Breaking
January 22, 2025

விதார்த் நடிக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

‘யதார்த்த நாயகன்’ விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

கமலா திரையரங்கில் நடைபெற்ற விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், கார்த்திகேயன், கனல் கண்ணன், தயாரிப்பாளர் – நடிகர் பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். படத்தின் இசையை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான பூச்சி முருகன் வெளியிட, சிறப்பு விருந்தினர்களும், படக் குழுவினரும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

ஷாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். பிரவீன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை கல்லை தேவா கவனித்திருக்கிறார். கிரைம் திரில்லர் வகையிலான இந்த திரைப்படத்தை எம் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் பத்ரி மற்றும் ஸ்ரீ விஷ்ணு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ விஷ்ணு வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசுகையில், ”எங்களின் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும், படக் குழுவினருக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி. எம் சினிமா புரொடக்ஷன் எனும் பெயரில் பட நிறுவனத்தை தொடங்கி, முதல் தயாரிப்பாக ‘லாந்தர்’ திரைப்படத்தை தயாரித்திருக்கிறோம். இந்தத் திரைப்படம் ஜூன் 21ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

படத்தின் இசையமைப்பாளர் எம். எஸ். பிரவீன் பேசுகையில், ”சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதியன்று பள்ளியில் மாணவர்கள் அனைவரும் கூடி இருந்தனர். மாணவர்கள் முன்னிலையில் என்னை மேடையேற்றி பாடுமாறு ஆசிரியர்கள் சொல்கிறார்கள். ஆனால் என்னால் பாட முடியவில்லை.‌ அப்போது அந்த ஆசிரியர், ‘இன்று இல்லை என்றாலும், என்றாவது ஒருநாள் நீ நன்றாக பாடுவாய்’ என ஊக்கமளித்துவிட்டு சென்றுவிட்டார். ஆனால் எனக்கு அது மிகப் பெரிய தோல்வியாக மனதில் பட்டது. மேடை ஏறுவதற்கு முதல் நாள் முழுவதும் பயிற்சி அளித்தார்கள். மேடை ஏறி ஒரு வரியை கூட பாடாமல் இறங்கி விட்டேன்.‌ இதனால் எனக்கும், இசைக்கும் தொடர்பே இல்லை என நினைத்து விட்டேன்.

சிறிது நாள் கழித்து நான் விடுதியில் தங்கி இருந்தேன். அப்போது அங்கு ஒருவர் பழைய ஹார்மோனிய இசைக்கருவியை இசைத்துக்கொண்டிருந்தார். நான் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்து இசைக்கிறாயா என கேட்டார். இல்லை எனக்கும், இசைக்கும் வெகு தூரம் என்று சொல்லிவிட்டு, அவர் வாசிப்பதை தொடர்ந்து கவனிக்க தொடங்கினேன். அவர் சிறிது நேரம் வாசித்து விட்டு வெளியே சென்று விட்டார்.‌ அப்போது ஹார்மோனியத்தை வாசித்துப் பார்க்கலாமே என வாசிக்க தொடங்கினேன். அருகில் இருக்கும் ஆலயத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும் பக்தி பாடலுக்கு ஏற்ப என்னுடைய கைவிரல்கள் தானாகவே ஹார்மோனியத்தில் வாசிக்கத் தொடங்கின. ஒரு புள்ளியில் தான் நான் அதனை கவனித்தேன், எனக்கும் இசை வருமென்று உணர்ந்தேன்.‌ பாடல்களைக் கேட்டு வாசிக்க முடியும் என நம்பினேன். அப்போதுதான் என்னுடைய இசைப் பயணம் தொடங்கியது. என்னுடைய பெற்றோர்கள், ‘இசையை கற்றுக்கொள். ஆனால் ஒருபோதும் படிப்பை கைவிடாதே’ என்றனர்.

கல்லூரி படிப்பை நிறைவு செய்தவுடன், இசையில் ஏதாவது சாதிக்கலாம் என நினைத்தேன். அப்போதுதான் பாடலாசிரியர் தேவாவின் அறிமுகமும், நட்பும் கிடைத்தது. இருவரும் இணைந்து பாடல்களை உருவாக்கத் தொடங்கினோம். பிறகு திரைப்பட இயக்குநர்களை சந்தித்து வாய்ப்பு கேட்க தொடங்கினோம்.

ஒரு நாள் ‘ராட்சசன்’ பட வெளியீட்டின் போது இயக்குநர் ஷாஜி சலீமை சந்தித்தோம். அவரிடம் வாய்ப்பு கேட்டபோது, முதலில் எங்களது பாடல்களை கேட்டார். ஒரு பாடலை திரும்பத் திரும்பக் கேட்டார் அப்போது ‘இந்த இடம் நன்றாக இருக்கிறது. இந்த வரி நன்றாக இருக்கிறது’ என தொடர்ச்சியாக பாராட்டிக் கொண்டிருந்தார். ஒரு கலைஞருக்கு பாராட்டு தான் சிறப்பாக இயங்க வைப்பதற்கான எனர்ஜி.

அதன் பிறகு நிறைய பாடல்களை நானும், தேவாவும் இணைந்து உருவாக்கினோம். எல்லா பாடல்களையும் இயக்குநர் ஷாஜி சலீம் கேட்டு தன் கருத்துகளை பகிர்ந்து கொள்வார்.

ஆறு வருட தேடலுக்குப் பிறகு அவர் இயக்கும் ‘லாந்தர்’ படத்தில் இசையமைப்பதற்கான வாய்ப்பை வழங்கினார். இந்தப் படத்திற்கான முதல் பாடலை இசையமைத்து அவரிடம் வழங்கிய போது, அதைக் கேட்டு அவர் மெலிதாக புன்னகைத்தவுடன் வெற்றி பெற்று விட்டோம் என்ற எண்ணம் எங்களுக்குள் ஏற்பட்டது.‌ அதன் பிறகு இந்த படத்திற்காக நான்கு பாடல்களை உருவாக்கினோம். ஒவ்வொரு பாடலின் போதும் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.

படத்தின் இசைக்கு சிறப்பாக உதவியவர் ஸ்ரீ விஷ்ணு.‌ அவர் வழங்கிய சின்ன சின்ன ஆலோசனைகள் படத்தின் பாடல்கள் சிறப்பாக வருவதற்கு பேருதவி புரிந்தன. இதற்காக இந்த தருணத்தில் அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

படத்தின் நாயகி ஸ்வேதா டோரத்தி பேசுவையில், ”லாந்தர் என்பது இரவின் அடையாளம். இந்தப் படம் எனக்கு நிறைய நண்பர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.‌ இதற்காகவே படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

எம் சினிமாஸ் பட நிறுவனம் போல் ஒரு தயாரிப்பாளர் கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி..படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் கண்ணசைவுக்கு ஏற்ப ஒளிப்பதிவாளர் ஞானசௌந்தர் இயங்குவார். அந்த அளவிற்கு இயக்குநருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் இடையே ஒரு புரிதல் இருந்தது.

படத்தின் இசையமைப்பாளரான பிரவீனின் பாடல்களுக்கு நான் பெரிய ரசிகை ஆகிவிட்டேன். தூய தமிழில் பாடல்களை வழங்கியதற்காக பாடலாசிரியர்கள் தேவா மற்றும் உமாதேவிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் ரவிக்குமார் பேசுகையில், ”படக்குழுவினர் அனைவருக்கும் முதலில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கிட்டத்தட்ட இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இது முதல் படம். அதனால் தங்களது இந்த படைப்பை உயிரைக் கொடுத்து உருவாக்கி இருப்பார்கள். தயாரிப்பாளருக்கும் இது முதல் திரைப்படம் என்பதால் அவரும் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இயக்குநர் சலீம் திரைப்படத்துறையில் நுழைவதற்கு முன் வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றினார். எனக்கு அவர் ஆட்டோ ஓட்டுநராகத்தான் அறிமுகமானார். அப்போதே சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்றும் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் ஆட்டோ ஓட்டும் தொழிலை நேர்மையாக செய்தார்.‌ இவரது நேர்மை குறித்து பல செய்தித்தாள்களில் புகைப்படத்துடன் செய்தியும் வெளியாகி இருக்கிறது.

