Cinema

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும், புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது !!

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது.

டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தை “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய, மதன் இயக்கி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் தான் இப்படம் அறிவிக்கப்பட்ட நிலையில், படக்குழு படு வேகமாக படப்பிடிப்பை முடித்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் துவக்கியுள்ளது. இது திரையுலகினரிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படம், முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான காதல் கதையாக உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். k.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.

டப்பிங் பணிகள் துவங்கிய நிலையில், விரைவில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

மாஸ்க் திரைப்பட இசை மற்றும்  டிரெய்லர் வெளியீட்டு விழா !!

The Show Must Go On & Black Madras Films நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , S P சொக்கலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா நடிப்பில், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் கமர்ஷியல் திரைப்படம் மாஸ்க்.

2025 நவம்பர் 21 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்..,

நடிகை ருஹானி சர்மா பேசியதாவது..,

எல்லோருக்கும் வணக்கம், இது எனக்கு மிகவும் ஸ்பெஷல் டே, இந்த நாளுக்காக இரண்டு வருடம் காத்திருந்தேன். வெற்றிமாறன் சார் முன்னால் பேசக் காத்திருந்தேன். அவர் தந்த ஆதரவுக்கு நன்றி. இன்னும் சில நாட்களில் படம் வரப்போகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. விஜய் சேதுபதி சாரின் தீவிர ரசிகை நான், அவர் வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி. எங்களுக்கு ஆதரவளிக்கும் மீடியா நண்பர்களுக்கு நன்றி.  இயக்குநர் விகர்னனுக்கு எனக்கு நல்ல கதாப்பாத்திரம் தந்ததற்கு நன்றி. என் கோ ஸ்டார் கவின் அவர் எனக்கு நிறைய ஆதரவாக இருந்தார். கவினுடன் நடித்தது மிக மகிழ்ச்சியான அனுபவம். ஆண்ட்ரியா மிகச்சிறந்த நடிகை,  இப்படத்தைத் தயாரித்துள்ளார்.  அவர் இன்னும் நல்ல படங்கள் தயாரிக்க வாழ்த்துக்கள்.  ஜீவி பிரகாஷ் எனக்கு டான்ஸ் ஆட மிகச்சிறந்த பாடல்கள் தந்ததற்கு நன்றி. என்னை மிக அழகாகக் காட்டிய  ஒளிப்பதிவாளருக்கு நன்றி. படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி. நவம்பர் 21 அனைவரையும் திரையரங்கில் சந்திக்கிறோம் நன்றி.

நடிகர் பவன் பேசியதாவது…,

இந்தப்படத்தில் நான் கஷ்டப்படவே இல்லை, கஷ்டப்பட்டதெல்லாம் தயாரிப்பாளர், இயக்குநர் தான். எனக்கு அரசியல்வாதி கேரக்டர் ஏசியில் தான் முழுக்க நடித்தேன். கிளைமாக்ஸ் மட்டும் என்னால் மறக்க முடியாது. ரெடின் கிங்ஸ்லியின் ஒரு காட்சி பார்த்தேன் மிக அருமையாக இருந்தது. கவின் சூப்பராக நடித்துள்ளார். வெற்றி சார் கடையைச் சாத்துகிறேன் என்றார், ஆனால் இந்த படத்திற்குப் பிறகு நிறையக் கடைகள் திறப்பார். ஆண்ட்ரியா மேடம் தயாரிப்பாளராக மாறிவிட்டார் வாழ்த்துக்கள்.  படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது, அனைவருக்கும் பிடிக்கும்  நன்றி.

இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேசியதாவது..,

இயக்குநர் வெற்றிமாறனை வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு விகர்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். எனக்கு விகர்ணன் என்ற பெயர் கேட்டவுடன் அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. மகாபாரத கௌரவர்களின் பெயர்,  அதை வைத்துக்கொண்டதற்கு வாழ்த்துக்கள். எம் ஆர் ராதா மிகப்பெரிய ஆளுமை, அவரை மீண்டும் தமிழ் சினிமாவில் கொண்டு வந்ததற்கு நன்றி. ஆண்ட்ரியா மேடம்  ஒரு படத்தை இயக்கி விட்டால், நடிகை பானுமதி சாதனையைச் சமம் செய்துவிடுவார். பாடுகிறார், நடிக்கிறார் இப்போது தயாரித்துள்ளார் அவர் வெல்ல வாழ்த்துக்கள். சொக்கலிங்கம் மிக நல்ல மனிதர், மிகப்பெரிய தயாரிப்பாளராக வாழ்த்துக்கள். ஒரு கவிதைக்கு ஆண் பால் இருந்தால் அது தான் கவின். டாடாவுக்கு பிறகு மிகப்பெரிய வெற்றிப்படமாக மாஸ்க் அமைய வாழ்த்துக்கள். ஜீவி பிரகாஷ் எங்களுடனே இருப்பவர். குழந்தை தொழிலாளராக சினிமாவுக்குள் வந்தவர். சின்ன வயதில் சிக்கு புக்கு சிக்கு புக்கு பாடல் பாடியவர்,  இப்போது அவர்  இரண்டு தேசிய விருதுகள் வாங்கிவிட்டார்.  ஆர் டி ராஜசேகர்  என் குருநாதர் அவர் மாதிரி கேமரா யாராலும் பண்ண முடியாது. கேமரா மாஸ்டர்களில் ஒருத்தர் அவர். மனதால் மிக உற்சாகமான மனிதர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  மாஸ்க் மிகப்பெரிய வெற்றி பெறட்டும் நன்றி.
ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் பேசியதாவது..,

இந்தப்படம் ஆரம்பித்ததிலிருந்து, நாம் செய்யும் உழைப்பிற்கு எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என நினைத்துக்கொண்டே இருந்தேன். டிரெய்லர் வந்த பிறகு எல்லோரும் பாராட்டினார்கள். படத்தின் வெற்றி இயக்குநரின் கையில் உள்ளது. கவின் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். ஆண்ட்ரியா இதுவரை செய்யாத ரோல் செய்துள்ளார்.  ருஹானி சர்மா மிக அழகாக இருக்கிறார். வெற்றி சார் ஷுட்டிங்க் ஸ்பாட்டுக்கு அதிகம் வரமாட்டார். ஆனால் அவர் வழிகாட்டுதல் இருந்தது. ஜீவி சார் ரசிகன் நான், அவர் இசை அருமையாக வந்துள்ளது. சொக்கு சாருடன் நிறையப் பழகியுள்ளேன் அவர் தயாரிப்பாளராக வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் நன்றி

கலை இயக்குநர்  விஜய் ஐயப்பன் பேசியதாவது..,
எனக்கு வாய்ப்பு தந்த சொக்கலிங்கம் சாருக்கு நன்றி. எனக்கு மிக உறுதுணையாக இருந்த இயக்குநருக்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி .

எடிட்டர் R ராமர் பேசியதாவது..,

மிக்க மகிழ்ச்சி. வெற்றி சார் என்னை நிறைய ஏமாற்றிவிட்டார் அவர் டிரையாக செய்து செய்து, கலராக எதாவது தாருங்கள் என்று ஏங்கிய நேரத்தில் மாஸ்க் தந்து ஆச்சரியம் தந்தார். ஜீவி சார் இசையைக் கேட்டு நிறைய முறை மிரண்டிருக்கிறேன். அசுரன் பிஜிஎம் இப்போது பார்த்தாலும் ஆச்சரியமாக இருக்கும். மாஸ்க் படத்தையும் தாங்கியுள்ளார். அவர் இசை ஆட வைக்கிறது. சொக்கலிங்கம் ஐயாவிற்கு நன்றி. கவின் சார் உங்களுக்காக இந்தப்படம் பேசும்.  ஒரு ஹீரோவை ஃப்ரேமில் பார்க்கும்போது யாரவது ரிசம்பிள் எடுத்து செய்வார்கள் ஆனால் கவின் இப்படியும் செய்ய முடியுமா என ஆச்சரியப்படுத்திவிட்டார். ஆண்ட்ரியா மேடம் ஒரு அவதாரம் எடுத்துள்ளார் இது அவருக்குத் திருப்புமுனையாக இருக்கும்.  தயாரிப்பாளராக ஜெயிக்க வாழ்த்துக்கள். ருஹானி சர்மா பார்க்கும் போது டாப்ஸி ஞாபகம் வந்தது, திரையில் அந்த ஃபீல் தந்துள்ளார். அவர் மிகப்பெரிய இடத்திற்கு வர வாழ்த்துக்கள். பவன் சார் நடிப்பைப் படம் பார்க்கும் போது என்ஜாய் செய்வீர்கள். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றிகள். சொக்கு சார் அடுத்தடுத்து படம் செய்ய வாழ்த்துக்கள். விகர்னன் கதை சொன்ன போதே ஆச்சரியமாக இருந்தது. படமாக இன்னும் சிறப்பாக வந்துள்ளது. அவ்வளவு உழைப்பை அனைவரும் தந்துள்ளார்கள். இப்படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் வெற்றிமாறன் சாருக்கு நன்றி.  நவம்பர் 21 ஆம் தேதி  திரையரங்கில் வெளியாகிறது. மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் நன்றி.

நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசியதாவது..,

இப்பட வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் சொக்கலிங்கம், இயக்குநர் விகர்ணன், ஆண்ட்ரியா மேடம் மற்றும் கவின் அனைவருக்கும் நன்றி. விகர்னன் ஒவ்வொரு சீனையும் செதுக்கி செதுக்கி எடுத்துள்ளார். ஆர் டி ராஜசேகர் சாருடன் மூன்றாவது படம் செய்துள்ளேன் நன்றி சார்.  பவனும் நானும் டான்ஸர்ஸ், பல வருட பழக்கம். அவரை வில்லனாகவே மாற்றிவிட்டார்கள் அவர் ஒரு நல்ல டான்ஸர்.இந்தப்படத்தில் பார்ப்பீர்கள். ஜீவி  ஏற்கனவே இரண்டு தேசியவிருது வாங்கிவிட்டார், இனிமேல் சாதிக்க ஏதுமில்லை. விஜய் சேதுபதியுடன் ஒரு படம் நடித்துள்ளேன் மிகவும் இயல்பானவர். ஆண்ட்ரியா மேடம் அவருக்கு இந்தப்படம் மூலம் பணம் கொட்டட்டும். வெற்றிமாறன் சார் தமிழ் சினிமாவின் பெருமை. அவர் மேற்பார்வையில் நானும் நடிப்பது பெருமை. கவின் கூட இருப்பவர்களை  அணைத்துக் கொள்வார், அவருக்கு இந்தப்படம் நல்ல படமாக அமையும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் நெல்சன் பேசியதாவது..,

நான் அதிகம் விழாக்களுக்குச் செல்வதில்லை, இந்த விழாவிற்கு வரவேண்டுமென 6 மாதம் முன்பே வெற்றிமாறன் சார் சொல்லி விட்டார். இந்த கதை கேட்ட போது, இதற்கும் வெற்றிமாறனுக்கும் சம்பந்தமே இல்லையே என நினைத்தேன். படுபயங்கர குதர்க்கமான கதையாக இருந்தது. இயக்குநரைப் பார்த்தே ஆக வேண்டும் என நினைத்தேன், விகர்ணன் எல்லா க்ரைமுக்கும் செட்டாவது போல் தான் இருந்தார். அவர் சொன்னதையெல்லாம் எடுக்கவே முடியாது. இந்தக்கதை ஐடியா எல்லாம் மிகவும் புதுசாக இருந்தது.விகர்ணன் கதை,  கவின் ஹேட்டர் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. ஆனால் வெற்றிமாறன் சார் அதைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறார். இது ரசிகர்களுக்கு புது எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும். ஜீவி சார் மியூசிக் சூப்பாராக வந்துள்ளது. கவின் எதற்கும் தயாராக இருக்கிறான். அவன் இன்று மேலே, கீழே போய் வந்தாலும், நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறான் சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து இருப்பான். ஆண்ட்ரியா மேடமுக்கு சவாலான கேரக்டர் வாழ்த்துக்கள். ரெடினை  கண்ட்ரோலாக நடிக்க வைத்திருந்தார்கள் வாழ்த்துக்கள்.  ஒரு குழுவாக அனைவரும்  மிகப்பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துக்கள்.

ஜீவி பிரகாஷ் குமார் பேசியதாவது..

மாஸ்க் டீமில்  எல்லோருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள்,  நான் கடைசியாக தான் வந்தேன். ஆண்ட்ரியா மேடமுக்கு வாழ்த்துக்கள். அந்நியன் படத்தில் அவர் முதன் முதலில் பாடும் போது நான் அவர் அருகிலிருந்தேன், அப்போதிலிருந்து அவரைத் தெரியும். அவர் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார், அவருக்கும் சொக்கலிங்கம் சாருக்கும் வாழ்த்துக்கள். வெற்றி சார்  பவன் சொன்ன மாதிரி திரும்ப  கடையை திறக்க வாழ்த்துக்கள்.விகர்ணன் வெற்றிமாறன் சார் சாயலே இல்லாமல் கதை சொன்னார், ஆச்சரியமாக இருந்தது. இந்தப்படம் பரபரவென இருக்கும். ஆர் டி ராஜசேகர் நாங்கள் சினிமாவுக்கு வரும்போதே பெரிய கேமராமேன், அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கவின் சூப்பராக நடித்துள்ளார். ருஹானி பெரிய ஹீரோயினாக வாழ்த்துக்கள். மாஸ்க் படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நடிகை, தயாரிப்பாளர் ஆண்ட்ரியா ஜெரேமியா பேசியதாவது..,

நான் ஒரு விழாவில் பங்கு கொண்டு நீண்ட வருடம் ஆகிவிட்டது. எனக்கு ஒரு படம் விரைவில் வருகிறது மகிழ்ச்சி. கவினுக்கு இது மிகவும் முக்கியமான படம். ருஹானிக்கு முதல் படம். சொக்கு சாருக்கு தயாரிப்பாளராக முக்கியமான படம். எங்கள் அனைவருக்கும் மெண்டார் வெற்றிமாறன் சார், அவர் தான் எங்களின் பப்பெட் மாஸ்டர். ஆர் டி ராஜசேகர் அவர் கேமரா செய்தால் எல்லோரும் அழகாக இருப்பார்கள். என்னோடு உழைத்த அனைத்து நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்களுக்கு நன்றிகள். படம் நவம்பர் 21 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் விகர்ணன் பேசியதாவது..,
என்னுடைய உதவி இயக்குநர்களுக்கும் படத்தில் உதவிய வெற்றிமாறன் சார் உதவியாளர்களுக்கும் நன்றிகள். நான் இங்கு நிற்க காரணமான ஆண்ட் ரியா மேடமுக்கு நன்றி. அவர் தான் வெற்றிமாறன் சாரிடம் என் கதையைப் படிக்கத் தந்தார். சொக்கலிங்கம் அண்ணா நிறையப்பேரை வளர்த்துவிட்டுள்ளார், என்னையும் வளர்த்துவிட்டதற்கு நன்றி. ஆர் டி ராஜசேகர் அவர் ஒரு ட்ரீட். ஷீட்டிங்கில் அவர் இருந்தாலே ஜாலியாக இருக்கும். நெல்சன் அண்ணாவே ஒரு ஜானர் தான் அவர் இந்தப்படத்தில் இருக்கிறார் ஆனால் யாருக்கும் தெரியமாட்டார். அவருக்கு நான் நிறையக் கடமைப்பட்டுள்ளேன். விஜய் சேதுபதி அண்ணா.. அசோக் செல்வன் என் நண்பன், உங்களைப் பற்றி நிறையப் பேசுவான். நீங்கள் நல்ல இதயம் கொண்ட மனிதர். வாழ்த்த வந்ததற்கு நன்றி. ருஹானி சர்மா திறமையானவர் சிறப்பாக நடித்துள்ளார். நண்பர் ஜீவி, நீங்கள் நான் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர வைத்தீர்கள். நீங்கள் தந்த இசைக்கு நன்றி.  ரெடின் ஒரு அழகான ரோல் செய்துள்ளார். ராமரை எடிட்டிங்கிற்கு கூட்டி வந்ததற்கு வெற்றிமாறன் சாருக்கு நன்றி. ஸ்டைலீஷாக எடிட் செய்துள்ளார். ஐயப்பன் அண்ணாவுடன் நிறையப்படம் சேர்ந்து செய்வேன் என் கூடவே இருந்தார் அவருக்கு நன்றி. கவின் ப்ரோ படத்தில் அவர் பெயர் வேலு. இவனுடன் சேர்ந்தால் உருப்பட மாட்டாய் என்பார்களே, அந்த மாதிரி ஒரு ரோல். அவருக்குள் ஒரு கெட்டவனும் இருப்பான், நல்லவனும் ஓரத்தில் இருப்பான். அதை மிக அழகாகத் திரையில் கொண்டு வந்துள்ளார். அவர் தந்த ஆதரவிற்கு நன்றி. பீட்டர் ஹெய்ன் மாஸ்டருக்கு நன்றி.  அவர் மாதிரி ஒரு லெஜண்ட் நம் திரைத்துறையில் இருப்பது நமக்குப் பெருமை. வெற்றிமாறன் சார் அட்வைஸ் கேட்டால் நீங்கள் வாழ்க்கையில் வளர்வீர்கள். அவர் தந்த வழிகாட்டுதலுக்கு நன்றி. நான் உங்களுடன் படம் செய்வதை என் வீட்டிலேயே யாரும் நம்பவில்லை எனக்கு நீங்கள் தந்த வாய்ப்புக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.

நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது..,

விகர்னன் மிக அருமையாகப் பேசினார். வெற்றிமாறன் மெண்டார் என்றார்கள். பேச்சுக்கும் அவர் தான் மெண்டார் தான் போல. இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்தேன் மிக மிகப் பிடித்திருந்தது. விடுதலை ஷீட்டிங்கில் இந்தப்படம் ஆரம்பிப்பதாகச் சொன்னார். மாஸ்க் கதை, எம் ஆர் ராதா, என ஒவ்வொரு ஐடியாவும் நன்றாக இருந்தது. இந்த விழாவில் எல்லோரும் அட்டகாசமாகப் பேசினார்கள். ராமரில் ஆரம்பித்து எல்லோரும் அசத்தலாகப் பேசினார்கள். வெற்றி மாறன் மாஸ்கே இல்லாத எல்லோரையும் சமமாக நடத்தும் ஒரு மனிதர். விடுதலை ஷீட்டிங்கில் வெற்றிமாறன் சாரிடம் ராமர் மாட்டியிருப்பதாக நினைத்தேன், ஆனால் அவர் பேசியதைக் கேட்ட பிறகு தான் ராமரிடம் தான் வெற்றிமாறன் மாட்டியிருக்கிறார் எனத் தோன்றியது. கவினுக்கு வாழ்த்துக்கள் திரையில் அவர் வசீகரமாக இருக்கிறார். அவரை திரையில் பார்க்க பிடித்திருக்கிறது. இன்று வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுப்பதில் மேலே கீழே போகலாம், ஆனால் இது தான் பயிற்சி. இது நீண்ட காலம் தாங்கும் வாழ்த்துக்கள். சின்ன வயதில் பீச்சில் சிலை பார்த்தேன் அப்புறம் ஆண்ட்ரியாவைப் பார்த்தேன் இன்னும் அப்படியே இருக்கிறார். அதே அழகு.  ருஹானி அழகாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். ஜீவி சார் நான் எந்தப்படம் கேட்டாலும் ஒத்துக்கொண்டதே இல்லை அவர் இசை ரொம்ப பிடிக்கும் அவருடன் படம் செய்ய ஆசை வாழ்த்துக்கள். சொக்கலிங்கம் சாருக்கு வாழ்த்துக்கள். அர்ச்சனா நிறையப்  படம் நடிக்க வாழ்த்துக்கள். படம்  மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

விநியோகஸ்தர் அனீஷ் பேசியதாவது..,

இந்தப்படம் நான் பார்த்து விட்டேன். ஆண்ட் ரியா மேடம் சொன்னது போல் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. படம் முழுக்க நெல்சன் சார் ஸ்டைல் இருக்கிறது. ரெடின் வரும் காட்சிகள் எல்லாமே சிரிப்போம். ஜீவி சார் அசத்திவிட்டார். வெற்றிமாறன் சார் உங்கள் பங்களிப்புக்கு நன்றி. கவின் சார் இந்தப்படத்திற்குப் பின் பெரிய இடத்திற்குச் செல்வீர்கள். நவம்பர் 21 படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

தயாரிபபாளர் தாணு பேசியதாவது..,

என் அகம் ஆளும் வெற்றிமாறன் உள்ளிட்ட குழுவினருக்கு வாழ்த்துக்கள். மாஸ்க் பட பாடல்களும் முன்னோட்டமும் எங்கெங்கும் வெற்றியைப் பெறட்டும். வெற்றிமாறன் சிறப்பான படைப்பாளி,  நண்பரைத் தயாரிப்பாளராக மாற்றியிருக்கும் மனதிற்காகவே வாழ்த்துக்கள். ஜீவி இசை எட்டுத்திக்கும் புகழ் பெறுகிறது. கவின் சிறப்பான நடிகராக மிளிர்கிறார். அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது..,

என் குடும்ப விழா போல் இருக்கிறது. எனக்கும் வெற்றிமாறன் சாருக்குமான நட்பு 20 ஆண்டுகளை கடந்து போய்க்கொண்டு உள்ளது. அவர் மேற்பார்வையில் படம் சிறப்பாக வந்துள்ளது. அதே போல் ஜீவி பிரகாஷுன் இசை படத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. மிகக் கடுமையான உழைப்பாளிசொக்கலிங்கம் அவருக்கு இப்படம் வெற்றியைத் தர வாழ்த்துக்கள். கவின் இளைஞர்களுக்குப் பிடிக்கும் ஹீரோ வெற்றிப்படம் தர வாழ்த்துக்கள். ஆண்ட்ரியா மேடம் தயாரிப்பாளர் ஆகியுள்ளார் வாழ்த்துக்கள். இயக்குநருக்கு வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நடிகர் கவின் பேசியதாவது..,

எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. என் லைஃபில் நான் நம்பும் விசயம்,, அன்றன்று நாள் நல்லபடியாக போக வேண்டும் என்பது தான், அதில் செய்ய வேண்டியதையெல்லாம் செய்து முடித்தால், எல்லாம் நன்றாக நடக்கும் என நம்புகிறேன். விஜய் சேதுபதி அண்ணாவுக்கு நன்றி. அவரின் பீட்சா படத்தில் தான் நான் அறிமுகமானேன். நாம் விரும்புவதை விருப்பத்துடன்  செய்தால் அது நடக்கும் என நிரூபித்தவர். அவர் வந்து வாழ்த்தியதற்கு நன்றி. வெற்றிமாறன் சார் அவரெல்லாம் கூப்பிடுவார் என நான் நினைத்ததில்லை. அவர் ஆபிஸில் இருந்து கால் வந்தது. அவரே தான் கதை சொன்னார், அவரே கதை சொல்கிறார் என்றால் அவர் கதை மேல் வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கு முக்கியமாகப் பட்டது. உங்களை நம்பி வருகிறேன் பார்த்துக்கொள்ளுங்கள் என்றேன். இன்று வரை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் மிக ஜாலியானவர் அவரை நான் நண்பராகவே நினைத்துவிட்டேன். அவர் சொக்கலிங்கம் சார் பற்றி மிகப்பெருமையாக சொன்னார். இந்தப்படம் ஜெயித்தே ஆக வேண்டும் என்றார், அது ஆடுகளம் இண்டர்வெல் மாதிரி இருந்தது. கண்டிப்பாகப் பந்தயம் அடித்துவிடுவோம் சார். ஆண்ட்ரியா மேடம் தான் முதலில் கதை கேட்டார். அவர் நடிப்பு மிகச்சிறப்பாகப் பேசப்படும். ஜீவி சார் இத்தனை வேலைகளை எப்படிச் செய்கிறார் என ஆச்சரியமாக இருக்கும். சார் உடலை பார்த்துக்கொள்ளுங்கள். விகர்னன் மிகச்சரியாகப் பேசினார். எல்லாவற்றையும் மிகச்சரியாகச் செய்து படத்தைக் காப்பாற்றித் தந்துள்ளார். பவன் சார், ரெடின் சார் நடிப்பு கண்டிப்பாக பேசப்படும். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. நெல்சன் அண்ணன் வாழ்க்கையில் என்னைச் சரியாக வழிநடத்தி என்னைக் கூட இருந்து பார்த்துக் கொள்வதற்கு நன்றி. நவமபர் 21 படம் திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி.

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது..,

மாஸ்க் படத்தை நான் புதிதாக ஒரு விசயம் பற்றி கற்றுக்கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் முடிந்த வாய்ப்பாக நினைக்கிறேன். ஆண்ட் ரியா ஒரு திரைக்கதை அனுப்பி இதைத் தயாரிக்கிறேன் என்றார், அவர் தயாரிக்கும் அளவு என்ன கதை என்று தான் படித்தேன். அதில் சில மூமெண்ட்ஸ் மிக மிகப் பிடித்திருந்தது. சொக்கலிங்கம் ஒரு படம் தயாரிப்பதாக இருந்தார். நான் ஆண்ட் ரியாவுடன் சேர்ந்து தயாரியுங்கள் என்றேன். அப்படி தான் மாஸ்க் ஆரம்பித்தது. பின்னர் யாரையெல்லாம் இப்படத்தில் நடிக்க வைக்கலாம் என ஆரம்பித்து கவினை அழைத்தோம். ஸ்டார் படத்திற்கு முன்பே அவரை இப்படத்தில் நடிக்கக் கேட்டோம். விகர்னன் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து எளிதாகக் கையாள்வார். அது எனக்குப் பிடித்திருந்தது. சொக்கு தான் ஆர் டி ராஜசேகரை அழைக்கலாம் என்றார். அவர் கிளைமாக்ஸுல் செய்த லைட்டிங் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜீவி இப்படத்தில் செய்ய இசை மிக மிகக் கச்சிதமாக இருக்கிறது, மிக அற்புதமாக இருக்கிறது. விகர்னன் இப்படத்தில் பேப்பரில் இருந்ததை மிக அற்புதமாகத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார். கலை இயக்கம் அருமையாகச் செய்துள்ளார் ஐயப்பன். ராமர் மனதில் பட்டதை அப்படியே பேசக்கூடியவர். அவர் கடைசி சில நாட்களில் அவர் எடிட் செய்த விசயம் மிக நன்றாக இருந்தது. நடிகர்கள்  எல்லோர் நடிப்பும்  ஸ்பெஷலாக இருந்தது. பவன் டான்ஸ் அருமையாக இருந்தது. நெல்சன் இதில் வாய்ஸ் ஓவர் செய்துள்ளார். சமீபத்தில் நான் சினிமாவில் பார்த்ததில் நிஜமான மனிதர், மனதில் பட்டதைப் புண்படாமல் சொல்பவர். மாஸ்க் படம் மூலம் அவரிடம் நிறையப் பேசினேன். கவின் தான் அதற்குக் காரணம். கவின் அவருக்குத் தம்பி மாதிரி. அவர் அறிவுரை இப்படத்தில் இருக்கிறது. சொக்கலிங்கம் நான் அஸிஸ்டெண்ட்டாக இருக்கும் போது அவர் அஸிஸ்டெண்ட் மேனேஜர். மிகவும் அர்ப்பணிப்பான உழைப்பாளி. அவர் தயாரிப்பாளராக மாறியிருப்பது மகிழ்ச்சி. ஆண்ட்ரியா இப்படத்தை ஏன் தயாரிக்கிறீர்கள் இது  நெகடிவ் பாத்திரம், இந்தக்கதை  ஏன் என்றேன். இது செய்தால் இது மாதிரி ரோல் தான் வரும் என்றேன். இப்போதும் யாரும் என்னைக் கூப்பிடவில்லை இந்தக்கதை எனக்குப் பிடித்திருக்கிறது. நான் செய்கிறேன் என்றார். இருவரும் ஜெயிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் வாழ்த்துக்கள். படத்தில் எல்லா கலைஞர்களும் மிகச் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். எம் ஆர் ராதா சார் ஒரு ரிபெல், அவர் நிறைய விசயங்களைப் பேசியிருக்கிறார். அவர் இந்தப்படத்திற்குள் வந்தது மிக மகிழ்ச்சி. ராதாரவி சாரிடம் அனுமதி கேட்டேன், அவர் நன்றாகக் காட்டுவீர்கள் என்றால் ஓகே என்றார் நன்றி. எம் ஆர் ராதா பேசிய விசயம் தான் இப்படத்தின் ஆன்மாவாக இருக்கிறது. குரலற்றவர்களின் குரல் தான் இந்தப்படம். எல்லோருக்கும் நன்றி.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். முன்னணி ஒளிப்பதிவாளர் RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். R  ராமர் எடிட்டிங் பணிகளை கவனிக்க, ஜாக்கி , M, விஜய் ஐயப்பன் கலை இயக்கம் செய்துள்ளனர். ஸ்டண்ட் காட்சிகளை பீட்டர் ஹெய்ன், விக்கி வடிவமைத்துள்ளனர்.

இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ பிரம்மாண்டமாகத் துவங்கியது !!

இளம் நடிகர் திரு வீர், தனது சமீபத்திய “ப்ரீ வெட்டிங் ஷோ ( Pre Wedding Show )” படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதில், சமீபத்தில் வெளியான சம்கிராந்திகி வஸ்துன்னாம் ( Sankranthiki Vasthunnam ) படத்தில் அற்புதமாக நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தினை, அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் இயக்குகிறார். கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மஹேஸ்வர் ரெட்டி மூலி தயாரிப்பில், “புரொடக்ஷன் நம்பர் 2 “ வாக இப்படம் உருவாகிறது.

இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான சிவம் பஜே ( Shivam Bhaje ) விமர்சகர்களிடம் பெரும் பாராட்ட்டுக்களைப் பெற்றது. தற்போது கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இயக்குநர் பரத் தர்ஷன் எழுதியுள்ள மற்றொரு சுவாரஸ்யமான, பொழுதுபோக்கு கதையை தயாரிக்கவுள்ளது.

இந்த திரைப்படத்தின் பிரம்மாண்டமான துவக்க விழா இன்று ஹைதராபாத்தில், நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினரின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

நடிகர் திரு வீர் , மசூடா ( Masooda ) மற்றும் ப்ரீ வெட்டிங் ஷோ ( Pre Wedding Show ) போன்ற வித்தியாசமான கதைகளில் நடித்து புகழ் பெற்றவர். இப்போது அவர் நடிக்கும் இந்த புதிய படம் நகைச்சுவை கலந்த முழுமையான பொழுதுபோக்கு படமாக, பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்காக திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். ரசாகர் மற்றும் பொலிமேரா போன்ற படங்களில் பணியாற்றிய C. H. குஷேந்தர் ஒளிப்பதிவை கவனிக்கிறார். M. M. கீரவாணியின் நெருங்கிய துணை இசையமைப்பாளராக பணியாற்றிய பரத் மஞ்சிராஜு இப்படத்திற்கு இசையமைக்கிறார். பலகம் புகழ் திருமாலா M. திருப்பதி கலை இயக்குநராக இணைந்துள்ளார். கா படத்தின் ஸ்ரீ வரப்ரசாத் எடிட்டராக பணியாற்றுகிறார். ஸ்வயம்பு படத்தில் பணியாற்றி வரும் அனு ரெட்டி அக்கட்டி உடை வடிவமைப்பை கவனிக்கிறார். பிரபல பாடலாசிரியர் பூர்ணசாரி இந்த படத்திற்கான பாடல் வரிகளை எழுதுகிறார்.

இந்தப் படத்தின் புது படப்பிடிப்பு வரும் இந்த மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது. படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்படுகிறது.

நடிகர்கள்

திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ்

தொழில் நுட்பக் குழு

தயாரிப்பாளர் – மகேஸ்வரா ரெட்டி மூலி
இயக்குநர் – பரத் தர்ஷன்
ஒளிப்பதிவு – C.H. குஷேந்தர்
இசையமைப்பாளர் – பரத் மஞ்சிராஜு
கலை இயக்குநர் – திருமலா M. திருப்பதி
எடிட்டர் – ஸ்ரீ வரபிரசாத்
உடை வடிவமைப்பாளர் – – அனு ரெட்டி அக்கட்டி
பாடலாசிரியர் – பூர்ணசாரி
மக்கள் தொடர்பு – யுவராஜ்

நாகபந்தம்” திரைப்படத்தின் ‘ஓம் வீர நாகா’ பாடல் – இறைவன் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாபெரும் ஆன்மீக அனுபவம் !

மரபும் மாயையும் கலந்த அற்புதமான ஆன்மீக பயணத்துக்கு தயாராகுங்கள்! இளம் நடிகர் விராட் கர்ணா தன் திரைப்பயணத்தில் முற்றிலும் மாறுபட்ட தெய்வீகமான பான் இந்திய அனுபவத்தை, நாகபந்தம் மூலம் வழங்கவுள்ளார்.  தொலைநோக்கு இயக்குநர் அபிஷேக் நாமா அவர்களின் இயக்கத்தில், தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி அவர்களின் பெருமித தயாரிப்பாக உருவாகி வருகிறது நாகபந்தம்.

இது சாதாரண படம் அல்ல — ஆன்மீகத்தையும் ஆக்ஷனையும் இணைக்கும் மாபெரும் புராண திரில்லர்! விராட் கர்ணா தனது கதாபாத்திரத்திற்காக, முற்றிலும் தன் உடலை மாற்றும் வகையில்,  பெரும் அர்ப்பணிப்புடன்  கடுமையாக உழைத்து வருகிறார். அவரது அர்ப்பணிப்பும் தீவிர உழைப்பும், ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது.

இயக்குநர் அபிஷேக் நாமா தலைமையில் உருவாகும் இந்தப் படம், பக்தியும் அதிரடி அம்சங்களும் இணைந்த ஒரு அற்புதமான திரை அனுபவமாக இருக்கும். ஆழமான ஆன்மீக கருப்பொருளுடன் கூடிய வணிக ரீதியான கூறுகளையும் கொண்ட இந்தக் கதை, ஆன்மீக சினிமாவுக்கே புதிய வரையறையை தரவுள்ளது.

படத்தின் முக்கிய சிறப்பம்சமாக உருவாகும் “ஓம் வீர நாகா” எனும் பக்திப் பாடல் தற்போது பரபரப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.
இப்பாடல் ராமானாயுடு ஸ்டூடியோவில் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட சிவன் கோவில் செட்டில் படமாக்கப்படுகிறது. ஆர்ட் டைரக்டர் அசோக் குமார் தலைமையிலான குழு, அந்தக் கோவிலின் தெய்வீகத் தோற்றத்தை, உயிரோட்டமூட்டும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

இப்பாடலுக்கான இசையை அபே மற்றும் ஜுனைத் குமார் ஆகியோர் அமைத்துள்ளனர், வரிகளை ஸ்ரீ ஹர்ஷா எழுதியுள்ளார்.
மேலும், பாலிவுட்டின் பிரபல நடன அமைப்பாளர் கணேஷ் ஆச்சார்யா இந்தப் பாடலுக்கான நடன வடிவமைப்பை மேற்கொள்கிறார்.

மேலும் இந்தப் பாடல் கார்த்திகை மாதத்தில் படமாக்கப்படுவது அதன் ஆன்மீக முக்கியத்துவத்தை இன்னும் உயர்த்துகிறது.

இந்தப் படம் இந்தியாவின் பண்டைய விஷ்ணு கோவில்களின் பின்னணியில் உருவாகி, நூற்றாண்டுகள் பழமையான நாகபந்தம் எனப்படும் மறைக்கப்பட்ட ஆன்மீக மரபை வெளிக்கொணர்கிறது.
பத்மநாபசுவாமி, புரி ஜகந்நாதர் போன்ற கோவில்களில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷக் கதைகளில் இருந்து ஊக்கம் பெற்று, புராணமும் மர்மமும் கலந்த ஒரு தெய்வீகத் திரில்லராக இது உருவாகி வருகிறது.

படத்தின் ஒளிப்பதிவு பணிகளை சௌந்தர்ராஜன் S மேற்கொள்ள, எடிட்டிங் பணிகளை R.C. பிரணவ் மேற்கொள்கிறார்.

நாகபந்தம் படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.
விரைவில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்வுகள் துவங்கவுள்ளன.

நடிப்பு:
விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, B.S.அவிநாஷ் மற்றும் பலர்

தொழில்நுட்பக் குழு:

கதை, திரைக்கதை, இயக்கம் – அபிஷேக் நாமா
தயாரிப்பாளர்கள் – கிஷோர் அன்னபுரெட்டி, நிஷிதா நாகிரெட்டி
ஒளிப்பதிவு – சௌந்தர்ராஜன் S
இசை – அபே, ஜுனைத் குமார்
ஆர்ட் டைரக்டர் – அசோக் குமார்
எடிட்டிங் – R.C. பிரணவ்
CEO – வாசு பொடினி

உலக சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த படம்: த ஃபேஸ் ஆஃப் த ஃபேஸ்லெஸ் (முகமற்றவரின் முகம்)

ட்ரை லைட் கிரியேஷன்ஸ் தயாரித்த இந்த திரைப்படம், 2024 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது. 123-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

2024 ஆண்டிற்கான சிறந்த கிறிஸ்தவ திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த படம், கிறிஸ்தவ துறவியான சகோதரி ராணி மரியாவின் வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றுகிறது. இந்தியாவின் மத்திய பிரதேசம், இந்தூரில் மத எல்லைகளை தாண்டி, பெண்கள் வளர்ச்சிக்காக அவர் மேற்கொண்ட தன்னலமற்ற சேவை எண்ணற்றவர்களுக்கு வழிகாட்டியதாக உள்ளது.

ஆழ்ந்த ஆன்மீக உணர்வு, தியாகம், அன்பு, மன்னிப்பு, சமாதானம் மற்றும் ஒருமைப்பாடு போன்ற உயர்ந்த கருத்துகளுடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. 136 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படம் இந்தி, மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.

வெகுசனத்தை அடையும் நோக்குடன் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம், மாதா டிவி உறுதுணையுடன் நவம்பர் 21 ஆம் தேதி முதல் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதே நாளில் தெலுங்கு மொழியில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் வெளியாக இருப்பது சிறப்பு.

2023 ஆம் ஆண்டு கேரளா மாநிலத்தில் திரையரங்குகளில் வெளியான இந்த படம், ஆறு வாரங்களுக்கு மேல் சிறப்பான வரவேற்பைப் பெற்று, மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, பெரும் பாராட்டுகளையும் ஆதரவையும் பெற்றது.

தயாரிப்பாளர்: சாண்ட்ரா டி’சூசா ராணா
இயக்குனர்: ஷைசன் பி. உசுப்
நிர்வாக தயாரிப்பாளர்: ரஞ்சன் ஆபிரகாம்
ஒளிப்பதிவாளர்: மகேஷ் ஆனே
இசை: அல்போன்ஸ் ஜோசப்
கதை, வசனம்: ஜெயபால் ஆனந்தன்
நடிகர்கள்: வின்சி அலாய்சியஸ், சோனாலி மொஹந்தி, ஜீத் மத்தாரு, அஜிஸ் ஜோசப் மற்றும் பலர்

“மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!

சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாண்புமிகு பறை” திரைப்படம், உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழா (Cannes Film Festival)–யில் மே 2025-இல் சிறப்பாக பங்கேற்று, ஜூரி உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்று, சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இத்திரைப்படம் மீண்டும் அதே கேன்ஸ்–ல் நடைபெறும் World Film Festival–இல் கலந்து கொண்டு, இம்மாதம் நடைபெற்ற Official Selection–இல் Best Social Justice Film (சிறந்த சமூக நீதிக்கான திரைப்படம்) என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது. இதற்கான வெற்றி அறிவிப்பு வரும் நவம்பர் 27 அன்று வெளியாக உள்ளது.

அத்துடன், இத்தாலியில் நடைபெற்ற Othismos Film Festival–இல் Culture, Heritage and Local Identity (கலாச்சார பாரம்பரியம் மற்றும் உள்ளூர் அடையாளம்) என்ற பிரிவில் விருதைப் பெற்றுள்ளது. நமது பறை இசையின் அடையாளத்தை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை “மாண்புமிகு பறை” திரைப்படத்திற்கே சொந்தமானது.

சியா புரொடக்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ள இந்த படத்தில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது ஒரு சாதாரண கதை அல்ல — பறை என்ற நம் தொன்மை வாய்ந்த இசைக்கருவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இது.
“இது பறைக்கு இன்னொரு பிறப்பு; முடிவல்ல, ஆரம்பம்…” பறை நம் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களிலும், கலாச்சாரங்களிலும் ஒலித்துவருகிறது. ஆனால், இந்த முறை கதை ஐரோப்பாவிலிருந்து — குறிப்பாக பிரான்ஸிலிருந்து — தொடங்குகிறது. பறை எப்படி நம் நாட்டின் எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் ஒரு வலிமையான குரலாக பரவியது என்பதை படம் வலியுறுத்துகிறது.

பறை என்பது இசை மட்டுமல்ல — அது ஒரு அடையாளம், ஒரு அதிர்வு, ஒரு சமூக உணர்வு. அந்த அதிர்வில் நம்மையும் இணைத்துக் கொள்ளும் முயற்சிதான் “மாண்புமிகு பறை.”

தொழில்நுட்பக் குழு:
கதை, திரைக்கதை: சுபா & சுரேஷ் ராம்
இயக்கம்: எஸ். விஜய் சுகுமார்
ஒளிப்பதிவு: ரா. கொளஞ்சி குமார்
படத்தொகுப்பு: சி. எஸ். பிரேம் குமார்
இசை: தேனிசை தென்றல் தேவா
நடன இயக்கம்: ஜானி
பாடல்கள்: சினேகன்
கலை: விஜய் ஐயப்பன்
தயாரிப்பு நிறுவனம்: சியா புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர்கள்: சுபா – சுரேஷ் ராம்
இணை தயாரிப்பு: ஜெ. எப். நக்கீரன் & கவிதா
நிர்வாக தயாரிப்பாளர்: த. முரளி
மக்கள் தொடர்பு: AIM சதீஷ், சிவா

நடிகர் அருண் விஜய்-யின் “ரெட்ட தல” திரைப்படம் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

நடிகர் அருண் விஜய்-யின் “ரெட்ட தல” திரைப்படம் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திரம் அருண் விஜய் நடிப்பில், “மான் கராத்தே” இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்டைலிஷ் ஆக்ஷன் படம் “ரெட்ட தல”, வரும் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் அறிவிப்பு வெளியாகிய தருணத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் டீசர், திரை ஆர்வலர்களிடமும் ரசிகர்களிடமும் அபாரமான வரவேற்பைப் பெற்றது. தற்போது, படக்குழு அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

முழுக்க முழுக்க ஸ்டைலிஷ் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த கலர்ஃபுல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தில், அருண் விஜய் மாறுபட்ட இரண்டு விதமான கதாப்பாத்திரங்களில் இரட்டை வேடத்தில் மிரட்டியுள்ளார்.

அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டேட்டா பிரைவசி, சைபர் தடயவியல் உள்ளிட்ட மென்பொருள் துறையில் உலகளவில் பெயர் பெற்ற திரு. பாபி பாலச்சந்திரன், BTG Universal நிறுவனம் மூலம் தமிழ் திரைத்துறையில் கால் பதித்துள்ளார்.

முன்னதாக, இந்நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடித்த “டிமாண்டி காலனி 2” ஹாரர் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. அடுத்து, இயக்குநர் விக்ரம் ராஜேஸ்வர் இயக்கத்தில், வைபவ் மற்றும் அதுல்யா நடித்த “சென்னை சிட்டி கேங்ஸ்டர்” திரைப்படமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த இரண்டு வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் திரு. பாபி பாலச்சந்திரன், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, மிகப்பெரும் பொருட்செலவில், அருண் விஜய் அவர்களின் திரை வாழ்க்கையில் பிரம்மாண்டமான படைப்பாக “ரெட்ட தல” திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளன.
இப்படம் 2025 டிசம்பர் 18ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

தயாரிப்பு: BTG Universal
தயாரிப்பாளர்: பாபி பாலச்சந்திரன்
இயக்கம்: கிரிஷ் திருக்குமரன்
இசை: சாம் C.S.
ஒளிப்பதிவு: டிஜோ டாமி
எடிட்டிங்: ஆண்டனி
ஸ்டண்ட்: P.C. ஸ்டண்ட்ஸ்
கலை இயக்கம்: அருண்சங்கர் துரை
உடை வடிவமைப்பு: கிருத்திகா சேகர்
நடன அமைப்பு: சுரேன் R., பாபி ஆன்டனி
பாடல் வரிகள்: கார்த்திக் நேதா, சாம் C.S., விவேகா
VFX மேற்பார்வை: H. மோனேஷ்
நிர்வாக தயாரிப்பாளர்: மணிகண்டன்
தயாரிப்பு மேற்பார்வை: S.R. லோகநாதன்
DI: ஸ்ரீஜித் சாரங்க்
ஒலி வடிவமைப்பு: T. உதயகுமார் (Sound Vibe)
பப்ளிசிட்டி டிசைனிங்: பிரதூல் N.T.
பப்ளிசிட்டி போட்டோகிராஃபர்: வெங்கட் ராம்
ஸ்டில்ஸ்: மணியன்
மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)

“வட்டக்கானல்” – திரைப்பட விமர்சனம்

வட்டக்கானல் படம் பார்க்கும் முன்பே ஒரு மெல்லிய கவிதையை வாசிக்க தயாராகும் மனநிலையோடு செல்ல வேண்டும். இது கமர்ஷியல் சினிமாவுக்கான வேகம் அல்ல. மலைக்காற்று போல மெதுவாக, மௌனங்களுக்கு இடையே பேசும் ஒரு திரைக்கதை. கொடைக்கானலின் இன்னும் அதிகம் அறியப்படாத முகமான வட்டக்கானலை, வெறும் லோகேஷனாக அல்லாமல் ஒரு கதாபாத்திரமாகவே இயக்குநர் மாற்றி வைத்திருக்கிறார். மேகத்தின் இடையே மறையும் மலை, இரவு நேரத்தில் பேசும் நிசப்தக் குளிர், பச்சை மரங்களின் பின்னால் ஒளிந்திருக்கும் தனிமை என ஒவ்வொரு ஃபிரேமும் ஒரு ஆழமான உணர்வை கடத்துகிறது.

கதை மிக எளிமையானது. ஆனால் எளிமைக்குள் ஒளிந்திருப்பது மனித மனங்களின் சிக்கல். நகரத்தில் இருந்து தப்பி ஒரு தனிப்பட்ட விடுதலைக்காக மலைகளுக்குள் வரும் கதாபாத்திரங்கள், அங்கு இயற்கையுடன் மட்டுமல்ல, தங்களுக்குள்ளும் உரையாட தொடங்குகிறார்கள். வசனங்கள் அளவாகவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பல இடங்களில் கண்களும், பின்னணி இசையும் பேசிவிடுகின்றன. இசை இங்கே ஒரு துணை அல்ல, ஓர் உணர்ச்சி மொழி. குறிப்பாக வயலினும், மென்மையான நேட்டிவ் ஃப்ளூட்டும் சேரும் தருணங்கள், படத்தை அடுத்த பரிமாணத்திற்கு தூக்கி செல்கின்றன.

ஒளிப்பதிவு குறித்து தனியாக பேச வேண்டும். மழைக்குப் பிந்தைய ஈர மண்ணின் மணம் கூட திரையில் தெரியும் அளவுக்கு அழகியல் நிரம்பி வழிகிறது. காலை மூடுபனியின் ஊடே நடக்கும் காட்சிகள், இரவு வெளிச்சம் இல்லாத காட்டின் ஒலி மட்டும் நிரம்பிய காட்சிகள், பயம் தராமல் உள்ளே ஏதோ ஒன்றை உலுக்கும் உணர்வை தருகின்றன. எடிட்டிங் மெதுவான ரிதமில் பயணித்தாலும், அது கதைக்கு தேவையான ஓர் அமைதி. அதில் அவசரப்பட எதுவும் இல்லை.

நடிகர்கள் இயல்பாக வாழ்ந்திருக்கிறார்கள். கதாநாயகன், அந்த மலையின் தனிமையை கண்களில் சுமந்து நடக்கிறார். அவருடைய அமைதி கூட ஒரு வசனமாகவே ஒலிக்கிறது. பெண் கதாபாத்திரம் வெறும் காதல் பிம்பமாக கடந்து போகாமல், படத்தின் ஆத்மாவை சமநிலைப்படுத்தும் இன்னொரு தூணாக நிற்கிறார். துணை கதாபாத்திரங்கள் கூட தேவையில்லாமல் திணிக்கப்படவில்லை. இயக்குநரின் கைவண்ணம் சிறிய சிறிய தருணங்களில்தான் அதிகம் வெளிப்படுகிறது. தேநீரின் ஆவி, பழைய கேசட் பாடலின் இரைச்சல், திடீரென பெய்யும் மழையில் யாரோ மறைக்கும் புன்னகை என இவைதான் படத்தை ஞாபகத்தில் நிறுத்துகின்றன.

குறை என்று சொன்னால் – இது பொறுமை இல்லாத பார்வையாளர்களுக்கான படம் அல்ல. வேகம், திருப்பங்கள், அல்லது திடுக்கிடும் திரைக்கதை ட்விஸ்ட்கள் தேடுபவர்களுக்கு இது பிடிக்காமல் போகலாம். இது ஒரு அனுபவ சினிமா. பார்த்து புரிந்துகொள்வதல்ல, உணர்ந்து கடந்து வர வேண்டியது. ஆனால் அதே மெதுவில் தான் இந்த படம் அதன் பலத்தையும் வைத்திருக்கிறது. இறுதியில், படம் முடிந்த பிறகு நம்மோடு ஒட்டிக்கொள்வது கதை அல்ல, அது கடத்திய தனிமையும், இயற்கை ஏற்படுத்தும் சிறிய வாழ்வு புரிதல்களும்.

திரையரங்கை விட்டு வெளியே வரும்போது ஒரு உணர்வு மட்டும் தான் மேலோங்கி நிற்கும் – வட்டக்கானல் ஒரு இடம் அல்ல, அது ஒரு மனநிலை. அதை பார்ப்பவர் உருவாக்கிக் கொள்ள வேண்டிய மனநிலை.

” Others” திரை விமர்சனம்

“Others” திரைப்படம் சமூகத்தின் புறக்கணிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு சமூக திரில்லர் வகை படம். கதையின் நோக்கம் நன்றாக இருந்தாலும், சொல்லும் விதத்தில் சில குறைகள் தென்படுகின்றன. கதை மனித நேயம், சமத்துவம், சமூக பார்வை போன்றவற்றை பேச முயற்சிக்கிறது, ஆனால் திரைக்கதையின் ஒட்டுமொத்த ஓட்டம் சீராக இல்லாததால் அந்த தாக்கம் குறைந்து விடுகிறது. முதல் பாதி சற்று சுவாரஸ்யமாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி மெதுவாகி சலிப்பை ஏற்படுத்துகிறது.

நாயகன் தனது பாத்திரத்தை நம்பகத்தன்மையுடன் செய்திருக்கிறார். சில காட்சிகளில் அவரது நடிப்பு உணர்ச்சியுடன் பொருந்துகிறது. ஆனால் நாயகியின் நடிப்பு படத்தின் பலவீனமாகவே தெரிகிறது. முக்கியமான காட்சிகளில் அவரின் முகபாவனைகளில் தேவையான உணர்ச்சி புலப்படவில்லை; உரையாடல் சொல்லும் விதமும் இயல்பாக இல்லை. இதனால் பல காட்சிகள் எதிர்பார்த்த தாக்கத்தை அளிக்கவில்லை. சில இடங்களில் அவரின் நடிப்பு கதையின் ஓட்டத்தை தளரச் செய்கிறது.

இயக்குனர் சமூகச் செய்தியை வெளிப்படுத்தும் முயற்சி செய்திருந்தாலும், திரைக்கதையில் ஒருங்கிணைப்பு குறைவாக உள்ளது. சில காட்சிகள் மட்டும் நினைவில் நிற்கும் வகையில் அமைந்துள்ளன. இசை மற்றும் பின்னணி இசை சாதாரணமாகவே இருந்தது; சிறப்பான புதிய முயற்சிகள் எதுவும் காணப்படவில்லை. ஒளிப்பதிவு சில காட்சிகளில் பாராட்டுக்குரியதாக இருந்தாலும், எடிட்டிங் மேலும் கூர்மையாக இருந்தால் படம் சுறுசுறுப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில், “Others” ஒரு நல்ல நோக்கம் கொண்ட திரைப்படம் என்றாலும், அதை வெளிப்படுத்தும் விதத்தில் பல குறைகள் இருப்பதால் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஈர்க்கவில்லை. நாயகியின் நடிப்பு மற்றும் திரைக்கதையின் மெதுவான போக்கு படத்தின் பலத்தை குறைத்துள்ளது. படம் சிந்திக்க வைக்கும் முயற்சி கொண்டதாய் இருந்தாலும், அதற்குத் தேவையான உணர்ச்சி ஆழம் வெளிப்படவில்லை.

பரிசு திரைப்பட விமர்சனம்

கலா அல்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள பரிசு படம், ராணுவப் பின்னணியில் ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்ட கதை. ஜன்விகா நடித்திருக்கும் நாயகி, பெற்றோரின் விருப்பத்தின்படி ராணுவத்தில் சேரும் ஒரு சாதாரண மாணவியாக துவங்கி, கடுமையான பயிற்சிகள், சமூகக் கருத்துகள், மன அழுத்தங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு தன்னம்பிக்கையால் வெற்றி பெறும் கதையாக இது நகர்கிறது. படத்தின் முக்கியமான கரு “பெண்ணுக்கு பெருமை சேர்க்கும்” என்ற நோக்கத்துடன் உருவாகியுள்ளது.

திரைப்படத்தின் சிறப்புகளில் ஒன்று, ஒளிப்பதிவு மற்றும் காட்சிப்பதிவில் காணப்படும் இயற்கைச் சூழல்களின் அழகு. குறிப்பாக ராணுவப் பயிற்சி பகுதிகளில் எடுக்கப்பட்ட காட்சிகள் நிஜத்தன்மையுடன் காட்சியளிக்கின்றன. சில காட்சிகள் உணர்வுபூர்வமாக உருவாகியுள்ளன, குறிப்பாக நாயகியின் உளவியல் போராட்டங்கள் நன்றாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தொழில்நுட்ப ரீதியாக படம் சுமார் நிலை பெற்றுள்ளது.

ஆனால், கதை சொல்லும் முறையில் சில குறைகள் உள்ளன. கதை சில இடங்களில் மெதுவாக நகர்கிறது; சில நிகழ்வுகள் லாஜிக்கற்றதாகவும் நீளமாகவும் தோன்றுகின்றன. காமெடி மற்றும் இசை அம்சங்கள் பல இடங்களில் சுவாரஸ்யமின்றி போகின்றன. பாடல்கள் நினைவில் நிற்கவில்லை; பின்னணி இசை சில சமயங்களில் உணர்வை தளர்த்துகிறது. மேலும், சில துணை கதாபாத்திரங்களின் நடிப்பு இயல்பாக இல்லாததாக விமர்சனங்கள் குறிப்பிடுகின்றன.

மொத்தத்தில், பரிசு என்பது ஒரு நல்ல கருத்தை முன்வைக்கும், பெண்களின் மன உறுதியையும் சாதனையையும் பேசும் படம். ஆனால் அதனை திரையில் உணர்ச்சிமிக்கவாறு சொல்லும் திறனில் சிறிதளவு குறைபாடு தெரிகிறது. நல்ல முயற்சியாக இருந்தாலும், முழுமையான தாக்கம் ஏற்படுத்தாத ஒரு மிதமான திரைப்படமாக பரிசு சொல்லப்படுகிறது.