முதன்மை கதாபாத்திரத்தில் துள்ளல் கலந்த அப்பாவாக இளைய திலகம் பிரபு நடிக்க.. 8 தோட்டாக்கள் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார் கதாநாயகியாக கேரளத்து பைங்கிளி கிருஷ்ண பிரியா அறிமுகம் ஆகிறார் இவர்களுடன் மன்சூர் அலிகான், ஆர் வி உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை, மற்றும் பலர் நடிக்கின்றனர்,
கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் இளம் தயாரிப்பாளர் KM சபி மற்றும் பாரூக் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரமாக திரைப்படம் உருவாகிறது!
மகாகந்தன் அறிமுக இயக்குனர்
வெற்றிப்பட இயக்குனர்களான வசந்த் சாய் மற்றும் நந்தா பெரியசாமி அவர்களுடன் பணிபுரிந்த மகா கந்தன் இயக்கத்தில் கத்திரி வெயிலிலும் அதிதி புதிரியாய் தயாராகிறது!
வைரமுத்து – T ராஜேந்தர் – நவ்பல் ராஜா
ஆண்மகனின் அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து பட்டைதீட்ட… அடுக்குமொழி நாயகர் டி ஆர் ஒரு பாடலை பாடுவது இப்படத்தின் தனிச்சிறப்பு! நாடி நரம்புகளை நடனம் ஆட வைக்கும் துள்ளல் இசையோடு நவ்பல் ராஜா தமிழ் திரை உலகுக்கு புதிய இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்!
கிராமப்புற காட்சிகளை கண்ணுக்கு குளுமையாக ஒளிப்பதிவாளர் ஆலிவர் டெனி படம் பிடித்துள்ளார் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம், தூத்துக்குடி, மரக்காணம், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது!விரைவில் இப்படம் திரைக்குவரவுள்ளது
ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி, மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் பி. சக்தி வேலன் வெளியிடும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதன் போது பட குழுவினர் கலந்து கொண்டனர்.
படத்தின் தயாரிப்பாளர் ஆதித்யா அனைவரையும் வரவேற்று பேசுகையில், ” தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி வெற்றி பெறுவதற்கு வழிகாட்டியாக திகழ்ந்த தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமிக்கும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து அறுபத்தைந்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய இப்படத்தின் வசனகர்த்தாவும், எழுத்தாளருமான அழகிய பெரியவன், ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜு, படத்தொகுப்பாளர் பிரேம்குமார், கலை இயக்குநர் ஏழுமலை, சண்டை பயிற்சி இயக்குநர் ஸ்டன்னர் சாம், நடன இயக்குநர் கிரிஷ், ஒலிப்பதிவு மற்றும் ஒலி கலவை பணியை மேற்கொண்ட அன்னபூர்ணா ஸ்டுடியோஸ், பாடலாசிரியர்கள் கார்த்திக் நேத்தா, யுகபாரதி மற்றும் ஞானக்கரவேல், தயாரிப்பு நிர்வாகிகள் குழுவினர், விளம்பர வடிவமைப்பு நிபுணர் கபிலன், ஆடியோ பார்ட்னர் திவோ, சமூக வலைதள பக்கங்களில் விளம்பரப்படுத்தும் பணியை ஏற்றிருக்கும் தினேஷ், மக்கள் தொடர்பு யுவராஜ் என படத்திற்காக பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் திரைக்கதையில் முக்கியத்துவம் இருக்கும் வகையில் இயக்குநர் தமிழ் கதையை எழுதி இருந்தார். விஜய்குமார், பாவெல் நவகீதன், திலீபன், நாச்சியாள் சுகந்தி முதல் இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களது பங்களிப்பை முழுமையாக வழங்கி இருந்தனர்.
இந்தத் திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ராணி மற்றும் ரிச்சா ஜோஷி ஆகிய இருவருக்கும் கதையை வழிநடத்திச் செல்லும் முக்கியமான கதாபாத்திரங்களை இயக்குநர் தமிழ் அளித்திருக்கிறார். அவர்களும் இதனை உணர்ந்து நன்றாக நடித்திருக்கிறார்கள்.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலுடன் இரண்டு முறை தான் தொலைபேசியில் உரையாடி இருக்கிறேன். அவருடன் இரண்டு படங்களில் பணியாற்றி இருக்கிறேன். இதுவரை அவரிடம் நான் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. இந்தப் படத்தையும் அவரிடமே கொடுத்து விட்டேன். அனைத்து விசயங்களையும் அவரே பார்த்துக் கொள்வார். தமிழ் திரையுலகில் மிகவும் நேர்மையாகவும், பெருந்தன்மையுடனும் செயல்படும் அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லோரையும் விட விஜய் குமாரும் நானும் சிறந்த நண்பர்கள். அவர் என்னிடம் எப்போது பேசினாலும் சினிமாவை தவிர்த்து வேறு எதையும் பேசியதில்லை. அவருக்கு சினிமாவை தவிர வேறு எதுவும் தெரியாது. இந்தப் படம் உருவாகுவதற்கு அவர் மிகப்பெரிய காரணமாக அமைந்திருக்கிறார். அவரிடம் சினிமாவைப் பற்றி ஏராளமான புதிய புதிய ஐடியாக்கள் இருக்கிறது. சினிமாவில் அனைத்து விசயங்களையும் நன்கு அறிந்தவர். அவருக்கு நன்றி சொல்வதை விட, ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால் விஜய் இல்லையென்றால் நான் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தப் படத்தின் இயக்குநர் தமிழ்- எனக்கு விஜய் குமார் மூலமாகத்தான் அறிமுகமானார். பவுண்டட் ஸ்கிரிப்ட் ஒன்றைக் கொடுத்தார். அந்த கதையை படித்ததும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நேர்த்தியாக எழுதியிருந்தார்.
‘எலக்சன்’ ஒரு அரசியல் திரைப்படம். அரசியல் என்றால் மேம்போக்கான அரசியலை சொல்லவில்லை. இதுபோன்ற வகையிலான திரைப்படங்கள் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. நான் மிகவும் ரசித்தேன். ஆனால் இந்தத் திரைப்படம் தேர்தல் தருணத்தில் வெளியாகும் என்று நினைக்கவே இல்லை. படத்தின் இறுதி கட்ட பணிகள் ஆறு மாதங்களுக்கு மேல் நீடித்தது. இதனைத் தொடர்ந்து சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் நல்லதொரு தேதியை தேர்வு செய்து இப்படத்தை வெளியிடுகிறார்.
இந்தப் படத்தின் பணிகளை நாங்கள் 2021 ஆம் ஆண்டில் தொடங்கினோம். இதுபோன்ற அருமையான கதையை வழங்கியதற்காக இயக்குநர் தமிழுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் அரசியல் சார்ந்த பிரச்சார படமாக இல்லாமல்.. குடும்ப உறவுகளை அழுத்தமாக பேசும் படைப்பாகவும், நல்லதொரு உச்சகட்ட காட்சியையும் இயக்குநர் வழங்கி இருக்கிறார்.
படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து, படத்தை உருவாக்கிய அவருடைய உதவியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இந்த படத்தின் மூலம் இயக்குநர் தமிழுக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.
இப்படத்தின் வசனகர்த்தாவும், எழுத்தாளருமான அழகிய பெரியவன் பேசுகையில், ” இந்த கதையை எழுதிவிட்டு, என்னை சந்தித்து கதையை வாசிக்க சொன்னார் இயக்குநர் தமிழ். அவருடைய கதையை முழுவதுமாக படித்து முடித்தவுடன் எனக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. ஏனெனில் இந்தக் கதை முழுக்க முழுக்க அரசியலைப் பற்றி பேசுகிறது. ஆனால் அரசியலை மட்டும் பேசவில்லை. மனிதர்களுடைய குணாதிசயங்களை… கீழ் மட்டத்தில் இருக்கக்கூடிய மனிதர்களின் குணங்களை… என எல்லாவற்றையும் கலந்து பேசுகிறது. அற்புதமான திரைக்கதையாகவும் இருந்தது. அதன் பிறகு அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ‘நன்றாக இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் கூட்டம் கூட்டமாக மனிதர்கள் இருக்கிறார்களே..! ‘ என்று சொன்னபோது, அவர் ‘அதனை இப்படித்தான் படமாக்க வேண்டும் என்று நான் திட்டமிட்டிருக்கின்றேன்’ என்றார்.
வேலூர் மாவட்டத்தின் கொளுத்தும் வெயிலுடனும், வியர்வையுடனும் கூட்டமாக தான் பதிவு செய்ய வேண்டும் என்றார். அவருடைய பேச்சில் தெரிந்த உறுதியை பார்த்து இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என சிலப்பதிகாரம் சொல்கிறது. நீங்கள் ஜனநாயகம் என்று சொல்லக்கூடிய.. சமத்துவம் என்று சொல்லக்கூடிய.. ஒரு கருத்தியலை… ஒரு அரசியல் கட்சியிடம்.. ஒரு அமைப்பிடம்.. தராமல்.. மக்களிடம் தந்தால் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் ஜனநாயகத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள்? ஒரு எளிய மனிதனிடம் அதிகாரம் சென்று சேரும் போது அதை அவன் எப்படி உள்வாங்கிக் கொள்கிறான்? எப்படி அதை பயன்படுத்துகிறான்? என்பதை இப்படம் சொல்கிறது.
ஆனால் ஒரு எளிய மனிதன்… எளிய மனிதனாக இருக்க இந்த சமூகம் விடுவதில்லை. குடும்பம் விடுவதில்லை. அவனுக்கு நெருக்கடியை தருகிறது. இவை எல்லாம் சேர்த்து தான் இந்த படத்தின் கதை உருவாகியிருக்கிறது என நான் கருதுகிறேன்.
ஜனநாயகம் என்றால் என்ன? என்ற கேள்வியை இந்த திரைப்படம் நிச்சயம் மக்களிடத்தில் எழுப்பும் என்றும் நான் கருதுகிறேன்.
இது தொடர்பாக மறைந்த தலைவர் ஒருவர் சிறந்த உதாரணம் ஒன்றை சொல்லி இருக்கிறார். ”ஒரு சட்டத்தை அரசு இயற்றுகிறது என்று சொன்னால்.. அதை நீங்கள் ஒரு பனிக்கட்டி என்று நினைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பனிக்கட்டியானது பத்து அல்லது இருபது மனிதர்களைக் கடந்து.. கடை கோடியில் இருக்கும் எளிய மனிதனை சென்றடையும் போது அது ஒரு துளி நீராகத்தான் போய் சேரும்” எனக் குறிப்பிடுவார்.
இன்றைய சூழலும் இப்படித்தான் இருக்கிறது. சிறந்த சட்டங்களை இயற்றினாலும்… அற்புதமான திட்டங்களை திட்டினாலும்… அதை யார் செயல்படுத்துகிறார்கள்? அவர்களுக்கான அரசியல் என்னவாக இருக்கிறது? அந்த விசயங்களை எல்லாம் சேர்ந்துதான் இந்த படம் பேசுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளில் நடிகர் விஜய் குமார் என்னை சந்தித்த உடன் ஆரத் தழுவி , ‘நீங்கள் இந்த படத்தில் இணைந்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார். அதேபோல் படப்பிடிப்பின் போது ஒருநாள் தயாரிப்பாளர் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்திருந்தார் அவருடன் பேசும் போது அவர் விஜய்குமார் மீது வைத்திருந்த நம்பிக்கை தெரிந்தது.
இயக்குநர் தமிழ் எழுத்தாளர்களுக்கு தர வேண்டிய மரியாதையும், கௌரவத்தையும் அளித்தபோது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது
திரைப்படம் என்பது கலைகளின் கூட்டு முயற்சி. அதுபோன்ற தளத்தில் எழுத்தாளர்கள் பணியாற்றும்போது அது இன்னமும் மேம்படும். வேறு வகையிலான அடுக்குகளுடன் முன்னேற்றம் பெற்று மக்களிடம் சென்றடையும் என்ற நம்பிக்கை எனக்கு உறுதியாக இருக்கிறது. அந்த வகையில் இந்த எலக்சன் திரைப்படம் ஒரு யதார்த்தவாத திரைப்படமாக… அரசியலை தீவிரமாக பேசக்கூடிய.. அதனை எளிய மனிதரின் பார்வையிலிருந்து பேசக்கூடிய படைப்பாக உருவாகி இருக்கிறது. இது நிச்சயமாக வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். மக்களும், ரசிகர்களும், ஊடகமும் இதனை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ” என்றார்.
ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜு பேசுகையில், ” இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும் ஆம்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. நான் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவன். படப்பிடிப்பு நடைபெற்ற தளங்கள் அனைத்தும் எனக்கு பரிச்சயமானவை. அதனால் படபிடிப்பு நடத்துவது எளிதாக இருந்தது.
வேலூர் என்றாலே வறட்சியான பகுதி தான் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கும் அழகான கிராமங்கள் இருக்கிறது. அதனை இந்த திரைப்படத்தில் பதிவு செய்திருக்கிறோம். சினிமாவில் இதுவரை பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் உள்ள பசுமையான கிராமங்களை காண்பித்திருக்கிறார்கள். இதுவரை தமிழ் சினிமாவில் இடம் பெறாத அழகான கிராமங்கள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது.
படபிடிப்பு தொடர்ந்து 65 நாட்கள் நடைபெற்றாலும், இயக்குநரின் தெளிவான திட்டமிடலால் படப்பிடிப்பு எந்தவித சிரமமும் இல்லாமல் நடைபெற்றது. நாயகனான விஜய்குமார் அனைவரிடமும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பார். திடீரென சீரியஸாகி கதைக்குள் சென்று விடுவார். படப்பிடிப்பு தளத்தில் ஒத்துழைப்பு வழங்கிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எலக்சன் திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் புதிதாகவே இருக்கிறது. கதைக்களம்… அதில் நடித்த மக்கள்… பேசும் வசனங்கள்… அரசியல்.. அனைவருக்கும் அரசியல் தெரியும். ஆனால் நிறைய மக்களுக்கு தெரிவதில்லை. அதைப் பற்றி அவர்கள் கவலையும் படுவதில்லை. அரசியலுக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல் நடந்து கொள்வார்கள். ஆனால் நாம் உடுத்தும் உடை.. உண்ணும் உணவு.. என பல விசயங்களில் அரசியல் இருக்கிறது. அதனால் அனைவரும் அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு இந்த படத்தை அனைவரும் திரையரங்கிற்கு வருகை தந்து பார்க்க வேண்டும்.” என்றார்.
நடிகர் பாவெல் நவகீதன் பேசுகையில், ” எலக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற ஆம்பூர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எங்கள் மீது காட்டிய நிபந்தனையற்ற அன்பு மறக்க இயலாது.
இந்த வாய்ப்பை வழங்கிய படத்தொகுப்பாளர் பிரேம்குமார் மற்றும் இயக்குநர் தமிழுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் வெளியான பிறகு பட தொகுப்பாளர் பிரேம்குமாருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன்.
படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியை படமாக்கும் போது இயக்குநரும், வசனகர்த்தாவும் சில வசனங்களிலும்… காட்சி அமைப்பிலும்… மாற்றம் செய்தனர். அந்தக் காட்சியில் நான் -நாயகன் விஜய்குமார் -நாயகி ப்ரீத்தி அஸ்ராணி ஆகியோர் இணைந்து நடிக்கிறோம். எனக்கும், நாயகனுக்கும் தமிழ் நன்றாக தெரியும். அதனால் மாற்றப்பட்ட காட்சியின் தன்மையை உணர்ந்து பேசுகிறோம். நடிக்கிறோம். ஆனால் தமிழ் மொழியில் அவ்வளவு சரளமாக பேசாத நடிகை ப்ரீத்தி அஸ்ராணி எங்களுக்கு நிகராக எங்களை விட சிறப்பாக அந்த காட்சியில் நடித்தார். அப்போதுதான் அவரின் திறமையைக் கண்டு வியந்தேன். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.
படத்தில் எனக்கும், நாயகன் விஜய் குமாருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட்டாகி இருக்கிறது. அவர் மிகச்சிறந்த நல்ல மனிதர்.
எலக்சன் திரைப்படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்றால்..? இது ஒரு அரசியல் படம். நூற்றுக்கு எழுபது சதவீத பேருக்குத் தான் அரசியல் தெரிந்திருக்கும். மீதமுள்ளவர்கள் ஒதுங்கி விடுவார்கள். எழுத்தாளர் இமயம் மேடையில் பேசும் போது, ” இங்கு மக்கள் அணியும் உடையிலும்.. உண்ணும் உணவிலும்… இறந்துவிட்டால் புதைக்க வேண்டுமா ..? அல்லது எரிக்க வேண்டுமா..? என்ற விசயம் வரை அனைத்திலும் அரசியல் இருக்கிறது. ‘ என குறிப்பிட்டிருக்கிறார். எனவே நம்மை சுற்றி எந்த மாதிரியான அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதைப் பற்றிய குறைந்தபட்ச புரிதலை இந்த எலக்சன் திரைப்படம் உங்களுக்கு உணர்த்தும். எனவே இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்கிற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
நடிகை ரிச்சா ஜோஷி பேசுகையில்,” இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறேன். விரைவில் தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் பேசுகிறேன். இந்திய சினிமாவிற்கு பல நல்ல படைப்புகளை வழங்கிய தமிழ் திரையுலகத்தில் நடிகையாக அறிமுகமாகி, இந்த மேடையில் நிற்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பினை வழங்கிய தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் மொழி உச்சரிப்பில் உதவிய சக கலைஞரான விஜய் குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.
நடிகர் திலீபன் பேசுகையில், ” படத்தின் திரைக்கதையை வாசிக்குமாறு இயக்குநர் தமிழ் கேட்டுக்கொண்டார். படித்தவுடன் வியந்தேன். உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. இந்த விசயத்தில் கட்சி தலைமை சொன்னால் கூட கேட்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவர்களுக்குள் ஒரு உடன்பாடு… பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற உணர்வு… போன்ற பயங்கரமான அரசியல் பின்னணி உண்டு. இதனை அடிப்படையாக வைத்து வாழ்வியலை படமாக எடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் உண்டு அனைவரும் பேசப்படுவார்கள்.
நடிகர் விஜய்குமார் உடன் பணியாற்றுவது எளிதானது அவர் இயக்குநராகவும் இருப்பதால்.. இந்தக் காட்சியில் இதை செய்தால் போதும் என்று எப்போதும் குறிப்புகளையும், ஆலோசனைகளையும் வழங்கிக் கொண்டே இருப்பார். அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அதை அவரிடமே தெரிவித்திருக்கிறேன். ” என்றார்.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசுகையில், ” இப்படத்தின் தயாரிப்பாளர் நண்பர் ஆதித்யா. ‘ஃபைட் கிளப்’ எனும் படத்தின் பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்னரே எனக்கு அறிமுகமானார். அவர் யார்? எப்படி? என்று எனக்குத் தெரியாது. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விஜய் குமாரை வைத்து படம் தயாரிக்கிறேன் என்றார்.
அதன் பிறகு அவரைப் பற்றி நான் தெரிந்து கொண்டேன். அமெரிக்காவில் உள்ள பிரபலமான சர்வதேச கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் பணியாற்றி வருகிறார். அவர் இதுவரை இரண்டு திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். இந்த இரண்டு திரைப்படத்திற்கும் அவர் உழைத்த பணத்திலிருந்து தயாரிப்பு செலவுகளை செய்திருக்கிறார்.
திரையுலகைப் பொறுத்தவரை உச்ச நட்சத்திரங்களை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை தவிர்த்து ஏனைய தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்களது உழைப்பில் ஈட்டிய சொந்த பணத்தை முதலீடு செய்து தான் படத்தை தயாரிக்கிறார்கள்.
இவர் தற்போது உள்ளாட்சி தேர்தலை மையப்படுத்தி எலக்சன் என்ற திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். எனக்குள், ‘வெளிநாட்டில் பணியாற்றி வரும் ஒருவர் எப்படி இந்த கதையை உள்வாங்கி தயாரித்திருக்க முடியும்’ என்ற கேள்வி எழுந்தது. அதன் பிறகு தான் அவர் இந்த பட குழுவுடன் குறிப்பாக இயக்குநருடனும், நாயகன் விஜயகுமாருடனும் எப்படி உணர்வு பூர்வமாக இணைந்திருக்கிறார் என்பது தெரிய வந்தது.
படத்தை தொடங்கும் போது என்னை சந்தித்து ஒரு முறை பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போதே படத்தை நிறைவு செய்துவிட்டு உங்களை தொடர்பு கொள்கிறேன் என்றார். அவர் சொன்னபடி படத்தின் பணிகளை நிறைவு செய்த பிறகு மீண்டும் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார்.
அவரிடம் பொதுவாக திரையுலக அனுபவம் எப்படி இருந்தது? என கேட்டேன். இந்த படத்தை நான் தயாரித்து விட்டேன். ஆனால் பட தயாரிப்பின் போது.. படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொருவருடைய கடின உழைப்பை நேரில் பார்த்தேன். நான் என்னுடைய பணத்தை மட்டும் தான் முதலீடு செய்து இருக்கிறேன் ஆனால் தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் தங்களுடைய ஆத்மார்த்தமான உழைப்பை அர்ப்பணிப்புடன் வழங்குகிறார்கள். ஒரு தயாரிப்பாளராக இந்த படத்தை தயாரித்ததற்காக நான் பெருமிதம் அடைகிறேன். இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றால் இதன் மூலம் நான்கு தொழில்நுட்பக் கலைஞர்களும், நான்கு நடிகர்களும் வெற்றி பெறுவார்களே.. அவருடைய வாழ்க்கை சிறப்பாக இருக்குமே.. இதைவிட எனக்கு வேறு என்ன மகிழ்ச்சி என்றார். இதைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வடிந்தது.
பொதுவாக சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர் பதவிகளில் உள்ளவர்களிடத்தில் மனித நேயத்தை பார்க்க இயலாது என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தயாரிப்பாளர் ஆதித்யா திரைப்படத்தை ஒரு வணிகப் பொருளாக பார்க்காமல் உணர்வுபூர்வமான படைப்பாக பார்த்திருக்கிறார். அதிலிருந்து அவருடைய நட்பு மேலும் உறுதியானது.
அவர் தயாரித்த ‘ஃபைட் கிளப்’ படத்திற்கு எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. தற்போது தயாரித்திருக்கும் ‘எலக்சன்’ திரைப்படத்திற்கும் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. இனி மேலும் எங்கள் இருவரிடத்திலும் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளப் போவதில்லை.
படத்தையும் படத்தின் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் அளவு கடந்து நேசிக்கும் ஒரு தயாரிப்பாளரை நான் வியந்து பார்க்கிறேன். இவரைப் போன்ற தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெற வேண்டும். இதுபோன்ற திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறும்போது இவரைப் போன்ற ஏராளமான புதிய தயாரிப்பாளர்கள் தமிழ் திரை உலகத்திற்கு வருகை தருவார்கள். புதிய தொழில்நுட்ப கலைஞர்களும் நடிகர்களும் அறிமுகமாவார்கள். தமிழ் திரையுலகம் மேலும் வலிமை பெறும்.
இந்த திரைப்படத்தை பார்த்தேன் திரைப்படத்தில் இடம் பெறும் வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. உள்ளாட்சி தேர்தலை பற்றிய படமாக இருந்தாலும் அதில் நுட்பமாக சில விசயங்களை இயக்குநர் இணைத்திருக்கிறார்.
ஒரு அரசியல் கட்சியில் தொண்டராக இருக்கும் ஒருவரின் மகன் அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும்..? இந்த அடிப்படையில் அமைந்திருக்கும் இந்தக் களம் புதிது. இதுவரை தமிழ் திரையில் சொல்லப்படாதது.
ஒரு அரசியல் கட்சியின் தலைவரின் மகன் அரசியல்வாதியாவது பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஒரு விளிம்பு நிலை மக்களின் பார்வையில் இருந்து இப்படி யோசித்தால் தான் இது போன்ற புதிய களம் உருவாகும்.
நடிகர் விஜய் குமார் அண்மையில் ஒரு இயக்குநருடன் கதை விவாதத்தில் தொடர்ச்சியாக ஆறரை மணி நேரம் விவாதித்ததை கண்டு வியந்திருக்கிறேன். அவர் சினிமாவில் மேலும் மேலும் உயர்வதற்கான தகுதியாக இதனை நான் பார்க்கிறேன்.
படத்தில் இதுவரை தமிழ் திரையில் சொல்லப்படாத நாயகனின் தந்தை கதாபாத்திரத்தை உயிர்ப்புள்ள கதாபாத்திரமாக திரையில் செதுக்கிய இயக்குநரை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.
வழக்கமான திரைப்படங்களிலிருந்து விலகி நேர்த்தியாகவும், கடுமையாகவும் உழைத்து ‘எலக்சன்’ திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த திரைப்படம் மே 17ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. நிச்சயம் ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.” என்றார்.
நடிகை ப்ரீத்தி அஸ்ராணி பேசுகையில், ” நான் எப்போது சென்னைக்கு வந்தாலும் மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் உணர்கிறேன். ‘அயோத்தி’ திரைப்படத்திற்கு பிறகு நான் ‘எலக்சன்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்திலும் அழுத்தமான பெண்மணி வேடத்தில் நடித்திருக்கிறேன்.
‘எலக்சன்’ படத்தின் முன்னோட்டத்தை பார்த்திருப்பீர்கள். ரசித்திருப்பீர்கள். உண்மையில் இந்த படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக இயக்குநருக்கும், நடிகர் விஜய் குமாருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பாவெல் நவகீதன் பேசுகையில் குறிப்பிட்ட காட்சியில் நடிக்கும் போது… உடன் நடிக்கும் நடிகர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை பார்த்து, ரசித்து கொண்டு, அதனை அப்படியே உள்வாங்கி நடித்து விட்டேன். இதை நீங்கள் குறிப்பிட்டு பேசியதால் என்னுடைய தன்னம்பிக்கை இன்னும் அதிகரித்திருக்கிறது. இதற்காக மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆம்பூர் பகுதியில் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் ரிச்சா ஜோஷியை நான் வரவேற்கிறேன். நான் ‘அயோத்தி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் அறிமுகமாகும்போது எனக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அது உங்களுக்கும் கிடைக்கும் என வாழ்த்துகிறேன்.
எலக்சன் திரைப்படம் மே 17ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது அனைவரும் வருகை தந்து படத்தை பார்த்து ரசித்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
படத்தின் நாயகனான விஜய்குமார் பேசுகையில், ” உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் திரைப்படம் இது. களம் தேர்தலாக இருந்தாலும் கருத்துக்களை வலிந்து திணிக்காமல், அரசியலை அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரத்தை மையப்படுத்தி… உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒரு ஃபேமிலி டிராமாவாகத்தான் இந்த படம் தயாராகி இருக்கிறது. படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் படம் எந்த பிரச்சாரத்தையும் செய்யவில்லை. இந்தப் படத்தின் முதுகெலும்பு… இந்த கதையின் முதுகெலும்பு பற்றி சொல்ல வேண்டும் என்றால்.. நடிகர் ஜார்ஜ் மரியம் ஏற்று நடித்திருக்கும் நல்ல சிவம் என்ற ஒரு அரசியல் கட்சி தொண்டரை தான் சொல்ல வேண்டும். கட்சி தொண்டன் என்றால் தன்னலம் பார்க்காமல் மக்களுக்காகவும், கட்சிக்காகவும் கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு கேரக்டர். நம்மில் பெரும்பாலானவர்கள் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை நம் குடும்பத்திலேயே பார்த்திருப்போம். அப்பா… பெரியப்பா… சித்தப்பா.. மாமா.. என யாரேனும் ஒருவரை பார்த்திருப்போம்.
‘அமாவாசை’ போன்றவர்கள் இருக்கும் அரசியலில் இப்படி கொள்கைக்காகவும், கட்சிக்காகவும் உழைக்கிற நல்லவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி ஒரு கதாபாத்திரம் பற்றிய கதை இது.
இப்படி இருப்பவர்களை ஏமாளியாகவும், பிழைக்கத் தெரியாதவர்களாகவும் இந்த உலகம் பேசும் போது.. அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும், அவருடைய மகனுக்கும் ஒரு நியாயமான கோபம் இருக்கும். அப்படி ஒரு மகன் கதாபாத்திரத்தில் தான் நான் நடித்திருக்கிறேன்.
இந்தப் படத்தில் இயக்குநர் தமிழுடன் இணைந்து பணியாற்றியது மிகுந்த மனநிறைவை அளித்தது.
தயாரிப்பாளர் ஆதித்யாவுடன் இது இரண்டாவது படம். அவருடனும் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி தான். தொடர்ந்து தரமான படங்களை வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம்.
படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது முந்தைய திரைப்படமான ‘ஃபைட் கிளப்’ திரைப்படத்தை வெளியிட்ட என்னுடைய நண்பர் லோகேஷ் கனகராஜுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.
இயக்குநர் தமிழ் பேசுகையில், ” புகழ், பணம், போதை, பெண்… இதற்காக நான் சினிமாவிற்கு வரவில்லை. என்னை அழ வைத்ததையும், என்னை சிந்திக்க வைத்ததையும் சொல்வதற்காகவே சினிமாவிற்கு வந்தேன்.
எனது இயக்கத்தில் வெளியான ‘சேத்து மான்’ படத்திற்காக ஆதரவை அள்ளி வழங்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியையும், அன்பையும் பகிர்ந்து கொள்கிறேன்.
சேத்துமான் திரைப்படம் பார்வையாளர்களுடன் எளிதாக தொடர்பு கொண்டது. இந்தப் படம் அது போல் எளிதாக தொடர்பு கொள்ளுமா? கொள்ளாதா? என்ற அச்சத்தில் தான் இங்கு நான் நிற்கிறேன்.
இங்கு படத்தைப் பற்றி பேசியவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய கோணத்தில் பேசினார்கள். அதனால் படத்தைப் பற்றி நான் ஒரு விசயத்தை கூட சொல்லப் போவதில்லை. நீங்கள் படத்தை பாருங்கள். பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.
ஒரு படத்தை நிறைவு செய்த பின் ஒரு மாதம் வரை எதைப் பற்றியும் சிந்திக்காமல் இயல்பாக இருப்பேன். இதுதான் என்னுடைய வழக்கம். ஒரு மாதத்திற்கு பிறகு புதிய கதை… புதிய உலகம் … அவற்றில் நுழைந்து விடுவேன்.
சேத்து மான் படத்தை நிறைவு செய்துவிட்டு, ஒரு மாதம் கழித்து இப்படத்தில் திரைக்கதையை எழுதத் தொடங்கினேன். பல வெர்ஷன்கள் எழுதினேன். இந்த தருணத்தில் ‘சூரரை போற்று’ என்ற ஒரு திரைப்படம் வெளியானது. அதில் விஜய்குமார் வசனகர்த்தவாக பணியாற்றி இருந்தார். அப்போது சேத்துமான் படம் வெளியாகவில்லை. டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியிடுவது குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அந்தத் திரைப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் இயக்கியதால் .. அடுத்த படத்தை பெரிய நிறுவனம் ஒன்றின் தயாரிப்பில் தான் இயக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். இதற்காக சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடனும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனததுடனும் தொடர்பில் இருந்தேன்.
ஆனால் அவர்கள் கதையைக் கேட்கவில்லை. அப்போதுதான் ‘சூரரைப் போற்று’ வெளியானது. அரசியலைப் பற்றி நன்கு தெரிந்த.. என்னை விட நன்கு தெரிந்த ஒருவர்தான் இந்த படத்திற்கு தேவை என்பதில் உறுதியாக இருந்தேன். அப்போதுதான் நடிகர் விஜய்குமார் எனக்கு அறிமுகமாகி பழக்கமானார். அதன் பிறகு அவரிடம் இப்படத்தின் திரைக்கதையே கொடுத்தேன். இரண்டு நாள் கழித்து அழைப்பு விடுத்தார். அப்போது என்னை பற்றி கேட்டார். நான் சேத்து மான் என்ற படத்தில் இயக்கிவிட்டு அடுத்த படத்திற்காக இரண்டு பெரிய நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கிறேன் என்று விவரத்தை தெரிவித்தேன்.
அப்போது விஜய்குமார் நான் தற்போது ஃபைட் கிளப் என்ற படத்தில் நடித்திருக்கிறேன். அந்த தயாரிப்பாளரிடம் இந்த கதையை சொல்லி படமாக உருவாக்கலாமா? எனக் கேட்டார்.
அப்போது கொரோனா காலகட்டம் என்பதால் நாங்கள் இருவரும் நிறைய விவாதித்தோம். இரண்டு பெரிய நிறுவனங்களின் அழைப்பு வரும் என்று காத்திருந்தோம்.
அப்போது ஒரு நாள் போன் செய்து தயாரிப்பாளர் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வருகை தந்திருக்கிறார் அவரை சந்தித்து இந்த ‘எலக்சன்’ படத்தின் கதையை சொல்வோம். அவருக்கு பிடித்திருந்தால் தயாரிக்கட்டும். காலத்தை வீணடிக்க வேண்டாம் என சொன்னார்.
எனக்கு கதை சொல்லத் தெரியாது. அதனால்தான் படத்தின் திரைக்கதையை எழுதி தயாரிப்பாளரிடம் கொடுத்து விடுவேன்.
ஆனால் விஜய்குமார் இப்படத்தின் திரைக்கதையை முழுவதுமாக வாசித்து விட்டார். அவர் இயக்குநர் என்பதால் இப்படத்தின் கதையைப் பற்றி அந்த தயாரிப்பாளரிடம் நிறைய எடுத்து சொல்லி இருக்கிறார். இருந்தாலும் தயாரிப்பாளர் கதையை சொல்லுங்கள் என கேட்டுக்கொண்டார். விருப்பமில்லாமல் அவரிடம் ஒரு மணி நேரம் கதையை சொன்னேன். நிச்சயமாக அவரிடம் என்ன கதை சொன்னேன் என்று இன்றுவரை எனக்கு தெரியாது. ஆனால் தயாரிப்பாளர் ஆதித்யாவை விஜய் குமார் விளக்கமாக எடுத்துச் சொல்லி அவரை சம்மதிக்க வைத்து விட்டார். எனவே இந்தத் திரைப்படம் தயாராவதற்கும், நான் இந்த மேடையில் இயக்குநராக நிற்பதற்கும் முழு காரணம் விஜய்குமார் மட்டும்தான். இதனை நான் நேர்மையாகவும் உண்மையாகவும் இங்கு பதிவு செய்கிறேன்.
சேத்து மான் படத்தின் கதையை எந்த ஒரு தயாரிப்பாளரும் தயாரிக்க ஒப்புக்கொள்ள மாட்டார் ஆனால் பா ரஞ்சித் அடிப்படையில் இயக்குநர் என்பதால் அப்படத்தின் கதையை உணர்ந்து எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து படத்தை தயாரித்தார். அதற்காக இந்த தருணத்தில் ரஞ்சித்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கதையை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் விஜயகுமாரிடம் படத்தின் திரைக்கதையை கொடுக்கும்போது வசனத்தில் ‘ஸ்லாங்’ இல்லை. மேலும் வசனங்களில் அழுத்தம் வேண்டும் என்றும் விரும்பினேன். இதற்காக உதவியவர் தான் எழுத்தாளர் அழகிய பெரியவன். அவரை எழுத்தாளர் பெருமாள் முருகன் தான் அறிமுகப்படுத்தினார். அவர் படத்திற்கு வசனம் மட்டும் எழுதவில்லை படக்குழுவினருடன் இணைந்து ஆர்வமுடன் பயணித்து பல படப்பிடிப்பு தளங்களை அடையாளம் காட்டினார். படம் தணிக்கை செய்யப்பட்டபோது ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது கூட உடனடியாக அவர் விளக்கம் அளித்தார். அத்துடன் மட்டும் இல்லாமல் எழில் எனும் நல்ல மனிதர் ஒருவரையும் அவர் அடையாளம் காட்டினார். இவரும் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர் வழங்கிய ஒத்துழைப்பு மறக்க இயலாதது. இந்த படத்தின் மூலம் நான் சம்பாதித்தது இந்த ஒரு மனிதரை மட்டும்தான். மேலும் இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
விஜய் தேவரகொண்டா + ரவி கிரண் கோலா + ராஜு -ஷிரிஷ் இணையும் பான் இந்திய திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
‘ராஜா வாரு ராணி காரு’ படத்தை இயக்கிய இயக்குநர் ரவி கிரண் கோலா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் மூலம் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜுவுடன் மீண்டும் விஜய் தேவரகொண்டா இணைகிறார். எஸ் வி சி புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் 59ஆவது திரைப்படம் இது.
விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளான நேற்று இந்தப் படம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக போஸ்டரில் விஜய் தேவரகொண்டா கத்தியை கையில் வைத்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. அதிரடியாக படம் உருவாகிறது எனலாம். மேலும் போஸ்டரில் இடம்பெற்றிருக்கும் டயலாக் படம் மாஸாக இருக்கும் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.
இந்தத் திரைப்படம் கிராமிய பின்னணியில் மிக பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்படுவதாகவும், இது பான் இந்திய அளவிலான கவன ஈர்ப்பை கொண்டிருக்கும் என்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
விஜய் தேவரகொண்டா முழுக்க முழுக்க கிராமிய பின்னணியிலான கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை என்றும், இவர் திரையில் தோன்றுவதை பார்ப்பதற்கு அதிரடியாகவும், உற்சாகமாகவும் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ரவி கிரண் கோலா இதற்கு முன் ‘ராஜா வாரு ராணி காரு’ எனும் திரைப்படத்தின் மூலம் ஒரு திறமையான இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார். மேலும் அவர் இப்படத்தின் திரைக்கதைக்காக அயராது உழைத்து, நுட்பமாக செதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. தயாரிப்பாளர் தில் ராஜுவும் இந்த திரைப்படத்தை மிகவும் தரமான படைப்பாக உருவாக்க திட்டமிட்டுள்ளார். மேலும் இதனை பான் இந்திய அளவில் உருவாக்குகிறார்.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக விஜய் தேவரகொண்டா தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பதாக தெரிய வருகிறது. மேலும் அவரது திரையுலக பயணத்தில் இந்த திரைப்படம் மிக முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என அவர் நம்புகிறார்.
இந்த திரைப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
ரீல் குட் ஃபிலிம்ஸின் ‘எலக்சன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு!
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகரான விஜய்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீரா..’ எனத் தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
‘சேத்துமான்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுத மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் மேற்கொண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார்.
மே மாதம் 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘தீரா என் ஆசை என் ஓசைகள் நீ..’ என தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுத பின்னணி பாடகர் கபில் கபிலன் பாடியிருக்கிறார். மெலோடி பாடலாக தயாராகி இருக்கும் இந்தப் பாடல் திரையிசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்தப் பாடல் இணையத்தில் வெளியாகி அனைத்து ரசிகர்களின் பிளேலிஸ்டில் இடம் பெற்று சார்ட் பஸ்டர் ஹிட்டாகியிருக்கிறது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கும் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக VD14 என்று பெயரிடப்பட்டுள்ளது. படம் குறித்த அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு போர்வீரரின் சிலையின் பின்னணியில் “சபிக்கப்பட்ட நிலத்தின் புராணக்கதை” என்ற தலைப்புடன் கூடிய போஸ்டர் பெரும் ஆர்வத்தை தூண்டுகிறது. 1854-78 காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதையை இப்படம் விவரிக்கிறது.
பான் இந்தியன் திட்டம் 19 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மையான வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உணர்ச்சிப்பூர்வமான ஒரு சினிமாவாக, பிரம்மாண்டமான பான் இந்திய படைப்பாக இப்படம் உருவாகிறது. முன்னதாக விஜய் தேவரகொண்டாவை வைத்து, டியர் காம்ரேட், குஷி போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. விஜய் தேவரகொண்டா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணி ஹாட்ரிக் ஹிட்டடிக்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.. சூப்பர் ஹிட்டான டாக்ஸிவாலா படத்திற்கு பிறகு விஜய் மற்றும் ராகுல் இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
நாக சைதன்யா -சந்து மொண்டேட்டி- அல்லு அரவிந்த் – பன்னி வாஸ்- கீதா ஆர்ட்ஸ் ..கூட்டணியில் தயாராகும் ‘தண்டேல்’ படக்குழுவினர்- நாயகியான சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
நாக சைதன்யா- சாய் பல்லவி ஜோடி ‘லவ் ஸ்டோரி’ எனும் படத்தில் திரையில் தோன்றி ரசிகர்களை மயக்கியது. மேலும் இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் தயாராகும் ‘தண்டேல்’ திரைப்படத்தில் மீண்டும் நாக சைதன்யா- சாய் பல்லவி இணைந்திருப்பதால்.. அவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரி மற்றும் திரை தோன்றல் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருவரும் இணைந்து திரையில் தோன்றி ரசிகர்களை வசீகரிக்கவிருக்கிறார்கள். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் அல்லு அரவிந்த் வழங்கும் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் பன்னி வாஸ் தயாரிக்கிறார்.
இன்று சாய் பல்லவியின் பிறந்தநாள். இதற்காக படக்குழுவினர் நேற்று ஒரு அற்புதமான போஸ்டரை வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று அவர்கள் பிரத்யேகமான வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இந்த காணொளியின் தொடக்கத்தில் நடிகை சாய் பல்லவி இதற்கு முன் நடித்த திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் காண்பிக்கப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து ‘தண்டேல்’ படத்தில் அவர் ஏற்றிருக்கும் புஜ்ஜி தல்லி (சத்யா) எனும் கதாபாத்திரமாக அறிமுகப்படுத்தப்படுகிறார். இது ஒரு சிறந்த சிந்தனை.
சாய் பல்லவியின் திறமையான நடிப்பை நாம் அனைவரும் அறிவோம். இந்த வீடியோவில் அவரது அசலான முகமும், வேடிக்கையான நிகழ்வுகளும் காண்பிக்கப்படுகிறது. அதில் அவர் அழும் போது நம்மை அழ வைக்கிறார். அவர் சிரிக்கும்போது நம் முகத்தில் புன்னகையை வரவழைக்கிறார். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதுடன், அவர்களுடன் விளையாடும் தருணங்களும் காணப்படுவதால்.. சாய் பல்லவி அடிப்படையில் எவ்வளவு நல்ல மனிதர் என்பதையும் இது உணர்த்துகிறது. வீடியோவின் இறுதியில் நாக சைதன்யாவுக்கும், சாய் பல்லவிக்கும் இடையே நடக்கும் உரையாடலும் நிகழ்வுகளும் அழகான தருணங்கள்.
சாய் பல்லவியின் பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த வீடியோ அனைவரும் நினைப்பது போல் சீரியஸாக இல்லாமல்.. சிறந்த நடிகராக மட்டும் இல்லாமல்.. கனிவான மனிதராகவும் இருக்கும் புதிய சாய் பல்லவியை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. நிச்சயமாக சாய் பல்லவியின் மறுபக்கம் இந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
சாய் பல்லவியின் நடிப்பு இந்த படத்திற்கு பெரிய வரவேற்பினை பெற்று தரும். நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி ஜோடி மீண்டும் ஒருமுறை திரையில் மாயாஜாலத்தை ஏற்படுத்தும் என்று பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இயக்குநர் சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்குவதால் ‘தண்டேல்’ ஒரு அற்புதமான சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கப் போவது உறுதி. இந்தத் திரைப்படத்தில் காதலை தவிர வேறு பல சிறப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
ஷாம் தத்தின் ஒளிப்பதிவும்,’ ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஆத்மார்த்தமான பின்னணி இசையும் படத்திற்கு வலிமை சேர்த்துள்ளன. ‘ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் அற்புதமான பாடல்கள் அடங்கிய ஆல்பத்தை வழங்கியுள்ளார். இது தொடர்பான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். ஸ்ரீ நாகேந்திரன் தாங்கலா இப்படத்திற்கு களை இயக்குநராக பொறுப்பேற்றிருக்கிறார்.
நடிகர்கள் : நாக சைதன்யா, சாய் பல்லவி
தொழில்நுட்பக் குழு :
எழுத்து & இயக்கம் : சந்து மொண்டேட்டி வழங்குபவர் : அல்லு அரவிந்த் தயாரிப்பாளர் : பன்னி வாஸ் தயாரிப்பு நிறுவனம் : கீதா ஆர்ட்ஸ் இசை : ‘ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் ஒளிப்பதிவு : ஷாம் தத் கலை இயக்கம் :ஸ்ரீ நாகேந்திரன் தாங்கலா மக்கள் தொடர்பு : யுவராஜ் மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ
கவின் நடிப்பில் இளன் இயக்கத்தில் “ஸ்டார்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். “பியார் ப்ரேமா காதல்” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இளன் இரண்டாவது திரைப்படமாக “ஸ்டார்” திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.
திரைப்பட உலகில் நடிகராக சாதிக்க வேண்டும் என நடிப்பின் உள்ள மோகத்தால் தனது சொந்த ஊரைவிட்டு ஓடி வந்த லால், அதில் திரைப்பட உலகில் சாதிக்க முடியாமல் புகைப்பட கலைஞராக ஆகிறார்.கவின் தந்தை லால் சிறு வயது முதலே தன் மகனுக்கு நடிப்பின் மீது அதிகளவில் ஆர்வத்தை ஆர்வத்தை ஊட்டி வளர்த்து வருகிறார். கவினும் நடிப்பில் ஆர்வம் கொண்டு தன் சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது தீராக்காதல் கொண்ட அதில் தீவிர கவனம் செலுத்துகிறார்.அதன் பின்னர் கதாநாயகன் கவின் எப்படியாவது திரைப்படத் துறையில் நடிகனாக வேண்டும் என பெரும் முயற்சிகள் எடுத்து வருகிறார்..
அது ஒரு புறம் இருக்க கல்லுரிபில் படிக்கும் கொண்டிருக்கும் போது தனக்கு படிப்பு இரண்டாம் பட்சம்தான் வாழ்ந்தவரும் கவின ப்ரீத்தி முகுந்தனை காதலித்து வருகிறார்.நடிப்பு பயிற்சி கற்றுக் கொள்வதற்காக மும்பையில் உள்ள திரைப்படக் நடிப்பு பயிற்சி பட்டறையில் சென்று சேர விரும்பி அங்கு சென்று தோல்வியை சந்திக்கிறார்.இந்நிலையில் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய விபத்தில் சிக்கும் கதாநாயகன் கவினுக்கு அதிக அளவில் முகத்தில் காயங்கள் ஏற்பட முகத்தில் தழும்பாக மாறுகிறது.அதன் பிறகு கதாநாயகன் கவின் நடிகனாகும் கனவு தகர்ந்து போகிறது.
தான் உயிருக்கு உயிராக காதலித்த காதலி ப்ரீத்தி முகுந்தனை கதாநாயகன் கவினை விட்டு புரிந்து சென்று விடுகிறார்.நண்பர்கள் மற்றும் குடும்பம் மட்டுமே உடன் இருக்க அதன் பின்னர் கதாநாயகன் கவின் உடன் கல்லூரியில் படித்த கதாநாயகி அதிதி போஹங்கர் கதாநாயகன் கவிணை காதலித்து ஆரம்பிக்கிறார்.இறுதியில் கதாநாயகன் கவின் நடிகராக ஆனாரா? நடிகனாக வில்லையா? மீண்டும் காதலில் வெற்றி பெற்றாரா? காதலில் வெற்றி பெறவில்லையா? என்பதுதான் இந்த ஸ்டார் திரைப்படத்தின் மீதிக்கதை.
கவின், முதல் பாதியில் சாக்லேட் பாயாகவும், லவ்வபல் பாயாகவும் இரண்டாம் பாதியில் சாதிக்க துடிக்கும் இளைஞராகவும் நடித்து மனதில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் பதிந்து இருக்கிறார்.
கதாநாயகியாக நடித்து இருக்கும் பிரீத்தி முகுந்தன் கதாநாயகன் கவினின் காதலியாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.மற்றொரு கதாநாயகியாக வரும் அதிதி போஹங்கர், கவினின் முயற்சிக்கு உறுதுணையாக வந்து ரசிகர்கள் மனதில் நிற்கிறார்.
கவின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லால், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நடிப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசம், தன் மகனை நினைத்து வருந்துவது, மற்றும் கண்டிப்பது என்று நடிப்பில் பளிச்சிடுகிறார்.
ஒளிப்பதிவாளர் K.எழில் அரசு ஒளிப்பதிவு மூலம் 1980 கால கட்டத்திற்கு ஏற்றாற்போல் அழகாக திரைப்படம் ஆக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.
இயக்குனர் இளன் கதைக்களத்தை காதல் ஆக்சன் சென்டிமென்ட் என அனைத்து தரப்பையும் கவரும் விதத்தில் இருக்கிறார்.
கிளைமாக்ஸ்சில் அவர் வைத்திருக்கும் திருப்பம் சிறு குழப்பத்தை ஏற்படுத்தினாலும் அரங்கை விட்டு வெளி வரும்போது அது ரசிகர்களிடையே பேசும் பொருளாக மாறி பட்டிமன்றமாக கூட மாறி விடுகிறது.
ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’
பல ஆண்டுகளாக திரையுலகில் தொடர்ந்து பயணித்து வரும் நிலையிலும் இதுவரை இணைந்து பணிபுரியாத இசையமைப்பாளர் டி இமானும் பிரபல பாடகர் மனோவும் முதல் முறையாக கைகோர்த்துள்ளனர். விரைவில் வெளியாக உள்ள ‘லெவன்’ திரைப்படத்திற்காக இமான் இசையில் மனோ பாடியுள்ளார்.
உணர்ச்சிப் பூர்வமான இந்த பாடல் குறித்து பேசிய மனோ, “இமான் இசையை தொடர்ந்து ரசித்து வருகிறேன். அவர் இசையமைத்துள்ள பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக பாடுவது மிக்க மகிழ்ச்சி. உயிரோட்டமிக்க இந்த பாடல் பெரிதும் வரவேற்கப்படும் என்று நம்புகிறேன்,” என்றார்.
இது குறித்து பேசிய இசையமைப்பாளர் டி இமான், “மனோ அவர்களுடன் இணைந்து பணியாற்றவில்லை என்ற ஏக்கம் பல காலமாக இருந்தது, இன்று அது பூர்த்தியாகி உள்ளது அவரது குரலுக்கு மிகவும் உகந்த பாடலை உணர்ச்சிப்பூர்வமாக அவர் பாடியுள்ளார்,” என்று தெரிவித்தார்.
‘லெவன்’ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், “திரைப்படத்தின் முக்கியமான கட்டத்தில் இந்த பாடல் இடம்பெறுகிறது. இமான் இசையில் மனோ அவர்கள் முதல் முறையாக பாடியது ‘லெவன்’ திரைப்படத்திற்காக என்பது மிகுந்த பெருமை,” என்று கூறினார். இப்பாடலின் வரிகளை கபிலன் எழுதியுள்ளார்.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லரான ‘லெவன்’ திரைப்படத்தை தங்களது மூன்றாவது திரைப்படமாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர்.
இயக்குநர் சுந்தர் சி இடம் ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் ‘ஆக்ஷன்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்த புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக உள்ள இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார். ‘சரபம்’, ‘சிவப்பு’ மற்றும் ‘பிரம்மன்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சமீபத்தில் வெளியாகி பெரிதும் பாராட்டப்பட்ட வெப் சீரிஸான ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’யிலும் நடித்துள்ள இவர், இயக்குநர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ உள்ளிட்ட பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ‘விருமாண்டி’ புகழ் அபிராமி, ஆடுகளம் நரேன், ‘வத்திக்குச்சி’ புகழ் திலீபன், ‘மெட்ராஸ்’ புகழ் ரித்விகா, அர்ஜை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கான இசையை டி. இமான் அமைக்க, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவமுள்ள கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். படத்தொகுப்புக்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் என்.பி. பொறுப்பேற்றுள்ளார்.
‘லெவன்’ திரைப்படம் குறித்த மேலும் தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், “ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக ‘லெவன்’ அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.
ஏ ஆர் என்டர்டைன்மென்ட் பேனரில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் திரைப்படமான ‘லெவன்’ படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
Shark 9 pictures சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.
நடிகர் விமல் மற்றும் கருணாஸ் கதாபாத்திரங்களின் பின்னணியில் ஒரு காரும் இடம்பெற்றிருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பார்த்தவுடனே உணர்வுப் பூர்வமான கதைக்களத்தில் அற்புதமான அனுபவம் தரும் திரைப்படமாக இருக்குமென்பதை உறுதி செய்வதாக இருந்தது. மிக வித்தியாசமானதாக அமைந்துள்ள ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது.
இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும், மார்ச்சுவரி வேன் ஓட்டும் நாயகன் விமல், தனது அவசரப் பணத்தேவைக்காக, திருநெல்வேலி வரை ஒரு முக்கியமானவரின் உடலை எடுத்துச் செல்கிறார். சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு உடலை எடுத்துச் செல்லும் பயணம் தான் இந்த படத்தின் மையம். அந்தப் பயணத்தில் அவர் சந்திக்கும் மனிதர்கள், அவருக்கு ஏற்படும் அனுபவங்கள் மற்றும் தடங்கல்களை தாண்டி அவர் எப்படிச் சென்றடைகிறார் என்பது தான் இப்படத்தின் கதை.
தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்சியல் அம்சங்களில் இருந்து மாறுபட்டு ஒரு வித்தியாசமான களத்தில், மனதில் புன்னகை வர வைக்கும், வாழ்க்கை அனுபவங்களுடன், அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா.
சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் பயணம் படத்தின் மையம் என்பதால், படம் தமிழ்நாடு முழுக்க பட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மற்றும் சென்னையில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது.
இதுவரையிலான திரைப்பயணத்தில் தான் ஏற்றிராத வித்தியாசமான பாத்திரத்தில் நாயகனாக விமல் நடித்துள்ளார். கருணாஸ் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
படத்தின் முழு படப்படிப்பும் முடிந்த நிலையில், தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. படத்தின் டீசர், டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
தொழில்நுட்ப வல்லுநர்கள்
இயக்குநர்: மைக்கேல் K ராஜா தயாரிப்பாளர்: சிவா கிலாரி (Shark 9 pictures) இசையமைப்பாளர்: N.R.ரகுநந்தன் ஒளிப்பதிவாளர்: டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் தொகுப்பாளர்: M.தியாகராஜன் கலை இயக்குநர்: சுரேந்தர் ஸ்டண்ட் டைரக்டர்: மெட்ரோ மகேஷ் நடன மாஸ்டர்: ரிச்சி ரிச்சர்ட்சன் தயாரிப்பு ஒருங்கிணைப்பு : ராகேஷ் ராகவன் நிர்வாக தயாரிப்பாளர்: வெங்கி மகி மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது !!
அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘பைசன் காளமாடன்’ திரைப்படம் இனிதே துவங்கியது !!
அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தங்களின் முதல் திரைப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இந்நிறுவனங்கள் பல புதிய திரைப்படங்களை இணைந்து தயாரிக்கவுள்ளனர். முன்னணி நட்சத்திர இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் முதல் படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மே 6ஆம் தேதி தொடங்குகிறது. பரியேறும் பெருமாள் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்திற்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் தயாரிப்பாளர் பா ரஞ்சித்துடன் இணையும் படம் இது என்பது குறிப்பிடதக்கது. அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து, அமைதிக்கான பாதையைத் தேடிய, ஒரு போர்வீரனின் கதையை, நம் கண்களுக்கு விருந்தாக கொண்டுவருகிறது.
இப்படத்தில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் மற்றும் அருவி மதன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.
இசையமைப்பாளர் நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கும் இப்படத்திற்கு, எழில் அரசு K ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டராக சக்திகுமார், மூத்த கலை இயக்குநர் குமார் கங்கப்பன் கலை இயக்கத்தையும், ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளராக ஏகன் ஏகாம்பரம் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் வழங்கும், “பைசன் காளமாடன்”, அற்புதமான படைப்பாளியான மாரி செல்வராஜின் இயக்கத்தில், மனித ஆத்மாவின் வெற்றி வேட்கையைப் பேசும் கலைப்படைப்பாக, மிக உன்னதமான அனுபவத்தை வழங்கவுள்ளது.