மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் இணையும், பான் இந்தியா திரைப்படத்தில், நடிகை தபு இணைந்துள்ளார் !!
கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், தனது அடுத்த கனவுப்படமாக உருவாகும், பான்-இந்தியா திரைப்படத்தின் அறிவிப்பினை வெளியிட்டார். உகாதி திருநாளில் அறிவிக்கப்பட்ட இந்த பிரம்மாண்டத் திரைப்படத்தை, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான பூரி கனெக்ட்ஸின் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர்.
நடிகர் விஜய் சேதுபதிக்காக இயக்குநர் பூரி ஜெகன்நாத் மிகவும் தனித்துவமான ஒரு கதையை மிக நுணுக்கமாக வடிவமைத்துள்ளார். இதில் விஜய் சேதுபதி இதுவரை எவரும் பார்த்திராத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் உணர்வுப்பூர்வமான கதை, அழுத்தமான பாத்திரம், விஜய் சேதுபதியின் புதிய அடையாளத்தை திரையுலகிற்கு வெளிப்படுத்துவதாக இருக்கும்.
இந்தப் படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தபு ஒப்பந்தமாகியுள்ளார். தனித்துவமான கதைத் தேர்வுகளுக்கு பெயர் பெற்ற தபு, இப்படத்தின் கதாபாத்திரத்தாலும், அழுத்தமான கதைக்களத்தாலும் உடனடியாக ஈர்க்கப்பட்டு இப்படத்தில் நடிக்க, உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தில் அவரது பாத்திரம் ரசிகர்கள் அனைவரையும் ஈர்க்கும்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது.
இப்படத்தின் மற்ற நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
நடிகர்கள் : மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தபு
தொழில்நுட்பக் குழு: எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத் தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கௌர் தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ் CEO : விசு ரெட்டி மக்கள் தொடர்பு : யுவராஜ் மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா
முன்னணி நட்சத்திர நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்து மற்றும் ஹக்கிம் ஷாஜஹான் ஆகியோர் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள #NOBODY திரைப்படம், எர்ணாகுளத்தில் உள்ள அழகிய வெலிங்டன் தீவில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் இனிதே துவங்கியது.
பிரம்மாண்டமாக உருவாகும் #NOBODY திரைப்படத்தினை சமீர் அப்துல் எழுதியுள்ளார். புகழ்பெற்ற முன்னணி படைப்பாளி நிசாம் பஷீர் இயக்குகிறார். உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில், அற்புதமான நடிகர்களின் நடிப்பில், அழகான திரை அனுபவமாக உருவாகிறது.
இப்படத்தை பிருத்திவிராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுப்ரியா மேனன், முகேஷ் மேத்தா மற்றும் சி.வி. சாரதி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
அனிமல் திரைப்படத்தில் அட்டகாசமாக இசையமைத்த இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
முன்னனி தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில் #NOBODY ஒரு தனித்துவமான மற்றும் மறக்க முடியாத சினிமா அனுபவமாக உருவாகிறது.
படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
இயக்கம் – நிசாம் பஷீர் எழுத்தாளர் – சமீர் அப்துல் ஒளிப்பதிவு – தினேஷ் புருஷோத்தமன் இசை – ஹர்ஷவர்தன் (அனிமல் புகழ்) நிர்வாக தயாரிப்பாளர் – ஹாரிஸ் டெசோம் தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் – ரின்னி திவாகர் தயாரிப்பு வடிவமைப்பு – கோகுல் தாஸ் ஆடை வடிவமைப்பு – தன்யா பாலகிருஷ்ணன் ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர் புரமோசன் – போஃபாக்டியோ
ஹாலிவுட்டில் சாதனை படைப்பதற்காக களமிறங்கும் இந்திய திரைத்துறை ஜாம்பவான்கள்
பான் உலக படைப்பாக உருவாகும் புதிய இந்தியப்படம்
‘புஷ்பா’ படத்தின் மூலம் சர்வதேச திரையுலகத்தினரின் கவனத்தை ஈர்த்த ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தியளவில் கவனம் ஈர்த்த முன்னணி நட்சத்திர இயக்குநர் அட்லி – பிரபல முன்னணி இந்திய பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் – ஆகியோரின் கூட்டணியில், பான் உலகப் படைப்பாக, இந்திய திரைத்துறை கண்டிராத பிரம்மாண்டமாக உருவாகவுள்ள புதிய படத்தைப் பற்றிய ‘#AA22xA6’ அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி தொடர்ந்து ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படங்களை தந்து, இந்தி சினிமாவில் ‘ஜவான்’ படத்தின் மூலம் 1100 கோடி வசூலை சாதித்துக் காட்டி, சர்வதேச திரையுலகினரின் கவனத்தைக் கவர்ந்த இயக்குநராக உயர்ந்திருக்கும் அட்லி இயக்கத்தில், அவரது ஆறாவது படைப்பாக, ‘புஷ்பா’ படத்தின் மூலம் இந்திய சினிமாவின் வசூலில் புதிய சரித்திர சாதனையை படைத்திருக்கும் ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் நடிப்பில், கலாநிதிமாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக தயாராகும், இந்தப் பெயரிடப்படாத ‘#AA22xA6’ புதிய திரைப்படத்தைப் பற்றிய, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்திய சினிமாவின் முத்தான மூன்று பிரம்மாண்டங்களும் ஒன்றிணையும் இந்த திரைப்படம் – இந்தியாவில் தயாராகும் சர்வதேச தரத்துடனான உலக சினிமாவாக இருக்கும்.
உலகத்தரத்தில் பான்வேர்ல்ட் படைப்பாக உருவாகும் இப்படத்தில், நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத அளவில், பெரும் பொருட்செலவில், பிரம்மாண்டமாக உருவாக்கவுள்ளது. ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் அட்லியின் #AA22xA6 வது படமாக உருவாகும் இந்த புதிய படம் இந்திய சினிமாவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலான திரைத்துறையில் புதிய சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர் ரங்கராஜ் நடிக்கும் ‘கட்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாபுதுமுக நடிகர் ரங்கராஜ் தயாரித்து, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கட்ஸ் ( GUTS) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.’கட்ஸ்’ திரைப்படத்தில் ரங்கராஜ், ஸ்ருதி நாராயணன், ஸ்ரீலேகா, டெல்லி கணேஷ், சாய் தீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜோஸ் பிராங்களின் இசையமைத்திருக்கிறார்.ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஓ பி ஆர் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெயபாரதி ரங்கராஜ் தயாரித்திருக்கிறார்.
விரைவில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவில் இயக்குநர் ரங்கராஜ், நடிகை ஸ்ருதி நாராயணன், ஜாக்குவார் தங்கம், கில்ட் செயலாளர் துரைசாமி, டைகர் சக்கரவர்த்தி, ஷிவானி செந்தில், சத்யபதி, இஸ்மாயில், ஸ்ரீலேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இயக்குநர் ஷிவானி செந்தில் பேசுகையில், ”இப்படத்தின் இயக்குநர்-நடிகர் ரங்கராஜ் எனது நண்பர். சினிமா மீது அளவு கடந்த ஆசை கொண்டிருப்பவர். சினிமாவிற்காக தன் திறமைகளை வளர்த்துக் கொண்டவர். சினிமாவில் வெற்றி என்ற ஒன்று முக்கியமானதாக இருக்கிறது. என்னை பொருத்தவரை இந்த மேடையில் அவர் வீற்றிருப்பதே வெற்றி தான். இதனால் அவரை நான் முதலில் பாராட்டுகிறேன், வரவேற்கிறேன். சினிமாவை எடுப்பதற்கு அனைவருக்கும் ஆசை இருக்கும். இன்றைக்கு ரங்கராஜிற்கு இருந்தது. பத்து வருடங்களுக்கு முன்பு வெற்றிமாறனுக்கு இருந்தது. இதற்கான உழைப்பு, போராட்டங்கள் வேறு வேறு. இருந்தாலும் இந்த ஆசையை தடுப்பது ஒன்றே ஒன்றுதான் அது பயம். என்னால் முடியுமா என்ற பயம் வந்து விட்டால் யாராலும் படம் எடுக்க முடியாது. அந்த பயம் நீங்க வேண்டும் என்றால் கொஞ்சம் நம்பிக்கை வேண்டும், கொஞ்சம் போராட வேண்டும். என்னால் முடியும் என்று நம்பிக்கை வைத்து விட்டால் படம் எடுக்க முடியும். பயப்படாமல் இருந்தால் சினிமாவில் ஜெயிக்கலாம். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.
ஜாக்குவார் தங்கம் பேசுகையில், ”கட்ஸ் படத்தின் டிரைலரை பார்த்தோம். மிகச் சிறப்பாக இருக்கிறது. படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். புதுமுக ஹீரோ சிறப்பாக நடித்திருக்கிறார். திரையில் அட்டகாசமான ஆக்சன் ஹீரோவாக இருக்கிறார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.
கில்டு செயலாளர் துரைசாமி பேசுகையில், ”இந்தப் படத்தின் தயாரிப்பாளர், ஹீரோ, டைரக்டர் ரங்கராஜ் எனக்கு தம்பி மாதிரி. அதனால் இந்தப் படக்குழுவுடன் எனக்கு நெருக்கமான தொடர்பு உண்டு. அன்புத்தம்பி ரங்கராஜ் இயக்கி இருக்கும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இயக்குநர் படத்தை உருவாக்கியதுடன் மட்டுமில்லாமல் புறநானூற்று பாடல்களில் சொல்லியது போல் படத்தை திரையிடுவதற்கான முயற்சிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறார். இந்தப் படம் வெற்றி பெற்று அவருக்கு லாபத்தை சம்பாதித்துக் கொடுக்க வேண்டும். அவரை சான்றோன் ஆக்குவது நம்முடைய கடமை. இந்தப் படத்திற்கு நல்ல விமர்சனங்களை கொடுத்து வெற்றி பெற செய்யுங்கள்,” என்றார்.
நடிகை ஸ்ரீலேகா பேசுகையில், ”நடிப்பில் என்னுடைய முன்னோர்கள் சொல்லிக் கொடுத்ததை தான் நான் இதுவரை செய்து கொண்டு இருக்கிறேன். எத்தனை ஆண்டுகள் இருக்கிறோம் என்பது முக்கியமில்லை. எல்லாருடனும் எப்படி இருக்கிறோம் என்பதுதான் முக்கியம். இங்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தப் படத்தில் என்னுடைய மகனாக ஹீரோ ரங்கராஜ் நடித்திருக்கிறார். அவர் புது முகமாக இருந்தாலும் நிறைய திறமை இருக்கிறது. அவருக்கு நீங்கள் ஆதரவு கொடுப்பீர்கள் என நான் நம்புகிறேன்.
படப்பிடிப்பு தளத்தில் நிறைய அவமானங்களை சந்தித்து இருக்கிறார். ஆனால் யார் மீதும் குறை சொல்ல மாட்டார். அதனால் அவரே இயக்குநராகவும் மாறிவிட்டார். இந்தப் படத்தின் டைட்டிலுக்கு பொருத்தமானவர் ரங்கராஜ் தான். அவர் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.
இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்கிளின் பேசுகையில், ”இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் இருக்கின்றன. மூன்று பாடல்களையும் எழுதியவர் இயக்குநர் ரங்கராஜ் தான். இயக்குநர் ரங்கராஜ் அர்ப்பணிப்புடன் உழைக்கும் கடும் உழைப்பாளி. அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம். இந்தப் படத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும்,” என்றார்.
நடிகை ஸ்ருதி நாராயணன் பேசுகையில், ”இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் ரங்கராஜுக்கு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்குரிய நடிப்பை சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்த இயக்குநருக்கு நன்றி. இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகர்-தயாரிப்பாளர்-இயக்குநர் ரங்கராஜ் பேசுகையில், ”கலைத் தாய்க்கு என் முதல் வணக்கம். சினிமாவில் நடிகராகி விட வேண்டும் என்று நான் 25 ஆண்டு காலமாக போராடிக் கொண்டிருக்கிறேன். வாய்ப்பு கேட்கும் இடங்களில் எல்லாம் பணம் பணம் என்ற ஒன்றைத்தான் கேட்டார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் மன உளைச்சல் ஆகி, விலகி விடலாம் என தீர்மானித்து விட்டேன். அப்போது என்னுடைய நண்பர்கள் குறும்படங்களை இயக்கினார்கள், 15 லட்சத்தில் ஒரு படத்தினை தயாரிக்க முடியும் என்றார்கள். இது எனக்கு நம்பிக்கையை தந்தது. படத்தை தயாரிக்க தொடங்கினேன். படத் தயாரிப்பு குறித்து எனக்கு எதுவும் அப்போது தெரியாது. படத்தின் பணிகள் தொடங்கிய பிறகுதான் 15 லட்சத்தில் ஒரு படத்தில் உருவாக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டேன். முன்வைத்த காலை பின் வைக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து போராடினேன். சின்ன வயதில் இருந்தே நான் குவாலிட்டி விஷயத்தில் காம்ப்ரமைஸ் ஆக மாட்டேன். இந்த சமயத்தில் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் எனக்கு பக்கபலமாக நின்றார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றி சொல்கிறேன்.
எனக்கு சினிமா பின்னணி கிடையாது. அரசியல் பலம் கிடையாது. பணபலம் கிடையாது. கடைக்கோடி கிராமம் ஒன்றில் இட்லி சுட்டு விற்பனை செய்யும் அம்மாவின் மகன் நான். இன்று நான் ஒரு நடிகனாகி விட்டேன். இதனை என்னாலேயே நம்ப முடியவில்லை. இந்த படத்திற்காக நிறைய நண்பர்கள் எனக்கு உதவினார்கள். அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படம் நன்றாக ஓடி லாபம் சம்பாதித்தால், எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படங்கள் வெற்றி பெற்றால், கிடைக்கும் லாபத்தில் 50 சதவீதத்தை சினிமா துறையில் கஷ்டப்படும் தொழிலாளர்களுக்காக வழங்க திட்டமிட்டிருக்கிறேன்.
சிறிய முதலீட்டு திரைப்படங்கள் வெற்றி பெறாததற்கு காரணம் டிக்கெட் கட்டணம் தான். அஜித் குமாரை திரையில் 200 ரூபாய் கொடுத்து பார்ப்பார்கள். என்னை யார் 200 கொடுத்து திரையில் பார்ப்பார்கள். இதனால் சிறிய முதலீட்டு திரைப்படங்கள் தோல்வியை தான் தழுவும். அதனால் டிக்கெட் விலையை குறைத்தால் சிறிய முதலீட்டு திரைப்படங்களும் வெற்றி பெறும்.
எல்லோருக்கும் வாழ்க்கையில் ஸ்ட்ரெஸ் இருக்கும். அதை நீக்குவது சினிமா மட்டும் தான். சினிமா என்ற ஊடகம் தான் மக்களின் எல்லா வலியையும் நீக்கும்.
டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆக இருக்க வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும், அதற்கான நடவடிக்கைகளையும் தமிழக முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
அந்தகன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது.
அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ள, இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க உள்ளார் இயக்குனர் ஹரி.
நடிகர் பிரஷாந்துடன் இணைந்து, இயக்குனர் ஹரி இயக்கிய, அவரது அறிமுக படம் ‘தமிழ்’ மிகப் பெரிய வெற்றி அடைந்து வசூலை வாரிக் குவித்தது, அனைவரும் அறிந்ததே. பட்டி தொட்டி எங்கும், திரை அரங்கில் நூறு நாட்களுக்கு மேலாக ஓடி, சாதனை படைத்தது. அதன் பின் இயக்குனர் ஹரி, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்ததோடு, தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே இயக்கி, தான் ஒரு வெற்றி இயக்குனர் என தனி முத்திரை பதித்தார்.
தமிழ் சினிமாவின் பல முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்கும் இந்த படத்தில், பெரும் நட்சத்திர பட்டாளமே இருக்கும் எனவும், பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைய உள்ளார்கள் எனவும் படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
நடிகர் பிரஷாந்த்தின் பிறந்த நாளான ஏப்ரல் 6, இன்று இந்த படத்தின் (பிரஷாந்த் 55) அறிவிப்பு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியானது. ஸ்டார் மூவிஸின் சார்பாக இப்படத்தை நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் அவர்கள் தயாரிக்கிறார்.
தமிழ் மெகா பிளாக்பஸ்டர் ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் ZEE5 தளத்தில், ஏப்ரல் 13 முதல் ஸ்ட்ரீம் செய்கிறது !!
தமிழின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “கிங்ஸ்டன்” திரைப்படத்தை, வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள இந்த திரில்லர் திரைப்படம், கடற்கரை கிராம பின்னணியில், அசத்தலான விஷுவல்களுடன், ஃபேண்டஸி அம்சங்கள் நிறைந்த, புதுமையான ஹாரர் படமாக அனைவரையும் கவர்ந்தது. திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற இப்படம், ZEE5 டிஜிட்டல் வெளியீடு மூலம், ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.
கிங்ஸ்டன் திரைப்படம், துணிச்சலான கடத்தல்காரரான கிங்ஸ்டன் (ஜி.வி. பிரகாஷ்) என்பவனின் கதையை விவரிக்கிறது. உள்ளூர் ரௌடியிடம் வேலை பார்க்கும் கிங்ஸ்டன், அந்த ரௌடி, கிராமத்தை ஏமாற்றுவதை அறிந்து, அவனுக்கு எதிராகக் களமிறங்குகிறான். தன் கிராமத்தை மீட்கும் பொருட்டு, மீன் பிடிக்க முடியாமல், பல வருடங்களாகச் சபிக்கப்பட்ட கடற்பகுதிக்குள், தன் நண்பர்களுடன் துணிந்து நுழைகிறான். அந்த சாபத்தின் ரகசியத்தை அவன் கண்டுபிடித்தானா? தன் கிராமத்தை மீட்டானா? என்பது தான் இந்தப்படத்தின் கதை.
ZEE5 இன் SVOD தெற்கு துணைத் தலைவர் லயோட் சேவியர் கூறுகையில், “ தமிழ் சினிமா இப்போது மிகப்பெரிய வெற்றிப்பயணத்தில் இருக்கிறது. அந்த வகையில், அட்டகாசமான என்டர்டெயினர் திரைப்படமான, “கிங்ஸ்டன்” படத்தை, எங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி. இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள இந்தப்படம், ஒரு புதுமையான களத்தில், அதிரடி திரில்லராக ஒரு ரோலர்கோஸ்டர் பயணத்திற்கு ரசிகர்களைக் கூட்டிச் செல்கிறது. இந்தப்படம் கண்டிப்பாக ரசிகர்களை உற்சாகப்படுத்தும், இது போல் சிறந்த படைப்புகளைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு வழங்குவோம்.
நடிகர் ஜி.வி. பிரகாஷ் கூறியதாவது.., “கிங்ஸ்டன் பல வழிகளில் சவாலாக அமைந்த மிகச்சிறப்பான ஒரு கதாபாத்திரம் – கிங்ஸ்டன் துணிச்சலானவன், கணிக்க முடியாதவன், இயற்கைக்கு அப்பாற்பட்ட ரகசியங்கள், மாய விசயங்களுக்குள் சிக்கிக் கொள்கிறான். தமிழ் சினிமா அரிதாகவே சொல்லும் இந்தக்களத்தில், அதிரடி, மர்மம் மற்றும் நாட்டுப்புறக் கதைக்களத்தில் ஒரு புதுமையான கதையை இந்தப்படம் சொல்கிறது. இப்படத்திற்குத் திரையரங்குகளில் ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. இப்போது ZEE5 மூலம் இப்படத்தை அனைத்து ரசிகர்களும் கொண்டாடுவதைக் காண ஆவலாக உள்ளேன்.
இயக்குநர் கமல் பிரகாஷ் கூறியதாவது…, இந்தப் படம் அன்பான குழுவின் உழைப்பு. மர்மம், அதிரடி மற்றும் ஃபேண்டஸி அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான அனுபவத்தைத் தரும் படைப்பு இது. இப்படத்தை உருவாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது, ஆனால் திரையரங்குகளில் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பு எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. கிங்ஸ்டன் கதாபாத்திரத்தில் ஜிவி பிரகாஷின் உழைப்பு வியக்கதக்கதாக இருந்தது. தன்னை முழுதாக மாற்றிக்கொண்டு, மிகப்பிரமாதமாக, தனித்துவமான நடிப்பைத் தந்தார். இந்த வேடத்தில் வேறு யாரையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ZEE5 மூலம் இப்படம் அனைத்து மக்களையும் சென்றடையவுள்ளது, மிகப்பெரிய மகிழ்ச்சி. அனைவருக்கும் இப்படம் புதுமையான அனுபவத்தைத் தரும்.
ஃபேண்டஸி கலந்த இந்த அற்புதமான திரைப்படத்தை, ZEE5 இல் பிரத்தியேகமாக ஏப்ரல் 13 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் கண்டு களியுங்கள் !
தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் புச்சி பாபு சனா, குளோபல் ஸ்டார் ராம் சரணின் கூட்டணியில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா படமான, “பெத்தி” ஏற்கனவே அதன் டைட்டில் மற்றும் இரண்டு கவர்ச்சிகரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற பான்-இந்தியா தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸுடன் இணைந்து வழங்கும், “பெத்தி” இந்திய திரைப்படத் துறையில் ஒரு புதிய திருப்புமுனை படமாக இருக்கும். தொலைநோக்கு மிக்க படைப்பாளி வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தைப் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார். ஸ்ரீ ராம நவமியின் புனிதமான சந்தர்ப்பத்தில், தயாரிப்பாளர்கள் முதல் ஷாட் வீடியோவை வெளியிட்டனர், மேலும் படத்தின் வெளியீட்டுத் தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
படத்தின் முதல் ஷாட் ஒரு அற்புதமான சூழ்நிலையுடன் தொடங்குகிறது, மிகப்பெரிய கூட்டம் பெத்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறது. ராம் சரண் ஒரு அற்புதமான, சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் பெத்தியாக அறிமுகமாகிறார் , தோளில் பேட்டை சுமந்துகொண்டு, படு ஸ்டைலாக சிகார் புகைத்துக்கொண்டே , கிரிக்கெட் மைதானத்தில் அடியெடுத்து வைக்கிறார். அவர் பேசும் டயலாக் அவரது கதாபாத்திரத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது. படுபயங்கர மாஸாக, அதிரவைக்கும் அறிமுகமாகும் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.
நீண்ட முடி, அடர்த்தியான தாடி மற்றும் மூக்குத்தியுடன் கூடிய ராம் சரணின் புதிய கரடுமுரடான தோற்றம், அவரது கதாபாத்திரத்தின் அழுத்தமான தன்மையை மேம்படுத்துகிறது, மேலும் அவரது ஆளுமைக்கு மேலும் தீவிரத்தைச் சேர்க்கிறது. அவரது டயலாக் டெலிவரி, மற்றும் உடல் மொழி எல்லாமே ரசிகர்களை வசீகரிக்கிறது. விஜயநகர பேச்சுவழக்கை அவர் குறைபாடற்ற முறையில் பேசுவது, ஒரு தனித்துவமான தருணம், இது அவரது வாழ்க்கையில் முதல் முறையாகும், இது அவரது கதாப்பாத்திர சித்தரிப்புக்கு நம்பகத்தன்மையையும் சக்தியையும் சேர்க்கிறது. இந்த ஃபர்ஸ்ட் ஷாட்டில் வரும் டயலாக் அவரது கதாபாத்திரத்தின் வாழ்க்கைத் தத்துவத்தின் சுருக்கமான பிரதிபலிப்பாக அமைந்துள்ளது, இது அவரது திரை வாழ்க்கையில் மிக முக்கியம் தருணமாக அமைகிறது. அவரது கரீஷ்மா “பெத்தி” கதாபாத்திரத்தை அசத்தலாக வெளிப்படுத்துகிறது.
அசாதாரணமான கதாபாத்திரத்தைத் திரையில் அசத்தலாக உயிர்ப்பிக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட இயக்குநர் புச்சி பாபு பெடி கதாப்பாத்திரத்தின் ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு அசைவையும் அற்புதமாக வடிவமைத்துள்ளார், மேலும் தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பு மற்றும் பிரம்மாண்டம் ஒவ்வொரு ஃப்ரேமிலும் பிரகாசிக்கிறது. ஆர் ரத்னவேலு படம்பிடித்த காட்சிகள் பிரமிப்பைத் தருகின்றன. அதே நேரத்தில் அகாடமி விருது பெற்ற இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை, காட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. உலகளாவிய தரத்தில் நம் மண்ணின் கதை திரையில் விரிகிறது. அவினாஷ் கொல்லாவின் தயாரிப்பு வடிவமைப்பு, பெத்தியின் பழமையான உலகின் சாரத்தைத் திறமையாகப் படம்பிடித்து, ஒரு அற்புதமான அனுபவத்திற்கு மேடை அமைக்கிறது. தேசிய விருது பெற்ற எடிட்டர் நவீன் நூலியின் கூர்மையான எடிட்டிங், தடையற்ற கதை ஓட்டத்தை உறுதி செய்கிறது, படத்தின் வேகத்தை இறுக்கமாகவும் ஈடுபாட்டுடனும் வைத்திருக்கிறது.
ராம் சரணின் வசீகரம், வெகுஜனத்தை ஈர்க்கும் நடிப்பு, புச்சி பாபுவின் கூர்மையான எழுத்து மற்றும் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உயர் மட்டத்தை நிர்ணயித்த தொழில்நுட்பக் குழுவுடன், “பெத்தி” இன் முதல் ஷாட் படத்தின் வெளியீட்டிற்கான எதிர்பார்ப்புகளை உயர்த்துகிறது. இப்படம் வரும் மார்ச் 27, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
ராம் சரணின் பிறந்தநாள் கொண்டாட்டமாக வரும் இந்தப் படம், ஒரு இணையற்ற சினிமா அனுபவத்தையும், அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பார்வையாளர்களுக்கு ஒரு முழு விருந்தை வழங்கும் என்று உறுதியளிக்கிறது.
’52 கோடி வசூலைக் கடந்து வெற்றிநடை போடும் ‘ வீர தீர சூரன் !!
சீயான் விக்ரம் நடிப்பில், ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படம், வெளியான 8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகர் சீயான் விக்ரம் நெகிழ்ச்சியுடன், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில், ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ திரைப்படம் கடந்த மார்ச் 27 ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது இப்படம்.
ரிலீஸ் நாளில் பல தடைகள் ஏற்பட்ட நிலையில், அனைத்தையும் கடந்து, ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்து வருவதால், படக்குழு பெரும் உற்சாகத்தில் உள்ளது.
இது குறித்து நடிகர் சீயான் விக்ரம் தெரிவித்தாவது…. எனது ரசிகர்களுக்கு ஒரு மாஸானா, கிளாஸான, உண்மைக்கு நெருக்கமான ஒரு படைப்பை தர வேண்டுமென நீண்டநாட்களாக ஆசைப்பட்டேன். இயக்குநர் அருண்குமார் மூலம் அது நடந்தது. படம் ரிலீஸுக்கு முன்னால் பார்த்த நண்பர்கள் இது இந்த வருடத்தின் மிகப்பெரிய படமாக இருக்குமென பாரட்டினார்கள். ஆனால் ரிலீஸ் நாளான்று எதிர்பாராமல் ஏற்பட்ட தடங்கல்களால், படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரு படம் முதல் ஷோ வரவில்லை என்றாலே அந்தப்படம் ஓடாது என்பார்கள். எங்கள் படம் மாலைக்காட்சி தான் வந்தது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் தந்த வரவேற்பு மறக்கமுடியாதது. குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் ஒவ்வொரு விசயத்தையும், குறிப்பிட்டு பாராட்டிக் கொண்டாடினார்கள். படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றியுள்ளார்கள். என் ரசிகர்களுக்கு நன்றியைத் தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை. என் மீதான உங்கள் அன்புக்கு நன்றி. உங்களுக்காக தொடர்ந்து நல்ல படங்கள் தருவேன். அனைவருக்கும் நன்றி.
மக்களின் பெரும் வரவேற்பில், உலகமெங்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மே மாதம் வெளியாகும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் ‘மெட்ராஸ் மேட்னி’
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான சத்யராஜ் – காளி வெங்கட் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ மெட்ராஸ் மேட்னி ‘ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள’ மெட்ராஸ் மேட்னி’ எனும் திரைப்படத்தில் காளி வெங்கட் ,ரோஷினி ஹரிப்பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தோக், சுனில் சுகதா, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் சத்யராஜ் அறிவியல் சார்ந்த புனைவு கதை எழுதும் மூத்த எழுத்தாளராக திரையில் தோன்றுகிறார். ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலஸ்ரங்கன் இசையமைத்திருக்கிறார். ஜாக்கி கலை இயக்கத்தை கவனிக்க, சதீஷ் சமூஸ்கி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். கிரியேட்டிவ் புரொடியூசராக அபிஷேக் ராஜாவும், எஸ்கியூடிவ் புரொடியூசராக மொமெண்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தை சேர்ந்த ஜி.ஏ. ஹரி கிருஷ்ணனும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தினை ‘அருவி’, ‘ஜோக்கர்’, ‘கைதி’ போன்ற திரைப்படங்களை வழங்கிய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது. மேலும் இந்தத் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும், பொழுதுபோக்கு அம்சம் உள்ள நகைச்சுவையான குடும்பப் படமாக இது இருக்கும் என்றும் படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தில் இடம்பெற்ற திரையிசையுலகின் சென்சேஷனல் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் எழுதி, இசையமைத்து பாடிய பாடலும், அவரே திரையில் தோன்றி நடனமாடும் ப்ரமோஷனல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ லவ் மேரேஜ் ‘ எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு , கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடித்த ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ பட புகழ் நடிகை சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் கவனிக்க , தயாரிப்பு வடிவமைப்பை எம். முரளி மேற்கொண்டிருக்கிறார். கிராமிய பின்னணியில் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அஸ்யூர் பிலிம்ஸ் – ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘கல்யாண கலவரம் ‘எனும் முதல் பாடலும், பாடலுக்கான ப்ரமோஷனல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியரும் இசையமைப்பாளருமான ஷான் ரோல்டன் எழுதி, பாடியிருக்கிறார். உற்சாகத்தை பரவச் செய்யும் பெப்பியான பாடலாக உருவாகி இருக்கும் இந்த பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் டீசர் வெளியீடு உள்ளிட்ட புதிய அப்டேட்டுகளை விரைவில் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.