகிறது. இந்த படத்தில் பணியாற்றிய எல்லோரும் மிகச் சிறந்த பணியைச் செய்திருக்கிறார்கள்,” அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

ட்ரீம் வாரியர்ஸ் குகன் பேசியதாவது…
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் புதிய திரைப்படமான “குட் டே”, தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான பரிமாணத்தை உருவாக்க இருக்கிறது. புதிய இளைஞர்களின் கூட்டு முயற்சியாக உருவாகியுள்ள இப்படம், மனிதர்களின் மன அழுத்தம், குடிப்பழக்கத்தின் சமூகப் பின்னணி, மற்றும் வாழ்க்கையின் அர்த்தம் என மிக ஆழமான கருத்துகளுடன் நகர்கிறது. “இந்தப் படம் புதுமையை, இன்ஸ்டிங்க்ட்டை, உணர்வை, சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடித்துள்ள பிரித்விராஜ், தனது கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். இவருடைய நடிப்பைத் தமிழ் சினிமா கண்டிப்பாக அங்கீகரிக்கும்.” “திருப்பூர் – வேலைவாய்ப்புக்காகப் பலரும் நகரும் நகரம். அந்த நகரம் எவ்வாறு ஒரு சாதாரண மனிதனை மன அழுத்தத்திற்குள்ளாகி, அவனை புதிய வழி தேட வைக்கிறது என்பதே இந்த படத்தின் கதை. இது, ஒரு மனிதனின் ஆதங்கம் மற்றும் தேடலைச் சொல்லும் அழகான திரைப்படம்.” “தற்கொலை எண்ணங்களைத் தூண்டும் சமூக அழுத்தங்களை இந்த படம் நுணுக்கமாகப் பேசுகிறது. மனநல மருத்துவர்களும் சொல்லும் மூன்று முக்கிய காரணங்களை இந்தக் கதையில் காணலாம்.”கோவிந்த வசந்தா மற்றும் கார்த்திக் நேதா படத்திற்கு மிக அருமையான இசை மற்றும் வரிகள் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுடைய பங்களிப்பு இத்திரைப்படத்தின் ஆன்மாவாக உள்ளது. இந்த திரைப்படம், உங்கள் அனைவரது நண்பர்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கக்கூடியது. இளைய தலைமுறை மட்டுமல்லாது, எல்லா தரப்பினருக்கும் ரிலேட்டாகக்கூடிய படம். ஜூன் 27ஆம் தேதி திரைக்கு வரவுள்ள ‘குட் டே’ படத்திற்கு உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டுகிறோம் நன்றி.

தயாரிப்பாளர்,நடிகர் பிரித்விராஜ் ராமலிங்கம் பேசியதாவது..,
ஒரு படம் செய்வதாக இருந்து திடீரென அது ரத்து ஆனபோது, கையில ₹1000 தான் இருந்தது. அந்த நேரத்தில் நண்பர் அரவிந்த் ‘படம் பண்ணலாமா?’ என்றார். அப்படியே அந்த நம்பிக்கையில் ஆரம்பமானது ‘குட் டே’. அன்று நாங்கள் பேசிய ஒரு உரையாடல் தான் இந்த படத்துக்கு விதையாக அமைந்தது. பணம் இல்லாமல், நண்பர்களின் நம்பிக்கையால், உருவானது தான் இந்தப்படம். உருவாக்கப்பட்டது. சிலர் நம்பிக்கையோடு பணம் கொடுத்தார்கள், சிலர் சம்பளம் வேண்டாமென நடித்தார்கள். எல்லோருக்கும் என் நன்றிகள். என் நண்பர் கவிஞர் கார்த்திக் நேதாவின் வாழ்க்கை, அவர் சொன்ன குடிப்பழக்கம், மனநிலை பற்றிய உண்மையிலிருந்துதான் இந்தக் கதைக்கரு பிறந்தது. 40–50 மணி நேரம் அவருடன் பேசியதிலிருந்து இப்படம் உருவானது. நான் சினிமாவுக்கு நடிகனாகவே வந்தேன். ஆனால் இந்தப் படம் என் முதல் ஹீரோ வாய்ப்பு. அந்த நம்பிக்கையை எனக்குக் கொடுத்தது என் டைரக்டர் அரவிந்த். அவர்தான் என்னை நடிகனாகவே உருவாக்கினார். அவருக்கு என் நன்றி. ரவி சார், தீபக் ராஜு, லைட்மேன் மயில் அண்ணன், யூனியன் நண்பர்கள், பாண்டிச்சேரி ஷூட்டிங் குழு, கோவிந்த வசந்தா, மதன் , டைரக்ஷன் டீம்… எல்லோருக்கும் என் உயிர் நன்றிகள். இவர்களுடைய உழைப்பும் நம்பிக்கையும் இல்லாமல் இந்தப்படம் சாத்தியமில்லை. எஸ்ஆர் பிரபு சார் படம் பார்த்து நிம்மதியா தூங்குங்கன்னு சொன்னார். குகன் சார், ராஜமுருகன், பாலாஜி அண்ணன், ஜிதேஷ் (Trend Music) – எல்லோரும் இந்த படத்தைத் திரைக்குக் கொண்டு வர துணைநின்றார்கள். ஜூன் 27, ‘குட் டே’ திரையரங்கில் வெளியாகிறது. இது நம்ம எல்லாருடைய பயணமும், கனவுகளும் இணைந்த ஒரு உண்மையான கலைச்சோதனை. உங்கள் ஆதரவும், அன்பும் இந்தப் படத்திற்குத் தேவை. அனைவருக்கும் நன்றி.

திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வரும் எளிய ஊழியன், இக்கட்டான நிலையில், தன் மேனேஜர் வீடு தேடிப் போகும் ஒரு இரவில், சந்திக்கும் மனிதர்களும், சம்பவங்களும் தான் இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் முழுக்க காமெடி கலந்து, உணர்வுப்பூர்வமான, சமூக அக்கறை மிக்க படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

பிரித்திவிராஜ் ராமலிங்கம் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், காளிவெங்கட், மைனா நந்தினி, பக்ஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் முருகதாஸ், போஸ் வெங்கட் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு பூர்ணா JS மைக்கேல் திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பணிகளை மதன்குணதேவ் செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, பாடல்கள் மற்றும் கூடுதல் வசனத்தைப் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார்.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில், பிரபல தயாரிப்பாளர் S.R பிரபு இப்படத்தை வெளியிடுகிறார். வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

குபேரா திரைவிமர்சனம்

மும்பையில் கடலில் கச்சா எண்ணெய் இருப்பதை கண்டுபிடிக்கும் இந்திய நிறுவனத்தை சேர்ந்த ஒரு விஞ்ஞானி அதை ஒரு தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ரகசியமாக அந்த தகவலை விற்க, அதை கையகப்படுத்த அந்த கார்ப்பரேட் கம்பெனி அந்த எண்ணெய் ஆராய்ச்சி கம்பெனியில் போலியான ஒரு வெடி விபத்தை ஏற்படுத்தி அதில் பலரைக் கொன்று அதை கையகப்படுத்த நினைக்கிறது. அவ்வாறு நினைக்க அதற்கு தேவையான பணத்தை இந்திய அரசியல்வாதிகளுக்கு லஞ்சமாக கொடுக்க சுமார் ஒரு லட்சம் கோடியை கைமாற்ற ஒரு நபரை தேடுகிறது .அதற்கு நேர்மையான சிபிஐ அதிகாரியாக இருந்து போலி வழக்கில் சிக்கி சிறையில் ஏழு ஆண்டு தண்டனை இருக்கும் நாகார்ஜுனாவை கொண்டு வருகிறார்கள். நாகார்ஜுனா அந்த பணத்தை அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பட்டுவாடா படுத்த அவர் தேர்ந்தெடுக்கும் வழி ஐந்து பிச்சைக்காரர்களை கொண்டு ஒரு போலியான மல்டி நேஷனல் கம்பெனி ஒன்றை ஆரம்பித்து அதன் மூலமாக பல அரசியல்வாதிகளுக்கு பணப்பரிமாவர்த்தனை செய்ய நினைக்கிறார் .அவ்வாறு அவர் தேர்ந்தெடுக்கும் ஐந்து பிச்சைக்காரர்களுல் தனுஷ் ஒருவர் தனுஷ். திருப்பதி பகுதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் அவரும் மற்ற நான்கு நால்வரையும் கூட்டிக்கொண்டு வந்து பணம் பரிவர்த்தனை செய்ய நினைக்கும் பொழுது அந்த கார்ப்பரேட் கம்பெனி முதலாளியோ பண பரிவர்த்தனை செய்து அந்த விஷயம் வெளியே வரக்கூடாது என்று நினைத்து அந்த பிச்சைக்காரர்களை கொன்றுவிட நினைக்கிறார். அதில் ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதை அறிந்து நாகார்ஜுனா அவர்களை காப்பாற்ற நினைக்கிறார்.

இவ்வாறான சமயத்தில் தனுஷ் அவர்களிடமிருந்து தப்பித்து ஓட தனுஷின் பெயரிலிருக்கும் பத்தாயிரம் கொடியை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று அந்த கார்ப்பரேட் கம்பெனியும் ,ஒரு பக்கம் நாகார்ஜுனாகவும் தேட ஆரம்பிக்கிறார்கள் அப்படி தேடும்பொழுது அந்த பணத்தை அவர்கள் எடுத்தார்களா? இல்லை தனுசு அந்த பணத்தை எடுத்துக் கொண்டாரா ?நாகார்ஜுனா திரும்பி மீண்டும் நேர்மையான சிபிஐ அதிகாரியாக மாறினாரா? என்பதே படத்தின் கதை.

பிச்சைக்காரன் வேடத்தில் நடித்திருக்கும் தனுஷ் தாடியுடன் கிழிந்த சட்டையுடன் பிச்சைக்காரன் ஆகவே வாழ்கிறார் அதற்கான உடல் மொழியும் அவருக்கு அருமையாக ஒத்துழைக்கிறது தனக்கு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தன் நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
நாகார்ஜுனா பணம் பட்டுவாடா படுத்த சூழ்நிலையை கைதியாக தன்னை எப்படியாவது ஜெயில் இருந்து காப்பாற்றிக் கொள்ள கார்ப்பரேட் கம்பெனியிடம் அடிமையாக செல்லும் கதாபாத்திரம் ஆனாலும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்க முயற்சித்து இருக்கிறார் நாகார்ஜுனா அவரது கதாபாத்திரத்தை இன்னும் அழுத்தமாக செய்திருக்கலாம்.
ராஷ்மிகா மந்தனா ஓடும் ரயிலில் தானாக வந்து ஏறும் கேரக்டர் போல தானாக வந்து தானாக செல்கிறது .இந்த படத்திற்கு ராஸ்மிகாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எதற்காக அந்த கேரக்டர் ? அவரது நடிப்பு சற்றே எரிச்சல் ஊட்டும் விதமாகத்தான் உள்ளது ஒரு பொம்மை போல தான் வந்து போகிறார் அவருக்கு என்று தனியாக எதுவும் இல்லை சொல்லுகின்ற மாதிரி.
மேலும் பல கேரக்டர்கள் வந்து போகிறது நாசர் ,பாக்யராஜ் இப்படி பலரை சொல்லலாம்.


இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் வில்லன் வில்லனாக நடித்தவர் மிகவும் அருமையான நடிப்பாக ஒரு கார்ப்பரேட் முதலாளி எப்படி இருக்க வேண்டும் ஒரு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் முதலாளியாக மிகவும் அருமையாக நடித்து இருக்கிறார் அவரது நடிப்பிற்கு படத்திற்கு பலமாக இருக்கிறது


இந்த படத்துக்கு கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் சேகர் கம்முலேலி இவரது பலமே இந்த படத்தின் கதையை ஆரம்பித்த பத்து நிமிடத்தில் கூறிவிடுகிறார் ஆனால் அவ்வாறு கூறப்பட்ட கதை மேற்கொண்டு நகராமல் நாகார்ஜுனா வந்த பிறகாவது கொஞ்சம் வேகம் பிடிக்கும் என்றாலும் சற்றே தொய்வடைந்து இருக்கிறது தனுஷ் வந்த பிறகும் அவ்வாறே நகர்கிறது இந்த படத்தின் நீளத்தை குறைத்து இன்னும் விறுவிறுப்பாக திரைகதை அமைத்திருந்தால் குபேரா நிச்சயம் விறுவிறுப்பான கதையாக அமைந்திருக்கும்.

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு – சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘லவ் மேரேஜ்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த விழாவில் நடிகர் – இயக்குநர் முருகானந்தம் பேசுகையில், ” இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஜூனியர்கள் சீனியர்களை இயக்குவது போல் இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் கலைஞர்களை அவர்கள் கையாண்ட விதம் நன்றாக இருந்தது. ஒரு குடும்பம் போல் படப்பிடிப்பு தளம் கலகலப்பாக இருந்தது. ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் ஒவ்வொரு விதமான அனுபவம் கிடைக்கும். இந்தப் படத்தில் நடிக்க தொடங்கி நிறைவை எட்டிய போது, ஆஹா! படத்தின் படப்பிடிப்பு இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே? என்ற ஏக்கத்தை உண்டாக்கியது. இதுதான் இயக்குநர் சண்முக பிரியனுக்கு கிடைத்த முதல் வெற்றி. அந்த அளவிற்கு ஒட்டுமொத்த படக் குழுவையும் அவர் நேர்த்தியாக அரவணைத்தார்.

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விக்ரம் பிரபு சக கலைஞர்கள் மீது அதிக அக்கறையும் அன்பும் காட்டினார். இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் சுஷ்மிதா படத்தில் மட்டுமல்ல படப்பிடிப்பு தளத்திலும் எதார்த்தமான ஹீரோயினாகவே இருந்தார். அவருக்கும் வாழ்த்துக்கள்.

படத்தில் பணியாற்றத் தொடங்கும் போது இயக்குநர் யார் ? என்று தெரியாது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் எனக்கு தலை வலிக்கிறது உடல் வலிக்கிறது என ஏதாவது காரணத்தை சொன்னால் உடனே ஒரு பெயரை சொல்லி அந்த மாத்திரையை வாங்கி சாப்பிட சொல்வார். அதன் பிறகு தான் அவர் மருத்துவர் என தெரியவந்தது. எந்த வேலை பார்த்தாலும் இயக்குநராக வரலாம். ஆனால் ஒரு மருத்துவராக இருந்து இயக்குநராகி இருக்கிறார் என்றால்.. முதலில் அவருடைய பெற்றோர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

லவ் மேரேஜ் திரைப்படத்திற்கு அரேஞ்ச் மேரேஜ்க்கு வரும் கூட்டம் போல் அனைவரும் வருகை தந்து வெற்றி பெற செய்ய வேண்டும் ” என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ பேசுகையில், ” எல்லோருக்கும் அவர்களுடைய முதல் குழந்தை ஸ்பெஷலானது. அது கடவுளின் ஆசி என்று சொல்வார்கள் அந்த வகையில் எங்களின் அஸ்யூர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் படம் லவ் மேரேஜ். நான் வணங்கும் பெருமாளின் அருளுடன் ஜூன் 27ஆம் தேதியன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடும் நடிகர் தனுசுக்கு நன்றி.

இப்படத்தின் கதையை இயக்குநர் சண்முக பிரியன் முதன் முறையாக சொல்லும் போதே எனக்கு பிடித்திருந்தது. இதுதான் எங்களின் முதல் படமாக இருக்க வேண்டும் என தீர்மானித்தோம். இந்த கதையை மிகவும் திறமையாகவும் இயக்கியிருக்கிறார். ரசிகர்கள் அனைவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கும் வகையில் படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது. அந்த மண்ணின் மணம் மாறாமல் அழகியலுடன் படம் உருவாகி இருக்கிறது. படத்தில் நடித்த நடிகர்களின் பாசிட்டிவிட்டி படத்திலும் இடம் பிடித்திருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்த விக்ரம் பிரபு , சத்யராஜ், சுஷ்மிதா பட், அருள்தாஸ், ரமேஷ் திலக் ஆகிய அனைத்து நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் இந்தப் படத்திற்காக எங்களுடன் இணைந்து பணியாற்றிய ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகருக்கும், இந்த படத்தின் இசையை வெளியிட்ட சோனி மியூசிக் நிறுவனத்திற்கும், படத்தை தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலனுக்கும், தயாரிப்பில் எங்களுடன் தொடக்கத்திலிருந்து முழு ஒத்துழைப்பு வழங்கிய தயாரிப்பாளர் யுவராஜ் கணேசனுக்கும், சிறப்பு விருந்தினராக வருகை தந்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

‘லவ் மேரேஜ்’ ஜாலியான படம். ஜூன் 27ஆம் தேதியன்று அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து கொண்டாடி ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகை சுஷ்மிதா பட் பேசுகையில், ” இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆண்டவனின் ஆசியாகவே பார்க்கிறேன். இதற்குக் காரணமாக இருந்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழில் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறேன்.

இந்தப் படத்தில் அனுபவம் மிக்க இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறேன். இப்போது அவர்கள் அனைவரும் என்னுடைய குடும்பமாக ஆகிவிட்டனர். விக்ரம் பிரபு சாரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் திறமையானவர். நட்பாக பழகக் கூடியவர்.

இந்தப் படத்தில் அனைவரும் தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். இதற்காக அனைவருக்கும் வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசுகையில், ” லவ் மேரேஜ் படத்தின் ட்ரெய்லரை.. 90ஸ் கிட்ஸ்களின் எதிரொலியாகத்தான் பார்க்கிறேன். இந்த படத்தின் முன்னோட்டத்துடன் என்னால் எளிதாக தொடர்பு கொள்ள முடிந்தது. இப்படத்தில் மிஷ்கின் பாடிய பாடலை கேட்டவுடன் இந்தப் பாட்டு ஹிட் ஆகும் என சொன்னேன்.
ஒரு படத்திற்கு பாசிட்டிவிட்டியை முதன்முதலாக பரப்புவது அப்படத்தின் டைட்டிலிருந்து தொடங்கும் என்பதை நம்புபவன். அந்த வகையில் லவ் மேரேஜ் என்பது எல்லா தரப்பினரும் இயல்பாக கேட்டிருக்கும் பார்த்திருக்கும் வார்த்தை.

நம்முடைய நண்பர்கள், உறவினர்கள் யாராவது காதலித்திருப்பார்கள் அல்லது காதலித்துக் கொண்டிருப்பார்கள். காதல் என்பது திருமணம் வரை செல்லக்கூடியது தான். இதனால் இந்தப் படத்திற்கு டைட்டிலே மிகப்பெரிய வெற்றியைத் தரும். இதற்காக இயக்குநருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் ரசிகன் நான். அவரை நீண்ட காலமாக பின் தொடர்கிறேன். அவருடைய இசையில் ஒலிகள் வித்தியாசமாக ரசிக்கக் கூடிய வகையில் இருக்கும். அந்த ஓசை இளைய தலைமுறையினர் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

விக்ரம் பிரபு கடினமாக உழைக்கக்கூடிய நடிகர். பக்கத்து வீட்டு பையனாக இந்த படத்தில் அவர் நடித்திருக்கிறார் . இதற்காகவே இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும். அவர் வில்லனாகவும் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பரிசோதனை முயற்சியாக நிறைய படங்களில் நடித்து வருகிறார். அவர் இயல்பாக நடித்திருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் ” என்றார்.

பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், ” தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தான் இந்த படக்குழுவினரை அறிமுகப்படுத்தினார்.‌ இயக்குநர் சண்முக பிரியன் இசையமைப்பாளர் ஷான் ரோல்டனை சந்திக்கும் போதெல்லாம் ஷான் ரோல்டன் உற்சாகமாகி விடுவார். அந்த அளவிற்கு இயக்குநரை நேசிப்பார். இயக்குநர் போனில் ‘அண்ணா’ என அழைக்கும் போதெல்லாம் அந்த சொல்லிற்கான உணர்வை நான் உணர்ந்திருக்கிறேன்.

இந்தப் படத்தில் மிஷ்கின் பாடிய பாடலை தான் நாங்கள் முதல் முதலில் உருவாக்கினோம். மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் அந்தப் பாடல் உருவானது. அதாவது ஒரே நாளில் இந்த பாடலை நிறைவு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் அந்தப் பாடலை ஒரு மணி நேரத்தில் நிறைவு செய்தோம். இதற்காக மிஷ்கினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர்களின் திருமண கலாச்சாரத்தில் மாப்பிள்ளை அழைப்பிற்கான பாடல் மிக அரிதாகத்தான் இருக்கிறது. அந்தக் குறையை போக்குவதற்காக இந்த படத்தில் ஒரு மாப்பிள்ளை அழைப்பிற்கான பாடல் இருக்கிறது. பாடல் நிறைவு பெற்ற பின் இயக்குநர் சண்முகப்பிரியன் என்னை தொடர்பு கொண்டு இந்தப் பாடலில் எங்கேனும் சில வார்த்தைகள் திரும்பத் திரும்ப வர வேண்டும் என விரும்புகிறேன் என்றார். அதன் பிறகு புதிதாக நான்கு வரிகளை சேர்த்த பிறகு பாடலின் தரம் மிக உயர்ந்ததாக இருந்தது.

இந்தப் படத்தில் நான் மூன்று பாடல்களை எழுதி இருக்கிறேன். ஷான் ரோல்டனுடன் இணைந்து பணியாற்றிய பிறகுதான் எனக்கு சிறந்த பாடலாசிரியருக்கான ஆனந்த விகடன் விருது கிடைத்தது. இதற்காகவும் அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், ” இந்தப் படத்தில் நான் பணியாற்றியதற்கு மிக முக்கியமான காரணம் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தான்.‌ இதற்காக முதலில் அவருக்கு நன்றி.

இயக்குநர் என்னை சந்தித்து கதை சொன்ன பிறகு கதையைப் பற்றிய ஒரு விசுவல் பேலட்டை ( காட்சி மொழிக்குரிய சித்திரங்கள்) காண்பித்தார். அதைப் பார்த்தவுடன் இந்த படத்தில் பணியாற்ற வேண்டும் என தீர்மானித்தேன்.

நான் ஒரு 90ஸ் கிட்ஸ். அதனால் திரையரங்கத்திற்கு செல்லும் போது தமிழ் படம் பார்க்க வேண்டும் என்று தான் செல்வோம். தற்போது பான் இந்திய திரைப்படங்களை பார்க்கிறோம் தென்னிந்திய திரைப்படங்களை பார்க்கிறோம். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற தமிழ் படத்தை பார்த்த மன நிறைவை ஏனைய திரைப்படங்கள் ஏற்படுத்துமா? என்று கேட்டால் தெரியாது. வேற்று மொழி திரைப்படங்களும் இங்கு வெற்றி பெறுகிறது. ஆனால் தமிழர்களுக்கு என ஒரு அடையாளம் இருக்கிறது. அந்த அடையாளம் இந்த படத்தின் கதையைக் கேட்கும் போது இருந்தது. இயக்குநர் சண்முக பிரியன் இசைமீது பற்று கொண்டவர். இப்போது அவர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஆகிவிட்டார். அவருக்கு திரைத் துறையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் உண்டு.

புதிய தயாரிப்பாளர்களான டாக்டர் ஸ்வேதாவும் , டாக்டர் தீரஜும் சினிமா மீது உள்ள காதலால் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். அதை அவர்களை சந்தித்து பேசும்போது தெரிந்து கொண்டேன். ஆர்வம் மட்டும் இல்லாமல் சினிமா பற்றிய வர்த்தக அறிவும் அவர்களிடத்தில் இருக்கிறது.

விக்ரம் பிரபு சினிமாவில் நான் சந்தித்த நபர்களிலேயே நேர்மையானவர் . கண்ணியமானவர் . அவர் நடித்த படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். அவருடன் இணைந்தும் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இந்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது சிறந்த தொடக்கமாக இருக்கும் என கருதுகிறேன். அவருடைய படத்தில் சிறந்த பாடல்களை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. அது இந்த படத்தில் சாத்தியமாக இருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் ஆல்பமாக ஹிட் ஆகும்.

மிஷ்கின் ஒரு முழுமையான கலைஞன். அவர் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் நூல் தான். அந்த நூலில் கட்டப்பட்ட பூக்கள் தான் மோகன் ராஜாவின் பாடல் வரிகள். இதனால் பூமாலையில் அவர் பூவாக இருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்றுவது எப்படி இருக்கும் என்றால் நல்ல குளிரான சூழலில் கதகதப்பான நெருப்பிற்கு முன் உட்காருவது போல் சௌகரியமாக இருக்கும். அவர் தமிழ் சினிமாவில் பாடல்கள் மூலம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு பல தமிழ் வார்த்தைகளையும் ,தமிழ் தத்துவங்களையும் சாமர்த்தியமாக உள்ளே புகுத்தி வருகிறார். இந்தப் படத்தில் கூட காதலுக்கான அழகான வரிகளை எழுதி இருக்கிறார்.

இந்தப் படத்தை அனைவரும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு சென்று கண்டு ரசிக்கலாம். இந்தப் படம் சிறந்த படமாக இருக்கும். அனைவருக்கும் திருப்தியை அளிக்கும் படமாகவும் இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.

விநியோகஸ்தர் சக்தி வேலன் பேசுகையில், ” சில தினங்களுக்கு முன் கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து திரையரங்க அதிபர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு ‘லவ் மேரேஜ்’ படத்தின் பிரத்யேக காட்சி திரையிட்டால் உடனே தகவல் தெரிவிக்கவும் நான் என்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் அந்தப் படத்தை காண ஆவலாக இருக்கிறேன் என்றார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக திரைப்படங்களை முன்கூட்டியே திரையிட்டால் திரையரங்க தரப்பிலிருந்து அதனை காண்பதற்கு ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு வாரத்தில் நான்கு ஐந்து படங்கள் திரையிடுவதால் அதற்கான பணிச்சுமை இருக்கும்.‌

அவர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸின் நெருங்கிய நண்பரும் கூட. இவர்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்த பொழுது விரைவில் வெளியாகும் நல்ல படங்களை பற்றிய பேச்சு நடந்தபோது .. லவ் மேரேஜ் கண்டிப்பாக மிக நல்ல படமாக இருக்கும் என ஏ ஆர் முருகதாஸ் அவரிடம் தெரிவித்து இருந்தாராம்.

ஒரு படம் வெளியாவதற்கு முன் அங்கீகாரம் கிடைப்பது என்பது… அதிலும் அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்கிய படத்திற்கு இந்தியா முழுவதும் திறமையான இயக்குநர் என அறியப்பட்ட ஏ ஆர் முருகதாஸ் சிறந்த படம் என பாராட்டும் போது உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்.

எங்கள் அன்னை இல்லத்தில் வாரிசான விக்ரம் பிரபு இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிப்பை வழங்கி சிறப்பித்து இருக்கிறார்.‌ 90ஸ் கிட்ஸ் ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்துடன் தங்களை எளிதாக தொடர்பு படுத்திக் கொள்வார்கள்.

திருமணம் தொடர்பான விசயங்களை தமிழ் சினிமாவிற்கான பாரம்பரிய இலக்கணங்களுடன் உருவாகி இருக்கும் படம். அற்புதமான – அழகான பீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கிறது.

இந்த திரைப்படத்துடன் வணிக ரீதியாக தொடர்பே இல்லாத தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன், இப்படத்தின் வெற்றிக்காக தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகிறார். இது எனக்கு மிகப்பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது.
அந்த அளவிற்கு இயக்குநர் சண்முக பிரியன் திரையுலகில் வலிமையான நட்பு வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இதனை நான் அவரின் வெற்றியாகவே பார்க்கிறேன்.

மருத்துவராக இருந்தும் சினிமா மீதான ஆர்வம் காரணமாக இப்படத்தின் மூலம் அறிமுக தயாரிப்பாளராக களம் இறங்கி இருக்கும் தயாரிப்பாளர்கள் ஸ்வேதா ஸ்ரீ – தீரஜ் ஆகியோருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றால் இவர்களைப் போல் ஏராளமான புதுமுக தயாரிப்பாளர்கள் திரையுலகிற்கு வருகை தருவார்கள். ரசிகர்களுக்கும் நல்ல படைப்புகள் கிடைக்கும். ” என்றார்.

இயக்குநர் சண்முக பிரியன் பேசுகையில், ” சிறப்பு விருந்தினராக வருகை தந்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நன்றி. அவருடைய படங்களில் இருக்கும் எனர்ஜி எனக்கு மிகவும் பிடிக்கும்.‌ அவர் இயக்குவது போன்ற படங்களை இயக்க வேண்டும் என்றால் எனக்கு இன்னும் சில ஆண்டுகாலம் ஆகும் என நினைக்கிறேன்.

இந்தப் படத்தின் பணிகள் தொடங்குவதற்கு காரணமாக திகழ்ந்த என்னுடைய இயக்குநர் ரா. கார்த்திக்கு நன்றி. 2017 ஆம் ஆண்டின் சினிமாவில் உதவிய இயக்குநராக சேர்வதற்கு முயற்சி செய்தேன். அந்த தருணத்தில் நானும், தயாரிப்பாளர் யுவராஜும் இணைந்து குறும்படத்தினை உருவாக்கினோம். அன்றிலிருந்து இன்று வரை அவருடனான நட்பு தொடர்கிறது.‌ இயக்குநர்கள் ஆனந்த் சங்கர், ரா. கார்த்திக் ஆகியோருடன் பணியாற்றியிருக்கிறேன்.

படத்தின் தயாரிப்பாளரான ஸ்வேதா ஸ்ரீ என்னுடைய நண்பர் தான். அவருடைய வீட்டிற்கு ஒரு முறை சென்ற போது உணவருந்தி கொண்டே படத்தைப் பற்றிய விசயங்களை பேசினேன். நானே தயாரிக்கிறேன் என அவரே ஆர்வத்துடன் முன் வந்தார். இந்தப் படத்திற்கு என்ன பட்ஜெட் என்று அவர் கேட்கவில்லை. ஆனால் நான் கேட்டது எல்லாம் கிடைத்தது. சுதந்திரமாக இந்த படத்தினை உருவாக்கி இருக்கிறேன். இதற்காக தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இந்தப் படத்திற்கு விக்ரம் பிரபு தான் நாயகன் என தீர்மானித்து விட்டேன். ஆனால் என்னுடைய நண்பர்கள்தான் அவர் ஆக்சன் ஹீரோ! இந்த கதைக்கு பொருத்தமாக இருப்பாரா? என்ற சந்தேகத்தை எழுப்பினார்கள். அப்போதுதான் அவருடைய நடிப்பில் ‘இறுகப்பற்று ‘என்ற படம் வெளியானது. அதில் அவருடைய நடிப்பில் வேறு ஒரு பரிமாணம் வெளிப்பட்டது. இது எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. அதன் பிறகு அவரை நேரில் சந்தித்தேன்.
அவர் நடிக்க சம்மதம் தெரிவித்த உடன் இப்படத்தின் பணிகள் வேகம் எடுத்தது. படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை எந்த கேள்வியும் என்னிடம் கேட்கவில்லை. என் மீது முழு நம்பிக்கை வைத்தார். தற்போது இந்த படத்தை பார்த்த பிறகும் என் மீதான நம்பிக்கை விலகவில்லை என நம்புகிறேன்.‌ இவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இசையப்பாளர் ஷான் ரோல்டனை சந்தித்த போதும் விக்ரம் பிரபுவிடம் சொன்னது போல் எனக்கு கதை சொல்ல தெரியாது. திரைக்கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் என்றேன். அதன் பிறகு அவரிடம் ஒன்றரை மணி நேரம் கதையை சொன்னேன். அவரும் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் பணியாற்ற தொடங்கினார். அந்தத் தருணத்தில் விக்ரம் பிரபுவுக்கு சிறந்த ஆல்பம் ஒன்றை இந்த முறை நான் தருவேன் என்று என்னிடம் சொன்னார். அந்த வகையில் இதுவரை வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை தொடர்ந்து பாடலாசிரியர் மோகன் ராஜன், நடிகர் ரமேஷ் திலக் , விநியோகஸ்தர் சக்தி வேலன், அருள் தாஸ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு, சுஷ்மிதா பட் ஆகிய நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்கும். கல்யாணம் ஆகாத அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும். 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கல்யாணத்திற்காக காத்திருக்கின்ற எல்லா ஆண்களும், பெண்களும் இந்த படத்தை பார்க்கலாம்.

இந்த சமூகம் வயதுடன் பல விசயங்களை ஒப்பிட்டு பேசிக் கொண்டே இருக்கிறது. அது தொடர்பான கேள்வியையும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. பொதுவாக யாருக்கும் மற்றவர்கள் கேள்வி கேட்டால் பிடிக்காது. அந்த வகையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும். ” என்றார்.

நடிகர் விக்ரம் பிரபு பேசுகையில், ” நாங்கள் இங்கே அனைவரும் குடும்பமாக இணைந்து ஒரு குடும்ப படத்தை வழங்குகிறோம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தருணத்தில் கிடைத்த மகிழ்ச்சி இதற்கு முன் எந்த திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் கிடைத்ததில்லை. நான் இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக கோபிசெட்டிபாளையம் செல்கிறேன் என்று அப்பாவிடம் சொன்னதும் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அத்துடன் மட்டும் நிற்காமல் அங்கு சென்றால் இன்னார் வீட்டுக்கு செல்… இன்னார் வீட்டுக்கு செல்.. என்று ஏராளமானவர்களை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அவர்களை அங்கு சந்தித்தபோது மகிழ்ச்சி இரட்டிப்பானது.
அந்தத் தருணத்திலேயே இந்த படம் நல்ல படமாக வரவேண்டும் என்ற அழுத்தம் எனக்குள் ஏற்பட்டது. இந்தப் படம் சிறப்பாக வரவேண்டும் என நான் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த பட குழுவும் மகிழ்ச்சியுடன் பணியாற்றியது.

ஷான் ரோல்டனை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் இந்த படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றினோம். இந்தப் படத்திற்கு இசை மிகப்பெரிய பலம். அவர் அழகாக செய்து இருக்கிறார் நல்ல ஆல்பமாக கொடுத்து சாதித்து இருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படப்பிடிப்பு நடைபெற்ற ஒரு மாத காலம் வரை குடும்பமாக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம். இது மறக்க இயலாத அனுபவம்.

இந்தப் படத்தில்… இந்த கதாபாத்திரத்தில்… நடிகை சுஷ்மிதாவை தவிர வேறு யாராலும் பொருத்தமாக நடித்திருக்க முடியாது. அந்த அளவிற்கு அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள். தமிழ் சினிமா சார்பில் அவரை மனதார வரவேற்கிறேன்.

இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

லவ் மேரேஜ் படத்திலும் வித்தியாசமாக குடும்பத்தினர் அனைவரும் கண்டு களிக்கும் வகையிலான குடும்ப படமாக உருவாக்கி இருக்கிறோம். எப்போதும் போல் என் மீதும், என் படங்கள் மீதும் அன்பு செலுத்தி, படத்தை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகி ஜூன் 27 ஆம் தேதி அன்று வெளியாகும் ‘லவ் மேரேஜ்’ திரைப்படத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட் ,ரமேஷ் திலக், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை ராஜா கவனித்திருக்கிறார். ஃபேமிலி எண்டர்டெயின்ராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அஸ்யூர் ஃபிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டேய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் சக்தி வேலன் வழங்குகிறார்.

இதனைத் தொடர்ந்து ‘லவ் மேரேஜ் ‘ படத்தின் முன்னோட்டத்தை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

விமல் நடிக்கும், காமெடி எண்டர்டெயினர் திரைப்படம், பூஜையுடன் துவங்கியது !!

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் விமல் நடிக்கும், காமெடி எண்டர்டெயினர் திரைப்படம், பூஜையுடன் துவங்கியது !!

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்ஷ்ன் பிரைவேட் லிமிடட் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், நடிகர் விமல் நாயகனாக நடிக்க, அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், கிராமப்புற பின்னணியில், காமெடி எண்டர்டெயினராக உருவாகும் புதிய படம், பூஜையுடன் துவங்கியது.

காரைக்குடியில், படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியுள்ளது.

மலையாளத் திரையுலகில் சமீபததில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற “ககனச்சாரி, பொன்மேன்” படங்கள் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ள அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்ஷ்ன் பிரைவேட் லிமிடட் நிறுவனம், இந்த புதிய படம் மூலம், தமிழ் திரையுலகில் கால்பதித்துள்ளனர். தயாரிப்பாளர் விநாயகா அஜித் இப்படத்தை, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார்.

இப்படத்தில் கதாநாயகனாக விமல் மற்றும் கதாநாயகியாக முல்லை அரசி நடிக்க, ‘விடுதலை’ சேத்தன், ‘பருத்திவீரன்’ சரவணன் உட்பட மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து, நடித்து வருகிறார்கள்.

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை, குடும்பங்களோடு அனைவரும் கொண்டாடும் வகையில், ஒரு அசத்தலான காமெடி எண்டர்டெயினராக இப்படத்தை, அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்குகின்றனர்.

எழுத்தாளர் பாசில் ஜார்ஜ் மற்றும் ஆகாஷ் வி பால் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்கள். திரைக்கதையை சுதி கிருஷ்ணா அமைத்துள்ளார். பார்க்கிங் வெற்றிப்பட ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரான்சிஸ் நெல்சன் சேவியர் மற்றும் மருது பெரியசாமி வசனம் எழுதியுள்ளனர். எடிட்டிங் மதன், கலை இயக்கம் ராஜ்கமல், ஸ்டண்ட் பீனிக்ஸ் பிரபு, எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் ரஞ்சித் கருணாகரன் ஆகியோர், தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.

கிராமத்து பின்னணியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பை, காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த மற்ற தகவல்கள், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

28 YEARS LATERHorrorReleasing around the world from June 18, 2025

Academy Award®-winning director Danny Boyle and Academy Award®-nominated writer Alex Garland reunite for 28 Years Later, a terrifying new “auteur horror” story set in the world created by 28 Days Later. It’s been almost three decades since the rage virus escaped a biological weapons laboratory, and now, still in a ruthlessly enforced quarantine, some have found ways to exist amidst the infected. One such group of survivors lives on a small island connected to the mainland by a single, heavily-defended causeway. When one of the group leaves the island on a mission into the dark heart of the mainland, he discovers secrets, wonders, and horrors that have mutated not only the infected but other survivors as well.

Directed by: Danny Boyle

Written by: Alex Garland

Cast: Jodie Comer
Aaron Taylor-Johnson
Jack O’Connell
Alfie Williams
and Ralph Fiennes
Sony Pictures Release

“ஹும்” படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

‘ஃபர்ஸ்ட் லைன்’ உமாபதி தயாரிப்பில், எஸ். கிருஷ்ண வேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் – ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘ஹும்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், பாடலாசிரியர் விவேகா, இயக்குநர்கள் எல். சுரேஷ், இஸ்மாயில், தயாரிப்பாளர்கள் ராஜா, கஸாலி, பத்திரிக்கையாளர்கள் டி எஸ் ஆர் சுபாஷ், செந்தில் வேல், ‘ஜீவா டுடே’ ஜீவ சகாப்தன், ‘ யூ டூ ப்ரூட்டஸ்’ Minor, தொழிலதிபர்கள் அப்பு பாலாஜி, கமல்ஹாசன், டி. சுரேஷ், இணை தயாரிப்பாளர்கள் சித்தர் திருதணிகாசலம், கௌரி ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை இயக்குநர் கே பாக்யராஜ் வெளியிட, வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் இசையமைப்பாளர் ஹேமந்த் சீனிவாசன் பேசுகையில், ” இந்த திரைப்படத்தில், கதாநாயகனும், கதாநாயகியும்’ காதல் கோட்டை’ படத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளாமல் காதலிப்பார்களே.. அதுபோல் நானும், பாடலாசிரியரும் பணிபுரிந்தோம். பாடலாசிரியர் விவேகா எழுதி கொடுத்த பாடலுக்கு இசையமைத்தேன். இதற்கு கொரோனா காலகட்டத்தில் இப்பணிகள் நடைபெற்றதே காரணம். இந்தப் பாடலுக்கு இசையமைத்த பிறகு படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு பிடிக்குமா? என்ற ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அந்த பாடலை தற்போது திரையில் பார்த்தபோது எங்கள் அனைவருக்கும் பிடித்தது. ரசிகர்களுக்கும் பிடித்திருக்கும் என்ன நம்புகிறேன்.

இந்தப் பாடலை உருவாக்குவதற்கு முன் தயாரிப்பாளர் எனக்கு படத்தில் இடம்பெறும் காட்சிகளின் புகைப்படங்களை காண்பித்தார். தற்போது திரையில் காண்பித்த போது மிகவும் அற்புதமாக இருந்தது. இதற்காக உழைத்த இயக்குநருக்கும், இதில் முகத்தை காண்பிக்காமல் நடித்த நாயகன் – நாயகிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மேடையில் திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜிடமிருந்து வாழ்த்து பெற்றதை பாக்கியமாக கருதுகிறேன். ” என்றார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ” ஹும் என்பதை எப்படி சொல்வது என எனக்குத் தெரியவில்லை. ஹும் என்பதில் ஏகப்பட்ட மாடுலேஷன் இருக்கிறது. ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு மாடுலேஷனில் இந்த ஹும் இருக்கலாம். அப்படி ஒரு அழகான டைட்டில். இப்படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இப்படத்தின் தயாரிப்பாளரான உமாபதி மற்றும் என் நண்பர் சுபாஷ் ஆகியோரின் பேச்சில் ஏராளமான விசயங்கள் இருக்கும். நான் அவர்களை பேச சொல்லிவிட்டு, அவர்கள் பேசுவதை கேட்பேன். யார் எப்போது சினிமாவில் வருவார்கள் என்று சொல்லமுடியாது. ‘தூறல் நின்னு போச்சு’ படத்தின் தயாரிப்பாளர் நஞ்சப்பனுடன் அதுபோன்றதொரு அனுபவம் ஏற்பட்டது. அது வித்தியாசமாகவே இருந்தது. இதுபோன்ற தருணங்களில் என்னுடைய ஆசான் சொன்னது தான் நினைவுக்கு வரும். ‘நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான். அவரிடமிருந்து நீ கற்றுக் கொள்வதற்கு ஏதேனும் ஒரு விசயம் இருக்கும்’ என சொல்வார். அதனால்தான் நான் யாரையும் எளிதாக பார்க்க மாட்டேன் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விசயம் இருக்கும்.

இயக்குநர் கிருஷ்ணவேல் யாரிடமும் உதவியாளராக பணியாற்ற வில்லை என்றார் . சரி சுயம்புவாக சிலர் வருவார்கள் என எண்ணினேன்.

சினிமா மாறிவிட்டது. பாடலாசிரியர் விவேகாவிடம் இயக்குநரை பற்றி கேட்டபோது, ‘அவரை நான் இப்போதுதான் நேரில் சந்திக்கிறேன்’ என்றார். சினிமா ரொம்ப அட்வான்ஸாக சென்று கொண்டிருக்கிறது.

தயாரிப்பாளராக இருக்கும் உமாபதி நிறைய விசய ஞானம் உள்ளவர் . அவர் படத்தை தயாரித்திருக்கிறார் என்றால் அதில் ஏதேனும் விசயம் இருக்கும். அவர் தன்னுடைய அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி இருக்கிறார். அவருடன் ஆரம்ப காலத்தில் பழகிய நண்பரையும் தயாரிப்பாளராக்கியது அவர் நட்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தெரிகிறது. விரைவில் அவருடைய இலட்சிய கனவான இயக்குநராகவும் ஆக வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இங்கு மேடையில் பேசிய யூ டூ ப்ரூட்டஸ் Minor, அவருக்கு யார் மேல் கோபமோ.. அவருடைய பேச்சில் என்னையும் கோர்த்து விட்டார். ” என்றார்.

கதாநாயகன் கணேஷ் கோபிநாத் பேசுகையில், ” என்னுடைய மானசீக குரு கே. பாக்யராஜ் சார். அவர் இருக்கும் மேடையில் அவருடன் இருந்ததை பெருமிதமாக கருதுகிறேன்.

இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் அடுத்த நாளே படப்பிடிப்பு சென்றேன். இந்த அனுபவம் வித்தியாசமாக இருந்து. படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

கதாநாயகி ஐஸ்வர்யா பேசுகையில், ” இந்தப் படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும் , இயக்குநருக்கும் நன்றி. வித்தியாசமான முயற்சியில்.. அழுத்தமான செய்திகள் இந்த படத்தில் இருக்கிறது. பல தடைகளை கடந்து இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நானும், நாயகனும் முகத்தை காண்பிக்காமல் நடித்திருந்தாலும்… இந்த படம் வெளியான பிறகு ஏராளமானவர்கள் எங்களை பாராட்டுவார்கள் என ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். ” என்றார்.

இயக்குநர் கிருஷ்ணவேல் பேசுகையில், ” திரைப்படத் துறைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் எந்த இயக்குநரிடமும் உதவியாளராக பணியாற்ற வில்லை. எந்த உதவி இயக்குநரும் எனக்கு நண்பராகவும் இல்லை. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று எனக்கு ஏன் தோன்றியது? என்றால்.. அடிப்படையில் நான் ஒரு சர்வைவர்.

கொரோனா காலகட்டத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய மகளை நாயகியாக முன்னிறுத்தி திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என சொன்னார்.‌ அதற்காக ஒரு கதையை எழுதினோம். கதை எழுதிய பிறகு தயாரிப்பாளர் பின்வாங்கி விட்டார். அந்தத் தருணத்தில் தான் யாருடைய முகத்தையும் காண்பிக்காமல் ஒரு படத்தை உருவாக்கலாம் என நினைத்து இப்படத்தின் கதையை எழுதத் தொடங்கினேன்.

‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் பாக்கியராஜ் கதாபாத்திரத்திற்கு பெயர் இருக்காது. அதுவும் இந்த திரைப்படத்திற்கு ஒரு இன்ஸ்பிரேஷன். அறிஞர் அண்ணாவின் ‘ஓர் இரவு’ எனும் திரைப்படமும் இன்ஸ்பிரேஷன் . கலைஞரின் படங்களும் இன்ஸ்பிரேஷன். பார்த்திபனின் படங்களும் இன்ஸ்பிரேஷன். இப்படியாக ஒரு வித்தியாசமான படத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்து இருக்கிறேன்.

பெண்களின் பாதுகாப்பு குறித்து.. பெண்கள் எதைக் கண்டு அச்சப்படக்கூடாது என்பது குறித்து.. ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும். இது பல படங்களின் தழுவலாகவும் இருக்கலாம். சாயலாகவும் இருக்கலாம். காப்பி என்று கூட சிலர் சொல்லலாம். ஆனால் கதை புதிது. அதற்கு நான் உத்திரவாதம். இந்த படம் கண்டிப்பாக பேசப்படும் என நம்புகிறேன் ” என்றார்.

தயாரிப்பாளர் உமாபதி பேசுகையில், ” எங்களின் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றி.
பத்திரிக்கை துறையில் புகைப்பட கலைஞராக பணியாற்றத் தொடங்கி அதன் பிறகு பல முன்னணி ஊடகங்களில் முதன்மை ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் உண்டு.

2004 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் ‘Grand Master of Politics ‘ எனும் புத்தகத்தை எழுதினேன். அதனை அப்போதைய ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டார். அதன் பிறகு பத்தாண்டுகள் கழித்து ‘பதிவுகள்’ எனும் இரண்டாவது புத்தகத்தை எழுதினேன். அதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார்.

என்னுடைய நண்பர் கிருஷ்ணவேல் ஒரு படத்தை தயாரித்து நிறைவு செய்திருந்தார். ஆள் இல்லாத படம் என்றார். அதன் பிறகு ஒரு நாள் அந்தப் படத்தை காண்பித்தார். அரை மணி நேரம் கடந்தது தெரியவில்லை. சுவாரசியமாக இருந்தது. இதுவரை யாரும் அது போன்ற முயற்சியை மேற்கொண்டதில்லை. புதிதாக இருந்தது. ஆச்சரியமாகவும் இருந்தது அதன் பிறகு விவாதித்தோம். அதனைத் தொடர்ந்து அந்தப் படத்தை மீண்டும் தயாரிக்க தொடங்கினோம். நண்பர்களின் உதவியுடன் இப்படத்தின் பணிகளை நிறைவு செய்தோம். ” என்றார்.

தயாரிப்பாளர் கஸாலி பேசுகையில், ,” இந்த திரைப்படத்தை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன். ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாக இருக்கும். இந்த திரைப்படம் வெளியான பிறகு பெரிய அளவில் பேசப்படும். படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

பாடலாசிரியர் விவேகா பேசுகையில், ” மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர் உமாபதி முன்னணி செய்தி நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார். கம்போடியா நாட்டில் நடைபெற்ற உலக தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தேன். அந்த தருணத்தில் இருந்து தயாரிப்பாளர் உமாபதியுடன் நெருக்கமாக பழகத் தொடங்கினேன். அவர் தயாரிப்பாளர் மட்டுமல்ல அவரிடம் ஏராளமான கதைகளும் உள்ளது. விரைவில் அவர் இயக்குநராகவும் மாறுவார். அதற்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக படங்களில் சில படங்கள் வித்தியாசமாக இருக்கும். நண்பர் சந்திர மௌலி ஹிட்ச்காக்கின் நாற்பது திரைப்படங்களையும் பார்த்து, அவரைப் பற்றிய ஒரு ஆவண படத்தை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தார். அவரோடு இணைந்து நானும் அந்த நாற்பது திரைப்படங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. ஒவ்வொரு படத்திலும் அவர் ஒவ்வொரு புதுமையை செய்திருப்பார். அதில் ‘ரோப்’ என்று ஒரு படம். அதில் 11 ஷாட்ஸ்கள் மட்டும்தான் இருக்கும்.

அப்படி ஒரு வித்தியாசமான படமாக நான் இந்த திரைப்படத்தை பார்க்கிறேன். இந்தப் படத்தில் 13 கதாபாத்திரங்கள். 13 குரல்கள். 13 உடல்கள் நடித்திருக்கின்றன. 13 உணர்ச்சிகள் நடித்திருக்கின்றன. ஆனால் அவர்களது முகங்கள் மட்டும் வெளியில் தெரியாது. இதுதான் இப்படத்தின் வித்தியாசம். இதுதான் இப்படத்தில் முகவரி என்று நினைக்கிறேன். இந்தப் படத்தின் முகவரியே முகம் இல்லை என்பதுதான்.
இது ஒரு புது முயற்சி.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹேமந்த் சீனிவாசன் அற்புதமாக இசையமைத்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். படத்தின் இயக்குநருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் உமாபதி இப்படத்திற்காக கடுமையாக உழைத்தது நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

கொரோனா காலகட்டத்தின் போது நாம் முற்றாக நவீன உலகத்திற்கு மாறிவிட்டோம். இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பம்.. நம்முடைய நேரத்தை மிச்சப்படுத்துகிறது. நேர விரயத்தை தவிர்க்க முடிகிறது. தொழில்நுட்பம் இல்லாமல் இன்று நம்மால் வாழவே இயலாது.

இந்த உலகத்தில் விமர்சிக்கப்பட வேண்டும் அல்லது விமர்சிக்க வேண்டும். விமர்சனம் இல்லாமல் வாழவே இயலாது. ‘நீ விமர்சிக்கப்படக்கூடாது என நினைத்தால் நீ எதையும் பேசாதே.. எதையும் செய்யாதே.. எதுவாகவும் உருவாகாதே’ என தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் குறிப்பிட்டதை போல்..
நீ எதுவும் பேசவில்லை என்றால்.. நீ எதுவும் செய்யவில்லை என்றால்… எதுவாகவும் உருவாகவில்லை என்றால்.. உன்னை எவனும் கண்டுகொள்ள மாட்டான். உன்னை எவனும் கவனிக்க மாட்டான். எனவே விமர்சிக்கப்படுவது ஒரு அங்கீகாரம். ஒவ்வொரு விமர்சனங்களிலும் அழகும், அறிவும் இருப்பதையும் பார்க்க முடிகிறது.

இந்தப் படத்தில் இயக்குநரின் உழைப்பை விட தயாரிப்பாளர் உமாபதியின் உழைப்பு அதிகம். இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன். ” என்றார்.

“கட்ஸ்” திரை விமர்சனம்

நாயகன் ரங்கராஜ், சிறு வயதில் தன் தாய் மற்றும் தந்தையை இழந்து அதன் பின்னர் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து படித்து காவல்துறை ஆய்வாளராக ரங்கராஜ், அதே ஆசிரமத்தில் இருக்கும் ஒரு அனாதை பெண் நான்ஸியை திருமணம் செய்து கொண்டு தன் மகள் மற்றும் மனைவியோடு வாழ்ந்து வருகிறார். காவல்துறை ஆய்வாளரான ரங்கராஜ், அடையாளம் தெரியாத ஒரு திருநங்கையை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். கொலை செய்யப்பட்டவர் யார்? என்று காவல்துறை ஆய்வாளரான ரங்கராஜ், தனது விசாரணையை தொடங்குகிறார்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டது அரசு அதிகாரி விஏஒ திருநங்கை என கண்டுபிடிக்கிறார்

கொலை செய்தது யார்? எதற்காக அரசு அதிகாரியை கொலை செய்தார்கள்?குற்றவாளியை , கண்டுபிடித்தாரா? என்பதுதான் இந்த “கட்ஸ்” திரைப்படத்தின் மீதிக்கதை.

கதாநாயகன் ரங்கராஜ், தமிழ் திரைப்பட உலகிற்கு இவர் புதுமுகம் தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் நான்ஸி, கேரளத்து மொழியில் கொஞ்சி பேசுவதும், தனது கணவன் மீது வைத்திருக்கும் காதல் என பல இடங்களில் நன்றாகவே நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

நடிகை ஸ்ருதி நாராயணனுக்கு சிறிய கதாபாத்திரம் நடிப்பின் மூலம் உச்சத்தை தொட்டிருக்கிறார். ரங்கராஜின் மாமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய்தீனா காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டெல்லி கணேஷ், அறந்தாங்கி நிஷா, துணை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிர்லா போஸ், ரங்கராஜின் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீலேகா,அனைவரும் மிக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

இந்த கட்ஸ் திரைப்படத்தில் திருநங்கைகளுக்கான முக்கியத்துவம், ஒரு பெண் எப்படி வீரமாக, இருக்க வேண்டும் ஆணின் கம்பீரம், தாயின் பாசம் என இயக்கியிருக்கிறார் இயக்குநர் ரங்கராஜ்.

அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்’அஃகேனம்’

A&P குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில், அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் ஆகியோர் சவாலான வேடத்தில் நடித்திருக்கும் ‘அஃகேனம் ‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அஃகேனம் ‘ எனும் திரைப்படத்தில் அருண் பாண்டியன் , கீர்த்தி பாண்டியன், சீதா, ஷிவ் பிங்க் , ஆதித்யா, ரமேஷ் திலக், பிரவீண் ராஜா , கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் கோவிந்தராஜன் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார். தேவத்யன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ராஜா கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். அதிரடி திரில்லராக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை A&P குரூப்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு சரவணன்- ஏகே சேகர் ஆகியோர் இணை தயாரிப்பாளராக உள்ளனர்.

ஜூலை மாதம் நான்காம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது . இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

பாடலாசிரியர் கார்த்திக் நேதா பேசுகையில், ” அஃகேனம் என்ற தமிழ் தலைப்பிற்காக மிக்க மகிழ்ச்சி. இதற்கான காரணத்தை இயக்குநர் விவரிப்பார்.

இயக்குநர் உதய் என் வீட்டிற்கு வந்து பாடல்களுக்கான சூழல்களை விவரித்தார். இந்த திரைப்படம் அமைதியான மற்றும் ஆழமான உணர்வை பேசக்கூடியது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களும் வெவ்வேறு வகைமைக்குள்ளான பாடல்களாக இருக்கிறது. மேற்கத்திய இசை -ராக் இசை – இந்திய நாட்டார் இசை – இந்திய செவ்வியல் இசை – என வெவ்வேறு வகைமையியான இசை வடிவம் இந்தப் படத்தில் பாடல்களாக இடம் பிடித்திருக்கிறது. இசையமைப்பாளர் பரத் வீரராகவன் மிகுந்த திறமைசாலி.

இந்த ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர் என்ற ஆனந்த விகடன் வழங்கும் விருதினை பெற்றிருக்கும் சக பாடலாசிரியர் மோகன் ராஜனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

அருண் பாண்டியன் ஐயாவை முதன்முறையாக சந்திக்கும்போது சற்று பதட்டத்துடன் தான் இருந்தேன். அவருடன் தொடர்ந்து பழகும் போது தான் அவர்’ பலாப்பழம் ‘என தெரிந்து கொண்டேன். பழகிய பிறகு இனிக்க இனிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்ததற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரைப்படத்தில் நிறைய பேர் புது முகமாக அறிமுகமாகி இருக்கிறார்கள். இது அரிதினும் அரிதாக நடக்கக்கூடிய நிகழ்வு. இன்றைக்குள்ள காலகட்டத்தில் வியாபாரத்திற்கு யார் பயன்படுவார்களோ அவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு பயன்படுத்திக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், புதிதாக ஒரு குழுவினரை அறிமுகப்படுத்துவதற்கு மிகப்பெரிய துணிவு வேண்டும்.

அறிமுக இசையமைப்பாளர் பரத் வீரராகவனிடமிருந்து இப்படி ஒரு ஓசையை நான் எதிர்பார்க்கவில்லை. சாலச் சிறந்த பணியை செய்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

அறிமுக இயக்குநர் உதய்க்கும் என்னுடைய வாழ்த்துக்கள். சக பயணியாக ..சக கலைஞனாக.. இணைந்து பயணிப்போம். நேர்மையுடனும், அறத்துடனும் பயணம் செய்யுங்கள் ” என்றார்.

பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், ” தயாரிப்பாளர் அருண் பாண்டியனுக்கு நன்றி. நானும் பாடலாசிரியர் கார்த்திக் நேதாவும் ஒரே மேடையில் இருப்பது இதுதான் முதல் முறை என நினைக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த கவிஞன். பாடலாசிரியர். பாடலுக்குள் நவீன கவிதைகளை உள்ளே வைப்பதில் சாமர்த்தியசாலி. அவர் எழுதி அண்மையில் ஹிட்டான ‘அஞ்சு வண்ண பூவே..’ பாடலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவர் மேலும் ஏ ஆர் ரகுமானுக்கு எழுத வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இந்த விழாவின் நாயகன் பரத் வீரராகவனுக்கு வாழ்த்துக்கள். ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசைக்காக ஏ ஆர் ஆர் என்ற பிராண்ட் புகழ்பெற்றது போல்.. எதிர்காலத்தில் பி ஆர் எனும் பிராண்டும் புகழ் பெற வேண்டும். அதற்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் உதய்- நேர்த்தியாக கதை சொல்வதில் கெட்டிக்காரர். இவரும், இசையமைப்பாளரும் எதிரிகளை வலிக்காமல் அடிப்பதில் கெட்டிக்காரர்கள். பாடல் வரிகளை பெறுவதில் சில திருத்தங்களை நாசுக்காக சுட்டிக் காட்டுவார்கள். பரத் நன்றாக வர வேண்டும் என உதய் பாடுபடுகிறார். இவர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்த அருண் பாண்டியனுக்கு பெரிய மனசு.‌ நிறைய புது முகங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு துணிவு வேண்டும். பேரன்பு இருக்க வேண்டும்.‌

அவரை சந்தித்தபோது உங்களின் படத்தில் நான் பங்கு பெற வேண்டும் . இது மட்டும் தான் என்னுடைய விருப்பம் என்றேன். ஏனெனில் அவரை நான் அவ்வளவு தூரம் நேசித்திருக்கிறேன். ‘இணைந்த கைகள் ‘ படத்தை இப்போதும் பார்ப்பேன். எப்போதும் பார்ப்பேன்.

‘மூங்கில் கோட்டை’ என்றொரு படத்தில் அவர் நடித்திருந்தார். அந்த தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவருக்காக சின்ன வயதில் ஏங்கிருக்கிறேன்.

‘ஊமை விழிகள்’ படத்தை வெளியிடுவதற்கு முன் நடைபெற்ற சம்பவங்களை நீங்கள் என்னிடம் சொல்லி இருக்கிறீர்கள். அதையே நீங்கள் ஒரு கதையாக உருவாக்கலாம். அவ்வளவு அழகும் , திரில்லும் அதில் இருக்கிறது. அதிலும் படம் வெளியான பிறகு சத்யம் தியேட்டரில் கூட்டம் கூடி இருந்ததை நீங்கள் மகிழ்ச்சியுடன் சொன்னபோது உங்களின் சந்தோஷத்தை கண்களால் ரசித்து உணர்ந்தேன்.

இந்தப் படத்தில் கீர்த்தி நடித்திருந்த காட்சிகளை பார்த்து தான் ‘வாழ்க்கை போராட்டமே ‘எனும் பாடலை எழுதினேன். அதில் அவர் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். இங்குதான் அவர்கள் அப்பா – பொண்ணு என்று இருக்கிறார்கள். இந்த படத்தில் வேறு இரு கதை மாந்தர்களாக இருப்பார்கள் . கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும்.‌

சின்ன படங்கள் வெற்றி பெறும்போது பெரிய படங்களாகிறது. இதற்கு ‘குடும்பஸ்தன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்களின் வெற்றியே உதாரணம். இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்” என்றார்.

இவ்விழாவில் இசையமைப்பாளர் பரத் வீரராகவன் பேசுகையில், ” இது என்னுடைய முதல் படம். எனக்கு இசையை கற்பித்த குருமார்களுக்கு வணக்கம்.

இயக்குநருடன் முதன்முதலாக அருண்பாண்டியன் சாரை சந்தித்தோம். அவர் முதலில் எதையும் பேசவில்லை. இந்தப் படத்திற்கான இசையமைப்புக்கு உரிய பட்ஜெட்டை அவரிடம் சொன்னேன். அவர் அதனை கேட்டுவிட்டு, இதற்குள் செய்து விடுவாயா? என கேட்டார். நான் ஆமாம் என்று பதிலளித்தேன். ஆனால் உண்மையில் நான் சொன்ன பட்ஜெட்டை விட மும்மடங்கு அதிகமானது. ஆனால் அதனை செய்து கொடுத்தார். இந்த மனசு யாருக்கு வரும்? . இவர் கொடுத்த ஆதரவினால் தான் என்னால் பல இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்ற முடிந்தது. இங்கு மேடையில் இருக்கும் பாடலாசிரியர்கள் மோகன் ராஜன் மற்றும் கார்த்திக் நேதா ஆகியோர் ஐநூறு பாடலுக்கு மேல் எழுதிய அனுபவம் கொண்டவர்கள். இவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் உதய் .கே நண்பர் மட்டுமல்ல மிகுந்த திறமைசாலி. இந்த படத்தின் பின்னணி இசைக்காக காட்சிகளை பார்த்த போது.. அதில் இந்திராவாக நடித்திருக்கும் கீர்த்தி பாண்டியனின் நடிப்பு பிரமாதம். அருண் பாண்டியனை இந்த படத்தில் பார்ப்பது போல் வேறு எந்த படத்திலும் பார்த்திருக்க மாட்டீர்கள். நன்றாக ஸ்மார்ட்டாக ஜீன்ஸ் டீ சர்ட் அணிந்து நடனமாடி இருக்கிறார்.

நாங்கள் பொறுப்பை உணர்ந்து கடினமாக உழைத்து படைப்பை உருவாக்கி இருக்கிறோம். படத்தில் நான்கு பாடல்கள் இருக்கிறது. அனைத்தும் நன்றாக இருக்கிறது. பாடல்களையும், படத்தையும் திரையரங்கத்தில் பார்த்து ரசித்து விட்டு ஆதரவு தாருங்கள்” என்றார்.

இயக்குநர் உதய்.கே பேசுகையில், ” இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பெண் கதாபாத்திரமாகட்டும் அல்லது இனி என்‌ இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களிலாகட்டும்.. பெண் கதாபாத்திரம் வலிமையாக இருக்கும் . இதற்கு என் அம்மா தான் காரணம்.

அம்மாவிற்கு அடுத்ததாக தயாரிப்பாளர் அருண் பாண்டியனுக்கு நான் நன்றி சொல்கிறேன். என்னை நம்பி என்னுடைய ஒட்டுமொத்த குழுவிற்கு வாய்ப்பளித்திருக்கிறார். இதற்கு மிகப்பெரிய மனம் வேண்டும். அவர் நினைத்தால் ஒரு போன் காலில் யாரை வேண்டுமானாலும் அழைத்து பணியாற்ற சொல்லலாம். ஆனால் என்னையும், என் குழுவினரையும் நம்பி இந்த வாய்ப்பை அளித்திருக்கிறார். இதை நாங்கள் மிகப்பெரிய விசயமாக பார்க்கிறோம். இதனை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். வாழ்க்கை முழுவதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். அவரிடமிருந்து நான் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.

நான் குறும்படத்தை இயக்கி விட்டு நேரடியாக படத்தை இயக்க வந்தவன். பெரிய அனுபவம் எதுவும் இல்லை. அந்த தருணத்தில் 45 வருட கால அனுபவமுள்ள ஒருவருடன் இணைந்து பயணித்ததை எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாக நினைக்கிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர், அவருடைய குடும்பத்தார்களை விட எங்களுடன் செலவழித்த நேரம் தான் அதிகம். அவரும் நாங்களும் இணைந்து தான் இப்படத்தினை உருவாக்கி இருக்கிறோம். நிச்சயமாக தரமான படமாக இருக்கும் என உறுதி அளிக்கிறேன்.

கீர்த்தியிடம் இருந்துதான் இந்தப் படத்தின் பணிகள் தொடங்கியது. அவர்களிடம் இந்த கதையை குறும்படமாகத்தான் விவரித்தேன். அதில் இந்திரா என்ற கதாபாத்திரம் தான் முக்கியமானது. நான் எதை மனதில் வைத்துக் கொண்டு கீர்த்தியிடம் அந்த இந்திரா கதாபாத்திரத்தை விவரித்தேனோ… அந்த இந்திராவாகத்தான் இந்த படத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார். படம் பார்த்தவர்கள் அனைவருக்கும் அந்த இந்திரா கதாபாத்திரம் மனதில் நிற்கும்.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

அருண் பாண்டியனின் வழிகாட்டலால்தான் இந்தப் படத்தை இந்த பட்ஜெட்டிற்குள் தரமாக உருவாக்க முடிந்தது.

இசையமைப்பாளர் பரத் – ஒளிப்பதிவாளர் விக்கி- எடிட்டர் தேவத்யன்- இவர்கள் அனைவரும் என்னுடன் நண்பர்களாக பயணித்தவர்கள். இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களின் பணி- படம் வெளியான பிறகு பேசப்படும். அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு. இந்தப் படம் வெளியான பிறகு அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

நான் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் ரசிகன். அவர் என் படத்தில் பணி புரிந்தாலும் புரியாவிட்டாலும் அவரை ரசிப்பேன். இந்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் போது அவர் எனக்காக ‘மெல்லாலியே மெல்லாலியே’ என்று புதிய வார்த்தையை வழங்கினார். அந்தப் பாடல் அழகானது மற்றும் ஆழமானது அவருக்கும் நன்றி.

அஃகேனம் என்ற டைட்டிலுக்கான காரணம் இதுதான். ஃ என்பது ஆயுத எழுத்தின் வார்த்தை வடிவம். அஃகேனம் என்றால் மூன்று புள்ளி. இதைத் தவிர்த்து இதற்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது. அந்த மூன்று புள்ளி என்பது இப்படத்தில் இடம்பெறும் மூன்று கதாபாத்திரத்தினை பிரதிபலிக்கிறது. அந்த மூன்று முக்கியமான கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் கதை என்பதால் இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம். இதையே தயாரிப்பாளரிடமும் ஆலோசனையாக சொன்னோம். அவரும் இந்த டைட்டில் மீது நம்பிக்கை வைத்து அனுமதி அளித்தார். ஒரு சமயத்தில் இந்த டைட்டில் யாருக்கும் தெரியவில்லை என்றால்.. நாம் தெரியப்படுத்துவோம் என எங்களுக்கு ஊக்கமளித்தார். இந்தப் படம் வெளியான பிறகு இந்த வார்த்தையும் பிரபலமாகும் என நம்புகிறேன்.

ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு இந்த படம் ஏற்றதாக இருக்கும். ஒரு புது குழுவாக எங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்து ஒரு படத்தை வழங்குகிறோம். ஜூலை நான்காம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகை கீர்த்தி பாண்டியன் பேசுகையில், ” நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் உதய் என்னை சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னார்.‌ அதற்கு முன் அவர் இயக்கிய ‘யாக்கை திரி’ எனும் குறும்படத்தினை காண்பித்தார். அந்த குறும்படத்தை அவர் இயக்கியிருந்த விதம்… அதன் தொழில்நுட்ப தரம்… சிறப்பானதாக இருந்தது. அதை பார்த்தவுடன் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என நினைத்தேன்.

அதன் பிறகு மீண்டும் என்னை சந்தித்து அந்த குறும்படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய குழுவினர் அனைவரும் படத்திலும் பணியாற்றுவார்கள் என அவருடைய வேண்டுகோளை உறுதியாக சொன்னார்.‌ அவரது இந்த நிலைப்பாடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.‌ புது குழுவினருடன் இணைந்து பணியாற்றும்போது அவர்களுக்குள் இருக்கும் உத்வேகம் எனக்கு நம்பிக்கை அளித்தது.‌ அதைவிட ஆர்வத்துடன் அப்பா இந்த படத்திற்குள் வருகை தந்தார். ஒரு தயாரிப்பாளராக..
ஒரு நடிகராக…. இல்லாமல் அதையும் கடந்து இந்த படத்தின் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டினார். படத்தின் திரைக்கதை அவருடைய பெயரில் தான் இருக்கும்.

அப்பா ‘ஊமை விழிகள்’, ‘இணைந்த கைகள்: ஆகிய படங்களின் பணிகளில் ஈடுபட்டிருந்த போதும் நான் பிறக்கவில்லை. அவருடைய திரைப்படக் கல்லூரி மாணவர்கள் கூட்டத்துடன் இணைந்து எவ்வளவு ஆர்வத்துடன் பணியாற்றி இருப்பாரோ அதே அளவு ஆர்வமும் ஊக்கமும் இந்தப் படத்தின் பணிகளிலும் அவர் காட்டியதாக நான் உணர்ந்தேன்.

நான் இந்த படத்தில் நடிகையாக மட்டும் தான் பங்களிப்பு செய்திருக்கிறேன். நம்மைச் சுற்றி நிறைய விசயங்கள் நடைபெறுகிறது. விபத்து – போர்- இழப்பு – என ஏராளமான விசயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது மிகவும் டிஸ்டர்ப்பாக இருக்கிறது.

இந்த நேரத்தில் எனக்குள் ஒரு கேள்வி எப்போதும் எழுந்து கொண்டே இருக்கும். இதற்கு நம்மால் என்ன செய்ய முடியும்? நம்மால் என்ன செய்ய முடியும்? என மனதில் கேள்வி எழுந்துக் கொண்டிருக்கும். இதற்கு எனக்கு கிடைத்த ஒரே பதில்.. எனக்குத் தெரிந்த கலை மூலம், இதற்காக என்ன செய்ய முடியும் என்பது தான். ஒரு சிறிய அளவிலாவது பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். நான் தேர்ந்தெடுக்கும் கதைகளாக இருந்தாலும் சரி தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அந்த வகையில் தான் நான் நடித்து வருகிறேன். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறேன்.

இந்தத் திரைப்படம் பெண்களை மையப்படுத்திய படமல்ல. இது ஒரு படம். இந்த படத்தில் சில கேரக்டர்களுக்கு சில விசயங்கள் நடக்கிறது. அந்த சூழலை அந்த கதாபாத்திரம் எப்படி எதிர்கொள்கிறார்கள்? எப்படி கடந்து செல்கிறார்கள்? என்பதைத்தான் சொல்லியிருக்கிறோம். அது ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம்.‌ அதனால் இதனை பெண்களை மையப்படுத்திய படம் என்று வகைப்படுத்த வேண்டாம்.

இந்தப் படத்தில் வித்தியாசமான ஒலிகளும், ஓசைகளும் இருக்கிறது. இதற்காக இசையமைப்பாளர் பரத் வீரராகவனை வாழ்த்துகிறேன்.

படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக அப்பா எனக்கு எப்போதும் ஆதரவளித்துக் கொண்டிருக்கும் என்னுடைய ஹீரோ . சூப்பர் ஹீரோ அப்பா தான்.

இந்தப் படத்தில் நான் இந்திரா எனும் வேடத்தில் ஒரு கேப் டிரைவராக நடித்திருக்கிறேன். எனக்கு டிரைவிங் மிகவும் பிடிக்கும். நடிகையாகி நடிக்க வராவிட்டால்.. நான் ஒரு கார் பந்தய வீராங்கனை ஆகியிருப்பேன்.” என்றார்.

நடிகர் அருண் பாண்டியன் பேசுகையில், ” இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஏன் யாரையும் அழைக்கவில்லை என்றால் .. அவர்கள் இங்கு வருகை தந்து படத்தைப் பற்றி மிகையாக பேசி விடுவார்களோ ..! என்பதற்காக தான் யாரையும் அழைக்கவில்லை.

நாங்கள் எங்களுக்கு பிடித்தது போன்ற ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம். ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு ஏற்ற வகையில் தரமுள்ள படத்தை தயாரித்திருக்கிறோம். நீங்கள் கொடுக்கும் காசு வீணாகாது. ஏனெனில் திரைக்கதை அவ்வளவு வலிமையுடன் இருக்கிறது. இதனால் தான் சிறப்பு விருந்தினர்கள் என யாரும் இல்லாமல் என் நண்பர்களான கருணா மூர்த்தி மற்றும் பி ஆர் ஓ டைமண்ட் பாபு ஆகியோர் இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் மூன்று சிறப்பம்சங்கள் இருக்கிறது. எல்லாரும் புது தொழில்நுட்ப கலைஞர்கள். கீர்த்தி சொன்ன பிறகு இந்த குழுவினருடன் கதையைக் கேட்டேன். கதையும் எனக்கு பிடித்திருந்தது. அவர்களிடம் இந்த கதையில் சிறிதளவு இணைந்து பணியாற்ற வேண்டியது இருக்கும். உங்களுக்கு சம்மதமா? எனக் கேட்டேன். அவர்களும் சரியென சம்மதித்தார்கள்.

அதன் பிறகு இயக்குநர் என்னிடம் இந்த படத்தில் நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற விருப்பமாக இருக்கிறோம் என்றார். அவர்களுக்கு ஏதேனும் அனுபவம் இருக்கிறதா ?அவர்களின் திறமை என்ன? எனக் கேட்டபோது, அவர்கள் வெளியில் தான் நிற்கிறார்கள். உள்ளே வர சொன்னால் அவர்கள் தங்களின் திறமையை காண்பிப்பார்கள் என்றார் அந்த தருணத்தில் இசையமைப்பாளர் -ஒளிப்பதிவாளர் – படத்தொகுப்பாளர் -என அனைவரும் வந்திருந்தனர்.‌ அவர்களின் ஆர்வம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்தத் தருணத்தில் தான் நம்முடைய அனுபவத்தை இவர்களுக்கு வழங்கலாம் என தீர்மானித்தேன்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஒரிசாவில் நடைபெற்ற போது அவர்களின் ஒருங்கிணைப்பு வியப்பை ஏற்படுத்தியது. நான் ஊமை விழிகள் படத்தில் பணியாற்றும்போது இருந்த ஆர்வம் இவர்களிடத்தில் தென்பட்டது. இதனால்தான் என்னுடைய குடும்பத்தார்களை விட இரண்டு வருடங்கள் இவர்களுடன் இணைந்து பணியாற்றினேன். இந்தப் படம் மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும். ” என்றார்.