யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் வரிசை படங்களில் முதன் பெண் உளவாளியான, கத்ரீனா கைப் நடிக்கின்ற சோயா என்கிற கதாபாத்திரம் தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவல் ஒவ்வொரு ஒரு அடியிலும் ஆணுக்கு சமமாக காட்டப்பட்டு வருகிறது.. சண்டை என வந்துவிட்டால் எந்த அளவுக்கும் இறங்கி ஒரு கை பார்க்கும் அளவுக்கு அவள் கடுமையான, புத்திசாலித்தனமான மற்றும் கொடுமையான உளவாளி.
கத்ரீனா சோயா கதாபாத்திரத்தை தானாகவே சொந்தமாக உருவாக்கியிருக்கிறார் என்பதுடன் தயாரிப்பாளர்கள் ஒவ்வொரு டைகர் படத்திலும் அவரது கதாபாத்திரத்தை தவறாமல் உச்சநிலைக்கு எடுத்து செல்கிறார்கள். நம்பமுடியாத சண்டை காட்சிகளை செய்துள்ளதற்காக கத்ரீனா கைப் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். மேலும் இதுவரை வெள்ளித்திரையில் வேறெந்த பெண்ணும் செய்திராத அளவுக்கு ஒத்தைக்கு ஒத்தை மோதும் ஆக்சன் காட்சிகளையும் செய்திருக்கிறார். ‘டைகர் 3’யில் இந்த மிகப்பெரிய ஆக்சன் காட்சிகளில் நடிப்பதற்கு தயாராவதற்கு கிட்டத்தட்ட 60 நாட்கள் வரை அவர் பயிற்சியும் ஒத்திகையும் எடுத்துக்கொண்டு தயாராகியுள்ளார்.
கத்ரீனா கூறும்போது, “தன்னுடைய குடும்பத்தையோ அல்லது நாட்டையோ அல்லது மனித நேயத்தையோ காப்பாற்றவேண்டும் என்கிற நிலை வரும்போது ஒரு பெண்ணால் செய்ய முடியாதது என எதுவுமில்லை என்பதைத்தான் ‘டைகர் 3’ காட்டுகிறது. வளர்ப்பவர்களாக மட்டுமல்ல கடுமையான பாதுகாவலர்களாகவும் பெண்களால் இருக்க முடியும் என்பதை மக்களிடம் சொல்வதற்கு சோயா போன்ற ஒரு கதாபாத்திரம் முக்கியமானது மற்றும் அவசியமானதும் கூட.. என்னுடைய திரையுலக பயணத்தில் சோயா அதிகப்படியாக போற்றப்படக்கூடிய கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும்.” என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், “ அவளது மன உறுதியாலும் தைரியத்தாலும் எந்த ஒருவருடனும் அவள் எப்படி பொருத்திக்கொள்ள முடிகிறது என்பதை நான் ரசிக்கிறேன். அவள் ஒரு சண்டையிலிருந்து எப்போதும் பின்வாங்கியதில்லை. ஆக்சன் என வரும்போது ஆணை விட மிகச்சிறப்பாக அவளால் செயல்பட முடியும். சோயாவின் ஆக்சன் ஸ்டைல் என்பது தனித்துவமானது. இந்த டிரைலரில் நீங்கள் பார்த்த சில காட்சிகளை போல மிகவும் சிக்கலான சண்டைக்காட்சிகளை கூட அவளால் எளிதாக மேற்கொள்ள முடியும். சோயா மொத்த எதிரி படைகளையும் எதிர்ப்பவள் மட்டுமல்ல, அவளே அனைவருடன் தானாகவே சண்டையிட கூடியவள்” என்கிறார்.
யஷ்ராஜ் பிலிம்ஸ் சோயா கதாபாத்திரத்தை ஒவ்வொரு படத்திலும் மிகவும் கடுமையாக உருவாக்கி இருக்கிறார்கள் என்கிற உண்மையை கத்ரீனா ரசிக்கிறார். அவர் கூறும்போது, “ஒரு ஜானராக ஆக்சனை நான் விரும்புவதுடன் ஒரு உளவாளியாக நடிக்கவேண்டும் என்கிற என் கனவும் நனவாகியுள்ளது. என்னுடைய பெருமையான அடையாளங்களில் ஒன்றாக இது இருக்கப்போகிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன். அதனால் என்னுடைய 200 சதவீத உழைப்பை இந்த மூன்றாம் பாகத்திற்கு கொடுத்துள்ளேன். ஒவ்வொரு டைகர் படமும் சோயா கதாபாத்திரத்தை ஒவ்வொரு கட்டமாக உச்சத்திற்கு எடுத்து செல்கிறது. அதற்காக அவள் கடுமையாக போராடி இருக்கிறாள் என்பதுடன் அது ரத்தக்களறியாகவும் இருந்திருக்கிறது. அது தான் நான் எப்போதும் நேசிக்கின்ற இந்த கதாபாத்திரத்தின் உயிர்மூச்சு” என்கிறார்.
கத்ரீனா கூறும்போது, “’டைகர் 3’யின் ஆக்சன் காட்சிகளுக்காக குறைந்தது இரண்டு மாதங்களாவது என்னை தயார்படுத்திக்கொண்டேன். ஒரு சுறுசுறுப்பானவளாக, அதிவேகம் கொண்டவளாக, மிகப்பெரிய பலம் கொண்டவளாக சோயா இருக்கவேண்டும் என நாங்கள் விரும்பினோம். சோயா செய்திருக்கும் ஆக்சன் காட்சிகளை நீங்கள் பார்க்கும்போது உண்மையிலேயே நானும் அதனுடன் சேர்ந்து சுழல வேண்டி இருந்தது என்பதையும் என்னுடைய திரையுலக பயணத்திலேயே மிகவும் கடினமான பயிற்சியாகவும் அது இருந்தது என்பதையும் இதுபோன்ற காட்சிகள் இதற்கு முன்னாள் எந்த ஒரு பெண்ணும் முயற்சித்ததில்லை என்பதையும் நீங்கள் உணர்வீர்கள்” என்கிறார்.
மேலும் அவர் கூறும்போது, “உலகிலேயே மிகச்சிறந்த சண்டைப்பயிற்சி குழுவால் செயல்படுத்தப்பட்ட இந்த ஆக்சன் காட்சிகளை பெரிய திரையில் பார்வையாளர்கள் பார்த்து ரசிக்க இருப்பதை நினைத்து நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்” என்கிறார்.
ஆதித்யா சோப்ராவால் தயாரிக்கப்பட்டு, மனீஷ் சர்மாவால் இயக்கப்பட்டுள்ள இந்தப்படம் வரும் தீபாவளி வெளியீடாக நவ-12 ஞாயிறன்று வெளியாக இருக்கிறது. தனது அடையாள கதாபாத்திரமான யஷ்ராஜ் பிலிம்ஸின் ‘ஓஜி’யான சூப்பர் ஏஜென்ட் டைகராக நடித்துள்ள சல்மான் கானுக்கு ஜோடியாக கத்ரீனா நடித்துள்ளார்.