Breaking
November 16, 2026

FLAG – திரை விமர்சனம்

பெற்றோரை இழந்த சிறுவன் வேலு (மாஸ்டர் தீஹான்), தனது தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறான். தேசியக் கொடி தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் தாத்தாவுக்கு, டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் குடியரசு தினத்தன்று ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றுவதை நேரில் பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.

ஆனால் எதிர்பாராத விதமாக தாத்தாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இதனால் அவரது ஆசையை நிறைவேற்ற முடியாத சூழல் உருவாகிறது.

தாத்தாவின் கனவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கும் வேலு, அவரிடம் சொல்லாமல் டெல்லிக்குப் பயணம் மேற்கொள்கிறான். ஆனால் செல்ல வேண்டிய இடத்திற்குப் பதிலாக வேறு வேறு ஊர்களுக்குச் சென்று பல பிரச்சினைகளைச் சந்திக்கிறான்.

இந்தப் பயணத்தில் பல மொழி பேசும் மனிதர்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், புதிய அனுபவங்கள் என இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பார்க்கிறான். ஒருகட்டத்தில் ஆபத்தான மனிதர்களிடமும் சிக்கிக்கொள்கிறான். அவனுடைய பயணம் என்ன ஆனது? தாத்தாவின் ஆசையை நிறைவேற்றினானா? என்பதுதான் மீதிக்கதை.

நடிப்பு:

சிறுவன் வேலுவாக நடித்திருக்கும் மாஸ்டர் தீஹான் படத்தின் முக்கிய பலம். அப்பாவித்தனம், பயம், ஆர்வம், தாத்தா மீதான பாசம் என ஒவ்வொரு உணர்வையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தாத்தாவாக நடித்திருக்கும் மிக்கி மக்கிஜா தனது அனுபவமான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கிறார். சிறுவனுக்கும் தாத்தாவுக்கும் இடையிலான பாசப்பிணைப்பு பார்ப்பவர்களிடம் நல்ல உணர்வை ஏற்படுத்துகிறது.

மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

தேசப்பற்று என்றாலே ராணுவம், போர், அரசியல் என்று இல்லாமல், இந்திய தேசியக் கொடியின் பின்னணியில் ஒரு சிறுவனின் பயணத்தை மையமாக வைத்து கதை சொல்ல முயற்சித்திருப்பது பாராட்டுக்குரியது.

குறிப்பாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், மொழிகள், மக்கள், கலாச்சாரங்கள் ஆகியவற்றை ஒரு சிறுவனின் பார்வையில் காட்டியிருப்பது படத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.

ஆனால் கதையின் சில திருப்பங்கள் நம்பும்படியாக இல்லை. ஒரு சிறுவன் தனியாக இத்தனை மாநிலங்களைக் கடந்து பயணம் செய்வது போன்ற காட்சிகளில் யதார்த்தம் குறைவாக இருக்கிறது. சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்வதும் படத்தின் வேகத்தைக் குறைக்கிறது.

ஒளிப்பதிவு படத்தின் குறிப்பிடத்தக்க பலம். பல்வேறு மாநிலங்களின் இயற்கை அழகையும் சுற்றுலாத் தலங்களையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

ராஜாரவிவர்மா மற்றும் பாலசுப்ரமணியனின் இசை கதையின் உணர்வுகளுக்கு உதவுகிறது. படத்தொகுப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் பயணக் காட்சிகள் விறுவிறுப்பாக அமைந்திருக்கும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *