Breaking
November 18, 2024

ஸ்ரீகாந்த் தேவா இசையில் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில் ‘தேனிசைத் தென்றல்’ தேவா பாடியுள்ள புதிய அசத்தல் ஆல்பம்.

தனியிசை பாடல்கள் மூலமாகவும் தமிழ் திரைப்பட பாடல்கள் வாயிலாகவும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் தனது அடுத்த ஆல்பத்திற்காக ‘தேனிசைத் தென்றல்’ தேவா மற்றும் ஸ்ரீகாந்த் தேவா உடன் இணைந்துள்ளார்.

லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரும் சமூக சேவகருமான DR. மாலாகுமார் தனது மாலாகுமார் படைப்பகத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த பாடல் விரைவில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் தேசிய விருது பெற்ற ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்த உற்சாகமிக்க பாடலை அவரது தந்தையும் பிரபல இசையமைப்பாளருமான தேவா தனது காந்த குரலில், பிரத்யேக ஸ்டைலில் பாடியுள்ளார்.

விஜய் ஆண்டனி நடித்த’ நான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’
பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கவிஞர் பொத்துவில்
அஸ்மின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’, அஜித் குமார் நடித்த ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்களுக்கு எழுதிய புரோமோ
பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.

‘முத்து முத்து கருவாயா’, ‘தாகம்தீர வானே இடிந்ததம்மா,’ ‘சண்டாளனே’, ‘கண்ணத்தொறந்ததும் சாமி’ ஆகியவை அஸ்மின் எழுதிய குறிப்பிடத்தக்க பாடல்களாகும். மேலும், சமீபத்தில் இலங்கையில் இருந்த வெளியாகி உலகெங்கும் டிரெண்ட் ஆன ‘ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்… பொய் பொய்யாய் சொல்லி ஏமாத்தினது போதும்’ பாடலும் இவர் எழுதியது தான். உலகம் முழுவதும் அனைத்து தளங்களிலும் ஆறு கோடிப்பேர் இந்தப் பாடலை பார்த்து ரசித்துள்ளனர். இலங்கை நாடாளுமன்றத்திலும், மலேசியா தேர்தலிலும் கூட இந்தப் பாடல் ஒலித்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு இதுவரை பாடல்கள் எழுதியுள்ள அஸ்மின், இலங்கையிலும் தமிழகத்திலும்
‘மோஸ்ட் வான்டட்’ பாடலாசிரியராக கவனம் ஈர்த்திருக்கிறார்.

‘முத்து முத்து கருவாயா’ மூலம் ஏற்கனவே வெற்றிப் பாடலைக் கொடுத்துள்ள ஸ்ரீகாந்த் தேவா-அஸ்மின் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய கவிஞர் பொத்துவில் அஸ்மின், “தேவா அவர்களின் குரலில் அமைந்த ஹிட் பாடல்கள் வரிசையில் இந்தப் பாடலும் இடம் பிடிக்க தயாராகி வருகிறது. பாடல் தலைப்பையும் புரோமோவையும் மிக விரைவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன,” என்று கூறினார்.

Related Post