தேவராக நடிப்பது எனக்கு கிடைத்த பாக்கியம்! – ‘தேசிய தலைவன்’ நாயகன் பஷீர் நெகிழ்ச்சி
முத்துராமலிங்கத் தேவைன் வாழ்க்கை திரைப்படமாக உருவாகும் ‘தேசிய தலைவர்’ திரைப்படத்தில் முத்துராமலிங்க தேவர் கதாபாத்திரத்தில் ஜே.எம்.பஷீர் நடிக்கிறார். மேலும், இயக்குநர் பாரதிராஜா, ராதாரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
எம்.எம்.பாபு, எஸ்.எஸ்.ஆர் பிக்சர்ஸ் சத்யா, ஜி.ஜெயந்தினி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ஆர்.அரவிந்த ராஜ் இயக்க, இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தணிக்கை பணி விரைவில் நடைபெற இருக்கிறது. அப்பணி முடிந்த பிறகு படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவிக்க உள்ளது.
இந்த நிலையில், அக்டோபர் 12 ஆம் தேதி ‘தேசிய தலைவர்’ நாயகன் ஜே.எம்.பஷீர் பிறந்தநாள் கொண்டாடினார். எளிமையாக கொண்டாடப்பட்ட இந்த பிறந்தநாளை ‘தேசிய தலைவர்’ படக்குழுவினர் பிரம்மாண்டமான விழாவாக நடத்தி பஷீருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்தநாள் விழாவில் பேசிய நடிகர் ஜே.எம்.பஷீர், “தேவராக நடிப்பது இறைவன் கொடுத்த வரமாகவே நான் கருதுகிறேன். நான் ஒரு இஸ்லாமியனாக இருந்தாலும் தேவர் கதாபாத்திரத்தில் நடிப்பது என் பாக்கியம். இதற்கு காரணம் என் நண்பன் செளத்ரி தான், அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து தான் இந்த படத்தை தயாரித்தார்கள். சில தடைகள் வந்தது, ஆனால் அந்த தடைகளை தகர்த்து தற்போது படத்தை இந்த அளவுக்கு கொண்டு வந்தது எஸ்.எஸ்.ஆர் பிக்சர்ஸ் சத்யா தான், அவருக்கும் என் நன்றி. இந்த நிகழ்ச்சிக்கு விஜயகுமார் அண்ணன் வந்தது சந்தோஷம் அளிக்கிறது. பூபதி ராஜா அண்ணனை நான் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன், இன்று அவரும் இங்கு வந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி. இது அனைத்துக்கும் காரணம் நண்பன் செளத்ரி தான்.
என் பிறந்தநாளை எளிமையாக நடத்த முடிவு செய்தேன், ஆனால் இவர்கள் சிறப்பான விழாவாக மாற்றி விட்டார்கள். தேசிய தலைவர் படத்திற்கு சில தடைகள் வரலாம், ஆனால் தேவரின் ஆசி அந்த தடைகளை போக்கி எங்களை வெற்றி நடை போட செய்கிறது. நிச்சயம் படம் மிகப்பெரிய வெற்றி பெறும், விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிப்போம்.” என்றார்.
தயாரிப்பாளர் செளத்ரி பேசுகையில், “பஷீருடன் நான் பத்து வருடங்களாக பயணிக்கிறேன், அவரை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று தான் விரும்பினேன். அப்போது அவர் முகத்தில் ஏதோ ஒரு தலைவர் தெரிவதை நான் உணர்ந்தேன், அதை உற்று கவனித்த போது தான் அது தேவர் ஐயாவின் அடையாளமாக தெரிந்தது. உடனே தேவர் ஐயாவை பற்றி படம் எடுக்க நாங்கள் முடிவு செய்தோம். தேவராக நடிக்க நடிக்க தெரிந்தவர்களால் முடியாது, தைரியமானவர்களால் மட்டும் தான் முடியும், துணிச்சல் மிக்கவர்களால் மட்டும் தான் முடியும். அந்த துணிச்சலும், தைரியமும் பஷீரிடம் இருக்கிறது, அதனால் தான் அவரால் தேவராக நடிக்க முடிந்தது.
தேவர் பற்றி சரியாக அறியாதவர்கள் அவரை சாதி தலைவராக சித்தரித்து விட்டார்கள், ஆனால் அவர் பல புரட்சிகரமான விசயங்களை செய்திருக்கிறார், அவர் ஒரு தேசிய தலைவர், அதை சொல்லும் ஒரு திரைப்படமாக ‘தேசிய தலைவர்’ படம் இருக்கும். இந்த படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் வரிச்சலுகை வழங்குவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.” என்றார்.