Breaking
April 12, 2025

நடிகர் ரங்கராஜ் நடிக்கும் ‘கட்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு

நடிகர் ரங்கராஜ் நடிக்கும் ‘கட்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாபுதுமுக நடிகர் ரங்கராஜ் தயாரித்து, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கட்ஸ் ( GUTS) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.’கட்ஸ்’ திரைப்படத்தில் ரங்கராஜ், ஸ்ருதி நாராயணன், ஸ்ரீலேகா, டெல்லி கணேஷ், சாய் தீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜோஸ் பிராங்களின் இசையமைத்திருக்கிறார்.ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஓ பி ஆர் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெயபாரதி ரங்கராஜ் தயாரித்திருக்கிறார்.

விரைவில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவில் இயக்குநர் ரங்கராஜ், நடிகை ஸ்ருதி நாராயணன், ஜாக்குவார் தங்கம், கில்ட் செயலாளர் துரைசாமி, டைகர் சக்கரவர்த்தி, ஷிவானி செந்தில், சத்யபதி, இஸ்மாயில், ஸ்ரீலேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இயக்குநர் ஷிவானி செந்தில் பேசுகையில், ”இப்படத்தின் இயக்குநர்-நடிகர் ரங்கராஜ் எனது நண்பர். சினிமா மீது அளவு கடந்த ஆசை கொண்டிருப்பவர். சினிமாவிற்காக தன் திறமைகளை வளர்த்துக் கொண்டவர். சினிமாவில் வெற்றி என்ற ஒன்று முக்கியமானதாக இருக்கிறது. என்னை பொருத்தவரை இந்த மேடையில் அவர் வீற்றிருப்பதே வெற்றி தான். இதனால் அவரை நான் முதலில் பாராட்டுகிறேன், வரவேற்கிறேன்.
சினிமாவை எடுப்பதற்கு அனைவருக்கும் ஆசை இருக்கும். இன்றைக்கு ரங்கராஜிற்கு இருந்தது. பத்து வருடங்களுக்கு முன்பு வெற்றிமாறனுக்கு இருந்தது. இதற்கான உழைப்பு, போராட்டங்கள் வேறு வேறு. இருந்தாலும் இந்த ஆசையை தடுப்பது ஒன்றே ஒன்றுதான் அது பயம். என்னால் முடியுமா என்ற பயம் வந்து விட்டால் யாராலும் படம் எடுக்க முடியாது. அந்த பயம் நீங்க வேண்டும் என்றால் கொஞ்சம் நம்பிக்கை வேண்டும், கொஞ்சம் போராட வேண்டும். என்னால் முடியும் என்று நம்பிக்கை வைத்து விட்டால் படம் எடுக்க முடியும். பயப்படாமல் இருந்தால் சினிமாவில் ஜெயிக்கலாம். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

ஜாக்குவார் தங்கம் பேசுகையில், ”கட்ஸ் படத்தின் டிரைலரை பார்த்தோம். மிகச் சிறப்பாக இருக்கிறது. படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். புதுமுக ஹீரோ சிறப்பாக நடித்திருக்கிறார். திரையில் அட்டகாசமான ஆக்சன் ஹீரோவாக இருக்கிறார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

கில்டு செயலாளர் துரைசாமி பேசுகையில், ”இந்தப் படத்தின் தயாரிப்பாளர், ஹீரோ, டைரக்டர் ரங்கராஜ் எனக்கு தம்பி மாதிரி. அதனால் இந்தப் படக்குழுவுடன் எனக்கு நெருக்கமான தொடர்பு உண்டு. அன்புத்தம்பி ரங்கராஜ் இயக்கி இருக்கும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இயக்குநர் படத்தை உருவாக்கியதுடன் மட்டுமில்லாமல் புறநானூற்று பாடல்களில் சொல்லியது போல் படத்தை திரையிடுவதற்கான முயற்சிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறார். இந்தப் படம் வெற்றி பெற்று அவருக்கு லாபத்தை சம்பாதித்துக் கொடுக்க வேண்டும். அவரை சான்றோன் ஆக்குவது நம்முடைய கடமை. இந்தப் படத்திற்கு நல்ல விமர்சனங்களை கொடுத்து வெற்றி பெற செய்யுங்கள்,” என்றார்.

நடிகை ஸ்ரீலேகா பேசுகையில், ”நடிப்பில் என்னுடைய முன்னோர்கள் சொல்லிக் கொடுத்ததை தான் நான் இதுவரை செய்து கொண்டு இருக்கிறேன். எத்தனை ஆண்டுகள் இருக்கிறோம் என்பது முக்கியமில்லை. எல்லாருடனும் எப்படி இருக்கிறோம் என்பதுதான் முக்கியம். இங்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தப் படத்தில் என்னுடைய மகனாக ஹீரோ ரங்கராஜ் நடித்திருக்கிறார். அவர் புது முகமாக இருந்தாலும் நிறைய திறமை இருக்கிறது. அவருக்கு நீங்கள் ஆதரவு கொடுப்பீர்கள் என நான் நம்புகிறேன்.

படப்பிடிப்பு தளத்தில் நிறைய அவமானங்களை சந்தித்து இருக்கிறார். ஆனால் யார் மீதும் குறை சொல்ல மாட்டார். அதனால் அவரே இயக்குநராகவும் மாறிவிட்டார். இந்தப் படத்தின் டைட்டிலுக்கு பொருத்தமானவர் ரங்கராஜ் தான். அவர் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்கிளின் பேசுகையில், ”இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் இருக்கின்றன. மூன்று பாடல்களையும் எழுதியவர் இயக்குநர் ரங்கராஜ் தான். இயக்குநர் ரங்கராஜ் அர்ப்பணிப்புடன் உழைக்கும் கடும் உழைப்பாளி‌. அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம். இந்தப் படத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும்,” என்றார்.

நடிகை ஸ்ருதி நாராயணன் பேசுகையில், ”இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் ரங்கராஜுக்கு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்குரிய நடிப்பை சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்த இயக்குநருக்கு நன்றி. இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகர்-தயாரிப்பாளர்-இயக்குநர் ரங்கராஜ் பேசுகையில், ”கலைத் தாய்க்கு என் முதல் வணக்கம். சினிமாவில் நடிகராகி விட வேண்டும் என்று நான் 25 ஆண்டு காலமாக போராடிக் கொண்டிருக்கிறேன். வாய்ப்பு கேட்கும் இடங்களில் எல்லாம் பணம் பணம் என்ற ஒன்றைத்தான் கேட்டார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் மன உளைச்சல் ஆகி, விலகி விடலாம் என தீர்மானித்து விட்டேன். அப்போது என்னுடைய நண்பர்கள் குறும்படங்களை இயக்கினார்கள், 15 லட்சத்தில் ஒரு படத்தினை தயாரிக்க முடியும் என்றார்கள். இது எனக்கு நம்பிக்கையை தந்தது. படத்தை  தயாரிக்க தொடங்கினேன். படத் தயாரிப்பு குறித்து எனக்கு எதுவும் அப்போது தெரியாது. படத்தின் பணிகள் தொடங்கிய பிறகுதான் 15 லட்சத்தில் ஒரு படத்தில் உருவாக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டேன். முன்வைத்த காலை பின் வைக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து போராடினேன். சின்ன வயதில் இருந்தே நான் குவாலிட்டி விஷயத்தில் காம்ப்ரமைஸ் ஆக மாட்டேன். இந்த சமயத்தில் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் எனக்கு பக்கபலமாக நின்றார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றி சொல்கிறேன்.

எனக்கு சினிமா பின்னணி கிடையாது. அரசியல் பலம் கிடையாது. பணபலம் கிடையாது. கடைக்கோடி கிராமம் ஒன்றில் இட்லி சுட்டு விற்பனை செய்யும் அம்மாவின் மகன் நான். இன்று நான் ஒரு நடிகனாகி விட்டேன். இதனை என்னாலேயே நம்ப முடியவில்லை.
இந்த படத்திற்காக நிறைய நண்பர்கள் எனக்கு உதவினார்கள். அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படம் நன்றாக ஓடி லாபம் சம்பாதித்தால், எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படங்கள் வெற்றி பெற்றால், கிடைக்கும் லாபத்தில் 50 சதவீதத்தை சினிமா துறையில் கஷ்டப்படும் தொழிலாளர்களுக்காக வழங்க திட்டமிட்டிருக்கிறேன்.  

சிறிய முதலீட்டு திரைப்படங்கள் வெற்றி பெறாததற்கு காரணம் டிக்கெட் கட்டணம் தான். அஜித் குமாரை திரையில் 200 ரூபாய் கொடுத்து பார்ப்பார்கள். என்னை யார் 200 கொடுத்து திரையில் பார்ப்பார்கள். இதனால் சிறிய முதலீட்டு திரைப்படங்கள் தோல்வியை தான் தழுவும்.‌ அதனால் டிக்கெட் விலையை குறைத்தால் சிறிய முதலீட்டு திரைப்படங்களும் வெற்றி பெறும்.

எல்லோருக்கும் வாழ்க்கையில் ஸ்ட்ரெஸ் இருக்கும். அதை நீக்குவது சினிமா மட்டும் தான். சினிமா என்ற ஊடகம் தான் மக்களின் எல்லா வலியையும் நீக்கும்.

டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆக இருக்க வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும், அதற்கான நடவடிக்கைகளையும் தமிழக முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *