‘குளோபல் ஸ்டார்’ ராம் சரணின் ‘RC 16’ படத்தின் தொடக்க விழா, சர்வதேச அளவில் பாராட்டினைப் பெற்ற தொழில்நுட்ப குழுவுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.
இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் காவியப்படைப்பான ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க நடிப்பிற்குப் பிறகு, உலகளாவிய நட்சத்திர நடிகரான ராம் சரணின் ரசிகர்கள் பட்டாளமும், நட்சத்திர அந்தஸ்தும் உலகம் முழுவதும் உயர்ந்துள்ளது. இவர் தற்போது பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அரசியல் திரில்லர் திரைப்படமான ‘கேம் சேஞ்சர்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.
ராம்சரண் – இப்படத்தை தொடர்ந்து நட்சத்திர இயக்குநரான புச்சி பாபு சனாவுடன் ‘RC16’ எனும் திரைப்படத்தில் இணைகிறார் என்பது அனைவரையும் உற்சாகப்படுத்தியது. இந்த திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு சர்வதேச தரத்தில் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகிறது. விருத்தி இன்ஃப்ரா எனும் நிறுவனத்தின் உரிமையாளரான வெங்கட சதீஷ் கிலாறு திரைப்படங்கள் மீதான அவரது பிரத்யேகமான ஆர்வத்திற்காக நன்கு அறியப்பட்டவர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் நெருங்கி பழகிய பிறகு, அவர் ஒரு உயரிய தயாரிப்பு தரத்துடன் திரைப்பட தயாரிப்பில் களமிறங்கும் தனித்துவமிக்க முடிவை மேற்கொண்டார்.
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ராம் சரணின் அடுத்த படமான ‘RC 16’ படத்தின் முக்கிய நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற தொழில்நுட்ப குழுவினரும் இணைந்தனர். தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் முன்னிலை வகித்தனர்.
இப்படத்தை தனது முதல் திரைப்படமான ‘உப்பென்னா’ படத்திற்காக தேசிய விருதை வென்ற இயக்குநரும், பிரபல இயக்குநர் சுகுமாரின் உதவியாளருமான புச்சி பாபு சனா இயக்குகிறார்.
‘RC16’ – கிராமப்புற பின்னணியில் உணர்ச்சிகரமான.. உணர்வுபூர்வமான..
பயணத்திற்கு அழைத்துச் செல்வதாக உறுதியளிக்கிறது.
மறைந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், ராம்சரணின் தந்தை ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி மற்றும் ஸ்ரீதேவி ஆகியோருக்கு இடையேயான வெற்றிகரமான கூட்டணிக்கான ஏக்கத்தை தூண்டும் வகையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
‘RC16’ படத்தின் தொடக்க விழாவில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி, நட்சத்திர இயக்குநர் ஷங்கர், பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான சுகுமார், பிரபல தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், தில் ராஜு, சிரீஷ், போனி கபூர், சாஹூ கராபதி, ராம் அச்சந்தா, எம்எல்ஏ ரவி கோட்டிபட்டி, சித்தாரா நிறுவனத்தின் வம்சி, யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் வம்சி கிருஷ்ண ரெட்டி மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
காலை 10 :10 மணிக்கு பிரம்மாண்டமான முறையில் பாரம்பரிய பூஜையுடன் விழா தொடங்கியது. பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் படத்தின் ஸ்கிரிப்டை இயக்குநர் புச்சி பாபு சனாவிடம் ஒப்படைத்தார். ராம்சரணின் ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்கும் நட்சத்திர இயக்குநர் ஷங்கர் முதல் காட்சியை இயக்க, போனி கபூர் மற்றும் அன்மோல் சர்மா கேமிராவை சுவிட்ச் ஆன் செய்ய, மெகா ஸ்டார் சிரஞ்சீவி கிளாப் அடிக்க, ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடித்தனர்.
இயக்குநர் புச்சி பாபு சனா பேசுகையில், ” மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இவ்விழாவிற்கு வருகை தந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். மதிப்புக்குரிய விருந்தினர்கள் மற்றும் எனது மரியாதைக்குரிய வழிகாட்டிகளால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். எனது இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ‘ரங்கஸ்தலம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். அதன் போது ராம்சரணின் அறிமுகமும், நட்பும், அன்பும் கிடைத்தது. இந்த வாய்ப்பை வழங்கியதற்காக ராம்சரணுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்துவதில் உறுதியாக இருக்கிறேன்.
ரூபன் போன்ற புகழ்பெற்ற திறமையாளர்கள் என்னுடன் இணைந்துள்ளனர். ஆஸ்கார் விருது பெற்ற ஏ. ஆர். ரஹ்மான் என்னுடைய இரண்டாவது படத்திற்கு இசையமைக்கிறார். இதன் மூலம் என்னுடைய ஒரு கனவு நனவானது. ராம் சரண், சுகுமார், நவீன் மற்றும் சதீஷ் ஆகியோருக்கும் நன்றி. மேலும் இந்த திரைப்படத்தில் நாயகியாக ஜான்வியை கற்பனை செய்ததும், அதை நிறைவேற்றியதற்காக என்னுடைய குரு சுகுமாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இயக்குநரும், தயாரிப்பாளருமான சுகுமார் பேசுகையில், ” புச்சி பாபுவின் இலட்சியத்தையும், உறுதியையும் பாராட்டுகிறேன். விஜய் சேதுபதியை நடிக்க வைப்பதிலும், ராம்சரண் மற்றும் ஏ ஆர் ஆர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதிலும், அவருடைய துணிச்சலான முடிவுகளை பாராட்டுகிறேன். சில கணக்குகளை சொல்லிக் கொடுத்ததால் நான் குருவானேன் என்று நான் அடிக்கடி கேலி செய்திருக்கிறேன். ஆனால் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால்.. புச்சி பாபு என்னிடம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை. அவர் திறமையுடனும் எப்போதும் பணிவுடனும் பணியாற்றுபவர். புச்சி பாபுவின் ஸ்கிரிப்ட் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அவரது விடாமுயற்சியையும் பாராட்டுகிறேன்” என்றார்.
ஏ. ஆர். ரஹ்மான் பேசுகையில், ”புச்சி பாபுவின் சினிமா ஆர்வத்தை பாராட்டுகிறேன். இந்த திரைப்படத்தில் பாடல்களுக்கான சூழலை அவர் விளக்கிய விதம் உற்சாகமாக இருந்தது. மேலும் இப்படத்தில் பணியாற்றும் அனைவருக்கும், ராம் சரணுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.
ராம் சரண் பேசுகையில், புச்சி பாபுவின் சினிமா மீதான அதீத காதலை பாராட்டி அவருடனும்
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடனும் இணைந்து பணிபுரிவது, தனக்கு கிடைத்த பெருமை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் முதல் முறையாக ஜான்வி கபூருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ராம் சரண், அவரது தந்தை சிரஞ்சீவியும், ஜான்வி கபூரின் தாயார் ஶ்ரீதேவியும் இணைந்து நடித்த “ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி”
படத்தினை நினைவு கூர்ந்தது, நானும் ஜான்வி கபூரும் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினார்கள் இப்போது அது நிறைவேறியுள்ளது மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார்.
ஜான்வி கபூர் பேசுகையில், ” இந்தத் திரைப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தில் நடிப்பதற்காக என்னை அணுகிய இயக்குநர் புச்சிபாபுவிற்கு நன்றி தெரிவிக்கிறேன். பட குழுவினரின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி” என்றார்.
தயாரிப்பாளர் போனி கபூர் பேசுகையில், ” ராம் சரண் கொடுத்த வாய்ப்பின் மூலம் தெலுங்கு படங்களை தயாரிக்கும் ஆர்வத்தை பெற்றிருக்கிறேன். புச்சிபாபுவின் ‘உப்பென்னா’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விரும்புகிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் நவீன் பேசுகையில், ” இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கு நன்றி. இயக்குநர் புச்சி பாபுவின் கதை சொல்லும் திறனால் இப்படம் வெற்றி பெறும் என்ன உறுதியாக சொல்லலாம்” என்றார்.
‘RC 16’ படம் சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற தொழில்நுட்ப குழுவினரை கொண்டுள்ளது. இரண்டு ஆஸ்கார் விருது பெற்ற ஏ. ஆர். ரஹ்மான், இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு இப்படத்தின் மூலம் தெலுங்கு திரைப்படத்திற்கு மீண்டும் இசையமைக்கிறார். விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ‘ரங்கஸ்தலம்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ராம்சரணுடன் இணைந்திருக்கிறார்.
அகாடமி விருதுகள், விமர்சகர்களின் சாய்ஸ் திரைப்பட விருது, கோல்டன் குளோப் விருது, தேசிய திரைப்பட விருது, நந்தி விருது உட்பட்ட ஏராளமான விருதுகளை பெற்ற பாடலாசிரியர் சந்திரபோஸ் இப்படத்தின் பாடல்களை எழுதுகிறார். படத்தொகுப்பில் மேஸ்ட்ரோவாக திகழும் ஆண்டனி ரூபன் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். அதிரடி சண்டை பயிற்சி இயக்குநர் சுப்ரீம் சுந்தர் இப்படத்திற்கு ஆக்சன் காட்சிகளை அமைக்கிறார்.
கலை இயக்குநர் அவினாஷ் கொல்லாவின் பிரத்யேகமான அரங்க அமைப்பு… காட்சியின் பிரம்மாண்டத்தை அதிகரிக்கும். இந்தியாவின் சிறந்த ஆடை வடிவமைப்பாளரான தீபாலி நூர் இப்படத்தின் தொழில்நுட்ப குழுவில் இணைந்திருக்கிறார். தீபாலி நூரின் டிசைன்கள்- நடிகர்களின் உடையில் தனித்துவமான மற்றும் நாகரீகமான தோற்றத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறது. இந்தத் திரைப்படத்தின் விளம்பர வடிவமைப்பை பிரபல விளம்பர வடிவமைப்பாளரான கபிலன் மேற்கொள்கிறார்.
‘ரங்கஸ்தலம்’, ‘புஷ்பா’ படங்களில் பணியாற்றியதற்காக புகழ்பெற்ற நட்சத்திர இயக்குநர் சுகுமார்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சுகுமார் ரைட்டிங்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் ‘RC 16’ என்ற படத்தை வழங்குகிறார். விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் வெங்கட சதீஷ் கிலாறு இப்படத்தை தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தின் தயாரிப்பு தரம் சர்வதேச அளவிலானது. மேலும் இப்படத்தைப் பற்றிய புதிய அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்திருங்கள்.