இந்தியா வல்லரசு ஆவதற்கான சூட்சுமங்களை பகிர்ந்த கவிப்பேரரசு வைரமுத்து

குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களின் தமிழ் கீதம் யுனிசெஃப் பாராட்டு பெற்றது குறித்த நிகழ்ச்சியில் ருசிகரம்

மதுரையில் வெற்றிகரமாக இயங்கி வரும் குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களின் தமிழ் கீதம் (வேர்ல்ட் ஸ்டூடென்ட் ஆந்தம்) மும்பையில் நடைபெற்ற யுனிசெஃப் (ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான அமைப்பு) உலகளாவிய குழந்தைகள் தினக் கொண்டாட்டங்களில் பாராட்டுப் பெற்றுள்ளது.

இதைக் கொண்டாடும் வகையிலும் பாடலின் குழுவினரான கவிஞர் திரு. மதன் கார்க்கி, இசையமைப்பாளர் திரு. அனில் சீனிவாசன், பாடல் தயாரிப்பாளரும் பள்ளியின் நிர்வாக இயக்குநருமான திரு. அபிநாத் சந்திரன் உள்ளிட்டோர் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாகவும் சென்னையில் ஜனவரி 3 புதன்கிழமை அன்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இதற்கு தலைமை வகித்த கவிப்பேரரசு திரு. வைரமுத்து பேசியதாவது: “இப்பள்ளியின் தாளாளர் திரு. அபிநாத் சந்திரன் எனது மகனுக்கு நிகரானவர். இன்று நான் பெருமையோடும் பெருமிதத்துடன் நின்று கொண்டிருக்கிறேன். வைகை நதிக்கரையில் இயங்கும் ஒரு பள்ளி உலக சிந்தனையை சிந்தித்து உலகத்தின் மொத்தத்திற்கும் தமிழை கொண்டு சேர்த்திருக்கிறது.

இதற்கு காரணமான திரு அபிநாத் சந்திரன், இசையமைப்பாளர் திரு. அணில் சீனிவாசன், பாடலை இயற்றிய குருவை மிஞ்சிய சிஷ்யனாக விளங்கும் எனது மகன் திரு மதன் கார்க்கி, இதர குழுவினர் மற்றும் மாணவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக அரங்கில், ஐநாவின் துணை நிறுவனமான யுனிசெஃப் வாயிலாக இந்த சாதனையை செய்திருப்பது எளிமையான செயல் அல்ல. என் நண்பரும் என் மைந்தனும் அதற்கு காரணமாக திகழ்கிறார்கள் என்பது எனக்கு பெரிய பெருமை.

வைகை நதிக்கரையில் இருந்து உலகத்தின் அனைத்து நதிக் கரைகளுக்கும் சேர்த்து சிந்தித்து இருக்கிறார்கள். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று சொல்லும் ஒரு தயாரிப்பாளர் தமிழ் சினிமாவில் எளிதில் கிடைப்பதில்லை. ஆனால் அப்படி ஒரு தயாரிப்பாளர் மதுரையில் கிடைத்திருக்கிறார். அவர் தான் இந்த பாடலை தயாரித்துள்ள இளம் கல்வியாளர் திரு. அபிநாத் சந்திரன்.

இந்தப் பாடல் வரிகளில் உள்ள எளிமையும் சத்தியமும் அதை உலக அரங்கில் எடுத்து சென்று இருக்கிறது. அதற்கு காரணமான திரு அபிநாத் கல்விக்காகவே தனது உள்ளத்தை, உடலை, உயிரை, பணத்தை, வாழ்க்கை அர்ப்பணித்திருப்பவர். இவரது நிர்வாக நேர்த்தியையும் நேர மேலாண்மையையும் பார்த்து நான் வியந்திருக்கிறேன். வெளிநாட்டில் மட்டுமே பார்க்கக்கூடிய நேர மேலாண்மையை தமிழ்நாட்டில் கடைபிடிப்பவர் அபிநாத். இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க கல்வியாளர்களின் ஒருவராக அபிநாத் திகழ்வார் என்பது எனது நம்பிக்கை.

அணில் சீனிவாசன் வெறும் இசையமைப்பாளர் மட்டுமல்ல, ஒரு இசை ஆசானும் கூட. எத்தனையோ இளைஞர்களுக்கு அவர் இசையை கற்றுக் கொடுக்கிறார், அவரும் கற்கிறார். மிகவும் தேர்ந்த இசையமைப்பாளராக அவர் திகழ்கிறார்.

இந்தப் பாடலை மதன் கார்க்கி மிகவும் எளிமையான சொற்களை கொண்டு எழுதி இருக்கிறார். உன்னத கருத்துக்களை அனைவருக்கும் புரியும் படியாக சொல்லி இருக்கிறார். ஏனென்றால் இது குழந்தைகளுக்கான பாட்டு. அவர்களுக்கு அது எளிமையாக சென்றடைய வேண்டும், எளிதாக புரிய வேண்டும் என்பதற்காக மிகவும் சிரத்தையோடு எழுதியிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்.

மாணவர்கள் அச்ச சூழலிலேயே வளர்வது என்ன நியாயம் என்று இந்தப் பாடல் உலகை பார்த்து கேட்கிறது. அச்சத்தில் இருந்து பொய்யிலிருந்து இந்த உலகை மீட்டெடுப்பது தான் கல்வி. அந்தக் கல்வி அச்சமின்றி இருக்க வேண்டும், அச்சத்தை கலைவதாக இருக்க வேண்டும் என்று இந்தப் பாடல் கூறுகிறது. மாணவர்கள் நம்பிக்கையோடு வளர்ந்து உலகத்தை எதிர்கொள்ள வேண்டும், அதையும் இந்தப் பாடல் எடுத்துரைக்கிறது.

குயின் மீரா பள்ளி பற்றி எனக்கு தெரியும். அதன் கட்டுமானம், கற்பிக்கும் விதம் என அனைத்துமே மாணவர்களின் நலனை முன்னிறுத்தியே உள்ளன. அவர்களது எண்ணம் பொருள் ஈட்டுவது அல்ல, அறிவு ஈட்டுவது அறம் ஈட்டுவதே ஆகும்.

ஒரு பள்ளியின் மூல மந்திரம் அறம், அறிவு, அச்சமின்மையாக இருந்தால் இந்தியா உலகத்தின் வல்லரசாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. பொருளாதாரம், விஞ்ஞானம், ராணுவம் உள்ளிட்டவற்றில் வல்லரசாக இருப்பது நீண்ட நாட்களுக்கு நிலைக்காது. அறிவு, அன்பு மற்றும் அச்சமின்மை ஆகியவற்றை மூலதனமாகக் கொண்ட நல்லரசு தான் வல்லரசு ஆகும்.

இன்றைக்கு இந்த பாடல் தமிழ் உலக அரங்கில் வெல்லலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. இதற்கு பாடுபட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தக் குழுவினர் உலகப் பெருமையை தமிழுக்கு ஈட்டித் தந்திருக்கிறார்கள். வாழ்க கல்வி, வெல்க தமிழ்.

Related Post