Breaking
February 28, 2025

Y S R பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ரியோ ராஜின் ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

‘ஸ்வீட்ஹார்ட் ‘ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாசலேஸ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார்.

எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் பொன் ராம், தேசிங் பெரியசாமி, சுரேஷ், கார்த்திக் வேணுகோபாலன், ஹரிஹரன் ராம்‌, கலையரசன் தங்கவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசுகையில், ” என் தலைவன் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக அவருக்கும் , இயக்குநருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாம் நம்முடைய மனைவிக்கு லவ் யூ என்று சொல்கிறோமோ… இல்லையோ.. ‘ஸ்வீட் ஹார்ட் ‘என்று சொல்லாமல் கடக்க முடியாது.

ஒரு திரைப்படத்தில் கவுண்டமணி அண்ணன் , ” ஏண்டா அந்த கேள்வியை என்ன பார்த்து கேட்ட?’ என ஒரு டயலாக் பேசுவார். அதே போல் இந்தப் படத்தில் அது போன்ற கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று இயக்குநருக்கு எப்படி தோன்றியது? என்று தெரியவில்லை. இந்த படத்தில் நான் ஒரு சிறப்பான வேடத்தில் நடித்திருக்கிறேன்.

கடின உழைப்பு எப்போதும் தோல்வி அடையாது என சொல்வார்கள். அதற்கு எப்போதும் உதாரணம் ரியோ ராஜ் தான். அவன் நடித்த இந்தப் படமும் ஹிட்டாகும். அடுத்த படமும் ஹிட்டாகும். அவருடைய பயணம் இனி வெற்றி தான்.

பொதுவாக காதலை சொல்ல வேண்டும் என்றால் இளையராஜா.. ஏ ஆர் ரகுமான் ஆகியோரின் பாடல்களை சொல்லித்தான் காதலைச் சொல்வார்கள். ஆனால் நான் என் வாழ்க்கையில் யுவன் சங்கர் ராஜாவின் பாடலை தான் காதலுக்காக சொன்னேன். இதற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

இயக்குநர் தேசிங் பெரியசாமி பேசுகையில், ” ஸ்வீட்ஹார்ட் என்ற இந்த படத்தின் டைட்டில் நன்றாக இருக்கிறது. இந்த படத்தைப் பற்றிய அறிவிப்பு தொடர்பாக வெளியான காணொளி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்திற்கான போஸ்டரில் நான்கு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வடிவமைத்திருப்பது சிறப்பாக இருக்கிறது . ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற என்னுடைய படத்திலும் இதே போல் தான் போஸ்டரை வடிவமைத்திருப்பேன். அதை பார்ப்பது போல் இருக்கிறது. படத்தின் முன்னோட்டம் தரமான பொழுதுபோக்காக இருந்தது. ரியோவின் தோற்றம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அது‌ நம் மண்ணின் தோற்றம். இந்த படத்தின் டிரைலரில் நல்லதொரு ‘வைப்’ ( Vibe) இருக்கிறது படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் இளன் பேசுகையில், ” யுவன் சாரை சந்தித்த பிறகு தான் என் வாழ்க்கையில் மாற்றம் நிகழ்ந்தது. இந்தப் படத்தை பற்றி எதுவும் தெரியாது. நண்பர்களிடம் ‘பியார் பிரேமா காதல்’ போல் இருக்குமா? என கேட்டேன். அதற்கு அவர் பணிவாக ‘இருக்கலாம்’ என்று சொன்னார். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு படம் சிறப்பாக இருக்கிறது. படத்தின் முன்னோட்டம் இளம் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. இப்படத்தில் உள்ள ‘ஆஸம் கிஸா..’ என்ற பாடல் வேற லெவலில் உள்ளது. யுவன் சங்கர் ராஜாவிற்கு ‘மார்டன் மாஸ்டரோ’, ‘கிங் ‘ என பல பெயர்கள் இருந்தாலும் அவருடன் பழகிய அனைவருக்கும் தெரிந்த ஒரே வார்த்தை தான் இந்த படத்தின் டைட்டில் அவர் ஒரு ஸ்வீட்ஹார்ட்.
இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் பொன் ராம் பேசுகையில், ” யுவனுடன் இணைந்து பாடல் கம்போசிங் செய்வது ஜாலியான அனுபவமாக இருக்கும். முதலில் அவரிடமிருந்து எப்படி பாடல்களை பெறுவது என்பதில் தயக்கம் இருந்தது. ஆனால் அவருடன் பத்து நிமிடம் பழகியவுடன் அவர் ஒரு ஸ்வீட் ஹார்ட் என்பதை தெரிந்து கொண்டேன்.

ரியோ நன்றாக நடிக்கிறார். அவரிடம் ஒரே ஒரு கோரிக்கையை வைக்கிறேன் பி & சி ரசிகர்களுக்காக ஒரு படத்தில் நடிக்க வேண்டும். ஏனெனில் பி & சி என்பது மிகவும் பவர்ஃபுல் மீடியம். அவர்களுக்காக ஒரு படத்தில் நடித்தால் உங்கள் வளர்ச்சி மேலும் சிறப்பாக இருக்கும்.

திரையில் ரியோவுக்கும் , கோபிகாவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. இது இளம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

இந்தப் படத்தில் இருக்கும் ‘கிஸா’ சாங் எனக்கு மிகவும் பிடிக்கும். மார்ச் 14ஆம் தேதி வெளியாகும் இந்த படம் ஸ்யூர் ஹிட். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

புது இயக்குநர்களுக்கு யுவன் சங்கர் ராஜா வாய்ப்பளிப்பதை நான் வரவேற்கிறேன். புது இயக்குநர்களை அறிமுகப்படுத்துவது என்பது சாதாரண விசயம் அல்ல. இதற்கு நம்பிக்கை அதிகம் வேண்டும். இதற்காகவும் யுவன் சங்கர் ராஜாவிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

திங்க் மியூசிக் சந்தோஷ் பேசுகையில், ” யுவன் சங்கர் ராஜாவின் தயாரிக்கும் திரைப்படத்தில் திங்க் மியூசிக் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். அழகான பீல் குட் ரொமான்டிக் திரைப்படம்.
இந்தப் படத்தில் பணியாற்றிய இயக்குநர் உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இந்த படம் வெளியான பிறகு படத்தில் இடம் பெற்ற பாடல்கள் நிறைய ரசிகர்களைக் கவரும். இந்த படத்தின் இசையில் ஒரு இன்ப அதிர்ச்சி உள்ளது. யுவன் சங்கர் ராஜா லைவ் கான்சர்ட்டிற்காக ஒரு பாடலை உருவாக்கியிருந்தார். யுவனின் ரசிகர்களுக்கு அந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். அந்தப் பாடல் இந்த படத்தில் இடம் பிடித்திருக்கிறது ” என்றார்.

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் பேசுகையில், ” ஸ்வினீத் நான் பார்த்து பழகிய நபர்களில் பாசிட்டிவானவர். ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’வில் இவருடைய பங்களிப்பு அதிகம். இவரைப் போன்ற ஒருவர் நம்முடன் இருக்கும்போது நாம் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். இந்தப் படத்தின் கதையை ஒரு பயணத்தின் போது எங்களிடம் சொன்னார். சிரித்து சிரித்து வயிறு புண்ணானது.

அவர் அனைவருக்கும் மரியாதை அளிப்பவர். அவர் இன்னும் கூடுதல் உயரத்திற்கு செல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன். இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும். இப்படி ஒரு இளம் குழுவினரை அறிமுகப்படுத்தும் யுவன் சங்கர் ராஜாவிற்கும் என்னுடைய வாழ்த்துக்களும், நன்றிகளும்.

என் முதல் ஹீரோ ரியோ ராஜ். ஸ்வீட்ஹார்ட் படத்தைப் பற்றி தொடர்ந்து நல்ல விதமாக கேள்விப்படுகிறேன். அவருக்கும் இந்த படம் பெரிய வெற்றியை வழங்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றார்.

இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் பேசுகையில், ” முதல் படம். முதல் மேடை. நிறைய பேர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

‘ஜோ’ படத்தின் பணிகள் நடைபெற்ற தருணத்திலேயே ரியோ ராஜிடம் இப்படத்தின் கதையை சொல்லிவிட்டேன். அவரும் அடுத்த படம் இதுதான் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ‘ஜோ’ படம் ஹிட்டான பிறகு ஏராளமான தயாரிப்பு நிறுவனங்கள் அவரை அணுகியது. அவர் ஏற்கனவே என்னிடம் சொன்ன வார்த்தைக்காக இந்த :ஸ்வீட்ஹார்ட்’ படத்தினை நிறைவு செய்து தந்திருக்கிறார். இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கோபிகா ரமேஷ், அருணாச்சலேஸ்வரன், ஃபௌசியா, சுரேஷ் சக்கரவர்த்தி, ரஞ்சி பணிக்கர், ரிது , கவிதா, மைதிலி, காயத்ரி, காத்தாடி ராமமூர்த்தி, துளசி மேடம் என இப்படத்தில் நடித்த அனைவருக்கும் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தில் படப்பிடிப்பை 34 நாட்களில் நிறைவு செய்தோம். இதற்காக முழு ஒத்துழைப்பை வழங்கிய ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம், 25 வது படத்தில் பணியாற்றும் கலை இயக்குநர் சிவசங்கர், படத்தொகுப்பாளர் தமிழரசன் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தின் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர். அனைவரும் சொல்வது போல் நானும் யுவனின் பாடல்களை கேட்டு தான் வளர்ந்தேன். நானும் அவருடைய மிகப்பெரிய ரசிகன். என்றாவது ஒருநாள் அவரை நேரில் சந்தித்து விட மாட்டோமா..! என்ற ஏக்கத்துடன் இருந்திருக்கிறேன். அவருடைய இசை மற்றும் தயாரிப்பில் நான் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன் என்றால்… அதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக ஒரு படத்திற்கு இயக்குநரை தான் கேப்டன் என்று சொல்வார்கள். ஆனால் இந்த படத்தை பொறுத்தவரை யுவன் சங்கர் ராஜா தான் கேப்டன். இந்த படத்தின் மூலம் என்னை போல் நிறைய பேர் அறிமுகமாகி இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் ரெடின் கிங்ஸ்லி விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் சிக்கலான சூழலில் அந்த கேரக்டர் திரையில் தோன்றும். அவரும் அதை புரிந்து கொண்டு நன்றாக நடித்திருக்கிறார். ” என்றார்.