குடும்பத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டு, சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற அவரது முயற்சி எனக்கு வியப்பை அளித்தது. அவரிடம் யாராவது அரை மணி நேரம் பேசினால் போதும், அவரிடம் அவ்வளவு கதைகள் உள்ளன.‌ வித்தியாசமான கதாபாத்திரங்களை பற்றியும், கதைக்கு தேவையான விஷயங்களை பற்றியும் விரிவாக சொல்வார்.

நடிகர் விதார்த்திற்கு நன்றி. அறிமுகமற்ற படைப்பாளிகளை கூட, அவர்களுடைய உணர்வுகளை மதித்து கதையைக் கேட்டு, மிக எளிமையாக பழகும் நபர் அவர். அதனால் அவருடன் இன்று வரை ஒரு நல்ல நட்பு தொடர்கிறது,” என்றார்.

நாயகன் விதார்த் பேசுகையில், ”நாயகன் போலீஸ் என்று சொன்னவுடன் மூன்று மாதம் நேரம் ஒதுக்குங்கள், உடலை முறுக்கிக் கொண்டு வருகிறேன் என்றேன். இதற்கு இயக்குநர் அந்த கதாபாத்திரம் பொதுமக்களின் பிரதிநிதி. அதனால் நீங்கள் இப்போது இருக்கும் தோற்றத்திலேயே வாருங்கள் என்றார்.

படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், இசையமைப்பாளர் என அனைவரும் புதுமுகங்கள். இந்த திரைப்படத்தின் மூலம் அவர்களின் திறமை வெளியே தெரியும்.‌

பாடலாசிரியர் தேவாவிற்கு சிறப்பான எதிர்காலம் உண்டு. நான் ஏராளமான தயாரிப்பாளர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் பத்ரி போன்ற ஒரு தன்னடக்கம் மிகுந்த மனிதரை சந்தித்ததில்லை.‌ பார்ப்பதற்கு எளிமையான மனிதராக இருந்தாலும் அவர் பெரிய ஆள். இவரிடம் ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றுகிறார்கள். அனைவரும் விரும்பும் ஒரே முதலாளி இவர்தான். சினிமா மீது இவர் வைத்திருக்கும் ஆர்வத்தின் காரணமாகவே இவர் வெற்றி பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.‌ ஏனெனில் இவர் ‘லாந்தர்’ படத்தின் மூலம் வெற்றியை பெற்றால் தொடர்ந்து படங்களை தயாரிப்பார்,” என்றார்.

இயக்குநர் ஷாஜீ சலீம் பேசுகையில், ”என்னுடைய தயாரிப்பாளர் பத்ரி அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.‌ ஏனெனில் நான் சொன்ன கதையை நம்பி முதலீடு செய்து எந்த தடங்கலும் இல்லாமல் படத்தின் பணியை நிறைவு செய்திருக்கிறார்.‌ அவருடன் பழகிய இந்த ஒரு வருடத்தில் தான் என்னுடைய பேங்க் பேலன்ஸ் ஏறி இருக்கிறது.‌ பணத்தை கேட்பதற்கு முன்பே என்னுடைய வங்கி கணக்கில் செலுத்தி விடுவார். என்னை மட்டுமல்ல ஒட்டுமொத்த படக் குழுவினர் மீதும் அவருடைய அக்கறையான அரவணைப்பு இருந்தது.‌

என்னுடைய தந்தையார் கே. எல். முகமது ஷெரிப் என்னுடைய சிறிய வயதில் நாவல்களை வாங்கி தந்து படிக்கச் சொல்லி ஊக்கப்படுத்துவார். அதன் பிறகு வாசித்த கதைகளை சொல்லச் சொல்லி கேட்பார்.‌ அதன் பிறகு சில கதைகளை எழுதச் சொல்லி பயிற்சியும் தந்திருக்கிறார். அவர் இன்று இல்லை என்றாலும் அன்று அவர் அளித்த பயிற்சிதான் இன்று என்னை மேடையேற்றி இருக்கிறது.

நான் திரைத்துறையில் வாய்ப்பு தேடுவதற்கு முன் என் மாமியாரிடம் தான் அனுமதி கேட்டேன். ஏனெனில் எனக்கென்று ஒரு குடும்பம் இருந்தது. அந்த குடும்பத்தை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, திரைத் துறையில் வாய்ப்பு தேடத் தொடங்கினேன். அந்த தருணத்தில் ‘உங்களால் வெற்றி பெற முடியும். நீங்கள் சென்று வாருங்கள். நான் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன்’ என்று அவர் உறுதிமொழி அளித்தார். அவர் தாயாக இருந்து குடும்பத்தை பாதுகாத்ததால் தான் என்னால் திரைத்துறையில் பணியாற்ற முடிந்தது.

இதனைத் தொடர்ந்து என்னுடைய மனைவி சஜிதா பானு. மற்றவர்கள் செய்த உதவியை வேறு எந்த வகையிலாவது அவர்களுக்கு என்னால் பதிலுக்கு செய்திட இயலும். ஆனால் எனக்காக என்னுடைய மனைவி பதினைந்து ஆண்டுகாலம் வாழ்க்கையை தியாகம் செய்தார். அதை எந்த வகையிலும் என்னால் திருப்பித் தர இயலாது. இனிமேல் அவர்களை சிறப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.‌ இவர் இல்லையென்றால் இன்று நான் மேடையில் ஏறி பேசியிருக்க இயலாது.

இத்திரைப்படத்தை இருபத்தி மூன்று நாட்களில் படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்வதற்கு கடுமையாக உழைத்தவர்கள் என்னுடைய உதவி இயக்குநர்கள். அவர்கள் உதவி இயக்குநர்கள் அல்ல. உதவிய இயக்குநர்கள். இவர்களைத் தொடர்ந்து படப்பிடிப்பு முதல் தற்போது வரை உதவிக் கொண்டிருக்கும் தயாரிப்பு குழுவினருக்கும் நன்றி.

படத்தின் இசையமைப்பாளரான பிரவீன் எங்களுடைய நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறார். பாடல்களையும், பின்னணி இசையும் சிறப்பாக வழங்கியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், கலை இயக்குநர், பாடலாசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், படத்தில் நடித்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் திரைப்படத்தை இயக்கும் இயக்குநர்களுக்கு விதார்த் போன்றதொரு அனுபவம் வாய்ந்த நடிகர் கிடைத்துவிட்டால் ஐம்பது சதவீத சுமை குறைந்து விடும். ஏனெனில் கதை சொல்லும் போதே அவர் தனக்கான பங்களிப்பை தீர்மானித்து விடுவார். அவரிடம் படபிடிப்பு தளத்தில் காட்சிகளையும், வசனங்களையும் விளக்க வேண்டிய அவசியம் இருக்காது. கதாபாத்திரத்திற்கு அவ்வளவு நம்பகத்தன்மையுடன் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார்.

இந்தப் படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் குறித்து சில வரிகளில் தான் விவரித்தேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நான் எதிர்பார்த்ததை விட அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு வருகை தந்திருந்தார். அவரைப் பார்த்தவுடன் நான் வியந்து விட்டேன்.‌ இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

Related Post