Cinema

வெற்றி நடிக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் ‘ஆலன்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட தயாரிப்பாளர் டி. சிவா பெற்றுக் கொண்டார்.

இயக்குநர் ஆர். சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆலன்’ எனும் இந்த திரைப்படத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, ‘அருவி’ மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் வழங்குகிறார்.

‘ஆலன்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், தயாரிப்பாளர் டி. சிவா, இயக்குநர் கோபிநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர். சிவா விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசுகையில், ” இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் எழுத்தாளர்களைப் பற்றி பேசி இருக்கிறேன். ஏன் எழுத்துக்களை பற்றி பேசினேன்? என்றால்.. என்னுடைய 12 வயது முதல் 18 வயது வரை நிறைய புத்தகங்களை வாசித்திருக்கிறேன். கையில் கிடைக்கும் புத்தகங்கள் அனைத்தையும் படித்திருக்கிறேன். இந்த தருணத்தில் என்னுடைய பெற்றோர்கள் எப்போதும் என்னுடைய வாசிப்பிற்கு ஆதரவாகவே இருந்தார்கள். இதற்காகவே அவர்களுக்கு இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கைக்கு புத்தகத்தை படிப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் நான் தெரிந்து கொண்டேன். இயக்குநர் கே. பாக்யராஜ் எழுதிய திரைக்கதை எழுதுவது எப்படி? என்ற புத்தகத்தை தேடி வாசித்த பிறகு தான் சினிமா மீது எனக்குள் ஒரு ஆவல் வந்தது. நாமும் ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும்… இயக்குனராக வேண்டும்… என்று எண்ணி சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயில்வதற்கு முயற்சித்தேன். ஆனால் குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாகவும், குடும்ப பொறுப்பினை சுமக்க வேண்டும் என்பதற்காகவும் சிங்கப்பூருக்கு சென்றேன். அங்கு என்னுடைய வாழ்க்கை முப்பது ஆண்டுகள் கழிந்தது. அங்கு ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியராக ஒரு நிறுவனத்தை தொடங்கி இன்று வரை வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்.

அங்கிருந்து இங்கே பார்க்கும்போது இங்கு எழுத்திற்கு கொடுக்கும் மதிப்பை ஆய்வு செய்தேன். இங்கு புத்தகம் வாசிப்பது குறைந்துவிட்டது. பெற்றோர்களும் குழந்தைகளுக்கு புத்தகம் வாசிப்பதை ஊக்கப்படுத்தவில்லை. மிகப்பெரிய தவறினை செய்து கொண்டிருக்கிறோம். பாட புத்தகங்கள் படிப்பது மட்டும் வாழ்க்கை அல்ல. அதைக் கடந்து வாழ்வியல் தொடர்பாக ஏராளமான எழுத்துகள் இங்கு இருக்கிறது. தமிழில் லட்சக்கணக்கான எழுத்துக்கள் இருக்கிறது. லட்சக்கணக்கான புத்தகங்கள் இருக்கிறது. தயவுசெய்து உங்கள் வீட்டுப் பிள்ளைகளை புத்தகங்களை வாசிக்க சொல்லுங்கள்.

நான் புத்தகங்களை வாசிக்க தொடங்கும் போது வயது 12. எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என்னுடன் 18 மாணவர்கள் படித்தனர். புத்தகம் வாசித்ததால் ஒழுக்கமானவனாக வாழ்ந்து வருகிறேன். அதனால் புத்தகங்களை படிக்குமாறு சொல்லிக் கொடுங்கள். ஏனென்றால் வாழ்க்கை அதில் தான் இருக்கிறது.

கோவிட் காலகட்டத்தில் எனக்கு நான்கு மாதம் ஓய்வு கிடைத்தது. அப்போதுதான் என் ஆழ் மனதில் விதைத்த விதை எட்டிப் பார்த்தது. ஏதாவது எழுத வேண்டும்… ஏதாவது செய்ய வேண்டும்… என்ற உந்துதல் ஏற்பட்டது. அதனால் தான் இரண்டாவது படமாக ‘ஆலன்’ எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறேன். இது ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை.

ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2018 ஆம் ஆண்டில் ஐநா சபையில் கிரேட்டா என்ற ஒரு இளம் பெண் இந்த உலகத்தினரை பார்த்து ஒரு கேள்வியை கேட்கிறார். அவர் துணிச்சலாக கேட்ட கேள்விக்கான காரணம் என்ன? புவி வெப்பமயமாதல். இந்த பூமியில் 1. 5° செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்திருக்கிறது. இந்த உலகம் எங்களுக்கானது. காற்று எங்களுக்கானது நீர் எங்களுக்கானது இதை அசுத்தம் செய்வதற்கு நீங்கள் யார்? என ஒரு சின்ன பெண் இந்த கேள்வியை கேட்டார். இந்த உலகம் நமக்கானது மட்டுமல்ல. நமது சந்ததிகளுக்குமானது. அடுத்த தலைமுறையினருக்கும் இதனை விட்டுச் செல்ல வேண்டும். அந்தப் பெண் நாம் செய்த தவறுகளை சுட்டிக் காட்டினார்.
நாம் ஏதோ இயந்திரத்தனமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். திரும்பிப் பார்க்கிறோம். கிட்டத்தட்ட அதே போல் தான் இந்த படமும் இருக்கும்.‌

இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் சென்று இருந்தோம். அங்கு நான்கு ஐந்து சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஐந்து அல்லது ஆறு வயது தான் இருக்கும். அவர்களில் ஒருவன் ஓடி வந்து என்னிடம் இது திரைப்படமா? எனக் கேட்டார். ‘ஆம்’ என்று பதிலளித்துவிட்டு, நடிக்கிறாயா? என கேட்டேன். வில்லனாக நடிக்கிறேன் என பதில் அளித்தான். ஏன்? என்று கேட்டபோது, ‘அப்போதுதான் வெட்டலாம். குத்தலாம்’ என பதில் அளித்தான். ஒரு பிஞ்சு மனதில் எந்த மாதிரியான நஞ்சினை விதைத்திருக்கிறோம் என அதிர்ச்சி அடைந்தேன். வன்முறையை.. அவனுக்கு இங்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய பாவம் இல்லையா? மனசாட்சி இல்லையா? எதை விதைக்கிறோம்..? இங்கு நான் நல்ல விசயத்தை சொல்வதற்கு .. புத்தகத்தை படியுங்கள் என்று சொல்வதற்கு சிங்கப்பூரிலிருந்து நான் இங்கு வர வேண்டியதாக இருக்கிறது. நான் இங்கு சம்பாதிப்பதற்காக வரவில்லை. இது என் மனசின் ஆதங்கம்…! வேதனை…! வலி…!எதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்? .. இதுதான் என்னை இந்த படத்தை இயக்கத் தூண்டியது. எழுத்தைத்தான் இந்தப் படத்தில் அழுத்தமாக பேசி இருக்கிறேன். எழுதினால் யாருக்கு பயன்படும்…. எழுத்தினால் இந்த உலகத்திற்கு என்ன நன்மை கிடைக்கும்? ஒரு புத்தகம் ஆயிரம் நண்பர்களுக்கு சமம். ஒரு புத்தகம் வாழ்க்கையை மாற்றிவிடும். நான் இங்கு நிற்பதற்கும் புத்தகங்கள் தான் காரணம். நான் ஒரு ஒழுங்கான வாழ்க்கையையும்… அர்த்தமுள்ள தேடலையும் எனக்குள் ஏற்படுத்தியது புத்தகங்கள் தான். நான் என் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதற்கும் நண்பர்கள் காரணமல்ல. புத்தகங்கள் தான் காரணம்.

என் குருநாதர் கே. பாக்யராஜ். அவருடைய எழுத்தில் வெளியான பாக்யா எனும் வார இதழின் முதல் பிரதியை வாங்குவதற்காக 12 கிலோமீட்டர் அதிகாலையிலேயே பயணித்து வாங்கி படித்திருக்கிறேன். அந்த அளவிற்கு வாசிப்பின் மீது தீரா காதல் எனக்கு உண்டு. ஆனால் சிங்கப்பூர் சென்ற பிறகு அங்கு படிக்க முடியவில்லை. ஏனெனில் அது ஒரு இயந்திர வாழ்க்கை. அதனால் இங்கு சிறப்பு விருந்தினராக கே. பாக்யராஜ் வருகை தந்ததற்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படம் ஆலன் அனைவருக்கும் பிடிக்கும். கஷ்டப்பட்டு படத்தை உருவாக்கி இருக்கிறோம். ஜெர்மனி, காசி, வாரணாசி, ரிஷிகேஷ், காரைக்குடி, கொடைக்கானல், ராமேஸ்வரம் என பல இடங்களுக்கு சென்று இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். இந்த படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தால் தயாரிப்பில் எந்த சமரசமும் இன்றி வன்முறையில்லாமல் தரமாக உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படத்தை வன்முறை கலந்து என்னால் உருவாக்கி இருக்க முடியும். ஆனால் கதையின் நாயகன் அந்த வன்முறையையும் கடந்து செல்கிறான். வாழ்க்கையை பார்வையிடுகிறான். ஒரு பலசாலியை எளியவன் தாக்க முடியுமா? எளியவன் திருப்பித் தாக்க முடியாத ஒரு விசயத்தை நாம் ஏன் திணிக்கிறோம்? எல்லாம் கலந்தது தான் இந்த உலகம் என்ன சொல்வார்கள். இல்லை என்று நான் மறுக்கவில்லை‌. ஆனால் இங்கு எது அதிகம் தேவைப்படுகிறது? அன்பும் காதலும் தான். அதுதான் அதிகம் தேவை. இயற்கையை கொண்டாடுங்கள். அன்பை கொண்டாடுங்கள். காதலை கொண்டாடுங்கள். இந்த உலகம் அமைதியாக வாழும். இந்த தலைமுறை அமைதியாக.. பாதுகாப்பாக.. வாழும். வீட்டில் மட்டும் பாதுகாப்பு கொடுத்தால் போதாது. வெளியில் செல்லும்போதும் பாதுகாப்பு இருக்க வேண்டும்.

மேலும் இந்தப் படத்திற்காக நடித்த நடிகர்கள், நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார் .

‘ஆலன்’ படத்தினை வழங்கும் விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான ஜி. தனஞ்ஜெயன் பேசுகையில், ” இந்த திரைப்படத்தை நண்பர் ஒருவர் மூலமாக பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. படத்தின் டைட்டில் ஆலன் என்று இருந்தது. இது ஆங்கில படமா..! என்ற சந்தேகமும் எனக்குள் இருந்தது. நான் தினமும் நிறைய படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்தை பார்க்கத் தொடங்கியவுடன் தொடர்ந்து பார்த்தேன். இந்த படத்தை பார்த்தவுடன் இயக்குநர் சிவாவின் நம்பிக்கை தெரிந்தது.

சிங்கப்பூரில் தொழிலதிபராக இருக்கும் அவருக்கு சினிமா மீது ஒரு தீராத காதல். அங்கிருந்து இங்கு வருகை தந்து படத்தை இயக்கி விட்டு மீண்டும் அங்கு சென்று விடுகிறார். அவருக்காக இங்கு ஒரு குழு கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறது. பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். அவர் ஆத்மார்த்தமாக நேசிக்கும் சினிமாவை எந்தவித சமரசம் இன்றி உருவாக்கி இருக்கிறார். காதலும் அன்பும் கலந்த ஒரு படைப்பை தந்திருக்கிறார். இந்த உலகத்திற்கு காதல்தான் முக்கியம் வன்முறை முக்கியமல்ல. அன்பைத் தேடி நாம் பயணித்தால் போதும்… வாழ்க்கை சிறக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்பதை இந்த படத்தில் சொல்லியிருக்கிறார். இந்த திரைப்படத்தை நான் ஒரு கவித்துவமான படைப்பாக பார்க்கிறேன்.

இந்தப் படத்தை பற்றி அவர் என்னிடம் பேசும் போது இந்த திரைப்படம் மக்களை சென்றடைய வேண்டும். அதற்கு உதவி செய்யுங்கள் என்று தான் கேட்டார். ஒரு படைப்பாளியாக வெற்றி பெற வேண்டும் என்றார். நானும் அவரைப் போல் சினிமாவை நேசிப்பதால் இதற்கு என்னாலான உதவிகளை செய்ய சம்மதித்தேன். இந்தப் படத்திற்காக நான் சில ஆலோசனைகளை வழங்கிய போது எந்தவித மறுப்பும் சொல்லாமல் செய்தார். இந்தப் படத்தை பார்க்கும் போது.. மக்களுக்கு தேவையான விசயத்தை தான் இயக்குநர் சொல்லி இருக்கிறார் என்பதை அனைவரும் உணர்வீர்கள். இந்தத் திரைப்படத்தை வெகுவிரைவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நடிகர் வெற்றி அவருடைய பயணத்தில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். ‘எட்டு தோட்டாக்கள்’, ‘ஜீவி’, ‘பம்பர்’ என வித்தியாசமான கதையையும் தேர்வு செய்து நடித்து வருகிறீர்கள். இந்தப் படத்தில் அவர் ஒரு நல்ல பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். இதைத்தொடர்ந்து அவர் மேலும் பல நல்ல வெற்றிகளை தர வேண்டும். ஆலன் படத்திற்காக நீங்கள் கொடுத்த ஒத்துழைப்பு எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. இது போன்ற ஒரு கதையில் நடிப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அந்த தைரியம் உங்களிடத்தில் இருக்கிறது. அவருடைய முயற்சி வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.

கவிஞர் மனுஷ்யபுத்திரன், கேபிள் சங்கர் ஆகியோரும் இந்த திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள் அவர்களுக்கும் நன்றி. ” என்றார்.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசுகையில், ” கொந்தளிப்பான மனநிலையில் இருக்கும் போது கவிதை எழுதி இருக்கிறேன். அதன் பிறகு பல ஆண்டுகள் கடந்து.. மனம் ஒரு புள்ளியில் ஒடுங்கி, அமைதி அடைந்தது. அதன் பிறகும் கவிதை எழுதி இருக்கிறேன்.

இந்த ஆலன் படத்தில் கதையின் நாயகனான தியாகு கதாபாத்திரம் ஒரு புள்ளியில் வாழ்க்கையைத் தொடங்கி ஏராளமான சுழலுக்குள் சிக்கி அதிலிருந்து வெளியே வந்து அதனை கடந்து வாழ்க்கை கொடுத்த அனுபவ சாரமாக ஒரு நூலை எழுதுகிறான். அதன் மூலமாக அவன் எழுத்தாளராக மாற்றம் பெறுகிறார். ஏறக்குறைய என்னுடைய வாழ்க்கை பயணத்தை போல் தான்.. என்னை போல் எழுதிக் கொண்டிருக்கிற பாடல் ஆசிரியர்கள் எழுத்தாளர்கள் போன்ற இலக்கிய ஆளுமைகளின் வாழ்வியலில் இந்த கதாபாத்திரம் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு கொள்ளும். அதனால் இந்த படத்தில் பாடல்கள் எனக்கு மிகவும் நெருக்கம். இந்தப் படத்தில் பாடல் எழுதிய போது என் வாழ்க்கையை நான் மீண்டும் நினைத்தது போல் இருந்தது. அதனால் பாடல் எழுதும் போது எந்த சிரமமும் இல்லை.

ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு தாளம் உண்டு. அதனை நாம் தொலைக்கும் போது.. அதனை மீட்டெடுப்பது போல் இந்த படத்தின் பாடல்கள் இருந்தது. இதற்கான முயற்சி தற்போதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெறும் நான்கு பாடல்கள் இந்திய செவ்வியல் இசையை முதன்மையாகவும், அதற்கு இணையாக மேல்நாட்டு இசைத் தாளத்தை துணையாகவும் கொண்டு பாடல் உருவாகி இருக்கிறது. இதற்காக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணாவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.‌ இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா சிறிய வயதில் இருந்தே இசை துறையில் பணியாற்றி வருகிறார். திரை துறையில் தான் அவருக்கு இது முதல் திரைப்படம். இந்தப் படத்தின் பாடல்களை பொறுமையாகவும், மன அமைதியுடனும் கேட்கும் போது… இந்த நிலத்திற்கான தாளத்தை உங்களால் கேட்க முடியும்.

‘நம்முடைய அழுக்குகளை நாமே குறைத்துக் கொண்டு வருவது.. அதன் மூலம் நாம் மேலே உயர்ந்து எழுவது’ என சைவ சித்தாந்தம் வலியுறுத்தும் கருத்தை என் வாழ்க்கையில் நான் கடைப்பிடித்த போது என் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்பட்டது. என் எழுத்திலும் மாற்றம் ஏற்பட்டது.

‘ஆலன்’ என்ற தலைப்பு கேட்கும் போதெல்லாம் எனக்கு நெருக்கமானதாக இருந்தது. மேலும் இந்த படம் எனக்குள் நெருக்கமாக இருப்பதற்கு என்னுடைய இளைய சகோதரர் நடிகர் விவேக் பிரசன்னா இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்பதும் ஒரு காரணம்.

சிவன் அருளால் சிவா இயக்கிய ஆலன் திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா பேசுகையில், ” இது என்னுடைய முதல் படம். இந்த திரைப்படத்திற்கான வாய்ப்பு எதிர்பாராமல் கிடைத்தது. இதற்கு முன் நான் ஒரு படத்திற்காக இசையமைக்க ஒப்பந்தமானேன். அந்தப் படத்திற்காக மூன்று பாடல்களை இசையமைத்தேன் அந்த பாடல்களை ஒளிப்பதிவாளர் விந்தன் கேட்டார். அவரின் பரிந்துரையின் பேரில் தயாரிப்பாளர் இயக்குநர் சிவா அந்த பாடல்களை கேட்டு, இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை வழங்கினார். இந்த திரைப்படம் என்னுடைய அறிமுக படமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அனைவரின் ஆசியையும் கோருகிறேன்.

இயக்குநர் சிவா சினிமா மீது தீவிர காதல் கொண்டவர். இந்தப் படத்திற்காக இசையமைக்கும் போது எந்த கட்டுப்பாடுகளையும் அவர் விதிக்கவில்லை.‌ இந்தப் படத்திற்காக முழுமையான பங்களிப்பை வழங்குங்கள் என்றார்.‌ அவருடைய எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்து இருக்கிறேன் என நம்புகிறேன்.

இந்தப் படத்திற்கு பாடல் எழுதிய பாடல் ஆசிரியர் கார்த்திக் நேத்தாவின் தீவிர ரசிகர் நான். நான் இசையமைத்த மற்றொரு படத்திற்கும் அவர்தான் பாடல்களை எழுதி இருக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெறும் நான்கு பாடல்களையும் அவர்தான் எழுதியிருக்கிறார். நான் அவருக்கு மெட்டுகளை அனுப்பி வைப்பேன். அவர் அதற்கு பாடல் வரிகளை எழுதி அனுப்புவார். அத்துடன் ஏதாவது திருத்தம் மேற்கொள்ள வேண்டுமா? என கேட்பார். இதற்கு மேல் திருத்தம் தேவையில்லை என நான் சொல்வேன். சிறப்பான பாடல் ஆசிரியர். அவருடைய வார்த்தைகள் தான் இந்த பாடல்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. அவருக்கு இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் வெற்றியின் நடிப்பு நன்றாக இருந்தது. படத்தில் நடித்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். ” என்றார்.

‘ஜீவி’ பட இயக்குநர் கோபிநாத் பேசுகையில், ” சில தினங்களுக்கு முன் தயாரிப்பாளரும்,விநியோகஸ்தருமான தனஞ்செயன் தொடர்பு கொண்டு ஆலன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார். அதற்குப் பிறகுதான் இந்தப் படத்தில் அவருடைய பங்களிப்பும் இருக்கிறது என்பதனை தெரிந்து கொண்டேன். பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் தனஞ்ஜெயன் சார் கடுமையாக உழைப்பார். இந்த படத்தில் அவர் இணைந்ததால் இந்த படம் வெற்றியை பெறும் என உறுதியாக நம்புகிறேன்.

பம்பர் படத்திற்கு முன் வெற்றியை ஒரு முறை இயல்பாக சந்தித்தேன். அப்போது அவரிடம் கன்டென்ட் ஓரியண்டாகவே நிறைய படங்களை தேர்வு செய்து நடிக்கிறீர்கள். அது வரவேற்கத்தக்கது தான். அதே நேரத்தில் கமர்சியல் பிளஸ் கன்டென்ட் ஜானரிலும் நடிக்க வேண்டும் என சொன்னேன். அதன் பிறகு பம்பர் படத்தின் டீசரை காண்பித்தார். அந்தப் படம் வெற்றி பெறும் என்று அப்போதே அவரிடம் சொன்னேன். அதன் பிறகு அவர் தேர்வு செய்து வைத்திருக்கும் கதைகள் மற்றும் படங்கள் அனைத்தும் நன்றாக இருந்தன. அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள். ஆனாலும் திரை உலகில் அவர் இப்போது இருக்கும் உயரத்தை விட மேலும் உயர வேண்டும். அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என ஒரு நண்பராக வேண்டுகோள் வைக்கிறேன். அடுத்த வருடம் இதை விட ஒரு படி மேலே உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இந்தப் படத்தின் பாடலை கேட்டவுடன் வெற்றியை தொடர்பு கொண்டு.. பாடல் மிக சிறப்பாக இருக்கிறது. யார் இசையமைப்பாளர்? என கேட்டேன். அவர் மனோஜ் கிருஷ்ணா என சொன்னார். படத்தின் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. அவருக்கும் என் வாழ்த்துக்கள். பாடல் ஆசிரியர் கார்த்திக் நேதாவிற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசுகையில், ” படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரான சிவா என்னுடைய சிறந்த வாசகர். அவரும் ஒரு எழுத்தாளர். என் இனிய நண்பர். அவரைப் பற்றிய ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர் எழுதிய புத்தகம் ஒன்று இம்மாதம் வெளியாகிறது. அதை என்னுடைய உயிர்மை பதிப்பகத்தில் இருந்து தான் வெளியிடுகிறோம். அவர் எழுதிய புத்தகத்தை வாசிக்கும் போது அவர் ஒரு மிக முக்கியமான எழுத்தாளர் என்பதை உணர்ந்தேன். அவருடைய எழுத்தில் நகைச்சுவை… எழுத்து நடை..
கூர்மையான சமூகப் பார்வை… என பல அம்சங்களும் அவருடைய சிறுகதை தொகுப்பில் இருக்கிறது.

அவருக்குள் இருக்கும் சினிமா பற்றிய கனவு பெரியது. அவருடைய வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை அவர் சொல்ல கேட்டிருக்கிறேன். சினிமா என்கிற கலை மீது அவர் அடங்காத அன்பினை கொண்டிருக்கிறார்.‌ இவரைப் போல் பலர் தமிழகத்திற்கு வெளியே இருக்கிறார்கள்.

தான் சம்பாதித்த பணத்தை வைத்து ஒரு நல்ல படமாக வழங்க வேண்டும் என நினைக்கிறார். சமூகத்துக்கு நல்லதொரு செய்தியை சொல்லும் படைப்பாக தர வேண்டும் என நினைக்கிறார். சினிமாவில் சமூக பொறுப்புணர்வு உள்ள படைப்பாளியாக வரவேண்டும் என விரும்புகிறார்.‌ இதனை அவரிடம் நடந்த தொடர் உரையாடல்கள் மூலம் நான் தெரிந்து கொண்டேன்.

இந்தப் படத்தில் நானும் என்னுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறேன். அந்த தருணத்தில் நண்பருடன் இருக்கிறேன் என்ற உணர்வு தான் எழுந்தது.

அவருடைய கனவுகள் வெல்லட்டும். இந்தத் திரைப்படம் தனஞ்செயன் வழங்குகிறார் என்ற உடன் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அவர் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் இந்த திரைப்படத்திற்காக மேற்கொள்வார்.

நாங்கள் கல்லூரி மாணவர்களுக்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திரைக்கதை எழுதுவதற்கான பயிற்சி குறித்த பட்டறையை மூன்று நாள் நடத்தினோம். அந்த நிகழ்வில் தமிழகத்தில் முன்னணியில் இருக்கும் அனைத்து நட்சத்திர இயக்குநர்களும் கலந்து கொண்டு பேசினார்கள். அனைவரும் திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் பற்றி பேசினார்கள். அவர் திரைப்படங்களை இயக்கி நிறைய ஆண்டுகள் ஆகிவிட்டது. இருந்தாலும் இன்றும் அவரைப் பற்றி ஏன் பேசுகிறார்கள்? அவரைக் கடந்து திரை கதையை பற்றி பேசுவதற்கு வேறு நபர் ஏன் இல்லை? என்ற விசயம் எனக்கு பெரிய ஆச்சரியத்தை அளித்தது. அவர் இயக்கிய காலகட்டத்தில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்திருக்கிறார் என்பதை தற்போது உணர முடிகிறது. அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கும் இந்த மேடையை நானும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படம் வெற்றி பெறட்டும். தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் நண்பர் சிவா வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் டி. சிவா பேசுகையில், ” தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர். சிவாவின் பேச்சில் சமூக அக்கறை தெரிந்தது. அவருடைய நல்ல எண்ணத்திற்காகவும், நோக்கத்திற்காகவும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று அவர் தொடர்ந்து திரைப்படங்களை இயக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

தமிழ் திரை உலகில் நிதானமாக பயணித்து நல்லதொரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகர் வெற்றிக்கு இந்த திரைப்படம் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும். அவர் நடித்த முதல் படமான எட்டுத் தோட்டாக்கள் என்ற படத்தில் நான் நடித்திருக்கிறேன். மிகவும் நல்ல மனிதர். தனக்கு எந்த கதை பொருத்தமாக இருக்கிறதோ…! அதனை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணாவிற்கும், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவிற்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தனஞ்செயன் எந்த வேலையை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கும். அவர் இணைந்திருக்கும் இந்த ஆலன் படத்திற்கும் அவர் உச்சபட்ச உழைப்பை வழங்கி இந்தப் படத்தில் வெற்றிக்கு பாலமாக இருப்பார். ” என்றார்.

நடிகர் வெற்றி பேசுகையில், ” ஆலன் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் – தயாரிப்பாளர் சிவாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து திரில்லர் திரைப்படங்களை தான் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு காதல் படத்தில் நடிப்போம் என்று யோசித்து கொண்டிருக்கும்போது.. சிவா சார் இப்படத்தின் திரைக்கதையை என்னிடம் கொடுத்தார். படித்தவுடன் இரண்டு விசயங்கள் தான் எனக்குள் தோன்றியது. இந்தப் படத்தை சிறிய பட்ஜெட்டில் தயாரிக்க முடியாது. பிரம்மாண்டமாக பெரிய பட்ஜெட்டில் உருவாக்க வேண்டும். அடுத்ததாக இசையமைப்பாளர் திறமையானவராக இருக்க வேண்டும் என நினைத்தேன். காதல் கதை என்பதால் இது முக்கியம் என தயாரிப்பாளிடம் சொன்னேன். அவரே இயக்குநர் என்பதால் அவருடைய கற்பனைக்காக செலவு செய்ய தயாராக இருந்தார். படத்தினை கஷ்டப்பட்டு தான் உருவாக்கியிருக்கிறோம். படத்தில் நடித்த சக கலைஞர் அனைவரும் நன்றாக தங்களுடைய உழைப்பை வழங்கி இருக்கிறார்கள். இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா சிறந்த இசையை வழங்கி இருக்கிறார். இது போன்ற புதிய முயற்சிகளுக்கு ஆதரவு அளியுங்கள்” என்றார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ”
இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஓம் நமச்சிவாய’ என்ற பாடல் ஒலித்தது. ஓம் நமச்சிவாய என்றவுடன் அது ஆன்மீகமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்ப்பை பொய்யாக்கி, அதை ஒரு கமர்ஷியல் ரிதமாக மாற்றி இசையமைத்திருந்தார் அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா. இதையே பிரமிக்க வைக்கும் வகையில் உருவாக்கி இருந்தார் என்றால் படத்தில் அனைத்து பாடல்களையும் அவர் சிறப்பாக உருவாக்கி இருப்பார். அதனால் இந்த தருணத்தில் அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறிய முதலீட்டு திரைப்படங்களை திரையரங்கத்திற்கு கொண்டு வருவதில் பெரு முயற்சி செய்து வருபவர் தனஞ்செயன். அவர் இந்தப் படத்திலும் இணைந்திருப்பதற்காக அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றி என்று சொன்னால் வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடிப்பவர் என்ற ஒரு எண்ணம் அனைவரிடத்திலும் இருக்கிறது எனக்கும் அந்த எண்ணம் இருக்கிறது. இவர் எல்லா படங்களையும் ஒப்புக்கொண்டு நடிப்பவர் அல்ல என்பது ரசிகர்களுக்கும் தெரியும். ஏதாவது வித்தியாசம் இருந்தால் தான் இவர் நடிக்க ஒப்புக் கொள்வார் என்பதால்… அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆலன் திரைப்படம் வித்தியாசமாக இருக்கும். இந்தப் படத்தை தேர்வு செய்து நடித்ததற்காக நடிகர் வெற்றிக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது இந்த வெற்றிப் பயணத்தை மாற்றிக் கொள்ளாமல்… புதிய முயற்சிக்கு மேற்கொள்ளுங்கள். இதுவும் காதல் கதை தான். ஆனால் இதிலும் கமர்ஷியல் கலந்திருக்கிறது.

பிரிவு என்ற தலைப்பில் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அது மிகச் சிறப்பாக இருக்கிறது. தமிழ் மொழியில் அடுத்தவருடைய திறமைக்காக அவர் சேவை செய்து கொண்டிருக்கிறார். இதற்காகவும் அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கலந்து கொண்ட திரைக்கதை எழுவது குறித்து எழுதுவது குறித்த பயிற்சி பட்டறையில் என்னைப்பற்றி அனைத்து இயக்குநர்களும் பேசியதாக குறிப்பிட்டார். அதை கேட்பதற்கு பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இவை அனைத்தும் எங்களுடைய குருநாதர் பாரதிராஜாவுக்குத்தான் சேரும். ஏனெனில் அவர் இல்லை என்றால் நான் இல்லை.

இங்கு பேசியவர்களில் பாடல் ஆசிரியர் கார்த்திக் நேத்தா பேசியது எனக்கு புரியவில்லை. இருந்தாலும் ரசித்தேன். அவர் முதலில் எழுதிய கவிதை என்று ஒரு கவிதையை வாசித்தார். அது எனக்கு புரியவே இல்லை. ஏனென்றால் சொற்கள் புதிதாக இருந்தது. பிறகு பத்து வருஷம் கழித்து கவிதை எழுதினேன் என்றார். அதுவும் எனக்கு புரியவில்லை. ஆனால் இறுதியில் ஒரு கவிதையை வாசித்தார். அது எளிதாக இருந்தது . அனைவருக்கும் பிடித்திருந்தது.

தயாரிப்பாளரும், இயக்குநருமான சிவாவிற்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். பேரும் புகழும் வேண்டும் என்பதற்காக திரைத்துறைக்கு வருவார்கள் அல்லது சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வருவார்கள். நானும் பேரும் புகழுக்காக தான் திரைத்துறையில் நுழைந்தேன். அதன் பிறகு சம்பாத்தியம் கிடைத்தது. ஆனால் இந்த இரண்டு விசயத்தை கடந்து வேறு ஒரு விசயம் இருக்கிறது என்பதை சிவா சொல்லும்போது.. மிகவும் நெகிழ்வாக இருந்தது. சமூக சேவைக்காக சினிமாவை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்றதும் அவர் மீது எனக்கு மரியாதை வந்தது.

குடும்ப சூழல் காரணமாக சிங்கப்பூருக்கு சென்று அங்கு சம்பாதித்து, சம்பாதித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்து, மேலும் சம்பாதிக்க வேண்டும் என நினைக்காமல்… சினிமாவில் அவர் என்ன சொல்ல வேண்டும் என்று விரும்புகிறாரோ.. அதை ஆத்மார்த்தமாக செய்வதற்காக ஆலன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். நஷ்டத்தை பற்றியோ அல்லது வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்.

அவருடன் பேசும்போது எழுத்தாளர்களுக்கு சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டில் நிறைய மரியாதை இருக்கிறது. ஆனால் இங்குதான் எழுத்தாளர்களுக்கு உரிய மரியாதை இல்லை என குறிப்பிட்டார். அந்த ஆதங்கத்தின் காரணமாகவே இந்த படத்தின் நாயகன் வெற்றியை ஒரு எழுத்தாளராக நடிக்க வைத்திருக்கிறார்.

உண்மையில் கதை என்பது நம்முடைய வாழ்வில் இருந்து எடுப்பதுதான். ஒவ்வொருவரும் கதாசிரியர்கள்தான் அவர்களுடைய வாழ்க்கையில் பாதித்த விசயத்தை நினைவு படுத்தி எழுதினால் அதுவே சிறந்த கதையாக இருக்கும்.

சினிமாவிற்கு வரும்போது ஒன்று அல்லது இரண்டு கதைகள் உடன் வந்தால் போதும். அதன் பிறகு இங்கு கிடைக்கும் அனுபவத்தை வைத்து கதையை உருவாக்கிக் கொள்ளலாம். என்னிடம் முதலில் சுவரில்லாத சித்திரங்கள் கதை மட்டும் தான் இருந்தது. அதன் பிறகு தான் ஒரு கை ஓசை படத்தின் கதை உருவானது. அதன் பிறகு மௌன கீதங்கள்… இப்படி படிப்படியாக அனுபவங்களின் மூலம் கதைகளை உருவாக்கினேன்.

நம் வாழ்க்கையை பார்ப்பதும் ஒன்றுதான். புத்தகங்களை படிப்பதும் ஒன்றுதான். ஏனெனில் ஒருவன் தன் வாழ்க்கையில் ஏராளமான அனுபவங்களை சந்தித்திருக்க முடியாது. ஆனால் புத்தகங்களை படிக்கும் போது தான் அந்த கதாசிரியர் .. அவருடைய வாழ்க்கையில் சந்தித்த பல மனிதர்களை கதாபாத்திரங்களாக உருவாக்கி இருப்பார்.

நான் என் வாழ்க்கையில் காண்டேகர் கதைகள் ,ஜெயகாந்தன் கதைகள், கல்கியின் கதைகள் ஆகியவற்றை படித்திருக்கிறேன். இது போன்ற ஏராளமான புத்தகங்களை படிக்கும் போது புதிய புதிய கதாபாத்திரங்கள் கிடைக்கும்.

அதேபோல் கடைசி வரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். கடைசி வரை நாம் கற்றுக் கொள்வதற்கு ஏதேனும் ஒரு விசயம் இருந்து கொண்டே இருக்கும். இன்று கூட ஆலன் என்றால் என்ன? என்று எனக்குத் தெரியவில்லை. இது தொடர்பாக சிவாவிடம் கேட்டபோது ஆலன் என்றால் சிவன் என்றார். இது எனக்கு ஒரு புது விசயமாக இருந்தது.

இந்தப் படம் காதலும் ஆன்மீகமும் கலந்த படம். இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் ஒரு வசனம் வரும். ‘எதை நீ அதிகமாக நேசிக்கிறாயோ.. அதுவே ஆன்மிகம். ‘ இதுவும் என்னைக் கவர்ந்தது.

சேவை மனப்பான்மையுடன் திரைத்துறைக்கு வருகை தந்திருக்கும் சிவா வெற்றி பெற வேண்டும். இந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு அன்பின் வலிமை புரிய வேண்டும் என இயக்குநர் சிவா விரும்பி இருக்கிறார். தூய்மையான ஆன்மீகம் என்பது அன்பு என்பதையும் சொல்லி இருக்கிறார். எனவே சிவாவின் ஆலன் திரைப்படம் பெரும் வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

‘மகேஸ்வரா’ படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின் போது விபத்து

ஹம்சவிர்தன் நடிக்கும் அதிரடி சஸ்பென்ஸ் கமர்ஷியல் திரைப்படமான ‘மகேஸ்வரா’ படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின் போது விபத்து

சிறு காயங்களுடன் ஹம்சவிர்தன் உள்ளிட்டோர் தப்பினர்

‘புன்னகை தேசம்’, ‘ஜூனியர் சீனியர்’, ‘மந்திரன்’, ‘பிறகு’ உள்ளிட்ட திரைப்படங்களில் முதன்மை வேடங்களில் நடித்த ஹம்சவிர்தன் நாயகனாக நடிக்கும் புதிய படமான ‘மகேஸ்வரா’ முதல் கட்ட படப்பிடிப்பு திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது.

ரெட் டிராகன் எண்டர்டெயின்மென்ட் பேனரில் ஹம்சவிர்தன் தயாரிக்கும் இப்படத்தை மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஹரா’ படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்குகிறார்.

உயர்ரக சொகுசு பென்ஸ் கார் ஒன்றை நொறுக்கி தரைமட்டமாக்கும் பரபரப்பான சண்டைக் காட்சி அரியலூர் நெடுஞ்சாலையில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன் தலைமையில் படமாக்கப்படும் போது சற்றும் எதிர்பாராத வகையில் விபத்து ஏற்பட்டது. இதில் சிறு காயங்களுடன் ஹம்சவிர்தன் உள்ளிட்டோர் தப்பினர். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

ராம்கி, ‘கே ஜி எஃப்’ புகழ் கருடா ராம், பி எல் தேனப்பன், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முதல் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்ற நிலையில், முன்னணி நட்சத்திரங்கள் அடுத்த கட்ட படப்பிடிப்புகளில் கலந்து கொள்கின்றனர்.

சஸ்பென்ஸ் கலந்த அதிரடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாக உள்ள ‘மகேஸ்வரா’ படப்பிடிப்பு ரஷ்யா, பொலிவியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு மோகன் குமார் ஒளிப்பதிவு செய்ய ரஷாந்த் ஆர்வின் இசையமைக்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனிக்கிறார்.

இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ‘மகேஸ்வரா’ திரைப்படத்தில் ஹம்சவிர்தன் நடிக்கிறார். அதிக பொருட்செலவில், விறுவிறுப்பான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

ஸ்கிரீன் சீன் மீடியா சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘ஜெயம் ரவி 34’

‘இருட்டு’, ‘தாராள பிரபு’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘இடியட்’, ‘சாணி காயிதம்’, ‘அகிலன்’ உள்ளிட்ட வெற்றி படங்களையும் ‘மத்தகம்’ இணைய தொடரையும் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம், வெற்றிப்பட இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் ‘பிரதர்’ திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது.

ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி அன்று உலகெங்கும் வெளியாகவுள்ள நிலையில் ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனம் ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைகிறது.

ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘ஜெ ஆர் 34’ என்று அழைக்கப்படும் ஜெயம் ரவியின் 34-வது படத்தை ‘டாடா’ வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளது. ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஜெயம் ரவி உடன் ஸ்கிரீன் சீன் நிறுவனம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘பிரதர்’ திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் ‘ஜெ ஆர் 34’ திரைப்படத்திற்காக ஸ்கிரீன் சீன் மீடியா மற்றும் ஜெயம் ரவியுடன் ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் கைகோர்க்கிறார்.

டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் இதில் நடிக்க உள்ள முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்களை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் விரைவில் அறிவிக்கும்.

“நீல நிற சூரியன்” திரை விமர்சனம்

சம்யுக்தா விஜயன் இயக்கம் மற்றும் நடிப்பில் கிட்டி, கஜராஜ், கீதா கைலாசம் மற்றும் பல நடிப்பிற்கும் திரைப்படம் நீல நிற சூரியன்


ஆணாகப் பிறந்து ஹார்மோன் பாதிப்பால் பெண்ணாக மாறுபவர்களையும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறுபவர்களையும் அவர்கள் எந்த பாலினமாக மாறினாலும் இந்த சமுதாயத்தால் அவர்கள் திருநங்கைகளாகவே பார்க்கப்படுகிறார்கள் அவர்களை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை இப்படி இருக்கும் இந்த சூழலை கதை கருவாக கொண்டு அரவிந்தாக இருந்து பானுவாக மாறும் ஒருவருடைய வாழ்க்கையை திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள்
நிச்சயம் இதுபோன்ற கதைகளை டாக்குமென்ட்ரி ஆகவோ அல்லது அவாடிற்காக எடுக்கப்பட்ட படமாகவா தான் நாம் பார்த்திருக்கும் அதை சற்று மாற்றி கமர்சியல் ஆகவும் ஜனரஞ்சகமாகவும் திரைப்படமாக எடுக்க எடுக்க முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சம்யுக்தா விஜயன் இவர் உண்மையில் ஆணாகப் பிறந்த பெண்ணாக மாறிய ஒருவர்
ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் அரவிந்த் இவருக்கு சிறுவயதில் இருந்து ஆணாகப் பிறந்தாலும் பெண்ணாக மாறும் ஆசை அவரது ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படுகிறது அவ்வாறு அவர் மாற முயற்சிக்கும் பொழுது இந்த சமுதாயம் அவரை எப்படி நோக்குகிறது தன்னுடைய தாய் தந்தையர் அந்த மாற்றத்தை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் அவர்களுடைய நண்பர்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் திரைக்கதையாக எடுத்துக் காட்டியிருக்கிறார் சம்யுக்தா விஜயன்
இந்த திரைப்படத்தில் அரவிந்தாக சமைத்த விஜயனை நடித்திருக்கிறார் தான்பெண்ணாக மாறும் காட்சியில் அவருடைய மன உளைச்சலை இந்த சமுதாயம் தன்னை எப்படி பார்க்குமோ ஏற்றுக்கொள்ளுமோ என்னும் ஒரு நெருடலை தவிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் இவரது தந்தையாக நினைக்கிறவன் கஜராஜ் தாயாக நடித்திருக்கும் கீதா கைலாசம் இருவரும் மிகவும் அருமையான பாசமான பெற்றோராக மகன் இப்படி மாறிவிட்டானே என்று கவலையை என்ற அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்
மனநல மருத்துவராக கிட்டி மிகவும் பொருத்தமான கதாபாத்திரம்
மேலும் இந்த படத்தில் அமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் அவரவர்கள் இடங்களை மிக அருமையாக நிரப்புகிறது அரவிந்தின் தோழியாக வரும் ஒரு டீச்சர் அவருடைய வழிகளை புரிந்து கொள்ளும் தோழியாக அருமையாக நடித்திருக்கிறார்

இந்த மாதிரி ஹார்மோன் குறைபாட்டினால் எதிர்பாலினமாக மாறும் மாறும் பொழுது அவர்களை இந்த சமுதாயம் எப்படி பார்க்கிறது இந்த சமுதாயத்தில் அவர்கள் என்ன மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் சமித்தா விஜயன் அதற்கான திரைக்கதை மற்றும் காட்சிகள் எந்தவித நெருடல் இல்லாமலும் அழகாக படமாக்கி இருக்கிறார்

இந்த நீல நிறச் சூரியன் நிச்சயம் அவர்களுக்கு வாழ்க்கையில் வெளிச்சம் அளிக்கும்

செல்ல குட்டி திரை விமர்சனம்

 மகேஷ் மற்றும் டாக்டர் டிட்டோ, மற்றும் தீபிக்‌ஷா 1990- காலகட்டங்களில் ஒரே பள்ளியில் 12ஆம் வகுப்பு பிடித்து வருகிறார்கள்.மகேஷ் அப்பா அம்மா இல்லாத காரணத்தால், அவர் மீது தீபிக்‌ஷாவிற்க்கு இரக்கம் காட்டுவதால், தன்னை காதலிக்கிறார் என நினைத்துக் கொண்டு ஒருதலையாக காதலித்து வருகிறார்.

ஆனால், தீபிக்‌ஷா டிட்டோவை ஒருதலையாக காதலித்துக் கொண்டிருக்கிறார். மகேஷ் தீபிக்‌ஷாவிடம் உன்னை காதலிக்கிறேன் என கூற தீபிக்‌ஷா நிராகரித்து விடுகிறார். காதலை மட்டுமே நினைத்துக் கொண்டு ,மகேஷ் 12ம் தேர்வில் தோல்வியடைந்து விடுகிறார்.மகேஷ்டன் படித்த அனைவரும் வாழ்க்கையில் முன்னேறி விடுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் டிட்டோ விற்கும் சுபிக்ஷாவிற்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகிறது ஆனால் தன் நண்பன் காதலித்த பெண் என்பதால் அந்த திருமணத்தை டிட்டோ நிராகரித்து விடுகிறார்

அதன் பிறகு இவர்களது வாழ்க்கை என்ன ஆனது? என்பதுதான் இந்த செல்ல குட்டி திரைப்படத்தின் கதை.

கதாநாயகர்களாக நடித்திருக்கும் புதுமுக நடிகர்கள் டாக்டர்.டிட்டோ மற்றும் மகேஷ் இருவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக கதாபாத்திரத்தை உணர்ந்து நன்றாக நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகியாக நடித்திருக்கும் தீபிக்‌ஷா குடும்பத்து அழகிய முகத்தோடு, அளவான நடிப்பை கொடுத்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ஈர்க்கிறார்.

மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கும் சிம்ரன்

கல்லூரி முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மதுமிதாவும், ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்..

ஒளிப்பதிவாளர் பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பனின் ஒளிப்பதிவு முலம் கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் டி.எஸ். முரளிதரன்

இசையமைப்பாளர் சிற்பியின் பின்னணி இசை கதை  ஓட்டத்திற்கு பயணிக்கிறது.

பிரம்மாண்ட தயாரிப்பில் வெகு விரைவில் வெளிவர உள்ளது படை தலைவன்

சிபி ராஜ் நடித்த வால்டர் படத்தை வெற்றிகரமாக இயக்கிய  இயக்குனர் அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிப்பில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் படைதலைவன் படம் வெகு விரைவில் வெளிவர உள்ளது.

வி ஜே கம்பைன்ஸ் சார்பில் பரமசிவம் அவர்கள் தயாரிப்பில், ராஜு காளிதாஸ் அவர்களின் இணை தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம், படை தலைவன். இப்படத்தில் ஆக்சன் அதிரடியில் சண்முகபாண்டியன் விஜயகாந்த்  வெறித்தனமாக பெரும் மெனக் கெடல் எடுத்து நடித்துள்ளார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படி படத்தின் வெளியீட்டு வேலைகள் துவங்கி உள்ளன.  இசைஞானி இளையராஜா அவர்களின் அற்புதமான இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. கஸ்தூரி ராஜா அவர்கள் முக்கிய கதா பாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்துள்ளார். படை தலைவன் படத்தை ஓப்பன் தியேட்டர் நிறுவனம் சார்பில் ஏ. செந்தில் குமார் வெளியிட உள்ளார். இசை வெளியீடு,  படம் வெளியிடும் தேதி குறித்து  விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

CLEF MUSIC AWARDS 2024 – ஆறு விருதுகளை வென்ற ரயில் திரைப்படத்தின் இசையமைப்பாளர், பன்முக இசைக்கலைஞர் எஸ்.ஜே. ஜனனி..

சமீபத்தில் வெளியான RAIL திரைப்படத்தின் இசையமைப்பாளர் S. J. ஜனனி, RAIL திரைப்படப் பாடல்களுக்காக 4 பிரிவுகளில் 4 CLEF இசை விருதுகள் மற்றும் மும்பை 2024 மற்றும் பக்திப் பிரிவுகளுக்கான 2 விருதுகளை வென்றுள்ளார். இந்த திரைப்படத்தை டிஸ்கவரி சினிமாஸ் திரு . வேடியப்பன் தயாரித்தார் மற்றும் திரு. பாஸ்கர் சக்தி இயக்கியுள்ளார்.

விருது விவரங்கள்

Radio & Music 5 CLEF MUSIC AWARDS 2024-இன் 4வது பதிப்பு, செப்டம்பர் 27, 2024 அன்று லீலா ஹோட்டல், இன்டர்நேஷனல் ஏர்போர்ட், மும்பையில் நடைபெற்றது. இந்திய சினிமா பிரிவில் எஸ்.ஜே.ஜனனிக்கு RAIL திரைப்படத்திற்காக 4 விருதுகள் வழங்கப்பட்டன: சிறந்த இசையமைப்பாளர் – பூ பூக்குது (“ரயில்” பாடலுக்காக),
சிறந்த பெண் பின்னணிப் பாடகி, ஏலே செவத்தவனே… (“ரயில்” படத்தில் இருந்து), சிறந்த திரைப்படப் பாடல் – தமிழ் – பூ பூக்குது (“ரயில்” பாடலுக்காக),& எது உன் இடம் (“ரயில்” என்ற பாடலுக்காக சிறந்த இசை கோர்ப்பாளர் மற்றும் ப்ரோகிராமர்).

இத்துடன், ஜனனியின் “சிவனே சிவனே ஓம்” பிரம்மகுமாரிகளின் பாடல், 2024 ஆம் ஆண்டுக்கான 2 CLEF இசை விருதுகளை வென்றது:

பக்தி – சிறந்த இசையமைப்பாளர் & பக்தி-சிறந்த பாடல்/ஆல்பம் தமிழ், “இந்திய தேசிய விருது”, தமிழக அரசின் “கலை மாமணி விருது” & பல உலகளாவிய விருதுகள் பெற்ற எஸ்.ஜே. ஜனனி, அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள சர்வதேச பாடகர்- பாடலாசிரியர்கள் சங்கத்தின் 2024 ஆகஸ்ட் ஆண்டின் சர்வதேச பெண் பாடகருக்கான ISSA விருதை வென்றுள்ளார். இவர் கிராமி வாக்களிக்கும் உறுப்பினர் என்பது குறிப்பிடத் தக்கது.

மட்கா திரைப்படம், நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகிறது……..

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும், மாஸ் எண்டர்டெயினர் மட்கா திரைப்படம், நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகிறது ! ரெட்ரோ ஸ்டைலில் ​​இதன் செகண்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது!

மெகா பிரின்ஸ் வருண் தேஜ் நடிக்கும் மாஸ் ஆக்‌ஷன் எண்டர்டெய்னர் படமான “மட்கா” தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. தற்போது, படக்​​குழு வருண் தேஜ் மற்றும் போராளிகள் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான மற்றும் தீவிரமான அதிரடி ஆக்சன் காட்சிகளைப் படமாக்கி வருகிறது. கருணா குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தினை, வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் சார்பில், டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா மற்றும் ரஜனி தல்லூரி ஆகியோர் தயாரிக்கின்றனர். வருண் தேஜ் திரை வரலாற்றில் மிக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் மட்கா ஆகும்.

படத்தின் அனைத்து பணிகளும் முடிவடையும் தறுவாயில் உள்ளது, இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியைத் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். கார்த்திகை பூர்ணிமாவுக்கு முன்னதாக நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகும். இது ஒரு நீண்ட வார இறுதியில் ரசிகர்கள் கொண்டாட ஏதுவாக இருக்கும்.

பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அசத்திய படக்குழு தற்போது செகண்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளனர். வருண் தேஜ் இந்த போஸ்டேரில் ரெட்ரோ அவதாரத்தில் அசத்தலான உடையில், வாயில் சிகரெட்டுடன் படிக்கட்டுகளில் நடந்துகொண்டு, நேர்த்தியுடன் காட்சியளிக்கிறார். வருண் தேஜ் அவரது கதாபாத்திரத்தின் பரிணாமத்தை அழகாகப் பிரதிநிதித்துவப்படுத்தும், இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் அசத்துகிறார்.

1958 மற்றும் 1982க்கு இடையில் நடக்கும் கதை என்பதால், 50 களில் இருந்து 80 கள் வரையிலான சூழலை மீண்டும் கச்சிதமாக உருவாக்கி இயக்குநர் கருணா குமார் வெற்றி பெற்றிருக்கிறார். 24 வருட கதை என்பதால் வருண் தேஜ் இப்படத்தில் நான்கு வித்தியாசமான கெட்-அப்களில் தோன்றுகிறார். வருண் தேஜின் மாறுபட்ட தோற்றம் ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஒர்க்கிங் ஸ்டில்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது வெளியீட்டுத் தேதியை அறிவித்து தயாரிப்பாளர்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

வருண் தேஜ் ஜோடியாக நோரா ஃபதேஹி மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் நவீன் சந்திரா மற்றும் கன்னட கிஷோர் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மட்கா தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியப் படமாக வெளியாகவுள்ளது.

நடிகர்கள்: வருண் தேஜ், நேரா ஃபதேஹி, மீனாட்சி சௌத்ரி, நவீன் சந்திரா, கன்னட கிஷோர், அஜய் கோஷ், மைம் கோபி, ரூபாலட்சுமி, விஜய்ராம ராஜு, ஜெகதீஷ், ராஜ் திரந்தாஸ்

தொழில்நுட்பக் குழு:
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கருணா குமார்
தயாரிப்பாளர்கள்: மோகன் செருகுரி (CVM) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா
பேனர்: வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் இசை: ஜீ.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : பிரியசேத்
எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீனிவாஸ் R
தயாரிப்பு வடிவமைப்பு: ஆஷிஷ் தேஜா
கலை: சுரேஷ்
நிர்வாகத் தயாரிப்பாளர் – RK.ஜனா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் & டிஜிட்டல் – ஹேஷ்டேக் மீடியா

MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது.

சென்னை சர்வதேச திரைப்பட விழா, ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது.

செப்டம்பர் 27, 2024- சென்னை சர்வதேச திரைப்பட விழா, ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்துடன் இணைந்து, ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஏ.வி.எம் ஆடிட்டோரியத்தில் இன்று MOSFILM 100- வது ஆண்டு விழாவினை பிரமாண்டமாக நடத்தியது.

இந்த நிகழ்வு , ரஷ்யாவின் மிகச் சிறந்த திரைப்பட ஸ்டுடியோக்களில் ஒன்றான MOSFILM யின் வளமான பாரம்பரியத்தை கௌரவிப்பதோடு,
3 நாள் சினிமா கொண்டாட்டத்தின் துவக்கமாகவும் அமைந்திருந்தது.

சென்னையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் துணைத் தூதரகத் தலைவர் மேதகு. வலேரி கோட்சேவ் மற்றும் சென்னையில் உள்ள ரஷ்ய மாளிகையின் துணைத் தூதரும் இயக்குநருமான திரு. அலெக்சாண்டர் டோடோனோவ் ஆகியோர் இந்த தொடக்க விழாவில் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர் இருவருமே இருநாட்டு கலாச்சார ஒத்துழைப்பிற்கு தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

மேலும், உலகளாவிய திரைப்படத் துறையில் ரஷ்ய சினிமாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.

முதல் நாள் காட்சிகள்

ரெண்ட் எ ஹவுஸ் வித் ஆல் தி இன்கன்வீனியன்ஸஸ் (2016) என்ற நகைச்சுவை திரைப்படத்துடன் துவங்கியது, இந்த நகைச்சுவை கதை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது, அதைத் தொடர்ந்து அன்னா கரேனினா: வ்ரோன்ஸ்கியின் கதை (2017), இலக்கியங்களில் பரவலாகப் பேசப்படும் காவிய காதலான இப்படம் பார்வையாளர்களை வியத்தகு மறுபரிசீலனைக்கு அழைத்துச் சென்றது.

ரஷ்ய சினிமாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை ஆராய்வதற்கான அரிய வாய்ப்பை பார்வையாளர்களுக்கு இந்நிகழ்வு வழங்கியது.

மாஸ்ஃபில்மின் சில குறிப்பிடத்தக்க திரைப்படங்களை திருவிழாவில் திரையிட உள்ளோம். திரையிடல்கள், ஆங்கில வசனங்களை உள்ளடக்கியவை என்பது குறிப்படத்தகுந்தது.

சென்னையின் திரைப்பட ஆர்வலர்கள் சர்வதேச திரைப்படங்களைப் பாராட்ட ஒரு தனித்துவமான வாய்ப்பை இந்நிகழ்வு வழங்குகிறது.

மாஸ்ஃபில்ம் 100 வது கொண்டாட்ட விழா செப்டம்பர் 29 ஆம் தேதி வரை ஏ.வி.எம் ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது.

தி வானிஷ்ட் எம்பயர் (2007), தி ஸ்டார் (2002), வார்டு எண் 6 (2009), மற்றும் டிசிஷன்: லிக்விடேஷன் (2018) போன்ற படங்களை திரையிட உள்ளது.

சென்னை சர்வதேச திரைப்பட விழா மற்றும் ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் ஆகியவற்றின் இந்த முயற்சி மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இந்நிகழ்வு ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கலாச்சார பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

விழா அட்டவணை மற்றும் வரவிருக்கும் நிகழ்வுகள் பற்றிய

கூடுதல் விவரங்களுக்கு,

www.chennaifilmfest.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

சசிகுமார் – சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் & எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புரொடக்சன் நம்பர் 5

நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என பெயரிடப்பட்டிருக்கிறது. அண்மையில் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. இன்று நடிகர் சசிகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்களை எழுத, ஆடை வடிவமைப்பு பணிகளை நவா ராஜ்குமார் கையாள்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு கோடை மாத விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

‘குட்நைட்’, ‘லவ்வர்’ போன்ற ஃபீல் குட் திரைப்படங்களை தயாரித்து தமிழ் திரைப்பட உலகில் தரமான பட தயாரிப்பு நிறுவனம் என்ற முத்திரையை பதித்து ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் திரையுலக வணிகர்களிடத்திலும் நன்மதிப்பை பெற்றிருக்கும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த புதிய திரைப்படத்தினை தயாரிக்கிறது என்பதும், ஹாட்ரிக் வெற்றியை வழங்கிய நட்சத்திர நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கிறார் என்பதினாலும், படம் தொடர்பான அறிமுக அறிவிப்பு வெளியானதும் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.