இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி சேனலாகவும், உலகின் மிக அதிகமாக பார்வையிடப்படும் தமிழ் தொலைக்காட்சி சேனலாகவும் திகழும் Sun TV, தனது பெருமைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டிக்கொண்டுள்ளது.
உலகளவில் மிகவும் பிரபலமான இந்த தொலைக்காட்சி நெட்வொர்கின் YouTube சேனல், Sun TV, தற்போது 30 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்றுள்ளது.
இந்த சாதனையில் ஆச்சரியம் ஏதுமில்லை ஏனெனில் Sun TVயின் YouTube சேனலில் தினமும் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன! இதில் Sun TVயில் ஒளிபரப்பப்படும் பல பிரபலமான நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் அடங்கியுள்ளன, உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை, இந்த நிகழ்ச்சிகள் ஈர்த்து வருகின்றன.
இதற்கு மேலாக, Sun Pictures தயாரிக்கும் திரைப்படங்களின் பாடல்கள், டிரெய்லர்கள் மற்றும் டீசர்களும் இந்த பிரபலமான நெட்வொர்கின் YouTube சேனலில் பிரத்யேகமாக வெளியிடப்படுகின்றன.
Sun TV YouTube சேனலில் பல வீடியோக்கள் பல வாரங்களாக டிரெண்டாகி வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது! உதாரணமாக, விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலும், ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடலும் இதில் குறிப்பிடத்தக்கவை. இதில் முன்னோடியான ‘அரபிக் குத்து’ பாடல் 700 மில்லியன் பார்வைகளைத் தாண்டியது, ‘காவாலா’ பாடல் 300 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது!
உலகளாவிய அளவில் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களைக் கொண்டுள்ள Sun TV YouTube சேனல், தினமும் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய ஃபாலோயர்ஸை இணைத்துக் கொண்டு, ஏற்கனவே இணைந்திருக்கும் ரசிகர்களின் நம்பிக்கையையும் நிலைநிறுத்தி வருகின்றது.
Sun TV YouTube சேனலின் இணைப்பு – https://www.youtube.com/@suntv
தமிழின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 ல் சமீபத்தில் வெளியான கிங்ஸ்டன் திரைப்படம், வெளியான வெறும் 48 மணி நேரத்திற்குள், 50 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படம் கடற்கரை கிராம பின்னணியில், அசத்தலான விஷுவல்களுடன், ஃபேண்டஸி அம்சங்கள் நிறைந்த, புதுமையான ஹாரர் படமாக அனைவரையும் கவர்ந்துள்ளது. இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், இப்படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யா பாரதி, இளங்கோ குமரவேல், சபுமோன் அப்துசமத் மற்றும் சேதன் கடம்பி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
கிங்ஸ்டன் திரைப்படம், துணிச்சலான கடத்தல்காரரான கிங்ஸ்டன் (ஜி.வி. பிரகாஷ்) என்பவனின் கதையை விவரிக்கிறது. உள்ளூர் ரௌடியிடம் வேலை பார்க்கும் கிங்ஸ்டன், ரௌடி கிராமத்தை ஏமாற்றுவதை அறிந்து, அவனுக்கு எதிராகக் களமிறங்குகிறான். தன் கிராமத்தை மீட்கும் பொருட்டு, மீன் பிடிக்க முடியாமல், பல வருடங்களாகச் சபிக்கப்பட்ட கடற்பகுதிக்குள், தன் நண்பர்களுடன் துணிந்து நுழைகிறான். அந்த சாபத்தின் ரகசியத்தை அவன் கண்டுபிடித்தானா? தன் கிராமத்தை மீட்டானா? என்பது தான் இந்தப்படத்தின் கதை.
கிங்ஸ்டன் திரைப்படம் மாறுபட்ட கதைக்களம், அற்புதமான விஷுவல்கள், கடல் பின்னணி, நடிகர்களின் திறமையான நடிப்பு என, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பரவலான பாராட்டுக்களைக் குவித்துள்ளது.
ZEE5 இன் SVOD தெற்கு துணைத் தலைவர் லயோட் சேவியர் கூறுகையில், “ ‘கிங்ஸ்டன்’ படத்திற்குக் கிடைத்த அற்புதமான வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. தமிழ் சினிமா இப்போது மிகப்பெரிய வெற்றிப்பயணத்தில் இருக்கிறது. அந்த வகையில், அட்டகாசமான எண்டர்டெயினர் திரைப்படமான, “கிங்ஸ்டன்” படத்தை, எங்கள் பார்வையாளர்களுக்கு வழங்கியதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள இந்தப்படம், ஒரு புதுமையான களத்தில், அதிரடி திரில்லராக ஒரு ரோலர்கோஸ்டர் பயணத்திற்கு ரசிகர்களைக் கூட்டிச் செல்கிறது. இது போல் சிறந்த படைப்புகளைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு வழங்க வேண்டுமென்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம். ZEE5ல் இன்னும் சிறந்த நல்ல படைப்புகள், மண் சார்ந்த படைப்புகள், தொடர்ந்து வரவுள்ளது.
இயக்குநர் கமல் பிரகாஷ் கூறியதாவது…, இந்தப் படம் அன்பான குழுவின் உழைப்பு. எதிர்பாராத ஒரு களத்தின் பின்னணியில் மர்மம், அதிரடி மற்றும் ஃபேண்டஸி அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான அனுபவத்தைத் தர வேண்டும் எனும் நோக்கத்தில் உருவாக்கிய படைப்பு இது. இப்படத்தை உருவாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது, கிங்ஸ்டன் கதாபாத்திரத்தில் ஜிவி பிரகாஷின் உழைப்பு வியக்கதக்கதாக இருந்தது. தன்னை முழுதாக மாற்றிக்கொண்டு, மிகப்பிரமாதமாக, தனித்துவமான நடிப்பைத் தந்தார். இந்த வேடத்தில் வேறு யாரையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ZEE5 ப்ரீமியர் மூலம் இப்படத்தை அனைத்து மக்களும் கொண்டாடுவதைக் காணப் பெரு மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தின் மீது அன்பைக் கொட்டிய அனைவருக்கும் நன்றி.
நடிகர் ஜி.வி. பிரகாஷ் கூறியதாவது.., “கிங்ஸ்டன் திரைப்படம் மீது மக்கள் காட்டி வரும் அபரிமிதமான அன்பைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! கிங்ஸ்டன் பல வழிகளில் சவாலாக அமைந்த மிகச்சிறப்பான ஒரு கதாபாத்திரம் – கிங்ஸ்டன் துணிச்சலானவன், கணிக்க முடியாதவன், இப்பாத்திரத்தை ஏற்று நடித்தது மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்த விசித்திரமான உலகில் மூழ்கி அதை இவ்வளவு பெரிய டிஜிட்டல் வெற்றியாக மாற்றிய அனைத்து ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி”
கிங்ஸ்டன் இப்போது ZEE5 இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்கிறது, இன்றே கண்டு மகிழுங்கள்!
நியோ கேஸ்டில் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் சத்யா கரிகாலன் தயாரிப்பில் இசையமைப்பாளர் அஸ்வமித்ரா இயக்கத்தில் புதுமுக குழந்தை நட்சத்திர நடிகர் சித்தார்த் பன்னீர் சொந்த குரலில் தமிழ், தெலுங்கு , மலையாளம் ,கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பாடி, நடனமாடியிருக்கும் மிஸ் மேல கிரஷ்'( Miss u Mela Crush u) எனும் வீடியோ ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து, இசையமைப்பாளர் தேவா, நடிகர்கள் செந்தில், தம்பி ராமையா, கருணாஸ், இளவரசு, ரோபோ சங்கர், பிக்பாஸ் முத்துகுமரன், இயக்குநர்கள் சற்குணம், இரா. சரவணன், போஸ் வெங்கட், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், காயத்ரி ரகுராம், மாஸ்டர் ராதிகா, சாண்டி மாஸ்டர், ராமர் ரவிக்குமார், திரு. கடம்பூர் ராஜா, திரு. ரத்தினம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் திரு. கருப்பையா பன்னீர்செல்வம் வரவேற்றார்.
இயக்குநர் – இசையமைப்பாளர் அஸ்வமித்ரா பேசுகையில், ” மாஸ்டர் சித்தார்த்தை முதலில் வேறு ஒரு பாடலுக்காக தான் அணுகினேன். பெப்பியான அந்த பாடலை பாட மாட்டேன் என சொல்லி விட்டார். அதன் பிறகு ஒரு பாடலை உருவாக்கி கொண்டிருந்தபோது என் பின்னால் நின்று கொண்டு ஒரு பாடலை ‘ஹம்’ செய்தான். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உடனடியாக பாடுகிறாயா? என கேட்டேன். சொல்லிக் கொடுத்தால் பாடுவேன் என்றான் நம்பிக்கையுடன். அதன் பிறகு தான் இந்த பாடலை உருவாக்கினோம். சித்தார்த் திறமைசாலி. எதை சொல்லிக் கொடுத்தாலும் அதனை உடனடியாக கற்றுக் கொண்டு விடுவான். அதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் அவரே இந்த பாடலை பாடியிருக்கிறார். இந்த வீடியோ ஆல்பத்தை தொடர்ந்து மூன்று பாடல்களை உருவாக்கி வைத்திருக்கிறோம். அதில் சிலம்பம் தொடர்பான பாடலும் உண்டு. சிலம்ப வித்தையில் மாஸ்டர் சித்தார்த் நேஷனல் சாம்பியன். அவர் சிலம்பத்தில் தேசிய விருதினை வென்றவுடன் அது தொடர்பான பாடலையும் உருவாக்கி இருக்கிறோம். அந்தப் பாடலும் விரைவில் வெளியாகும். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கும், இந்த வீடியோ ஆல்பத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் – நடிகர் தம்பி ராமையா பேசுகையில், ” எம் மண்ணின் மைந்தன் சித்தார்த்திற்கு வாழ்த்துகள். புதுக்கோட்டை என்பது கலைக்கு மட்டுமல்ல அரசியலுக்கும் சிறந்த மண். தமிழ் திரை உலகத்திற்கு இரண்டு சூப்பர் ஸ்டார்களை கொடுத்தது இந்த மண். இந்நிகழ்வில் நான் தாய் மாமன் எனும் உறவினையும், அதன் மேன்மையையும் காண்கிறேன். சத்யா கரிகாலன் ஆகிய சகோதர சகோதரிகளை பார்த்து வியக்கிறேன். அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் இவர்களின் வீட்டிற்கு ஒரு முறை விஜயம் செய்த போது சித்தார்த்தை பார்த்தவுடன் மலைக்கள்ளன் எம்ஜிஆரை நேரில் பார்த்தது போல் இருந்தது. வியந்தேன். சித்தார்த்தின் தாய் சத்யா அவர்கள் சித்தார்த்தை கைபிடித்து உயரத்திற்கு அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த குழந்தையை கொண்டாடுவதற்காக இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திருப்பூரின் அடையாளமாக திகழும் தொழிலதிபர் ஒருவரை சந்தித்து உரையாடிய போது, ‘குழந்தையை பெற்றெடுப்பது எளிது அதனை வளர்த்து ஆளாக்குவது என்பது தான் கடினம்’ என்றார். அந்த வகையில் சத்யா கரிகாலன் குழந்தையை நல்ல திறமைசாலியாக வளர்த்து ஆளாக்குகிறார். சித்தார்த் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
சரீரம், சாரீரம் என இரண்டு விசயங்கள் இருக்கிறது. உடலுக்கு மட்டும் ஊட்டச்சத்து போதாது. மனதிற்கும் ஊட்டச்சத்து வேண்டும். யார் ஒருவர் தனது உடலையும் , குரலையும் காதலிக்கிறார்களோ… அவர்கள் சாதனையாளர்கள். அவரை சமுதாயத்தால் சீரழிக்கவே இயலாது. அந்த வகையில் சித்தார்த் அற்புதமாக பாடுகிறார். அதிலும் ஐந்து மொழிகளில் பாடியிருக்கிறார். அவரிடம் ஞானம் இருக்கிறது. அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சித்தார்த் எதிர்காலத்தில் மிகப்பெரிய உயரத்தை தொடுவார் என வாழ்த்துகிறேன்” என்றார்.
நடிகர் – அரசியல்வாதி கருணாஸ் பேசுகையில், ” இந்த வரலாற்று சிறப்புமிக்க அரங்கத்தில் ஆறு வயது மதிக்கத்தக்க குழந்தையின் பாடும் திறமையையும், நடனமாடும் திறமையையும் கண்டோம். அனைவரும் பாராட்டினார்கள். ஆனால் இந்த சித்தார்த்திடம் திறமை இருக்கிறது என்று முதலில் கண்டறிந்தவன் நான். இந்தப் பிள்ளையை நான் தான் முதன் முதலில் நடனமாட வைத்தேன். அந்தத் திரைப்படம் விரைவில் வெளியாகும். அந்த பாடலும் அவனின் நடனமும் நிச்சயம் பேசப்படும். இவனுடைய மாஸ்டரை அவருடைய தாயாருக்கு அறிமுகப்படுத்தியதும் நான்தான். அந்த மாஸ்டரை ஒரு வீடியோ ஆல்பத்தில் நடன இயக்குநராக அறிமுகப்படுத்தியதும் நான்தான். அந்த வகையில் இந்த இடம் மிகவும் ராசியானது. அனைத்தும் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டதாகவே நான் கருதுகிறேன். இவருடைய திறமையை மேலும் வளர்த்து இறைவனின் ஆசியால் மென்மேலும் உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.
ரோபோ சங்கர் பேசுகையில், ” குழந்தை நட்சத்திரம் சித்தார்த்துக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். மேடையில் நடனம் ஆடும் போது ‘நானே மாஸ்டர்’ என சமயோசிதமாக பேசியது என்னை வியக்க வைத்தது. எனக்கும் சின்ன வயசுல மிஸ் மேல் கிரஷ் இருந்தது. அதனை இன்று வரை கண்ணியம் மிக்க மரியாதையுடன் தொடர்கிறேன். சின்ன வயதில் நான் நிறைய போட்டோக்களை வெட்டி, ஒட்டி நிறைய ஆல்பங்களை உருவாக்கி இருக்கிறேன். குழந்தைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அவருடைய பெற்றோர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் ” என்றார்.
நடிகர்- இயக்குநர் போஸ் வெங்கட் பேசுகையில், ” சித்தார்த்தின் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். இவனுக்கு ஒரு தம்பி இருக்கிறார். அவரும் மிகுந்த திறமைசாலி. இருவருமே திறமை மிக்கவர்கள். சகோதரி சத்யா அவர்கள் குழந்தையின் நடனத்தை ஃபோனில் காண்பித்த போது சித்தார்த்தின் நடனத் திறமையை பார்த்து ஆச்சரியப்பட்டேன். ஆனால் ஐந்து மொழிகளில் பாடி, அதனை ஒரு வீடியோ ஆல்பமாக வெளியிடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதனை சித்தார்த் நேர்த்தியாக செய்திருக்கிறார். சித்தார்த்தை விரைவில் நாம் நடிகராகவும் பார்ப்போம். அது இன்னும் அதிகமான நபர்களை ஆச்சரியப்படுத்தும் என நான் நம்புகிறேன். சித்தார்த்தின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன். மேலும் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத கதாநாயகனாக அவர் வருவார் என்றும் நான் உறுதியாக கூறுகிறேன். ” என்றார்.
இயக்குநர் இரா. சரவணன் பேசுகையில், ” சித்தார்த் ஆடி பாடி நடித்திருக்கும் இந்த ஆல்பத்தை நடிகர்கள் சசிகுமார் -சூரி- ஆகியோர் பார்த்தார்கள். இதில் சசிகுமார் – இந்த ஆல்பம் ஹிட் ஆவதற்கு முன்பே இவனிடம் கால்ஷிட் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்றார். அந்த அளவிற்கு அவருக்கு இந்த ஆல்பம் பிடித்திருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சூரி என்னிடம் இந்த ஆல்பத்தை பார்த்த பிறகு, ஆறு மாதத்திற்கு முன்னர் இந்த குழந்தையை பற்றி எனக்குத் தெரிந்திருந்தால் ‘மாமன்’ படத்தில் நடிக்க வாய்ப்பளித்திருப்பேன் என்றார். அந்த அளவிற்கு சித்தார்த்திடம் ஒரு எனர்ஜிடிக்கான டேலண்ட் இருக்கிறது. இந்த ஆல்பத்தை பார்த்தவுடன் சித்தார்த் மீது ‘நம்ம வீட்டு பிள்ளை’ என்ற பாச பிணைப்பு ஏற்படுகிறது. நாமெல்லாம் இரு மொழி… மும்மொழி… என பேசிக் கொண்டிருக்கும்போது.. சித்தார்த் ஐந்து மொழியில் பாடி ஆடி அசத்தியிருக்கிறார். இதனால் சித்தார்த் புதுக்கோட்டை மண்ணிலிருந்து பாலிவுட் வரை உயர்வர் என உறுதியாக சொல்ல முடியும். இதற்கு இங்கு வருகை தந்திருக்கும் எல்லோரும் சித்தார்த்தை ஆசீர்வதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் சற்குணம் பேசுகையில், ” ஒரு தேர்ந்த நடன கலைஞராகவும் பாடகராகவும் நடிகராகவும் சித்தார்த் இந்த ஆல்பத்தில் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அதிலும் ஐந்து மொழியில் அவர் பாடியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆல்பத்தில் நடனமாடி இருப்பதைவிட அதனை மேடையில் எந்தவித தவறும் இல்லாமல் ஆடுவது தான் தனி சிறப்பு. நடன கலைஞர்கள் நடனமாடும் போது அவர்களது முகத்தை உற்சாகம் வைத்துக் கொண்டு நடனம் ஆடுவது தான் தனித்துவம் என்பார்கள். அது சித்தார்த்திடம் இயல்பாகவே இருக்கிறது. சித்தார்த்தை தமிழ் சினிமா சார்பாக பாராட்டுகிறேன். தமிழ் சினிமாவின் உச்சம் தொட வாழ்த்துகிறேன்” என்றார்.
காயத்ரி ரகுராம் பேசுகையில், ” நடிகர் சிலம்பரசன் சின்ன வயதில் என்னுடன் தான் பாட்டு நடனம் ஆகியவற்றை கற்றுக் கொண்டார். அத்துடன் நடிப்பு ,சண்டை பயிற்சி, உடற்பயிற்சி, இசை கருவி வாசிப்பு ஆகியவற்றையும் கற்றுக் கொள்வார். அவர் சின்ன வயதில் கற்றுக்கொண்ட அனைத்து திறமையும் இந்த சித்தார்த்திடமும் இருப்பதை நான் பார்க்கிறேன். கமல் சாரும் இன்று அனைத்து துறையிலும் திறமை மிக்கவர். அந்த வரிசையில் அவர்களை தொடர்ந்து தனுஷ் -பிரசாந்த் – ஆகியோர்களையும் பார்த்திருக்கிறேன். அந்த வரிசையில் நான் சித்தார்த்தையும் பார்க்கிறேன். சித்தார்த்திற்கு கற்றுக் கொடுப்பதற்கு மாஸ்டர்கள் தயாராக இருந்தாலும்.. பெற்றோர்களின் ஊக்கமும் , ஆர்வமும் என்பது முக்கியம். அதனால் அவர்களுக்கும் நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்த காமராஜர் அரங்க மேடையில் தான் நான், தொகுப்பாளினி கீர்த்தி, நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடனமாடி பிரபலமாகி இருக்கிறோம். அந்த அளவிற்கு இந்த மேடை ராசியானது. அந்த வகையில் சித்தார்த்தும் ஆண்டவனின் ஆசியுடன் பெரும் புகழை பெறுவார்” என்றார்.
சென்னையைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட்,தென்கொரிய தயாரிப்பு நிறுவனமான ஃபிளிக்ஸ் ஓவனுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.இதன் மூலம் இந்தோ- கொரிய திரைப்படத்துறையில் கூட்டு முயற்சிகளை அதிகரித்துக்கொள்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுளளது.இந்த கூட்டாண்மை இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் குறிப்பாக தமிழ் மற்றும் பான் இந்திய படைப்பாளிகள் தென்கொரியாவில் படப்பிடிப்பு நடத்த புதிய வழிகளை திறக்கும். அதே சமயத்தில் இந்திய பார்வையாளர்களுக்கு கொரியன் கன்டென்டுகளை வழங்குவதற்கும் உதவும்.
இரண்டு துடிப்பான திரைப்பட துறைகளின் இணைவு
தென் கொரிய திரைப்படங்கள், இணைய தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் இந்திய துணைக் கண்டம் முழுவதும் பெரும் புகழை பெற்றுள்ளன. தமிழ் பார்வையாளர்கள் மற்றும் டிஜிட்டல் தள பார்வையாளர்கள், கொரிய படைப்பாளிகளின் கதை சொல்லலுக்கு பாராட்டை தெரிவிப்பதில் முன்னிலை வகிக்கின்றனர். இந்த வளர்ந்து வரும் தொடர்பை உணர்ந்து ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஃபிளிக்ஸ் ஓவன் ஆகியவை பல்வேறு கலாச்சார சினிமா அனுபவங்களை உருவாக்குவதற்காக கரம் கோர்த்துள்ளன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் திருமதி ஸ்ரீநிதி சாகர் பேசுகையில், ” ஃபிளிக்ஸ் ஓவனுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த கூட்டாண்மை இரு தொழில் துறைகளுக்கும் பரஸ்பரம் பயனளிக்கும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட இந்திய மொழி திரைப்படங்களுக்கு எங்களுடைய முழு ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன் தென் கொரியாவில் படபிடிப்பு நடத்துவதற்கு வசதிகளை ஏற்படுத்தித் தரும். கூடுதலாக கொரியன் கன்டென்டுகளை பல இந்திய மொழிகளில் மாற்றி அமைக்கும் உரிமையையும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இது படைப்பு ரீதியான பரிமாற்றங்களை கூடுதலாக வலுப்படுத்துகிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ்…
*இந்திய பின்னணியிலான கொரிய திரைப்படங்களை ஃபிளிக்ஸ் ஓவன் தயாரிக்கும்.
*தென் கொரிய பின்னணியிலான இந்திய திரைப்படங்களை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும்.
தயாரிப்பினைக்கடந்து இந்திய மற்றும் கொரிய கலைஞர்களை கொண்ட திரைக்கதைகளை உருவாக்குவதையும், இணைய தொடர்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களை இணைந்து தயாரிப்பதையும் இந்த கூட்டாண்மை நோக்கமாக கொண்டுள்ளது. இது இந்தோ – கொரிய கலாச்சார ஒத்துழைப்பை மேலும் வளர்க்கிறது. ” என்றார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வலுவான சாதனையுடன் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் – அதன் சர்வதேச அளவிலான தடத்தை விரைவாக விரிவுபடுத்துகிறது. இந்த தயாரிப்பு நிறுவனம் ‘போதை ஏறி புத்தி மாறி’, ‘அன்புள்ள கில்லி’, ‘நித்தம் ஒரு வானம்’ போன்ற வெற்றிகரமான படங்களையும் , சமீபத்தில் வெளியான ‘ஸ்டார்’ திரைப்படத்தையும், வெகுவாக பாராட்டப்பட்ட இணைய தொடர்களான பேப்பர் ராக்கெட் ( தமிழ்) மற்றும் பாலு கனி டாக்கீஸ் (தெலுங்கு ) ஆகியவற்றையும் வழங்கியுள்ளது. தற்போது இந்த நிறுவனம் விக்ரம் பிரபுவின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ‘லவ் மேரேஜ்: எனும் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது. இத்துடன் சர்வதேச அளவிலான ப்ராஜெக்ட் ஒன்றிற்கான பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டுள்ளது.
இந்த ஒத்துழைப்பு , இந்திய மற்றும் கொரிய திரைப்பட தொழில்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை குறிக்கிறது. இது உலகளாவிய பார்வையாளர்களுக்கு புதிய மற்றும் ஈர்க்கக்கூடிய கதைகளை வழங்கும் ஒரு படைப்பு ரீதியிலான உற்சாகத்தை வளர்க்கிறது.
இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5 இல் , கடந்த மார்ச் 1ஆம் தேதி வெளியான “சங்கராந்திகி வஸ்துனம்” திரைப்படம், மிகப்பெரிய வரவேற்பைக் குவித்து, சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படம் 360 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, இதுவரையிலான ஸ்ட்ரீமிங்க் சாதனைகளைத் தகர்த்துள்ளது.
ZEE தொலைக்காட்சியில் இத்திரைப்படத்தின் உலக தொலைக்காட்சி முன்னுரிமையுடன் (WTP) நடந்த டெலிகாஸ்ட் 18.1 TVR (SD+HD) என சாதனை புரிந்தது, இது கடந்த 2.5 ஆண்டுகளில் இந்தியாவில் எந்தவொரு நிகழ்ச்சியும் எட்டாத உயரமாகும். மேலும், 11.1 மில்லியன் AMAs (சராசரி நிமிட பார்வையாளர்கள்) என்பதைத் தாண்டி சாதனை படைத்த இத்திரைப்படம், இந்தியா முழுவதும் பார்வையாளர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.
நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம், திரையரங்குகளில் ₹300 கோடியைத் தாண்டி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் OTT வெளியீட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை 12 மணி நேரத்திற்குள் கடந்து புதிய சாதனை படைத்தது. தற்போது வரை 360 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனையையும் படைத்துள்ளது
ZEE5 தரப்பில் கூறியதாவது.., “சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படத்தின் அபார வெற்றி, தரமான கதை சொல்லலுக்கு மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பைப் பிரதிபலிக்கிறது. ZEE5 இல் இந்தப் படத்தின் சாதனைப் பதிவு, இந்தியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள எங்கள் பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கை வழங்குவதற்கான எங்கள் முன்னெடுப்பிற்கான ஊக்கமாக அமைந்துள்ளது. ZEE5 சார்பில் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்விக்கும் தரமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்குவோம்.
இயக்குநர் அனில் ரவிபுடியின் இயக்கத்தில், வெங்கடேஷ் டக்குபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சௌத்திரி மற்றும் உபெந்திரா லிமாயே ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் ஒரு குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை அழுத்தமான காமெடியுடன் பரபரப்பான ரோலர் கோஸ்டராக சொல்லியது. “YD ராஜு” என்ற ஓய்வு பெற்ற காவலர் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் டாக்குபதி, “பாக்யலக்ஷ்மி” (ஐஸ்வர்யா ராஜேஷ்) மற்றும் அவரது முந்தைய காதலியாக “மீனாட்சி” (மீனாட்சி சௌதரி) கதையின் மைய கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். ஒரு பிரபல பிஸினஸ்மேன் கடத்தப்படுகிறார், இதனால் ராஜு மீண்டும் தனது கடந்தகால ஆக்சன் அவதாரத்தில் இறங்கி, அந்த பிரச்சனையை எப்படி தீர்க்கிறார் என்பது தான் இப்படத்தின் கதை. குடும்பம், காதல், காமெடி அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்து பரபரப்பான திரைக்கதையுடன் அருமையான எண்டர்டெயினராக இப்படம் ரசிகர்களை மகிழ்விக்கிறது.
ஜோகன் சிவனேஷ் தமிழ்நாட்டின் சென்னையில் இசைப்பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் . இவர் 9 வயது முதலே கீபோர்டு இசைக்கப் பழகினார். பின் ஏ.ஆர். ரஹ்மானின் தற்போதைய கே.எம். கன்ஸர்வேட்டரி அன்று ‘வாப்பா’ கன்ஸர்வேட்டரி என்ற பெயரில் செயல்பட்டுவந்த இசைப்பள்ளியில் சவுண்ட் இன்ஜினீயரிங் படித்தார். மறுபுறம் முன்னனி இசைக்குழுக்களில் கீபோர்டு வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதனால் பாடகர் எஸ். பி. பாலசுப்பிர மணியம் முதல் இளையராஜா வரை பல இசை மேதைகளோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு அங்கு கிடைத்தது. 2008 ஆம் ஆண்டு இளையராஜாவின் ராஜா ஒன் மேன் ஷோ நிகழ்ச்சியில் கீபோர்டு வாசித்தார் .
2012 ஆம் ஆண்டு முதல்முறையாக கொள்ளைக்காரன் படத்துக்காக இசையமைத்திருந்தார் .இதை தொடர்ந்து இவர் இசையமைத்த மெட்ரோ படம் ஜோகனுக்கு திரையுலகில் பெரும் வரவேற்பையும் ரசிகர்களிடம் தனி இடத்தையும் தந்தது . இப்படங்களை தொடர்ந்து ஆள், உரு ,அகடு ,ஆயிரம் பொற்காசுகள் ,ஒயிட் ரோஸ் , கன்னட படமான கப்பட்டி போன்ற படங்களும் இன்று வெளியான ராபர் படம் தொடர்ந்து தனது சிறந்த இசை வேலைப்பாடுகளை கொடுத்து வருகிறார் . ராபர் படத்தில் இவரது பின்னணி இசை படம் பார்த்த மக்களிடையே கவனத்தை ஈர்த்து,பெரிதளவில் பேசப்படுகிறது . மேலும் பல படங்களில் தற்போது இவர் பிசியாக வேலைபார்த்து வருகிறார் .
இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த ஒரிஜினல் காமெடி சீரிஸான “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, அதிகாரப்பூர்வமான வெளியீட்டுத் தேதியுடன் வெளியிட்டுள்ளது.
SS Group சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த அதிரடி காமெடி சீரிஸில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், மனோகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்களை முழுமையாக மகிழ்விக்கும் வகையில், முற்றிலும் நகைச்சுவையை மையமாக வைத்து, ரசிகர்கள் வயிறு குலுங்கி சிரித்து மகிழும் வகையிலான, அசத்தலான காமெடி சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.
வைரங்களை கடத்தி விற்கும் வியாபாரி ரத்தினம், தனது பொக்கிஷமான வைரத்தை அவனது செருப்பு ஒன்றில் மறைத்து வைக்கிறார். ரெய்டு அதிகாரிகளுக்கு பயந்து, அந்த செருப்பை ஆடிட்டரான தியாகராஜனிடம் ( சிங்கம்புலி ) கொடுக்கிறார். தியாகராஜனும் அவரது மகன் இளங்கோவும் செருப்பை தொலைத்து விடுகிறார்கள். வைரம் உள்ள செருப்பைத் தேடி அலையும், கலகலப்பான பயணம் தான் இந்த சீரிஸ். ஒவ்வொரு எபிஸோடும் கலக்கலான காமெடியுடன், பரபர திருப்பங்களுடன் வெகு சுவாராஸ்யமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சீரிஸில் முதன்மைப் பாத்திரத்தில் நடிகர் சிங்கம்புலி நடித்திருக்கிறார். இவருடன் விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், மனோகர், இந்திரஜித், மாப்ள கணேஷ், உசேன், சபிதா ,உடுமலை ரவி, பழனி, சாவல் ராம், director பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தொழில் நுட்ப குழுவில், ஒளிப்பதிவு – கங்காதரன், இசை – LV முத்து கணேஷ், எழுத்து – எழிச்சூர் அரவிந்தன், Editor – வில்சி J சசி, ஆடியோகிராஃபி – டோனி J, கலை – S சதீஷ்குமார், சவுண்ட் டிசைன் – ஹரி ஹரன், உடை வடிவமைப்பு – M அஷோக் குமார் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
உங்கள் முகங்களில் புன்னகை பூக்கச் செய்யும் இந்த “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸை, வரும் மார்ச் 28 முதல் ZEE5 தளத்தில் கண்டுகளிக்கலாம். ZEE5 மனோரஞ்சன் விழா மூலம், 2025 ஆம் ஆண்டு மார்ச் 1 முதல் 30 வரை, ZEE5, ஹோலி பண்டிகையைக் கொண்டாடும் வகையில், பல வெற்றிப் படங்கள், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட சீரிஸ்கள், காமெடி டிராமாக்கள் மற்றும் அதிரடி ஆக்சன் படங்களை இலவசமாக வழங்கிவருவது குறிப்பிடதக்கது.
ZEE5 பற்றி ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்குப் பன்மொழியில் கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்திலிருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள் கொண்ட ஒரு பெரும் திரை நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்க்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது. பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு 12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5 வழங்குகிறது.
ZEE5ல் தமிழ் ப்ளாக்பஸ்டர் ஹிட் “குடும்தபஸ்தன்” டிஜிட்டல் வெளியீடு – ஒரு மிடில்கிளாஸ் இளைஞனின் தினசரி போராட்டங்கள் குறித்த நகைச்சுவைக் கதையை பார்க்கத் தயாராகுங்கள்!
~ இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில், கே. மணிகண்டன் மற்றும் ஷான்வி மேக்னா முக்கிய வேடங்களில் நடித்துள்ள குடும்தபஸ்தன் ! படம் டிஜிட்டலில் மார்ச் 7ல் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது ! ~
மனதை இலகுவாக்கும் சரவெடி காமெடி கொண்டாட்டத்திற்கு தயாராக இருங்கள். திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற குடும்தபஸ்தன் படம், டிஜிட்டலில் மார்ச் 7, 2025ல் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!. இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கியுள்ள இப்படத்தில், கே. மணிகண்டன், ஷான்வி மேக்னா முன்னணி வேடங்களில் நடிக்க, நிவேதிதா ராஜப்பன், குரு சோமசுந்தரம், ஆர். சுந்தர்ராஜன், குதசனாட் கனகம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கதை நாயகன் நவீன் (கே மணிகண்டன்), ஒரு கிராபிக் டிசைனர், வேலை இழந்து பிறகு, அவனது மனைவி வெண்ணிலா (ஷான்வி மேக்னா) கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொள்கிறார். வேலை இழப்பு, கடன் சிக்கல்கள், குடும்ப பிரச்சனைகள் என அனைத்தும் சேர்ந்து நவீனின் வாழ்க்கையை படு சிக்கலாக மாற்றுகிறது. அவரின் மோசமான முடிவுகள், தோல்வியுற்ற சொந்தத்தொழில் முயற்சிகள், அதனுடன் குடும்பத்தில் வரும் அதிர்ச்சியான தருணங்கள் எல்லாவற்றையும் நவீன் எப்படி சமாளிக்கிறான் என்பதை இக்கதை முழுக்க முழுக்க பரப்பரப்புடனும் காமெடியாகவும் சொல்கிறது.
மோசமான வணிக முயற்சிகள், தோல்வியுற்ற ரியல் எஸ்டேட் திட்டம், மற்றும் அவனது மாமா ராஜேந்திரனின் (குரு சோமசுந்தரம்) உடனான சண்டைகள், என நவீனின் வாழ்வில் மேலும் மேலும் பல சிக்கல்கள் உருவாகின்றன. குடும்ப உறவுகளின் உணர்வுகளையும், உண்மையையும் கலந்த அழகான இந்தக் கதையில், நவீன் தனது குடும்பத்தை சந்தோஷமாக வைத்துக்கொள்ள என்னென்ன செய்கிறான் எந்த எல்லைக்குப் போகிறான் என்பதை படு சுவாரஸ்யமாகவும், காமெடியும் கலந்து சொல்கிறது இப்படம்.
ZEE5 நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது.., குடும்பஸ்தன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைக் குவித்து, பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. ரசிகர்களிடம் கண்ணீரையும் சிரிப்பையும் ஒருசேர வரவழைத்துள்ளது இப்படம். ZEE5ல் நல்ல தமிழ்ப் படைப்புகளுக்கு எப்போதும் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இந்த அரிய ரத்தினத்தை எங்கள் ZEE5ல் கொண்டு வருவதில் பெருமை கொள்கிறோம். அற்புதமான நடிகர்கள், மிகச்சிறந்த நடிகர்களின் உழைப்பில், ஒரு மிடில்கிளாஸ் இளைஞனின் வாழ்க்கை கஷ்டங்களை, உணர்வுப்பூர்வமாகவும், கொண்டாட்டத்துடனும் சொல்லும் இப்படத்தை, திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடியதைப் போலவே, இப்போது இந்த டிஜிட்டல் வெளியீட்டிலும் கொண்டாடுவார்கள் என நம்புகிறோம். வரும் மார்ச் 7 அன்று ZEE5 இல் இப்படத்தை கண்டுகளியுங்கள்.
இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி கூறியதாவது.., “ஒரு அறிமுக இயக்குனராக, ஒரு அற்புதமான குழுவுடன் குடும்பஸ்தன் படத்தை உருவாக்கியது, மிக அபாரமான பயணமாக அமைந்தது. தியேட்டர்களில் நவீனின் பயணத்தை பார்வையாளர்கள் கொண்டாடியதைக் காண, பெரு மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது ZEE5 டிஜிட்டல் பிரீமியர் மூலம், அனைத்து மக்களும் இந்த காமெடி என்டர்டெயினரை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.
நடிகர் கே. மணிகண்டன் கூறியதாவது, குடும்பஸ்தனில் ஒரு மிடில்கிளாஸ் இளைஞனாக நவீன் பாத்திரத்தை ஏற்று நடித்தது, மிகச் சவாலான அனுபவமாக இருந்தது. குடும்பத்துக்காக ஒரு இளைஞன் படும், துயரங்கள், சிக்கல்கள், அவனின் சாகசங்கள் என மிக உணர்ச்சிகரமான பயணமாக அமைந்தது. நவீன் கதாப்பத்திரம் அனைத்து இளைஞர்களின் பிரதிபலிப்பு. இந்த அற்புதமான திரைப்படத்தை அனைத்து ரசிகர்களும் ZEE5 மூலம் ரசிக்கவுள்ளது, பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. இப்படம் உங்களை சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும், குடும்பம் சார்ந்த முடிவுகளில் உங்கள் சிந்தனையை மாற்றும்.
ஷான்வி மேக்னா கூறியதாவது, “வெண்ணிலா அன்பு நிறைந்த ஒரு அழகான பாத்திரம், குடும்பத்தைச் சுற்றி நடக்கும் குழப்பங்களுக்கு மத்தியில், தனது கனவுக்காக போராடும் ஒரு இளம் பெண். நவீனின் தொடர் சாகசங்களுக்கு இணையாக அவளும் இணைந்திருப்பது, ஒரு முழுமையான ரோலர்கோஸ்டர் அனுபவமாக அமைந்தது. பார்வையாளர்களை தங்கள் சொந்த வாழ்க்கையை நினைத்து, சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பல தருணங்களின் சரியான கலவையை இப்படம் வழங்குகிறது. பல ஆச்சரிய திருப்பங்களுடன் கூடிய இந்த ஃபெமிலி என்டர்டெயினர் திரைப்படத்தை, Zee5 மூலம் அனைத்து மக்களும் ரசிக்கவுள்ளதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நிவேதிதா ராஜப்பன் கூறியதாவது, குடும்பஸ்தன் படத்தின் ஒரு அங்கமாக நானும் இருந்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. எனது கதாபாத்திரம் நவீனின் வாழ்க்கையில் நடக்கும் சிக்கல்களுக்கு மேலும் ஒரு புதிய அடுக்கைச் சேர்க்கிறது, கதாப்பாத்திரத்தின் ஒவ்வொரு தருணத்தையும் நான் மிகவும் ரசித்தேன். இந்தப் படத்தின் சிறப்பு என்னவெனில், இது உண்மையான வாழ்க்கை போராட்டங்களை மிக அருமையான நகைச்சுவையுடன் சொல்கிறது. திரையரங்குகளில் இப்படத்தை, ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். ZEE5 மூலம் இப்போது அனைத்து மக்களுக்கும் சென்று சேர்வதைக் காண ஆவலோடு உள்ளேன்.
குடும்தபஸ்தன் திரைப்படம் ZEE5ல் மார்ச் 7ல் ஸ்ட்ரீமாகிறது!
கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், ஸ்ரீ பி இசையில், கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில், ஜிவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்ஷிதா குரல்களில் A Spot Light Entertainment தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கத்தில், வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் அழகான ஆல்பம் பாடலாக உருவாகியுள்ளது செகண்ட் சான்ஸ்…
மகேஷ் சுப்பிரமணியம், அம்மு அபிராமி நடித்துள்ள இப்பாடல் இன்று படக்குழுவினர் கலந்துக்கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது.
இளம் நட்சத்திரங்களான ரியோ, மாஸ்டர் மகேந்திரன் மற்றும் சௌந்தர் இவ்விழாவில் கலந்துகொண்டு பாடலை வெளியிட்டு, படக்குழுவை பாரட்டினர்.
இந்நிகழ்வினில்
நடிகர் ரியோ கூறியதாவது..
இந்த பாடலில் மகேஷ் மற்றும் அபிராமி இருவரின் பர்ஃபாமன்ஸ் மிகப்பிரமாதமாக இருக்கிறது. நானும் மகேஷும் ஜோடி ரியாலிட்டி ஷோவில் ஒன்றாக பங்கேற்றோம். ஜிவி பிரகாஷ் மற்றும் நரேஷ் ஐயர் உடைய பாடல்கள் தனித்தனியாக பிரம்மாதமாக இருக்கும். இதில் அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் பாடி இருக்கிறார்கள். அது இன்னும் அற்புதமாக இருக்கிறது. ஹூக் ஸ்டெப்-க்கு பெயர் போன ஸ்ரீதர் சார் உடைய நடன அமைப்பு இதில் பிரம்மாதமாக இருக்கிறது. இந்த பாடல் கேட்பதற்கு கேட்சியாகவும், ரசிக்கும் படியும் இருக்கிறது. ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்.
மகேந்திரன் கூறியதாவது..
இந்த பாடலின் தயாரிப்பாளருக்கு எனது வாழ்த்துகள், இதுபோன்ற பாடல்களை நீங்கள் மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டும். நடன இயக்குனர் ஸ்ரீதர் மிகவும் திறமையானவர் மற்றும் சினிமா மீது மிகவும் நேசம் கொண்டவர், அவர் இந்த பாடலை மிகச்சிறப்பான பாடலாக மாற்றியுள்ளார்,. இசையமைப்பாளருடைய பணியும், பேச்சும் மிகச்சிறப்பாக இருக்கிறது. பாடலின் கதாநாயகன் மகேஷ் மிக கடுமையான உழைப்பாளி. மஹேஷ் எப்போதும் “சிறந்த முறையில் செயல்பட வேண்டும், மற்றும் திறமையான முறையில் முன்னேற வேண்டும்” என கூறுவர்.மகேஷ், இப்போது நீங்கள் இருக்கும் இந்த ஸ்டேஜ் மிகவும் சிறியது; விரைவில் நீங்கள் அதற்கு மேலான, மிகப்பெரிய ஸ்டேஜ்களில் சாதனை புரிவீர்கள். அபிராமி மிகவும் திறமையான, அனைத்து மொழி மக்களையும் ஈர்க்க கூடிய வகையில் தனது நடிப்பை கொடுத்து வருகிறார். அவருடைய திறமைக்கும், அடக்கத்திற்கும் அவர் மிகப்பெரிய வெற்றிய பெற வேண்டும். ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்.
நடிகர் சௌந்தராஜன் கூறியதாவது..
இந்த பாடலின் கதாநாயகன் மகேஷ் தான் என்னை அழைத்தார். நாங்கள் சில நிகழ்வுகளில் சந்தித்தோம். அவர் மிகவும் கடின உழைப்பாளி. நடிகை அபிராமி மிகவும் நுணுக்கமான எக்ஸ்பிரசன் கொடுப்பதில் வல்லவர். அவருடைய நடிப்பு மிக அற்புதமாக இருந்தது. இந்த பாடலில் எடிட்டிங் மற்றும் கதை சொல்லும் விதத்தில் ஒரு அழகான ரிதத்தை பின்பற்றி இருக்கிறார்கள். பாடல் வரிகள், இசை அமைப்பு, நடன அமைப்பு என அனைத்தும் இந்த பாடலில் மிகச்சரியாக இருக்கிறது. இந்த குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.
நடன அமைப்பாளர் ஸ்ரீதர் கூறியதாவது..
மகேஷ் மற்றும் அம்மு அபிராமி இருவரும் மிக அழகாக நடித்து இருக்கின்றனர். கதையின் கருவை அவர்கள் தெளிவாக வெளிக்காட்டியுள்ளனர். இசையமைப்பாளர் உடைய கடின உழைப்பு, இந்த பாடலை மெருகேற்றியுள்ளது. ஜீவி பிரகாஷ் மற்றும் நரேஷ் உடைய குரலில் இந்த பாடல் மேலும் சிறப்பாக மாறியுள்ளது. இயக்குநர் மான்டேஜ் மற்றும் நடன அமைப்புகள் என இரண்டையும் சிறப்பாக கோர்த்துள்ளார். இந்த குழு மேலும் நிறைய படங்களை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். படக்குழுவை வாழ்த்துக்கிறேன்.
எடிட்டர் முத்தையன் கூறியதாவது..
என்னை நம்பி இந்த புராஜக்ட் கொடுத்ததற்கு நன்றி. இந்த படத்தில் இசையும், வரிகளும், அதற்கான நடன அமைப்பும் மிக அற்புதமாக வந்துள்ளது. பாடல் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்
ஒளிப்பதிவாளர் ஜோசப் கூறியதாவது,,
இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி. நான் இதை எதிர்பார்க்கவில்லை, எனக்கு இந்த பாடல் வாய்ப்பையும், மேடை வாய்ப்பையும் கொடுத்த குழுவிற்கு நன்றி. இது ஒரு மிகச்சிறந்த பாடல் அனைவரும் ரசிக்ககூடிய பாடல். அனைவருக்கும் நன்றி.
இசையமைப்பாளர் ஶ்ரீ பி கூறியதாவது..,
இந்த பாடலை மகேஷ் உணர்வுபூர்வமாக கடத்தி இருக்கிறார். ஜிவி பிரகாஷ் சார் மற்றும் நரேஷ் இருவரும் மெர்சல் அரசன் பாடலிற்கு பிறகு, இந்த பாடலில் தான் இணைந்து இருக்கிறார்கள். அவர்கள் மிகச்சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். நடன இயக்குனர் ஸ்ரீதர் இந்த படத்தில் மெலடிக்கு ஏற்ற ஒரு நடன அமைப்பை கொடுத்து, பாடலை இன்னும் மெருகேற்றி இருக்கிறார். வைரமுத்து சாருடைய பங்களிப்பு அளப்பறியது. இயக்குநர் இந்தப் பாடலுக்காக கடின உழைப்பை கொடுத்து இருக்கிறார். படக்குழுவினர் அனைவரும் கடின உழைப்பை கொடுத்து இந்த பாடலை அற்புதமான பாடலாக மாற்றி இருக்கிறார்கள்.
நடிகர் மகேஷ் சுப்பிரமணியம் கூறியதாவது…
தயாரிப்பாளர்கள் மது மற்றும் கார்த்திக் இருவருக்கும் நன்றி என் குறும்படம் பார்த்து , எனக்கு இந்த வாய்ப்பை வழங்கினார்கள். ஒரு கதைக்கருவுடன் இந்த பாடலை உருவாக்கலாம் என்றார் இயக்குநர் சபரி. இது நிறைய பட்ஜெட் தேவைப்படும் பாடல் ஆனால் மிக அழகாக இதை உருவாக்கி விட்டார் சபரி. ராட்சசன் படத்திலிருந்து, நான் அம்மு அபிராமி ரசிகன் மிக அற்புதமான நடிகை என்னுடன் நடித்ததற்கு நன்றி. ஸ்ரீ என் நண்பர் இந்த ஆல்பம் பற்றி சொன்னவுடன் ஆர்வமுடன் வந்தார், மிக அழகான இசையை தந்துள்ளார். ஜீவி மற்றும் நரேஷ் ஐயர் ரசிகன் நான் இந்த பாடல் அவர்கள் பாடியது மகிழ்ச்சி. இந்த ஆல்பத்திற்கான பாடல் வரிகளை வைரமுத்து சார் எழுதியுள்ளார். ரியோ,அவரது பிஸியான கால அட்டவணை இருந்தபோதிலும், எனக்காக இந்த வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார். விஜய் டிவியின் ஜோடி நடன நிகழ்ச்சியில் இருந்து தொடங்கியது எங்கள் நட்பு. மகேந்திரன் தனது படப்பிடிப்பில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் என்னுடைய எல்லா முக்கியமான நிகழ்வுகளுக்கும் எப்போதும் உடனிருப்பவர்.
எனது பெற்றோருக்கும், மனைவி பிரேமலதாவுக்கும் எனது மனமார்ந்த நன்றி. நான் தூங்கும் வரை அவள் தூங்க மாட்டாள், ஆரம்பத்திலிருந்தே அவள் ஒரு பெரிய ஆதரவாக இருந்தாள்.கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்தப்பாடல் பிடிக்கும் நன்றி.
நடிகை அம்மு அபிராமி கூறியதாவது..,
இங்கிருக்கும் அனைவரும் திறமையானவர்கள் என்பதைத் தாண்டி, அன்பானவர்கள். இந்த பாடல் குழு, ஒரு குடும்பமாக செயல்பட்டு, இந்த பாடலை உருவாக்கி இருக்கின்றனர். இந்த படக்குழுவுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி.. புதுமுக கலைஞர்களுக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. குரல் கொடுத்த ஜீவி பிரகாஷ், நரேஷ் மற்றும் ரக்ஷித்ராவிற்கு நன்றி. ஸ்ரீதர் மாஸ்டர் மிகவும் நேர்த்தியான முறையில் பாடலை உருவாக்கி கொடுத்துள்ளார். அனைவருக்கும் என் நன்றிகள் .
தயாரிப்பாளர் மது கூறியதாவது..
இது ஒரு சாதாரண மாலை உரையாடலுடன் தொடங்கியது ஊடகத்துறையில் நுழைவது குறித்து எங்களிடம் எந்த தகுந்த அனுபவமும் இல்லை.
மகேஷ் எங்களுக்கு எல்லாவற்றையும் விரிவாக விளக்கி சொன்னார்,என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதை அவர் தெளிவான பார்வையில் வைத்திருந்தார்.. மகேஷ், தான் என்ன செய்கிறார் என்பதில் உறுதியாக இருந்தார். நடிகர்கள் மற்றும் குழுவினர் யாரையும் நாங்கள் சந்திக்கவில்லை. இங்கு நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் மகேஷ் எங்களுக்கு பதிவிட்டு வந்தார். இயக்குனர் சபரி தான் செய்வதில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார், அது எங்களுக்கு அதிக நம்பிக்கையை அளித்தது. இசையமைப்பாளர் ஸ்ரீ பி இசையில் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
திறமையானவர்கள் அனைவரும் இந்த பாடலில் இணைந்துள்ளனர். அனைவரும் மிகச்சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். தெளிவான பார்வையுடன் இந்த பாடலை அவர்கள் உருவாக்கி இருக்கின்றனர். பாடல் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. இந்த பாடலுக்கு உங்கள் ஆதரவு தேவை.
இயக்குநர் சபரி மணிகண்டன் கூறியதாவது…
மகேஷ் மூலம் தான் இந்த புராஜக்ட் ஆரம்பமானது, இதற்காக அவர் மிகக் கடினமான உழைப்பைத் தந்துள்ளார். நீங்கள் நடிகராக ஆசைப்படுகிறீர்கள் நான் இயக்குநராக ஆசைப்படுகிறேன் அதனால் இதில் கண்டிப்பாக கதை இருக்க வேண்டும் என்றேன், முழு அர்ப்பணிப்புடன் உழைப்பைத் தந்தார். மது இன்று தான் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார், கார்த்திக் மது இருவரும் எல்லாவற்றையும் எங்களிடம் நம்பி விட்டு விட்டார், அவருக்கு என் நன்றிகள். அம்மு அபிராமி இந்த பாடலை நம்பி வந்தார், ஷீட்டிங்கில் முழு ஒத்துழைப்பு தந்தார். அவருக்கு என் நன்றி. 10 மணிக்கு சொன்னால் 9 மணிக்கு வந்து விடுவார். ஸ்ரீதர் மாஸ்டர் அவர் நடன அமைப்பு, எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த முழுப் பாடலும் என் கூடவே இருந்தார், அவர் பெயரால் தான் இந்த பாடல் தெரிகிறது அவருக்கு என் நன்றி. என் தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோருமே என் நண்பர்கள். படம் வேலை பார்த்தால் கூட எனக்காக வந்து, செய்தனர். ஜீவி, நரேஷ் ஐயர் மற்றும் ரக்ஷிதா சுரேஷ்க்கு என் நன்றி, இந்தப்பாடல் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்படி செய்துள்ளோம் நன்றி.
காதலில் நாம் செய்யும் தவறுகள், ஈகோ, அவசரம் நம்மை மீறிய கட்டத்திற்கு இழுத்து காதலை அழித்து விடுகிறது. அப்படிப்பட்ட ஒருவனுக்கு அந்த தவறுகளை சரி செய்து கொள்ளும் வகையில் ஒரு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கிறது. அதனை அவன் எப்படி பயன்படுத்திக்கொள்கிறான் என்பது தான் இந்த ஆல்பம் பாடலின் கரு.
இப்பாடலின் தீமை உருவாக்கி இன்றைய ரசிகர்கள் கொண்டாடும் வண்ணம் இயக்கியுள்ளார் இயக்குநர் சபரி மணிகண்டன்.
காதலின் பல்வேறு தருணங்களை தன் பேனாவால் வரலாறாக்கிய கவிப்பேரசு வைரமுத்து, இந்த செகண்ட் சான்ஸ் பாடலை எழுதியுள்ளார். இளம் இசையமைப்பாளர் ஶ்ரீ இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். இசை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் பாடகர்கள் நரேஷ் ஐயர் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் இப்பாடலை பாடியுள்ளனர்.
கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் இளமை துள்ளும் வகையிலான நடன அசைவுகளுடன் அனைவருக்கும் பிடிக்கும்படியான நடன அமைப்பை செய்துள்ளார்.
ஜோசப் பால் ஒளிப்பதிவு செய்ய, முத்தையன் எடிட்டிங் செய்துள்ளார். கோபிநாத் கலை இயக்கம் செய்துள்ளார்.
பிரம்மாண்ட பொரிட்செலவில், A Spot Light Entertainment சார்பில் கார்த்திக், மது இப்பாடலை தயாரித்துள்ளனர்.
காதலின் மறுபக்கத்தை அழகாக பேசும் இந்த ஆல்பம் பாடலை அனைத்து இசை தளங்களிலும் ரசிக்கலாம்.
விஜய் டிவி வழங்கும், “தனம்” தமிழ் சின்னத்திரையை அலங்கரிக்க வரும் அடுத்த மெகாத்தொடர் !!
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், அடுத்ததாக, மக்களுக்கு விருந்தாக வெளிவரும் நெடுந்தொடர் “தனம்”. ஆட்டோ ஓட்டும் பெண்ணை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த சீரியலை, விளம்பரப்படுத்தும் விதமாக, 50 பெண் ஓட்டுநர்களை அழைத்து, அவர்களை பாராட்டி விருந்தளித்துள்ளனர் படக்குழுவினர்.
தமிழ் சின்னத்திரையுலகில் தொடர்ந்து பல புதுமையான படைப்புகளை வழங்கி, மக்களை கவர்ந்து வரும், விஜய் தொலைக்காட்சியில், அடுத்ததாக இந்த பிப்ரவரி 17 முதல் ஒளிபரப்பாகி வருகிறது “தனம்” சீரியல்.
ஒரு குடும்பத்தில் திருமணமாகி வரும் புதுப்பெண், எதிர்பாரா விதமாக கணவனை இழந்த பின், அந்த மொத்தக் குடும்பத்தையும், ஆட்டோ ஓட்டி காப்பாற்றுகிறாள், மொத்தக் குடும்பத்தின் சுமைகளையும் தன் தோளில் சுமக்கிறாள். ஆட்டோ ஓட்டும் தனத்தை மையப்படுத்தி, இந்த சீரியலின் கதை பயணிக்கிறது.
தனம் கதாப்பாத்திரத்திரத்தில் சத்யா நடிக்க, ரூபஸ்ரீ, ஐஸ்வர்யா, Vj கல்யாணி, கிஷோர், அர்ஜுன், ஜெயஸ்ரீ, ரேணுகா, கோகுல், சமிக்ஷா சொர்ணா, மதன், ரவிவர்மா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
பிப்ரவரி 17 முதல் ஒளிப்பரப்பாகி வரும் இந்த புதிய சீரியல், மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆட்டோ ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றி வரும் பெண் ஆட்டோ ஓட்டுநர்களான நிஜ ஹீரோக்களை கௌரவப்படுத்தும் விதமாக, தனம் சீரியல் குழுவினர் 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு அறுசுவை விருந்தளித்து கொண்டாடினர்.
இந்நிகழ்வினில் 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களும் இத்தொழிலுக்கு வந்த தங்களின் கதைகளை பகிர்ந்து கொண்டனர். அவர்களுடன் படக்குழுவினர் கலந்துதுரையாடி, சிறு சிறு விளையாட்டுக்கள் விளையாடி, அவர்களை உற்சாகப்படுத்தினர். இந்த மொத்த நிகழ்வும் மிக இனிமையான, மகிழ்வுடன் கூடிய கொண்டாட்டமாக அமைந்தது.
இந்த நிகழ்வின் வீடியோ இப்போது வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
“தனம்” சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும். மதியம் 3 மணிக்கு உங்கள் விஜய் தொலைக்காட்சியிலும், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் காணக்கிடைக்கிறது.