Breaking
September 30, 2024

விக்னேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘ரெட் ஃப்ளவர்’

விஷுவல் எஃபெக்ட்ஸ் நிபுணரான ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் பேனரில் கே.மாணிக்கம் தயாரிக்கும் ‘ரெட் ஃப்ளவர்’ ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளன.

மூன்றாம் உலகப் போருக்குப் பிறகு நடைபெறும் சர்வதேச மாற்றங்களின் பின்னணியில் ஒரு பரபரப்பான கற்பனை கதையை உருவாக்கி அதை ‘ரெட் ஃப்ளவர்’ என்ற பெயரில் ஆக்ஷன் திரைப்படமாக இயக்கியுள்ளார் ஆண்ட்ரூ பாண்டியன். இப்படத்தில் ‘கிழக்கு சீமையிலே’, ‘ராமன் அப்துல்லா’, ‘ஆச்சார்யா’ புகழ் நடிகர் விக்னேஷ் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

திரைப்படம் பற்றி இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் பேசுகையில், “நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப‌ குழுவினரின் அயராத அர்ப்பணிப்பின் காரணமாக மிகச் சிறந்த முறையில் ‘ரெட் ஃப்ளவர்’ உருவாகி வருகிறது. படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை ஆவலுடன் தொடங்கி உள்ளோம்,” என்றார்.

தொடர்ந்து பேசிய ஆண்ட்ரூ பாண்டியன், “துல்லியமான படத்தொகுப்பு, ஒலி வடிவமைப்பு, விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் பின்னணி இசையை இப்படத்திற்கு வழங்கும் பணியில் நாங்கள் தற்போது ஈடுபட்டுள்ளோம். திறமை வாய்ந்த எடிட்டர்கள், சவுண்ட் இன்ஜினியர்கள் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் கலைஞர்களின் குழு இதற்காக‌ கடினமாக உழைத்து வருகிறது. ஒரு குறிப்பிடத்தக்க திரைப்பட அனுபவமாக ‘ரெட் ஃப்ளவர்’ இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,” என்றார்.

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் பேனரில் கே.மாணிக்கம் தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் முதல் வாரத்தில் திரையரங்குளில் வெளியாகிற‌து. “இக்கதை ரசிக‌ர்களை கவரும் என்று நாங்கள் நம்புகிறோம், உலகத் தரத்தில் படத்தை மெருகேற்றி வருகிறோம்,” என்று இயக்குந‌ர் மேலும் தெரிவித்தார்.

இரட்டை சகோதரர்களான விக்கி மற்றும் மைக்கேலை சுற்றி கதை சுழல்கிறது. இந்திய இராணுவத்தில் சேர்வதில் தீரா ஆர்வமுள்ள இந்த இரண்டு பாத்திரங்களிலும் விக்னேஷ் நடிக்கிறார். மூன்றாம் உலகப் போருக்குப் பின் நடக்கும் கற்பனை கதையாக ‘ரெட் ஃப்ளவர்’ மலரும். இந்த படத்தில் மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக தனது எடையை 82 கிலோவிலிருந்து 69 கிலோவாக குறைத்ததாகவும், வெளிநாட்டில் ஸ்டண்ட் மற்றும் பிற பயிற்சிகளை மேற்கொண்டதாகவும் விக்னேஷ் கூறுகிறார்

மனிஷா ஜஷ்னானி நாயகியாக நடிக்க, நாசர், ஒய் ஜி மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான் விஜய், அஜய் ரத்னம், லீலா சாம்சன், டி எஸ் கார்த்திக், கோபி கண்ணதாசன், தலைவாசல் விஜய், மோகன் ராம் மற்றும் யோக் ஜேபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

‘ரெட் ஃப்ளவர்’ படத்திற்கு கே. தேவ சூர்யா ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் ராம் இசை அமைக்க, அரவிந்தன் படத்தொகுப்பை கையாள்கிறார். விஎஃப்எக்ஸ் துறையை பிரபாகரன் கவனிக்க, சண்டைக்காட்சிகளை இடி மின்னல் இளங்கோ வடிவமைத்துள்ளார். பாடல்களை மணி அமுதவன் எழுதுகிறார்.

தயாரிப்பு வடிவமைப்பாளராக கே.கார்த்திக் பங்காற்ற, ஏ.பி.முகமது ஒப்பனையை கவனிக்க, தேனி சீனு ஸ்டில்சுக்கு பொறுப்பேற்க,ஏ.அமல் ராஜ் ஆடைகளை வடிவமைத்துள்ளார்.

விமானம், ராணுவ லாரி, கன்டெய்னர் கப்பல் என 11 சண்டைக்காட்சிகள் பிரமிக்க வைக்கும் வகையில் படத்தில் அமைந்துள்ளன என கூறிய இயக்குநர், ஸ்டண்ட் மாஸ்டர் இடி மின்னல் இளங்கோ ‘ரெட் ஃப்ளவர்’ படத்திற்காக கடினமாக உழைத்துள்ளார் என்றார், “விஎஃப்எக்ஸ் இயக்குந‌ர் பிரபாகரனின் செட் மேற்பார்வை அலாதியானது. ஒவ்வொன்றையும் சிறந்த திட்டமிடலுடன் அவர் செய்ததால் எங்கள் பணி இன்னும் சுவாரசியமாக அமைந்தது,” என அவர் மேலும் கூறினார்.

ஒளிப்பதிவு பற்றி இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறும்போது, “ஒளிப்பதிவாளர் கே தேவசூர்யாவின் உழைப்பு படத்தை புதிய உயரத்திற்கு இட்டு சென்றுள்ளது. படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் அவர் செதுக்கிய விதம் பிரமிப்பூட்டும் வகையில் இருந்தது,” என்றார்.

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் கே.மாணிக்கம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ரெட் ஃப்ளவர்’ ஆக்ஷன் திரைப்படம் இது வரை திரையில் சொல்லப்படாத ஒரு விஷயம் குறித்து பேசும் என்று கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் ஆண்ட்ரூ பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Related Post