


காதல் உணர்வை இழை பிரித்து காதலர்களின் சின்ன சின்ன அசைவுகளைத் தோரணமாக்கி நெய்து இயற்கை சூழ்ந்த பின்னணியுடன் ‘ஆழி’ என்கிற சுயாதீன பாடல் ஆல்பம் உருவாகி உள்ளது. இந்த ஆல்பத்தை ஜெயின்ட் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் வசந்த் ராமசாமி தயாரித்துள்ளார். ஈஷான் இயக்கி உள்ளார். லட்சிய நடிகர் எஸ்.எஸ் . ராஜேந்திரனின் பேரன் ஆரியன் இசையமைத்துள்ளார். இப்பாடல் ஜெயின்ட் மியூசிக் தளத்தில் தயாரிப்பாளரால் வெளியிடப்பட்டுள்ளது.
‘ஆழி ‘ பாடல் ஆல்பம் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் எஸ் எஸ் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன், இயக்குநர் பேரரசு ஆகியோர் கலந்து கொண்டனர் .
நிகழ்ச்சியில் கே .ராஜன் பேசும்போது ,
“தமிழ் சினிமா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற எத்தனை
யோ நட்சத்திரங்களைப் பார்த்துள்ளது. அவர்கள் எல்லாம் கூட இயக்குநர்களின் விருப்பமறிந்து நடந்து கொண்டார்கள். மீண்டும் நடிக்கச் சொன்னால் நடிப்பார்கள் .இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
ஆனால் இந்த’ஆழி ‘ பாடல் ஆல்பத்தில் நடித்துள்ள நடிகரும் நடிகையும் இந்த விளம்பர நிகழ்ச்சிக்கு வரவில்லை .வருத்தமாக இருக்கிறது. இன்று தயாரிப்பாளர்கள் மிகவும் சிரமத்தில் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட அலைகள் அடித்துக் கொண்டிருக்கின்றன. பல துன்ப அலைகள் ,நடுவே இன்பமான அலைகள் சில மட்டுமே அடிக்கும்.
ரஜினி, ஷங்கர் போன்றவர்களை வைத்து படம் எடுத்தவர்கள் எல்லாம் இன்று ஆளையே காணோம். கார்ப்பரேட் நிறுவனங்கள் எல்லாம் இன்று படம் எடுப்பதில்லை, போய்விட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்று தமிழ் சினிமா இருக்கிறது .
ஒரு நடிகர் முதல் படத்தில் 25 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினார் .அந்தப் படம் ஓடியதும் அடுத்த படத்தில் இரண்டு கோடி என்றார்.ஒரு படம் வெற்றி பெற்றால் இயக்குநர் தயாரிப்பாளரை விட நடிகருக்குத்தான் பலன் கிடைக்கும்.
இந்தப் பாடல் விளம்பர நிகழ்ச்சிக்கு நடிகர் நடிகை வரவில்லை.வந்திருந்தால் விளம்பரம் அவர்களுக்குத்தான். ஒவ்வொரு திரைப்பட விழாவிலும் வரும் நடிகர்,நடிகைகளைத் தான் ஊடகத்தைச் சேர்ந்த புகைப்படக்காரர்கள் படம் எடுத்து விளம்பரப்படுத்துகிறார்கள். மற்றபடி அந்த இயக்குநர், தயாரிப்பாளர்களை அவர்கள் அந்த அளவுக்கு விளம்பரப்படுத்துவதில்லை. அதனால் வரக்கூடிய எல்லா பலன்களையும் நடிகர்கள் தான் அனுபவிக்கிறார்கள். தயாரிப்பாளர்களோ இயக்குநர்களோ அல்ல. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கே இந்த பிரமோஷன் நிகழ்ச்சிக்கு வராத நடிகர் கதிரவன் என்ற நடிகரையும் நமிதா கிருஷ்ணமூர்த்தி என்ற நடிகையையும் நான் கண்டிக்கிறேன். பிக்பாஸில் 100 நாள் தாக்குப் பிடிக்க முடியாமல் சில நாட்கள் மட்டுமே இருந்து விட்டு வெளியேற்றப்பட்ட அந்த நடிகருக்கு அதற்குள் இவ்வளவு ஆணவமா?தான் நடித்த ஆல்பத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு அவர் வரவில்லை .அதேபோல் அந்த நடிகையும் வரவில்லை இப்படிப்பட்டவர்களைத் தமிழ் சினிமா புறக்கணிக்க வேண்டும்.
இந்தப் பாடல் ஆல்பத்துக்கு லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனின் பேரன் ஆரியன் இசையமைத்துள்ளார். பாடலின் இசையும் வரிகளும் நன்றாக உள்ளன. அதே போல் நடித்திருப்பவர்களை நன்றாக நடிக்க வைத்து படமாக்கப்பட்டுள்ளது .இவர்களையே கதாநாயகன் கதாநாயகி ஆக்கி இவர்கள் அடுத்த படம் எடுக்கும் திட்டத்தில் இருந்திருக்கலாம்.
ஆனால் அவர்களின் நடவடிக்கையால் அந்த வாய்ப்பை இழக்கிறார்கள்.
அவர்களுக்கு வாய்ப்பு தர யோசிக்க வேண்டி இருக்கிறது.
இந்த ‘ஆழி ‘ பாடல் ஆல்பம்
முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன் “என்று கே.ராஜன் பேசினார்.
நிகழ்ச்சியில் நடிகர் கூல் சுரேஷ் மற்றும் ஆல்பம் தயாரிப்புக் குழுவினர் கலந்து கொண்டனர்.