ஒரு காலத்தில் காமராஜர் வெளியில் செல்லும் பொழுது அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் பார்த்து ஏன் படிக்கச் செல்லவில்லை என்று கேட்டதாகவும் மாடு மேய்த்தால் தான் எங்களுக்கு சோறு என்று அந்த மாணவர்கள் கூற அதை கேட்டு அந்த நிமிடத்தில் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்ததாக ஒரு வரலாறு பேசுவது உண்டு அந்த வரலாறில் வந்த ஒரு மாணவனாக ராதாரவி காமராஜர் மூலம் படித்து மிகப் பெரிய ஆளாக ஒரு செல்போன் கம்பெனியின் ஓனராக இருக்கிறார் ஒரு தென்கிராமத்தில் ரவி மரியா தான் பப்ளிசிட்டியாக சின்ன சின்ன போராட்டங்களை செய்து கொண்டு காமெடி என்று கூறிக் கொண்டும் அந்த ஊரில் சுற்றி வரும் ஒரு சில்வண்டு அரசியல்வாதியாக இருக்கிறார் அவருக்கு துணையாக கஞ்சா கருப்புமற்றும் அக்கினி எஸ் வருண் நண்பராகவும் வருகிறார்கள் 45 வயதாகியும் ரவி மரியா திருமணமாகாமல் பெண்கறி கொண்டும் இருக்கிறார் இந்த சூழ்நிலையில் ராதாரவி ஒரு கட்சியை ஆரம்பித்து அதற்கு ரவி மரியாவை தலைவராக போடுகிறார் அந்த நேரத்தில் வரும் தமிழக தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்கிறார் ஆனால் தேர்தலில் எவ்வாறு ஜெயிப்பது என்று யோசித்து புது விதமாக ஒரு முடிவு எடுக்கிறார்கள் அதாவது முதலமைச்சர் யார் என்றால் இவர்களுக்கு ஓட்டு போடும் வாக்காளர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து முதலமைச்சராக தேர்வு செய்யப் போகிறோம் அதுதான் மக்கள் முதலமைச்சர் திட்டம் என்று செய்து மக்களை கவர்ந்து தேர்தலில் வெல்லவும் செய்கிறார்கள் ராதாரவி ஆரம்பித்த கட்சி ஆனால் இதில் ரவி மாரியா மட்டும் போட்டியிடுவதில்லை அவர் எங்கேயோ சென்று செட்டில் ஆகிவிடுகிறார் இந்த சூழ்நிலையில் மக்கள் முதல்வர் என்று ஒரு அரை லூசை தேர்ந்தெடுக்கிறார் ராதாரவி அதற்கு ஒரு காரணமும் கூறுகிறார் அதாவது காமராஜரை மக்கள் ஒரு காலத்தில் தேர்தலில் தோற்கடிக்கிறார்கள் அவரால் வளர்ந்த மாணவரான ராதாரவியால் அதை தாங்க முடியாமல் இப்பொழுது தமிழக மக்களை பழிவாங்க ஒரு பைத்தியத்தை முதலமைச்சர் ஆகிவிட்டு சென்றுவிடுகிறார் இதுதான் இந்த மக்கள் தலைவன் படத்தில் கதை இந்த படத்தில் நாயகனாக அதுவும் முதிர் நாயகனாக ரவி மரியா இதுவரை வில்லன் மற்றும் காமெடி கதாபாத்திரங்கள் நடித்து வந்தவர் இது நாயகன் என்ற பெயரில் வலம் வருகிறார் மேலும் இந்த படத்தில் ராதாரவி அக்ஷரா விஜய் கஞ்சா கருப்பு பழ கருப்பையா நாஞ்சில் சம்பத் கவிதாலயா சரவணன் என்று பலரும் நடித்திருக்கிறார்கள் இந்த எழுதி ராம் தேவ் இயக்கியிருக்கிறார்
நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள “எங்கள் தங்கம்” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை நகரில் நடைபெற்றது.
“This GOLD is BLOODY BOLD” என்ற அதிரடியான டேக் லைனுடன் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பிரபல படைப்பாளரும் தயாரிப்பாளருமான ராஜ் நிடிமொரு உருவாக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை திறமையான இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ராஜ் நிடிமொரு, சமந்தா மற்றும் ஹிமாங்க் ரெட்டி துவ்வுரு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், படக்குழு கலந்துகொண்டு படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.
ஒளிப்பதிவு இயக்குநர் ஓம் பிரகாஷ் பேசியதாவது,
இந்தப் படத்தில் பணியாற்றியதற்கு மிகவும் மகிழ்ச்சி. இது எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படம். சில ஆண்டுகளுக்கு முன்பு நந்தினி ரெட்டி என்னை தொடர்பு கொண்டு, சமந்தாவை மையமாக வைத்து ஒரு புதிய படத்தை எடுக்கப் போவதாக கூறினார். அதைக் கேட்டவுடன் எனக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.
பொதுவாக நந்தினி ரெட்டி என்றாலே அழகான காதல் மற்றும் குடும்பக் கதைகளை நினைப்போம். ஆனால் இந்த முறை அவர் முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகத்தை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக சமந்தா இப்படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஹார்ட்கோர் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். அவருடைய அர்ப்பணிப்பும் உழைப்பும் படப்பிடிப்பு முழுவதும் எங்களை ஊக்கப்படுத்தியது.
டிரெய்லரில் நீங்கள் பார்த்த அந்த எனர்ஜி மற்றும் விறுவிறுப்பு முழுப் படத்திலும் இருக்கும். ரசிகர்களுக்கு இது ஒரு முழுமையான பொழுதுபோக்கு அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநருக்கு மனமார்ந்த நன்றி” என்றார்.
நடிகை கௌதமி பேசியதாவது,
“ஒரு திரைப்படத்தின் மூலம் உங்களைச் சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம். அதிலும் ‘எங்கள் தங்கம்’ போன்ற ஒரு சிறப்பான படத்திற்காக இந்த மேடையில் நிற்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இந்தப் படத்தில் நடித்த அனுபவம் மிகவும் இனிமையானது. படப்பிடிப்பு எப்போது தொடங்கி எப்போது முடிந்தது என்பதே தெரியவில்லை. படம் முடிந்துவிட்டதா, இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு தொடர்ந்திருக்கலாமே என்று நினைக்க வைத்த அளவுக்கு மகிழ்ச்சியாக இந்தப் பயணம் இருந்தது.
சமீப காலமாக நான் அதிகமான படங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இந்தப் படத்தை ஒப்புக்கொண்டதற்கு முக்கியக் காரணம் இதன் பின்னால் இருந்த மனிதர்கள் தான். தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒரு படத்தின் மிக முக்கியமான தூண்கள். இந்தப் படத்தில் அந்த இரண்டு பொறுப்புகளையும் ஏற்றிருக்கும் சமந்தா மற்றும் நந்தினி ரெட்டி மீது எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உள்ளது.
இருவரும் மிகவும் தன்னம்பிக்கை மிக்கவர்கள், வலிமையானவர்கள், அதே நேரத்தில் கண்ணியமானவர்கள். அவர்களுடைய பணித்திறன் மற்றும் அர்ப்பணிப்பை நான் எப்போதும் மதித்து வந்திருக்கிறேன். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு பெருமையாக இருக்கிறது.
பலர் இதை ‘உமன் பவர்’ என்று கூறலாம். ஆனால் எனது பார்வையில் இது ‘டாலண்ட் பவர்’. இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம் பாலினம் அல்ல, இதில் பணியாற்றிய அனைவரின் திறமையும் உழைப்பும் தான். சிறந்த கதை, அருமையான இயக்கம், தரமான தயாரிப்பு, அற்புதமான நடிப்பு மற்றும் இசை என ஒவ்வொரு அம்சமும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
சமந்தாவுக்கும், நந்தினி ரெட்டிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர்கள் நினைக்கும் உயரங்களை அடைந்து, அதையும் தாண்டி இன்னும் பெரிய வெற்றிகளை பெற வேண்டும். அவர்களுடைய பயணம் பலருக்கும் உத்வேகமாக அமைய வேண்டும். இந்தப் படம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன் என்று சொல்ல மாட்டேன். ‘எங்கள் தங்கம்’ கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். இது ஒரு அழகான, மனதை தொடும் திரைப்படம்” என்றார்.
நடிகை சமந்தா பேசியதாவது,
“சென்னைக்கு வருவது எப்போதுமே எனக்கு வீட்டிற்கு வருவது போன்றது தான். சத்யம் திரையரங்கம் அமைந்துள்ள இந்த பகுதி எனக்கு மிகவும் நெருக்கமானது. கல்லூரி காலத்தில் நான் இங்கேயே வாழ்ந்திருக்கிறேன். இன்று இங்கே நிற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
எனக்கு எப்போதுமே ஒரு வருத்தம் உண்டு. தமிழ் சினிமாவில் நான் இன்னும் அதிகமான படங்கள் நடித்திருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன். அந்த வருத்தம் இன்னும் இருக்கிறது. ஆனால் இன்னும் காலம் இருக்கிறது. நல்ல கதைகளும், நல்ல கதாபாத்திரங்களும் வந்தால் கண்டிப்பாக தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்.
இன்று இங்கு வந்திருக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும், பல ஆண்டுகளாக என்னை ஆதரித்து வரும் ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. பல வருடங்களாக அதிக தமிழ் படங்கள் செய்யவில்லை, அதிக வெளியீடுகளும் இல்லை. இருந்தாலும் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் குறையவில்லை. அதற்காக நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்.
‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தில் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளேன். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதும், அதை வெளியிடுவதும் எவ்வளவு கடினமான வேலை என்பதை இந்தப் படம் எனக்கு முழுமையாக உணர்த்தியது. குறிப்பாக படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகவும் சவாலானதாக இருந்தன. ஆனால் அந்த உழைப்பின் பலனாக ஒரு நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்தப் படத்திற்காக உழைத்த முழுக் குழுவினருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் சார், எங்கள் சிறிய படத்திற்கு ஒப்புக்கொண்டு பணியாற்றியதற்கு நன்றி. உங்கள் ஒளிப்பதிவின் மாயாஜாலம் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. நடிகை கௌதமி மேம், படத்தில் இணைந்ததற்கும், உங்கள் அற்புதமான நடிப்பிற்கும் நன்றி. டிரெய்லரில் வரும் எங்கள் காட்சிகளை பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
வரும் ஜூன் 19ஆம் தேதி ‘எங்கள் தங்கம்’ உலகம் முழுவதும் வெளியாகிறது. நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் எங்களால் முடிந்த சிறந்த முயற்சியை கொடுத்திருக்கிறோம். இந்தப் படம் உங்களை பெருமைப்படுத்தும் என்று நம்புகிறேன். தமிழ் திரையுலகம் என் வீடு. அந்த வீட்டிற்கு பெருமை சேர்க்கும் படமாக இது அமைய வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்றார்.
ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன், குடும்பம், உணர்வுகள் மற்றும் அதிரடி அம்சங்கள் கலந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இப்படம் உருவாகியுள்ளது.
ஒளிப்பதிவை ஓம் பிரகாஷ் ISC மேற்கொண்டுள்ள நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கியுள்ளார். திரைக்கதையை ராஜ் நிடிமொரு மற்றும் வசந்த் மாரிங்கண்டி இணைந்து எழுதியுள்ளனர். கூடுதல் திரைக்கதையை பிரகாஷ் பொப்புடி கவனித்துள்ளார்.
படத்தின் நிர்வாக மேற்பார்வையை சீதா R மேனன், படத்தொகுப்பை தர்மேந்திர ககராலா, கலை இயக்கத்தை உல்லாஸ் ஹைடூர் மேற்கொண்டுள்ளனர். அதிரடி காட்சிகளுக்காக சர்வதேச புகழ்பெற்ற லீ விட்டேக்கர் மற்றும் ஏஜாஸ் குலாப் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
சமந்தாவின் புதிய தோற்றமும், படத்தின் வித்தியாசமான கான்செப்ட்டும் ரசிகர்களிடையே ஏற்கனவே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், “எங்கள் தங்கம்” திரைப்படம் இந்த கோடையின் முக்கிய வெளியீடாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் ஜூன் 19 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது
‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்! ஜூலை 2026-ல் திரைக்கு வருகிறது பவிஷ் நாராயணின் புதிய காதல் பொழுதுபோக்கு திரைப்படம் ‘லவ் ஓ லவ்’!
காதல் நகைச்சுவை திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் இந்த வகை படங்கள், சமீப காலங்களில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக உருவெடுத்து வருகின்றன. அந்த வரிசையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள புதிய திரைப்படம் ‘லவ் ஓ லவ்’.
ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் சார்பில் தினேஷ் ராஜ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் சார்பில் ஜி. தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் சுப்பிரமணிய சிவா, நடிகர் தர்ஷன் மற்றும் நடிகர் கேபிஒய் பாலா ஆகியோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
இப்படத்தில் பவிஷ் நாராயண், நாகா துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இஇப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. வெறும் 80 வினாடிகளில் காதல், நகைச்சுவை, இளமைத் துள்ளல் மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்களின் கலவையை அழகாக பதிவு செய்திருக்கும் இந்த டீசர், சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
உறவுகள் மீது அதிக ஈடுபாடு கொண்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத திருப்பங்களையும், அதனால் உருவாகும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களையும் படத்தின் டீசர் சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது. மேலும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வழங்கப்பட்டுள்ள தனித்துவமான அறிமுகம் டீசரின் பலமாக அமைந்துள்ளது.
குறிப்பாக இயக்குநர் செல்வராகவன் ஏற்றுள்ள நகைச்சுவை கலந்த கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. அவரது இயல்பான நடிப்பும், வித்தியாசமான திரைப்பிரசன்னமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
சென்னை நகரின் பல்வேறு அழகிய இடங்களில் பெரும்பாலும் படமாக்கப்பட்டுள்ள இப்படம், நகர்ப்புற காதல் கதைக்கு ஏற்ற தனித்துவமான காட்சியமைப்பைக் கொண்டுள்ளது.
மேலும் சில முக்கிய காட்சிகள் ஊட்டியிலும் படமாக்கப்பட்டுள்ளன. படம் வெளியாகும் முன்பே அதன் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் உள்ளடக்கம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் நம்பிக்கை கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இசைத்துறையின் முன்னணி நிறுவனமான திங்க் மியூசிக் இப்படத்தின் இசை வெளியீட்டு நிறுவனமாக இணைந்துள்ளது.
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பவிஷ் நாராயண், தமிழில் அறிமுகமாகும் பிரபல தெலுங்கு யூடியூப் நட்சத்திரமான நாகா துர்காவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
படத்திற்கு இசையமைத்திருப்பவர்கள் வடசென்னையைச் சேர்ந்த இளம் இசையமைப்பாளர் ஜோடியான FOXn (பிரதீப் பி.ஜே. – வேய்ன் பேவி). இவர்களின் இசையில் உருவான பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளன. ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா, தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் என்.பி. ஸ்ரீகாந்த், கலை இயக்குநர் பா. மகேந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ள தொழில்நுட்பக் குழுவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
இறுதிக்கட்ட பின்னணிப் பணிகளில் இருக்கும் ‘லவ் ஓ லவ்’, ஜூலை 2026-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இளைய தலைமுறையின் காதல், உறவுகள் மற்றும் வாழ்க்கையை நகைச்சுவையுடன் சொல்லும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.
டிரைடன்ட் ஆர்ட்ஸ் R. Ravindran மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் நடிகர் சனந்த் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
ரொமான்டிக் என்டர்டெய்னராக உருவாகியுள்ள ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா டி , வாட்ஸப் மணி , டெப்னிதா கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை துரைராஜ் கவனித்திருக்கிறார்.
ஜூன் 26ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
பாடலாசிரியர் சாரதி பேசுகையில், ” ‘அயோத்தி’ படத்திற்குப் பிறகு அதே நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறேன். இரண்டுமே துள்ளலான பாடல்கள். வாய்ப்பளித்த இயக்குநருக்கும், இசையமைப்பாளருக்கும் நன்றி. இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. கடவுளை மறந்தாலும் காதலை மறக்காமல் இருக்க ஒரு மனம் வேண்டும் என்பதை நோக்கிய பயணம் தான் இப்படத்தின் கதை,” என்றார் .
நடிகர் வாட்ஸப் மணி பேசுகையில், ”இது என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. கல்லூரியில் படித்து முடித்த பிறகு 2014 -15களில் கிஷோர் குறும்படங்களை உருவாக்கும் போது எனக்கு அறிமுகமானார். அதன் பிறகு அவர் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருடன் என்னுடைய பயணமும் தொடர்ந்தது. அதன் பிறகு இணைய தொடர், மியூசிக் ஆல்பம் ஆகியவற்றை இயக்கினார். தற்போது அவர் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நானும் நடித்து நடிகராக அறிமுகமாகிறேன். இது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்தின் கதையை எமோஷனலாக கிஷோர் நன்றாக எழுதியிருக்கிறார். இந்தப் படம் ஒரு பீல் குட் மூவியாக இருக்கும். ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும்,” என்றார்.
நடிகை டெப்னிதா கர் பேசுகையில், ”என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும்போது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தை 26ம் தேதி முதல் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் வர்கீஸ் மேத்யூ பேசுகையில், ”இந்தப் படத்தில் காவல்துறை சீருடையில் நடிக்கவில்லை என்றாலும், பணக்கார அப்பாவாக நடித்திருக்கிறேன். ஆனால் அதிலும் சில சுவாரசியமான விஷயங்கள் இருக்கின்றன. ஊறுகாயும், வத்தலையும் பார்சல் செய்து அனுப்புகிற அப்பாவாக நடித்திருக்கிறேன். இது எனக்கு வித்தியாசமானதாக இருந்தது, ரசிகர்களுக்கும் பிடிக்கும்,” என்றார்.
படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் பேசுகையில், ”ஹார்ட்டின் என்னுடைய ஃபேவரிட் படங்களில் ஒன்று. நான் இதில் பணியாற்றியதால் இப்படி சொல்லவில்லை. கடந்த வாரம் தான் நானும், இயக்குநரும் படத்தை முழுவதுமாக பார்த்தோம். ரேஸியான ஃபிலிமாக மட்டும் இல்லாமல், ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கக்கூடிய படமாக இருக்கிறது. இந்த படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குநர் எழுதி இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அழுத்தமும்.. தனித்துவமும் இருக்கிறது. அதிலும் கதையில் இருக்கும் பெண் கதாபாத்திரங்களுக்கான எழுத்து ஆழமாக இருக்கிறது. இந்தப் படத்தில் இரண்டு வெவ்வேறு உலகங்கள் இருக்கின்றன. அதனை ஒளிப்பதிவாளர் முகேஷ்அற்புதமாக வித்தியாசப்படுத்தி காட்சிப்படுத்தி இருக்கிறார். இதனுடன் ராஜேஷ் முருகேசனின் இசையும் இணையும் போது ஒரு மேஜிக் நடந்துள்ளது. இந்த மேஜிக்கை திரையரங்குகளில் பார்க்கலாம்,” என்றார்.
இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் பேசுகையில், ”இந்த மேடையில் நிற்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். நான் அதிக சுதந்திரமாக பணியாற்றிய படம் இது. இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன. இவற்றை பாடலாசிரியர்கள் சாரதி, விவேக், மோகன் ராஜன் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். இந்தப் படம் இளமையான படம். இதனை தியேட்டருக்கு சென்று பார்த்து ரசித்து கொண்டாடுங்கள்,” என்றார்.
நடிகை இமயா டி பேசுகையில், ” இது என்னுடைய முதல் படம். முதல் படம் என்பதாலேயே இது எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்தப் படத்தில் எனக்கும் என்னைப் போன்ற பல புது முகங்களுக்கும் நடிக்க வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு நன்றி. இந்தப் படம் அழகானது. அனைவருடனும் எளிதாக தொடர்பு கொள்ளும் இந்தப் படத்தில் இடம் பிடித்திருக்கும் ஏதேனும் ஒரு விஷயம் உங்களை கவர்ந்து விடும்.
இந்தப் படத்தின் மூலம் சனந்த் ஹீரோவாக அறிமுகமாகிறார். பக்கத்து வீட்டு பையன் போன்ற கேரக்டரில் நன்றாக நடித்திருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும்,” என்றார்.
நடிகை மடோனா செபாஸ்டியன் பேசுகையில், ”இந்த கதையை கேட்டு மிகவும் பிடித்து போய் தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இது ஒரு லவ் ஸ்டோரி. ஏராளமான காதல் கதைகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் இதில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அதை நீங்கள் ஃபீல் செய்வீர்கள் என்று நம்புகிறேன். ‘ஹார்ட்டின்’ படத்தை இதயப்பூர்வமாக 26ம் தேதியன்று தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்,” என்றார்.
கிரியேட்டிவ் கன்சல்டன்ட் மணிமேகலை பேசுகையில், ”இப்படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்தக் குழுவினரும் கிரியேட்டர்கள் தான். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. ஒருத்தரை லவ் பண்ணனுமா, அல்லது இரண்டு பேரை லவ் பண்ணனுமா, அல்லது இரண்டு பேர்ல் ஒருவரை மட்டும் லவ் பண்ணனுமா அப்படிங்கிற ஒரு சாய்ஸ் இல்லாமல்… லவ் பண்ணனுமா என்ற ஒரு சாய்ஸ் இந்தப் படத்தைப் பார்த்தால் வரும் என்று நினைக்கிறேன். இதுதான் இந்த படத்தை பார்க்கும்போது தோன்றியது. இந்தப் படத்தை இதயத்தின் மூலமாக பார்க்க வேண்டும். அப்போதுதான் புரியும், பிடிக்கும்,” என்றார்.
இயக்குநர் கிஷோர் குமார் பேசுகையில், ”இது என்னுடைய முதல் மேடை. இப்படத்தை இயக்குவதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன. ஒவ்வொரு பாடலையும் இசையமைப்பாளர் ராஜேஷ் உணர்வுப்பூர்வமாகவும், இதயப்பூர்வமாகவும், ஜீவனுள்ளதாகவும்.. இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் இரண்டு வெவ்வேறு உலகங்களை காண்பித்திருக்கிறோம். அதனை இரண்டு மணி நேரத்திற்கு காட்சிப்படுத்தி இருக்கிறோம்.
என்னுடன் குறும்படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் என்னுடைய முதல் படத்தில் இடம்பெற வேண்டும் என்று விரும்பினேன். அதனால் தான் அஜித் கோஷி, வர்கீஸ் மேத்யூ போன்றவர்களை சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடிகை இமயாவின் பங்களிப்பு அதிகம். இப்படத்தில் பெண் கதாபாத்திரங்கள் சிக்கலானதாகவும் உணர்வுப்பூர்வமானதாகவும் இருப்பதற்கு அவர்களின் பங்களிப்பும் ஒரு காரணம்.
‘காதலும் கடந்து போகும்’ படத்தை பார்த்தவுடன் மடோனா செபஸ்டியனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். இப்படத்தின் கதையை அவர்களிடம் ஒரு நாற்பது நிமிடம் விவரித்தேன். அவர்களுக்கு நான் சொன்ன ஐடியா பிடித்திருந்தது. அவருடைய திரையுலக பயணத்தில் நினைவில் நிற்கத்தக்க அளவிற்கு ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ரசிகர்களாகிய உங்களுக்கும் பிடிக்கும்.
இந்தப் படத்தில் சனந்த் கேரக்டருக்கு ரெண்டு வெவ்வேறு வடிவங்கள் இருக்கிறது. இதனை அவருடைய அற்புதமான நடிப்பு திறனால் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார். இந்தப் படத்தை அவர் தன்னுடைய தோளில் சுமந்திருக்கிறார்.
இன்றைய சூழலில் காதலில் சுச்சுவேஷன்சிப், வெக்கேஷன்ஷிப் என எத்தனையோ ‘டேர்ம்ஸ்’ வருகிறது. ஆனால் லவ் என்ற ஒரு எமோஷன் எப்போதும் மாறாது. அந்த எமோஷன் எப்போதும் எவர்கிரீனாக இருக்கும். இதற்கு முன் எத்தனையோ காதல் கதைகள் வந்திருந்தாலும் ஹார்ட்டின் இவை எல்லாவற்றிலிருந்தும் தனித்து இருக்கும்,” என்றார்.
நடிகர் சனந்த் பேசுகையில், ” ஹார்ட்டின்… பெயருக்கு ஏற்றார் போல் க்யூட்டான பிரீஸியான படம். இந்தப் படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொல்லும் போது நானும் இது ஒரு வழக்கமான காதல் கதை என்று தான் நினைத்தேன். ஆனால் அதன் பிறகு படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இந்த கதையில் பல அடுக்குகள் உள்ளதை பார்த்தேன். அதில் ஆழமான உணர்வுகள் இருந்தது. படத்தை பார்க்கும்போது ஒரு ஆழமான உணர்வு ஏற்பட்டது.
இந்தப் படத்தின் ஹீரோ டெக்னீஷியன்ஸ் தான். அதிலும் ஒளிப்பதிவாளர் முகேஷ்அற்புதமான விஷூவல்களை வழங்கி இருக்கிறார். ஹீரோவாக நடிக்கும் முதல் படம் என்பதால் ஒரு ஹீரோயின் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு இரண்டு ஹீரோயின். படத்தில் இரண்டு ஹீரோயினையும் நேசித்திருக்கிறேன். படம் பார்க்கும் போது ரசிகர்களுக்கும் இது பிரதிபலிக்கும். இந்தப் படம் நிஜமாகவே ஆத்மார்த்தமாக இருக்கும்,” என்றார்.
எம்.ஜி. ஸ்டூடியோஸ் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே. பாபு மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே. செந்தில் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் ‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
‘டாடா’ புகழ் இயக்குநர் கணேஷ் கே பாபு கதை எழுதியுள்ள இந்த படத்தில் அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், நட்டி நட்ராஜ், கே. பாக்யராஜ், சிபி சக்கரவர்த்தி, விடிவி கணேஷ், அரவிந்த், சாகுல், நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனு ரமேசன் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் ஏ பி வி மாறன், கணேஷ் கே. பாபு, கே. செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் பா. ரஞ்சித், கார்த்திக் யோகி, விக்னேஷ் கார்த்திக், மாறன் கார்த்திகேயன், நடிகர்கள் கௌதம் கார்த்திக், ரியோ, கலையரசன், டி. சிவா , ஃபைவ் ஸ்டார் கதிரேசன், கமலக்கண்ணன், ஃபைவ் ஸ்டார் கல்யாணம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் மணிமாறன் பேசுகையில், ”டார்க் ஒரு சைக்காலஜிக்கல் ஹாரர் திரில்லர் திரைப்படம். மலையாளம் மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியாகும் திரில்லர் திரைப்படங்களை பார்த்துவிட்டு.. இதுபோன்ற படங்கள் தமிழில் வெளியாக வேண்டும் என நினைப்போம். அப்படி ஒரு திரைப்படமாகத்தான் இந்த ‘டார்க்’ திரைப்படம் இருக்கும்.
இந்த வருடத்தில் தமிழ் சினிமாவிலிருந்து பத்து முதல் பதினைந்து ஹீரோக்கள் உருவாகிறார்கள். அதில் ஒரு முக்கியமான இடத்தில் இப்படத்தின் ஹீரோவான அஜய் இருப்பார்.
இந்தப் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் ஒரு பாடலை பாடியுள்ளனர் அந்த பாடலுக்கு எஸ். தமன் இசை அமைத்திருக்கிறார் இந்தப் பாடலை நாங்கள் படத்தின் புரோமோவிற்காக உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
‘டாடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒருநாள் அப்படத்தின் இயக்குநரான கணேஷ் உடன் பயணிக்கும் போது, அவர் என்னிடம் உங்களின் ஆசை என்ன என கேட்டபோது, நான் சினிமாவில் தயாரிப்பாளராக வேண்டும் என சொன்னேன். உடனடியாக அவர் எழுதிக் கொடுத்த கதை தான் ‘டார்க்’. இப்படத்தின் மூலம் என்னை தயாரிப்பாளராக உயர்த்தியவர் இயக்குநர் கணேஷ். அவருக்கும் நன்றி,” என்றார்.
தயாரிப்பாளர் டி. சிவா பேசுகையில், ”இந்தப் படத்தின் டிரைலர் வழக்கமானதாக இல்லாமல் சற்று புதிதாக இருந்தது. இன்றைய தேதியில் ரசிகர்கள் ஏதாவது புதிதாக இருக்கிறதா என்று தான் பார்க்கிறார்கள். ஏனெனில் புதிதாக கதை சொன்ன படங்கள் எல்லாம் வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் ‘டார்க்’ திரைப்படத்திலும் புதிதாக ஏதேனும் ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்தத் திரைப்படம் ஒரு லாபகரமான திரைப்படமாக இருக்க வேண்டும். ஒரு ட்ரெண்ட் செட்டிங் ஃபிலிமாக அமைந்து, எல்லோருடைய வாழ்க்கையிலும் வசந்தத்தை கொடுக்க வேண்டும். இப்படத்தின் ஹீரோவான அஜய் கார்த்திக்கும் இந்தப் படம் வெற்றி படமாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.
நடிகர் ரியோ பேசுகையில், ”டார்க் படத்தின் டிரைலர் நன்றாக இருந்தது. பொதுவாக சைக்காலஜிகல் திரில்லர் படங்களுக்கு என ரசிகர்கள் உள்ளனர் என்பார்கள். ஆனால் என்னுடைய ஒப்பினியன் வேறு. இது போன்ற சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படங்களுக்கென ஃபேமிலி ஆடியன்ஸ் இருக்கிறார்கள். பயந்து பயந்து ஒரு படத்தை பார்ப்பது ஒரு குடும்பத்திற்கே பிடிக்கும். அதற்கான மொமென்ட்ஸ் ட்ரெய்லரில் இருந்தது. ரீசன்டா ‘அப்சஷன்’ என்ற ஒரு பத்து கோடியில் எடுத்த படம், 1300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் இது போன்றதொரு படங்கள் வராதா என்ற ஏக்கம் நமக்கும் இருக்கும். அந்த வகையில் ஒரு படத்தை உருவாக்கி இருக்கும் ‘டார்க்’ படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
‘டாடா’ படத்தின் மூலமாக மிகப்பெரிய வெற்றியை பார்த்தவர் அப்படத்தின் இயக்குநரான கணேஷ் கே பாபு. இந்தப் படத்தில் அவர் தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். அதுவும் அவருடைய திறமைக்கு பொருத்தமானது தான். தயாரிப்பாளராகவும் அவர் மிகப்பெரிய வெற்றிகளை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.
நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், ”டாடா படத்தின் இயக்குநரான கணேஷ் பாபு என்னிடம் வந்து கதை சொன்னார். நான் ஃபேமிலி சென்டிமென்ட் சம்பந்தமான கதையாக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் ‘டார்க்’ படத்தின் கதையை சொன்னார். கேட்டதும் இப்படத்தின் ஹீரோ யார் ? என்று கேட்டேன். அஜய் கார்த்தி நடிக்கிறார் என்றார். இந்த கேரக்டரை அவர் ஏற்று நடித்து விடுவாரா..? புதுமுகமாச்சே..! என்று கேட்டேன். ஆனால் இப்படத்தினை டப்பிங் செய்யும் போது பார்த்தேன். அஜய் கார்த்தி அற்புதமாக நடித்திருக்கிறார்.
ஃபைவ் ஸ்டார் செந்தில் கமர்சியல் படங்களை வெளியிட்டாலும், கன்டென்ட் உள்ள படங்களையும் வெளியிடுகிறார். இதற்காக அவருக்கும் நன்றி.
இப்படத்தினை திரையில் பார்த்தபோது குழுவினரின் உழைப்பை தெரிந்து கொண்டேன். இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன்,” என்றார்.
இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், ”அஜய் கார்த்திக்கின் இரண்டாவது திரைப்படம் இது. இதன் ட்ரெய்லர் இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. திரையில் அவரது லுக் அண்ட் பிரசன்ஸ் ஸ்ட்ராங்காக இருக்கிறது. அவருக்கு வாழ்த்துகள்.
இந்தப் படம் திரில்லராக இருப்பதால் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். யுவன் ஷங்கர் ராஜாவின் குரலில் உருவான பாடல் நன்றாக இருந்தது.
இயக்குநராக இருந்து தயாரிப்பாளராகி இருக்கிறார் நண்பர் கணேஷ் கே பாபு. தற்போது நிறைய படங்களை தயாரிக்கிறார். தன்னுடைய உதவியாளர்களை இயக்குநர்களாக அறிமுகம் செய்வது மிகவும் முக்கியமான விஷயம். அதனால் அவருக்கும் என் வாழ்த்துகள்.
நம்முடன் இருப்பவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி அவர்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது நல்ல விஷயம்தான். ஆனால் இதில் ரிஸ்க் அதிகம். இது சாதாரண விஷயமும் அல்ல. படத்தை தயாரிப்பது என்பது எளிதானது அல்ல. கதையை நம்பி முதலீடு செய்து அந்த பணம் திரும்ப வருமா… வராதா… என்ற தவிப்பு ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் இருக்கும். தயாரிப்பாளர் என்பதால் அது எனக்கும் தெரியும்.
ஃபைவ் ஸ்டார் செந்தில் போன்றவர்கள் படங்களை தயாரித்து வெற்றி பெற வேண்டியது முக்கியம் என நான் நினைக்கிறேன். அதிலும் சின்ன பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வெற்றி பெறுவது ரொம்ப அவசியம் என்று நினைக்கிறேன். எப்படி தமிழக சூழலில் அரசியலில் மாற்றம் வந்ததோ அதேபோல் தமிழ் திரை உலகத்திலும் சின்ன படங்கள் வெளியாகி, தியேட்டர்களை நோக்கி மக்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறது. ‘பிளாஸ்ட்’, ‘சிறை’ போன்ற படங்கள் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வசூல் செய்திருக்கிறது. பெரிய பட்ஜெட் படமான ‘கருப்பு’ திரைப்படமும் வெற்றி பெற்று இருக்கிறது. அண்மையில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு கூட ஏராளமானவர்கள் வருகை தந்து பல காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாகி இருந்தது.
தியேட்டரை நான் ஜனநாயகம் மிக்க இடமாக பார்க்கிறேன். மக்கள் மீது நம்பிக்கை வைத்து நாம் நல்ல படங்களை உருவாக்கினால்.. நிச்சயமாக நல்ல லாபத்துடன் கூடிய வெற்றி கிடைக்கும். அந்த வகையில் டார்க் திரைப்படமும் நிச்சயமாக பெரிய வெற்றியை பெறும் என்று வாழ்த்துகிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசுகையில், ”நான் இந்த திரைப்படத்தை பார்த்து விட்டேன். மிக நன்றாக இருக்கிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகை அஞ்சனா நேத்ரன் பேசுகையில், ”டார்க் படத்தின் மூலம் நான் அறிமுகமாகிறேன். முதல் படத்திலேயே கே பாக்யராஜ், நட்டி நட்ராஜ், வி.டி.வி கணேஷ் போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். இதுவே எனக்கு கிடைத்த ஆசியாக கருதுகிறேன். ஹீரோ அஜய் கார்த்திக் கடும் உழைப்பாளி. மிகவும் இனிமையானவர். அப்பாவி. என்னைவிட அவர் ரொம்ப அப்பாவி. அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது.
என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. என்னுடைய அடுத்த பட வாய்ப்பையும் தயாரிப்பாளர் கணேஷ் பாபு வழங்கி இருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும். அனைவரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள்,” என்றார்.
நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பேசுகையில், ”இந்த படத்தின் குழுவினர் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இவர்களுடன் தான் என்னுடைய அடுத்த படத்தில் இணைந்து பணியாற்றுகிறேன். அதனால் இந்த விழாவிற்கும் எனக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.
டார்க் திரைப்படத்தின் ட்ரெய்லர் நன்றாக இருந்தது. அதிலும் விஷுவல்ஸ் அட்டகாசமாக இருந்தது. எழுத்து நன்றாக இருக்கிறது. அதனால் இந்த படம் நிச்சயமாக பெரிய வெற்றியைப் பெறும். இதற்காக படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அஜய் கார்த்தி இந்த படத்தில் நன்றாக வேற லெவலில் நடித்திருக்கிறார். தமிழ் திரை உலகிற்கு நல்லதொரு நடிகர் கிடைத்திருக்கிறார். தமிழ் சினிமாவின் நியூ சாக்லேட் பாய். அவருடைய சிரிப்பு.. கவர்ச்சிகரமானதாக இருக்கும்.
நட்டி நட்ராஜ் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. விரைவில் நடைபெறும் என நம்புகிறேன்.
இப்படத்தின் தயாரிப்பாளர்களான கணேஷ் கே பாபு மற்றும் மணிமாறன் ஆகிய இருவரும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள்,” என்றார்.
நடிகர் அஜய் கார்த்தி பேசுகையில், ”இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான மேடை. டார்க் ஒரு படம் என்பதை கடந்து எனக்கு ஒரு பாடம் என்றும் சொல்லலாம். சினிமாவைப் பற்றி முறையாக கற்றுக் கொண்டதே இந்த படத்தின் படப்பிடிப்பில் தான். இந்தப் படத்தின் பணிகள் தொடங்குவதற்கு காரணமான ஏ பி வி மாறன் மற்றும் கணேஷ் கே பாபு ஆகிய இரண்டு பேருக்கு நான் நன்றி சொல்கிறேன்.
‘டாடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கணேஷ் கே பாபு வேறொரு பிரபலமான நடிகரை வைத்து படம் இயக்கியிருக்கலாம். ஆனால் இது போன்றதொரு எக்ஸ்பிரிமென்டல் படத்தை புது முகங்களை நம்பி தயாரிக்க முன் வந்ததற்கு நன்றி. இந்தப் படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் அறிமுகமாகியிருக்கிறார். அதற்கும் எங்களது வாழ்த்துக்கள்.
அவரும் நானும் சில வருடங்களாக இணைந்து பயணித்திருக்கிறோம். அதில் பல சுவாரசியமான சம்பவங்கள்- வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடந்துள்ளது.
படத்தின் மற்றொரு தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கே செந்தில். என் அப்பா. அவருக்கு எத்தனை மேடைகளில் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. அவரிடம் தொடக்கத்தில் பேய் படம் என்று சொன்னதும் அவர் பின்வாங்கினார். மகனை இப்படி ஒரு சீரியஸான பேய் படத்தில் அறிமுகப்படுத்த வேண்டுமா..! என யோசித்தார். அதன் பிறகு எங்களது குழுவினரின் நோக்கத்தை புரிந்துகொண்டு அனைத்து வகையிலும் உதவி செய்து வருகிறார்.
இயக்குநர் கல்யாண் கே. ஜெகனுடன் மூன்றாண்டுகளாக பயணித்திருக்கிறேன். அவருடைய சமயோஜித புத்தி எனக்கு மிகவும் பிடிக்கும். படப்பிடிப்பு தளங்களில் எத்தகைய கட்டுப்பாடுகள் இருந்தாலும் அதனை எல்லாம் தன்னுடைய திறமையால் சீர் செய்து பட குழுவினருக்கு நல்லதொரு அனுபவத்தை வழங்க கூடியவர். எதற்கும் டென்ஷன் ஆகவே மாட்டார்.
படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய சின்ன சின்ன அசைவுகளையும் துல்லியமாக கவனித்து அதனை எப்படி மேம்படுத்த வேண்டும் என்ற விசயங்களை நட்டி நட்ராஜ் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். அவரது இந்த அணுகுமுறை எனக்கு உற்சாகத்தை அளித்தது.
டார்க் ஒரு எக்ஸ்பிரிமென்டல் சைக்காலஜிக்கல் ஹாரர் திரில்லர் திரைப்படமாகத்தான் உருவாகி இருக்கிறது. தியேட்டருக்கு வருகை தரும் ரசிகர்களுக்கு புது வகையான அனுபவத்தை வழங்க வேண்டும். அடுத்து என்ன? என்பதை யூகித்தாலும் அதிலிருந்து மாறுபட்டு பொழுது போக்கு அம்சங்களுடன் ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்து ,இதனை உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படத்தை அனைவரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள். பார்த்த பிறகு உங்களுடைய விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுங்கள். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.
இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் பேசுகையில், ”எனக்கும் இது முதல் மேடை. இந்த மேடையில் நிற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த எங்களது மாஸ்டர் இயக்குநர் கணேஷ் கே. பாபுவிற்கு நன்றி. அவர் ஒரு குறும்படத்தில் நடித்த போது என்னை முதல் முதலில் மானிட்டரில் பார் என்று சொன்னார். அதன் பிறகு அவருடைய தயாரிப்பில் முதல் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை எனக்கு அளித்தது மிகவும் சந்தோஷம்.
தயாரிப்பாளர் மணிமாறன்- மிகவும் இன்ட்ரஸ்டிங்கான மனிதர். படத்தை வணிகம் செய்வதில் தேர்ந்தவர். இந்த படத்தில் நட்சத்திரங்களை நடிக்க வைத்ததில் அவருடைய பங்களிப்பும் உண்டு. முதல் படத்தில் இந்த இருவர்களின் ஒத்துழைப்பும் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவே இந்தப் படம் உருவாக காரணமாகவும் இருந்தது.
இந்தப் படத்தில் அஜய் கார்த்தி தான் ஹீரோ. அவரும் புதுமுகம். நானும் புதுமுகம். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருப்போம். அதைத்தொடர்ந்து ஹீரோயின் அஞ்சனா. அவர்களும் புதுமுகம். நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மாற்றி பார்த்துக் கொண்டே எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை திரையில் செய்திருக்கிறோம்.
நட்டி நட்ராஜ் பேசும்போது படப்பிடிப்பு தளம் அமைதியாக இருக்கும் என்று சொன்னார். அவர் வரும்போது நாங்களே படப்பிடிப்பு தளத்தை அமைதியாக்கி விடுவோம். எங்களுடன் நீண்ட நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இந்தப் படத்தின் ஒட்டுமொத்த கதையையும் அஜயை மையப்படுத்தி தான் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் சொன்னதை அவர் புரிந்து கொண்டு நடித்தார்.
இந்தப் படத்தில் நடித்த ஏனைய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். அதற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் கணேஷ் கே. பாபு பேசுகையில், ”டாடா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நிறைய பேச முடியவில்லை. பெரும் மன அழுத்தத்தில் இருந்தேன். அந்தத் தருணத்தில் டாடா படத்தின் வெற்றியையும் என்னால் சுவைக்க முடியவில்லை. அதே சமயத்தில் நான் மேடையில் அதிகமாக பேசும் நபரும் கிடையாது. ஆனால் இந்த மேடையில் நிறைய பேச வேண்டும் என நினைத்திருக்கிறேன்.
13 வயதில் திரைப்பட இயக்குநராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அதற்காக படிக்க வேண்டும் என்றார்கள்… படித்தேன். உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டும் என்று சொன்னார்கள்… உதவி இயக்குனராக பணியாற்றினேன். நிறைய இடங்களுக்குச் சென்று நிறைய பேரை சந்திக்க வேண்டும் என்றார்கள்… சந்தித்தேன். அதன் பிறகு குறும்படம் எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்… குறும்படத்தை இயக்கினேன். மியூசிக் வீடியோ செய்ய வேண்டும் என்றார்கள்… அதையும் செய்தேன். எல்லாவற்றையும் செய்தேன் ஆனால் என்னால் இயக்குநராக முடியவில்லை. எங்கோ ஒரு சிறிய தவறு நடந்து கொண்டிருக்கிறது என்று மட்டும் தெரிந்தது. கோவிட் காலகட்டத்தில் அனைவரும் முடங்கி விடுகிறோம். கோவிட் முடிந்த பிறகு நமக்கு சினிமா வராது என்று நினைத்து.. பத்து வருடமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமோ..! என நினைத்தேன். அதனால் இதனை விட்டுவிட்டு, வேறு வேலைக்கு சென்று விட்டேன். அந்த தருணத்தில் ஒரு போன் வருகிறது. டாடா படத்தின் கதையை சொல்கிறேன். அந்த கதையை சொல்லி முடித்தவுடன் ஒரே நாளில் அதனை படமாக உருவாக்க வேண்டும் என்ற பணிகள் நடைபெற தொடங்குகிறது.
தயாரிப்பாளரும் இந்தப் படத்தை குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்கிறார். தயாரிப்பாளராக மட்டுமல்ல ஒரு இயக்குநராகவும் நானும் அந்த வேலையை செய்ய வேண்டி இருந்தது. பட்ஜெட்டில் எங்கெல்லாம் தயாரிப்பாளருக்கு செலவை குறைக்க முடியும் என்பதை பார்த்து பார்த்து செய்தேன்.
கல்யாண் என்னுடைய நண்பர். நானும் அவனும் பள்ளிக்கூடத்தில் இருந்து நண்பர்களாக இருக்கிறோம். என்னுடன் இணைந்து பயணித்தான். எப்போது அவன் என்னுடைய உதவியாளராக மாறினான் என்று எனக்குத் தெரியாது. அவன் நல்ல வேலையை பார்த்துக் கொண்டு, நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்தான். அவனது வேலையை நான் தான் கெடுத்தேன்.
அவரிடம் நான் வேலை செய்வதற்கு ஒரு ஆபீஸ் வேண்டும் என்று கேட்டேன். உடனே அவனுடைய ஆபீஸில் ஒரு பக்கத்தை ஒதுக்கி கொடுத்தான். நாளடைவில் அது என்னுடைய ஆபீஸ் ஆக மாறிவிட்டது. சிறிது நாளில் அவனும் என்னுடன் சேர்ந்து வேலை பார்க்க தொடங்கி விட்டான். இது பற்றி கேட்டபோது நீ முதலில் இயக்குநர் ஆகு. மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்.
கல்யாணின் மனைவியிடம், ‘இவன் ஒரு நாள் நிச்சயம் பெரிய ஆளாகி விடுவான்’ என்று சொன்னேன். இன்று அது நடந்து விட்டது.
டாடா படத்தின் ரஃப் கட் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது செந்தில் சார் வந்தார். அந்தத் தருணத்தில் அவர் யார் என்று கூட எனக்குத் தெரியாது. அவரை தயாரிப்பாளர் அழைத்து வந்தார். நான் சினிமாவை பற்றி படித்திருக்கிறேன் ஆனால் ஒரு சினிமாவுக்குள் எப்படி இருக்க வேண்டும் என்பது தெரியாது. செந்தில் சார் வந்து படத்தை பார்த்துவிட்டு சென்ற அடுத்த நாள்… என் வாழ்க்கை மாறிவிட்டது. அது என்ன மேஜிக் என்று எனக்குத் தெரியவில்லை. இவர் வந்து சென்ற அடுத்த நாள் என்னிடம் எல்லோரும் வேறு மாதிரியாக நடந்து கொள்ள தொடங்கி விட்டனர். முதன்முதலாக டாடா படத்தை அங்கீகரித்தவர் செந்தில் சார் தான். இந்த செந்தில் சார் இருக்கும் தைரியத்தில் தான் நான் தொடர்ந்து படங்களை தயாரிக்கிறேன். அவருக்கும் நன்றி.
இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் என்னுடைய நண்பர்கள்தான். இன்று நான் திரைத்துறையில் நல்லதொரு இடத்தில் இருக்கிறேன். நான் இன்று இவர்களுக்காக டார்க் படத்தை தயாரிப்பது பெரிய விஷயம் இல்லை. எந்த பலனையும் எதிர்பார்க்காமல் எனக்காக டாடாவில் பணியாற்றினார்கள். அதனால் தான் டார்க் என்பது ‘டாடா’ படத்திற்கான தேங்க்ஸ் தான்.
இந்தப் படத்தின் கதையை நான் தனுஷ் சாரை மனதில் நினைத்து எழுதினேன். ஆனால் இதில் நடிப்பதற்கு அஜய் முன் வந்து நிற்கிறார். நான் கல்யாணிடம் கேட்கிறேன் அஜய் ஓகேவா என்று.
நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் ..எனக்கு அஜய் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் அன்றைய காட்சிகளை பார்த்துக் கொண்டே இருப்பேன். ஒரு நாள் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு என்றார்கள். நான் கிளைமாக்ஸை படமாக்குவதை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது நான் படப்பிடிப்பு தளத்திற்குள் செல்கிறேன். மிகவும் அமைதியாக இருக்கிறது. அனைவரும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அஜய் நடித்துக் கொண்டிருந்தார். இயக்குநர் எதிர்பார்த்த அந்த ஷாட் கிடைத்துவிட்டது. கல்யாணும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் அஜய் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்து ஒன் மோர் இன்னொரு டேக் போகலாமா என்று கேட்டார். எனக்கு புரியவில்லை. அஜயிடம் நேரம் ஆகிறது. இயக்குநர் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டது. போதும் என்றேன். இறுதியில் இயக்குநரை சமாதானப்படுத்தி அதே காட்சியை மீண்டும் ஒரு முறை நடிப்பதற்காக அவர் செல்கிறார். நான் அப்போது கோபத்துடன் தனியாக சென்று அமர்கிறேன். அந்தக் காட்சியில் மீண்டும் நடித்து முடித்துவிட்டு இயக்குநர் ‘கட் ‘சொன்னவுடன் என் முகத்தில் செருப்பால் அடித்தது போல் இருந்தது. எனக்கு படத்தில் மிகவும் பிடித்தது அந்த ஷாட் தான். இந்த சம்பவத்திற்கு பிறகு என்னுடைய படப்பிடிப்பில் நடிகர்கள் யாராவது நம்பிக்கையுடன் இன்னொரு டேக் கேட்டால் நான் அதை அனுமதிக்கிறேன். இந்த விஷயத்தை நான் அஜயிடம் கற்றுக் கொண்டேன்.
இந்தப் படமே அஜய் தான். அவர் கேரக்டர் மேல் ட்ராவல் ஆகும் கதை இது. இந்தப் படம் அஜயின் முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இந்த மாதம் ‘டார்க்’ வெளியாகிறது. அடுத்த மாதம் ‘கராத்தே பாபு’ வெளியாகிறது. அதற்குப் பிறகு ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படம் வெளியாகிறது. தொடர்ந்து மூன்று மாதங்களில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் ஆதரவு தாருங்கள்,” என்றார்.
‘டார்க்’ திரைப்படத்திற்கு மனு ரமேசன் இசையமைக்க, ரவி சக்தி ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். படத்தொகுப்பிற்கு கதிரேஷ் அழகேசன் பொறுப்பேற்க, கலை இயக்கத்தை சண்முகராஜா கையாள சண்டைப் பயிற்சியை நைஃப் நரேன் வழங்க, நடன இயக்கத்தை சதீஷ் மேற்கொண்டுள்ளார். பாடல்கள்: யுகபாரதி, விவேக், கணேஷ் கே. பாபு; ஒலி வடிவமைப்பு: அருணாச்சலம் சிவலிங்கம்; ஒப்பனை: முகம்மது; உடைகள் வடிவமைப்பு: காயத்ரி பாலசுப்பிரமணியன்; நிர்வாக தயாரிப்பு: மீனா அருணேஷ்; சவுண்ட் மிக்சிங்: B. முத்துக்கிருஷ்ணன்; டி ஐ: லிக்சோ பிக்சல்ஸ்; கலரிஸ்ட்: ஜி. எஸ். முத்து; ஸ்டில்ஸ்: குமரேசன்: தயாரிப்பு மேலாளர்: பாலாஜி பாபு எஸ்; கோ டைரக்டர்: சதீஷ் சுகுமார்; இணை ஒளிப்பதிவு: கண்ணதாசன் செழியன்; இணை படத்தொகுப்பு: தீபன் சந்திரசேகரன்; இசை லேபிள்: திங்க் மியூசிக்.
கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மக்கள் தலைவா ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தில் ரவி மரியா, அக்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், அக்னி S வருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். கார்த்திக் எஸ். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு துளசி ராமன் இசையமைத்திருக்கிறார். காமெடி வித் பொலிடிக்கல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் தயாரித்திருக்கிறார். இவருடன் எஸ். வெங்கடேசன்- R சந்திரசேகரன் – T ராம்குமார் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து திரையரங்குகளில் வெளியிடுவதற்காக திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் கே. பாக்யராஜ், ஆர். கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார், எழில் , நந்தா பெரியசாமி, பிருந்தா சாரதி, லியாகத் அலிகான், சி. ரங்கநாதன், ஏ. ஆர். வெங்கடேஷ் வசனகர்த்தா வி. பிரபாகர், இசையமைப்பாளர் தீனா, விநியோகஸ்தர் ஸ்ரீதர், தொழிலதிபர் சுப்புராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் பேசுகையில், ” இந்தப் படத்தின் மூலம் முதன்முதலாக திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். இப்படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்தனர். இதனையே நான் பெரிய வெற்றியாக கருதுகிறேன். இந்த மேடைக்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் பலரையும் திரையில்தான் நான் பார்த்திருக்கிறேன். அவர்களுடன் இணைந்து ஒன்றாக இந்த மேடையில் இருப்பது பெருமிதமாக இருக்கிறது. திரையுலகத்தை சார்ந்த ஒருவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறார். இதன் மூலம் சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கடுமையாக உழைத்து தங்களுடைய ஒத்துழைப்பை அளித்துள்ளனர். இந்தப் படம் அரசியல் சார்ந்த காமெடி படம். இந்த படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் ராம் தேவ் பேசுகையில், ” வாழ்க்கையில் இந்த தருணத்தை பொக்கிஷமாகவும் சந்தோஷமாகவும் அனுபவிக்கிறேன். ஏனெனில் நான் பார்த்து மிரண்ட திரையுலக ஜாம்பவான்கள் அனைவரும் இந்த மேடையில் ஒன்றாக அமர்ந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
‘மக்கள் தலைவா’ என்ற இந்தப் படத்தின் கதையை முதன்முதலாக இயக்குநர் சி ரங்கநாதன் மூலமாக இயக்குநர் எஸ். ஏ . சந்திரசேகரிடம் சொன்னேன். இந்தப் படத்தின் கதை- பாட்டிலுக்கு பத்து ரூபா வாங்குவது பற்றியது. அவருடன் நீண்ட நேரம் கதையைப் பற்றி விவாதித்தேன். அதில் ஒரு கட்டத்தில் ஹீரோவிற்கு எதிராக அரசியலில் இரு துருவங்கள் ஒன்றிணைவது போன்று வரும். அப்போது இது எப்படி லாஜிக் படி சரியா வரும்? எனக் கேட்டேன். அரசியலில் அதெல்லாம் வரும் என்றார். அதனைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கு ‘மக்கள் தலைவா’ என்ற டைட்டிலையும் அவர்தான் தேர்வு செய்தார். அவருக்கு இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் பகிர்ந்து கொள்ள முடியாத சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை.
அதன் பிறகு இந்த கதையில் யாரை நடிக்க வைக்கலாம் என்று பட்டியலிட்டபோது ராதாரவி இடம் பெற்றார். கதையைக் கேட்ட அவர் எனக்கு அரசியல் நன்றாகத் தெரியும் ஆனால் எனக்குத் தெரியாத பல விசயங்களை நீ தெரிந்து வைத்திருக்கிறாய். அதை எப்படி நீ யோசித்தாய்..! என கேட்டுவிட்டு, நடிக்க சம்மதம் தெரிவித்தார். படப்பிடிப்பு தளத்தில் அவர் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்தார்.
அதன் பிறகு இயக்குநர் சி ரங்கநாதன் இந்த கதைக்கு பொருத்தமான ஹீரோ ரவி மரியா தான் என்றார். அதன் பிறகு அவர் அரசியல் மேடையில் பேசிய பேச்சுக்களை இணையத்தில் பார்வையிட்டேன். அப்போதே இந்த கதைக்கு நாயகன் இவர்தான் என தீர்மானித்து விட்டேன். அவரையும் சந்தித்தேன். முதலில் கதாநாயகனாக நடிக்க தயக்கம் காட்டினார். அதன் பிறகு முழு கதையையும் கேட்டுவிட்டு கதையின் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கும் நன்றி. அதன் பிறகு பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, என ஒவ்வொருவராக இணைந்தனர். அனைவருக்கும் நன்றி ” என்றார் .
இயக்குநர் ஆர். கே. செல்வமணி பேசுகையில், ” 1986 ஆம் ஆண்டில் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான ‘தீர்த்தக் கரையினிலே’ என்ற படத்திற்கு தயாரிப்பாளர் பழ. கருப்பையா. அந்தப் படத்தில் நான் உதவி இயக்குநர். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவரை இந்த மேடையில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்விற்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் வருகை தந்திருக்கிறார்கள் என்றால்.. அதற்கு ரவி மரியாவின் நட்புதான் காரணம். ரவி மரியா சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த பண்பாளர். அனைவருக்கும் உதவி செய்யும் தாராள மனப்பான்மை கொண்டவர். சிறந்த படைப்பாளியும் கூட. இயக்குநர் சங்கத்தின் பொறுப்பில் இருந்தபோது உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக கேட்டவுடன் எந்தவித தயக்கமும் இல்லாமல் லட்சக்கணக்கான ரூபாயை நன்கொடையாக வழங்கியவர்.
இந்தப் படத்தில் அவர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இங்கு திரையிடப்பட்ட இரண்டு பாடல்களும் சிறப்பாக இருந்தது. இசையமைப்பாளர் துளசிராமனுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அவரையும் வாழ்த்துகிறேன்.
இந்தப் படத்தின் டிரைலர் திரையிடப்படவில்லை. ஏனென்று கேட்டபோது.. சென்சார் பிரச்சனை என்றார்கள். பொதுவாக இது போன்ற பிரிவியூ தியேட்டர்களில் ட்ரெய்லரை திரையிடும்போது யாரும் சென்சார் சர்டிபிகேட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் அதே தருணத்தில் படம் சற்று வில்லங்கமாக இருந்தால் பிரிவ்யூ தியேட்டரில் திரையிடுவதற்கு தயக்கம் தெரிவிப்பார்கள். அப்படி என்றால்… இந்தப் படத்தில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று தெரிகிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘தலைவா’ படத்திற்கும் சென்சார் பிரச்சனை இருந்தது. தற்போது தயாராகி இருக்கும் ‘மக்கள் தலைவா’ படத்திற்கும் சென்சார் பிரச்சனை இருக்கிறது.
ஆனால் நாங்கள் படத்தை இயக்கிய போது எங்களுக்கு அத்தகைய நெருக்கடி இருந்ததில்லை. ‘மக்களாட்சி’ என்ற அரசியல் படத்தை இயக்கிய போது எனக்கு எந்தவித சிக்கலும் ஏற்பட்டதில்லை. அப்போது படைப்பாளிகளுக்கு சிறிதளவு சுதந்திரம் இருந்தது என நினைக்கிறேன். ஆனால் தற்போது உள்ள படைப்பாளிகளுக்கு கண்ணுக்குத் தெரியாத ஒரு பயம் சூழ்ந்திருக்கிறது.
இந்தப் படத்தை செய்யலாமா…? படத்தை இயக்கினால் தணிக்கை செய்வார்களா? தணிக்கை செய்த பின்பு திரையரங்குகளில் வெளியிடுவார்களா? மத்திய அரசு இந்த படத்திற்கு சென்சார் செய்யுமா? அதையும் கடந்து வந்தால் மாநில அரசாங்கம் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட அனுமதிக்குமா.. ?அதையும் கடந்து படம் திரையரங்குகளில் வெளியானால் இங்குள்ள ஜாதி, மத அமைப்புகள் ஏதேனும் பிரச்சனைகளை ஏற்படுத்தி படத்தை நிறுத்தி விடுவார்களா? என பல விசயங்கள் இருக்கிறது.
ஒரு படைப்பாளி ஒரு உண்மையை சொல்வதற்கு ஏராளமானவர்களுக்கு பயப்பட வேண்டிய சூழல் இன்று இருக்கிறது.
உண்மையை தவிர வேறு எதை வேண்டுமானாலும் திரைப்படங்களில் பேசலாம். உண்மையைப் பேசினால் மட்டும்தான் அந்தத் திரைப்படம் வெளியில் வருவதற்கு கஷ்டம். பொய்யை பேசலாம்… கற்பனையைப் பேசலாம் …ஆபாசத்தை பேசலாம்… அருவெறுப்பை பேசலாம்… வன்முறையை பேசலாம்… கலாச்சார சீரழிவை பற்றி பேசலாம்… ஆனால் உண்மையை மட்டும் பேசக்கூடாது. மீறி பேசினால் அந்தப் படம் இந்தியாவில் வெளியாவது கஷ்டம். இதனை நான் உணர்ந்து தான் சொல்கிறேன். இதற்கு மிகப்பெரிய உதாரணம் எனது இயக்கத்தில் உருவான ‘குற்ற பத்திரிக்கை’. இந்தப் படம் என் வாழ்க்கையே திசை மாற்றிய படம்.
இன்றுள்ள படைப்பாளிகள் எப்படி இந்த விசயத்தை சொல்வது என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனை கொஞ்சம் காமெடியாக சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் ‘மக்கள் தலைவா’ படம் உருவாகி இருக்கிறது. அதிலும் நாஞ்சில் சம்பத்- பழ கருப்பையா- ராதாரவி – என அரசியல்வாதிகள் நடித்திருக்கிறார்கள். அதனால் இந்த படத்தில் ஏதோ ஒரு விசயம் இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.
நட்பிற்கு இலக்கணமாக திகழும் ராதாரவி. இந்தப் படத்தைப் பற்றியும், இதில் பணியாற்றிய கேமராமேனை பற்றியும் பாராட்டி பேசினார். சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு அவர் ஒரு சூப்பர் ஸ்டாரான கேமரா மேன் என குறிப்பிட்டார். எனக்கு கேமரா மேன் கார்த்திக் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அவருடைய வேலையைப் பற்றி ராதாரவி சொன்ன பிறகுதான் அவருடைய திறமையை நான் தெரிந்து கொண்டேன். இந்தப் படத்துக்குப் பிறகு அவருக்கும் பெரிய எதிர்காலம் உள்ளது.
இந்த படத்தின் டைட்டில் ‘மக்கள் தலைவா’ மட்டுமல்ல.. அதன் கீழ் ‘ஃபார் சேல்’ என இடம் பிடித்திருக்கிறது. இதைப் பற்றி புரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். இப்படி யோசிப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அதனை டைட்டிலில் டேக் லைனாக இடம்பெறச் செய்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும். நாம் அரசியலில் யாரையும் குறை சொல்லப் போவதில்லை. ஆனால் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்பதை பலர் சொல்லிக் கொண்டிருந்தனர். படத்தில் இந்த கதாபாத்திரத்தில் பேரரசு நடித்திருக்கிறார்.
நடிகர் ரவி மரியாவிற்கு இடுப்பு வளையாது. ஆனால் இந்த படத்தில் அவர் ஹீரோயினுடன் பாடல் காட்சியில் நன்றாக டான்ஸ் ஆடி இருக்கிறார். அவருடைய நல்ல மனதிற்கும் நகைச்சுவையான படம் என்பதாலும் இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.
இசையமைப்பாளர் – பாடலாசிரியர் துளசி ராமன் பேசுகையில், ” இது என்னுடைய முதல் மேடை. மூன்று திரைப்படங்களுக்கு இசை அமைத்திருக்கிறேன்.
ஜாதி, மதம், மொழி, இனம், இவைகளை விட பவர்ஃபுல் சினிமா. இன்னும் நிறைய முதல்வர்களை கொடுக்க இருக்கும் சினிமா. சினிமா சாதாரணமான கலையல்ல. மனிதர்களின் கனவுகளை தாங்கும் வொண்டர்ஃபுல் வொண்டர் வேர்ல்ட். இதில் இன்று ‘மக்கள் தலைவா’ என்ற புதிய லைட் உருவாகி இருக்கிறது. இந்த லைட்டை கொடுத்த தயாரிப்பாளர் கவிதாலயா சரவணனுக்கு நன்றி. இதற்கு கரண்ட் கொடுத்த இயக்குநர் ராம்தேவுக்கு நன்றி.
மக்கள் சக்தி சூரியன் தான். அதன் வெளிச்சம் கேட்கும் கலைஞன் நான். விதியை எழுதியது கடவுள் தான். அந்த விதியை மாற்றி அமைப்பது மக்கள் தான். அதனால் தான் மக்களாகிய உங்களிடம் பணிவுடன் கேட்கிறேன் எனக்கு ஆதரவு தாருங்கள். என் பாடலுக்கும் ஆதரவு தாருங்கள். மக்களை மனதை மயக்கி, கொள்ளை கொள்ளும்.. காலத்தை வெல்லும்.. இன்னும் நிறைய பாடல்கள் என்னிடம் இருக்கிறது. அன்பான இயக்குநர்களே! தயாரிப்பாளர்களே! எண்பது மற்றும் தொண்ணூறுகளில் எப்படி அற்புதமான பாடல்கள் வெளியானதோ.. அதனை இன்றுள்ள காலகட்டத்திற்கு ஏற்ப வைப்( Vibe) பாக மெகா ஹிட் கொடுக்கிற பாடல்கள் என்னிடம் இருக்கிறது. இந்த மக்கள் தலைவா படம் காமெடி மூவி. இதனை தியேட்டரில் பாருங்கள். உங்களுடைய டென்ஷன் குறைந்து ஹாப்பி அதிகமாகும்.
ஒரு பாடலாசிரியராக… இசையமைப்பாளராக… இந்த படத்தின் இசைக்காக.. ஒரு சில வார்த்தைகளை பகிர்ந்து கொள்கிறேன்.
இனிமை இனிமை செவிக்கு இனிமை இசை சிந்தைக்கு இனிமை இசை தாயானாலும் இசை தவழும் சேயானாலும் இசை. காதல் மலர்ந்தாலும் இசை கடவுளை வணங்கினாலும் இசை இன்பத்தின் திறவுகோல் இசை துன்பத்தின் ஆறுதல் இசை ஆணும் பெண்ணும் சேர்ந்தால் இசை மழலையின் சொல்லும் இசை மக்களையே வெல்லும் இசை. இசை இல்லா உலகம் இல்லை. ஆக மொத்தத்தில் இசைக்கு இசையாதவர் எவருமில்லை. ஆகவே இசை தான் வாழ்க்கை. இதுதான் கொள்கை. அளித்தேன் உழைப்பை. அடைந்தேன் சிறப்பை. வென்றேன் மக்களின் அன்பை..” என்றார்.
அரசியல்வாதி -தமிழறிஞர்- தயாரிப்பாளர் – நடிகர்- பழ .கருப்பையா பேசுகையில், ” இயக்குநர் ராம்தேவ் நகைச்சுவையான படத்தை உருவாக்கி இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் ஐந்து நாள் பணியை மூன்று நாளிலேயே விரைவாக நிறைவு செய்யக்கூடிய ஆற்றல் படைத்தவர். இவருக்கு ஒளிப்பதிவாளரும் இணையாக பணியாற்றினார். இயக்குநர் தான் இப்படத்தின் முதல் தயாரிப்பாளர். தொடங்கிய பிறகு இடையில் நின்று விட்டது. தயாரிப்பாளர் தேவைப்பட்டார் அப்போது அவருடைய சொந்த ஊரில் உள்ள தொழிலதிபர் கவிதாலயா சரவணனை பார்த்து பேசி, மயக்கி, அவருக்கு ஒரு கதாபாத்திரத்தை வழங்கி படத்தின் பணிகளை தொடங்கினார். அவருடைய வீட்டிலேயே படப்பிடிப்பு நடைபெற்றது. முழு படமும் அவருடைய வீட்டில் தயாரானது தான். இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் கவிதாலயா சரவணனின் அறிமுகமும் நட்பும் கிடைத்தது. அவர் பெரிய செல்வந்தர். எங்களிடம் பேசும் போது நான் இரண்டு முறை அமெரிக்காவிற்கு சென்று திரும்பும் செலவுதான் பரவாயில்லை. நான் தயாரிக்கிறேன் என்றார். அதன் பிறகு தற்போது இந்த படம் வெளியாகும் வகையில் அவர் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.
இயக்குநர் ராம் தேவிற்கு நன்றாக நகைச்சுவையாக கதையை சொல்லக்கூடிய ஆற்றல் உண்டு. நான் இந்தப் படத்தில் கெடுமதியாளனாக அதாவது வில்லனாக நடித்திருக்கிறேன். பிற வேடங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் நகைச்சுவையாக இந்த படத்தில் தான் நடித்திருக்கிறேன். இதை மிகவும் ரசித்தேன்.
எந்த ஒரு படமும் கதையும் காலத்தை கடந்து நிற்க முடியாது. ‘ஹரிதாஸ்’ திரைப்படம் வந்த காலகட்டத்தில் ‘பராசக்தி’ வந்து மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனால் எவராலும் காலத்தை கடந்து எந்த ஒரு கதையையும் சொல்ல முடியாது. காலத்திற்கு உட்பட்டு காலகட்டத்தில் நடைபெறும் சம்பவங்களை உள்வாங்கி கதையை சொல்கிறவன் வென்று விடுவான்.
கே பாக்யராஜ் ஒரு சிறந்த கதாசிரியர். காலத்தையும் சமூகத்தையும் உள்வாங்கி அதை கதையாக சொல்கிற ஆற்றல் நமக்கு இருந்து, அதை கலை வடிவத்தில் வெளிப்படுத்தும் போது அவை மிகப்பெரிய வெற்றியை பெறும்.
மகாபாரதங்கள் ஏன் மீண்டும் மீண்டும் எழுதப்படுவதில்லை என்று நான் நினைப்பேன். மகாபாரதத்தில் உள்ள தர்ம புத்திரனை உருவாக்க.. சிறந்த இயக்குநர்கள் போதாது. அதற்கு வலிமை வாய்ந்த வியாசரை போன்ற ஒருவர் தான் வேண்டும்.
மூவாயிரம் ஆண்டுகளாக தர்ம புத்திரனுக்கு நிகராக எந்த ஒரு கதாபாத்திரத்தையும் யாராலும் உருவாக்க முடியவில்லை. வாழ்க்கையிலும் சந்திக்கவில்லை. இதிகாசங்களிலும் சந்திக்கவில்லை.. அவனைப் படைப்பதற்கு அவனை விட ஆற்றல்மிக்க கதை தலைவன் வேண்டும். அதனால் தர்ம புத்திரனை வியாசரை தவிர வேறு யாராலும் படைக்க முடியாது.
நான் படித்த கதைகளிலேயே மிகவும் சிறந்த கதை லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘ரெஸரக்சன்’. டால்ஸ்டாய் காந்திஜிக்கே முன்னோடி. இந்த கதையை நான் பலமுறை வாசித்திருக்கிறேன். இப்படி ஒரு கதை தலைவனை எப்படி ஒரு கதாசிரியரால் உருவாக்க முடியும் என்பதை நான் எண்ணிப் பார்த்தால் … அந்த கதையின் தலைவனே டால்ஸ்டாய் தான்.
நம் காலத்தில் காலத்தின் சரிவை… அரசியலின் இழிவை… வெளிப்படுத்துகின்ற படமாக இந்த படம் அமைந்திருக்கிறது.
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு புடம் போட்ட தலைவர்கள் நாடாளும் தன்மை வேறு. அவர்கள் அரசியல் என்பது அதிகாரம் என்று கருதியவர்கள் இல்லை. அரசியல் என்பது தொண்டு. அரசியல் என்பது தியாகம். அரசியல் என்பது நேர்மை.. என்று ஒரு 30 ஆண்டு காலம் சிறைகளில் கழித்து, வாழ்ந்து நெறிப்படுத்தப்பட்டு பிறகு ஆட்சித் தலைவனாக வருகிறவர்கள்.
அதற்குப் பிறகு கூட இந்த மண்ணில் கொள்கை சார்ந்த இயக்கங்கள் வளர்ந்தன. அந்த கொள்கையோடு ஊறி திளைத்து தலைவர்களாக மேன்மை அடைகிறார்கள். ஆனால் ஒன்றும் இல்லாமல் அதிகாரத்திற்காக…. அதிகாரத்தை சுவைப்பதற்காக … பெருமைக்காக… என்ற நிலை வந்து விட்ட பிறகு, அரசியலில் வீழ்ச்சி ஏற்பட்டே தீரும். அந்த வீழ்ச்சி ஏற்பட்டது . ஆனால் தமிழ் சமுதாயம் முதிர்ச்சி அடைந்த சமுதாயம். ஆகவே இதிலிருந்து மீட்பதற்காகத்தான் ராம்தேவ் போன்றவர்கள் கதை எழுதுகிறார்கள். இது இன்றைய அரசியல் மோசமாக இருக்கிறது என்று சொல்லவில்லை. மோசமாக இருக்கிறது. இதிலிருந்து தமிழ் சமூகம் மீள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கதையை எழுதி இருக்கிறார்கள். இந்த படமும் அப்படித்தான் அமைந்திருக்கிறது.
‘மக்கள் தலைவா ஃபார் சேல்’ என்பது மக்களுக்கு தலைவனாக இருக்கின்றவன் மக்களை வழிநடத்துகின்றவனாக இருக்க வேண்டும். விற்பனைக்கு உரியவனாக இருக்கக் கூடாது என்ற செய்தியை மிகச் சிறப்பாக இயக்குநர் ராம்தேவ் சொல்லி இருக்கிறார். ஆகவே அவரை நான் பாராட்டுகிறேன்.
எனவே கதையின் நாயகன் என்று சொல்வதற்கு ரவி மரியா வெட்கப்பட வேண்டிய தேவையில்லை. இந்த படம் வெற்றி பெற்று விட்டால்… நீங்கள் மிகப்பெரிய கதை தலைவராகி விடுவீர்கள். வெற்றி சார்ந்தது தான் நம்முடைய வாழ்க்கை ” என்றார்.
நடிகை அப்சரா விஜய் பேசுகையில், ” இந்தப் படத்தில் வாய்ப்பு அளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. படப்பிடிப்பு தளத்தில் ரவி மரியா சார் நடிப்பு , நடனம் என பல விசயங்களில் பயனுள்ள குறிப்புகளை வழங்கினார். இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ஆதரவு தர வேண்டும்” என்றார்.
நடிகர் ரவி மரியா பேசுகையில், ” என்னுடைய அன்பிற்காக, நட்பிற்காக இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.
வழக்கமாக நான் அனைத்து படங்களிலும் வில்லனாக நடித்தாலும் காமெடியாக நடித்தாலும் கேரக்டரில் நடித்தாலும் நிறைய பேசுவேன். ஆனால் இந்த படத்தில் கதாநாயகன் என்பதால்.. நிறைய பேசவில்லை. இருந்தாலும் இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
நடிகர் கஞ்சா கருப்பு பேசுகையில், ” தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் தேனியின் மன்னன்.. சினிமாக்காரர்களின் அண்ணன்.. அவருடைய வீட்டிற்கு விருந்தினர்களாக செல்பவர்களுக்கு உணவு உபசரிப்பதுடன் பெரிய அளவிலான திருப்பதி வெங்கடாஜலபதி புகைப்படத்தையும் பரிசாகத் தருவார். இந்தப் பரிசை சித்தப்பா பேரரசு வாங்கினார். அவர் தலைவர் ஆகிவிட்டார். நானும் வாங்கினேன். விரைவில் தலைவராகி விடுவேன். ‘மக்கள் தலைவா’ படத்தில் நானும் நடித்திருக்கிறேன். அதனால் நானும் தலைவனாகி விடுவேன்.
இயக்குநர் ராம்தேவுக்கு தேவை என்றால் அதிகாலை மூன்று மணிக்கு போன் செய்து பேசுவார். ஒருமுறை அதிகாலை 4 மணிக்கு படப்பிடிப்பு .முதல் காட்சி உங்களது தான். வந்து விடுங்கள் என்றார். நானும் நான்கு மணிக்கு அவர் சொன்ன ஒயின்ஷாப்பிற்கு சென்றேன். கதவு மூடி இருந்தது. யாரும் அங்கு இல்லை. அன்று ஒயின்ஷாப் விடுமுறை. கதவை தட்டியதும் உள்ளே இருந்து ஒருவர் எட்டிப் பார்த்தார். அவர் இன்று பிளாக்கில் சரக்கு கிடைக்காது என்றார். அவரிடம் நான் சரக்கு வாங்க வரவில்லை. நடிக்க வந்திருக்கிறேன். இயக்குநர் இங்கு தான் வர சொன்னார் என்றேன். அதன் பிறகு தயாரிப்பு நிர்வாகி போன் செய்து வந்துவிடுகிறேன் என்றார்.
அப்போது அவரிடம் பேரரசு நடிக்கும் போது கடையை திறந்தீர்கள்… நான் நடிக்கும் போது ஏன் கடையை மூடி வைத்திருக்கிறீர்கள்? என கேட்டபோது.. அவர் வந்த போது ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் இருந்தது. இன்னைக்கு ஒரு பாட்டிலுக்கு இருபது ரூபாய் எக்ஸ்ட்ராவாக ஏறி இருக்கிறது. இந்த நியாயத்தை நான் யாரிடம் போய் சொல்வது? என கேட்டார்.
இந்தப் படம் வெளியான பிறகு மது பிரியர்கள் அனைவரும் பேரரசு சித்தப்பா வீட்டிற்கு செல்வார்கள். அங்கு ஒரு கொள்கை ஏற்படும். அதன் பிறகு பாட்டில் விலை குறைக்கப்படும்.
தற்போது 9: 45 கெல்லாம் கடையை மூடி விடுகிறார்கள். நான் இந்த ஆட்சியில் டாஸ்மாக் இரவு 12 மணி வரை திறந்திருக்க வேண்டும். அதேபோல் காலையில் 7:00 மணி அளவில் கடையை திறந்து விட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அங்கங்கே ஒயின் ஷாப் குறைவாக இருக்கிறது. கடைகளை அதிகமாக திறக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ” எந்த பூவின் வாசமும் காற்று எந்த திசையில் வீசுகிறதோ.. அந்த திசையில் தான் பயணிக்கும். ஆனால் ஒரு பூவின் வாசம் மட்டும் காற்றுக்கு எதிர் திசையில் கூட வாசம் வீசும். அது என்னவென்றால் ஒரு மனிதரின் நற்பண்பு. இது ரவி மரியாவிற்கு பொருந்தும். இங்கு பேசிய அனைவரும் ரவி மரியாவின் உதவும் குணத்தையும் , பெருந்தன்மையையும் குறிப்பிட்டனர். இதை கேட்கும் போது சந்தோஷமாக இருந்தது.
நான் அவருடன் அதிகமாக உரையாடியதில்லை. அவர் பார்ப்பதற்கு கரடு முரடானவர் போல் இருந்தாலும்.. அவருடைய பேச்சு முரணாக இருந்தாலும்.. ஆனால் அவருடைய கேரக்டர் இவ்வளவு சிறப்பாக இருக்கிறதைப் பார்க்கும் போது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் அவர் முதன்முதலாக கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அதனால் இந்த நிகழ்ச்சியை அவரே முன்நின்று ஒருங்கிணைத்து வருகிறார்.
நான் இங்கு வந்த பிறகு தான் இந்தப் படத்தில் நாஞ்சில் சம்பத் – பழ கருப்பையா போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன். இவர்களுடைய தமிழை கேட்க மிகவும் விரும்புவேன். எல்லோராலும் இலக்கண சுத்தமாக தமிழில் பேச முடியாது. அதில் அவர்கள் சிறப்பாக பேசக்கூடியவர்கள்.
இந்தப் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்- இசையமைப்பாளர் -நடிகர்கள்- நடிகைகள்- என அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
இங்கு சென்சார் பிரச்சனையை பற்றி பேசினார்கள். என்னுடைய படங்கள் என்றால்.. சென்சாரில் நான்கு பெண்கள் ஒரு ஆண் இருப்பார்கள். ‘மௌன கீதங்கள்’ படத்தில் ஒரு காட்சி இடம் பிடித்திருக்கும். இந்த காட்சியை சென்சார் குழுவில் இருந்த பெண்கள் பிடித்துக் கொண்டனர். இது எப்படி? இது ரெட்டை அர்த்தத்தை குறிப்பிடுகிறது. எப்படி அனுமதிப்பது? என கேள்வி எழுப்பினர். இதில் என்ன இரட்டை அர்த்தம். எனக்கு எதுவும் புரியவில்லை என்று சொன்னேன். அப்போது அவர்களிடம் கணவன் – மனைவி இடையே தானே பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று விளக்கம் அளித்தேன்.
இதனால் சில காட்சிகள் இயல்பாக இருந்தால் அதனை போராடி இடம்பெறச் செய்யலாம். இந்த படத்தில் இயக்குநர் ராம்தேவ் அரசியலை சொல்லி இருக்கிறார். என்னுடைய அரசியல் எல்லாம் குடும்பங்களில் தான் இருக்கும். அதற்காக நான் என்னுடைய படங்களை இயக்கும்போது சென்சார் பற்றி கவலைப்பட்டதில்லை.
இந்த படத்தின் பணிகள் நிறுத்தப்பட்ட போது இதனை தொடர்ந்து தயாரிக்க வேண்டும் என்று நினைத்து உதவிய தயாரிப்பாளர் கவிதாலயா சரவணனை பாராட்டுகிறேன்.
இந்த படம் இந்த நேரத்தில் அரசியல் நையாண்டியுடன் வந்தால் எதிர்பார்ப்பு கூடுதலாக தான் இருக்கும். சிரித்துக் கொண்டே காமெடியாக சொல்லும்போது ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்” என்றார்.
தமிழ் சினிமாவின் பொற்காலம் முதல் நவீன காலம் வரை வெற்றியின் முத்திரையை பதித்து வரும் பெருமைமிக்க தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான “சீயான் 63” படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம், தற்போது படப்பிடிப்பு கட்டத்திற்குள் நுழைந்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது.
சீயான் விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். முன்னதாக “இருமுகன்” திரைப்படத்தின் மூலம் வெற்றிகரமான கூட்டணியை வழங்கிய விக்ரம் – ஆனந்த் சங்கர் இணைவு, சுமார் ஒரு தசாப்தத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ள நிலையில், இதற்காக விரிவான முன்தயாரிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
“சீயான் 63” அனைவரும் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி திரில்லர் ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ளது. விக்ரமின் வழக்கமான மாஸ் அம்சங்களுடன், குடும்ப பார்வையாளர்களையும் கவரும் வகையிலான உணர்வுப்பூர்வமான கதை, பரபரப்பான திரில்லர் திரைக்கதை மற்றும் அதிரடியான ஆக்சன் காட்சிகள் இணைந்த முழுமையான விருந்தாக இந்த படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் எம். எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ், சுபாஷ் செல்வம் மற்றும் விஷ்ணு ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இணைந்திருப்பதும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. அவரது இசை, படத்தின் உணர்ச்சி மற்றும் திரில்லர் அம்சங்களை மேலும் உயர்த்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தொழில்நுட்பக் குழுவிலும் பல முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஆர்.டி. ராஜசேகர் ISC, தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன், வசன எழுத்தாளராக ஷான் கருப்புசாமி, சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, நடன அமைப்பாளராக பிருந்தா, படத்தொகுப்பாளராக ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, கலை இயக்குநராக சூர்யா ராஜீவன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி, விளம்பர வடிவமைப்பாளராக கோபி பிரசன்னா மற்றும் ஸ்டில்ஸ் புகைப்படக் கலைஞராக தேனி முருகன் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
விக்ரமின் தனித்துவமான திரைப்பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக உருவாகும் “சீயான் 63”, வலுவான கூட்டணி, தரமான தொழில்நுட்பக் குழு, பெரிய தயாரிப்பு மதிப்பு மற்றும் அனைவரையும் கவரும் ஃபேமிலி திரில்லர் ஆக்சன் கதை ஆகியவற்றால் தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
அறிவிப்பின் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய “சீயான் 63”, தற்போது படப்பிடிப்பு தொடக்கத்துடன் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ள நிலையில், விக்ரம் ரசிகர்களும் திரையுலக வட்டாரங்களும் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
ஒரே நாளில் இரண்டு ஜானர்கள்… இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய சாம் CS!
ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி. அந்த வகையில், ஒவ்வொரு படத்திற்கும் அதன் தன்மைக்கு ஏற்ற இசையை வழங்கி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளவர் இசையமைப்பாளர் சாம் CS.
நேற்று வெளியாகியுள்ள இரண்டு வித்தியாசமான திரைப்படங்களான “ஹபிபீ” மற்றும் “டபுள் ஆக்குபன்ஸி” படங்கள், சாம் CS-ன் இசை திறனின் இரண்டு வெவ்வேறு முகங்களை வெளிப்படுத்தியுள்ளன.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள “ஹபிபீ”, மனித உணர்வுகள், வலி, நம்பிக்கை மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை பேசும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை இன்னும் ஆழமாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், மனதை வருடும் இசையையும் உணர்வுப்பூர்வமான பின்னணி இசையையும் சாம் CS வழங்கியுள்ளார். காட்சிகள் முடிந்த பிறகும் அதன் தாக்கம் மனதில் நீடிக்க காரணமாக அவரது இசை அமைகிறது.
அதே நேரத்தில், முற்றிலும் மாறுபட்ட உலகத்தை கொண்ட “டபுள் ஆக்குபன்ஸி”, ஃபேண்டஸி மற்றும் நவீன பொழுதுபோக்கு அம்சங்களை இணைத்து இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு தேவையான நவீன இசை பாணி, துடிப்பான சவுண்ட் மற்றும் புதிய தலைமுறை ரசிகர்களை ஈர்க்கும் இசை மொழியை சாம் CS திறமையாக உருவாக்கியுள்ளார். படத்தின் கற்பனை உலகத்திற்கு ஏற்ற இசை அனுபவத்தை அவர் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் வெளியான இரண்டு படங்களின் ஜானர், உணர்வு, கதை சொல்லும் முறை என அனைத்தும் முற்றிலும் வேறுபட்டவை. அந்த இரண்டு உலகங்களுக்கும் ஏற்ற இசையை உருவாக்கி, ஒரு இசையமைப்பாளராக தனது பல்துறை திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார் சாம் CS.
சமீப காலங்களில் பின்னணி இசை மட்டுமல்லாமல், பாடல்களிலும் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் சாம் CS, ஒவ்வொரு படைப்பிலும் புதிய இசை அனுபவத்தை வழங்கி வருகிறார். கதையின் தேவையை புரிந்து அதற்கேற்ப தனது இசை மொழியை மாற்றிக்கொள்ளும் திறமையே அவரை இன்றைய இந்திய சினிமாவின் மிகவும் தேடப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.
தனித்துவமான இசை மற்றும் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் மெலடிகள் மூலம் தமிழ் மட்டுமல்லாது இந்தியாவின் பல மொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பாலிவுட் தொடங்கி பல மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் தற்போது அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
அதில் முக்கியமாக புஷ்கர் காயத்திரி இயக்கும் அடுத்த திரைப்படம், ரவிமோகனின் “கராத்தே பாபு”, கார்த்தியின் “சர்தார் 2” படங்களில் பணியாற்றி வருகிறார். மேலும் இயக்குநர் H. வினோத் மற்றும் நடிகர் தனுஷுடன் பணியாற்றவுள்ளார். மேலும் பாலிவுட், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பல புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாளப் படங்களுக்கு இணையாக போட்டி போடும் க்ரைம் த்ரில்லர் ‘தி டார்க் ஹெவன் ‘
மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பின்னணியில் உருவாகியிருக்கும் பரபரப்பான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் மர்மமான தொடர் கொலைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.
மக்களிடம் மரபு வழியாகப் பரவிச் செல்வாக்கு பெற்ற தொன்மம் சார்ந்த கதைகளுக்கு தனி நிறமுண்டு. அவை காலம் கடந்தும் மக்களிடம் பரவலாகப் பேசப்படுவதுண்டு.அவ்வகையில் சமூகத்தில் நிலவும் ஒரு நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக ‘தி டார்க் ஹெவன்’ உருவாகியுள்ளது. இந்தப் படம் ஒரு மலைக் கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை வருகிற ஜூன் மாதங்களில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு போலீஸ்காரரைப் பற்றியது.
இப்படம் பற்றி இயக்குநர் பாலாஜி பேசும் போது,
“தமிழ் ரசிகர்கள் எப்போதும் க்ரைம் த்ரில்லர் படங்களை வெகுவாக ரசிப்பார்கள் .அதிலும் குறிப்பாக வித்தியாசமான கதைகள் கொண்ட படங்களை எப்போதும் வரவேற்று ஆதரிப்பார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கும் எண்ணத்திற்கு ஏற்ப உருவாகி இருக்கிறது இந்த ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம்.
இந்தப் படத்தின் கதை எப்படிப்பட்டதாக இருக்கும் ?
ஒரு புறம் தொடர் கொலைகள் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் போலீசாருக்கு நடந்த கொலைகளில் எந்த தடயங்களும் கிடைக்கவில்லை, இப்படி இருக்கும் போது அந்த ஊருக்கு புதிதாக வந்த இன்ஸ்பெக்டர் பாரி தன் விசாரணையை தொடங்குகிறார், அவர் கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்தாரா என்பதை மையாமாக கொண்டது இந்த தி டார்க் ஹெவன் திரைப்படம். இந்தப் படத்திற்குப் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதை நேர்த்தியாக அமைந்து படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது.
இப்படத்தின் கதாநாயகனாக ‘ராஜா ராணி ‘தொடரின் மூலம் புகழ்பெற்ற சித்து சித் நடித்துள்ளார்.பிக்பாஸ் புகழ் தர்ஷிகா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ரித்விகா, நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, ஜெயகுமார் ஜானகிராமன், அருள் சங்கர், பிரதீப், அலெக்ஸ், டேனி தயாள் போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள். இதுவரை நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்து வந்த சாப்ளின் பாலு இதில் புதுவிதமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.அந்த வகையில் அவருக்கு இது மறுபிரவேசமாக இருக்கும்.
தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று எடுத்துக் கொண்டால் எனது முதல் படத்தில் பணியாற்றிய மணிகண்டன் பிகே இதிலும் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்திருக்கிறார். அதே போல் எடிட்டிங் ராஜா ஆறுமுகம் செய்துள்ளார்.இசையமைப்பாளராக ‘ஜாக்கி’ படத்தில் பணியாற்றிய சக்தி பாலாஜி பணிபுரிந்துள்ளார்.இவர்கள் அனைவரும் என் நண்பர்கள் .தங்கள் திறமையைக் காட்டி உழைத்துள்ளார்கள்.
இதன் படப்பிடிப்பு வண்டிப்பெரியார், அச்சன் கோவில், தென்மலை, ஏற்காடு, பத்துகாணி, தென்காசி மற்றும் முக்கூடல் போன்ற சவால் நிறைந்த மலை சார்ந்த பகுதிகளில் படமாக்கப்பட்டு படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது.டப்பிங் வேலைகள், இறுதிக்கட்ட மெருகேற்றும் பணிகள் நிறைவடைந்து தணிக்கைக்காகச் சென்றுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஜூன் மாதம் 25ஆம் தேதி நடைபெற உள்ளது.
சமீபமாக கொண்டாடப்படும் மலையாள க்ரைம் திரில்லர் படங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ஜூலை மாதம் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ” இவ்வாறு இயக்குநர் பாலாஜி கூறினார்.
பிரைம் வீடியோ, ஜூன் 18 முதல் உலகளாவிய அளவில் “திரிஷ்யம் 3” திரைப்படத்தின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் வெளியீட்டை அறிவித்துள்ளது.
ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள இந்த திரில்லர்-டிராமா திரைப்படம், PEN Studios மற்றும் Panorama Studios வழங்க, ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் Aashirvad Cinemas நிறுவனம் மூலம் உருவாகியுள்ளது. மோகன்லால், மீனா மற்றும் சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த கால தவறுகள் மீண்டும் உயிர்ப்பெற்று ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் சூழலில், தனது குடும்பத்தை காப்பாற்றும் பாதுகாவலனாக ஜார்ஜ்குட்டி மீண்டும் களமிறங்குகிறார்.
இந்தியாவிலும் உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள், த்ரிஷ்யம் 3 திரைப்படத்தை மலையாளம், மேலும் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் டப் செய்யப்பட்ட பதிப்புகளுடன், ஜூன் 18 முதல் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக காணலாம்.
இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, இந்திய சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் திரில்லர்-டிராமா திரைப்படத் தொடர்களில் ஒன்றான த்ரிஷ்யம் திரைப்படத் தொடரின் அடுத்த அத்தியாயமான “திரிஷ்யம் 3” திரைப்படத்தின் உலகளாவிய பிரத்யேக ஸ்ட்ரீமிங் வெளியீட்டை இன்று அறிவித்துள்ளது.
தனித்துவமான திரைக்கதை, எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் விறுவிறுப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்துள்ள இந்தத் திரைப்படத் தொடர், மொழிகளையும் எல்லைகளையும் தாண்டி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள இப்படம், Pen Studios மற்றும் Panorama Studios வழங்க, ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் Aashirvad Cinemas மூலம் உருவாகியுள்ளது.
மோகன்லால், மீனா மற்றும் சித்திக் மீண்டும் இணைந்து நடித்துள்ள இந்தப் படம், ஜார்ஜ்குட்டி மற்றும் அவரது குடும்பத்தின் வாழ்க்கைக்குள் பார்வையாளர்களை மீண்டும் அழைத்துச் செல்கிறது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பிறகு, திரிஷ்யம் 3 ஜூன் 18 முதல் பிரைம் வீடியோவில் மலையாளம் மற்றும் தமிழ், தெலுங்கு, கன்னட டப்பிங் பதிப்புகளுடன் உலகம் முழுவதும் வெளியாகிறது.
திரிஷ்யம் 2 சம்பவங்களுக்குப் பிறகு, ஜார்ஜ்குட்டி தனது குடும்பத்திற்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கியுள்ளார். தனது கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு வெற்றிகரமான திரைப்படத்தையும் உருவாக்கியுள்ளார். ஆனால் கடந்த காலம் புதைக்கப்பட்ட இடத்திலேயே நிலைத்திருக்க மறுக்கிறது.
அந்தத் திரைப்படத்தின் உண்மைக் கதையை ஆராயத் தொடங்கும் இரு பத்திரிகையாளர்கள் மற்றும் அவரது மகள் அஞ்சுவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருமண முயற்சி, உயிருக்கு ஆபத்தான சதியாக மாறும்போது, ஜார்ஜ்குட்டி தனது வாழ்க்கையின் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் ஆபத்தான போராட்டத்தில் சிக்கிக்கொள்கிறார்.
பழைய எதிரிகள் புதிய நோக்கத்துடன் மீண்டும் வர, பயம், குற்றவுணர்வு மற்றும் சந்தேகங்கள் அவரைச் சூழ்ந்துகொள்ளும் சூழலில், தனது குடும்பத்தையும் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் ரகசியங்களையும் காப்பாற்ற ஜார்ஜ்குட்டி மீண்டும் தனது புத்திக்கூர்மையை நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
பிரைம் வீடியோ இந்தியாவின் Content Licensing பிரிவின் இயக்குநரும் தலைவருமான மனீஷ் மெங்கானி கூறுகையில்..,
“இந்திய சினிமாவில் திரிஷ்யம் போன்ற சாதனையை நிகழ்த்திய திரைப்படத் தொடர்கள் மிகக் குறைவு. ஒரு தசாப்தத்திற்கு முன்பு மலையாளத்தில் தொடங்கிய இந்தக் கதை, இன்று மொழிகளையும் நாடுகளையும் தாண்டி கொண்டாடப்படுகிறது. ஜீத்து ஜோசப்பும் மோகன்லாலும் இணைந்து உருவாக்கிய இந்த மூன்று திரைப்படங்கள், நீடித்த கதை சொல்லலின் சிறந்த உதாரணமாகும். ஜார்ஜ்குட்டி இனி ஒரு கதாபாத்திரம் மட்டுமல்ல; இந்திய சினிமாவின் கூட்டு நினைவின் ஒரு பகுதியாக மாறியுள்ளார். இந்தியாவின் மிக வெற்றிகரமான திரைப்படத் தொடர்களில் ஒன்றான திரிஷ்யம் 3-ஐ உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமை கொள்கிறோம்,” என்றார்.
இயக்குநர் ஜீத்து ஜோசப் கூறுகையில்..,
“திரிஷ்யம் 3 மூலம் கதையைத் தொடர்வது மட்டுமல்ல, ஜார்ஜ்குட்டியின் மனநிலையை இன்னும் ஆழமாக ஆராய வேண்டும் என்பதே என் நோக்கம். குடும்பத்தை காப்பாற்ற எடுத்த முடிவுகளால் உருவான மனிதராக அவர் இருக்கிறார். ஆனால் அவரது மனதின் ஆழத்தில், பயம், நிச்சயமின்மை மற்றும் கடந்த காலத்தின் சுமையுடன் வாழும் ஒரு தந்தை இருக்கிறார். இந்த அத்தியாயம் அந்த மன அழுத்தங்களின் தாக்கத்தை ஆராய்கிறது. அதனால் இது இந்தத் தொடரில் மிகவும் நெருக்கமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான படைப்பாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இதை பிரைம் வீடியோவில் காணப்போகிறார்கள் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.
நடிகர் மோகன்லால் கூறுகையில்..,
“ஜார்ஜ்குட்டி என்ற கதாபாத்திரம் பல ஆண்டுகளாக ரசிகர்களுடன் பயணித்து வருகிறது. அவர்கள் அளித்த அன்பை நான் மிகவும் மதிக்கிறேன். திரிஷ்யம் ரசிகர்களுக்கு பிடிக்க காரணம், அதன் மர்மக் கதையைத் தாண்டி குடும்பம், அன்பு மற்றும் உயிர்வாழ்தல் பற்றிய மனிதநேயமான கதையாக இருப்பதுதான். ஜார்ஜ்குட்டிக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. திரிஷ்யம் 3 இப்போது உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை சென்றடைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.
ஜூன் 18 முதல் “திரிஷ்யம் 3” திரைப்படத்தை ப்ரைம் வீடியோவில் கண்டுகளியுங்கள்.