விடுதலையின் கருத்தை மறுவரையறை செய்யும் விடுதலைப் பாடல்:

விடுதலையைப் புறவெளியில் தேடியலையும் மனிதன் நாள்தோறும் தன்னைத்தானே சிறைப்படுத்திக்கொள்ளும் அகவிடுதலையைப் பற்றி சிந்திக்க வேண்டுமென்ற கருப்பொருளோடு வெளியாகியுள்ளது ‘விடுதலைப் பாடல்’. ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைப்பில், மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலைத் தீபக் புளூ பாடியுள்ளார்.
தேர்வுகளின் தடைகளில் இருந்து அறிவு தேடும் விடுதலை, தோல் நிறத்தின் மதிப்பீடுகளிலிருந்து மெய்யழகு வேண்டும் விடுதலை, பொய்களின் சுமையிலிருந்து விடுபட விரும்பும் உண்மை, தொடுதிரையிலிருந்து விரல்கள் கோரும் விடுதலை என அன்றாடம் நம்மை நாமே சிறைப்படுத்திக்கொண்டு வாழ்வதைத் தகர்த்தெறிய இப்பாடல் வலியுறுத்துகிறது. இதோடு நம் நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த வீரர்களையும் போற்றுகிறது. விடுதலையின் பொருளை நாம் மறுமதிப்பீடு செய்துகொள்ள வேண்டுமென்ற ஆழமான கண்ணோட்டத்தை வலியுறுத்தும் இந்தப்பாடலை அபிநாத் சந்திரன் தயாரிக்க மதுரை குயின் மிரா பள்ளி வெளியிட்டுள்ளது.
இளைஞர்களின் துள்ளளான நடன அசைவுகளோடு உருவாகியுள்ள விடுதலைப்பாடலின் ஒளி வடிவம் பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. விரைவில் அனைத்து இசைச் சீரோடைகளிலும் இப்பாடல் வெளியிடப்படும்.

Related Post