Breaking
January 22, 2025

நடிகர் வெற்றி நடிக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு ஆசியளித்த இயற்கை

‘எட்டு தோட்டாக்கள்’ வெற்றி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் விரைவில் வெளியாகும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் சிவா .ஆர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தில் வெற்றி, மதுரா, விவேக் பிரசன்னா, ஹரிஷ் பெராடி, ‘அருவி’ மதன் குமார், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். கே. உதயகுமார் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை காசி விஸ்வநாத் மேற்கொண்டிருக்கிறார். ரொமான்டிக் ட்ராமா ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை 3 S பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் சிவா. ஆர் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் படத்தின் வெளியிட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” ஆலன் ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை தேடல்… மற்றும் ஓர் அழுத்தமான காதல் களம்… இந்தக் களம் படமாக்கப்பட்டபோது கொடைக்கானலில் கடும் மழையும், குளிரும் உடன் பயணித்தது. சென்னையில் படமாக்கப்பட்ட போது புயலும், காற்றும் இந்த காதலை ஆரத் தழுவியது. வாரணாசியிலும், ரிஷிகேசிலும் படமாக்கப்பட்ட போது பனிக்காற்றும், கடும் குளிரும் கூடவே இருந்து தாலாட்டியது. இப்படி இயற்கை அன்னை ஆசீர்வதித்த இந்த காதலை தமிழ் ரசிகர்களின் பார்வைகளுக்கு பரிமாற.. இறுதி கட்ட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறோம்.

‘இசைப்புதல்வன்’ மனோஜ் கிருஷ்ணாவின் இசை மெட்டிற்கு கவிஞர் கார்த்திக் நேத்தா பாடல் வரிகளை எழுத, பின்னணி பாடகர் சங்கர் மகாதேவனின் வசீகர குரலில் ‘வாரணாசியில் மனித பிறப்பின் ரகசியங்களை சிவனைப் பார்த்து கேட்பது போல்..’ ஒரு பாடலும்.., இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தன் காந்தக் குரலால் காதலில் பரிதவிக்க ஒரு பாடலும்… . பாடகிகள் சின்மயியும், மும்பை நிகிதா காந்தியும் தங்களின் தேனினும் இனிய குரலால் காதலை ஆரத் தழுவ தலா ஒரு பாடலும்..என இந்த நான்கு கானங்களும் உங்கள் செவிகளுக்கு செந்தமிழில் உள்புக.. இசையின் தாளலயங்களில் தாலாட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. விரைவில் உங்கள் செவி வழியாக இதயத்தில் தஞ்சமடையவும் காத்திருக்கிறது.

இந்த காதல் காவியத்தில் ‘எட்டு தோட்டாக்கள்’ வெற்றி கதையின் நாயகனாகவும், நாயகிகளாக ஜெர்மன் மதுரா மற்றும் அனு சித்தாராவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஹரிஷ் பெராடி, மதன்குமார், விவேக் பிரசன்னா, கருணாகரன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை காண காத்திருங்கள்.‌ உங்களை ‘ஆலன்’ வெகு விரைவில் வெண் திரையில் சந்திப்பான்.. காதலின் வாசத்துடன்…” என்றார்.

Related Post