நடிகை கோபிகா ரமேஷ் பேசுகையில், ” ஸ்வீட்ஹார்ட் எனக்கு மிகப் ஸ்பெஷலான படம். இது என்னுடைய முதல் தமிழ் படம். தமிழ் பெண்ணாக இல்லை என்றாலும் தமிழ் ரசிகர்கள் என் மீது செலுத்தும் அன்பிற்கு நன்றி.

மலையாளத்தில் உள்ளவர்களுக்கும் யுவன் சங்கர் ராஜா தான் ஃபேவரிட். எங்கள் வாழ்க்கையில் வலிகளை மறக்கச் செய்தவர் யுவன். அவர் தயாரிக்கும் இந்த படத்தில் நடித்திருப்பதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன்.

மனு என்ற கதாபாத்திரத்திற்காக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்திற்காக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதியன்று தேர்வானேன். இந்த ஒரு வருடத்தில் படக் குழுவினருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.

ரியோ ராஜ் திறமையானவர். சௌகரியமான சக நடிகர். அவருக்கும் வரிசையாக வெற்றிகள் காத்திருக்கிறது. இதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்வீட்ஹார்ட் திரைப்படம் மார்ச் 14ஆம் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’: என்றார்.

நடிகர் ரியோ ராஜ் பேசுகையில், ” இந்த மேடையில் பேசிய அனைவரும் யுவனின் ரசிகர்கள் தான். அனைவருக்கும் யுவனை மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக அவரை பிடிக்கும்.

‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அவருடைய இசையை எட்டாவது படிக்கும் போது கேட்டு ரசித்தேன். அப்போது ஆடியோ கேசட் இருந்தது. அதன் பிறகு சிடி வந்தது. அதன் பிறகு கம்ப்யூட்டரில் ப்ளே லிஸ்ட் வந்த போதும் கூட அவருடைய பாடல்கள்தான் முதலில் இருக்கும். என்னுடைய தொகுப்பாளர் பணியிலும் கூட ‘சென்னை 28 ‘படத்தில் ஜெய் கதாபாத்திரத்திற்காக யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பயன்படுத்திக்கொண்டேன். தற்போது இந்தப் படத்தில் எனக்காக யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இதற்காக அவருக்கு மகிழ்ச்சி கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்வீட்ஹார்ட் மார்ச் 14ஆம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இது ஒரு கம்ப்ளீட் ரொமான்டிக் டிராமா. யுவன் சங்கர் ராஜாவின் இசையை ரசித்து அனுபவிக்கலாம்.

இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் மீது நான் வைத்த நம்பிக்கையை அவர் காப்பாற்றி இருக்கிறார். அவர் சினிமாவை மிகவும் நேசிக்கக் கூடியவர். ‘இவர் என் மாணவர்’ என பெருமையாக சொல்வேன்.

இங்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றி நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘ஸ்வீட்ஹார்ட்’ அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய படமாக இருக்கும். இந்த திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி பிராண்ட் அம்பாசிடராக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் பாடல் ஒன்றையும் எழுதி இருக்கிறேன். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

தயாரிப்பாளர்- இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில், ” மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி.

இந்தப் படத்தின் பணிகள் எப்படி நடைபெற்றது என்றால்.. முதலில் ஒரு இன்ட்ரோ வீடியோ ஒன்றை வெளியிட்டோம். அதில் எனக்கு எதுவும் தெரியாது ஆனால் படத்தின் பணிகள் முடிவடைந்திருக்கும். ஆனால் உண்மையில் இதுதான் நடந்தது. நான் டூர் போய்விட்டு வருவதற்குள் படத்தை நிறைவு செய்திருந்தார்கள். அதன்பிறகு படத்தை பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. அதன் பிறகு தான் எனக்கு உற்சாகம் ஏற்பட்டது. அதன் பிறகு இரண்டு பாடல்களை இணைத்தோம். அதன் பிறகு இன்றைக்கு ஸ்வீட்ஹார்ட் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது. இது இயக்குநர் ஸ்வினீத்தின் கனவு. இவரைப் போன்ற ஏராளமான புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. மார்ச் 14ஆம் தேதி வெளியாகும் ‘ஸ்வீட்ஹார்ட்: படத்தை பார்க்க திரையரங்குகளில் சந்திப்போம் ” என்றார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *