சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

‘விலங்கு’ எனும் இணைய தொடரை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன் ‘ எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கணேஷ் சிவா மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஜி. துரை ராஜ் கவனிக்கிறார். தாய் மாமன் உறவைப் பற்றி மண் மணம் கமழும் படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகி வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக ‘மாமன்’ உருவாகி வருகிறது” என்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சூரியின் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ‘கருடன்’ எனும் வெற்றி படத்திற்குப் பிறகு மீண்டும் நடிகர் சூரி- தயாரிப்பாளர் கே. குமார் ஆகியோர் இணைந்திருப்பதால், ‘மாமன்’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *