பல்வேறு வெற்றி படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, ‘அநீதி’, ‘வாழை’, உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்துள்ள ஜே எஸ் கே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள ‘ஃபயர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம் புலி, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பத்மன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தால் உந்தப்பட்ட விறுவிறுப்பான திரில்லர் ஆகும்.
ஜே எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் பேனரில் தயாராகும் ‘ஃபயர்’ திரைப்படத்திற்கு டி கே (அறிமுகம்) இசையமைத்துள்ளார். சதீஷ் ஜி பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநரும் பிரபல வசனகர்த்தாவுமான எஸ் கே ஜீவா வசனங்களை எழுதியுள்ளார். படத்தொகுப்பை சி எஸ் பிரேம் குமாரும் கலை இயக்கத்தை தேவராஜும் கையாள, பாடல்வரிகளை ‘கே ஜி எஃப்’ புகழ் மதுரகவி இயற்றியுள்ளார், மானஸ் நடனம் அமைத்துள்ளார்.
இசை வெளியீட்டு விழா முக்கிய அம்சங்கள் வருமாறு:
வசனகர்த்தா எஸ் கே ஜீவா பேசியதாவது…
“‘அநீதி’ படத்திற்கு நான் எழுதிய வசனங்களை பார்த்து பாராட்டிய ஜே எஸ் கே அவர்கள் ‘ஃபயர்’ திரைப்படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பை வழங்கினார். நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என்று அறியப்பட்டவர் இயக்குநராகவும் இப்படத்தில் தனது திறமையை நிரூபித்துள்ளார். இப்படத்தை இயக்கியது மட்டுமில்லாமல் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் அவர் சிறப்பாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் பணிபுரிந்துள்ள நடிகர், நடிகைகள் மற்றும் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், பாடல் ஆசிரியர், நடன அமைப்பாளர் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளனர் இப்படிப்பட்ட ஒரு கதையை திரையில் செல்வதற்கு தைரியம் வேண்டும், அது ஜே எஸ் கே அவர்களிடம் உள்ளது அவருக்கும் படக்குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.”
கவிஞர் மதுரகவி பேசுகையில்…
“ஒரு இயக்குநராக தனக்கு என்ன தேவை என்பதை வாங்குவதில் ஜே எஸ் கே அவர்கள் கெட்டிக்காரர். இந்த படம் விளிம்பு நிலை மாந்தர்களுக்கான விழிப்புணர்வு படம். இப்படத்திற்கு ஃபயர் என்று ஜே எஸ் கே சார் பெயர் வைத்திருக்கிறார். உண்மையில் அவர் ஒரு பன்முக ஃபயர். பல திறமைகளை தன்னகத்தே கொண்டவர். இப்படம் சிறப்பாக உருவாகி உள்ளது. நன்றி.”
இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…
“தயாரிப்பாளராக இருந்து இயக்குநராக ஆகி இருக்கும் ஜே எஸ் கே-க்கு இயக்குநர்கள் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகள். ஃபயர் படத்தின் முன்னோட்டம் பெயருக்கேற்றார் போல ஃபயர் ஆக உள்ளது. அடுத்தது என்ன என்று ஆவலை தூண்டுகிறது. தேசிய விருதுகள் வென்ற படங்களின் தயாரிப்பாளர் இயக்கியுள்ள முதல் படமும் தேசிய விருது பெறும் என நம்புகிறேன். இதில் பணியாற்றிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.”
கவிஞர் ரா பேசியதாவது…
“பாடலாசிரியராக இது என்னுடைய முதல் மேடை. என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்த ஜே எஸ் கே அவர்களுக்கு மிக்க நன்றி. இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும் என நம்புகிறேன்.”
நடன இயக்குநர் மானஸ் பேசியதாவது…
“இயக்குநர் ஜே எஸ் கே இப்படத்தில் எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். நடிகர்கள் பாலாஜியும் காயத்ரியும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். ஒரே இரவில் முழு பாடலையும் எடுத்து முடித்தோம். ஆதரவளித்த ஒட்டு மொத்த படக்குழுவினருக்கும் நன்றி.”
ஒளிப்பதிவாளர் சதீஷ் ஜி பாபு பேசியதாவது…
“சிவா சார் மூலம் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது அவருக்கு நன்றி. ஏனென்றால் அவர் மூலம் தான் ஜே எஸ் கே சாரின் அறிமுகம் கிடைத்தது. ஒரு ஒளிப்பதிவாளராக அவரை திருப்திப்படுத்தி உள்ளேன் என்று நினைக்கிறேன். படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி.”
படத்தொகுப்பாளர் சி எஸ் பிரேம்குமார் பேசியதாவது…
“குற்றம் கடிதல் இயக்குநர் பிரம்மா சாருக்கு நன்றி சொல்லி என் உரையை தொடங்குகிறேன். என்றால் அவர் மூலமாகத்தான் ஜே எஸ் கே சார் எனக்கு பழக்கம். எட்டு வருடங்களுக்குப் பின்னரும் என்னை நினைவு வைத்து இப்படத்தில் பணியாற்ற அழைத்தார். ஒரு குழுவாக இணைந்து இப்படத்தை உருவாக்கி உள்ளோம். அனைவரும் ஆதரவு தாருங்கள்.”
நடிகை அனு பேசியதாவது…
“இது எனக்கு முதல் படம், முதல் மேடை. எஸ் கே ஜீவா சார் மூலம் தான் ஜே எஸ் கே அவர்கள் அறிமுகமானார். ஃபயர் திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தை செய்துள்ளேன், ஆனால் அது படம் முழுக்க வரும். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த ஜே எஸ் கே சாருக்கு நன்றி.”
இசையமைப்பாளர் டி கே பேசியதாவது…
“எனக்கு வாய்ப்பளித்த ஜே எஸ் கே சாருக்கு நன்றி. வாய்ப்பளித்தார் என்பதை விட நிறைய கற்றுத் தந்தார் என்று சொல்லலாம். குறிப்பாக ரீ ரெக்கார்டிங்கில் நிறைய நுணுக்கங்களை அவரிடம் இருந்து அறிந்து கொண்டேன். படத்தில் நான் இசையமைத்த ஒரு பாடல் ஆரம்பத்திலேயே அவரது மிகவும் பிடித்திருந்தது. இன்னொரு பாடலுக்கு நிறைய மெனக்கெட்டு அவரை திருப்திப்படுத்த வேண்டி இருந்தது. ஃபயர் படத்தில் பணியாற்றியது ஒரு மிகச்சிறந்த அனுபவம், நன்றி.”
நடிகை சாந்தினி தமிழரசன் பேசியதாவது…
“இப்படத்தில் துர்கா என்ற வேடத்தில் நான் நடித்துள்ளேன். பெண்களுக்கு மிகவும் தேவையான ஒரு கருத்தை தாங்கி வரும் படம்தான் ஃபயர். அனைவரும் இப்படத்தை திரையரங்கத்தில் பார்த்து ஆதரவு தர வேண்டும்.”
நடிகை காயத்ரி ஷான் பேசியதாவது…
“சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும் இது எனது முதல் மேடை. அதற்காக ஜே எஸ் கே சாருக்கு நன்றி. முதலில் கதை கேட்கும் போது பயமாக இருந்தது. ஆனால் முழுவதும் கேட்டு முடித்ததும் மிகவும் பிடித்து இப்படத்தை உடனே ஒப்புக் கொண்டேன். பெண்களை ஏமாற்றும் ஆண்களுக்கும் ஆண்களை ஏமாற்றும் பெண்களுக்கும் இப்படம் ஒரு பாடமாக இருக்கும்.”
நடிகை சாக்ஷி அகர்வால் பேசியதாவது…
“இந்த படம் ஒரு துணிச்சலான முயற்சி. இன்றைய சமுதாயத்திற்கு மிகவும் அவசியமான கருத்தை இது சொல்கிறது. அதே சமயம் இளைஞர்கள் ரசிக்கும் வகையில் இப்படம் அமைந்துள்ளது இந்த கருவை கையில் எடுத்ததற்காக ஜே எஸ் கே அவர்களுக்கு நன்றி. அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள்.”
நடிகர் பாலாஜி முருகதாஸ் பேசியதாவது…
“இது கிட்டத்தட்ட எனக்கு முதல் படம் மாதிரி தான். களி மண்ணுக்கு மதிப்பில்லை. ஆனால் அதை பானையாகவோ பொம்மையாகவோ செய்தால் அதன் மதிப்பே வேறு. அது போல் என்னை இப்படத்தில் இயக்குநர் ஜே எஸ் கே மற்றும் இதர குழுவினர் செதுக்கி உள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.”
தயாரிப்பாளர் டி சிவா பேசியதாவது…
“நினைத்ததை முடிப்பதில் ஜே எஸ் கே வல்லவர். துணிச்சல் மிகுந்தவர், தன்னம்பிக்கை மிக்கவர், ஆளுமை உள்ளவர், அன்பானவர். அவர் இயக்கிய முதல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பது மிக்க மகிழ்ச்சி. பாடல்களும் முன்னோட்டமும் மிகவும் அருமையாக உள்ளன. இந்த படம் மாபெரும் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி பேசியதாவது…
“திட்டமிடலுக்கு பெயர் பெற்றவர் ஜே எஸ் கே. என் தந்தையாருக்கு பிறகு இன்றைய காலகட்டத்தில் திட்டமிட்ட பட்ஜெட்டில் திட்டமிட்டவாறு படமெடுக்க முடியும் என்று ஜே எஸ் கே நிரூபித்துள்ளார். இந்த படத்தை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். ஃபயர் திரைப்படம் கட்டாயம் வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்த மாற்று கருதும் இல்லை.”
நடிகர்-இயக்குநர் பாண்டியராஜன் பேசியதாவது…
ஜே எஸ் கே எப்போதும் ஆச்சரியப் படுத்திக்கொண்டே இருப்பார். சினிமாவில் அவர் தொடாத இடமே இல்லை. திரைப்படங்களை விநியோகித்தார், தயாரித்தார். பின்னர் நடிக்க ஆரம்பித்தார், இப்போது இயக்குநராக உருவெடுத்துள்ளார். அவரது இந்த புதிய முயற்சி மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.
ஃபயர் திரைப்படத்தின் இயக்குநர் ஜே எஸ் கே பேசியதாவது…
“என் மீது அன்பு கொண்டு இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம், நன்றி. இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இப்படம் உருவாக தங்கள் சிறப்பான பங்களிப்பை அளித்த எங்கள் குழுவினர் ஒவ்வொருவருக்கும் நன்றி. பொதுவாக திரைப்பட நிகழ்ச்சிகளில் உதவி இயக்குநர்களுக்கு பேச வாய்ப்பு கிடைக்காது. ஆகையால் எனது உதவி இயக்குநர்களை ஒரு சில வார்த்தைகள் பேச அன்புடன் மேடைக்கு அழைக்கிறேன். இந்த படத்தை இது வரை பார்த்த அனைவரும் பெரிதும் பாராட்டி உள்ளனர். ஃபயர் அனைவருக்கும் புடிக்கும். வந்திருக்கும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மிக்க நன்றி.
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான “பிரதர்” திரைப்படம், குறுகிய காலத்தில், 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது.
தமிழின் முன்னணி நட்சத்திரம் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில், கலக்கலான காமெடி, பொழுது போக்கு திரைப்படமாக ZEE5 இல் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி பிரதர் திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களிடம், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ZEE5 இல் வெளியான வேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
கமர்ஷியல் காமெடி படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ராஜேஷ் இயக்கியுள்ள ‘பிரதர்’ திரைப்படத்தில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நடராஜன், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்கா, தம்பி பாசத்தை மையமாக வைத்து, குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவான இப்படம், தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களை மிகவும் கவர்ந்த இப்படம் தற்போது ZEE5 தளத்தில் நவம்பர் 29 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது.
காதல், பாசம், சென்டிமென்ட் கலந்து வெளியான பிரதர் திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இவரது இசையில் அமைந்த மக்காமிசி பாடல் பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்தது. இயக்குநர் ராஜேஷ் தனக்கே உரிய பாணியில், கலக்கலான காமெடியுடன் குடும்பங்கள் ரசிக்கும்படி, இப்படத்தை இயக்கியுள்ளார்.
திரையில் கொண்டாடப்பட்ட இப்படம் ZEE5 டிஜிட்டல் வெளியீட்டிலும் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
ZEE5 தளம் தொடர்ந்து பல சிறப்பான சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்களை ரசிகர்களுக்கென பிரத்தியேகமாக வழங்கி வருகிறது. இத்தளத்தில் சமீபத்தில் வெளியான “ஐந்தாம் வேதம்” சீரிஸ் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. தற்போது “பிரதர்” படமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர்
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்-மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம்பெறும் காட்சிகள் ரசனையுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
பழம்பெரும் நடிகர் நந்தமுரி தாரக ராம ராவின் பேரனும், நடிகரும் அரசியல்வாதியுமான நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மகனுமான நந்தமுரி மோக்ஷக்யா, தனது சமீபத்திய பிளாக்பஸ்டர் ஹனுமான் மூலம் அறியப்பட்ட கிரியேட்டிவ் ஜெம் பிரசாந்த் வர்மா இயக்கும், ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தில் அறிமுகமாகிறார். மோக்ஷக்யாவின் முதல் படம் பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் (PVCU) ஒரு பகுதியாக இருக்கும்.
மோக்ஷக்யா இப்படத்திற்காக நடிப்பு, சண்டை மற்றும் நடனம் ஆகியவற்றில் விரிவான பயிற்சியைப் பெற்று வருகிறார், இந்நிலையில் மோக்ஷக்யா, ஸ்டைலான தோற்றத்தில் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருக்கும் புதிய ஸ்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டைலான செக்கர்ஸ் சட்டை அணிந்து, நீண்ட, கச்சிதமாக ஸ்டைல் செய்யப்பட்ட முடி மற்றும் தாடியுடன், அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். அவரது நேர்த்தியான தோற்றம் அவர் தெலுங்குத் திரையுலகில் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக வலம் வருவார் என்பதைக் காட்டுகிறது.
மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை எஸ்.எல்.வி சினிமாஸின் சுதாகர் செருகூரி, லெஜண்ட் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார், M தேஜேஸ்வினி நந்தமுரி இப்படத்தை வழங்குகிறார். மோக்ஷக்யாவின் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்ட இப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பழங்கால புராண இதிகாசத்தின் அடிப்படையில் உருவாகும் இப்படம், தற்போது முன் தயாரிப்பு பணிகளின் இறுதிக் கட்டத்தில் உள்ளது.
இந்த பிரம்மாண்ட திரைப்படத்தின் மற்ற விவரங்களை தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்.
நடிகர்கள்: நந்தமுரி மோக்ஷக்யா
தொழில்நுட்பக் குழு: எழுத்து, இயக்கம் : பிரசாந்த் வர்மா தயாரிப்பாளர்: சுதாகர் செருக்குரி பேனர்: SLV சினிமாஸ், லெஜண்ட் புரொடக்ஷன்ஸ் வழங்குபவர்: M தேஜஸ்வினி நந்தமுரி மக்கள் தொடர்பு : யுவராஜ்
தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நம்பிக்கைகுரிய நட்சத்திர நடிகரான ரியோ ராஜ் காதல் நாயகனாக நடித்திருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமான்டிக் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் திரையில் லவ் மேஜிக் நிகழ்த்தும் இளம் காதலர்களான ரியோ ராஜ் – கோபிகா ரமேஷ் ஆகியோரின் இளமை துள்ளலான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
ஃபர்ஸ்ட் லுக்கைத் தொடர்ந்து படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ‘மாடர்ன் மாஸ்ட்ரோ’ யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் 183வது இசை ஆல்பம் ‘ஸ்வீட் ஹார்ட்’ என்பதால்.. இப்படத்தின் பாடலுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநரும், முன்னணி நடிகருமான ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டனர்.
அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சொர்க்கவாசல்’ படத்தில் ஆர். ஜே. பாலாஜி, இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், நடிகை சானியா ஐயப்பன், ஷஃரப் உதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன், எழுத்தாளர் ஷோபா சக்தி, மௌரிஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கிறார். சர்வைவல் க்ரைம் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கின்றன. உலகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். ஆர். பிரபு மற்றும் எஸ். ஆர். பிரகாஷ் பாபு இணைந்து வழங்குகிறார்கள்.
வரும் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தினை உலகம் முழுவதும் வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எஸ். ஆர். பிரபு , திங்க் ஸ்டுடியோஸ் சந்தோஷ், படத்தின் நாயகன் ஆர். ஜே. பாலாஜி, நாயகி சானியா ஐயப்பன், நடிகர் ஹக்கீம் ஷா, இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத், ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சன், கதாசிரியர்கள் தமிழ் பிரபா மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன் ஆகியோருடன் இதர படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
முன்னோட்டத்தை வெளியிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். முதலில் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். முன்னோட்டம் மிகவும் மனதிற்கு நெருக்கமானதாக இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் சில காட்சிகளை பார்த்திருக்கிறேன். அப்போது ‘ஆர்.ஜே பாலாஜி எனும் நடிகர் வருகை தருகிறார்’ என குறிப்பிட்டேன். படத்தை வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தப் படம் வெளியான பிறகு தான் என்னுடைய ‘கைதி 2’ படத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா, இல்லையா என்பது தெரியவரும் . ஏனெனில் படத்தின் முன்னோட்டம் உணர்வுப்பூர்வமானதாகவும், மனதிற்கு நெருக்கமானதாகவும் இருந்தது,” என்றார்.
இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், “சொர்க்கவாசல் படத்தின் தயாரிப்பாளர்களான சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி சிங் எங்கள் குழுவுடன் பதினோரு ஆண்டுகளாக பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு திரைப்படம் தயாரிப்பதில் பெரு விருப்பம் உண்டு. அந்த வகையில் அவர்களுடைய ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸின் முதல் திரைப்படமாக சொர்க்கவாசலை தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் எனக்கு நெருக்கமான நண்பர்கள் தான். ஒளிப்பதிவு செய்திருக்கும் பிரின்ஸ் ஆண்டர்சன் மும்பையில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரனின் மகனான சாண்டோவின் உதவியாளர். அவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகும் படம் இது. அற்புதமாக பணியாற்றியிருக்கிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது, அதற்காக மனதார வாழ்த்துகிறேன். எங்களுடைய குழுவில் ஒலி கலவை பொறுப்பினை பத்தாண்டுகளாக சிறப்பாக செய்து வரும் கலைஞர் வினய் ஸ்ரீதர் இதில் பணியாற்றி இருக்கிறார். இந்தப் படத்தின் தயாரிப்பில் இணைந்திருக்கும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும் நன்றி. திரைப்படத்தை வெளியிடும் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் அவரர்களுடைய அனுபவத்தால் இந்த படத்தை உலகம் முழுவதும் சிறப்பாக வழங்குவார்கள். இதற்காக அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் பள்ளியில் எனக்கு இரண்டு வருட ஜூனியர். அந்தத் தருணத்தில் அவருக்கு சினிமாவில் ஆர்வம் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. அதன் பிறகு ஒரு நாள் என்னை சந்தித்து திரைப்பட இயக்குநராக வேண்டும் என தெரிவித்தார். அதன் பிறகு ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, மூன்று திரைப்படங்களில் பணியாற்றி ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்தப் படத்தின் கதையை முழுவதுமாக விவரித்துவிட்டு, யார் நாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என என்னிடம் கேட்டார். நான் அப்போது இதற்கு என்னுடைய நண்பரான ஆர். ஜே. பாலாஜி தான் பொருத்தமானவராக இருப்பார் என்று மனதில் பட்டதை உடனே சொன்னேன். இந்த படத்தினை பார்த்து விட்டேன், என்னுடைய நண்பர்கள் அனைவரும் இணைந்து ஒரு தரமான படைப்பை உருவாக்கி இருக்கிறார்கள் என்று மகிழ்ந்தேன். நான் இசையமைப்பாளராக வாழ்க்கையை தொடங்கும் போது ஆர். ஜே. பாலாஜி பண்பலை வானொலியில் தொகுப்பாளராக புகழ்பெற்று இருந்தார். அப்போது அவருடன் பேசுவது எங்களுக்கெல்லாம் பெருமிதமாக இருக்கும். ஆர் ஜே வாக கலை உலக பயணத்தை தொடங்கி இன்று நடிகராக உயர்ந்திருக்கிறார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் கமர்ஷியலாக வெற்றி பெற்று இருக்கின்றன. அவர் நடிக்கும் படங்களுக்காக கடினமாக உழைப்பார். காமெடியனாக நடித்திருக்கிறார், கமர்ஷியலாக நடித்திருக்கிறார், ஆனால் இந்த திரைப்படத்தில் அவர் ஒரு அற்புதமான நடிகராக உருமாற்றம் பெற்றிருக்கிறார். செல்வராகவன் இந்தத் திரைப்படத்திற்கு ஒரு தூணாக இருக்கிறார். என்னுடைய கலை உலக பயணத்தையும், இசைப்பயணத்தையும் நேர்த்தியாக வடிவமைத்ததில் செல்வராகவனுக்கும் கணிசமான பங்கு உண்டு. இந்த படத்தில் இணைந்து பணியாற்றியதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று அனைவரது வாழ்விலும் சொர்க்கவாசல் திறக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.
கதாசிரியர்-எழுத்தாளர் தமிழ் பிரபா பேசுகையில், “உறக்கத்திலிருந்து எழுந்து விட்டார் நீதிபதி… வாக்கிங் புறப்பட்டு விட்டார் வக்கீல்…சீருடை அணிந்து விட்டார் போலீஸ்காரர்…நான் இன்னும் என்னுடைய குற்றத்தை செய்ய துவங்கி இருக்கவில்லை…’ என கவிஞர் பிரான்சிஸ் கிருபா எழுதிய கவிதை தான் இந்த தருணத்தில் எனக்கு நினைவுக்கு வருகிறது. இந்த கவிதையை தான் இந்த படமாக நான் பார்க்கிறேன். இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. ஏனெனில் நான் எழுதிய முதல் திரைப்படமான ‘சார்பட்டா பரம்பரை’ படம் வெளியாகியிருக்கவில்லை. அந்தத் தருணத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் என்னை தொடர்பு கொண்டு என் உதவியாளர் சித்தார்த் ஒரு கதையை வைத்திருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்று என கேட்டுக்கொண்டார். அந்த கதையை கேட்டவுடன் எனக்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது.
என்னுடைய வீடு சென்னை மத்திய சிறைக்கு அருகே உள்ளது. சிறையில் நடைபெற்ற கலவரத்தை நான் சிறிய வயதில் இருக்கும்பொழுது நேரில் பார்த்திருக்கிறேன். அந்த கலவரத்தை தழுவிய திரைப்படம் என்றவுடன் எனக்கு திரைக்கதை எழுதுவது ஆர்வமாகிவிட்டது. அருண் மற்றும் சித்தார்த்துடன் இணைந்து பணியாற்றினேன்.
திரைக்கதை எழுதுவது என்பது எளிதில் சோர்வடைய வைக்கும் பணி. ஆனால் மற்றவர்களுடன் இணைந்து உருவாக்கும் போது ஆற்றலுடன் விரைவாக செயல்பட முடிகிறது. இந்த கதையை பொருத்தவரை பன்முகத் தன்மைமிக்க கதாபாத்திரங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவம் உண்டு.
இந்தப் படத்தில் நடித்த ஆர். ஜே. பாலாஜியை எப்போதும் எனக்கு ஒரு முன்னூதாரண நாயகனாக பார்க்கிறேன். ஏனெனில் பண்பலை வானொலியில் சென்னை தமிழில் பேசினார். அதுவே எனக்கு உந்துதலாக இருந்தது. இதனால் நானும் இரண்டு ஆண்டுகள் பண்பலை வானொலியில் தொகுப்பாளராக பணியாற்றினேன்.
நான் திரைத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் இதுவரை எந்த நட்சத்திரத்துடனும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதை விரும்பியதில்லை. அப்படி நான் விரும்பிய ஒரே= நடிகர் – படைப்பாளி செல்வராகவன் தான். ஏனெனில் அவருடைய திரைப்படங்களில் கதாபாத்திர வடிவமைப்பு வித்தியாசமானதாக இருக்கும். ‘புதுப்பேட்டை’ படத்தில் நாயக பிம்பத்தை பத்து பேர் அடித்தாலும் வலியை தாங்கக்கூடிய கதாபாத்திரமாக வடிவமைத்திருப்பார். இது என்னை பெரிதும் கவர்ந்தது. இயக்குநரை தொடர்பு கொண்டு செல்வராகவனுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற என் விருப்பத்தை தெரிவித்தேன். அதன் பிறகு சில நாட்கள் கழித்து செல்வராகவன் என்னை சந்திக்க விரும்பினார். அவரை நேரில் சந்தித்த பொழுது திரைக்கதை நேர்த்தியாக எழுதி இருக்கிறாய் என பாராட்டினார்.
மேலும் இந்த திரைப்படத்தில் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான ஆளுமையாக திகழும் எழுத்தாளர் ஷோபா சக்தி ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்திற்கு புதிதாக முயற்சித்து இருக்கிறோம். கிரைம் ஆக்ஷன் திரில்லர் கதை என்றாலும், சர்வைவல் திரில்லர் வகைமையை சார்ந்தது என குறிப்பிட விரும்புகிறேன். இந்தத் திரைப்படத்தை அனைவரும் கண்டு ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
கதாசிரியர் அஸ்வின் ரவிச்சந்திரன் பேசுகையில், “சிறைக்குள் நடைபெறும் கதையை எழுதலாமா என என்னுடைய நண்பரான இயக்குநர் சித்தார்த் கேட்டார். அது கொரோனா காலகட்டம் என்பதால் எழுதுவதற்கு சம்மதம் தெரிவித்தேன். அதன் பிறகு சிறையை பற்றிய படங்களை பார்த்தோம், அது தொடர்பாக எழுதி வெளியான புத்தகங்களையும் வாசித்தோம்.
இந்தத் தருணத்தில் எங்களுக்கு உதவிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்தத் திரைப்படம் வட சென்னையை களமாகக் கொண்டது. நானும், இயக்குநர் சித்தார்த்தும் தென் சென்னையை சார்ந்தவர்கள். இதனால் வடசென்னையை சார்ந்த எழுத்தாளர்-கதாசிரியர் தமிழ்பிரபாவை அழைத்து, அவருடன் இணைந்து பணியாற்றினோம். தற்போது இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்து காட்சிகள் அனைத்தும் உயிரோட்டமாக இருக்கிறது என்றால் அதன் பின்னணியில் தமிழ் பிரபாவின் உழைப்புதான் அதிகம். கதையின் நாயகனான பார்த்தி கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியதும் அவர்தான். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் பேசுகையில், “இந்த திரைக்கதையை முழுவதுமாக படித்துவிட்டு இயக்குநரிடம் நீங்கள் தான் எழுதினீர்களா, இதை யார் எழுதினார்கள் எனக் கேட்டேன். இதனை படப்பிடிப்பு நிறைவு செய்யும் வரை கேட்டுக் கொண்டே இருந்தேன். ஏனெனில் இப்படி ஒரு திரைக்கதையை எழுத முடியுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதை நான் இந்த தருணத்தில் சொல்வது சற்று மிகைப்படுத்தலாகவே இருக்கும், இருந்தாலும் படம் வெளியான பிறகு நீங்கள் அதை உண்மை என்று ஒப்புக் கொள்வீர்கள். இது போன்றதொரு திரைக்கதையை எழுதுவது சாதாரணமான விஷயம் அல்ல, வாசிக்கும் போது எனக்கு சற்று பொறாமையாகவே இருந்தது.
நல்ல படம் வரவேண்டும் என்று நிறைய பேசுகிறோம். ஆனால் அது குறித்து யாரும் முயற்சி செய்வதில்லை. இந்த படம் நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கும். இதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். இந்தத் திரைப்படத்தை ரசிகர்களுடன் திரையரங்குகளில் காண்பதற்கு நானும் ஆவலாக காத்திருக்கிறேன்.” என்றார்.
ட்ரிம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எஸ் ஆர் பிரபு பேசுகையில், “இந்தத் திரைப்படத்தை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கு என்னுடைய முதல் நன்றி. இப்படத்தை உருவாக்கத்தின் தொடக்க நிலையில் இருந்து எனக்கு தெரியும். இதில் பணியாற்றியவர்கள் அனைவரும் நெருக்கமான நண்பர்கள். நண்பர்கள் ஒன்றிணைந்து உருவாக்கும் படைப்பு என்பது வித்தியாசமானதாக இருக்கும். ஏனெனில் நண்பர்களாக இருந்து படைப்பை உருவாக்கும் போது அவர்கள் எந்த சவாலையும் எளிதாக எதிர்கொள்வார்கள். இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தத் திரைப்படம் வெற்றி பெறுவதற்காக நாங்களும் கடுமையாக உழைக்க தயாராக இருக்கிறோம். இக்கதை நம்மில் பலரும் கேட்டு பார்த்த சம்பவங்களுடன் தொடர்புடையது. படம் பார்க்கும்போது அந்த சம்பவத்துடன் எளிதில் தொடர்பு படுத்திக் கொள்ளும் வகையில் திரைக்கதை அமைந்திருக்கிறது. இன்றைய சூழலில் அனைவரும் ரசிக்கும் வகையிலான திரில்லர் ஜானரில் இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.
நடிகை சானியா ஐயப்பன் பேசுகையில், “ஆர். ஜே. பாலாஜியுடன் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இதுவரை இது போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததில்லை. அற்புதமான வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. 29ம் தேதி முதல் படம் திரையரங்குகளில் வெளியாகிறது, அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் பேசுகையில், “அறிமுக இயக்குநருக்காக இப்படி ஒரு பிரம்மாண்டமான மேடையை வழங்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தைப் பற்றி அதிகம் பேசாமல் இதில் நடித்த நடிகர்கள், நடிகைகள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களைப் பற்றி பேசுவதற்கு முன் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி- செல்வராகவன் -பாலாஜி சக்திவேல்- கருணாஸ் -நட்டி- என பத்திற்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் பணியாற்றினார்கள். அவர்கள் அறிமுக இயக்குநர் என்று எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள்.
நைஜீரிய நாட்டில் இருந்து சாமுவேல் ராபின்சன் என்ற நடிகர் இங்கு வருகை தந்து நடித்தார். கேரளாவில் இருந்து ஷஃரப் உதீன் -ஹக்கீம் ஷா- சானியா ஐயப்பன்- என மூன்று நட்சத்திரங்கள் இந்த படத்தில் பணியாற்றினார்கள்.
இந்த மேடைக்காக… மேடைக்கு வருவதற்காக வழி அமைத்துக் கொடுத்தவர் இயக்குநர் பா. ரஞ்சித். அவரிடம் ஆறு ஆண்டுகள் பணியாற்றினேன். நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். அதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சொர்க்கவாசல் படத்தின் கதையை மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுத திட்டமிட்டோம். ‘வடசென்னை’, ‘விருமாண்டி’ என இதற்கு முன் வெளியான கல்ட் திரைப்படங்களை பார்த்தோம். அதன் பிறகு இந்த படைப்பை வித்தியாசமான கோணத்தில் வித்தியாசமாக வழங்கலாம் என தீர்மானித்தோம். இதற்காக ராஜமுந்திரியில் உள்ள சிறைக்குச் சென்று சிறை கைதிகளுடன் பேசினோம். அந்தத் தருணத்தில் தவறே செய்யாமல் ஏராளமானவர்கள் சிறையில் இருப்பதை கண்டோம். அவர்களை விசாரணை கைதி என குறிப்பிடுவார்கள். இந்தியாவில் 70 சதவீதத்திற்கு மேல் சிறையில் விசாரணை கைதிகள் தான் இருக்கிறார்கள் என்ற ஒரு தகவலும் கிடைத்தது. இவர்களுக்கு நீதிமன்றம் இதுவரை எந்த தண்டனையும் வழங்கவில்லை. இருந்தாலும் இவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களிடம் உரையாடும்போது அவர்களிடம் இருந்த ஒரே விஷயம் நம்பிக்கை. அவர்கள் என்றாவது ஒருநாள் இந்த சொர்க்கவாசல் திறந்து வீட்டிற்குச் சென்று குடும்பத்தினருடன் வாழலாம் என நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அந்த விஷயம் இந்தப் படத்தில் இடம் பிடித்திருக்கிறது. இது பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் என நம்புகிறேன். எமோஷனல் வித் ஆக்ஷன் திரில்லராக இந்த திரைப்படம் இருக்கும். இரண்டு மணி நேரம் பத்து நிமிடம் அளவிற்கு இந்த திரைப்படத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இந்த படைப்பை ரசிகர்களாகிய நீங்கள் எப்படி வரவேற்பு அளிப்பீர்கள் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தத் திரைப்படத்திற்கு ஊடகங்களும், மக்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் ஆர். ஜே. பாலாஜி பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். பிரதம மந்திரி- ஜனாதிபதி -முதலமைச்சர் – ஆகிய மூவரைத் தவிர அனைவருக்கும் நன்றி சொல்லி விட்டோம். இந்த குழுவுடன் எனக்கு ஒன்றரை ஆண்டு கால பயணம் இருக்கிறது. இந்தப் படத்தில் நிறைய அறிமுக கலைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். இதனால் அவர்கள் அனைவரும் தங்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள். நான் கீழே அமர்ந்திருக்கும் போது மேடையில் பேசிய அனைவரின் பேச்சையும் ரசித்து கேட்டேன். அதேபோல் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக இவர்கள் படத்தை ரசித்து ரசித்து எடுப்பதையும் பார்த்து இருக்கிறேன். நான் நடித்த ஒரு படத்தை ரிலீஸிற்கு நான்கு நாள் இருக்கும் இந்த தருணத்திலும் நான் இதுவரை பார்க்கவில்லை. அதற்கு காரணம் நான் இவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்ததற்காக இயக்குநர் சித்தார்த்திற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னிடமிருந்து நடிப்பை அவர் வாங்கினார். அவரிடத்தில் எழுத்து வடிவத்தில் முழு திரைக்கதையும் இருந்தது. இதற்காக உழைத்த எழுத்தாளர்கள் தமிழ் பிரபா – அஸ்வின் ரவிச்சந்திரன் மற்றும் சித்தார்த்துக்கு நன்றி.
இந்தப் படத்தில் டீசர் வெளியானவுடன் என்னுடைய நண்பர்களான நிறைய ஹீரோக்கள் இயக்குநருக்கு போன் செய்து பாராட்டி இருக்கிறார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டம் மற்றும் படம் வெளியான பிறகு அவருக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
படப்பிடிப்பு தளத்தில் அவருடைய குழுவினரை நான் கலாய்த்து இருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் எப்போதும் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருப்பார்கள். உதவி இயக்குநராக பணியாற்றிய அருண் – இந்த படத்தில் ஒரு பாடலை எழுதி இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சன் குழுவினரும் திறமையானவர்கள். அவளர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவர்களிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் நடித்த திரைப்படங்களிலேயே இந்த படத்தில் தான் போட்டோகிராபி சிறப்பாக இருக்கிறது. மிகப்பெரிய வேலையை எளிதாகவும், சிரமமின்றியும் செய்பவர் ஒளிப்பதிவாளர் பிரின்ஸ். அவருக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.
இப்படத்தின் எடிட்டர் செல்வாவுடன் இணைந்து ‘எல்கேஜி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷங்க’, ‘சிங்கப்பூர் சலூன்’ என அனைத்து படத்திலும் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அவருடன் இந்த படத்திலும் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். கடவுள் புண்ணியத்தில் இந்த படத்தில் அவருக்கு தேசிய அளவில் விருது கிடைக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கதாசிரியர் தமிழ் பிரபாவின் எழுத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகன். இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக நடித்திருக்கும் சானியா ஐயப்பன்.. இந்த திரைப்படத்தின் விளம்பர நிகழ்விற்கு வருகை தந்திருக்கிறார். படத்திற்கும் சிறப்பாக புரொமோஷன் செய்து வருகிறார். அவர் இந்த படத்தில் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் அவரும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
செல்வராகவன் திரையில் தோன்றினாலே பெரிய நட்சத்திர நடிகர் போல் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் அவர் எப்போதும் அமைதியாக இருப்பார். அவருக்கு நண்பர்களும் குறைவு. படபிடிப்பு தளத்தில் மிக குறைவாகவே பேசுவார். மிகப்பெரிய ஸ்டார் இந்த படத்தில் இருக்கிறார் என்ற உணர்வே எங்களுக்கு இருந்தது.
மேலும் இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலானது. ஏனெனில் படத்தை இயக்கிய சித்தார்த் 15 ஆண்டு காலத்திற்கு முன் நான் கிரிக்கெட் விளையாடும் போது எனக்கு பின்னால் நின்று கொண்டிருப்பான். அவனது இயக்கத்தில் நடித்திருக்கிறேன்.
நான் சூர்யாவின் படத்தை இயக்கிக் கொண்டிருப்பதற்கும், இப்படத்தின் தயாரிப்பாளரான சித்தார்த் ராவிற்கு பங்கு உண்டு. அவருடைய முதல் பட தயாரிப்பில் நானும் இடம் பெற்றதற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஸ்வரூப். எல் கே ஜி படம் வெளியான தருணத்திலிருந்து என்னுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த படத்தின் கதையை இரவு 10 மணி அளவிற்கு கேட்டுவிட்டு அடுத்த நாள் காலையில் இணைந்து பணியாற்றலாம் என சம்மதம் தெரிவித்தார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்வு எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது. ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படம் வெளியான தருணத்திலிருந்து இதுவரை 13 ஆண்டுகள் கடந்து விட்டது. என்னுடைய மனைவி திவ்யா நாகராஜன் இந்த நிகழ்விற்கு வருகை தந்திருக்கிறார். அவர் கலந்து கொள்ளும் முதல் சினிமா நிகழ்வு இதுதான்.
சொர்க்கவாசல் படத்தை பற்றி பேசுவதில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். இந்தப் படத்தின் டீசருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. இதற்கும் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.
இதற்கு முன் ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சர்ச்சையை ஏற்படுத்து வகையில் எதையாவது பேச வேண்டும் என்று இருந்தது. ஆனால் நான் தற்போது என்ன நினைக்கிறேன் என்றால்.. பேசுவதற்கு எதுவும் இல்லை என்றாலும் பரவாயில்லை. படத்தின் கன்டென்ட் நன்றாக இருந்தால் அது மக்களிடம் ரீச் ஆகிவிடும்.
நான் 2006ம் ஆண்டிலிருந்து இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். விற்பனை செய்வதற்காக ஒரு கடைக்கு நாம் பிஸ்கட்டை எடுத்து சென்று விட்டால் அதை மற்றவர்கள் நன்றாக இருக்கிறது. இல்லை என்று சொல்லத்தான் செய்வார்கள். அதேபோல் தான் சினிமாவும். ரசிகர்களை சென்றடைந்த பின் ஒரு படத்தைப் பற்றி அவர்கள் விமர்சனம் செய்வார்கள்.
ஒரு படம் வெளியான பிறகு அதைப்பற்றி யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். யூடியூபில் விமர்சிக்கலாம்… ட்விட்டரில் விமர்சிக்கலாம் .. இன்ஸ்டாகிராமில் விமர்சிக்கலாம். அது அவர்களுடைய சுதந்திரம். யாரும் அவர்களிடத்தில் இருக்கும் செல்போனை பறிக்க முடியாது. அதனால் விமர்சனம் குறித்த கட்டுப்பாடு நம்மிடத்தில் இல்லை.
சொர்க்கவாசல் படத்தில் கன்டென்ட் நன்றாக இருக்கிறது. இந்தப் படத்தை பார்த்து நன்றாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகத் தான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இவர்கள்தான் என்னுடைய அடுத்த படத்தின் தயாரிப்பாளர்கள். இந்தப் படத்தின் விநியோகஸ்தர்கள்.
போட்டிகள் நிறைந்த சூழலில் ஓடிடி எனப்படும் டிஜிட்டல் ரைட்ஸ் விற்பது கடினமாக இருக்கும். ஆனால் நல்ல தொகையை கொடுத்து இப்படத்தின் உரிமையை வாங்கி இருக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் எங்கள் குழு மீது வைத்த நம்பிக்கைக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
தற்போதெல்லாம் பயம் அதிகமாக ஏற்படுகிறது. வெளியில் தேசியக்கொடி ஒன்றினை கையில் ஏந்தி கொண்டு இந்தியன் என்ற உணர்வோடு இருந்தால் அதற்கும் ஏதாவது விமர்சனம் செய்வார்களோ என்ற பயம் ஏற்படுகிறது.
நான் பாவாடையும் கிடையாது. சங்கியும் கிடையாது. அனைத்து அரசியல் கட்சியின் ஐ டி விங்கிடம் ஒரு பணிவான வேண்டுகோள் வைக்கிறேன். நீங்கள் அரசியலை மட்டும் பாருங்கள். சினிமாவை விட்டு விடுங்கள். சினிமாவில் வாரந்தோறும் திரைப்படங்கள் வெளியாகின்றன. திரைப்படங்களை விமர்சித்து அதனை அழிப்பதில் எதற்காக உங்களுடைய ஆற்றலை வீணடிக்கிறீர்கள்.
அதேபோல் ரசிகர்களிடத்திலும் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன் அதாவது ரஜினி ரசிகர்கள் -கமல் ரசிகர்கள்- விஜய் ரசிகர்கள்- அஜித் ரசிகர்கள்- என எல்லா ரசிகர்களும் நல்ல திரைப்படங்களை பாருங்கள். படம் பிடிக்கவில்லை என்றால் விமர்சனம் செய்யுங்கள். அது உங்கள் உரிமை. ஆனால் அவர்கள் படம் வந்தால் அடிக்க வேண்டும் என்றும் இவர்கள் படம் வந்தால் அடிக்க வேண்டும் என்றும் வேலை செய்யாதீர்கள். டார்கெட் செய்து விமர்சனம் செய்யாதீர்கள். இதற்காக உங்களுடைய ஆற்றலை வீணடிக்காதீர்கள்.
நாங்கள் ஒரு நல்ல படத்தை எடுத்து இருக்கிறோம். அனைவரின் ஆதரவு இருந்தால் தான் இந்தத் திரைப்படமும் ஒரு லப்பர் பந்து போன்றோ அல்லது வாழை படம் போன்றோ வெற்றி பெற்று அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேரும். 29ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. புதுமுக கலைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு படைப்பினை உருவாக்கி இருக்கிறார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்தை பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
மக்களின் மனங்களை வென்ற, ஸ்டார் விஜய் ‘ஆஃபீஸ்’ தொடர், ஹாட்ஸ்டாரில் மீண்டும் முழு நீள வெப் சீரிஸாக வெளிவரவுள்ளது !!
வெப் சீரிஸாக மீண்டும் வரும் ‘ஆஃபீஸ்’ தொடர், ஹாட்ஸ்டாரில் விரைவில் !!
‘இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘ஆஃபீஸ்’ தொடரை, முழு அளவிலான வெப் சிரீஸாக விரைவில், வெளியிடவுள்ளது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இன்று இந்தத் வெப் சீரிஸின் தலைப்பை சமூக ஊடகம் வழியே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு, பார்வையாளர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸாக உருவாகவுள்ள இந்த சீரிஸ், 2013 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வெளியான, ஒரு ஆபிஸில் நடக்கும் காதல், காமெடிகளை மையமாக கொண்ட ‘ஆஃபீஸ்’ தொடரின் மறுவடிவமாகும்.
கனா காணும் காலங்கள் சீரிஸின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தொலைக்காட்சித் தொடரை, இந்த கால ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு, ஒரு வெப் சீரிஸாக மாற்றுவது, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
சமீப காலங்களில் வெளியான ஹாட்ஸ்டாரின் வெப் சீரிஸான ‘கனா காணும் காலங்கள்’ மட்டுமல்ல, ‘ஹார்ட் பீட்’ மற்றும் ‘உப்பு புளி காரம்’ போன்ற சீரிஸ்களும் மகத்தான வெற்றியை ருசித்துள்ளன. இதனைத் தொடர்ந்து டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸாக ஆஃபீஸ் சீரிஸை வெளியிடவுள்ளது.
தமிழ் தொலைக்காட்சியின் முதல் ஆஃபீஸ் நிகழ்வுகளை பற்றிய தொடராக வெளியான ஆஃபிஸ் தொடரில், நடிகர்கள் கார்த்திக் ராஜ், ஸ்ருதி ராஜ், விஷ்ணு, மதுமிளா, உதயபானு மகேஸ்வரன், சுசேன் ஜார்ஜ், சித்தார்த் மற்றும் அன்பழகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இயக்குநர் ராம் விநாயக் இயக்கிய இந்தத் தொடர் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து, மக்களின் இதயங்களை வென்ற தொடராக வெற்றி பெற்றது.
562-எபிசோட் கொண்ட இந்த தொடர், ஒரு ஐடி நிறுவனத்தின் ஊழியர்களைச் சுற்றி நடக்கும் கதைக்களத்தில் உருவானது. இப்போது, அதே தொடர், வெப் சீரிஸாக, புத்தம் புதிய நடிகர்கள் மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட அமைப்புடன் உருவாக்கப்பட உள்ளது. இது முந்தைய தொடரின் அடிப்படை அம்சங்களுடன், ஆஃபீஸ் களேபரங்களை நவீனமாக எடுத்துச் சொல்லும்.
ஆஃபீஸ் வெப் சீரிஸாக ரீமேக் செய்யப்படுகிறது என்ற செய்தி, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், பார்வையாளர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.
நடிகர் வருண் தவான் நடித்துள்ள ‘பேபி ஜான்’ படத்தின் முதல் பாடலான ‘நைன் மடாக்கா’, குளோபல் சென்சேஷன்ஸ் தில்ஜித் தோசன்ஜ் மற்றும் தீ குரலில் நவம்பர் 25 அன்று வெளியாகிறது!
‘பேபி ஜான்’ படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. படத்தின் முதல் பாடலான ’நைன் மடாக்கா’ பாடல் நவம்பர் 25, 2024 அன்று வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
முராத் கெடானி, ப்ரியா அட்லீ மற்றும் ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் ‘பேபி ஜான்’ படத்தைத் தயாரித்துள்ளனர். படத்தின் முதல் பாடலான ‘நைன் மடாக்கா’ நிச்சயம் டான்ஸ் ஆந்தமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இர்ஷாத் கமில் எழுதிய இந்தப் பாடலுக்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார். உலகப்புகழ் பெற்ற பாடகர்களான தில்ஜித் தோசன்ஜ் மற்றும் தீக்ஷிதா வெங்கடேசன் என்கிற தீ ஆகிய இருவரும் முதல்முறையாக இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளனர்.
வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு இடையேயான கெமிஸ்ட்ரியை வெளிக்கொண்டு வரும் வகையில் அதிரடி பெப்பி பாடலாக இது இருக்கும். தில்ஜித்தின் வைப்ரண்ட் குரலும் தீயின் மாயாஜால குரலும் நிச்சயம் பாடலை ஹிட்டாக்கி விடும். அதிகம் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய பாடகிகள் குரல் மற்றும் இசையமைப்பாளர்களில் தீயும் ஒருவர். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இப்போது, இசையும் படத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
வருண் தவான், ஜாக்கி ஷெராஃப், வாமிகா கபி, மற்றும் இந்தியில் அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அட்லீ மற்றும் சினி1 ஸ்டுடியோஸுடன் இணைந்து ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும் ’பேபி ஜான்’ படத்தை, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி1 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. படம் டிசம்பர் 25, 2024 அன்று வெளியாகிறது.
Yi Shi Films நிறுவனம் Alibaba Pictures உடன் இணைந்து, தமிழ் பிளாக்பஸ்டர் திரைப்படமான மஹாராஜா படத்தினை, சீனா முழுதும் திரையரங்குகளில் வெளியிடுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது. இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்ரமணியம் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தினை, பேஷன் ஸ்டுடியோஸ், திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் தயாரித்துள்ளது.
மஹாராஜா திரைப்படம் மாறுபட்ட கதைக்களத்தில், அதிரடியான இசை, அற்புதமான காட்சியமைப்பு, என அனைத்து தரப்பிலும் பரவலான பாராட்டுக்களைக் குவித்தது. Yi Shi Films நிறுவனம் Alibaba Pictures உடன் இணைந்து, தமிழ், இந்திய கலாச்சார பன்முகத்தன்மையை, உலகமெங்கும் அறிமுகப்படுத்தும் வகையில், சீனா முழுதும் திரையரங்குகளில் இப்படத்தினை வெளியிடுகிறது. சீனா வெளியீட்டில், Home Screen Entertainment மற்றும் Nine Knots Entertainment மிக முக்கிய பங்காற்றி, இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளன.
அலெக்ஸி வூ, Yi Shi Films கூறியதாவது… “மகாராஜாவை சீனாவிற்கு கொண்டு வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இப்படம் மூலம் சீனாவில் தமிழ் சினிமாவின் கலைத்திறனை, புதிய பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி. அலிபாபா பிக்சர்ஸ் உடன் இணைந்து, உலகின் சிறந்த சினிமாக்களை, உலகம் முழுக்கவுள்ள பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி.
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறுகையில்.. “மகாராஜா எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சியான படைப்பாகவும், பெருமையின் அடையாளமாக மாறியது. சிறந்த கதையம்சம் கொண்ட நல்ல பொழுதுபோக்கு திரைப்படங்களை, பல்வேறு பின்னணியில் உள்ள பார்வையாளர்கள் ரசிக்கும்படியான படங்களை, உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும். மகாராஜா பெரும் அன்பையும், வரவேற்பையும் பெற்றது. தற்போது இப்படம் சீனாவில் உள்ள ரசிகர்களைக் கவரும் வகையில், நவம்பர் 29 ஆம் தேதி வெளியாவது மகிழ்ச்சி. மகாராஜா படத்தினை சீனாவில் மிகப்பெரிய அளவில் வெளிடுயிடும் Yi Shi Films மற்றும் Alibaba Pictures நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நன்றி. உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன், அதிரடி திருப்பங்களுடன் இப்படம் சீனா ரசிகர்களை கண்டிப்பாக மகிழ்விக்கும். சீன ரசிகர்களது வரவேற்பைக் காண ஆவலுடன் உள்ளோம். இந்த நேரத்தில் இப்படத்தில் அற்புதமான நடிப்பை வழங்கிய விஜய் சேதுபதி, இயக்குநர் நித்திலன் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி.
ஹோம் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் அனிஷ் வாத்வா, கூறியதாவது.. “சீனாவில் உள்ள திரையரங்குகளுக்கு மகாராஜாவைக் கொண்டு வருவதில் மகிழ்ச்சி. தமிழ் சினிமாவின் துடிப்பான மற்றும் தனித்துவமான உலகத்தை புதிய பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி. உலகளவில் மறக்க முடியாத சினிமா அனுபவத்தை, Yi Shi Films மற்றும் Alibaba Pictures உடன் இணைந்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.
மகாராஜா திரைப்படம் நவம்பர் 29, 2024 அன்று சீனா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. திரைப்பட ஆர்வலர்கள் உள்ளூர் ரசிகர்களைக் கவரும் வகையில், சிறப்பு விளம்பரங்கள் மற்றும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் நடத்திய இரத்த தான முகாமில் கலந்துகொண்ட நடிகர் அருண் விஜய் !
கடின உழைப்பிற்கு முன்னுதாரணமாக வலம் வரும் நடிகர் அருண் விஜய் இன்று 19.11.2024 அவரின் பிறந்த நாளை, உதவும் கரங்கள் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார்.
அதன் பின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டார். அங்கு ரசிகர்களுடன் இணைந்து தானும் இரத்த தானம் செய்தார்.
அதன்பின் நடிகர் அருண் விஜய் கூறியதாவது, அனைவருக்கும் வணக்கம் , என்னுடைய பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் என் ரசிகர்கள் இரத்த தானம் முகாம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள், அவர்களோடு நானும் இணைந்து செய்வதில் மிகவும் சந்தோஷம், இதை பார்த்து மற்ற அனைவரும் முன்வந்து இரத்த தானம் செய்ய வேண்டும் அதற்கான விழிப்புணர்வு தான் இது. இந்த முகாமை சிறப்பாக நடத்திய என் ரசிகர்களுக்கு நன்றி.
நடிகர் அருண் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் திரளாக கலந்துகொள்ள இராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனை இரத்த வங்கியில், இந்நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது.