



ஏஎஸ்ஏ புரொடக்ஷன் மற்றும் ஐரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஆர்யன் இயக்கத்தில் இந்தியா, பாங்காக், இலங்கை மற்றும் நேபாளத்தில் உருவாகும் பான்-இந்தியா சாகச திரில்லர் திரைப்படம் ‘சத்தியமங்கலா’
உலகின் அதிவேக ஆவணப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்தவரும் குறும்படத்திற்காக சர்வதேச விருதுகளை வென்றவருமான ஆர்யன், ‘சத்தியமங்கலா’ என்ற பான்-இந்தியா திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை ஏஎஸ்ஏ புரொடக்ஷன் மற்றும் அயிரா புரொடக்ஷன்ஸ் பேனர்களில் ஷங்கர் பி மற்றும் ஷசிரேகா நாயுடு தயாரிக்கின்றனர்.
‘கோலி சோடா’ புகழ் முனிகிருஷ்ணா நாயகனாக நடிக்கும் ‘சத்தியமங்கலா’ படத்தில் கதாநாயகியாக கனக் பாண்டே நடிக்கிறார். தி கிரேட் காளி (WWE உலக சாம்பியன்), பாலிவுட் நடிகர் அர்பாஸ் கான், ராதா ரவி, சரிதா, ரவி காலே, ரெடின் கிங்ஸ்லி, ‘பாகுபலி’ பிரபாகர், விஜய் சிந்தூர், மனேதேஷ் ஹிராமத் மற்றும் சஞ்சய் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படம் பற்றி இயக்குநர் ஆர்யன் பேசுகையில், “காடுகளின் பின்னணியில் விறுவிறுப்பான சாகச திரில்லராக ‘சத்தியமங்கலா’ உருவாகி வருகிறது. இப்படத்தில் தான் ஏற்றிருக்கும் மிகவும் சவாலான பாத்திரத்திற்காக முனிகிருஷ்ணாவின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு அசாத்தியமானது. இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினரும் தங்கள் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாங்காக், நேபாளம் போன்ற இடங்களில் 32 நாட்களில் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். இலங்கை, பாங்காக், நேபாளம், தமிழ்நாடு, கர்நாடக வனம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இரண்டாவது கட்டம் படமாக்கப்படுகிறது. மிகவும் சிறப்பாக இப்படம் உருவாகி வருகிறது,” என்றார்.
ஆர்யன் மேலும் கூறியதாவது: “இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களான ஏஎஸ்ஏ புரொடக்ஷன் மற்றும் ஐரா நிறுவனங்களுக்கு நன்றி. இந்த படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் சிறப்பான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பரபரப்பான திரில் அனுபவமாக இருக்கும்.”
‘சத்தியமங்கலா’ படத்திற்கு ஷங்கர் ஆராத்யா ஒளிப்பதிவு செய்ய, வீர் சமர்த் இசையமைக்கிறார். ரவிச்சந்திரன் படத்தொகுப்பை கையாள்கிறார். ஸ்டீபன் எம் ஜோசப் வசனங்களை எழுத, சின்னி பிரகாஷ் நடன வடிவமைப்பை கவனிக்க, பீட்டர் ஹியன் சண்டைப் பயிற்சியை வழங்குகிறார்.
ஏஎஸ்ஏ புரொடக்ஷன் மற்றும் அயிரா புரொடக்ஷன்ஸ் பேனர்களில் ஷங்கர் பி மற்றும் சசிரேகா நாயுடு தயாரிக்க, முனிகிருஷ்ணா, கனக் பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கம் ஆர்யன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சத்தியமங்கலா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.