Breaking
November 19, 2024

“‘அந்தகன்’ பட முக்கிய கேரக்டரில் ஒரு பூனை !”-பட்டுகோட்டை பிரபாகர் ருசிகர பேட்டி !!

கோலிவுட்டை தாண்டியும் வெள்ளித்திரையில் என்றென்றும் டாப் ஸ்டார் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் மிகவும் மாஸாக நாளை ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அந்தகன்’. இயக்குநர் தியாகராஜன் இயக்கத்தில் ப்ரீத்தி தியாகராஜன் வழங்கும் இப்படத்தில் சிம்ரன், யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், கார்த்திக், யோகி பாபு, பூவையார், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், ஊர்வசி உள்ளிட்ட மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் புரொமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ‘அந்தகன்’ வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகரிடம் இப்பட அனுபவம் குறித்துக் கேட்டப் போது, ’’நாளை முதல்..இந்தியில் மிகப் பெரிய வெற்றியைத் தொட்ட ‘அந்தாதுன்’ படத்தின் புதிய தமிழ் வடிவம் ‘அந்தகன்’! அந்தப் படம் பார்க்காதவர்களுக்கு சுவாரசியமான திருப்பங்கள் கொண்ட திரைக்கதை த்ரில் அனுபவம் கொடுக்கும். பார்த்தவர்களுக்கு தமிழுக்காக செய்யப்பட்ட மாற்றங்கள் புதிய அனுபவம் கொடுக்கும்.

நாணயமிக்க தயாரிப்பாளரும்,(இந்தப் படத்திற்கு நான் வசனம் எழுதியபோது படப்பிடிப்பு துவங்கும் முன்பாகவே என் ஊதியத் தொகையைக் கொடுத்தாராக்கும்) . நினைத்தது நினைத்தபடி வரவேண்டும் என்பதில் பிடிவாதம் கொண்ட இயக்குனருமான திரு. தியாகராஜனுடன் முதல் முறையாகவும், பிரபல நட்சத்திரம் என்கிற பந்தா ஒரு சதவிகிதம் கூட இல்லாத இனிய நண்பர் பிரஷாந்துடன் மூன்றாவது முறையாகவும் இணைந்து பணியாற்றியுள்ளேன்.

இயக்குநர் தியாகராஜன் பற்றி சொல்வதானால் படு எனர்ஜிடிக் பர்சனாலிட்டி. இப்படத்துக்கு முன்பே சில முறை சந்தித்து பேசி இருக்கிறேன். அப்படி பேசும் போதெல்லாம் வார்த்தைகளை கவனமாக கோர்த்து அளவாக பேசும் அவரின் பாணி வியக்க வைக்கும். குறிப்பாக பேச வேண்டியதைத் தவிர எதையும் யோசிக்க கூட விட மாட்டார்..! பார்க்க கொஞ்சம் மெஜஸ்ட்டிக்காக தோற்றமளிக்கும் அவரிம் மனதின் மென்மை பஞ்சை விட இலகுவானது என்பதை புரிந்து கொள்ளலாம். அப்படி இருப்பதால்தான் இப்படி ஒரு உயர்ந்த நிலையில் இருக்கிறார் . அவர் இந்த படத்தை தேர்ந்த மிலிட்டரி மேன் போல் செயல்பட்டு அருமையாக உருவாக்கி இருக்கிறார்.

நாயகன் பிரஷாந்தும் படு பிரண்ட்லி.. ஒரு போதும் தன் அந்தஸ்தைக் காட்டவோ, பின்னணியை வெளிப்படுத்தவோ விரும்பாதாவர் என்பதே அவரின் பலம்.. அதிலும் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டராக பூனை ஒன்று வருகிறது.. அப்பூனை ரோலுடன் ஐக்கியமாக வேண்டும் என்பதற்காக ஒரு குட்டி பூனையை தத்தெடுத்து வீட்டிலே வைத்து வளர்த்து அதனுடன் நடித்துள்ள ஒவ்வொரு காட்சியும் க்ளாப்ஸ் அள்ளும் என்பது நிச்சயம். அது மட்டுமில்லாமல் பிரஷாந்த் லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியில் பியானோ இசையில் நான்காவது கிரேடில் தேர்ச்சி பெற்றவர் என்பதால் பியானோ வாசிக்கும் காட்சிகள் எல்லாம் வேற லெவல். மொத்ததில் இந்தப் படம் வெற்றிபெற்றால் இயக்குனர் பல புதிய படங்களைத் தயாரிப்பார். நல்ல நடிப்புத்திறன் கொண்ட பிரஷாந்த் வெற்றி வலம் வருவார். எனவே வெற்றிக்கு வாழ்த்துங்கள்.திரையரங்கில் படம் பார்த்து ஆதரியுங்கள். நன்றி’’என்றார்

Related Post