ஜோதிகா நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’

பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜோதிகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் இந்தி திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்வை திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இயக்குநர் துஷார் ஹிர நந்தானி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், ஜோதிகா, ஆலயா எஃப், சரத் கெல்கர், ஜமீல் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரதம் மேத்தா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆனந்த் மிலிந்த், தனிஷ் பக்ஷி, சாஸெட் -பரம்பரா மற்றும் வேத் சர்மா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.‌ பார்வை திறன் சவாலுள்ள மாற்றுத்திறனாளி தொழிலதிபரான ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை டி சீரிஸ் மற்றும் சாக் இன் சீஸ் பிலிம் புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், கிருஷ்ணகுமார் மற்றும் நிதி பார்மர் ஹிராநந்தானி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை விமான நிலையத்தில் உள்ள பிவிஆர் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது ஜோதிகா, இயக்குநர் துஷார் ஹிராநந்தானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகை ஜோதிகா பேசுகையில், ” ஸ்ரீகாந்த் திரைப்படம் மிகவும் இன்ஸ்பிரேஷனான ஸ்டோரி. துணிச்சலாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் நானும் பங்களிப்பு செய்ததற்காக பெருமிதம் கொள்கிறேன்.

என்னுடைய திரையுலகப் பயணத்தில் இந்த திரைப்படம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீகாந்த் பொல்லாவின் கதை கேட்டதும் எனக்கு வியப்பு ஏற்பட்டது. அவரை நேரில் சந்தித்து பேசியதும், அவரது வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை கேட்ட பிறகு வாழ்க்கை பற்றிய எனது பார்வை முற்றாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக பார்வைத்திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்த என்னுடைய பார்வை மாறிவிட்டது. அவர்கள் எவ்வளவு திறமை வாய்ந்தவர்கள் என்பதையும் .. பொதுவெளியில் அவர்கள் அவர்களை எப்படி நாம் நடத்துகிறோம் என்பதையும் குறித்தும் பல வினாக்களை என்னுள் எழுப்பியது.

இந்தத் திரைப்படம் பலருக்கும் அவர்களது அகக்கண்களை திறந்து விடும் படைப்பாக இருக்கும். இந்தப் படம் வெளியான பிறகு பார்வைத்திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளை பற்றி நாம் கொண்டிருக்கும் பார்வையில் நிச்சயம் மாற்றம் ஏற்படும்.

இந்த திரைப்படத்தில் நான் ஆசிரியை வேடத்தில் நடித்திருக்கிறேன். ‘ காக்க காக்க”, ‘ராட்சசி’ அதன் பிறகு ‘ஸ்ரீகாந்த்’ எனும் இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக ஆசிரியையாக நடித்திருக்கிறேன்.

பாலிவுட் திரையுலகில் நான் நடிக்கும் மூன்றாவது இந்தி திரைப்படம் இது.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் இனிமையானது. அற்புதமானது. பணியாற்றுவதற்கு மொழிகள் தடையில்லை. மலையாள திரையுலகமாக இருந்தாலும்.. தமிழ் திரையுலகமாக இருந்தாலும்.. பாலிவுட் திரையுலகமாக இருந்தாலும்.. திறமையான கலைஞர்களுடன் தான் பணியாற்றியிருக்கிறேன். இந்த திரைப்படத்தை டி சிரீஸ் நிறுவனமும் , நிதி ஹிராநந்தனியும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். துஷார் ஹிராநந்தனி இயக்கியிருக்கிறார். மே பத்தாம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் துஷார் ஹிராநந்தானி பேசுகையில், ” ஸ்ரீகாந்த் பொல்லாவின் சுயசரிதையை திரைப்படமாக உருவாக்குவதற்காக ஹைதராபாத்தில் அவரை சந்தித்தேன். மூன்று நாட்கள் அவருடன் செலவழித்தேன். நிறைய விசயங்கள் குறித்து விவாதித்தோம். அதன் போது அவர் திரைப்படத்தை உருவாக்குவதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். ” என்றார்.

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் சாகர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் பாபின், இணை தயாரிப்பாளர் தீபக், இயக்குநர் இளன், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ், நாயகன் கவின், நடிகைகள் அதிதி பொஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன், நடிகர்கள் ‘ராஜா ராணி’ பாண்டியன், தீப்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் இளன் பேசுகையில், ‘ எனக்கு’ மிகவும் எமோஷனலான தருணம் இது. நம் எல்லோரிடத்திலும் கனவு ஒன்று இருக்கும். ஒரு வீடு வாங்க வேண்டும்… ஒரு கார் வாங்க வேண்டும்… கடை ஒன்றை திறந்து வியாபாரம் செய்ய வேண்டும்.. என ஏதாவது ஒரு கனவு இருக்கும் தானே.. அந்த கனவை நோக்கி பயணிக்கிற அனைவருமே ஸ்டார் தான். இதைத்தான் இந்த படம் சொல்கிறது. அந்தப் பயணத்தில் நாம் யாரையும் காயப்படுத்தி விடக் கூடாது. அன்புடன்.. அந்த கனவை விட்டுக் கொடுக்காமல்… பிடிவாதமான மனதுடன்.. அந்தப் பயணம் இருந்து கொண்டே இருக்கும் அல்லவா..! அதைத்தான் இந்த படம் பேசுகிறது.

1980 களில் ஒரு பையன்.. அவனுக்கு 20 வயது இருக்கும். பெரிய நடிகராக வேண்டும் என்ற கனவுடன் மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார். எண்பது 90 ஆகிறது. 2000 ஆகிறது. 2010யும் கடக்கிறது. கடந்து போகிறது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேல் இந்த பயணம் தொடர்கிறது. இப்போது அவருக்கு 55 வயதாகிறது. இந்த வயதில் அவருக்கு ‘ராஜா ராணி’ எனும் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. பல வருஷமாக தேக்கி வைத்திருந்த அவருடைய கனவு நனவாகிறது. திரையரங்கில் அவருடைய நடிப்பிற்கு ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். அவர்தான் என்னுடைய அப்பா ‘ராஜா ராணி’ பாண்டியன்.

இந்தப் படத்தை அவருக்காக அர்ப்பணிப்பதைத் தான் நான் விரும்புகிறேன். இந்தப் படத்திற்கு இன்ஸ்பிரேஷன்.. என்னுடைய அப்பா தான். அவருடைய இந்த பயணத்தில் ஏராளமான அனுபவங்களை சந்தித்திருப்பார். அவமானங்களை எதிர்கொண்டிருப்பார்.‌

ஒரு முறை என் அப்பா என்னிடம், ‘இந்த முகத்தை வைத்துக்கொண்டு எப்படி நடிக்க வந்தாய்?’ என ஒருவர் கேட்டுவிட்டதாக வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார். அந்த நபர் கேட்ட அந்த கேள்விதான் என் அப்பாவிற்கு மிகப்பெரிய மோட்டிவேஷனாக இருந்திருக்கிறது. ஒருத்தர் முகத்துக்கு நேராக இப்படி கேட்டுவிட்டாரே..! என்ற ஒரே காரணத்திற்காக, எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற உறுதி அவர் மனதில் ஏற்பட்டு விட்டது. அந்த மனவுறுதியை விவரிப்பதுதான் இந்த ஸ்டார் திரைப்படம்.

ஒரு கனவை நாம் எப்போதும் தனியாக வென்று விட முடியாது. அதற்கு ஆதரவளிக்க நிறைய பேர் தேவை. உதவி செய்வதற்கும் ஆட்கள் தேவை. அதைவிட மற்றவர்களின் ஆசியும் முக்கியம்.‌ இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் கவின், ‘காசு இல்ல சார்..!’ என டயலாக் பேசுவார். அது எங்க அப்பா வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவம். அதன் போது எங்க அம்மா தான் அவருக்கு ஆதரவாக இருந்து அவரையும் பார்த்துக் கொண்டார். எங்களையும் பார்த்துக் கொண்டார். எங்களை பொறுத்தவரை அவரும் ஒரு ஸ்டார் தான்.

அடிப்படையில் நம்மை சுற்றி ஏராளமான ஸ்டார்கள் இருக்கிறார்கள். இவர்களை நினைவுபடுத்தும் வகையில் தான் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது.

இதனால் இந்த திரைப்படத்திற்கு அனைவரும் அவர்கள் குடும்பத்தினருடனும், காதலருடனும், நண்பர்களுடனும், உறவுகளுடனும் வருகை தந்து ரசிக்கும் ஒரு அழகான படமாக ‘ஸ்டார்’ இருக்கும் என நான் நம்புகிறேன்.

தயாரிப்பாளர் சாகரிடம் இந்த கதையை சொல்லிவிட்டு இரண்டு நாட்களில் பதிலை சொல்லி விடுங்கள் என நிபந்தனை விதித்தேன். அவர் ஒரே நாளில் இந்த படத்தை தயாரிக்கிறேன் என பதிலளித்தார். அந்தத் தருணத்தில் அவர் எடுத்த விரைவான முடிவு தான் இன்று வரை எனக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு தருணத்திலும் அவர் எடுக்கும் வேகமான முடிவு இப்படத்தை நேர்த்தியாக உருவாக்குவதற்கும் உதவி இருக்கிறது.

அவர் மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்காக பொறுப்பேற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் தங்களது பணியை முழு அர்ப்பணிப்புடன் செய்து ஒத்துழைப்பு வழங்கினர்.‌ அனைவரும் தங்களின் மனமார்ந்த பங்களிப்பை இப்படத்திற்காக அளித்துள்ளனர். இதற்காக இந்த தருணத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படத்தை நான் ஒரு அழகான காதல் கதையாக தான் பார்க்கிறேன். லவ் என்றதும் ஒரு அப்பாவின் அன்பு… ஒரு அம்மாவின் அன்பு… ஒரு நண்பனின் அன்பு… ஒரு மனைவியின் அன்பு… ஒரு காதலியின் அன்பு… என ஏகப்பட்ட அன்பு இப்படத்தில் இருக்கிறது.

இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக யுவன் தற்போது துபாயில் இருக்கிறார். நான் என்ன கேட்டாலும் எனக்காக அவர் செய்வார். அவர் என்ன கேட்டாலும் அவருக்காக நான் செய்வேன்.‌ அந்த அளவிற்கு எங்களுக்குள் நட்பு இருக்கிறது. எனக்கு அவர் ஒரு சகோதரர்.. நலம் விரும்பி.. நண்பன்.. ஆன்மீக வழிகாட்டி.. இப்படி அவரைப் பற்றி பட்டியலிட்டு கொண்டே செல்லலாம்.‌ இந்த உலகத்தில் எனக்குப் பிடித்தமானவர்களின் பட்டியலில் யுவன் முதலிடத்தில் இருக்கிறார். அவரைப் போல ஒருவரை என் வாழ்க்கையில் சந்தித்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன்.‌ அவர் எப்போதும் அன்பாகவும், இனிமையாகவும், எளிமையாகவும் பழகக்கூடியவர்.‌

இவரைத் தொடர்ந்து கவின். ஸ்டார் ஆகி இருக்கும் கவினை, ‘டாடா’ படத்திற்கு பிறகு தான் அவரை சந்திக்கிறேன். இப்படத்தின் கதையை அவரிடம் சொல்லும் போது, முழு கதையும் கேட்டுவிட்டு… ‘இந்த கதையில் வரும் பல சம்பவங்கள் என் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது’ என்றார். படத்தின் கதை தான் கவினை நாயகனாக தேர்ந்தெடுத்திருக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் கவின் நடிக்கும் போது எங்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருப்பார். ஒரு நடிகராக என்னை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பட குழுவினரையும் தன் நேர்த்தியான நடிப்பால் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருப்பார். இதற்கு சாட்சி படத்தின் முன்னோட்டம். இதற்காக கவினுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு சிறிய அளவிலான எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகள் இருக்கிறது. அதை படம் பார்த்த ரசிகர்கள்.. மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அன்பாக வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார் .

தயாரிப்பாளர் சாகர் பேசுகையில், ” இயக்குநர் இளன், ‘ஸ்டார்’ படத்தின் கதையை சொல்வதற்கு முன்பே அவருடன் தொடர்பில் இருந்தேன். அப்போது காணொளி மூலமாக ஒரு கதையை என்னிடம் சொல்லி இருக்கிறார். அவர் கதை சொல்லும் விதம்.. அதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்ளும் பாணி.. இதெல்லாம் எனக்குப் பிடித்திருந்தது. இது தொடர்பாக எஸ்கியுடிவ் ப்ரொடியூசர் வினோத்திடம் இளனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனச் சொன்னேன்.

சிறிது நாள் கழித்து என்னை சந்தித்து ஸ்டார் திரைப்படத்தை உருவாக்கலாமா? என கேட்டார்.‌ அவர் இந்த படத்தின் கதையை முழுவதுமாக விவரித்தார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. யார் ஹீரோ? என கேட்டேன். அவர் கவின் என்று சொன்னார். அப்போது ‘டாடா’ படம் வெளியாகி வெற்றி பெற்றிருந்த தருணம். ‘டாடா’ படத்தை பார்க்கும் போதே தமிழ் திரையுலகத்திற்கு நம்பிக்கையான ஒரு நடிகர் கிடைத்திருக்கிறார் என மகிழ்ச்சி அடைந்தேன். இளனும் கவின்தான் நாயகன் என்று சொன்னவுடன் நான் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டேன்.

அவர் சொன்னது போல் எனக்கு இரண்டு நாள் தான் டைம் கொடுத்தார். அவருக்கு வேறு திசைகளில் இருந்து அழுத்தம் இருந்ததை உணர முடிந்தது. அப்போது இந்த படத்தின் கதை மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இளன்+ கவின் காம்பினேஷன் மீதும் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

அண்மையில் இந்தத் திரைப்படத்தை பார்த்தேன். கதையை உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறார். எல்லா பிரிவினரும் அன்பாக ஒன்றிணைந்து உருவாக்கிய படைப்பு இந்த ஸ்டார். இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

பட தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ் பேசுகையில், ” லவ் டுடே படத்தின் முன்னோட்டத்தை ஒரு வாரத்தில் நிறைவு செய்து விட்டேன். ஆனால் இந்தப் படத்தின் முன்னோட்டத்திற்கு இருபது நாள் எடுத்துக் கொண்டேன். இளனின் திரைக்கதையை முழுவதுமாக படித்து விட்டேன். படத்தையும் பார்த்து விட்டேன். கவினின் அற்புதமான நடிப்பை பார்த்து வியந்து விட்டேன். இந்த கூட்டணியுடன் பணியாற்றும் போது எனக்கு பொறுப்புணர்வு அதிகம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். முன்னோட்டத்தை பத்து நாட்களில் முடித்து விட்டேன். இருந்தாலும் அதன் மீது எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இளனுக்கு போன் செய்து, ‘எனக்கு இன்னும் ஒரு ஐந்து அல்லது ஆறு நாட்கள் கொடுங்கள் எனக்கு முழு திருப்தி இல்லை’ என்று சொன்னேன். என் மேல் எனக்கு நம்பிக்கை இல்லாமல் போனதுக்கு காரணம் இவர்கள்தான். அந்த அளவிற்கு படத்தின் கதை, திரைக்கதை, நடிப்பு என அனைத்து அம்சங்களும் நேர்த்தியாக இருந்தது.

படத்தின் முன்னோட்டத்தை நிறைவு செய்தவுடன் எனக்கு ஒரு விசயம் தோன்றியது. திறமையான சமையல் கலை நிபுணராக இருந்தாலும்.. நல்ல இன்கிரிடியன்ஸ் இருந்தால்தான் நல்ல உணவை தயாரிக்க முடியும். அதுபோல் இந்த படத்தின் முன்னோட்டம் பேசப்படுவதற்கு இவர்கள் வழங்கிய கன்டென்ட் தான் காரணம். இதற்காக இயக்குநர் இளன், நடிகர் கவின் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகை அதிதி பொஹங்கர் பேசுகையில், ” இயக்குநர் இளன் திறமையானவர். வசனத்தையும்… வசனத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதையும் .. அதனுடன் உணர்வுபூர்வமாக எப்படி நடிக்க வேண்டியதையும் தெளிவாக குறிப்பிடுவார். இந்தப் படத்தில் சுரபி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் மேடை நாடகத்திலிருந்து வந்திருக்கிறேன். ஒத்திகை முக்கியம் என்பதை நன்கறிவேன். படப்பிடிப்பு தளத்தில் பட குழுவினருடன் பழகிய தருணங்கள் மறக்க இயலாதவை. படக்குழுவினர் அனைவரும் நட்புடன் பழகினர். கவின் ஒரு சக நடிகராக இருந்தாலும்.. மிகத்திறமையானவர். மே பத்தாம் தேதி ஸ்டார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து எங்களுக்கு ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில், ” இன்று எனக்கு மிகவும் ஸ்பெஷலான நாள். நான் நடித்த முதல் திரைப்படம் வெளியாகிறது. ஓராண்டிற்கு முன் யாராவது என்னை சந்தித்து, ‘நீங்கள் தரமான படத்தில் முதன்மையான வேடத்தில் நடிப்பீர்கள்’ என்று சொன்னால் ..நான் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் அது இன்று சாத்தியமாகி இருக்கிறது. இதற்காக என்னுடைய பெற்றோருக்கும், வாய்ப்பு அளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களுக்கும், ஸ்டார் பட குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரைப்படத்தின் நடித்தவுடன் எனக்கு ஓரளவு மன திருப்தி ஏற்பட்டிருக்கிறது. நான் இயக்குநர் இளனின் வழிகாட்டுதலின்படி தான் நடிகை ஆகியிருக்கிறேன். இந்தப் படம் வெளியான பிறகு கவினுக்கு ரசிகர்களின் கூட்டம் அதிகரிக்கும். அவர் பெரிய ஸ்டாராகி விடுவார்.

படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் போதெல்லாம் படக்குழுவினரிடம் இருக்கும் பாசிட்டிவிட்டி… என்னை வியப்படையச் செய்தது. இதனால்தான் படங்களை உணர்வு பூர்வமாக உருவாக்க முடிகிறதோ..! என்றும் எண்ணி இருக்கிறேன். இந்தப் படத்திலும் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பை வழங்கி இருக்கின்றனர். அதனால் இந்த படம் நிச்சயமாக பெரிய வெற்றியைப் பெறும். ” என்றார்.

இயக்குநரின் தந்தையும், நடிகருமான ‘ராஜா ராணி’ பாண்டியன் பேசுகையில், ” என்னை திரைத்துறைக்கு கைபிடித்து அழைத்து வந்து ஸ்டில்ஸ் ரவிக்கு முதல் வணக்கம். இளன் – ‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை எண்ணற்றோன் கொல் எனும் சொல்’ எனும் வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப என்னை உயர்த்தி விட்டார். இளன் சிறிய வயதிலேயே பேன்சி டிரஸ் காம்பெடிஷனில் கலந்து கொள்வான். அதற்கு நான் அவனை அழைத்துக் கொண்டு செல்வேன். நடிகை நளினி இதை பார்த்து என்னிடம், ‘உன் ஆசை எல்லாம் உன் மகன் மூலமாக தீர்த்துக் கொள்கிறாயா? ‘ என கிண்டலுடன் கேட்பார். அவன் வீரசிவாஜி வேடம் அடைந்திருந்த போது, தலை வலிக்கிறது என்றான். நான் அவருடைய கிரீடத்தை தாங்கிப் பிடிக்க.. உடனே, ‘மேடையில் நீங்கள் வந்து தாங்கி பிடிப்பீர்களா?’ என கேட்டுவிட்டு கையை எடுத்து விட சொன்னார். அந்த அளவிற்கு அவனை நான் தயார்படுத்திருந்தேன். அவனும் தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தான்.

நடிப்பை தொடர்ந்தாலும் கல்வி விசயத்தில் நான் உறுதி காட்டியதால் அவன் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் முடித்த பிறகு தான் என்னை வைத்து குறும்படம் ஒன்றை இயக்கினான்.

படிப்பை முடித்த பிறகு தான் இந்தத் துறையில் வரவேண்டும் என நிபந்தனை விதித்திருந்தேன். அதனையும் ஏற்றுக் கொண்டான். அத்துடன் பட்டதாரியான பிறகு வேலை தேடுவதற்கு நான்கு ஆண்டுகள் ஆகலாம். அதன் போது எனக்கு சோறு போடுவீர்களா! என கேட்டார். போடுவோம் என்றேன். அது போல் நினைத்து எனக்கு இரண்டு ஆண்டுகள் சோறு போடுங்கள். நான் இயக்குநராகி காட்டுகிறேன் என்றார். ஆனால் ஒரே வருடத்தில் இயக்குநராகி விட்டார்.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால்.. பெற்றோர்கள் பிள்ளைகளின் விருப்பத்தை உணர்ந்து அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அந்த வகையில் நான் அவருக்கு வாய்ப்பு அளித்தேன் அதனை அவர் பயன்படுத்தி இயக்குநராகிவிட்டார். இதை மறுத்து என்னுடைய கருத்தை மட்டுமே திணித்துக் கொண்டிருந்தால்.. அவருடைய வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கும்.

எல்லோரும் சினிமாவை நோக்கி வருகிறார்கள். பலரும் தொழிலதிபராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். சிலர் டாக்டராக வேண்டும் என்று நினைக்கிறார்கள்.‌ இதில் இலக்கை நோக்கி பயணிப்பவர் பலர். ஆனால் சென்றடைபவர் சிலர்தான். கடைசி வரை அந்த நோக்கத்தில் இருந்து விலகாமல் பயணிப்பவர்கள் தான் சென்றடைகிறார்கள்.
என்னுடைய மகன் இந்த துறையில் இயக்குநராக வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி தான்.

நான் இன்று இந்த நிலைமையில் இருப்பதற்கும் ஸ்டில்ஸ் ரவியின் தொழில் பக்தி தான் காரணம். அவர் ஒவ்வொரு நிமிடமும் தொழிலில் அக்கறை காட்டுபவர். அவரிடம் உதவியாளராக பணியாற்றிய போதும் நடிக்க வேண்டும் என்று என்னுள் இருந்த ஆர்வத்தை கைவிடவில்லை. இதனால் அவரிடம் பலமுறை திட்டு வாங்கியிருக்கிறேன். பிறகு அவரை சமாதானப்படுத்தி அவரிடம் தொடர்ந்து பணியாற்றி இருக்கிறேன்.

‘ராஜா ராணி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதும் பல நெருக்கடிகளை எதிர் கொண்டேன். ஆனால் நல்ல கதாபாத்திரம் என்பதால் அனைத்தையும் துறந்து விட்டு, அதில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தேன். இந்தப் படத்தில் நடித்ததற்காக சம்பளத்தை வாங்கிய போது.. காசாளர் நம்பிக்கையுடன் நீங்கள் நல்லா வருவீர்கள.! என்று சொன்னார். இந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில் நான் கலந்து கொண்டேன். அந்த விழாவில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த யூகி சேது தான், ‘பந்தா’ பாண்டியாக இருந்த என்னை என்னை ‘ராஜா ராணி’ பாண்டியன் என மாற்றினார். இதற்காக யூகி சேதுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒருவர் செய்த உதவியை நன்றி மறக்காமல் காலம் முழுதும் நினைத்துக் கொண்டே இருந்தால் நாம் முன்னேறி விடுவோம். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும், வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி.” என்றார்.

நடிகர் கவின் பேசுகையில், ” டாடாவிற்கு பிறகு ஸ்டார். இயக்குநர் இளன் கதை சொல்ல வரும்போது அவருடன் எதனையும் எடுத்துக் கொண்டு வரவில்லை. பொதுவாக கதை சொல்ல வரும் இயக்குநர்கள் தங்களது கைகளில் லேப்டாப்… ஒன்லைன் ஆர்டர்.. ஸ்கிரிப்ட் புக்.. என ஏதாவது ஒன்றை கையில் வைத்திருப்பார்கள். மூன்று மணி நேரம் பொறுமையாக.. விரிவாக கதையை சொன்னார். அவர் இதயத்தில் இருந்து கதையை சொல்கிறார் என்று கதையை கேட்டு முடிந்த பிறகு தான் தெரிந்தது. அவர் சொன்ன கதையில் ஜீவன் இயல்பாகவே இருந்தது. பெரிதாக எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன்.

படத்தின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை.. என்னை தேடி வந்து கதை சொன்ன பிறகு வைத்த நம்பிக்கை.. என அனைத்தையும் காப்பாற்றி இருக்கிறேன் என நினைக்கிறேன்.

படத்தின் இணை தயாரிப்பாளர் தீபக் வெளிநாட்டில் தான் இருப்பார். ஆனால் படப்பிடிப்பு பணிகளை நேர்த்தியாக அங்கிருந்தே ஒருங்கிணைத்து விடுவார்.

இந்தப் படத்தின் கதையை கேட்டு முடித்தவுடன் மிகவும் பொறுமை தேவை என்பதை உணர்ந்தேன். படைப்பும் பெரிது. அதற்கான உழைப்பும் நேரமும் அதிகம். அனைவரும் இதனைப் புரிந்து கொண்டு பொறுமையாக இருந்து பணியாற்றியதற்காக இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் விக்ரம் பிரபுவுடன் இணைந்து ‘ஷத்ரியன்’ என்றொரு படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தில் யுவன் இசையில் எனக்கொரு பாடல் காட்சியும் இருந்தது. அது படமாக்கப்பட்டது. பிறகு படத்தொகுப்பில் நீக்கப்பட்டது. நான் நடித்த முதல் படம். அதில் பாடல் காட்சி நீக்கப்பட்டதால்.. மனதில் வலி இருந்தது. யுவனை நேரில் சந்திக்கும் போது இதைப்பற்றி விவரித்தேன்.

பொதுவாக ஆறுதலுக்காக சொல்வார்கள் அல்லவா… ‘இன்று நடக்கவில்லை என்றால், நாளை இதைவிட பெரிதாக நடக்கும் என்று’… அதைப் பற்றிய தவறான புரிதல் எனக்குள் இருந்தது. ஆனால் அந்த வார்த்தைகள் எல்லாம் உண்மைதான் என்பது இப்படத்தில் தெரிந்து கொண்டேன். யுவன் சங்கர் ராஜா இசை என்றவுடன் என்னுடைய ஆசையும், கனவும் நிறைவேறிவிட்டது. இந்த படத்திற்காகவே யுவன் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். அதை நீங்கள் முன்னோட்டத்திலேயே பார்த்து ரசித்திருக்கலாம். படம் பார்க்கும்போதும் அவருடைய உழைப்பு உங்களுக்கு தெரிய வரும் என நினைக்கிறேன்.

எழில் அரசு தான் ஒளிப்பதிவு என்றவுடன்.. எனக்கு முழு நம்பிக்கை வந்து விட்டது. ஏனென்றால் ‘டாடா’ படத்திற்கு அவர்தான் ஒளிப்பதிவாளர்.

படத்தின் கதை யதார்த்தமாக இருக்கும். அதில் இடம்பெறும் சின்ன சின்ன சண்டை காட்சிகளும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக சண்டை பயிற்சி இயக்குநர் விக்கி மாஸ்டர் கடினமாக உழைத்திருக்கிறார்.

எனக்கு டான்ஸ் மாஸ்டர் என்றால் பயம் தான். எனக்கு நடிப்பின் மீது இருக்கும் நம்பிக்கை… நடனத்தின் மீது இல்லை. நிறைய ஒத்திகையை பார்ப்பேன். இந்தப் படத்தில் மூன்று டான்ஸ் மாஸ்டர்களும் எனக்காக பொறுமையுடன் சொல்லிக் கொடுத்து நடனமாட வைத்தார்கள்.

லால் மற்றும் கீதா கைலாசம் இருவரும் நடித்திருக்கும் காட்சிகள் உயிரோட்டமாக இருக்கும். அதில் அவர்களின் அனுபவிக்க நடிப்பு மேலும் யதார்த்தமாகவும், அழகாகவும் இருக்கும். இது ரசிகர்களிடமும் சரியாக பிரதிபலிக்கும் என நம்புகிறேன்.

படத்தில் நடித்த சக நடிகைகளான பிரீத்தி மற்றும் அதிதிக்கும் நன்றி. உடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் நடித்த அனைவரும் திரையுலகத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. ஏனெனில் நல்ல கன்டென்ட் இருந்தால் அந்தப் படத்திற்கு நீங்கள் அபரிமிதமான ஆதரவை தருவீர்கள். இதற்கு ‘டாடா’ உட்பட பல படங்களை உதாரணமாக சொல்லலாம்.

இவற்றையெல்லாம் கடந்து ஒரே ஒரு சிறிய விசயத்தை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ‘சினிமாவை வைத்து சினிமா எடுத்தால் ஒடாது’ என பொதுவாக சொல்வார்கள். இது எந்த அளவிற்கு உண்மை என எனக்குத் தெரியவில்லை. படம் நன்றாக இருந்தால் ஓடும். ஓடியிருக்கிறது. ஆனால் இது போன்ற விசயம் எப்படி உருவாகிறது என தெரியவில்லை. ஒருவேளை ஒட்டுமொத்த சதவீதத்தின் அடிப்படையில் சொல்லி இருக்கலாம் என நினைக்கிறேன்.

இந்தப் படத்திற்கும் அது நடந்தது. தயாரிப்பாளர் சாகரிடம் கதை செல்வதற்கு முன் சிலர் இந்த விசயத்தை சொன்னார்கள். அதுவரைக்கும் நான் மிகவும் நம்பிக்கையாக தான் இருந்தேன். தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகரும் கதையைக் கேட்டு விட்டு .. இது போன்ற கருத்தை சொல்லி விடுவாரோ..! என பயந்தேன். ஆனால் இந்த படத்தை தயாரிக்க ஒரே நாளில் அவர் ஒப்புக்கொண்டவுடன் எனக்கு இருந்த பயம் விலகி, நம்பிக்கை அதிகரித்து விட்டது. கலையை கலையாக பார்க்கிற.. அதை மிகவும் நேசிக்கிற.. பட குழு மீது தயாரிப்பாளர் நம்பிக்கை வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கை தான் இந்த படத்தை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது என நினைக்கிறேன். அந்த விசயங்களை எல்லாம் கடந்து இந்த படைப்பின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைதான் வெற்றியை தரும் என நம்புகிறேன்.

ரசிகர்கள் மீதும் பெரும் நம்பிக்கை இருக்கிறது. தயாரிப்பாளர்களின் முதலீட்டிற்கும், ரசிகர்களின் முதலீட்டிற்கும் நியாயமாக உழைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய குரு எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். இதற்காகவே ஒட்டுமொத்த பட குழுவும் நம்பிக்கையுடன் பணியாற்றியிருக்கிறது.

இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல முறையில் ஓடி.. சினிமாவைப் பற்றி சினிமா எடுத்தால் ஓடும் என்கிற பட்டியலில் இந்த திரைப்படம் இடம் பெறும். இதை நான் ஆத்மார்த்தமாக நம்புகிறேன். ” என்றார்

தி ப்ரூஃப் THE PROOF திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

‘Golden studios’ சார்பில் தயாரிப்பாளர் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. மாறுபட்ட களத்தில் பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி சமூக அக்கறையுடன், கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் சாய் தன்ஷிகா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். ருத்வீர் வதன், மைம் கோபி, ரித்விகா, இந்திரஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, திரைப்பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர் கே ராஜன், இயக்குநர் ஆர் வி உதயகுமார், யூகி சேது பாடலாசிரியர் சினேகன், ரோபோ சங்கர், நடிகர் சந்தோஷ் பிரதாப் உட்பட பல திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

தயாரிப்பாளர் கோமதி பேசியதாவது…
இந்த விழாவிற்கு எங்களை வாழ்த்த வந்திருக்கும் ஆளுமைகள் அனைவருக்கும் நன்றிகள். இது என் முதல் படம். எனக்கு மட்டுமல்ல, ஹீரோ, மியூசிக் டைரக்டர் என எல்லோருக்கும் இது முதல் படம். அனைவரும் கடுமையாக உழைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். உங்கள் ஆதரவைத் தர வேண்டும் நன்றி.

நடிகர், இயக்குநர் யூகி சேது பேசியதாவது…
நான் ஒரு படம் செய்துள்ளேன் அப்படத்தின் எல்லா பாடலுக்கும் ராதிகா தான் டான்ஸ் மாஸ்டர். இந்தப்படத்திற்குச் சரியான தலைப்பு பிடித்திருக்கிறார்கள். எல்லா மொழிக்கும் பொருந்துகிற மாதிரியான தலைப்பு. ராதிகா மாஸ்டரிடம் ஒரு மறைமுக திறமை இருக்கிறது. எந்த நடிகரும் அவரை வணங்கித் தான் ஷாட்டுக்கு போகிறார்கள், இயக்குநருக்குக் கூட அந்த மரியாதை இல்லை. ஒரு தலைமைப்பண்பு இயல்பிலேயே அவருக்கு வந்துவிடுகிறது. அதிலும் இப்படத்தில் அவர் மகன் தீபக்கை இசை அமைப்பாளராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள். 2024 சினிமாவுக்கு மிகக் கடினமான காலம். போட்டிகள் மிகப் பெரிதாக உள்ளது. உலகளவில் எடுக்கப்படும் சினிமாக்களில் 10 சதவீதம் தான் வெற்றி பெறுகிறது. உலகத்தில் படமெடுக்க மிகவும் கடினமான நாடு இந்தியா அதிலும் தமிழ்நாடு இன்னும் கடினமானதாக இருக்கிறது. இன்டர்வெல் விடும் பழக்கம் உலகிலேயே இங்கு மட்டும் தான் இருக்கிறது. ராதிகா அதையெல்லாம் எதிர்கொண்டு சாதித்துள்ளார். சிறிய படங்கள் சின்ன நட்டம், பெரிய படங்கள் ஏதாவது ஒன்று செய்து சமாளித்து விடுவார்கள், ஆனால் மிடில்கிளாஸ் மாதிரி மீடியம் பட்ஜெட் படங்கள் மாட்டிக்கொள்கிறது. அதைத்தாண்டி படமெடுத்துள்ளார் ராதிகா. டான்ஸ் மாஸ்டர் சாந்தி, ராதிகா இருவரையும் 25 வருடங்களாக தெரியும். மிகத்திறமையானவர்கள் இவர்கள் கண்டிப்பாக இன்னும் பெரிதாக ஜெயிக்க வேண்டும். தயாரிப்பாளர் கோமதி, என் அம்மா பெயர் அவருக்கும் என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது…
வாழ்த்த வந்துள்ள அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள். இது என் குடும்பத்துப் படம். ராதிகா என் உயிர் நண்பனின் மகள். அவரை குழந்தையாகப் பார்த்திருக்கிறேன். இவர் வளர்ந்து பெரிய பெரிய ஹீரோக்களை ஆட வைப்பார் என நினைக்கவில்லை. மிகப்பெரிய உழைப்பாளி. அந்த திறமையில் தான் எழுத்து இயக்கத்தையும் செய்துள்ளார். டிரெய்லர் பார்த்தேன், எந்த குறையும் இல்லாமல் மிக நன்றாக உள்ளது. வெற்றி பெறுவதற்கான அறிகுறிகள் இருக்கிறது. தன்ஷிகா நன்றாக நடித்துள்ளார். படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும். இன்று சினிமா இருக்கும் நிலையில், ஒரு படத்தை வெளியீடு வரை இவர்கள் கொண்டு வந்ததே மிகப்பெரிய சாதனை. இந்தப்படம் வெற்றி பெற்றால், இன்னும் பல சிறு முதலீட்டுப் படங்கள் வரும். அதற்காகவே இப்படம் வெற்றி பெற வேண்டும். இசையமைப்பாளர் தீபக் பெரிய அளவில் வெற்றிபெற வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் சங்க தலைவர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…
படத்தில் எல்லாமே மிக நன்றாக உள்ளது. ஒரு கிளாஸ் இயக்குநர் உருவாக்கியது போல மிக நன்றாக வந்துள்ளது. ராதிகா மிகவும் சிம்பிள், நல்ல திறமைசாலி. இப்ப சினிமா டிரெண்ட் மாறியிருக்கு. இயக்குநர்கள் நடிக்கிறார்கள், டான்ஸ் மாஸ்டர், நடிகர்கள் இயக்குகிறார்கள், ஆனால் எல்லோரையும் வரவேற்பது தான் சினிமா. மேக்கிங் ஸ்டைல் தெரியாமலே இப்போது படம் எடுக்கிறார்கள் அது சில நேரம் ஹிட் ஆவதால் அதை சரி என நான் சொல்ல முடியாது. எந்த இடத்தில் எந்த ஷாட் வைக்க வேணும் எங்கு இண்டர்வெல் விட வேண்டும் என்பதை உதவி இயக்குநர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இப்போது போதைப்பொருள் தான் டிரெண்ட். அதை வைத்து நாம் சம்பாதிக்கிறோம். பெரிய ஹிரோக்கள் இப்போது கதையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை காம்பினேசன் சரியாக அமைந்தால் போதும் என நினைக்கிறார்கள். சிவாஜி சார் காலத்தில் இப்படியா இருந்தது ?. எல்லா புராணங்களையும் அவர் வழியில் தான் பார்த்திருக்கிறோம் அது தான் டிரெண்ட். ராதிகா உன்னை எல்லாரும் குழப்புவார்கள். அதைப் பற்றி நினைக்காதீர்கள் இன்றைய காலத்திற்குத் தேவையான கதையை எடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள். ருத்விக் மிகக் கட்டுக்கோப்பான உடற்கட்டுடன் இருக்கிறார் அவரை நான் ஹீரோவாக்க நினைத்தேன் அதற்குள் ஹீரோவாகி விட்டார். வாழ்த்துக்கள். தன்ஷிகா நடிப்பு பிரமாதமாக உள்ளது. நல்ல ஆக்சன், கிளாமர் என எல்லாம் அவருக்குச் சிறப்பாக வருகிறது. ராதிகா மிகவும் திறமையாகப் படத்தை மேக்கிங் செய்துள்ளார். தயாரிப்பாளர் கோமதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், தம்பி தீபக் பெரிய இசையமைப்பாளராக வாழ்த்துக்கள். அவர் அப்பா என் படங்களுக்கு வயலின் வாசித்துள்ளார். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது…
இத்திரைப்படத்தில் என் பெண்ணுக்கு நல்ல வாய்ப்பு வழங்கிய, ராதிகா மாஸ்டருக்கு நன்றி. ராதிகா மாஸ்டரின் திறமைக்கு இனி ஃபுரூஃபாக இந்தப்படம் இருக்கும், வாழ்த்துக்கள். பெண்களை ஆண்கள் தடுக்கிறார்கள் எனச் சொன்னார்கள், பெண்களுக்கு வாய்ப்பு தந்து அழகு பார்ப்பது ஆண்கள் தான் என்பதை இங்கு சொல்லிக்கொள்கிறேன். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது..
இந்த மேடையை மிக உணர்வுப்பூர்வமான மேடையாகப் பார்க்கிறேன். பேசுபவர்கள் அனைவரும் முழு மனதோடு வாழ்த்திப் பேசுகிறார்கள் அதற்குக் காரணம் ராதிகா மாஸ்டர் தான். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் அன்பை மட்டுமே பரப்பியிருக்கிறார். அந்த அன்பு தான் இங்கு பிரதிபலிக்கிறது. பெண்களின் ஆசை நிறைவேறத் துணையாய் நிற்பது தான் சிறந்த ஆணின் பண்பு ஆகும். அது போல் தான் ராதிகா மாஸ்டரின் கணவர் இருக்கிறார். ராதிகா மாண்டரின் போராட்டம் எனக்குத் தெரியும் அவரின் விடாமுயற்சி தான் அவரை இன்று இயக்குநராக்கியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு எனும் களத்தில் இந்தப்படம் அமைந்துள்ளது. ராதிகா மாஸ்டர் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நடிகர் மைம் கோபி பேசியதாவது…
ராதிகாவை நான் என் தங்கையாக மட்டுமே பார்க்கிறேன். நிறையப்படங்களில் நான் வேலை பார்த்துள்ளேன் அவ்வளவு அன்பாக பழகுவார். என்னையும் ஆட வைத்துள்ளார் எனக்கே பிடிக்கவில்லை ஆனாலும் ஆட வைத்துள்ளார். எனக்குக் கதை தெரியாது எதுவுமே தெரியாது அவருக்காக மட்டுமே, அவர் சொன்னதை அப்படியே செய்தேன். அவர் இன்னும் எத்தனை படம் எடுத்தாலும் நடிப்பேன். ராதிகா வெற்றி பெற வாழ்த்துக்கள். தம்பி தீபக்கிற்கு என் வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது…
ரொம்ப சந்தோஷமாக உள்ளது. ராதிகா மாஸ்டரின் முதல் பைலட்டில் நான் தான் நடித்தேன். அப்போதிலிருந்து அவரைத் தெரியும். நிறையப் போராடி இப்படத்தைக் கொண்டு வந்துள்ளார். இங்குள்ள அனைவருடனும் நான் ஒரு வகையில் வேலை பார்த்துள்ளேன். மகிழ்ச்சி. இப்படம் மிக நன்றாக வந்துள்ளது படத்தில் வேலை பார்த்துள்ள அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.

நடன இயக்குநர் மெட்டி ஒலி சாந்தி பேசியதாவது…
எல்லோருக்கும் வணக்கம். மிக பெருமையாக இருக்கிறது. கோமதி மேடத்திற்கு நன்றி. சினிமா இன்ட்ஸ்ட்ரி முதலில் வேறு மாதிரி இருந்தது. எல்லா மொழி படங்களும் இங்கு தான் தயாரானது. இப்போது அந்தந்த மொழி படங்கள் அங்கேயே தயாராகிறது, அதனால் இங்குள்ளவர்களுக்கு வேலை இல்லை. கோமதி மேடம் இன்னும் நிறையப் படங்கள் தயாரிக்க வேண்டும். கணவர்கள் நினைத்தால் மட்டுமே ஒரு பெண் சாதிக்க முடியும். தங்கள் மனைவிகளின் கனவிற்குத் துணையாக இருக்கும் கணவர்களுக்கு நன்றி. தீபக் அவனைச் சிறு குழந்தையாகப் பார்த்துள்ளேன், கீபோர்ட் வைத்து விளையாடிக்கொண்டிருப்பான், இப்போது இசையமைப்பாளர், என் பிள்ளையாகத் தான் அவனை நினைக்கிறேன் பெருமையாக உள்ளது. ராதிகா அவள் எனக்கு தங்கை, தோழி, போட்டியாளர் எல்லாம் தான். நாங்கள் இணை பிரியா தோழிகள் அத்தனை அன்பானவள். அவளுக்காகத் தான் அனைவரும் வந்துள்ளார்கள். இப்படம் 100 நாள் ஓடி பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். தன்ஷிகா மிகச்சிறந்த நடிகை அவர் இன்னும் பெரிய வெற்றியைக் குவிக்க வாழ்த்துக்கள்.

நடிகை இந்திரஜா சங்கர் பேசியதாவது…
எல்லா பெரியவர்களுக்கும் என் நன்றிகள். ராதிகா மாஸ்டருக்கு என் நன்றிகள். கல்யாணத்திற்குப் பிறகு நான் பங்கு பெறும் முதல் நிகழ்ச்சி இது. ராதிகா மாஸ்டரின் முதல் படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. தன்ஷிகா மேடத்திற்கு நன்றி, என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். படக்குழு அனைவருக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகை சாய் தன்ஷிகா பேசியதாவது…
இந்த மேடை மிக முக்கியமான மேடை. ராதிகா மாஸ்டர் அதற்கு மிக முக்கிய காரணம். எத்தனையோ மேடைகளில் பிரபலங்கள் பேசிவிட்டு உடனே கிளம்புவதைப் பார்த்துள்ளேன், இந்த மேடையில் அனைவரும் மனதார வாழ்த்திவிட்டுக் காத்திருக்கிறார்கள். ராதிகா மாஸ்டரின் மீதான அன்பு தான் காரணம். இந்தப்படம் அவரது ஃபிரண்ட்ஷிப்பிற்காக மட்டுமே செய்த படம். ராதிகா எங்கு பார்த்தாலும் என்னைப்பற்றிப் பேசுவார். ஊக்கம் தந்து கொண்டே இருப்பார். அவர் மனதிற்கு இந்தப்படம் பெரிய வெற்றி பெறும். பெண்கள் முன்னேறத் தடையாக இருப்பது ஆண்கள் என சொல்லிக்கொண்டே இருப்பார்கள் ஆனால் எனக்கு என் பயணத்திற்கு ஆண்கள் தான் நிறைய உதவியுள்ளார்கள். என் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் உள்ளார். இனிமே சினிமா வாய்ப்பு வருமா என நினைத்த காலத்தில் வந்த வாய்ப்பு தான் இந்தப்படம். ராதிகா மாஸ்டர் எப்போதும் எனக்கு டார்லிங் தான். அவர் இயக்குநர் ஆவார் என்றே நினைக்கவில்லை. அவர் கதை சொன்ன போதே ரொம்ப பிடித்தது. அட்டகாசமாக இயக்கியிருக்கிறார். தீபக் ஐந்து வருடம் முன் சின்னப்பையானாக இருந்தார் இப்போது என் படத்திற்கே இசையமைக்கிறார். பெண்களின் பாதுகாப்பைப் பற்றிப் பேசுகிறது இந்தப்படம். ராதிகா மாஸ்டரின் உழைப்பிற்கு இந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இங்கு வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் நன்றிகள். எல்லோருக்கும் நன்றிகள்.

நாயகன் ருத்விக் பேசியதாவது…
சின்ன வயதிலிருந்து நடிகனாக வேண்டும் என்பது தான் ஆசை. தியேட்டருக்கு வரும் மக்கள் 2 மணி நேரம் எல்லாத்தையும் மறந்து விடுவார்கள் அது தான் சினிமா மேஜிக். கிரியேட்டருக்கான மரியாதை அது தான். ராதிகா மேடம் இது தான் கதை, இது தான் பாத்திரம், நீ தியேட்டர் ஆர்டிஸ்ட் தானே, உனக்கு வருவதைச் செய் என்று ஊக்கம் தந்தார். மைம் கோபி சார், தன்ஷிகா மேடம் நடிப்பைப் பிரமித்துப் பார்த்தேன். அவர்களிடம் இருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். ராதிகா மேடம் என்னை ஒரு மகன் போலவே பார்த்துக் கொண்டார்கள். அவர் தந்த ஊக்கம் தான் எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தைத் தந்தது. இப்படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது…
ராதிகாவை நான் வாடி போடி என்றுதான் கூப்பிடுவேன். அவள் எனக்கு அந்தளவு நெருங்கிய தோழி. நானும் அவளும் சினிமாவில் அஸிஸ்டெண்டாக இருந்த காலத்தில் இருந்து தெரியும். நான் படம் செய்ய ஆரம்பித்த போது, அவளைத்தான் முதலில் கூப்பிட்டேன் ஆனால் வர மாட்டேன் என்றாள், முதல் மூணு படத்திற்கும் கூப்பிட்டேன் வரவில்லை ஆனால் அவளே ஒரு நாள் கூப்பிட்டு நான் ரெடி சார் எனச் சொன்னாள். அவளுக்கு நம்பிக்கை வந்த பிறகு என்னிடம் வந்து மாஸ்டராக பணியாற்றினாள். சினிமாவில் பல காலம் ஒரு சிலர் மட்டுமே நண்பர்களாக இருப்பார்கள், நான் 300 பேருக்கு மேல் அறிமுகப்படுத்தியுள்ளேன். ஆனால் என் பிறந்த நாளுக்கு முதல் ஆளாக ராதிகா தான் போன் செய்வாள். அத்தனை சிறந்த நட்பு, அவள் படமெடுத்திருக்கிறேன் என்று சொன்ன போது நம்பவில்லை, படத்தில் ஜெயிச்சிட்டியா என கேட்கும்போது, முயற்சிக்கொண்டிருப்பேன் என வசனம் வருகிறது. அது தான் முக்கியம் முயற்சித்துக்கொண்டே இருக்க வேண்டும் அது தான் சினிமா. அதே மாதிரி நீயும் சினிமாவில் இரு. நான் சினிமா பற்றி கருத்து சொல்ல மாட்டேன். படமெடுத்து விட்டாய் இனி பத்திரிக்கையாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். ராதிகா 30 மார்க் எடுத்திருந்தால் 50 மார்க் கொடுங்கள் அதை மட்டும் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். தீபக் இசையமைப்பாளர் சின்ன பையன், பாடல் சூப்பர் என்று சொல்ல மாட்டேன் நன்றாக வந்துள்ளது வாழ்த்துகள். சாய் தன்ஷிகா மிகச்சிறந்த நடிகை அவரை என் படத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன், வருங்காலத்தில் அவருக்காகக் கதை எழுதுவேன். சினிமா என்பது என்னைப்பொறுத்தவரை கடவுள் மாதிரி அதை நாம் வணங்குவோம். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இசையமைப்பாளர் தீபக் பேசியதாவது…
இது எனக்கு முதல் வாய்ப்பு, தயாரிப்பாளர் கோமதி மேடத்திற்கு நன்றி. மிஷ்கின் சார் உங்கள் அறிவுரையைக் கண்டிப்பாகப் பின்பற்றுவேன். தன்ஷிகா மேடத்திற்கு நன்றி. இப்படத்தில் என் உடன் பணிபுரிந்த குழுவினருக்கு நன்றி. இசை சொல்லித் தந்த என் அப்பாவிற்கு நன்றி.

இயக்குநர் ராதிகா பேசியதாவது…
என்னை இன்று வரை தோழியாக மதித்து, எனக்கு வாய்ப்பளித்த மிஷ்கின் சாருக்கு என் நன்றிகள். நான் இங்கு நிற்கக் காரணம் அவர் தான். எனக்கே என் திறமையைச் சுட்டிக்காட்டியவர் அவர் தான். அவருக்கு நன்றி. ராஜன் அப்பா என் அப்பாவின் தோழர் இன்று வரை என்னை மகளாகத்தான் பார்த்துக் கொள்கிறார். இப்படத்திற்காக என்னுடன் துணை நின்ற ஜேசன் மற்றும் எடிட்டர் கமலக்கண்ணனுக்கு நன்றிகள். என் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. சாய் தன்ஷிகா ஆக்டிங் பத்தி எல்லோருக்கும் தெரியும் ஆனால் இந்தப்படத்தில் அவர் மனசாட்சிக்கு எவ்வளவு பயப்படுகிறார் அடுத்தவருக்காக எத்தனை இறங்கி வருவார் எனப் பார்த்தேன். மிகச்சிறந்த மனித நேயம் கொண்டவர். படத்தில் அடிபட்டு ரத்தம் வந்த போது கூட பதறாமல் இருந்தார், நாங்கள் தான் பதறினோம். அவரை வைத்து இன்னும் 100 படம் என்றாலும் செய்வேன். என் மகன் இசையமைப்பாளர் அவன் பிள்ளையாகக் கிடைத்தது எனக்குத் தான் பெருமை. எங்களை வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

ரீல் குட் பிலிம்ஸின் ‘எலக்சன்’ மே 17 ஆம் தேதி வெளியாகிறது!

‘உறியடி’, ‘உறியடி 2’, ‘ஃபைட் கிளப்’ என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை வழங்கிய பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எலக்சன்’ திரைப்படம், மே 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.‌

‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ‘அயோத்தி’ புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. மேலும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எலக்சன்’ தொடர்பான பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் மக்களவை தேர்தல் கால தருணத்தில் வெளியிடப்பட்டதாலும், இப்படத்தின் மையக்கருவை பிரதிபலிக்கும் வகையில் பாடல் இடம் பெற்றதாலும், வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. அத்துடன் இப்படத்தின் வெளியீடு குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.‌ அந்த வகையில் எதிர்வரும் மே மாதம் 17ஆம் தேதியன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

விஜய்குமார்- தமிழ்- ரீல் குட் பிலிம்ஸ் கூட்டணியில் தயாராகி இருக்கும் ‘எலக்சன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில்.. படத்தில் இடம்பெற்ற பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோ, படத்தின் டிரைலர் மற்றும் ஸ்னீக் பிக் ஆகியவை தொடர்ந்து வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ப்ளாக்பஸ்டர் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம், மே 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்………..

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களில் ஒன்றான, இயக்குநர் சிதம்பரத்தின் சர்வைவல் த்ரில்லரான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படத்தை, வரும் மே 5 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

தமிழ்நாட்டின் கொடைக்கானல் சுற்றுலா பகுதியில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம், மொழிகள் தாண்டி அனைத்து பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்தது. உலகெங்கிலும் பரவலாக ரசிக்கப்பட்ட இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 200 + கோடிகளை வசூலித்துள்ளது.

ஒரு சர்வைவல் படத்திற்கான கச்சிதமான திரைக்கதையுடன், நட்பின் வலிமையைப் பேசிய மஞ்சும்மெல் பாய்ஸ் தமிழ் ரசிகர்களின் இதயங்களை வென்றது, இன்றுவரை தமிழில் வெற்றிபெற்ற மிகப்பெரிய மலையாள படமாக இப்படம் சாதனை புரிந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்திற்கு தங்கள் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர். சிஎஸ்கே வீரர்களுடன் ‘தல’ எம்எஸ் தோனி ரசிகர்கள் மத்தியில் இப்படத்தைப் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் குழுவினர் தமிழ்நாட்டின் கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்கிறார்கள். அந்தப் பயணத்தின் போது, குணா குகையைப் பார்வையிடுகிறார்கள், ​​ அப்போது ஒருவர் தவறி குகைக்குள் விழுந்துவிட நண்பனைக் காப்பாற்றப் போராடுகிறார்கள், அவர்கள் நண்பனைக் காப்பாற்றினார்களா? என்பது தான் மஞ்சும்மேல் பாய்ஸ் படம். மனித மன உறுதி, சகிப்புத்தன்மை மற்றும் நட்பின் பெருமையை அழகாக எடுத்துக்காட்டுகிறது இப்படம்.

சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி மற்றும் ஜீன் பால் லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு, சுஷின் ஷியாம் இசையமைக்க, ஷைஜு காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பாபு ஷாஹிர், சௌபின் ஷாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்திற்கு விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

வரும் மே 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படத்தைக் கண்டுகளியுங்கள்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முன்னதாக ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றி அமைத்துள்ளது. ரசிகர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது, மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898 AD‘

பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது !

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் அறிவியல் புனைவு கதையான ‘கல்கி 2898 AD’ எனும் திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் ஆகியோருடன் பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் மற்றும் திஷா படானியும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் தருணத்தில், இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான வைஜயந்தி மூவிஸ் அவர்களுடைய அதிகாரப்பூர்வமான எக்ஸ் ( ட்விட்டர்) தளத்தில் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருப்பது.. ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்திருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வைஜெயந்தி மூவிஸ் நிறுவன தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

பிரத்யேக போஸ்டருக்கு கிளிக் செய்யவும்..

அஸ்வத்தாமாவாக தோன்றும் அமிதாப்பச்சனின் கதாபாத்திரத்தின் மூலம் ‘2898 AD கல்கி’யின் உலகத்தைப் பற்றிய சமீபத்திய பார்வை.. ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக பழம்பெரும் நடிகரின் அற்புதமான இளமையான தோற்றத்துடன் கதாபாத்திரத்தினை வெளிப்படுத்தும் காணொளி… அசலான பான் இந்தியா டீசர் என்பதையும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளின் கலவை என்பதையும் காட்சிப்படுத்துகிறது.

நாக் அஸ்வின் இயக்கிய ‘கல்கி 2898 AD’ இந்த ஆண்டின் மிகப்பெரிய சினிமா நிகழ்வாக அமைகிறது. ஆற்றல் வாய்ந்த முன்னணி நட்சத்திர கலைஞர்கள் மற்றும் வைஜெயந்தி மூவிஸ் ஆதரவுடன் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் 27 ஆம் தேதியன்று வெளிவரத் தயாராகிறது.

கவின்+யுவன்+ இளன் கூட்டணியின் இளமை ததும்பும் ‘ஸ்டார்’ பட முன்னோட்டம்

‘டாடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக உயர்ந்து வரும் நடிகர் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘பியார் பிரேமா காதல்’ எனும் வெற்றி பெற்றத் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்டார்’ எனும் திரைப்படத்தில் கவின், லால், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லொள்ளு சபா மாறன்,கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை என். வினோத் ராஜ்குமார் கவனிக்க.. படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டிருக்கிறார். பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்மன்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி. வி. எஸ். என். பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் பி. ரூபக் பிரணவ் தேஜ், சுனில் ஷா, ராஜா சுப்பிரமணியன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கவர்ந்து சாதனை படைத்திருக்கிறது. அதிலும் நடிகர் கவின் இளம் பெண்ணாக தோன்றும் பாடல் காட்சி.. ரசிகர்களிடத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்திலும் ரசிகர்களை கவரும் பல காட்சிகள் இடம் பிடித்திருப்பதால்.. இதற்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. மூன்றெழுத்து படைப்பாளிகள் மூவரும் ஒன்றிணைந்து, ‘ஸ்டார்’ எனும் மூன்றெழுத்தில் இளமை ததும்பும் படைப்பை வழங்கி இருப்பதால்.. இளைய தலைமுறையினர் மற்றும் இணைய தலைமுறையினரிடத்தில் இந்த முன்னோட்டத்திற்கு ஆதரவு அபிரிமிதமாக பெருகி வருகிறது.‌ இதனால் எதிர்வரும் மே மாதம் பத்தாம் தேதியன்று வெளியாகும் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு .. அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் எக்கச்சக்கமாக எகிறி இருக்கிறது.

சி வி குமார் தயாரிப்பில் பரத் மோகன் இயக்கத்தில் ‘இன்று நேற்று நாளை 2’

தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் தயாரிப்பில் பரத் மோகன் இயக்கத்தில் ‘இன்று நேற்று நாளை 2’

‘இன்று நேற்று நாளை’ மற்றும் ‘அயலான்’ இயக்குநர் ரவிக்குமார் எழுத்தில் உருவாகும் புத்தம் புதிய, சுவாரசிய காலப்பயணக் கதை

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் பேனரில் சி வி குமார் தயாரிப்பில் 2015ம் ஆண்டு வெளிவந்த ‘இன்று நேற்று நாளை’ அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற திரைப்படம் ஆகும். இதன் இயக்குநர் ரவிக்குமார், சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அயலான்’ வெற்றி படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் ஒன்பது வருடங்களுக்கு பிறகு ‘இன்று நேற்று நாளை’ இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இன்று நேற்று நாளை 2’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ரவிக்குமார் எழுத்தில் உருவாகும் இந்த புத்தம் புதிய, சுவாரசிய காலப்பயணத் திரைப்படத்தை பரத் மோகன் இயக்குகிறார். சி வி குமாரிடம் ‘மாயவன்’ திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய இவர், ‘இக்லூ’ மற்றும் ‘இப்படிக்கு காதல்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

‘கஜினிகாந்த்’, ‘இப்படிக்கு காதல்’, ‘பொய்க்கால் குதிரை’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பல்லு ‘இன்று நேற்று நாளை 2’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர்‍கள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பரத் மோகன், “ஒரு புதிய கதைக்கருவோடு 2015ல் வெளியான ‘இன்று நேற்று நாளை’ மக்களை கவர்ந்து பெரிதும் பேசப்பட்டது. அதன் இரண்டாம் பாகத்தை, அதுவும் அத்திரைப்படத்தை தயாரித்த சி வி குமார் அவர்கள் தயாரிப்பிலும், இயக்குநர் ரவிக்குமார் எழுத்திலும் இயக்குவது பெரும் மகிழ்ச்சி. காலப்பயண கதையான ‘இன்று நேற்று நாளை 2’ திரைப்படமும் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடிக்கும்,” என்று கூறினார்.

தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் தயாரிப்பில் இயக்குநர் ரவிக்குமார் எழுத்தில் பரத் மோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘இன்று நேற்று நாளை 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Nutmeg Productions சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “டியர்”. ஏப்ரல் 11 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

நடிகை நந்தினி பேசியதாவது….
இது என் முதல் மேடை, இப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தில் எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்படம் சம்மருக்கு நல்ல ஒரு விருந்தாக இருக்கும் அனைவருக்கும் நன்றி.

நடிகர் அப்துல் லீ பேசியதாவது….
ஒரு ரகசியம் சொல்றேன் ஜீவிக்கு 4 குளோன் இருக்கு, ஒண்ணு மியூசிக் போடுது, ஒண்ணு நடிக்கப்போகுது. இதை ஐஸ்வர்யா ராஜேஷிடம் சொன்னால் அவர் நானே குளோன் தான், ஒரிஜனல் ஐஸ்வர்யா சுழல் நடிக்கப் போயிருக்கிறார் என்றார். அவ்வளவு பிஸியான நடிகர்கள் என்றாலும் இப்படத்தில் இருவரும் நல்ல ஒத்துழைப்பு தந்தார்கள். என்னை இப்படத்தில் நல்ல முறையில் பயன்படுத்திய இயக்குநருக்கு நன்றி. கேப்டன் மில்லர் படத்திற்காக என்னைப் பாராட்டிய அனைத்து பத்திரிக்கை நண்பர்களுக்கும் நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை ரோகிணி பேசியதாவது…
விருமாண்டி படத்திற்குப் பிறகு லைவ் சவுண்டில் இந்தப்படம் செய்துள்ளேன். மிகப்பெரிய மெனக்கெடல் இருந்தால் தான் இதைச் செய்ய முடியும். அதில் பிடிவாதமாக இருந்த இயக்குநருக்கு வாழ்த்துக்கள். லைவ் சவுண்ட் எப்படி வந்திருக்கிறது என்பதைப் பார்க்கும் போது தான் அதன் அருமை தெரிகிறது. ஜீவி அருமையான நடிகர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் இசையமைத்த படங்களும் வருவதால், வெள்ளிக்கிழமை நாயகன் என்கிறார்கள், அவரிடம் எப்படி இவ்வளவு வேலைகளைப் பார்க்கிறீர்கள் என்று கேட்டேன், என்னுடைய எல்லா வேலைகளையும் உடனுக்குடன் செய்துவிடுவேன் என்றார். அவருக்கு என் வாழ்த்துக்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச் சிறந்த நடிகை, நல்ல நடிப்பைத் தந்துள்ளார். இளவரசு நன்றாக நடித்துள்ளார். ஒரு அருமையான படைப்பு உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை கீதா கைலாசம் பேசியதாவது…
எனக்கு நல்ல பாத்திரத்தில் வாய்ப்புத் தந்த இயக்குநருக்கு நன்றி. ரோகிணி மேடமுடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஜீவி, ஐஸ்வர்யா ராஜேஷுடன் நடித்தது இனிமையான அனுபவம். படம் நன்றாக வந்துள்ளது படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது….
தற்காலத்திய ஆண் பெண் உறவில் ஒரு பிளவு ஏன் ஏற்படுகிறது என்பதை அழுத்தமாக இந்தப்படம் பேசுகிறது. இயக்குநர் அதனை அழகாகப் படம் பிடித்துள்ளார். சில பாடல்களை மெட்டுக்களே தந்து விடும், ஜீவியின் இசையை, மெட்டைக் கேட்டவுடன் வார்த்தைகள் வந்து விழும். அப்படி ஒரு நல்ல பாடலை இப்படத்தில் எழுதியது மகிழ்ச்சி. படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். இப்படம் எல்லோருக்குமான படமாக இருக்கும் நன்றி.

கலை இயக்குநர் பிரகதீஸ்வரன் பேசியதாவது…
வாய்ப்பு தந்த நரேன் சார் மற்றும் தயாரிப்பாளர் இருவருக்கும் நன்றி. நான் இன்னும் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படம் நல்ல அனுபவமாக இருந்தது. இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் பேசியதாவது…
ஆனந்த்துடன் இணைந்த பயணம் குறும்பட காலத்தில் ஆரம்பித்தது. இன்னும் நிறையப் பயணப்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன் நன்றி. ஜீவி பிரகாஷுக்கு ஒளிப்பதிவு தெரியும் என்ன லென்ஸ் போடுகிறோம் என்பது முதல் அவருக்குத் தெரிகிறது, எங்குப் படிக்கிறார் என்று தெரியவில்லை, ஜீவி, ஐஸ்வர்யா இருவரையும் அழகாகக் காட்டியுள்ளேன் என நம்புகிறேன். நம் வீடுகளில் உள்ள பிரச்சனைகளை எளிமையாகக் கையாண்டிருக்கிற படம் ஆனந்த்தின் கதை வித்தியாசமாக இருக்கும். குறட்டை ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது.

நடிகர் இளவரசு பேசியதாவது.,,
பொதுவாக இயக்குநருக்குள் ஒரு நீதிபதி பார்வை தான் இருக்கும் ஆனால் ஆனந்த் வித்தியாசமானவர். எதற்கு அப்பா எனத் தெரியாமல் நிறைய அப்பா கேரக்டர் பணத்திற்காகச் செய்துள்ளேன் ஆனால் இந்தக்கதாபாத்திரம் வித்தியாசமாக இருந்தது. ஆண் பெண் இருவருக்கும் இடையில் சின்ன சின்ன பிஹேவரியில் ஏற்படும் பிரச்சனை, எங்குக் கொண்டு செல்லும் என்பதை முதிர்ச்சியாகக் கையாண்டுள்ளார் இயக்குநர். இப்படிப்பட்ட அருமையான படத்தைத் தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துக்கள். மிக முக்கியமான விசயத்தை இப்படம் பேசியுள்ளது. பத்திரிக்கையாளர்கள் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். ஜீவியுடன் முறைத்துக் கொள்வது போல் ஒரு பாத்திரம், நன்றாக வந்துள்ளது. கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி.

தயாரிப்பாளர் வருண் திரிபுரனேனி பேசியதாவது…
நரேனுக்கு நன்றி. அவரால் தான் திரைத்துறைக்குள் வந்தேன். ஆனந்த் கதை சொன்ன போதே மிகவும் பிடித்திருந்தது. அவர் சிறந்த படத்தைத் தந்துள்ளார் அவருடன் படம் செய்தது பெருமையாக உள்ளது. ஜீவி, ஐஸ்வர்யா, ரோகிணி, இளவரசு உட்பட அனைவருக்கும் நன்றி. இரண்டு பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தையும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன். உழைத்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் பேசியதாவது…
2020 ஏப்ரலில் என் முதல் படம் ஓடிடியில் வெளியானது. இங்கிருக்கும் பத்திரிக்கையாளர்கள் தந்த ஆதரவால் தான் நான் வெளியே கொஞ்சம் தெரிந்தேன். அதற்காக அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் ஐடியா வந்த போது நரேனிடம் சொன்னேன் அவர் மூலமாகத் தான் வருணிடம் கதை சொன்னேன். அவர் படங்களே பார்த்ததே இல்லை எப்படிப் புரிந்து கொள்வார் எனத் தயக்கம் இருந்தது, ஆனால் அவருக்குப் பிடித்தது உடனே தயாரிக்கலாம் என்றார். அவருக்குப் பிடித்தால் அதைப் பற்றி முழுதாக தெரிந்து கொண்டு ஆர்வமுடன் செய்வார். பல ஐடியாக்கள் தந்தார். கோபி பிரசன்னா அழகாக டிசைன் செய்து தந்தார். கார்த்திக் நேத்தா அருமையான வரிகள் தந்தார். ஜெகதீஷ் என் குறும்படத்தில் வேலை பார்த்த காலத்தில் கிம்பல் வைத்து ஒரே ஷாட்டில் ஒரு படம் எடுத்தோம் அப்போது ஆரம்பித்த பயணம், என் முதல் படத்திற்கே அவரைத்தான் கேட்டேன். இந்தப்படத்தில் அவர் விஷுவல் தான் ஞாபகம் வரும். ஐஸ்வர்யாவை அழகாகக் காட்டியுள்ளார். எனக்கு பர்ஸனலாக டப்பிங் பிடிக்காது அதனால் தான் லைவ் சவுண்ட். சின்ன சின்ன சவுண்ட் கூட ஷீட்டிங்கில் சிக்கலாகி விடும். திரும்பத் திரும்ப எடுக்க வேண்டி வரும் ஆனாலும் லைவ் சவுண்ட் பேசப்படும். நல்ல பெர்ஃபார்ம் பண்ணுகிற ஆர்டிஸ்டால் தான் முடியும் அதனால் தேடித் தேடி நடிகர்களைத் தேர்வு செய்தேன். ரோகிணி மேடம் ஏற்கனவே லைவ் சவுண்டில் வேலை பார்த்திருக்கிறார். அவர் ஒரு இயக்குநர், இப்படத்திலும் பல காட்சிகளில் அசத்தியிருக்கிறார். தலைவாசல் விஜய் சார் நல்ல ரோல் செய்துள்ளார். காளி அண்ணா நல்ல மெத்தட் ஆக்டர், அருமையாக நடித்துள்ளார். ஐஸ்வர்யாவிடம் தான் முதலில் கதை சொன்னேன் அவர் வீட்டுக்குப் போன போது 60 அவார்ட் இருந்தது. அதைப்பார்த்தால் நல்ல கதை இருந்தால் மட்டும் வா என்பது போல் இருக்கும். மிக எளிமையாகப் பழகுவார். திரைக்கதையிலும் அவர் பங்களிப்பு அதிகம். படத்தின் கிளைமாக்ஸில் ஒரு சீன் வரும் அது அவர் ஐடியா தான். தயாரிப்பாளருக்குப் பிடித்த நடிகை. ஜீவியிடம் ஐஸ்வர்யா தான் ஃபிளைட்டில் பார்த்து கால்ஷீட் வாங்கித் தந்தார். ஜீவி நோ தான் சொல்வார் என நினைத்தேன் ஆனால் அவர் கதை நல்லாருக்கு நடிக்கிறேன் எனச் சொல்லிவிட்டார். அவர் இசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நடிக்கும் போது கதைகள் கேட்பார், மியூசிக் போடுவார், இந்திப்படம் நடிக்கிறார், தயாரிக்கிறார் அவரைப்பார்த்தாலே பிரமிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு ஷாட்டிலும் பெட்டராக நடிக்க முயற்சிப்பார். இப்படம் அவரோட பெஸ்ட்டாக இருக்கும். இது ஒரு ரிலேஷன்ஷிப் டிராமா உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். ஏப்ரல் 11 திரையரங்குகளில் வருகிறது ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ஜீவி பிரகாஷ் பேசியதாவது…
வாராவாராம் படம் வருதே எனக் கேட்கிறார்கள் ஆனால் இது 4 வருடமாக உழைத்து உருவான படங்கள் ஆனால் அது அனைத்து வேலைகளும் முடித்து, இப்போது வருகிறது. டியர் திரைப்படம் ஐஸு ஃபிளைட்டில் என்னைப்பார்த்து இந்தக்கதை கேளுங்கள் என்றார். இவர் படத்தில் நமக்கு என்ன ரோல் இருக்கும் எனத் தயங்கினேன், ஆனால் கதை கேட்டவுடன் அழுது விட்டேன், மிகவும் பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். லைவ் சவுண்ட் என்பதால் எல்லோரும் போட்டிப் போட்டு நடித்துள்ளோம். எல்லோரும் அருமையாக நடித்துள்ளனர். வருணுக்கு என் வாழ்த்துக்கள். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் நன்றி.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது…
இந்த வருடம் ஜீவிக்கு நடந்தது, கடந்த வருடம் எனக்கும் நடந்தது, என்னையும் வெள்ளிக்கிழமை நாயகி எனக் கூப்பிட்டுள்ளார்கள். அதன் காரணங்கள் எனக்குத் தெரியும். கள்வன் படத்திற்காக ஜீவிக்கு வாழ்த்துக்கள். டியர் படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். எல்லோருமே மிகவும் பிடித்து, விரும்பி நடித்த படம். ஜெகதீஷ் மாதிரி கேமராமேன் எனக்கு எல்லாப்படத்திலும் கிடைத்தால் நன்றாக இருக்கும். என்னை அவ்வளவு அழகாகக் காட்டியுள்ளார். இந்தப்படம் ஷீட்டிங்கே ஒரு கொண்டாட்டமாக இருந்தது. ரோகிணி மேடம் பகிர்ந்துகொள்வதைக் கேட்பதே வரம் தான். எல்லோருடன் பழகியது மிகச்சிறந்த அனுபவம். இந்தப்படம் மூலம் ஆனந்த் நண்பராகக் கிடைத்துள்ளார். இந்தப்படம் எனக்கு மூன்று வருடப் பயணம். ஆனந்த் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம். வருண்! தமிழ் சினிமாவிற்கு நல்ல தயாரிப்பாளர் கிடைத்துள்ளார். அவருடன் இன்னொரு படமும் செய்துள்ளேன் விரைவில் திரைக்கு வரும். எங்கள் படத்தின் நாயகன் தூண் ஜீவி தான். நல்ல நண்பர், அவரைப்பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. எனக்காகக் கதை கேட்டு நடித்ததற்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

Nutmeg Productions சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன், காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், அப்துல் லீ, ‘ப்ளாக் ஷீப்’ நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ருகேஷ் படத்தொகுப்பையும், பிரகதீஸ்வரன் கலை இயக்கப் பணிகளையும், அனுஷா மீனாட்சி ஆடை வடிவமைப்பையும் கவனித்து வருகின்றனர். ‘ராப்’ ஐகான் அறிவு, ஏகாதசி, ஜிகேபி, விண்ணுலக கவி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் டியர் படத்தினை தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர் கொண்டாடுகிறார்கள்;

‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர் கொண்டாடுகிறார்கள்; மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கிறார்கள்; இதன் தனித்துவமான சிலந்தி வலை விளம்பர போர்டுகள் சென்னை நகரத்தை அலங்கரிக்கின்றன

மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் தொடரான இன்ஸ்பெக்டர் ரிஷி இறுதியாக ப்ரைம் வீடியோவில் வெளியிடப்பட்ட தருணத்தில் ஒரு நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்தது. பார்வையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை கரை புரண்டோடச் செய்து, அவர்களின் உற்சாகத்தை வெளியிடச்செய்யும் வகையில், பிரைம் வீடியோ, மனதை ஒன்றிப்போகச்செய்யும் இந்தத் தொடர் நிகழ்ச்சியின் விளம்பர போஸ்டர்களை சென்னை முழுவதும் நிறுவியது. ஒரு வலைப் பின்னலில் இருந்து ‘வனராட்சி’ AKA ‘ராட்சி’ என்ற ஒரு கொடிய புராணகால வன மோகினி மற்றும் பழங்குடியினருக்கான வன தெய்வம், வெளிவரும் இதயத்தைத் பிழியும் காட்சிகளை இந்த விளம்பரக் காட்சிகள் எடுத்துக் எடுத்துக்காட்டுகின்றன. விளம்பரப் பலகைகளின் ஓரங்களில் தொங்கிக்கொண்டிருக்கும் சிலந்தி வலை தமிழ்நாட்டின் தென்காடு என்ற சிறிய கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக செயல்படுகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்ட இந்த விளம்பர போர்டுகள் பார்வையாளர்கள் மத்தியில் இந்த திகில்-கிரைம்-டிராமா தொடரை பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகின்றன. சமீபத்தில் இந்தத் தொடரின் குழுவினர், இந்த ஹோர்டிங்குகளை வெளியிடுவதோடு, நிகழ்ச்சியின் வெற்றியை பார்வையாளர்களுடன் சேர்ந்து கொண்டாடும் நோக்கத்தில் சென்னை மெரினா கடற்கரைக்கும் சென்றிருந்தார்கள்.

நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களிடமிருந்து கிடைத்த நேர்மறையான விமர்சனங்கள் குறித்து பேசிய தொடரின் கதாநாயகனான நடிகர் நவீன் சந்திரா, கூறினார் “இன்ஸ்பெக்டர் ரிஷி தொடருக்கு பார்வையாளர்கள் அளித்த அற்புதமான விமர்சனங்களுக்காக அவர்களுக்கு நன்றி சொல்ல இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.. அனைவரின் பாராட்டும் ஆதரவும் எங்களை திக்குமுக்காடச் செய்துவிட்டதோடு இந்த நிகழ்ச்சி தொடர்பாக எங்கள் மீது அனைவராலும் காட்டப்படும் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் பணிவாக உணரச்செய்து மகிழ்ச்சியளித்தது. உலகம் முழுவதிலுமிருந்தும் பார்வையாளர் களிடமிருந்து வரும் இத்தகைய பாராட்டுகள் மேலும் சிறப்பாக செயல் படுவதற்கான மன எழுச்சியை என்னுள் தூண்டி, மனதைக் கொள்ளை கொள்ளும் மற்றும் மகிழ்விக்கும் கதைகளைக் வழங்கும் ஆர்வத்தையும் எனக்கு அளிக்கிறது. இன்ஸ்பெக்டர் ரிஷி எங்கள் அனைவரது கடின உழைப்பு மற்றும் ஆர்வத்தின் பலனாக விளைந்தது. மக்கள் இந்த நிகழ்ச்சியை பெருமளவு விரும்பு வதைக் கண்டு நாங்கள் நன்றியோடு மன நிறைவாக உணர்கிறோம்.”

இந்தத் தொடர் இயற்கைக்கு மாறான அல்லது வழக்கத்தை மீறிய சம்பவங்கள் நிறைந்த ஒரு புதிரான மற்றும் மூளையை கசக்கிப் பிழியும் ஒரு வழக்கின் விசாரணையை எதையும் சந்தேகத்தோடு ஒற்றைக் கண் பார்வையில் காணும் குற்றப் பிரிவு ஆய்வாளர் ரிஷி நந்தன் தனது நம்பிக்கைக்குரிய இரண்டு துணை ஆய்வாளர்கள் அய்யனார் மற்றும் சித்ரா ஆகியோரின் உதவியோடு,மேற்கொள்வது குறித்து பேசுகிறது. தனிப்பட்ட முறையில் தான் எதிர்கொள்ளும் தடைகளைத் தாண்டி மர்மமான கொலைகளுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொண்டுவர அவர் இடைவிடாத முயற்சியில் ஈடுபடுகிறார்.

நந்தினி ஜே.எஸ் உருவாக்கி எழுதிய இன்ஸ்பெக்டர் ரிஷி தொடரை, சுக்தேவ் லஹிரி தயாரித்துள்ளார். இதில் பன்முக திறமை கொண்ட நடிகர் நவீன் சந்திரா முன்னணி வேடத்தில் நடிக்க அவரோடு இணைந்து, சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பத்து எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் தற்போது பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.