‘ஹரா’ திரைப்படத்தில் மோகன் ஜோடியாக அனுமோல்

படப்பிடிப்பு நிறைவடைந்து பண்டிகை வெளியீட்டுக்கு தயாராகிறது

பதினான்கு வருடங்களுக்கு பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘ஹரா’ திரைப்படத்தில் அவரது ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜிக்கு சாலை விபத்தில் படுகாயம் ஏற்பட்டதால் அவரது சிகிச்சையின் காரணமாக படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையே, ‘ஹரா’ திரைப்படத்தின் அதிரடி முதல் பார்வை மற்றும் டீசர் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ திரைப்படத்தில் எதிர் நாயகனாக நடிக்க மோகன் ஒப்பந்தமானார்.

இதன் காரணமாக, ‘ஹரா’ படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கிய போது தேதிகள் ஒத்துழைக்காததால் ஏற்கனவே ஒப்பந்தமான பிரபல நடிகைக்கு பதில் மோகன் ஜோடியாக அனுமோல் நடித்துள்ளார். சிறப்பான பங்களிப்பை அனுமோல் வழங்கி உள்ளதாகவும் அவரது கதாபாத்திரம் பேசப்படும் என்றும் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “கோத்தகிரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இறுதி கட்ட படபிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பண்டிகை வெளியீடாக விரைவில் திரையரங்குகளில் ‘ஹரா’ வெளியாகும் என்று கூறினார்.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே ஐபிசி சட்டங்களை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் ‘ஹரா’ திரைப்படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் தயாரிக்கிறார்.

‘ஹரா’ திரைப்படத்தில் யோகி பாபு, ‘பவுடர்’ நாயகி அனித்ரா நாயர், சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர்.

Related Post