விண்ணைத்தாண்டி வருவாயா – 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் !!

சில காதல் கதைகள், அனைவரின் மனதிலும் நீங்காத நினைவுகளை தந்து, உணர்வுகளோடு பிணைந்து, என்றென்றும் நிலைத்து நிற்கும். கௌதம் வாசுதேவ் மேனனின் கிளாசிக் காதல் கதையான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும், காதலர்களின் மனதில் பல இனிமையான தருணங்களை உருவாக்கி, என்றென்றைக்குமான காதல் கதையாக நிலைத்து நிற்கிறது.

15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள இந்த படம், இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த சிறப்புக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, படக்குழுவினர் அனைவரும் அவர்களுடைய ஞாபகங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், இந்தப் படத்தை சிறப்பானதாக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்தனர்.

இந்த சிறப்புக் கொண்டாட்ட நிகழ்வில், நடிகர் சிலம்பரசன் டி.ஆர். மற்றும் வி.டி.வி கணேஷ், ஒரு காணொளியில் தோன்றி, இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு நன்றி தெரிவித்தனர்.

நடிகர் சிலம்பரசன் டி.ஆர் கூறியதாவது… “விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் வந்து, 15 ஆண்டுகள் நிறைவடைந்ததில், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படத்தை அதன் வெளியீட்டின் போதும், இன்றும் மிகப்பெரிய வெற்றியாக்கிய ரசிகர்களுக்கு என் நன்றிகள். கௌதம் மேனன் சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார், திரிஷா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள்.”

நடிகை திரிஷா கூறியதாவது…, “விண்ணைத்தாண்டி வருவாயா எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத, மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகும். இந்தப் படம் என் மனசுக்கு மிகவும் நெருக்கமானது. இதைப் படமாக்கிய கௌதம் வாசுதேவ் மேனனுக்கு எனது நன்றி. இப்படம் இன்னும் பலரின் அன்பினால் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படப்பிடிப்பின் போது நாங்கள் கடந்து வந்த அத்தனை தருணங்களும், மிக மிக அழகான நினைவுகள். படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள். மேலும் இந்தப் படத்தை இன்றும் கொண்டாடும் ரசிகர்களுக்கும் எனது நன்றிகள்.”

கௌதம் மேனன் கூறியதாவது…
“சில திரைப்படங்கள் 10, 15, 25 ஆண்டுகள் நிறைவடையும் போது அதைப் பற்றி பேசுவது வழக்கம். ஆனால், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ பற்றி பேசும்போது எனக்கு உணர்ச்சிப் பூர்வமான, மிக ஆழமான உணர்வு தோன்றுகிறது. பலரும் என்னை சந்திக்கும் போது, இன்னும் கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி கதாபாத்திரங்களை நினைவுகூர்கிறார்கள். சிம்பு இல்லையெனில் இந்தக் கதையில் அந்த மேஜிக் நிகழ்ந்திருக்கும் என நான் நிச்சயமாக சொல்ல முடியாது. அத்தனை சிறப்பாக அவர் அந்தக் கதாப்பாத்திரத்தை செய்திருந்தார் அவருக்கு என் நன்றி. திரிஷா என்னிடம் இந்தப்படத்தின் வில்லன் நான் தான், என்னை மக்கள் வெறுப்பார்கள் என்றார். நான் அதற்கு ரசிகர்கள் உங்களை அடிக்கக் கூட கூடும், ஆனால் இந்தப்படத்திற்குப் பிறகு மக்கள் உங்களை நேசிப்பதை நிறுத்தவே மாட்டார்கள் என்றேன். இந்தப் படம் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும், படத்தை உருவாக்கிய ஒவ்வொரு தருணங்களிலும் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசை, இந்தக் கதையில் ஒரு மிகப்பெரிய மாயாஜாலத்தை நிகழ்த்தியது. மனோஜின் காட்சியமைப்பும், ஆண்டனியின் எடிட்டிங்கும் இந்தப் படத்தை மனதிற்கு மிக நெருக்கமான படைப்பாக மாற்றின.”

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஆர்எஸ் இன்ஃபோட்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் தயாரித்தன. ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை விநியோகிக்க, இப்படம் மாபெரும் வெற்றியை ஈட்டியது.

மேலும் இந்நிகழ்வில் இந்தப் படத்திற்கான அற்புதமான பாடல்களைப் பாடிய பாடகர்கள் அவர்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், சோனி மியூசிக் இந்தக் கொண்டாட்டத்திற்கு ஒரு சிறப்பு ஆன்லைன் தளத்தை உருவாக்கியுள்ளனர். lovefullyvtv.com எனும் இணையதளம் அனைத்து வி.டி.வி ரசிகர்களையும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெறச் செய்கிறது. இந்த தளம் மூலம் அனைத்து விடிவி பட ரசிகர்களும் படத்தின் சிறப்பு தருணங்களை, படக்குழுவினரின் அனுபவங்களை, படப்பாடல்களை கேட்டும் பார்த்தும் அனுபவிக்கலாம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *