Breaking
August 11, 2026

Cinema

சரத்குமார் – சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் ‘கொம்பு சீவி’ படத்தின் இசை வெளியீட்டு விழா

‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், ‘இளைய கேப்டன்’ சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் ‘கொம்பு சீவி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொம்பு சீவி’ திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் ,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கிராமிய பின்னணியிலான ஆக்ஷன் வித் காமெடி எண்டர்டெயினராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா தயாரித்திருக்கிறார்.

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், எல். கே. சுதீஷ், விஜய பிரபாகரன், இயக்குநர்கள் எஸ். ஏ. சந்திரசேகரன், எம். ராஜேஷ், மித்ரன் ஆர். ஜவகர், நடிகர் ரியோ, நாயகர்கள் சரத்குமார் – சண்முக பாண்டியன் விஜயகாந்த், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், கலை இயக்குநர் சரவணன் அபிராமன், படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், நடிகர் கல்கி ராஜா, தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா, இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசுகையில், ”கொம்பு சீவி படத்தின் போஸ்டரை பார்க்கும்போது எனர்ஜியாக இருக்கிறது. கொம்பு சீவி என கிராமப்புறத்தில் காளையை குறிப்பிடுவார்கள். இதில் யார் கொம்பு சீவி என தெரியவில்லை. இரண்டு பேரும் அந்த அளவிற்கு இருக்கிறார்கள். கேப்டன் விஜயகாந்த் கண்களில் ஒரு நெருப்பு இருக்கும், ஒரு வேகம் இருக்கும். அந்த நெருப்பு கலந்த பார்வை சண்முக பாண்டியனிடமும் இருக்கிறது. ‘உனக்கு நான் சளைத்தவன் இல்லடா..!’  என சரத்குமாரும் அதில் ஆக்ரோஷமாக இருக்கிறார்.‌ அவரது கெட்டப் நன்றாக இருக்கிறது.  ‘வயதானாலும் நான் கொம்பு சீவின காளை டா..!’ என்பது போல் இருக்கிறது அவருடைய தோற்றம். அந்த வகையில் இந்த போஸ்டரே படத்தின் வீரத்தை காட்டுகிறது.

இயக்குநர் பொன்ராமிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நகைச்சுவையை விட வேகம் – ஆக்ஷன் அதிகம் இருக்கும் என நம்புகிறேன். ஏனெனில் இன்றைய தலைமுறையினர் இதைத்தான் ரசிக்கிறார்கள் என தெரிந்து கொண்டு இப்படி ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய ஒவ்வொரு படமும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். ஏனென்றால் பொன்ராம் என்னுடைய பிள்ளைகளில் ஒருவர்.

இயக்குநர் ஒரு இளைஞர், ஹீரோ ஒரு இளைஞர், சரத்குமார் ஒரு இளைஞர், இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா ஒரு இளைஞர். இப்படி இளைஞர்கள் புதிய வேகத்துடன் இணைந்திருக்கிறார்கள்.

உலகத்திற்கே உரிய ஒரு சரித்திரம் இருக்கிறது. மாற்றம் என்பது மட்டுமே மாறாதது. அது எல்லாத் துறையிலும் உண்டு. சமூகம்- அரசியல்- திரைத்துறை- என எல்லாத் துறையிலும் இது உண்டு. எனக்குத் தெரிந்து திரையுலகில் ஒரு காலத்தில் எம் கே தியாகராஜ பாகவதர்-பி யு சின்னப்பா, அதற்குப் பிறகு எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல் அதற்குப் பிறகு இன்றைய சூப்பர் ஸ்டார்கள் என மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை யாராலும் மாற்ற முடியாது. இது காலத்தின் கட்டாயம். ஆகவே மாற்றத்திற்குரிய இளைஞர்கள் வெற்றி பெற வேண்டும். ஏனெனில் இந்த இளைஞர்களும், தமிழகத்தில் உள்ள மக்களும் ஒரு மாற்றத்தை விரும்பி கொண்டிருக்கிறார்கள். அந்த மாற்றம் இந்த திரைப்படத்திலும் நிகழ வேண்டும், வாழ்த்தி விடைபெறுகிறேன், நன்றி,” என்றார்.

நடிகர் ரியோ பேசுகையில், ”கொம்பு சீவி படத்திற்கு வரவேற்பு வழங்க உள்ள அனைவருக்கும் நன்றி. சிவகார்த்திகேயனை வைத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ என மூன்று படங்களை இயக்கிய ஒரே இயக்குநர் பொன்ராம். மூன்று திரைப்படங்களையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் குடும்பம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்த்து ரசிப்பார்கள். தொலைக்காட்சி பார்வையாளர்களின் ரேட்டிங் கணக்குப்படி தமிழில் முதன்மையான இடத்தை பிடித்திருக்கும் திரைப்படம் சீம ராஜா. இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் ‘பிராப்பரான டெலிவிஷன் மூவி’ என்றால் இயக்குநர் பொன் ராமிற்கு தான் அதில் முதலிடம். நான் அவருடைய இயக்கத்திற்கு மிகப்பெரிய ரசிகன். நிறைய சிரித்து ரசிக்க கூடிய படங்களை உருவாக்கக்கூடிய இயக்குநர் அவர். அவருடைய இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடித்திருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது காமெடியும், ஆக்ஷனும் அதிகம் இருக்கிறது. இது படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொன் ராமின் இயக்கத்தில் எங்கள் தலைவர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகி இருக்கும் படம் இது. கிராமிய பின்னணியிலான படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ஸ்பெஷலாக இருக்கும்.  உதாரணத்திற்கு ‘பருத்திவீரன்’, சமீபத்தில் வெளியான ‘ விருமன்’ என பல படங்களை குறிப்பிடலாம்.  இது போன்ற படங்களுக்கு அவருடைய இசை மண்ணின் இயற்கையான மணத்தையும் மண்ணின் ஆழத்தையும் வெளிப்படுத்தும்.

கேப்டனின் மனசு அவருடைய  வாரிசுகளுக்கும் இருக்கும் என்பதை விஜய பிரபாகரன் நிரூபித்திருக்கிறார். அண்மையில் அவர் பாலாவின் படத்தை பார்த்து பாராட்டியதே இதற்கு சான்று.‌

சரத்குமார் நடித்த ‘அரவிந்தன்’ படத்தின் மூலமாகத்தான் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார். அன்று பார்த்தது போலவே இன்றும் சரத்குமார் இளமையாக இருக்கிறார். அவரை ஓல்டு கெட்டப் போட்டு தான்  வயதானவராக காண்பிக்க வேண்டியது இருக்கிறது. யுவனின் இசை எப்படி இளமையாக இருக்கிறதோ, அதேபோல் சரத்குமாரும் இருக்கிறார். அவரும் இந்த படத்தில் இருப்பதால் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

பாடலாசிரியர் சினேகன் பேசுகையில், ”இந்த மேடை என் மனதிற்கு நெருக்கமான மேடை. நிகழ்வு தொடங்கிய தருணத்திலிருந்து இதுவரை பாசத்தின் குழுமமாகத்தான் இங்கு அனைவரும் வந்திருக்கிறார்கள். இதற்காக வாய்ப்பளித்த இயக்குநர் பொன்ராமிற்கு நன்றி.

இயக்குநர்கள் பொன்ராம் மற்றும் ராஜேஷ் ஆகியோர் எஸ். ஏ  சந்திரசேகரின் உதவியாளர்களாக பணியாற்றும் தருணத்திலேயே என்னுடைய நண்பர்கள். ஆனால் நான் அவர்களுடைய எந்த படத்திலும் நான் பாடல் எழுதவில்லை. கொம்பு சீவி படத்தை இயக்கப் போகிறார் என்று கேள்விப்பட்டதும் இயக்குநர் பொன்ராமை சந்தித்து இந்த படத்தில் என்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என உரிமையுடன் கேட்டேன். ஏனெனில் கேப்டன் மீது வைத்திருக்கும் நட்பின் காரணமாகவே கேட்டேன்.‌

பாடல் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் நான் ‘ராஜ்ஜியம்’ படத்தில் ‘தமிழன் தமிழன்..’ என்பது போன்ற பாடல் எழுதுவதற்கான சூழல் போன்று தான் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் சண்முக பாண்டியன் நடிக்கும் இந்த படத்தில் கமர்ஷியல் பாடலை எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் கேப்டனுக்கு எழுதியது போல் அசைக்க முடியாத பாடல் ஒன்றை சண்முக பாண்டியனுக்காக விரைவில் எழுதுவேன். இதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

‘பருத்திவீரன்’ படத்தில் எல்லா பாடல்களையும் நான் தான் எழுதினேன். இதுபோன்ற கிராமியத்தை நினைவுபடுத்தும் படத்திற்கு பாடல் எழுத வாய்ப்பளித்த யுவனுக்கும்,  இயக்குநருக்கும் நன்றி.‌

எங்கள் வீட்டு பிள்ளை சண்முக பாண்டியனுக்கு மிகப்பெரிய அளவில் படத்தை தயாரித்து வெளியிடும் தயாரிப்பாளர் முகேஷ் செல்லையாவிற்கு ஒட்டுமொத்த திரையுலகமும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். அவர் கேப்டன் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாகவே இது நடைபெற்றது. இதற்காகவும் இந்த படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

கேப்டனுடன் ஆறு, ஏழு படங்களில் பணியாற்றி இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் முதன் முதலாக கேப்டன் நடிப்பில் உருவான ‘வாஞ்சிநாதன்’ படத்திற்கு பாடல் எழுதுவதற்காக தான் சென்னையில் இருந்து மும்பைக்கு விமான பயணம் மேற்கொண்டேன். அது மறக்க முடியாது. அவரைப் பற்றிய நினைவுகள் ஏராளம்.‌ அதைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம்.

அந்த வகையில் சண்முக பாண்டியன் திரையுலகில் வளர்ந்தால் நாங்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம். கேப்டனுக்கு திருப்பி செலுத்த வேண்டிய அன்பை உங்கள் மீது செலுத்துவோம். அதற்கான களமும், காலமும் வருவதற்காக காத்திருக்கிறோம். நீங்கள் அன்பால் உருவான குழந்தை. அன்பு ஒருபோதும் தோற்பதில்லை. அன்பு வெல்லும். சண்முக பாண்டியன் நடிப்பில் உருவான கொம்பு சீவியும் வெல்லும் என நம்புகிறேன், வாழ்த்துகள்,” என்றார்.

இயக்குநர் எம் ராஜேஷ் பேசுகையில், ”சந்தோஷமாக இருக்கிறது. இந்த விழா ஒரு குடும்ப விழாவை போல் தான் இருக்கிறது. நானும் பொன்ராமும் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய காலத்தில் இருந்தே நண்பர்கள். ‘நண்பேன்டா..’ என சொல்லிக் கொள்வது போல உள்ள நண்பர்கள். அவருடைய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திலிருந்து இந்த கொம்பு சீவி படம் வரை நான் அவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். நண்பனாகவும் கதை விவாதத்தில் பங்கு கொண்டும் உதவி செய்து இருக்கிறேன். இதே போல் அவரும் என்னுடைய படங்களுக்கு உதவி செய்திருக்கிறார். எங்களுக்கு இடையேயான இந்த நட்பு இன்றும் தொடர்கிறது.

இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். மிகவும் பிடித்திருந்தது. திரையில் இரண்டு தூண்களாக சரத்குமார் – சண்முக பாண்டியன் தோன்றுகிறார்கள். இந்தப் படத்தில் சரத்குமார் எனர்ஜியுடன் கூடிய நடிப்பை வழங்கி இருக்கிறார். இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளிலும் மிரட்டி இருக்கிறார். நான் படத்தை பார்க்கும் போது நிறைய இடங்களில் சண்முக பாண்டியன் நடிப்பில் கேப்டனை பார்ப்பது போல் இருந்தது. திரையரங்கில் இந்த காட்சிகளை பார்க்கும் போது ரசிகர்களுக்கு குறிப்பாக கேப்டனின் ரசிகர்களுக்கு அற்புதமான தருணமாக இருக்கும்.

திரைக்குப் பின்னால் இரண்டு தூண்களாக ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் பணியாற்றியிருக்கிறார்கள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். படத்தின் முன்னோட்டத்தை மிகவும் ரசித்தேன்,” என்றார்.

இயக்குநர் மித்ரன் ஆர் ஜவகர் பேசுகையில், ”பொன்ராம் என்னுடைய பேவரைட் ஆன டைரக்டர். அவருடைய காமெடி திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது அவருடைய இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களின் பட்டியலில் இருப்பதை போல் இருக்கிறது. இதற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சண்முக பாண்டியனை நான் சந்தித்து இருக்கிறேன். அவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது என்றால், அவருக்காக மிகப்பெரிய இடம் ஒன்று காத்திருக்கிறது. தைரியத்துடன் கண்ணை மூடிக்கொண்டு அதில் பயணம் செய்யுங்கள். எல்லா திறமைகளும் உங்களிடத்தில் இருக்கிறது. இவற்றையெல்லாம் விட உங்களுடைய அப்பா அம்மாவின் ஆசியும் இருக்கிறது என்பதை மட்டும் உறுதியாக சொல்வேன்.  திரையில் உங்களை பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது. இந்த படம் உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும்.

இந்த விழாவின் நாயகன் யுவன் ஷங்கர் ராஜா. அவருடன் நான் 15 ஆண்டு காலமாக பயணித்து வருகிறேன்.‌ அவருடைய இசையில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களும் படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

விஜய பிரபாகரன் பேசுகையில், ”இந்த மேடையில் நிற்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஹீரோவோட அண்ணனாக இல்லாமல் சண்முக பாண்டியனின் ரசிகனாக இங்கு வந்திருக்கிறேன்.
சண்முகத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால், 2012ம் ஆண்டில் இருந்து சினிமாவில் நடிக்க தொடங்கினார்.  சினிமாவில் 13 ஆண்டு காலமாக சண்முகம் பயணிக்கிறார். இந்த 13 ஆண்டு கால பயணம் எங்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. இந்த 13 ஆண்டில் எத்தனையோ ஹீரோக்கள் எத்தனையோ படங்களை செய்து இருக்கலாம். ஆனால் இது சண்முகம் நடிக்கும் நான்காவது படம் தான். ஏனென்றால், நடுவில் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாத போது அவரை உடனிருந்து கவனித்துக் கொண்டது சண்முகம் தான். ‘எனக்கு படங்களில் நடிப்பதை விட அப்பாவுடன் இருந்து அவரை மீட்டு மீண்டும் தமிழக மக்களுக்கு தர வேண்டும்’ என உறுதியாக சொன்னார். அதனால்தான் அப்பா என்னை அரசியலில் ஈடுபடு என சொன்னார்.

நான் இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், இந்தப் படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து இதுவரை எந்த இடத்திலும் சிறு இடைவெளி கூட இல்லாமல் நடைபெற்று நிறைவடைந்து இருக்கிறது. இதற்கு முன் பல படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியானாலும் அவை முறையாக நடைபெறவில்லை. இருந்தாலும் அவன் எந்த சலனமும் இல்லாமல் நான் உறுதியாக வருவேன் என நம்பிக்கையுடன் இருந்தான். கேப்டனின் மகன் என்னால் முடியும் என தைரியத்துடன் இருந்தான். 13 ஆண்டுகளில் அவருடைய நண்பர்கள் சினிமாவில் ஜெயித்தாலும் சினிமா மீதான அவனுடைய ஆர்வம் சிறிதும் குறையவில்லை. இந்த தருணத்தில் ஸ்டார் சினிமாஸ் நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர் முகேஷ் செல்லையாவிற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  சண்முகத்திற்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவிலான அறிமுகமாக இருக்க வேண்டும் என்று அயராது பாடுபட்டு வருகிறார்.

தயாரிப்பாளர் முகேஷ் சார், சண்முகத்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்று இயக்குநர் பொன்ராம் ஆர்வத்துடன் இருக்கிறார் என்று எங்களிடம் சொன்னதும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.

நான் கல்லூரி படிக்கும்போது சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் உருவான படத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன். அந்த அளவிற்கு பெரிய இயக்குநரின் இயக்கத்தில் சண்முகம் நடிக்கப் போகிறான் என்றவுடன் சந்தோஷப்பட்டேன்.  வேறு யார் நடிக்கிறார்கள் என்று பார்த்தபோது பொன்ராம் இந்த படத்தில் சரத் சார் நடிக்கிறார் என்று சொன்னவுடன் எங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் ஏற்பட்டது.

புலன் விசாரணை காலகட்டத்தில் இருந்து கேப்டனும் சரத் சாரும் ஒன்றாகவே பயணித்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையேயான நட்பு தனித்துவமானது. இன்று அப்பா இல்லாத நிலையில் சண்முகத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதற்காக சரத் சார் கை கொடுத்து ஆதரவு தருவதை பாசிட்டிவாகத்தான் பார்க்கிறேன்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வஸ்தாரா..’  பாடலில் சண்முகமும், சரத் சாரும் நடனமாடும் போது, யார் பெட்டர் என்று தான் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ரெண்டு பேருமே நன்றாக ஆடினார்கள்.

யுவன் ஷங்கர் ராஜாவை நான் முதல் முறையாக ‘அலெக்ஸாண்டர் மூவி பி ஜி எம் –  யுவன் ஷங்கர் ராஜா ‘ என்ற டைட்டில் வரும் போது தான் பார்த்தேன். அதற்குப் பிறகு இப்போது தான் அவரை நேரில் சந்திக்கிறேன். சந்தித்து பேச தொடங்கியவுடன் நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டோம்.

‘சகாப்தம்’ படத்தின் பணிகளை தொடங்கும் போது கேப்டன் எங்களிடம் என்ன சொன்னார் என்றால், சண்முகத்தின் முதல் படத்தில் இளையராஜாவின் குடும்பத்திலிருந்து தான் இசை இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். ‘சகாப்தம்’ படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்தார். சண்முகத்தின் அடுத்த படமான ‘படைத்தலைவன்’ படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அவருடைய அடுத்த படமான ‘கொம்பு சீவி’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கேப்டனின் ஆசை சண்முகத்தின் முதல் மூன்று படங்களிலும் நிறைவேறி இருக்கிறது. பவதாரணி கூட ‘சகாப்தம்’ படத்தில் ஒரு பாடலை பாடி இருக்கிறார். இதனாலேயே சண்முகத்திற்கு கேப்டனின் ஆசி பரிபூரணமாக இருக்கிறது என்பது உறுதியாகிறது.

அப்பா சின்ன வயதில் இருந்தே சினிமா என்றால் ஹீரோ, ஹீரோயின் மட்டும் இல்ல அதுல ஒர்க் பண்ற எல்லா டெக்னீஷியன் பெயரையும் நீ படிக்க வேண்டும் என சொல்வார். எல்லோரும் ஒன்றிணைந்து தான் ஒரு படத்தினை உருவாக்குகிறார்கள் என்பார்.  அதனால் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்ற போது நானும், அம்மாவும் சென்றிருந்தோம். அப்போது இந்த ‘உசிலம்பட்டி..’ பாடல் ஒலித்த போது அனைவரும் ரசித்தனர். இதை பார்த்த உடன் இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று நான் நினைத்தேன்.  படம் வெளியான பிறகு இதற்காகவே நிறைய ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகை தருவார்கள். இது சண்முகத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என்று நான் நம்புகிறேன்.  அத்துடன் இது ஒரு புது கூட்டணி என்பதாகவும் பார்க்கிறேன். டிசம்பர் 19ம் தேதி அன்று கொம்பு சீவி மிகப்பெரிய வெற்றியை பெறும் என நம்புகிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பேசுகையில், ” நான் இந்த மேடையில் இருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நிறைய பேச வேண்டும். நான் குழந்தை பருவத்தில் இருந்து கேப்டனின் படங்களை பார்த்து வளர்ந்திருக்கிறேன். கேப்டன் எனக்கு மிகவும் இன்ஸ்பயரிங்கான பர்சன்.

கேப்டன் திருமணம் ஆகி முதல் முறையாக தம்பதிகளாய் எங்களது வீட்டிற்கு விருந்திற்காக வருகை தந்தார்கள். அப்போது நான் , என்னுடைய உறவினர்கள் அனைவரும் அப்பாவின் இசையை ஒலிக்க விட்டு நடனமாடிக் கொண்டிருந்தோம்.

இயக்குநர் பொன்ராம் என்னை சந்தித்தபோது, யார் ஹீரோ என கேட்டேன். சண்முக பாண்டியன் என்று சொன்னது ஒரு வினாடி கூட தாமதிக்காமல் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டேன். கேப்டன் சார், ஏராளமானவர்களுக்கு பில்லராக இருந்திருக்கிறார். என்னுடைய சகோதரரான சண்முக பாண்டியனுக்கு சினிமாவில் நிச்சயமாக ஒரு பெரிய இடம் உண்டு.

சரத் சாரிடமிருந்து தொடங்கி இன்று சண்முக பாண்டியனுக்கும் பணியாற்றுகிறேன்.

இந்தப் படத்தின் திரைக்கதையை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அதிலும் பொன்ராமின் டிரேட் மார்க் காமெடி காட்சிகள் சூப்பராக இருந்தன. அவருடன் பணியாற்றிய அனுபவம் ஜாலியாக இருந்தது.

கேப்டன் சார் நடித்த ‘தென்னவன்’ படத்திற்கு நான் இசையமைத்தேன். ‘அரவிந்தன்’ படத்திற்கு இசையமைப்பதற்கு முன் அண்ணன் கார்த்திக் ராஜா இசையமைத்த ‘அலெக்சாண்டர்’ படத்திற்கு நான் பின்னணி இசையமைத்தேன். அப்போது தயாரிப்பாளர் சுப்பு பஞ்சு , தான் அந்தப் படத்திற்கு பின்னணி இசையமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அந்த படத்தில் ஒரு பாடலையும், பின்னணி இசையும் அமைத்தேன். இந்த வகையில் என்னுடைய திரையுலக பயணம் ‘அலெக்ஸாண்டர்’ படத்திலிருந்து தான் தொடங்கியது. இன்று கேப்டன் மகன் நடிக்கும் படத்திற்கு இசை அமைத்திருப்பது அவரின் ஆசியாகவும், எங்களுடைய குடும்பத்தினருக்கு பணியாற்றுவது போலும் இருக்கிறது,” என்றார்.

திருமதி பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ”இங்கு இருக்கும் அனைவரும் கேப்டனை திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து எனக்கு தெரிந்தவர்கள் தான், அறிமுகமானவர்கள் தான்.
யுவன் ஷங்கர் ராஜா பிறந்ததில் இருந்தே எனக்கு தெரியும். இளையராஜா சார், ஜீவா ஆன்ட்டி எங்களுடைய இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். திரையுலகத்தில் எனக்கு சிலர்தான் நண்பர்கள். அதில் மிகவும் முக்கியமானவர் ஜீவா ஆன்ட்டி தான். அவர்கள் என்னுடைய இன்ஸ்பிரேஷன் என்றும் சொல்லலாம்.

அப்போதெல்லாம் எல்லா படங்களும் வெளியாகும். ஹீரோக்களை விட நாங்கள் மிகவும் பரபரப்பாக இருப்போம். இசைஞானி இளையராஜா இசையமைத்த எல்லா படத்திற்கும் பிரிவியூ காட்சி பார்க்க ஜீவா என்னை அழைப்பார்கள். கேப்டன் படம் என்றால் நான் என்னுடைய நண்பர்கள், தோழிகள் அனைவரையும் அழைப்பேன்.

பிரபாகரன், சண்முகம் போல் யுவனும் எனக்கு ஒரு பிள்ளை தான். எனக்கு எந்த பிரச்சனை என்றாலும் இளையராஜா குடும்பத்துடன் மனம் விட்டு பேசுவேன். அதேபோல் சரத்குமாருடனும் பேசுவேன்.

எங்களுடைய திருமணம் நடந்தது ஜனவரி 31 1990. அன்றுதான் ‘புலன் விசாரணை’ திரைப்படமும் வெளியானது. அன்று முதல் அவர்கள் இருவரிடத்திலும் உண்டான பிணைப்பு, நட்பு இன்று வரை உறுதியுடன் தொடர்கிறது. நடிகர் சங்க தலைவராக பணியாற்றிய போது சரத் சாரும் நெப்போலியன் சாரும் கேப்டனுக்கு இரண்டு கரங்கள் போல் இணைந்து செயல்பட்டார்கள். இப்படி பழைய நினைவுகளை நினைக்கும் போது ஒவ்வொன்றும் அற்புதமான தருணங்களாகத்தான் இருக்கிறது.

சண்முக பாண்டியன் நடித்த ‘சகாப்தம்’ படத்திற்கு தயாரிப்பாளர் எல் கே சுதீஷ். அவருடைய தாய் மாமாவாக மட்டும் இல்லாமல் அவருடைய அனைத்துமாக இன்று வரை அவர் இருக்கிறார்.‌

இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். இந்தப் படம் குடும்பம் குடும்பமாக திரையரங்கத்திற்குச் சென்று பார்த்து ரசித்து கொண்டாட கூடிய படமாக இருக்கும். இதனை தமிழக மக்கள் அங்கீகரிப்பார்கள்.

இந்தப் படத்தின் சிறப்பம்சம் என்ன என்றால், ராஜா சாரும், யுவனும் இணைந்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். அம்மா பற்றிய சென்டிமென்ட் பாடல் என்றால் அது ராஜா சார் பாடினால்தான் சிறப்பு.

படத்தில் சண்முகமும் , சண்முகத்தின் தாய் மாமாவாக நடித்திருக்கும் சரத் சாரும் அடிக்கும் லூட்டி அனைவரையும் ரசிக்க வைக்கும். இவர்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இருவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். டிசம்பர் 19ம் தேதியன்று கொம்பு சீவி படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து, ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் பொன் ராம் பேசுகையில், ”மூன்றாண்டுகளுக்கு முன் தயாரிப்பாளர் முகேஷ் செல்லையாவை சந்தித்தேன். அவர்தான் சண்முக பாண்டியனை
வைத்து படம் இயக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார். அதற்காக அவருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதன் பிறகு கேப்டனையும், சண்முக பாண்டியனையும் சந்தித்தேன். சண்முக பாண்டியனை நேரில் பார்த்ததும் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

என்னை பொறுத்தவரை ஒரு படத்தை உருவாக்குவதற்கு இயக்குநர் மட்டும் பணியாற்றுவதுடன் தயாரிப்பாளரும் இணைந்து கிரியேட்டிவ்வாக பணியாற்ற வேண்டும் என எதிர்பார்ப்பவன். அந்த வகையில் இந்த படத்திற்கும், இந்த நிகழ்விற்கும் தயாரிப்பாளர் முகேஷின் பங்களிப்பும் அதிகம். இதை நான் பாராட்டுகிறேன்.

இந்தப் படத்தின் கதையைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை படமாக்கி கொண்டிருந்தபோது வைகை அணையின் உள்பகுதிக்கு சென்றேன்.‌ அங்கு மோட்டார் வைத்த கிணறு மூலம் பாசனம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அணையின் உள் பகுதிக்குள் யாரேனும் விவசாயம் செய்வார்களா என்ற ஆச்சரியத்துடன் பார்த்தேன். அதைப்பற்றி விசாரித்த போது அணையில் நீர் வற்றி விட்டால் எங்களுடைய நிலம், விவசாயம் இதெல்லாம் தெரியும்.‌ நீரின் அளவு உயர்ந்தால் விவசாயத்தை விட்டு விட்டு சென்று விடுவோம் என்றார்கள். இந்த விஷயம் தான் இந்தப் படத்திற்கான கதையாக உருவானது.

அதன் பிறகு கொரோனா காலகட்டத்தின் போது தேனியில் முகாமிட்டிருந்தேன். அப்போது அணை முழுவதும் நீர் நிரம்பி வழிந்து ஓடிக் கொண்டிருந்தது அப்போது ஒரு பெரியவர் கையில் குடையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பார்வை எனக்குள் எதையெதையோ உணர்த்தியது.‌ அதுதான் எனக்கு இந்தப் படத்திற்கான உந்துதல்.

இப்படி ஒரு சீரியஸான கதையில் எப்படி காமெடி என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள். இதுதான் எனக்கான சவால்.  இதில் தான் ‘ரொக்க புலி’ என சரத் சாரும், ‘பாண்டி’ என சண்முக பாண்டியனையும் கதாபாத்திரங்களாக உருவாக்கியிருக்கிறேன். அந்த வகையில் இந்த படம் ஆக்ஷனும் காமெடியும் கலந்த என்டர்டெய்னராக இருக்கும்.

யுவன் ஷங்கர் ராஜா உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என எனக்கு நீண்ட நாளாக ஆசை இருந்தது. என்னை முதன் முதலாக துபாய்க்கு அழைத்துச் சென்ற பெருமை அவருக்கு மட்டும் தான் உண்டு. இந்தப் படத்தில் இடம்பெறும் அம்மா பாடலை பாடியதற்காக இசைஞானி இளையராஜாவிற்கு மிகப்பெரிய நன்றி.

சரத் சாரிடம் கதை சொல்லும் போது சற்று பயம் இருந்தது. எப்போதாவது ஒருமுறை தான் அவர் பெரிய மனிதர் போல் நடந்து கொள்வார். மீதமுள்ள அனைத்து நேரங்களிலும் இளைஞராகவும், மனதளவில் குழந்தையாகவும் இருப்பார். அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் தார்னிக்காவிற்கும், சரத்குமாருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. சரத்குமார் நடித்த நாட்டாமை படத்தில் ஆசிரியை வேடத்தில் நடித்த நடிகை ராணியின் மகள்தான் தார்னிகா.

சண்முக பாண்டியன் இந்தப் படத்தில்  நடிக்கும் போது காட்சிகளுக்காக ஒத்திகை பார்க்க வேண்டும் என்றதும் முழு ஒத்துழைப்பு வழங்கினார்.‌ ஆனால் சண்டை காட்சிகளுக்காக ஒத்திகை பார்க்காமல் நேரடியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஏனென்றால் அது கேப்டனின் ரத்தத்தில் ஊறிய விஷயம்.  அவருக்கு ஒரு குளோசப் காட்சி வைக்கும் போது கேப்டனை பார்த்தது போலவே இருந்தது. இது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘படைத்தலைவன்’ படத்தின் தோற்றத்திலிருந்து தான் அவருடைய இந்த படத்திற்கான கதாபாத்திர தோற்றத்தை உருவாக்கினோம். இந்த  திரைப்படத்தின் கதை களம் 1996ம் ஆண்டு என்பதால் அதற்கு ஏற்ற வகையில் மாற்றினோம். பகல், இரவு என்று பாராமல் படப்பிடிப்பில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். அவருக்கான உயரமும், இடமும் தமிழ் சினிமாவில் காத்துக்கொண்டிருக்கிறது.

முதலில் திருமதி பிரேமலதா விஜயகாந்த்தின் அழைப்பின் பேரில் மரியாதை நிமித்தமாக தான் அவர்களை சந்தித்தேன்.  அவர்கள் தான் சண்முகத்திற்காக கதை ஒன்றை உருவாக்குங்கள் என கேட்டுக்கொண்டார். அந்த சந்திப்புக்கு பிறகு தான் இந்த கதைக்கான எண்ணம் உதித்தது. இதற்காக இந்த தருணத்தில் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இந்த படத்திற்காக பின்னணி குரல் கொடுத்திருக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் முகேஷ் த செல்லையா பேசுகையில், ”எல்லோரும் சினிமாவிற்காக சென்னைக்கு வருவார்கள். என்னை கொம்பு சீவி விட்டது இரண்டு பேர். ஒருவர் இளையராஜா. மற்றொருவர் கேப்டன் விஜயகாந்த். அவர்களுடைய இன்ஸ்பிரேஷன், அவர்களுடைய வாழ்க்கை முறைகள் தான் எனக்கு ஊக்கம் தருபவை.

இளையராஜா இன்றும் காலையில் 6:00 மணிக்கு தன்னுடைய ஒலிப்பதிவு பணியை தொடங்குவார். மாலை 6:00 மணி அளவில் நிறைவு செய்துவிட்டு வீட்டிற்கு சென்று விடுவார். இந்த இடைப்பட்ட தருணத்தில் அவர் வழங்கும் இசை படைப்பு என்பது மகத்தானது அவர் சென்றடையாத இடமே இல்லை.

கேப்டன் விஜயகாந்தின் நடிப்பு மட்டுமல்ல அவருடைய எண்ணங்களும் சிந்தனைகளும் அவருடைய கதாபாத்திரங்களும் மக்களுடைய மனதில் ஆழமாக சென்றடைந்திருக்கிறது.  அவர் பிரியாணி மட்டும் போடவில்லை. அதனை பாசத்துடன் வழங்குவார். பிரியாணி உணவு மட்டுமல்ல அவரின் அன்பும் கூட.  இதனை பார்த்து வியந்து தான் சென்னைக்கு வருகை தந்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது தான் பட தயாரிப்பினை தொடங்கி இருக்கிறேன். உங்கள் அனைவரது ஆசியும், ஆதரவும் எங்களுடைய நிறுவனத்திற்கு தேவை. இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் சண்முக பாண்டியன் பேசுகையில், ”இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். திரைத்துறையில் நீண்ட கால அனுபவமிக்க பலர் என்னுடன் நடித்தார்கள். அப்பாவின் நெருங்கிய நண்பரான சரத்குமார் சார் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றியதிலிருந்து எனக்கும் அவர் நெருங்கிய நண்பராகி விட்டார். அவருடன் பழகிய நாட்கள் அனைத்தும் மறக்க முடியாதவை. குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். பல நடிகர்களுக்கு அவர் உதவி செய்திருக்கிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை பார்த்த பிறகு, நானும் இயக்குநர் பொன்ராமின் ரசிகனாகி விட்டேன். அவருடன் இணைந்து ஒரு படம் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. அவருடன் பணியாற்ற முடியுமா என்ற எண்ணம் ஏற்பட்டது. அது இன்று சாத்தியமாகி இருக்கிறது. அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னிடம் இருக்கும் நகைச்சுவை நடிப்பையும், எதிர்வினையையும் அவர்தான் வெளிக்கொண்டு வந்தார். படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன் ஒத்திகையும், பயிற்சியும் செய்தோம். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் எங்களுக்கு நிறைய சுதந்திரத்தை அளித்தார். காட்சிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பையும் உருவாக்கி தந்தார். குறிப்பாக நான்- சரத் சார் -கல்கி- மூவரும் லாரி தொடர்பான காட்சி ஒன்றில் நடித்தோம். அந்த காட்சியில் நாங்களாக தான் ஒரு எல்லைக்கு மேல் நிறுத்திக் கொண்டோம்.

இந்தப் படம் சீரியஸான கதை. அதை இயக்குநர் பொன்ராம் நகைச்சுவையுடன் கலந்து சொல்லி இருக்கிறார். இதை நீங்கள் அனைவரும்  திரையரங்கத்திற்குச் சென்று ரசித்து அனுபவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில், ”இந்த விழா கொம்பு சீவி படத்தின் இசை வெளியீட்டு விழாவாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், இது ஒரு உணர்வுப்பூர்வமான விழாவாக கருதுகிறேன். இந்த விழாவிற்காக இந்த மேடையில் நிற்கும் போது எனது அன்பு நண்பர் விஜயகாந்தை நினைக்காமல் இருக்க இயலாது. அவரைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினால் என் கண்கள் கண்ணீரால் நிரம்பி விடும். என்னால் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது.

திருமதி பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில் நட்பை பற்றி குறிப்பிட்டார்கள். இந்தப் படத்தில் நடிப்பதற்கு இயக்குநர் பொன்ராம் ஒரு காரணமாக இருந்தாலும், சண்முக பாண்டியன் நடிக்கிறார் என்றதும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.‌ ஏனெனில் கலை உலக பயணத்தில் முக்கியமான காலகட்டத்தில் விஜயகாந்தின் ஒப்பனைக் கலைஞர் ராஜு, புலன் விசாரணை படத்திற்காக ஒரு வில்லனை தேடிக் கொண்டிருக்கும் போது சரத்குமார் வாட்ட சாட்டமாக இருக்கிறார் என என்னை விஜயகாந்த்திடம் பரிந்துரை செய்திருக்கிறார். உடனடியாக என்னை அழைத்துக் கொண்டு விஜயகாந்தின் அலுவலகத்தில் அவர் முன் நிறுத்துகிறார்கள். அவர் என்னை பார்த்தவுடன் உடனடியாக இயக்குநர் செல்வமணியையும், என்னுடைய நண்பர் ராவுத்தரையும் பார்த்து விடுங்கள் என சொன்னார். என்னை பார்த்ததும் அவர் முடிவு செய்துவிட்டார். அப்போது இயக்குநரும், விஜயகாந்த்தும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள் . உடனடியாக நான் அருகில் உள்ள முடி திருத்தும் நிலையத்திற்கு சென்று என்னுடைய மீசையை மழித்து விட்டு அவர்கள் முன் நின்றேன். அன்று தொடங்கியது தான் இந்த கலைப் பயணம். அது மறக்க முடியாத தருணம்.

அந்தப் படம் நிறைவடைந்து வெளியான பிறகு எந்த கதாநாயகனும் பகிர்ந்து கொள்ளாத ஒரு விஷயத்தை விஜயகாந்த் என்னிடம் சொன்னார். ‘சரத் இந்த படத்தில் உங்களுக்குத் தான் மிகப்பெரிய பெயர்’ என்றார். அதைத் தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் படத்திலும் நடித்தேன்.

புலன்விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு நடைபெறும் போதும் சண்டை காட்சிகளில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது மற்றவர்கள் மாற்று வழியை சொன்ன போதும், சரத் குணம் அடைந்து வந்த பின் அந்த காட்சியை படமாக்கிக் கொள்ளலாம் என்று விஜயகாந்த் உறுதியாக சொல்லி விட்டார். அவருடைய உறுதி தான் என்னை மிகவும் கவர்ந்தது இன்று வரை அவருடைய என்னை பிணைத்து வைத்திருப்பதும் அவருடைய அந்த குணம் தான். அவருடைய திறமை, அன்பு, பாசம் ஆகிய அனைத்தையும் அவருக்கு அருகே இருந்து அனுபவித்தவன் நான்.

இன்று இந்த மேடையில் இருந்து ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்கிறேன். சண்முக பாண்டியன் எதிர்காலத்தில் மிகப்பெரிய நட்சத்திர நடிகராவார்.  அதில் எந்த மாற்றமும் இல்லை. கேப்டன் விஜயகாந்த் எப்படி இருப்பாரோ அதேபோல் இவரும் இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகராக எளிமையாக அனைவரிடமும் பழகுகிறார்.

இந்தப் படத்தில் மாமன்- மச்சினனாக நாங்கள் நடிக்கவில்லை.  வாழ்ந்திருக்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த குடும்ப ரீதியிலான உறவு தொடர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

சண்முக பாண்டியனுக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் உயரத்தை பற்றி தவறாக நினைக்காமல் உங்கள் உயரத்திற்கு ஏற்ற பொருத்தமான கதையை தேர்வு செய்து நடிக்க வேண்டும். நீங்கள் ‘தென்னிந்தியாவின் அமிதாப்பச்சன்’. அதனால் கழுத்தை குனிந்து மற்றவர்களிடம் கேட்காமல் நிமிர்ந்து கதையைக் கேட்டு பணியாற்ற வேண்டும்.

இந்த ‘கொம்பு சீவி’ படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் திரையரங்கத்திற்கு சென்று இந்த படத்தைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.

ஒரு திரைப்படம் வெளியாகி 30 நாட்களில் டிஜிட்டல் தளத்தில் வந்துவிடும் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருக்காமல், இந்த படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும். அதே தருணத்தில் டிஜிட்டல் தளங்களுக்கும் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன். நீங்கள் ஒரு திரைப்படத்திற்கு 30 நாட்கள் அவகாசம் கொடுப்பதை, 50 நாளாக உயர்த்தினால் நன்றாக இருக்கும். மக்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்தை பார்த்து ரசிப்பார்கள். ரசிகர்களை திரையரங்கத்திற்கு வரவழைப்பதில் டிஜிட்டல் தளங்களும் தங்களுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் அப்போதுதான் திரைத்துறை ஆரோக்கியமாக இருக்கும் என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இந்தத் திரைப்படம் விவசாயத்தை பற்றியும், விவசாயம் சிறப்பாக இல்லாத தருணத்தில் விவசாயிகள் என்ன செய்தார்கள் என்பது குறித்தும் ஒரு சிறிய விஷயத்தை எடுத்துக் கொண்டு இயக்குநர் அதனை நகைச்சுவையுடன் கலந்து சொல்லி இருக்கிறார். இந்த படத்தில் உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

சென்னையை சேர்ந்த சர்வதேச கேரம் சாம்பியன் பயோபிக் ’தி கேரம் குயின்’ பட தொடக்கவிழா

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகானத்தில் நடைபெற்ற 6வது சர்வதேச கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் பெயரை உலக அளவில் உயர்த்தி பிடித்த வடசென்னை விளையாட்டு மங்கை காஜிமாவின் வாழ்க்கை சரிதம் என்பது மிகுந்த வலி மிகுந்தது.

மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்து ஆட்டோ ஓட்டுநரின் மகளாக வளர்ந்து அப்பாவின் ஆசையான கேரம் விளையாட்டை சகோதரர் துணையுடன் கற்றுக் கொண்டு சர்வதேச விளையாட்டு போட்டியில் வென்று தன் ஏழ்மை நிலையை வென்றவர் காஜிமா.

இவரது வலிமிகுந்த வெற்றி வாழ்க்கையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல கர்னாடகத்தை சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் திரைப்படமாக தயாரிக்க முன்வந்தது. காஜிமாவின் வாழ்க்கை வரலாற்று பயோபிக் ஆக உருவாகும் இந்த படத்துக்கு ‘தி கேரம் குயின்’ என பெயரிட்டு இன்று பிரமாண்டமாக பூஜையுடன் பட தொடக்க விழா நடை பெற்றது. இப்படத்தில் காஜிமாவின் கதாபாத்திரத்தில் நடிகை ரந்தியா பூமேஷ் நடிக்கின்றார்

விழாவில் பயோபிக்கின் உண்மை கேரம் குயின் காஜிமா தன் குடும்பத்தாரோடு கலந்து கொண்டார்.

கதையின் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் காளி வெங்கட் பேசியது: அனைவருக்கும் வணக்கம். இந்த படத்தின் கதைமிக சுவாரஸ்யமானது. முழு கதையும் மிகுந்த எமோஷனலானது. படம் பார்க்கிற ஒவ்வொரும் கண்டிப்பாக கண்ணீர் விடுவார்கள். அத்தனை அழுத்தமான கதை. படம் வெளியான பிறகு நிறைய பேசுகிறேன்.

தயாரிப்பாளர் நிஹான் என்டர்டெயின்மென்ட்ஸ் நாகேஷ் பாட்டில் பேசியது:
நான் பெல்லாரி மாவட்டம். சில தொழில்கள் செய்து வருகிறேன். எனக்கு தமிழில் ஒரு படம் தயாரிக்க ஆசை இருந்தது. காஜிமா கதை என்னிடம் சொன்னார்கள் அந்த வலியும் வெற்றியும் என்னை பாதித்து, நானே அந்த கதையை எடுத்து இப்போது தயாரிப்பாளர் ஆகி விட்டேன். தமிழில் தொடர்ந்து படங்கள் செய்ய ஆசை படுகிறேன் என்றார்.

இயக்குனர் முரளி பேசும் போது: நான் ஏற்கனவே படங்கள் இயக்கி இருந்த போதும் இந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஒரு நல்ல உண்மை சம்பவத்தை படமாக எடுக்க தயாரிப்பாளரிடம் போன போது உடனடியாக அட்வான்ஸ் கொடுத்து படம் தயாரிக்க ஒப்புக் கொண்டார். அதே போல காஜிமா குடும்பத்தாரும் கதையை திரைக்கதையை உருவக்க முழு ஆதரவு தந்தார்கள். இப்போது மேடையில் பேசும் போது காஜிமா அப்பா பேச முடியாமல் கண் கலங்கினார். உண்மை தான் படம் பார்க்கும் ஒவ்வொரும் கண்கலங்கும் விதமாக படம் இருக்கும். படம் வெளியான பிறகு நான் பேசுகிறேன்.

உண்மையான கேரம் குயின் ஆன காஜிமா பேசும் போது: நான் கஷ்டபட்ட குடும்பத்தில் இருந்து இந்த இடத்தில் வந்து நிற்கிறேன். இதற்கு என் அப்பாவும் குடும்பத்தாரும் தான் காரணம். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள பணம் இல்லாமல் தவிக்கும் போது அப்பா இரவு பகலாக ஆட்டோ ஓட்டி அந்த பணத்தை கொண்டு என்னை விளையாட அழைத்து செல்வார். இன்றைக்கு இந்த வெற்றியின் மூலம் கஷ்டம் தீர்ந்து அப்பாவுக்கு சொந்த வீடு வாங்கி கொடுத்திருக்கிறேன். எல்லா பெண்களையும் உற்சாகப்படுத்தி அவர்கள் திறமையை ஊக்குவித்தால் எல்லாராலும் வெற்றி பெற வைக்க முடியும். முயற்சியை விடாமல் தொடரவேண்டும்.

நடிகையும் ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனையுமான கோமல் சர்மா பேசியது: கேரம் குயின் கதையை கேட்டபோது அப்படியோ என் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. காரணம் நான் ஸ்குவாஷ் விளையாட்டில் பெற்ற பல அனுபவங்கள் கண்டிப்பாக ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் தெரியும். அந்தவகையில் இந்த கேரம் குயின் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

சிறப்பு அழைப்பாளரான தயாரிப்பாளர் எஸ்.கே.பிக்சர்ஸ் சம்பத், ஷீலா இளங்கோவன், காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் எழுத்தாளர் சௌரப் எம். பாண்டே உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Heartily Battery- Review

Heartily Battery என்பது இன்றைய தலைமுறையின் உணர்ச்சி உலகம், உறவுகளின் சிக்கல்கள், மனநிலை ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றை எளிய கதைச்சரட்டில் பேசும் ஒரு தமிழ் வெப் சீரிஸ். தலைப்பு சொல்வதுபோலவே, மனிதர்களின் emotional battery எப்போது சார்ஜ் ஆகிறது, எப்போது காலியாகிறது என்பதையே மையக் கருவாக எடுத்துக்கொள்கிறது.

கதையின் அமைப்பு மிகச் சிக்கலானது அல்ல. தினசரி வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் வேலை அழுத்தம், காதல், தோல்வி, எதிர்பார்ப்பு, ஏமாற்றம் போன்ற உணர்ச்சிகளே எபிசோடுகளின் அடிப்படை. இதனால் பார்வையாளர்களுக்கு கதாபாத்திரங்களுடன் உடனடி தொடர்பு ஏற்படுகிறது. “இது நம்ம வாழ்க்கை மாதிரி இருக்கே” என்ற உணர்வை உருவாக்குவதில் தொடர் வெற்றி பெறுகிறது.

நடிப்பு தரப்பில் இயல்புத்தன்மையே முக்கிய பலம். அதிகப்படியான டிராமா அல்லது செயற்கை வசனங்கள் இல்லாமல், underplayed performances மூலம் கதாபாத்திரங்கள் நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் காட்சிகள் நன்றாக வேலை செய்கின்றன.

இயக்கம் மற்றும் திரைக்கதை ரீதியாக, தொடர் மெதுவான வேகத்தில் நகர்ந்தாலும் அது களைப்பை தருவதில்லை. குறுகிய எபிசோடுகள், எளிய காட்சியமைப்பு, நெருக்கமான ஃப்ரேம்கள் ஆகியவை கதையின் உணர்ச்சி ஆழத்தை அதிகரிக்கின்றன. பின்னணி இசையும் மிகக் குறைவாக பயன்படுத்தப்பட்டு, காட்சிகளின் உணர்வுகளை திணிக்காமல் துணைபுரிகிறது.

ஆனால் சில இடங்களில் திரைக்கதை இன்னும் கூர்மையுடன் இருந்திருக்கலாம். குறிப்பிட்ட உணர்ச்சிகள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதே நேரத்தில், இதுவே தொடரின் slice-of-life தன்மைக்கு பொருந்துகிறது என்பதையும் மறுக்க முடியாது.

மொத்தத்தில், Heartily Battery ஒரு பெரிய திரைக்கதை அதிசயம் அல்ல. ஆனால் மனதை மெதுவாகத் தொடும், சிந்திக்க வைக்கும், குறிப்பாக இளம் பார்வையாளர்களை நேரடியாகப் பேசும் ஒரு வெப் சீரிஸ். வேகமான திருப்பங்கள் அல்லது பரபரப்பை எதிர்பார்க்காமல், அமைதியான மனநிலையில் பார்க்க விரும்புவோருக்கு இது ஒரு பொருத்தமான அனுபவம்.

அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் நடித்துள்ள ரொமாண்டிக் திரில்லர்

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ( Million Dollar Studios )- வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல் ( VELS Film International ) இணைந்து தயாரிக்கும் அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் நடித்துள்ள ரொமாண்டிக் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகும் ரொமாண்டிக் திரில்லர் பட படப்பிடிப்பு நிறைவு பெற்றது !!

அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற தரமான வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனலுடன் இணைந்து தயாரிக்கும் புதிய பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பு தற்போது இனிதே நிறைவடைந்துள்ளது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், யுவராஜ் கணேசன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள்.

இந்த படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக நிமிஷா சஜயனும் நடித்துள்ளனர். அசோக் செல்வனின் திரைப்பயணத்தில் மிக அதிக பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம், ரொமாண்டிக் திரில்லாராக உருவெடுத்துள்ளது. கதைக்களத்திற்கு ஏற்ப பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கியுள்ளார்.

‘சித்தா’, ‘கனா’ ஆகிய படங்களில் வெற்றிப் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் , ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷ், ‘டியூட்’, ‘குட் நைட்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ ஆகிய பிளாக்பஸ்டர் படங்களின் படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன், கலை இயக்குநர் மகேந்திரன், பாடலாசிரியர் மோகன் ராஜன், தேசிய விருது பெற்ற ஒப்பனைக் கலைஞர் பட்டணம் ரஷீத், ஒலி வடிவமைப்பாளர் உதயகுமார் ( Sound Vibe Studios) மற்றும் நடன இயக்குநர் அசார் ஆகியோர் தொழில்நுட்ப குழுவாக பணியாற்றிவருகின்றனர்.

படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில், தற்போது பின்னணி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மேலும் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது!

நடிகர் தனுஷ் வெளியிட்ட “சிறை” படத்தின் டிரெய்லர்

நடிகர் விக்ரம் பிரபு &  LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) படத்தின் டிரெய்லர் கோவை GRD கல்லூரி  மாணவர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை”

வரும் டிசம்பர் 25 ஆம் தேதி  கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லரை முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் சமூகவலைத்தளத்தில் இன்று வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்தினார்.
.
கோவை GRD கல்லூரியில் இப்படத்தின் டிரெய்லர் பிரத்தியோகமாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வினில் படக்குழுவினர் கலந்துகொள்ள,ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் இப்படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது. பெரும் ஆராவாரத்தோடு படக்குழுவை உற்சாகப்படுத்திய மாணவர்கள், டிரெய்லரை பாராட்டி வாழ்த்தினர்.

டிரெய்லரில் காவலதிகாரியான விக்ரம் பிரபு ஒரு இளம் குற்றவாளியை அழைத்துச் செல்வதும், அவரிடமிருந்து குற்றவாளி தப்பித்து விட அதைத்தொடர்ந்த பரபரப்பான சம்பவங்களும் விறுவிறுப்பாக காட்டப்படுகிறது.  இடையில் ஒரு இளம் ஜோடியின் காதலும் மனதை ஈர்க்கும் வகையில் காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மிக அழுத்தமாகவும், ஒவ்வொரு ஃப்ரேமும் உணர்வுபூர்வமாக, நமக்கு புது அனுபவம் தரும் இந்த டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.
 
டாணாக்காரன்  இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.

நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க,  ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்‌ஷய் குமார் அறிமுகமாகிறார்.  இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ  சார்பில்  SS லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக  அருண் K மற்றும் மணிகண்டன் பணியாற்றியுள்ளனர்.இப்படத்தின் சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

இப்படம் வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும்  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Trailer link : https://www.youtube.com/watch?v=QeVJ9Aw7X2E

எம் எஸ் பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும் ‘ கிராண்ட் பாதர் ‘

.

45 நாட்களில் படப்பிடிப்பை முடித்து அசத்திய “ கிராண்ட் பாதர் “ ( GRAND FATHER) படக்குழு !!

குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்’ கிராண்ட் பாதர் ‘ ( GRAND FATHER) ஃபேண்டஸி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.

ஃபேன்டஸி, ஸ்டைலிஷ் ஆக்ஷன், உணர்ச்சி பூர்வமான டிராமா, திகில் நிறைந்த ஹாரர் காட்சிகள், அசத்தலான காமெடி என எல்லாம் சேர்ந்து, ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

நடிகரான ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் ‘ கிராண்ட் ஃபாதர்’ ( GRAND FATHER) எனும் திரைப்படத்தில் எம். எஸ். பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன், தெலுங்கு நடிகர் சுனில், ஸ்மீகா ,அருள் தாஸ் , முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , மைம் கோபி, ஹரீஷ் பேரடி, மெட்ராஸ் ரமா , பிபின் குமார் அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பல முன்னணி நடசத்திரங்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.

மேலும் இப்படத்தில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான முன்னணி நட்சத்திர நடிகர்கள் இருவர் சர்ப்ரைஸ் கேமியோ செய்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரி சுற்று வட்டார பகுதிகளில், ஒரே கட்டமாக 45 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தை அறிவித்த வேகத்தில், குறுகிய காலகட்டத்தில் முழு படப்பிடிப்பையும் முடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது படக்குழு.

ஒளிப்பதிவாளர் சந்தானம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். திவாகர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை பிரேம் மேற்கொண்டுள்ளார்.‌ ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

குட்டி ஸ்டோரீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி பெரும் பொருட்செலவில் மிக தரமான ஒரு படைப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறார். மெட்ரோ முரளி மற்றும் மெட்ரோ கிரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.

இயக்குநர் பிராங்க்ஸ்டர் ராகுல் தனது எளிமையான, அனைவரும் கொண்டாடும் பிராங் வீடியோக்கள் மூலம் மக்களின் மனதை வென்றுள்ளார். அந்த வீடியோவைப் போலவே அதே நேர்மையும் உண்மையும் கொண்டு உருவாக்கப்படும் அவரது முதல் படம் “ கிராண்ட் பாதர் “ படமும் பார்வையாளர்களுடன் ஆழமாக இணைந்து, பலரது இதயங்களில் ஒரு தனித்த இடத்தைப் பெறும்.

இளம் தயாரிப்பாளரான புவனேஷ் சின்னசாமி, இளம் இயக்குநர் பிராங்க்ஸ்டர் ராகுல் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளது. டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்து தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்..

கருநாட சக்ரவர்த்தி சிவராஜ்குமாரின் “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது!

சுரஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் மிகப் பெரிய படைப்பு “45: த மூவி” — கருநாட சக்ரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, பிரபல விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற நடிகர்-இயக்குனர் ராஜ் பி. ஷெட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர்-இயக்குனர் அர்ஜுன் ஜன்யா இயக்கி இசையமைக்கும் இந்த படம் டிசம்பர் 25 ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையிட தயாராகியுள்ளது. ஏற்கனவே வெளியான போஸ்டர், டீசர், கிளிம்ப்ஸ் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

கன்னடத் திரைப்பட வரலாற்றில் அண்மையில் உருவான மிகத் துணிச்சலான மற்றும் புதுமை நிறைந்த முயற்சிகளில் ஒன்றாக “45: த மூவி” — கதை உலகத்தையும், புதுமையான திரைக்கதை வடிவத்தையும் டிரைலர் வெளியீட்டின் வாயிலாக முழுமையாக அறிமுகப்படுத்த உள்ளது. டிசம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் டிரைலர் குறித்து ரசிகர்களிடையே தேசிய அளவில் கூட பெரும் ஆவல் நிலவி வருகிறது.

சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி. ஷெட்டி ஆகியோரின் புதுமையான லுக்குகளை மையப்படுத்திய அறிவிப்பு போஸ்டர் — படத்தின் மர்மத்தையும் ஆர்வத்தையும் பலமடங்கு கூட்டுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மிகப்பெரிய ரிலீஸிற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

முன்னணி ஸ்டண்ட் இயக்குநர்களான டாக்டர் கே. ரவி வெர்மா, ஜாலி பாஸ்டியன், டிஃப்பரண்ட் டேனி சேதன் டி’சூசா ஆகியோர் வடிவமைத்த அதிரடி காட்சிகள், சத்யா ஹெக்டேவின் கவர்ச்சியான ஒளிப்பதிவு, கே.எம். பிரகாஷின் துல்லியமான எடிட்டிங் ஆகியவை படத்தின் தரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கின்றன. அனில் குமார் எழுதிய வசனங்களும் ஜானி பாஷா அமைத்துள்ள ஆற்றல்மிக்க நடனக் காட்சிகளும் படத்திற்கு கூடுதல் வலிமையைக் கூட்டுகின்றன.

நடிகர்கள்
சிவ ராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி. ஷெட்டி மற்றும் பலர்

தொழில்நுட்ப குழு
தயாரிப்பு நிறுவனம்: சுரஜ் புரொடக்ஷன்
தயாரிப்பாளர்கள்: திருமதி உமா ரமேஷ் ரெட்டி, எம். ரமேஷ் ரெட்டி
கதை, இசையமைப்பு & இயக்கம்: அர்ஜுன் ஜன்யா
ஒளிப்பதிவு: சத்யா ஹெக்டே
எடிட்டர்: கே.எம். பிரகாஷ்
சண்டை பயிற்சி : டாக்டர் கே. ரவி வெர்மா, ஜாலி பாஸ்டியன், டிஃப்பரண்ட் டேனி சேதன் டி’சூசா
நடன இயக்குனர்: ஜானி பாஷா
வசனம் : அனில் குமார்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

எமோசனல் ஃபேமிலி டிராமா “மொய் விருந்து”

SK Films International சார்பில் S. கமலகண்ணன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் C R மணிகண்டன் இயக்கத்தில், ஒரு அழகான ஃபேமிலி எமோசனல் டிராமாவாக உருவாகியுள்ள ‘மொய் விருந்து’ படத்தின் அசத்தலான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் சில கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கும் பாரம்பரியமான மொய் விருந்து எனும் பழக்கம் தான் இந்தப்படத்தின் மையம். மஞ்சப்பை, கடம்பன், மைடியர் பூதம் படங்களில் பணியாற்றிய C R மணிகண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் தலைப்பு குறித்து இயக்குநர் C R மணிகண்டன் கூறுகையில்..,

நான் பேராவூரணி எனும் ஊருக்கு சென்றபோது, ‘மொய்விருந்து’ நடப்பதை பார்த்தேன். கோடிக்கணக்கில் மொய் வரும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு குடும்பம் மூன்று வருடத்திற்கு ஒரு முறை தான் மொய் விருந்து நடத்த முடியும். ஏனென்றால், அந்த 3 வருடத்தில் அவர்கள் வாங்கிய மொய்ப்பணத்தை திருப்பி செய்ய வேண்டும். அப்படி சரியாக செய்பவர்களுக்கே அதிக மொய் வரும். இந்த பழக்கம் மூலம் ஊரே ஒழுக்கமாக இருக்கும் அனைவருக்கும் உதவி கிடைக்கும். இது எனக்கு பெரிய ஆச்சரியம் தந்தது, இதை மையமாக வைத்து உருவாக்கியது தான் இந்தப்படம், அதனால் தான் இந்தப்படத்திற்கு ‘மொய் விருந்து’ என்று தலைப்பு வைத்துள்ளோம், இது அனைவருக்கும் பிடிக்கும்படியான எளிமையான அழகான ஃபேமிலி டிராமா என்றார்.

பாலுமகேந்திராவின் “வீடு” படப்புகழ் ‘ஊர்வசி’ அர்ச்சனா இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் டிவி புகழ் ரக்‌ஷன் மற்றும் ஆயிஷா நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் அபர்ணதி, தீபா சங்கர், சுஜாதா, மானஸ்வி கொட்டாச்சி, அருள்தாஸ், நாமோ நாராயணன், கஜராஜ், தங்கதுரை, லொள்ளு சபா மாறன், கிச்சா ரவி, முருகானந்தம் மற்றும் கொட்டச்சி உட்பட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் முழு படப்பிடிப்பும் கொடைக்கானலின் பண்ணைக்காடு பகுதியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருக்கிறார். M.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிகட்ட போஸ்ட் புரொடக்சன் பணிகள், பரபரப்பாக நடந்து வருகிறது.
விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில்நுட்பக் குழு விபரம்

தயாரிப்பு நிறுவனம் – SK Films International
தயாரிப்பாளர் – S. கமலகண்ணன்
கிரியேட்டிவ் புரடியூசர் – விஜய் பாரதி. K
கதை, திரைக்கதை & இயக்கம் – CR. மணிகண்டன்
இசை – டி. இமான்
ஒளிப்பதிவு – M. சுகுமார்
எடிட்டர் – புவன்
கலை இயக்கம் – A.R. மோகன்
பாடல் வரிகள் – மோகன்ராஜன், ஏகாதசி, அருண்பாரதி, கருமாத்தூர் மணிமாறன்
நடன இயக்கம் – ஸ்ரீதர், ரகு தாபா, லீலாவதி.
ஸ்டண்ட் – கலை கிங்சன்
PRO – சதீஷ் (AIM)

அர்ஜுன் தாஸ் , நடிகை அன்னா பென் & யோகிபாபு நடிப்பில், ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம்……….

முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ,நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ஆகியோர் நடிப்பில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ( Power House Pictures) ##ProductionNo1 சார்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி, இயக்க, புதுமையான களத்தில் உருவாகும் ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது.

அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்களுடன், புதுமையான களத்தில், ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமாக, இப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வரும் இளம் நட்சத்திர நடிகர் அர்ஜூன் தாஸ் மற்றும் மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ,நகைச்சுவையில் கலக்கி வரும் யோகிபாபு உடன், மற்றும் வடிவுக்கரசி என நால்வரும் இப்படத்தின் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நால்வரைச் சுற்றித் தான் படத்தின் மொத்தக்கதையும் பின்னப்பட்டுள்ளது.

இப்படத்தின் பூஜையை தொடர்ந்து சென்னை, மங்களூர், மும்பை ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

தமிழில் தொடர் வெற்றிப்படங்களை தந்து வரும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தின் தலைப்பு மற்ற விபரங்கள் ஒவ்வொன்றாக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

தொழில்நுட்ப குழு

இயக்கம் – ஹரிஷ் துரைராஜ்
தயாரிப்பு – பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்
ஒளிப்பதிவு – அரவிந்த் விஸ்வநாதன்
எடிட்டிங் – அருள் மோசஸ்.A
இசை – ஷான் ரோல்டன்
கலை இயக்கம்- ராஜ் கமல்
உடை வடிவமைப்பு – நவா ராம்போ ராஜ்குமார்
ஸ்டண்ட் – Action சந்தோஷ்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

“வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு  விழா !!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”.

இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..,

நடிகை ஷில்பா பேசியதாவது.., 

வா வாத்தியார் நலன் குமாரசாமி சாரின் வித்தியாசமான படம். சின்ன வயதிலிருந்து படம் பார்த்து இன்ஸ்பையர் ஆவோம். அது போல வா வாத்தியார் சரியான விசயத்தைச் சரியான விதத்தில் சொல்லும் படம்.  சத்யராஜ் சாருடன் நடித்தது மிக இனிமையான அனுபவம். ஷாட் சொன்னால் அடுத்த நொடி அவர் அங்கு இருப்பார். அவரிடம் நிறைய விசயங்கள் கற்றுக்கொண்டேன். கார்த்தி உடன் நடித்தது மகிழ்ச்சி. அவரை விட்டால் வேறு யாரும் இந்த ரோல் செய்ய முடியாது. அந்தளவு அசத்தியிருக்கிறார். கீர்த்தியை தமிழ் சினிமாவிற்கு வரவேற்கிறேன். இந்த ப்ராஜெக்ட் அழகாக எடுத்துள்ள ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திற்கு நன்றி. எனக்கு வாய்ப்பு  தந்ததற்கு நன்றி.

ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு பேசியதாவது.., 

இது எனக்கு ஸ்பெஷலான படம். என் அப்பா எம் ஜி ஆர் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார். அந்த காலகட்டத்தில் அவருடன் வேலை பார்க்க முடியாது, ஆனால் அது இந்தப்படத்தில் நிறைவேறியுள்ளது. படத்தில் நிறைய ஆச்சரியங்கள் உள்ளது, அதைச் சொல்ல முடியாது. நான் நிறைய தயாராகி வந்தால், கார்த்தி சார் அவர் அப்பாவிடம் நிறையக் கேட்டுவிட்டு வருவார். அவர் கடினமாக உழைத்துள்ளார்.இந்தப்படத்தில் வேலை பார்த்தது பெரும் மகிழ்ச்சி. ஞானவேல் ராஜா நிறைய உழைத்துள்ளார். படம் வெற்றி பெற வேண்டுமென இறைவனைப் பிராத்திக்கிறேன் நன்றி.

ஜி எம் சுந்தர் சார் பேசியதாவது..

இந்த மாதிரி மேடை ஏற எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளேன் என்று எனக்குத் தான் தெரியும். இந்தப்படத்தில் வாத்தியார் இருக்கிறார், அவர் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. வாத்தியார் பற்றி சத்யராஜ் சார் பேசிக்கொண்டே இருப்பார். அப்படி ஒரு அற்புதமானவரின் ரோலை கார்த்தி சார் செய்துள்ளார். அந்த பாடி லாங்குவேஜ், அந்த பாவனை எல்லாம் அப்படியே கார்த்தி சார் செய்துள்ளார். ஞானவேல் சார் உங்கள் தயாரிப்பில் இரண்டாவது படம் செய்கிறேன். நலன் “காதலும் கடந்து போகும்” படத்தில் இரண்டாவது இன்னிங்ஸ் தந்தார். அவருக்கு நன்றி. சத்யராஜ் சார் என்னை பாரதிராஜாவிடம் சிபாரிசு செய்தார் அதற்காக அவருக்கு நன்றி. இப்படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

பல்லவி சிங் பேசியதாவது..,

வா வாத்தியார் படத்தில் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம். நலன் சாரிடம் வேலை பார்த்தது எப்படி இருந்தது என அனைவரும் கேட்டனர். அவர் என்னிடம் முழு சுதந்திரமாகப் புதிதாக செய்யச் சொன்னார். முழுதாக புதுமையாகச் செய்ய வாய்ப்பு தந்தார். நலனின் விஷனுக்கு உருவம் தந்துள்ளோம் இது ஒரு கூட்டு முயற்சி. அனைவரும் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் நன்றி.

நடிகர் ஆனந்த்ராஜ் பேசியதாவது.., 

அனைவருக்கும் வணக்கம், சிவக்குமார் எனக்கு அண்ணன் மாதிரி தான், கார்த்தி சார் இந்தக்கதையை ஒத்துக்கொண்டதற்கு அவர் தான் காரணமாக இருப்பார். ஏனென்றால் எம் ஜி ஆருடன் அதிகம் பழகியது அவர் தான். அதற்காக அவருக்கு நன்றி. நலனிடம் இந்தப்படத்தைத் தேர்தலுக்கு முன் ரிலீஸ் செய்யுங்கள் என்றேன், அதை இந்த தேர்தலில் செய்துள்ளார். எனக்கு ஸ்பெஷல் கேரக்டர், அதைப்பற்றிச் சொல்ல மாட்டேன், ஆனால் அவர் சொன்ன அளவுக்குச் செய்துள்ளேன் என நம்புகிறேன். சத்யராஜ் சார் எம் ஜி ஆர் தந்த கர்லாக்கட்டையைத் தந்து படத்தில் இதை பயன்படுத்தி நடித்து விட்டுத் திரும்ப கொடுத்திவிடனும் என்றார். அதைத் தூக்கவே முடியவில்லை. எம் ஜி ஆரின் தீரம் அப்போது தான் புரிந்தது. கார்த்தி அருமையான நடிகர், அவருடன் தான் எனக்கு நிறையக் காட்சிகள், அவர் எனக்கு அண்ணன் குழந்தை போலத் தான்,  சூர்யா, ஜோதிகா எல்லோரும் அப்படித்தான். உங்களுக்குப் பிடித்த மாதிரி நலன் இப்படத்தை எடுத்துள்ளார். இப்படம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைக்கும். அனைவருக்கும் நன்றி.

நடிகர் சத்யராஜ் பேசியதாவது.., 

இங்கே நிறையப் புரட்சித் தலைவர் ரசிகர்கள் வந்திருப்பீர்கள். எங்க வீட்டுப் பிள்ளை கார்த்தி இப்படத்தில் எம் ஜி ஆராக நடிப்பது எனக்கு மகிழ்ச்சி. நான் தீவிர வாத்தியார் ரசிகர் ஆனால் நான் வில்லன் ஆனால் ஆனந்த்ராஜ் ரசிகராக நடித்துள்ளார். ஆனால் எம் ஜி ஆர் டயலாக் எல்லாம் சொன்னால் அவரால் என்ன படம் என சொல்ல முடியாது.  

தொடர்ந்து எம் ஜி ஆர் பட வசனங்களை விடாமல் பேசி பட வசனங்களைப் பேசி ஆனந்த்ராஜிடம் படப்பெயர் சொல்லச் சொல்லி அவருடன் நகைச்சுசையாக விளையாடினார்.  

மேலும் அவர் பேசுகையில்.., நான் எம் ஜி ஆரின் அரக்கத்தனமான ரசிகன். எப்போதும் ஒரே புரட்சித் தலைவர் தான். அவர் ரோலில் எங்க வீட்டுப்பிள்ளை கார்த்தி நடித்தது மகிழ்ச்சி. வேறு யாரவது நடித்திருந்தால் வயிறு புகைச்சலாகியிருக்கும். ஆனால் கார்த்தி நடித்தது மகிழ்ச்சி. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது.., 

என்னுடைய திரைப் பயணத்தில் மிக முக்கியமான அழகான தருணம்  நலன், ஶ்ரீனிவாஸ் கவினை சந்தித்தது தான். அவர் படம் வருவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப்படம் அறிவித்த போது போன் செய்து, கெஞ்சி, நான் செய்கிறேன் என வாய்ப்பு வாங்கினேன். நிஜ வாழ்வு  சூப்பர்ஹீரோ என எம் ஜி ஆரை சொல்லாம். அவர் வாழ்க்கையை அவர் ஆளுமையைத் திரையில் கொண்டு வந்திருக்கிறோம். நிறைய உழைத்து இசையைத் தந்துள்ளோம். சத்யராஜ் சார் படத்தில் நான் இருப்பது பெருமையாக இருக்கிறது. இந்தக்கதை கேட்ட போது, கமர்ஷியல் சினிமாவுக்கு ஒரு புது திறப்பாக இருக்குமெனத் தோன்றியது. இசையமைத்தது மிகுந்த மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இந்தப்படம் பெரிய வெற்றி பெறும். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  ரஞ்சித், நலன், கார்த்திக் சுப்புராஜ், என இவர்கள் எல்லாம் சினிமாவுக்குள் வரக்காரணமாக இருந்த ஞானவேல் சாருக்கு நன்றி. இந்தப்படம் பிடித்திருந்தால் எல்லோரிடமும் சொல்லுங்கள் நன்றி.

திங்க் மியூசிக் சார்பில் சந்தோஷ் பேசியதாவது.., 

வா வாத்தியார் படத்தில் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. படத்தின் ஆரம்பத்திலேயே இப்படத்தில் இணைந்து விட்டோம், பாடல்கள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கிறது. நலனின் சூது கவ்வும் படத்தில் இணைந்திருந்தோம், அது பிளாக்பஸ்டர் ஆல்பம். அது போல இந்தப்படப் பாடல்களும் வெற்றி பெறும். இப்படம் கொஞ்சம் பார்த்தேன், படம் அருமையாக வந்துள்ளது அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

சக்திவேல் ஃபிலிம் பேக்டரி சக்தி வேலன் பேசியதாவது.., 

திருப்பதி வந்தால் திருப்பம் என்பார்கள் ஆனால் எனக்கு அது கார்த்தி சார் தான். என் திரை வாழ்க்கையில் அவரது 27 படங்களில், கிட்டதட்ட 15 படங்கள் வரை செய்துள்ளேன் எனக்கு நிறையத் திருப்பம் தந்துள்ளார். கார்த்தி சார் அவர் படங்களில் சின்ன சின்ன விசயத்திற்கும் அவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்வார். அவர் எம் ஜி ஆரை எடுத்து நடிக்கும் போது எவ்வளவு அர்ப்பணிப்பாக உழைத்திருப்பார் எனத் தெரியும்.  ஞானவேலின் அப்பா தீவிர  எம் ஜி ஆரின் ரசிகர். அவர் எடுத்திருக்கும் படம். அவருக்குச் சமீபத்தில் நிறையப் பிரச்சனை வந்தது. சூர்யா சார் கூப்பிட்டு இதைச் செய்து, உன் பிரச்சனையை தீர்த்துக்கொள் என்று சொல்லியிருக்கிறார். வன்மம் நிறைந்த உலகில் சூர்யா போல்  ஒரு ஹீரோ இல்லை. வா வாத்தியார் படம் மூலம் ஞானவேல் சாருக்கு  எல்லாம் மாறும். நலன் இரண்டு படம் செய்துள்ளார்.  இரண்டுமே கல்ட் படம். வா வாத்தியார் ரிலீஸான மறுநாளே கல்ட் படம் எனச் சொல்லி விடுவார்கள். வா வாத்தியார் இந்த வருடத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்குமென நம்புகிறேன் நன்றி.

இயக்குநர் R ரவிக்குமார் பேசியதாவது.., 

நலன் சார் இயக்குநர் குழுவிலிருந்தவன் நான், சூது கவ்வும் படத்தில் வேலை பார்த்தேன். அவரிடம் இருந்து தன்மையாக எப்படி நடந்து கொள்வது எனக் கற்றுக்கொண்டேன். வா வாத்தியார் படம் நான் பார்த்து விட்டேன், நலன் சாரிடம் கார்த்தி சார், எம் ஜி ஆர் மாதிரியே தெரிகிறார் எனச் சொன்னேன். எம் ஜி ஆருக்கு வாழ்க்கை வரலாற்று படமெடுத்தால் அதற்குப் பொருத்தமானவர் கார்த்தி சார் தான். மிக அற்புதமான படமாக வந்துள்ளது. நலன் சாருக்கும் படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதாவது.., 

எல்லோருக்கும் வணக்கம்.  இந்தப்படம் மிகவும் சிரமப்பட்டு எடுத்த படம். சில படங்கள் ஈஸியாக கதை சொல்லிவிடலாம் ஆனால் இது கதை சொல்லவே கஷ்டப்பட வேண்டும். நலன் அதை அழகாக எடுத்துள்ளார். அவர் முதல் இரண்டு படங்களில் விநியோகத்தில் இணைந்திருந்தோம். இப்போது மூன்றாவது படத்தைத் தயாரித்திருக்கிறோம். கார்த்தி சார் மெய்யழகன் கதாபாத்திரத்தைச் செய்வது கடினம் எனப் பலர் சொன்னார்கள் ஆனால் அதைச் சிறப்பாகச் செய்திருந்தார். அதே போல் இந்தப்படத்திலும் அட்டகாசமாகச் செய்துள்ளார். எல்லோருமே மிகக் கடினமான உழைப்பைத் தந்துள்ளனர். கார்த்தி ரசிகர்களுக்கும் அவர்கள் ரசிக்கும் படமாக இருக்கும். வாத்தியார் ஆசி இப்படத்திற்கு உள்ளது, அவரது ஆசியில் இப்படம் வெற்றிப்படமாக அமையுமென நம்புகிறேன் நன்றி.

நடிகை கிருத்தி ஷெட்டி பேசியதாவது.., 

எல்லோருக்கும் வணக்கம். தமிழில் பேச முயற்சிக்கிறேன். இந்தப்படத்தில் தமிழ் மக்களுக்கு அறிமுகமாவது மகிழ்ச்சி. நலன் சாருக்கும், ஞானவேல் சாருக்கும் நன்றி. இந்தப்படத்தில் எனக்கு நிறைய அனுபவம் கிடைத்தது. இந்தப்படத்தில் நடிக்கும் போது டபுள் ஷிப்ட்டில்  நடித்துக்கொண்டிருந்தேன், ஒரு நாள் செட்டில் தூங்கி விட்டேன் ஆனால் எனக்காகச் சத்தம் போடாமல் லைட் செய்தார்கள் அதற்காக அனைவருக்கும்  நன்றி. இப்படத்தில் உடன் உழைத்த அனைவருக்கும் நன்றி. நலன் சார் உடன் வேலை பார்த்தது மிகப்பெரிய மகிழ்ச்சி அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். நான் நடிக்கும்போது சின்ன சின்ன விசயங்களையும் கவனித்துப் பாராட்டினார். சத்யராஜ் சார் ரசிகை நான் ஆனால் அவருடன் எனக்குக் காட்சிகள் இல்லை. அது வருத்தம் தான். என் குடும்பத்தில் பலர்  சிவக்குமார் சார் ரசிகர்கள் தான். எனக்குத் தமிழ் ரசிகர்கள் தரும் அன்பு பெரிய மகிழ்ச்சி தருகிறது. கார்த்தி சார் மிகப்பெரிய ரசிகை நான், அவரை ஷீட்டிங்கில் தொந்தரவு செய்து கொண்டே இருந்தேன். அவருடன் நடிக்கும் என் கனவு நிறைவேறியது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் நலன் குமாரசாமி பேசியதாவது.., 

9 வருடம் கழித்து படம் எடுக்கிறார் என பில்டப் போஸ்ட் எல்லாம் பார்த்தேன். ஆனால் நியாயமாய் நீங்கள் பயப்பட வேண்டும். இவ்வளவு வருடம் படமெடுக்காமல் படமெடுக்க வருகிறானே என யோசிக்க வேண்டும். சூது கவ்வும் படமெடுத்த போது, எஸ் ஆர் பிரபு ரொம்ப வருத்தப்பட்டார், சிவக்குமார் ஐயாவும் ரொம்பவும் வருத்தப்பட்டார். இப்படி தலைப்பு வைத்துப் படமெடுக்கலாமா? எனக் கேட்டார்கள், அது வெறும் கிண்டல் தான் என்றேன், இருந்தாலும் அப்போது ஒரு வாக்குறுதி தந்தோம். தர்மம் வெல்லும் என ஒரு படமெடுப்போம் என சொன்னேன். அது தான் இந்தப்படம். இந்தப்படம் எடுக்க வாய்ப்பு தந்த புரட்சித் தலைவர் எம் ஜி ஆருக்கு கோடான கோடி நன்றி. ஞானவேல் ராஜா, கார்த்தி இருவருக்கும் நன்றி. கார்த்தி மிக அழகாக கதாப்பாத்திரத்தில் பொருந்திப்போய்விட்டார். அத்தனை சிறப்பாகச் செய்துள்ளார். எம் ஜி ஆருக்கு ஒரு அர்ப்பணிப்பு தான் இந்தப்படம். அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் கார்த்தி பேசியதாவது.., 

நலன் சொன்னது போலத் தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் என ஒரு படம் செய்து விட்டு, 10 வருடம் கழித்து தர்மம் வெல்லும் எனப் படம் செய்துள்ளார். நலனுக்கு தான் நிறைய இயக்குநர்களே ரசிகர்களாக இருக்கிறார்கள்.  எங்கு சென்றாலும் நலன் உடன் படம் செய்கிறீர்களா என ஆவலாகக் கேட்பார்கள். அவர் எல்லா இடத்திலும் ஸ்கோர் செய்து விடுகிறார். அரசியல்வாதியைக் கடத்துவது போல ஒரு கதை சொல்வார் என நினைத்தால் வா வாத்தியார் கதை சொன்னார். இது எப்படி நம்மால் செய்ய முடியும் என பயமாக இருந்தது. எவ்வளவு ஜெயித்தாலும் நாம் தோற்றதைப் பற்றித்தான் பேசுவார்கள் அதனால் துணிந்து செய்து விட வேண்டும் என ஒத்துக்கொண்டேன். நலன்  70, 80 கமர்ஷியல் படங்களுக்கு அர்ப்பணிப்பாக இப்படத்தைச் செய்துள்ளார். இந்தப்படத்திற்குள் போன பிறகு தான், எம் ஜி ஆரின் விஸ்வரூபம் புரிந்தது. அவர் தன் ஆளுமையை மக்கள் மத்தியில் நல்லவிதமாகக் கொண்டு சேர்த்தவர். அவர் படங்களில் தம்மடிக்க மாட்டார் தண்ணியடிக்க மாட்டார் அதை தன் ரசிகர்களும் சொல்லிக்கொடுத்து அப்படியே இருக்கச் செய்தவர். எப்படி இப்படி  ஒரு மனிதர் இருந்தார்  என வியக்க வைத்தவர். “இருந்தாலும் பிரிந்தாலும் பேர் சொல்ல வேண்டும்,  இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என பாடி வைத்து விட்டு போய் விட்டார். இன்று சென்னை ரயில் நிலையத்தில் 5000 முறை அவர் பேர் சொல்கிறார்கள். இன்றும் அவர் பற்றி பேசுகிறோம்.  அவர் ரசிகர்கள் அன்புடன்,  அவர் ரசிகர்களின் அன்பிற்கான கடனாகவே ரசிகர்களுக்காகத் தான் இந்தப்படத்தில் நடித்தேன்.  நலன் அவரைப்பற்றி பெரிய ஆராய்ச்சி செய்து படம் எடுத்துள்ளார். 90 கிட்ஸ் சொல்வது போல நலன் யாருனு இந்தப்படம் வந்த பிறகு தெரியும். மலையாளம் போல நம் தமிழ் சினிமாவில் இல்லையே எனத் தோணும். நாமும் புதிதாக முயற்சிக்க வேண்டும். அதற்கு நலன் மாதிரி இயக்குநர் வேண்டும்.  இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும். ஒவ்வொருவரும் அவ்வளவு கடின உழைப்பைத் தந்துள்ளார்கள். சத்யராஜ் மாமா திரும்பவும் ஸ்பெஷலாக  மொட்டை பாஸாக நடித்துள்ளார்.  ராஜ்கிரண் ஒரு எம் ஜி ஆர் பக்தராக நடித்துள்ளார். கிருத்திக்கு முதல் தமிழ்ப்படம் சூப்பராக நடித்துள்ளார். சந்தோஷ் சூப்பரான இசையைத் தந்துள்ளார். எல்லோரும் பெரும் உழைப்பைப் போட்டு உருவாக்கியுள்ள படம். நம் தமிழ் சினிமாவுக்கு பெருமையாக இந்தப்படம் இருக்கும். ஞானவேலுக்கு இந்தப்படம் பெரிய லாபம் தரக்கூடிய படமாக வெற்றியைத் தரட்டும். புரட்சித் தலைவரின் ஆசியுடன் இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி.

தொடர்ந்து வித்தியாசமான களங்களில், அழகான படைப்புகளை வழங்கி அசத்தி வரும் நடிகர் கார்த்தி மற்றும் தனித்துவமான இயக்குநரான நலன் குமாரசாமி ஆகிய இருவரின் கூட்டணியின் மாயாஜாலத்தைத் திரையரங்கில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்த்ராஜ், கருணாகரன், ரமேஷ் திலக், பி எல் தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்.

பெரும் பொருட்செலவில்  ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா இந்தத் திரைப்படத்தைப் பிரம்மாண்டமாகத்  தயாரித்திருக்கிறார்.  

இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது