எழுதி, இயக்கி, தயாரித்தவர்: டி. சமய முரளி
எஸ்.ஆர். ட்ரீம் ஸ்டுடியோஸ் சார்பில் டி. சமய முரளி எழுதி, இயக்கி, தயாரித்துள்ள திரைப்படம் எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்.
இப்படத்தில் ஜே.டி. சக்கரவர்த்தி – லிங்கம், லால் – மாத்யூ பாய், ராதிகா சரத்குமார் – சாரதா, சரண் சக்தி – அமர், பாலா சரவணன் – தீனா, ஸ்மேஹா – பவித்ரா, காளி வெங்கட் – செல்வம், ஜாஃபர் சாதிக் – ஜாஃபர், மைம் கோபி – ராஜன், டி. சமய முரளி – முரளி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சென்னைத் துறைமுகத்தின் பின்னணியில் தொடங்குகிறது படத்தின் கதை.
துறைமுகத்தில் பணிபுரியும் செல்வம் (காளி வெங்கட்), அவருடன் இணைந்து செயல்படும் எளிய சுங்கத்துறை அனுமதி முகவரான தீனா (பாலா சரவணன்) ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி கதை நகர்கிறது.
செல்வத்தின் தங்கை பவித்ரா (ஸ்மேஹா), துறைமுகப் பின்னணியில் இயங்கும் இளைஞனான அமரை (சரண் சக்தி) காதலிக்கிறாள். அமரின் வறுமையான குடும்பச் சூழலும், கடன் சுமைகளும் அவளுக்குத் தெரிந்திருந்தாலும், அவன் மீது கொண்ட காதலில் எந்த மாற்றமும் இல்லை.
மறுபுறம், குடும்பத்தின் கடன் சுமையால் அமர் கடுமையான நெருக்கடியில் தவிக்கிறான். தந்தையின் வீட்டை மீட்கக்கூட முடியாத நிலையில், கடன் கொடுத்தவர்களால் தனது தாய் சாரதா (ராதிகா சரத்குமார்) அவமானப்படுத்தப்படுவதைப் பார்த்து மனம் உடைகிறான். இந்த அவமானமும் இயலாமையும் அவனுக்குள் ஆழமான கோபத்தை ஏற்படுத்துகின்றன.
உடனடியாகப் பணம் சம்பாதித்து குடும்பப் பிரச்சினைகளிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணத்தில் அமரும் அவனது நண்பன் தீனாவும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் திட்டமிடுகின்றனர்.
அதே நேரத்தில், வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கை இயக்கும் மாத்யூ பாய் (லால்), இந்தியாவில் அதன் செயல்பாடுகளைக் கவனிக்கும் லிங்கம் (ஜே.டி. சக்கரவர்த்தி) ஆகியோர் இணைந்து மிகப்பெரிய கடத்தல் திட்டத்தைத் தீட்டுகின்றனர்.
இந்திய இளைஞர்களைத் தங்களது கடத்தல் வலையில் சிக்க வைத்து, சென்னைத் துறைமுகம் வழியாக சுமார் ₹25,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் அடங்கிய பிரம்மாண்ட கண்டெய்னரை நாட்டிற்குள் சட்டவிரோதமாகக் கொண்டுவர அவர்கள் திட்டமிடுகின்றனர்.
இந்த ஆபத்தான கடத்தல் கும்பலுடன் அமரும் தீனாவும் கைகோர்க்கின்றனர். துறைமுகத்திலிருந்து அந்த கண்டெய்னரை வெளியே கொண்டு வருவதற்காக, தீனாவைத் தனது திட்டத்திற்குப் பகடைக்காயாகப் பயன்படுத்துகிறான் அமர். போலி ஆவணங்கள் மூலம் ₹25,000 கோடி மதிப்பிலான அந்த கண்டெய்னருக்குச் சுங்கத்துறை அனுமதியையும் இருவரும் பெற்றுவிடுகின்றனர்.
ஆனால், யாரும் எதிர்பாராத ஒரு திருப்பம் நிகழ்கிறது. துறைமுகத்திலிருந்து வெளியேறிய அந்தப் பிரம்மாண்ட கண்டெய்னர் திடீரென மர்மமான முறையில் காணாமல் போகிறது!
இவ்வளவு பெரிய மதிப்புள்ள சரக்கு மாயமானதால் ஆத்திரமடையும் மாத்யூ பாய் மற்றும் லிங்கத்தின் ஆட்கள், இதற்குப் பின்னணியில் இருப்பதாகக் கருதப்படும் அமர், தீனா மற்றும் செல்வத்தின் குடும்பத்தினரைக் குறிவைக்கின்றனர்.
மறுபுறம், போலி ஆவணங்கள் மூலம் நடைபெற்ற இந்த மிகப்பெரிய கடத்தலைக் கண்டுபிடிக்க சுங்கத்துறை அதிகாரி முரளி கிருஷ்ணா (டி. சமய முரளி) தீவிர விசாரணையில் இறங்குகிறார். இந்த வழக்கில் செல்வம் முதன்மையான சந்தேக வளையத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்.
தான் செய்த தவறின் தீவிரத்தை உணரும் அமர், ஒருபுறம் கடத்தல் கும்பலின் கொடூரமான தாக்குதல்களையும், மறுபுறம் சட்டத்தின் பிடியையும் எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறான்.
தவறான பாதையில் சென்ற அமர், அதிலிருந்து மீண்டு தனது நண்பன் தீனா, செல்வம் மற்றும் குடும்பத்தினரைக் காப்பாற்றினானா?
காணாமல் போன ₹25,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கண்டெய்னர் எங்கே சென்றது? சர்வதேசக் கடத்தல் கும்பலின் பின்னணியில் இருக்கும் மாத்யூ பாய் மற்றும் லிங்கத்தின் சதித்திட்டத்தை முரளி கிருஷ்ணா எவ்வாறு முறியடிக்கிறார்? அமரும் தீனாவும் இறுதியில் சட்டத்தின் முன் என்னவாகிறார்கள்?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன், கடத்தல், துரோகம், பணத்தாசை, குற்ற உணர்வு மற்றும் குடும்பப் பாசம் ஆகிய அம்சங்களை இணைத்து விறுவிறுப்பாக நகர்கிறது ENEMY OF THE SMUGGLER திரைப்படத்தின் மீதிக்கதை.

