அஜித், சூர்யா, தனுஷ், விஷால், அல்லு அர்ஜுன் என ஐந்து முன்னணி நடிகர்களின் படங்களோடு அகில இந்திய திரையுலகையே தன் இசையால் கலக்கும் தேவி ஶ்ரீ பிரசாத்

டிஎஸ்பி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், தனது அதிரடி மற்றும் ஆத்மார்த்த இசையால் தென்னிந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே ஈர்த்து வருகிறார்.

தேவி ஶ்ரீ பிரசாத்தின் அதிரடி இசையில் உருவான ‘புஷ்பா’ திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் முதல் முறையாக ஒரே சமயத்தில் 5 மொழிகளில் ஹிட் அடித்தது இவரது முக்கிய மைல்கற்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களாலும் இவரது இசை ரசிக்கப்படுகிறது. வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் இவர் புகழ் பெற்றிருப்பதே இதற்கு சான்று.

இந்நிலையில், 5 முன்னணி நட்சத்திரங்களில் திரைப்படங்களுக்கு இவர் தற்போது இசையமைத்து வருகிறார். அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’, சூர்யா நடிக்கும் ‘கங்குவா’, தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘குபேரா’, விஷால் நடிக்கும் ‘ரத்னம்’, மற்றும் ‘புஷ்பா’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அல்லு அர்ஜூன் நடிக்கும் ‘புஷ்பா 2’ என்று தேவி ஶ்ரீ பிரசாத்தின் இசை ஆதிக்கம் நீண்டு கொண்டே செல்கிறது.

மேற்கண்ட ஐந்து திரைப்படங்களும் பிரபல இயக்குநர்களால் (குட் பேட் அக்லி – ஆதிக் ரவிச்சந்திரன், கங்குவா – சிவா, குபேரா – சேகர் கம்முலா, ரத்னம் – ஹரி, புஷ்பா 2 – சுகுமார்) இயக்கப்பட்டு, முன்னணி தயாரிப்பு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு வருகின்றன. வித்தியாசமான கதைக் களங்களோடு பன்மொழிகளில் பிரம்மாண்ட படைப்புகளாக இவை தயாராகி வருகின்றன. இவற்றின் தேவைகளுக்கு ஏற்ப பிரத்யேக இசையை தேவி ஶ்ரீ பிரசாத் வழங்கி வருகிறார்.

இந்து ஐந்து படங்களை தவிர பவன் கல்யாண் நடிப்பில் ‘ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் ‘உஸ்தாத் பகத்சிங்’, நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிக்கும் ‘தாண்டேல்’, புதுமுகங்கள் நடிக்கும் ‘ஜூனியர்’ உள்ளிட்ட மேலும் பல திரைப்படங்களுக்கும் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். திரைப்படங்களுக்கு இசையமைப்பதோடு நின்று விடாமல் மக்கள் பெருமளவில் திரளும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பாடி தனக்கே உரிய பாணியில் ரசிகர்களை இவர் உற்சாகப்படுத்தி வருவதும் அனைவரும் அறிந்ததே.

இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜாவின் அதி தீவிர பக்தரான தேவி ஶ்ரீ பிரசாத்தின் ஸ்டுடியோவிற்கே இளையராஜா சமீபத்தில் நேரில் சென்று வாழ்த்தியது தேவி ஶ்ரீ பிரசாத்தை அளவில்லாத மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

“என்னுடைய இசைப் பயணத்தில் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு மனமார்ந்த நன்றி. ஐந்து முக்கிய திரைப்படங்களுக்கு இசையமைக்கும் இந்த பெருமையான தருணத்தில் ரசிகர்கள் விரும்பும் இசையை தொடர்ந்து வழங்கி அவர்களை மகிழ்விப்பதை எனது கடமையாகக் கருதுகிறேன்,” என்று தேவி ஶ்ரீ பிரசாத் கூறினார்.

Related Post