தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் மொரிஷியஸ்

கவர்ச்சிகரமான மானியங்கள், கண்கவர் இலவச படப்பிடிப்பு தளங்கள் மற்றும் பல வசதிகளுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் மொரிஷியஸ்

மொரீஷியஸ் நாட்டில் படப்பிடிப்புகளை நடத்துவதில் உள்ள எண்ணற்ற நன்மைகள் குறித்து விளக்குவதற்காக மொரீஷியஸ் பொருளாதார மேம்பாட்டு வாரியம் (EDBM) மற்றும்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இடையேயான கலந்துரையாடல் ஒன்றை இந்திய திரைப்பட தயாரிப்பாளர் கலோல் தாஸ் சென்னையில் நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மொரீஷியஸ் நாட்டின் கெளரவ தூதர் மலையப்பன் நாகலிங்கம் மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது, படப்பிடிப்புக்கேற்ற அற்புதமான பல இடங்களைக் கொண்ட அழகிய நாடாக மட்டுமல்லாமல், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு இணையற்ற நன்மைகளையும்
மொரீஷியஸ் வழங்குகிறது என்று விளக்கப்பட்டது.

மொரீஷியஸில் படப்பிடிப்பை நடத்துமாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களை வரவேற்ற EDBM அதிகாரிகள், அங்கு படமாக்கப்படும் திரைப்படங்களின் மொத்த பட்ஜெட்டில் 30-40 சதவிகிதத்தை மானியமாக மொரீஷியஸ் அரசு வழங்கும் என்று தெரிவித்தனர்.

ஏ டி எல் (ATL) எனப்படும் ‘அபோவ் தி லைன்’ மானியத் திட்டத்தின் கீழ், நடிகர்கள், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், தயாரிப்பு மேலாளர் போன்ற முக்கிய குழுவினருக்கும் சிறந்த பலன்கள் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி, மொரீஷியஸ் அரசுக்கு சொந்தமான பல்வேறு கண்கவர் இடங்களில் இலவசமாக படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ளலாம். லைன் புரொடக்ஷன் சேவையை கலோல் தாஸ் கவனிப்பார்.

மொரீஷியஸ் அரசின் திரைப்பட மானியச் செயல்முறை மிகவும் எளிமையானது என்று தெரிவித்த அதிகாரிகள், கணக்குகளைச் சமர்ப்பித்த 60 நாட்களுக்குள் மானியம் வழங்கப்படும் என்றும் திட்ட ஒப்புதலுக்கு சுமார் 45 நாட்கள் ஆகும் என்றும் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் திரைப்பட பிரமுகர்கள், மொரீஷியஸ் அரசு வழங்கும் வசதிகள் மற்றும் நிதியுதவிகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததோடு, தங்களது படப்பிடிப்புகளை அந்நாட்டில் நடத்த விருப்பம் தெரிவித்தனர்.

Related Post