‘ரூல் நம்பர் 4′ விமர்சனம்

பரபர சம்பவங்களும் விறுவிறு திருப்பங்களும் நிறைந்த படமாக உருவாகி வெளியாகியுள்ளது ‘ரூல் நம்பர் 4.’

நாயகன் ஏகே பிரதீப் கிருஷ்ணா ஏடிஎம் வேன் டிரைவராக பணிபுரிகிறான். அவனுக்கு ஒரு பெண் மீது காதல் உருவாக அதை அவளிடம் சொல்ல அவள் ஏற்க மறுக்கிறாள். ஆனாலும் விடாமல் அவளை துரத்தி தன் காதலை ஏற்க வைக்கிறான். பிறகுதான் தெரிகிறது தான் காதலித்த பெண் தன்னுடன் ஏடிஎம் வேனில் துப்பாக்கி சுமந்து கூடவே வரும் செக்யூரிட்டியின் மகள் என்பது. இப்படி சுவாரஸ்யமாக பயணிக்கும் கதையில்… அந்த பெண்ணின் அப்பாவிடம் விவரத்தை சொல்லி காதலுக்குச் சம்மதம் பெற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்க நினைக்கிறார்கள். அதற்காக அதன்படி கோடிக்கணக்கான ரூபாயோடு ஏடிஎம் வேன் பயணிக்கும்போது இடையில் அவளை வேனில் ஏற்றிக் கொள்ள திட்டம் வகுக்கிறார்கள். அதன்படி அவளை ஏற்றிக் கொள்கிறார்கள். இப்போது வேனில் வேனை ஓட்டுகிற நாயகன், அவன் காதலிக்கும் பெண், அந்த பெண்ணின் தந்தை, பேங்க் மேனேஜர், கூடவே ஒரு கர்ப்பிணிப் பெண் என ஐந்து பேர் இருக்கிறார்கள். வேன் ஓடிக்கொண்டேயிருக்க, காதல் விவகாரத்தை அந்த அப்பாவிடம் சொல்லி அவருக்கு ஷாக் கொடுக்கிறார்கள்.

வேன் அப்படியே, காட்டிலாக்கா கட்டுப்பாட்டிலுள்ள ஏடிஎம் ஒன்றில் பணத்தை நிரப்புவதற்காக காட்டுப் பாதையில் நுழைகிறது. அந்த சமயத்தில் வேனிலிருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் சிலரால் வேன் வழிமறிக்கப்பட்டு, அதிலிருப்பவர்கள் கொடூரமாக தாக்கப்படுகிறார்கள். வேனை பெட்ரோல் ஊற்றி கொளுத்தும் முயற்சியிலும் இறங்குகிறார்கள்.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காட்டிலாக்கா உயரதிகாரி பணத்தை தன் வசமாக்கிக்கொள்ள நினைத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்.

வேனிலிருப்பவர்கள் அந்த இக்கட்டான சூழலிருந்து தப்பிக்கப் போராடுகிறார்கள். அந்த முயற்சிக்கு பலன் கிடைத்ததா? கொள்ளையர்களின் நோக்கம் நிறைவேறியதா? என்பது கதையோட்டம். இயக்கம் பாஸர்

நாயகன் ஏகே பிரதீப் கிருஷ்ணா இளமையாக லட்சணமாக இருக்கிறார். நாயகியைக் கண்டதும் காதலில் விழுவது, அவளிடம் காதலுக்கு சம்மதம் பெற விதவிதமாக அணுகுவது என எளிமையாக நடித்தால் போதும் என்பது மாதிரியான கதாபாத்திரம். அதை சரியாக செய்திருக்கிறார்.

நாயகி ஸ்ரீகோபிகாவின் தேகத்திலிருக்கும் கேரளத்து வனப்பும் பளீர் புன்னகையும் வசீகரிக்கிறது. ஹீரோவை காதலிக்கும் காதலி என்ற எந்தவிதமான தனித்துவமும் இல்லாத வழக்கமான வேடமாக இருந்தாலும், கிளைமாக்ஸ் நெருங்கும்போது வேறொரு அவதாரமெடுத்து ஆச்சரியப்பட வைக்கிறார்.

நாயகியின் அப்பாவாக மோகன் வைத்யா. மகளின் காதல் விவகாரம் தெரிந்து கொதிப்பது, உயிருக்கு ஆபத்தான சூழலில் மனம் கலங்கித் தவிப்பது என நேர்த்தியான நடிப்பைத் தந்திருக்கிறார்.

காதலுக்கு பாலமாக இருக்க நினைத்து, நினைத்ததை செய்து முடித்து, கொள்ளையர்களால் பரிதாப முடிவை சந்திக்கிற ஜீவா ரவி, வேனில் பயணிக்கிற அந்த கர்ப்பிணிப் பெண், கொள்ளையர்களாக வருகிற முரட்டு ஆசாமிகள் என மற்ற நடிகர்கள் கதைக்கு தேவையான நடிப்பை குறையின்றி வழங்கியிருக்கிறார்கள்.

காட்டிலாக்கா காவல்துறை உயரதிகாரியாக வருகிற பிர்லா போஸின் வில்லத்தனம் கெத்து.

பரந்து விரிந்த கேரள காட்டுப் பகுதியின் செழுமையை அதன் அழகு மாறாமல் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டேவிட் ஜான்.

‘என்ன கொன்னுபுட்டியே வெச்சு செஞ்சுபுட்டியே’, ‘சஸ்பென்ஸு ஓப்பன் ஆனதே’ பாடல்களில் தென்றலின் குளுமையைத் தந்திருக்கிற தீரஜ் சுகுமாறன், பின்னணி இசையில் காட்சிகளின் எதிர்பார்ப்பை முடிந்தவரை பூர்த்தி செய்திருக்கிறார்.

வேன் கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டு, உடன் வந்த ஒருவர் கொலை செய்யப்பட்ட பின்னரும், நாயகன் எதையும் செய்யாமல் வேனில் அமர்ந்தபடியே திருதிருவென விழித்துக் கொண்டிருப்பதை,

கையில் துப்பாக்கி இருந்தும் அதை பயன்படுத்தாமல் பயந்து சாகிற செக்யூரிட்டியின் நிலைப்பாட்டை துளியும் ஜீரணிக்க முடியவில்லை.

கொள்ளையர்கள் ஏடிஎம் வேனை மணிக்கணக்காக தாக்கிக் கொண்டேயிருப்பது சலிப்பு தருகிறது.

உருவாக்கத்தில் ஆங்காங்கே குறைகள் இருந்தாலும் வேன் கடத்தப்படுவதிலிருக்கும் பரபரப்பு, அழகிய கவிதையாய் கடந்தோடும் காதல் காட்சிகள் படத்தின் கவனம் ஈர்க்கும் சங்கதிகளாக அமைந்திருக்கின்றன.

Related Post