
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் சொந்தமாக திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார்.
‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ என தொடர்ந்து பிளாக் பஸ்டர் வெற்றிப் படங்களை வழங்கி தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநராக உயர்ந்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் ‘தலைவர் 171’ படத்தை இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் இவர் தற்போது ஜி ஸ்குவாட் எனும் பெயரில் சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், ” என்னுடைய நண்பர்களுக்கும், என்னுடன் பணியாற்றிய உதவியாளர்களுக்கும் அவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையிலும், புதிய பாணிலான திரைப்பட அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையிலும் படங்களை தயாரிக்கவே ஜி ஸ்குவாட் எனும் பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். என்னுடைய படைப்புகளுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருவதைப் போல்.. என்னுடைய பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாராகும் திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
அவருடைய பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாராகும் முதல் திரைப்படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனிடையே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருப்பதை நட்சத்திர நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும், திரையுலகினரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.