‘லவ்வர்’ படத்தின் இசை வெளியீடு.

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘லவ்வர்’. இதில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ராஜ்கமல் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கும் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொண்டிருக்கிறார். காதலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் நாசரேத் பஸ்லியான், மகேஷ்ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் ரஞ்சித் ஜெயக்கொடி, விநாயக், விநியோகஸ்தர் சக்திவேலன் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில்,“ லவ்வர் படக்குழுவினர் இதற்கு முன் குட் நைட் எனும் வெற்றிப்படத்தினை வழங்கியவர்கள். அப்படத்தின் வெற்றியைக் கொண்டாடவில்லையா? என கேட்ட போது, அவர்கள் அடுத்த படத்தின் படபிடிப்பில் இருந்தனர். அந்தளவிற்கு நம்பிக்கையுடன் இந்த படக்குழுவினர் பணியாற்றினர்.

இந்த படத்தைப் பற்றிய செய்திகள் வெளியானவுடன் ஏராளமான விநியோகஸ்தர்கள் இந்த படத்தை வெளியீடுவதற்கு முன்பணத்துடன் படக்குழுவினரை அணுகினார்கள். நான் கூட இந்த அளவிற்கு ‘லவ்வர்’ படம் வெளியாகும் முன்பே வணிகம் நடைபெற்றால்.. அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் என வேண்டுகோள் வைத்தேன். ஆனால் அவர்களோ இந்த படத்தினை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி மூலமாக வெளியிடவே திட்டமிட்டிருக்கிறோம் என்று தயாரிப்பாளர்கள் உறுதியுடன் தெரிவித்தனர். இதற்காக தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கடந்த வாரம் இந்த படத்தைப் பார்த்தேன். எக்ஸலாண்ட்டான மூவி. இப்படத்தின் பின்னணியிசையை ஷான் ரோல்டன் மிகச்சிறப்பாக இசையமைத்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் பேசப்படும்.

இந்த படத்தின் டிரைலரில் மணிகண்டன் பேசும் ஒரு வசனம் இடம்பெற்றிருக்கிறது. அவருடைய நடிப்பை விட அவருடைய குரல் மூன்று மடங்கு கூடுதலாக நடித்திருக்கிறது. மணிகண்டன் தமிழ் திரையுலகில் இன்னும் கூடுதலான உயரத்திற்கு செல்லும் தகுதியும், திறமையும் பெற்ற நடிகர். ஒரு சாதாரண காட்சியைக் கூட தன்னுடைய நடிப்பால் உயிர்ப்புள்ளதாக்கும் வலிமைக் கொண்டவர்.

‘லவ் டுடே’ எப்படி வெற்றியைப் பெற்று வரலாறு படைத்ததோ.. அதை விட கூடுதலாக வசூலித்து இந்த படம் சாதனை படைக்கும். இந்த படம் ஒட்டுமொத்த பார்வையாளர்களுக்கான படம். இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு விசயமும் ரசிகர்களுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையதாக இருக்கும்.” என்றார்.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசுகையில்,“ இந்த படத்தைப் பற்றி சொல்லவேண்டும் என்றால் பாப்லா நெரூடாவின் ஒரு கவிதையைத்தான் குறிப்பிடவேண்டும். ‘காதல் சிறியவிசயம் தான். ஆனால் அதிலிருந்து விட்டுவிலகுவது தான் கடினமான விசயம்’. இது தான் இப்படத்தின் அடிநாதம். இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால், ‘என்னை நீயும், உன்னை நானும் யார் முதலில் இழப்பது என்பது தான்…’ இப்படத்தின் அடிநாதமாக இருக்கிறது. இந்த படத்தின் திரைக்கதையை படிக்கும் போது இயக்குநர் பிரபுராம் வியாஸின் எழுத்து, நாவலை வாசிக்கும் உணர்வைக் கடந்து எமோஷனலாக அதனுடன் இணைந்துவிட்டேன். இதில் கமர்சியல் எலிமெண்ட்டுகளை லாவகமாக இணைத்து எழுதியிருந்தார். அதனால் பிரபுராம் வியாஸ் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படத்தில் இடம்பெறும் பாடல்களில் பாடலாசிரியர் மோகன் ராஜன், ஜென் தத்துவங்களை எளிதான வரிகளாக எழுதி மனதில் இடம்பிடிக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.” என்றார்.

தயாரிப்பாளர் மகேஷ்ராஜ் பஸ்லியான் பேசுகையில்,“ தேன்சுடரே..’ என்ற பாடல் வெளியானவுடன் நாயகன் மணிகண்டனுக்கு போன் செய்து, குறிப்பிட்ட குகை காட்சியில் எப்படி நடித்தீர்கள்? என கேட்டபோது, ‘அதற்கு அவர் வாழ்க்கையில் வெற்றியே கிடைக்காத ஒருவர் இருட்டில் நடந்து வரும் போது திடிரென்று ஒரு வெளிச்சம் வந்தால் எப்படியிருக்கும்? அதை மனதில் நினைத்துக கொண்டு தான் நடித்தேன்’ என எளிதாக விளக்கமளித்தார். இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

இந்த படத்தை நானும் பார்த்துவிட்டேன். ஃபன்டாஸ்டிக் மூவி. படத்தில் நடித்திருந்த அனைத்து நடிகர்களும் நன்றாக நடித்திருந்தார்கள்.

‘குட்நைட்’ படத்தின் படபிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது இயக்குநர் பிரபுராம் இப்படத்தின் கதையை சொன்னார். ஆனால் இது தொடர்பாக யுவராஜ் தான் முடிவெடுப்பார் என்று சொன்னேன். ஏனெனில் திரைத்துறையைப் பொறுத்தவரை எனக்கு யுவராஜ் தான் வழிகாட்டி. அவர் செய்யும் விசயங்கள் எனக்கு பல சமயங்களில் பிரமிப்பைத் தரும்.

குட்நைட் படத்தின் வெற்றிவிழாவில் மில்லியன் டாலர் ஸ்டூடியோசும், எம்ஆர்பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தரமான படங்கள் வழங்கும் என சொன்னேன். தற்போது ‘லவ்வர்’ படத்தை உருவாக்கியிருக்கிறோம். இதுவும் தமிழ் ரசிகர்களுக்கான தரமான படம்.

2015 ஆம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் டிசைன் விசயமாக யுவராஜ் எனக்கு அறிமுகமானார். அதன் பிறகு அவருடன் பழகி வருகிறேன். தற்போது எங்களுடைய இரண்டாவது படம் வெளியாகும் சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் சிறப்பு தோற்றத்தில் நடித்த ‘லால் சலாம்’ படமும் வெளியாகிறது. இதுவே எங்களுக்கு கிடைத்த ஆசியாக கருதுகிறோம். இந்த இரண்டு படங்களும் வெற்றிபெற வேண்டும்.” என்றார்.

தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசுகையில்,“ திரைத்துறையில் டிசைனிங் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தயாரிப்பாளராக திட்டமிட்டேன். அந்த தருணத்தில் பலரும் படத்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டது குறித்து எதிர்நிலையான கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருந்தனர். யாரும் எனக்கு ஆதரவாக பேசவேயில்லை. அப்போது சபரி எனும் நண்பர் உதவி செய்தார். அதன் பிறகு சக்திவேலன் எங்களைத் தொடர்பு கொண்டார். நல்ல கன்டெண்ட் இருந்தால்.. அதனை ஆதரிக்க இங்கே ஆட்கள் இருக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொண்டேன்.

இந்த படத்தை கடந்த ஆகஸ்ட்டில் தான் தொடங்கினேன். அதற்குள் இந்த படத்தின் பணிகளை நிறைவு செய்து திரைக்குக் கொண்டுவந்திருக்கிறோம். இதற்காக கடுமையான உழைத்த என்னுடைய குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘லவ்வர்’ திரைப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.

நடிகர் கண்ணா ரவி பேசுகையில்,“ குட் நைட் படத்திற்கு ஊடகமும், ரசிகர்களும் ஆதரவளித்ததால் தான் அப்படம் வெற்றிப் பெற்றது. அத்துடன் அந்த படம் நிறைய பொக்கிஷங்களை கொடுத்தது. அதைத் தொடர்ந்து தற்போது ‘லவ்வர்’ என்ற படமும் தயாராகியிருக்கிறது. இதுவும் வெற்றிப்படம் தான். தயாரிப்பாளர் யுவராஜிடம் எந்தமாதிரியான படங்களை தயாரிப்பதில் விருப்பம் இருக்கிறது? என கேட்டபோது, எனக்கு பிடித்த படமாக அமையவேண்டும். அந்த படம் அந்த ஆண்டின் டாப் ஐந்து படங்களில் ஒன்றாக இடம்பெறவேண்டும். அந்த வகையில் தற்போது அவரின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘லவ்வர்’ படமும் டாப் ஐந்து படங்களில் ஒன்றாக இருக்கும். இந்த படத்தின் இயக்குநரான பிரபுராம் வியாஸ் மீது தயாரிப்பாளர்கள் மிகப் பெரிய நம்பிக்கையை வைத்துள்ளார்கள்.

இயக்குநர் பிரபுராம் வியாஸ், அவர் இயக்கிய குறும்படத்தின் மூலம் எனக்கு அறிமுகமானார். அதற்கு பிறகு ‘லிவ் இன்’ எனும் வெப் சீரிஸில் சந்தித்தோம். அந்த தொடரின் வெற்றிக்கு பிறகு ஏராளமான தயாரிப்பாளர்கள் ‘லிவ் இன்’ தொடரின் அடுத்த பாகத்தை இயக்குங்கள் என கேட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்த வியாஸ், உடனே இயக்காமல், மீண்டும் நேர்மையாக உழைத்து உருவாக்கிய திரைக்கதை தான் ‘லவ்வர்’. அதனால் இந்த படமும் வெற்றிப் பெறும். இந்த படத்தை பார்த்துவிட்டு சாதாரணமாக கடந்து போய்விட முடியாது. இந்த படம் உங்களைப் பற்றியும், உங்களுடைய காதலைப் பற்றியும், காதலரைப் பற்றியும் மேலும் பல புரிதல்களை உங்களுக்குள் ஏற்படுத்தும். பேசி தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை எந்த வகையான புரிதலுடன் பேசி வாழ்க்கையை சந்தோஷமாக எதிர்கொள்ளவேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்கும்.” என்றார்.

நடிகை ஸ்ரீ கௌரி ப்ரியா பேசுகையில்,“ பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.லவ்வர் என்றொரு படத்தில் எனக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்திருப்பதும். என்னுடைய கனவு குழுவினருடன் பணியாற்ற கிடைத்த வாய்ப்பையும் எனக்கு கிடைத்த ஆசியாக கருதுகிறேன். ‘மாடர்ன் லவ் சென்னை’ எனும் படைப்பில் நடிக்கத் தொடங்கியிருந்த போது எனக்கு இந்த அளவிற்கு தமிழ் பேசத் தெரியாது. ஆனால் எனக்கு தமிழ் மொழி மீது, தமிழ் மக்கள் மீது. தமிழ் திரைப்படங்கள் மீது.. இருக்கும் ஈர்ப்பால் எப்படியாவது தமிழில் பேசிவிடவேண்டும் என்று முயற்சியெடுத்தேன்.

லவ்வர் என்னுடைய திரையுலக பயணத்தில் மிக முக்கியமான படம். இந்த படத்திற்காக நடிக்க ஒப்புக்கொள்ளும் போது என்னுடைய அம்மா காலமாகிவிட்டார். அந்த தருணத்தில் நான் இருந்த மனநிலையில் இருந்து, என்னை முழுமையாக மீட்டு பணியாற்றவைத்தனர் இந்த படக்குழுவினர். அதனால் இந்த தருணத்தில் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நேர்மையாகவும், கடினமாகவும் உழைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம். எங்களின் கடின உழைப்பும், நேர்த்தியும் உங்கள் மனதைத் தொடும் என நம்புகிறேன். பிப்ரவரி 9 ஆம் தேதியன்று திரையரங்குகளுக்கு வருகைத்தந்து ஆதரவளிக்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ” என்றார்.

இயக்குநர் பிரபுராம் வியாஸ் பேசுகையில்,“ 2019 ஆம் ஆண்டில் நான் மணிகண்டனுக்கு போன் செய்து, உங்களுக்காக கதை ஒன்றை தயார் செய்திருக்கிறேன். சந்திக்கலாமா? எனக் கேட்டேன். அன்று மாலையே வணிக வளாகம் ஒன்றில் சந்தித்து பேசினோம். அந்த முதல் சந்திப்பிலேயே எனக்கு சௌகரியமான சூழலை உருவாக்கினார். அவரிடம் என்னுடைய திரைக்கதையை கொடுத்துவிட்டு வந்தேன். மறுநாளே அந்த கதையை வாசித்துவிட்டு, அதைப் பற்றி நிறைய நேரம் பேசினார். நானும் இந்த கதையை எழுதிய பிறகு முதலில் அவரைத் தான் தொடர்பு கொண்டேன். அவருக்கும் இந்த கதை புரிந்து.. அதிலுள்ள நுட்பமான விசயங்களைப் பற்றி பேசியபோது, என்னுடைய எழுத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகவே அதனை எடுத்துக் கொண்டேன். அதனால் மணிகண்டனுக்கு என்னுடைய முதல் நன்றி.

நானும், மணிகண்டனும் இணைந்து இந்த கதையை ஏராளமான பட நிறுவனங்களிடம் எடுத்துச்சொல்லியிருக்கிறோம். அதன் பிறகு ஒரு நாள் ‘குட் நைட்’ படத்தின் படபிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில் மணிகண்டன் போன் செய்து, ‘உங்களுடைய கதையை குட்நைட் தயாரிப்பாளரிடம் சொன்னேன். அவர் உணர்வு பூர்வமாக கதையைக் கேட்டு உங்களை சந்திக்கவேண்டும்’ என்றார். உடனே தயாரிப்பாளர் யுவராஜ் கணேசனைச் சந்தித்தேன். அதன் பிறகு இந்த படத்தின் பணிகள் தொடங்கியது.

நான் எந்த இயக்குநரிடம் உதவியாளராக பணியாற்றியதில்லை.. இந்த படத்தில் அது தொடர்பான அனைத்து விசயங்களையும் கற்றுக்கொண்டேன். இதற்கு வழிநடத்திய யுவராஜுக்கு நன்றி. இந்த படத்திற்கு பேருதவி அளித்த தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் நடிகைகள் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிகர் கண்ணா ரவி நடித்திருக்கிறார். அந்த கதாப்பாத்திரத்தில் அவர் நேர்த்தியாக நடித்திருக்கிறார். படம் வெளியான பிறகு அவர் ரசிகர்களின் மனதில் நிச்சயம் இடம்பிடிப்பார். இப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாப்பாத்திரங்களும் ரசிகர்கள் திரையரங்கை விட்டு வீட்டிற்கு செல்லும் போது அவர்கள் தங்களுடைய மனதில் சுமந்து செல்வார்கள். ” என்றார்.

இசையமைப்பாளரும், பாடகருமான ஷான் ரோல்டன் பேசுகையில்,“ குட்நைட் படத்தின் பணிகள் நிறைவடைவதற்கு முன்னரே இப்படத்தின் பணிகள் தொடங்கிவிட்டது. ‘லவ்வர்’ படத்தில் பணியாற்றிய பாடலாசிரியர்கள். பின்னணி பாடகர்கள், பாடகிகள், நடிகர் சித்தார்த், இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஜீ வி பிரகாஷ் குமார், புஷ்பவனம் குப்புசாமியின் வாரிசான நேகா அகர்வால், இசை கலைஞர்கள் உள்ளிட்ட என்னுடைய இசைக்குழுவினருக்கும், நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் இந்த தருணத்தில் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் சமூகத்தில் பொதுவாக அறிவாளிகள் கஷ்டப்படுவார்கள். அறிவாளியாக பிறந்தாலே நம்மூரில் சிக்கல் தான்.சிந்திக்கிறான் என்றாலே அவனுடன் சேராதே என சொல்பவர்கள் தான் அதிகம். நிறைய யோசித்தால் நீங்கள் உங்களை தனிமைப்படுத்திக்கொள்வீர்கள். இதுபோன்ற அறிவாளிகள் வெற்றிப் பெறவேண்டும் என்பது தான் என்னுடைய இலக்கு. ஏனெனில் நல்ல சிந்தனையாளர்கள் வெற்றிப் பெற்றால் அந்த சமூகம் ஆரோக்கியமாக இருக்கும். சிந்தனையாளர்களை வெற்றிப் பெற வைக்கும் துறையா.. இது? என்று கேட்டால்,. நிறைய பேர் முயற்சிக்கிறார்கள். . அதில் ஐம்பது சதவீதத்தினர் வெற்றி பெறுகிறார்கள். அந்த வரிசையில் இயக்குநர் பிரபுராம் வியாஸ் இன்னும் படங்களை இயக்கி, உயர்ந்த இடத்திற்கு முன்னேறுவார். அவர் நல்ல விசயங்கள் இயல்பாக போகிறபோக்கில் சொல்லக்கூடிய திறமைசாலி.

தயாரிப்பாளர் யுவராஜ் தமிழ் திரையுலகில் போராளி. மற்றொரு தயாரிப்பாளரான மகேஷ் ராஜ் சினிமாவின் மிகப்பெரிய ரசிகன்.

ரசிகர்களாகிய நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு நடுவில் நேரம் கிடைத்தால் இந்த படத்தை தயவு செய்து திரையரங்கத்திற்கு சென்று பாருங்கள். உங்களுடைய வாழ்க்கைக்கு இந்த படம் ஏதேனும் ஒரு விசயத்தை தரும்.” என்றார்.

நடிகர் மணிகண்டன் பேசுகையில்,“ சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறேன். இந்த படத்தில் நடித்ததற்காக சந்தோஷப்படுகிறேன். நாங்கள் நினைத்த மாதிரி இந்த படத்தை உருவாக்கியதற்கு நிம்மதியாக இருக்கிறேன். 2019 ஆம் ஆண்டில் இந்த கதையை பிரபு சொன்னபோது அவரிடம், ‘நீங்கள் என்னை வைத்து இயக்காவிட்டாலும், வேறு யாரையாவது வைத்து இயக்குங்கள். ஏனெனில் இந்த கதை இந்த சமூகத்திற்கு அவசியம் சொல்லப்படவேண்டிய கதை.’ என்றேன்.

இந்த படத்தை இயக்கியதற்காக இயக்குநர் பிரபுராம் வியாஸை பாராட்டுகிறேன். அதனையடுத்து தயாரிப்பாளர்களைப் பாராட்டுகிறேன். ஏனெனில் இந்த படத்தின் திரைக்கதையில் எந்த இடத்திலும் கமர்சியல் எலிமெண்ட் வேண்டும் என சொல்லாமல், கதையோட்டத்தின் இயல்பை ஏற்றுக்கொண்டு தயாரித்தனர்.

படபிடிப்புத்தளத்தில் நாயகி கௌரி ப்ரியாவின் மனோபலம் எங்கள் அனைவரையும் வியக்கவைத்தது. கண்ணா ரவி தற்போது தனி கதாநாயகனாக நடித்து வருகிறார். இருந்தாலும் இந்த படத்தில் இயக்குநர் சொன்னதற்காக நல்லதொரு கேரக்டரில் கொஞ்சம் கூட முகச்சுழிப்பு இல்லாமல் நடித்து முழு ஒத்துழைப்பை அளித்தார். இவர்கள் மட்டுமல்லாமல் படத்தில் நடித்த அனைவரும் தாங்கள் ஒரு வெற்றிப்படத்தில் நடிக்கிறோம் என்ற எண்ணத்திலேயே நடித்தனர்.

நான் எப்போதும் ஒரு விசயத்தை மட்டும் உறுதியாக சொல்லிக்கொண்டேயிருப்பேன். அதேப்போல் இப்போதும் சொல்கிறேன். ‘இந்த படம் உங்களை ஒருபோதும் டிஸ்ஸாப்பாயின்ட்மென்ட் பண்ணாது.” என்றார்.

Related Post