Cinema

கேம் சேஞ்சர் பட முன் வெளியீட்டு நிகழ்வில், ராம்சரண் – சுகுமார் ஒன்றாக தோன்றவுள்ளனர் !

குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருடன், கேம் சேஞ்சர் படத்திற்காக முதல்முறையாக இணைந்துள்ளார். இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இம்மாதம் 21ஆம் தேதி அமெரிக்காவின் டல்லாஸ் நகரில், வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சியை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த முன் வெளியீட்டு நிகழ்ச்சியில், மாஸ்டர் ஃபிலிமேக்கர் சுகுமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சுகுமார் மற்றும் ராம் சரண் கூட்டணி கடந்த காலத்தில் “ரங்கஸ்தலம்” எனும் கிளாசிக் பிளாக்பஸ்டரை வழங்கினார்கள். கிராமப் பின்னணியில் உருவாகியிருந்த, இந்த ஆக்சன் படம், அனைத்து தரப்பிலும் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. இந்தக் கூட்டணி விரைவில் தங்கள் இரண்டாவது படமான RC 17 க்காக இணையவுள்ளனர். இப்போதே இது இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகியுள்ளது.

“கேம் சேஞ்சர்” அமெரிக்காவில் பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வைக் நடத்தும் முதல் இந்தியத் திரைப்படமாகும். இந்த முன் வெளியீட்டு நிகழ்வில் ஏராளமான ரசிகர்களுடன், படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கேம் சேஞ்சர் அரசியல் பின்னணியை மையமாகக் கொண்ட அதிரடி ஆக்சன் திரைப்படமாகும். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒரு பாத்திரத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகவும், மற்றொன்றில் சமூக அக்கறைகொண்ட இளைஞனாகவும் தோன்றுகிறார்.

இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயராம், நவீன் சந்திரா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

முன்னணி இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், தில் ராஜு புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் இப்படத்தை தயாரித்துள்ளனர். கேம் சேஞ்சரின் ஆடியோவை சரிகமா நிறுவனம் வெளியிடுகிறது.

கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10, 2025 அன்று தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழில் எஸ்.வி.சி மற்றும் ஆதித்யராம் மூவீஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஏஏ பிலிம்ஸ் இந்தியில் வெளியிடவுள்ளது. வட அமெரிக்காவில், ஷ்லோகா என்டர்டெயின்மென்ட்ஸ் மூலம் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெளியிடப்படவுள்ளது.

நடிகர் சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணையும் “மாமன்”

Lark Studios சார்பில் K. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்கும் அடுத்த திரைப்படத்தை, விலங்கு வெப்சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்குகிறார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கிறார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு “மாமன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று , படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள மிகக் கோலகலமாக பூஜையுடன், படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

கருடன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு, Lark Studios தயாரிப்பில், சூரி நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.

விலங்கு வெப்சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம், அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்குகிறார்.

தொழில் நுட்ப குழு விபரம்

எழுத்து, இயக்கம் – பிரசாந்த் பாண்டியராஜ்
தயாரிப்பு – K. குமார்
தயாரிப்பு நிறுவனம் – Lark Studios
இசை – ஹேசம் அப்துல் வஹாப்
ஒளிப்பதிவு – தினேஷ் புருஷோத்தமன்
கலை இயக்கம் – G துரை ராஜ்
படத்தொகுப்பு – கணேஷ் சிவா
சண்டைப்பயிற்சி – மகேஷ் மேத்யூ
மக்கள் தொடர்பு – யுவராஜ்.

’சூது கவ்வும் 2’ திரை விமர்சனம்….

நாயகன் சிவா, மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து ஆள் கடத்தல் செய்து பணம் சம்பாதித்து எந்த நேரமும் சரக்கு அடித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.தமிழக நிதி அமைச்சர் கருணாகரன், தமிழகத்தில் உள்ள ஊழல் அமைச்சர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதோடு, மட்டுமல்லாமல் தன் கட்சிக்கு ஏராளமான நிதிகளை பெற்றுக்கொடுப்பதிலும்  முதலிடத்தில் இருந்து வருகிறார்.அதே சமயம் நிதியமைச்சராக இருக்கும் கருணாகரன் 60000 ஆயிரம் கோடி பணத்தை வரும் தேர்தலில் தமிழகத்தில் உள்ள வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டும் என திட்டம் போடுகிறார்.அதனால் தமிழகத்தில் நிதியமைச்சராக இருக்கும் கருணாகரன் என்ன தவறு செய்தாலும் கண்டுக்கொள்ளாத முதல்வர், ராதாரவி மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பொறுப்பை கருணாகரனிடம் ஒப்படைக்கிறார்.அதன்படி, வங்கியில் இருந்து கொடுக்கப்பட்ட டிவைஸ் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கு பணத்தை கொடுக்க திட்டம் போடுகிறார்.தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கு பணத்தை விநியோகம் செய்ய திட்டமிடும் கருணாகரன் அதற்காக ரூ.60000 ஆயிரம் கோடியை வெளிநாட்டு வங்கியில் டெபாசிட் செய்து, அந்த பணத்தை உடனடியாக மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக ஒரு கருவியை வங்கியிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார்.

முதல் பாகத்தில் வரும் தாஸ் கதாபாத்திரம் போல், கற்பனை காதலியுடன், கடத்தல் தொழில் செய்து வரும் கதாநாயகன் சிவா, தமிழகத்தில் நிதியமைச்சராக இருக்கும் கருணாகரனை கடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.வங்கியில் இருக்கும் பணத்தை முதல்வரிடம் கொடுக்க செல்லும் போது நாயகன் சிவா தமிழகத்தில் நிதியமைச்சராக இருக்கும் கருணாகரனை கடத்தி விடுகிறார்.அதனால் கருணாகரனின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுகிறது.

தமிழகத்தில் நிதியமைச்சராக இருக்கும் கருணாகரனுக்கு ஏற்ப்பட்ட மாற்றம் என்ன? என்பதுதான் இந்த ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருக்கிறார்.

 ‘சூது கவ்வும்’ முதல் பாகத்தில் தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி என்ன செய்தாரோ அதையே தான் இந்த சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் சிவா குருநாத் என்ற கதாபாத்திரத்தில் செய்திருக்கிறார்.

சூது கவ்வும் கதையின் மையப்புள்ளியான அருமை பிரகாசம் கதாபாத்திரத்தில் கருணாகரன், ஆளும் கட்சி முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராதாரவி, வாகை சந்திரசேகர், அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரது அரசியல் மோதல்கள் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்துள்ளார்கள்.

அருள்தாஸ், கல்கி, கவி, யோக் ஜேபி, கராத்தே கார்த்தி, கற்பனை பெண்ணாக நடித்திருக்கும் ஹரிஷா ஜஸ்டின் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை மிக சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் கே.தில்லை, ஒளிப்பதிவு மூலம் முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதால், முதல் பாகத்தை மனதில் வைத்தே காட்சிகளை மிக அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஷ்வநாத்தின் இசையில் பாடல்களும், ஹரி எஸ்.ஆரின் பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப மிகவும் அருமையாக பயணித்து
இருக்கிறார்.

மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ‘சூது கவ்வும் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை, அதன் முந்தைய தொடர்ச்சியாக இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன் எழுதியிருக்கும் கதையில், அரசியல் சம்பவங்கள் சுவாரஸ்யம் மிக்கதாக உள்ளது.

ஜீ. வி பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான தனுஷ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மாதுரி ஜெயின் நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே. விஜய் முருகன் மேற்கொள்கிறார். தினேஷ் குணா எக்சிக்யூட்டிவ் புரொடியுசராக பொறுப்பேற்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான ஜீ.வி. பிரகாஷ் குமார் வித்தியாசமாக தோன்றுவதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் ‘7 ஜி ரெயின்போ காலனி ‘, ‘ஆடவரி மாதலக்கு அர்த்தலே வெருள’ ( தமிழில் – ‘யாரடி நீ மோகினி’) ஆகிய காதல் படைப்புகளுக்கு பிறகு மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் காதல் திரைப்படமாக ‘மெண்டல் மனதில்’ உருவாகிறது என்பதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதனிடையே அழுத்தமான படைப்புகளை வழங்கி ரசிகர்களிடத்தில் நன்மதிப்பை பெற்றிருக்கும் இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் முதன்முறையாக ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிப்பதால்.. ‘மெண்டல் மனதில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான தருணத்தில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராம்சரண் வெளியிட்ட மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘எஸ் ஒய் ஜி’ ( சம்பராலா ஏடி கட்டு) பட டீசர்

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண்- மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ்- ரோகித் கேபி – கே. நிரஞ்சன் ரெட்டி- சைதன்யா ரெட்டி – பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் – கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘எஸ் ஒய் ஜி’ (சம்பராலா ஏடி கட்டு) எனும் திரைப்படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் தனது கடைசி படங்களில் (‘விருபாஷா ‘ மற்றும் ‘BRO ‘ ) இரண்டு வித்தியாசமான வேடங்களில் தோன்றினார். அறிமுக இயக்குநர் ரோகித் கேபி இயக்கத்தில் உருவாகும், அவருடைய பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் லட்சிய படைப்பான #SDT18 எனும் திரைப்படத்தில் முற்றிலும் புதிய மற்றும் அதிரடியான ஆக்சன் நிரம்பிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் தயாரிக்கிறார்கள். இவர்களின் தயாரிப்பில் இதற்கு முன் வெளியான ‘ஹனுமான்’ எனும் திரைப்படம் இந்தியா முழுவதும் பிளாக் பஸ்டர் ஹிட் ஆக அமைந்தது. இதன் காரணமாக இவர்களின் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த தருணத்தில் இன்று ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் ‘கார்னேஜ் ‘எனும் பெயரில் இப்படத்தின் டீசரை வெளியிட்டிருக்கிறார். இந்த டீசர்- சாய் துர்கா தேஜ் நடிப்பிற்கு வித்தியாசமான கண்ணோட்டத்தை அளிக்கிறது.

எஸ் ஒய் ஜி (சம்பராலா ஏடி கட்டு ) என இந்த திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டிருக்கிறது. இது கார்னேஜ் என வெளியிடப்பட்டிருக்கும் இந்த காணொளியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வீடியோவில் சக்திமிக்க.. தனித்துவமான குரல் வழியாக கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. அவை ஒவ்வொன்றும் கதாநாயகனின் மர்மம் மற்றும் தோற்றத்தை காண்பதற்கான ஆர்வத்தை அதிகரிக்கிறது. மேலும் அந்த குரல்கள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி, சாய் துர்கா தேஜின் அறிமுகத்திற்கான வலுவான களத்தையும் அமைக்கின்றன. அவர் ஒரு மரத் துண்டின் மீது அமர்ந்து மறக்க இயலாத வகையில் அறிமுகமாகிறார். மேலும் அந்த அற்புதமான காட்சியில் அவருடைய முதுகிலிருந்து ரத்தம் தோய்ந்த ஒரு சிறிய கத்தியை அகற்றி.. எதிரி மீது வீசி, தன் கோபத்தை கட்டவிழ்த்து விடுகிறார். இந்த டீசர் டீசரில் சாய் துர்கா தேஜின் சக்தி வாய்ந்த வசனங்கள்.. உச்சத்தை தொடுகிறது. மேலும் அவரது கடுமையான வாழ்க்கையை விட பெரிய இருப்பிற்கான எதிர்பார்ப்பை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்துகிறது.

இந்த கதாபாத்திரத்திற்காக சாய் துர்கா தேஜ் தன்னுடைய உடல் அமைப்பை அர்ப்பணிப்புடன் செயல்பட்டு மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார். போர்வீரன் போன்ற உடலமைப்பை அடைவதற்கான அவரின் கடுமையான முயற்சியையும் வெளிப்படுத்துகிறது. அத்துடன் அவர் பேசும் மொழி கூட ராயலசீமா பகுதியில் பேசும் மொழி நடையை கொண்டிருப்பதால் அவருடைய வசன உச்சரிப்பு தொடர்பான ஆளுமையையும் வெளிப்படுகிறது. மேலும் இது கதாபாத்திரத்தின் நம்பகத் தன்மையையும் ஏற்படுத்துகிறது.

அறிமுக இயக்குநர் ரோகித் கேபி, சாய் துர்கா தேஜின் கதாபாத்திரத்தை வாழ்க்கையைக் காட்டிலும் ஒரு பிடிவாதமான பார்வையுடன் வடிவமைத்துள்ளார். உரையாடல்கள் கூர்மையாகவும், ஆற்றல் மிக்கதாகவும் இருக்கிறது. மேலும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டமான தயாரிப்பின் அளவும், தரமும் பிரதிபலிக்கிறது. ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் பழனிச்சாமி பார்வையாளர்கள் மூச்சடைக்கக்கூடிய காட்சிகளை கதையின் தன்மைக்காக படம் பிடித்திருக்கிறார். இசையமைப்பாளர் பி. அஜ்னீஷ் லோக்நாத்தின் துடிப்பான இசை.. கதையை ஒரு புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது. படத் தொகுப்பம் நவீன பாணியில் அமைந்திருக்கிறது.

‘எஸ் ஒய் ஜி ‘(சாம்பராலா ஏடி கட்டு) பட கார்னேஜ் வீடியோ படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் ரசிகர்கள் இதனை திரையில் காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

நடிகர்கள் : சாய் துர்கா தேஜ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெகபதி பாபு ,சாய் குமார் , ஸ்ரீகாந்த் , அனன்யா நாகல்லா ..

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : ரோகித் கேபி
தயாரிப்பாளர்கள் : கே. நிரஞ்சன் ரெட்டி – சைதன்யா ரெட்டி
தயாரிப்பு நிறுவனம் : பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட்
ஒளிப்பதிவு : வெற்றிவேல் பழனிச்சாமி
இசை : பி அஜ்னீஷ் லோகநாத்
படத்தொகுப்பு : நவீன் விஜய கிருஷ்ணா
தயாரிப்பு வடிவமைப்பாளர் : காந்தி நதிகுடிகர்
ஆடை வடிவமைப்பாளர் : ஆயிஷா மரியம்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஹேஷ்டாக் மீடியா

மோகன்லாலின் ” பரோஸ்” திரைப்படம், டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று உலகமெங்கும் பல இந்திய மொழிகளில் வெளியாகிறது !

மோகன்லாலின் ” பரோஸ்” திரைப்படத்தின் தமிழ் டிரெயலர் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது !

Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான
” பரோஸ்” , வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை வழங்கும் இப்படம், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

பரோஸ் எனும் பூதத்திற்கும், ஒரு பெண் குழந்தைக்கும் உள்ள உறவை ஃபேன்டஸி கலந்து, அனைவரும் ரசிக்கும் வகையில், பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மோகன்லால்.

மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் இதுவரையிலும் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் திரை வாழ்க்கையில் முதன்முறையாக இயக்கியுள்ள படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர், மோகன்லால் கூட்டணியில் இதுவரை 28 படங்களுக்கு மேல் வெளியாகி அனைத்தும் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இவர்கள் கூட்டணியில் மீண்டும் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படைப்பாக, முற்றிலும் 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாகியுள்ளது என்பதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

‘டீப் ப்ளூ சீ 3’, ‘ஐ இன் தி ஸ்கை’ மற்றும் ‘பிட்ச் பெர்பெக்ட்’ ஆகிய திரைப்படங்களில் பணியாற்றிய பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், ‘பரோஸ்’ படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். இளம் வயதிலேயே உலகப் புகழ்பெற்ற, லிடியன் நாதஸ்வரம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் இசை உரிமையை பெரும் விலைக்குச் சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் தமிழ் டிரெய்லர் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது எனும் அறிவிப்பு, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எக்ஸ்டிரீம் ( Xtreme) பட இசை வெளியீட்டு விழா !!

SIEGER PICTURES ( சீகர் பிக்சர்ஸ் )
நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா, மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில், சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள படம் “Extreme”( எக்ஸ்டிரீம் ). இம்மாதம் 20 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்
தயாரிப்பாளர் ராஜ்குமார் பேசியதாவது…

இப்படம் எங்களது இரண்டாவது படம். நண்பன் ராஜவேல் முதலில் ஒரு கதை சொன்ன போது, அதை ஷார்ட் ஃபிலிமாக எடுத்தோம். அந்தப்படம் நிறைய விருதுகள் வாங்கியது, அதில் என் நடிப்பும் பாராட்டப்பட்டது. பின் நாம் ஏன் படம் எடுக்கக் கூடாதென, தூவல் எனும் படத்தை எடுத்தோம், அதுவும் நிறையப் பாராட்டுக்கள் வாங்கியது. அதன் பின்னர், பெண்களின் பாதுகாப்பை மையப்படுத்தி, இந்தக்கதையைச் சொன்னார். உடனே இதை செய்யலாம் என இதை ஆரம்பித்தோம். என்னை போலீஸாக நடிக்கச் சொன்னார், நான் தயங்கினேன், ஆனால் ஊக்கம் தந்து நடிக்க வைத்தார், படம் நன்றாக வந்துள்ளது. விரைவில் திரைக்குக் கொண்டு வருகிறோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது….

எக்ஸ்டிரீம் இந்தப்படம் பற்றி எந்த ஒரு விசயமும் தெரியாமல் தான் கலந்துகொண்டேன். டிரெய்லர் பார்த்த போது, நாம் நினைக்காத விசயத்தை எல்லாம் செய்கிறார்களே என மகிழ்ச்சியாக உள்ளது. டைட்டிலே வித்தியாசமாக உள்ளது. சீகர் பிக்சர்ஸ் நிறைய வெற்றியோடு பயணிக்க வேண்டுமென வாழ்த்துகிறேன். ரக்‌ஷிதா மஹாலட்சுமியின் ரசிகன் நான், கடந்த வாரம் ஒரு படம் பார்த்தேன், அருமையாக நடித்திருந்தார். இந்தப்படத்திலும் நன்றாக நடித்துள்ளார். அபி நட்சத்திரா அயலி மூலம் கலக்கியவர், இதிலும் நன்றாக நடித்துள்ளார். தொழில் நுட்ப கலைஞர்களும், மிக அற்புதமாக பணிபுரிந்துள்ளனர். இசை அருமை, ஒளிப்பதிவு நன்றாகக் காட்சிப்படுத்தியுள்ளார். தன் கணவரின் ஆசைக்குப் பின்புலமாக இருந்து படத்தைத் தயாரித்திருக்கும், தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துக்கள். எப்போதும் வெளியிலிருந்து, சினிமாக்காரர்களை கலாய்ப்பார்கள் ஆனால் நிஜத்தில் சினிமாக்காரர்களை விடக் கேவலமானவர்கள் இங்கு இருக்கிறார்கள். சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு. விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார் அதற்குள் அவரை கட்டம் கட்டி விமர்சிக்கிறார்கள். அவர் முதலில் அரசியல் செய்யட்டும் பின் விமர்சிக்கலாம். சினிமாவில் இருந்து நிறைய முதல்வர்கள் வந்துள்ளார்கள். சினிமாவிலிருந்து யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். இந்த நேரத்தில் சினிமாவுக்கு வந்திருக்கும் சீகர் பிக்சர்ஸுக்கு வாழ்த்துக்கள். இயக்குநருக்கு என் வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

இசையமைப்பாளர் ராஜ் பிரதாப் பேசியதாவது…

இயக்குநர் ராஜவேல் பிரதரை எனக்கு மிக நீண்ட காலமாகத் தெரியும், அவர் இந்தக்கதையைச் சொன்ன போது, கொஞ்சம் காண்டரவ்ர்ஸியாக தெரிந்தது. முழுதாக கேட்ட போது தான் கதையின் அழுத்தம் புரிந்தது. படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

பிழை பட தயாரிப்பாளர் தாமோதரன் பேசியதாவது..

நான் படமெடுக்கும் போது, நடந்த விசயங்கள் நினைவுக்கு வருகிறது. ஒரு படம் ரிலீஸாக வேண்டுமானால் நிறைய பேரின் சப்போர்ட் வேண்டும். அது இந்த குழுவிற்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. ஒரு படத்தில் எவ்வளவு முடியுமோ அந்தளவு எக்ஸ்டிரீம் சென்று, இந்த படத்திற்காக உழைத்துள்ளனர். ரக்‌ஷிதா மேடம் மிக நன்றாக நடித்துள்ளார். இயக்குநரைப் பார்க்கும் போது, அந்தக்கால இயக்குநர் பாண்டியராஜன் சார் ஞாபகம் வந்தது வாழ்த்துக்கள். பெரிய படம் போலத் தான் எல்லா சின்னப்படமும் இங்கு எடுக்கிறார்கள், அதே பெரிய படத்திற்குக் கொடுக்கும் சப்போர்ட்டை இந்த படத்திற்கும் தாருங்கள். அனைவருக்கும் நன்றி.

நடிகை அபி நட்சத்திரா பேசியதாவது…

இயக்குநர் ராஜவேல் கதை சொன்னபோது நார்மலாகத்தான் இருந்தது, ஆனால் அதில் எவ்வளவு விசயம் இருக்கிறது என்பது படத்தில் நடிக்கும் போது தான் தெரிந்தது. தயாரிப்பாளர்களுக்கு என் நன்றிகள். படம் மிக நன்றாக வந்துள்ளது. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது….

இந்தப்படம் டிரெய்லர் பார்த்தேன், மனம் விட்டு வாழ்த்த வைத்துவிட்டது. மியூசிக், கேமரா, நடிப்பு எல்லாம் அருமையாக உள்ளது. இயக்குநர் எல்லோரையும் வேலை வாங்கியுள்ளார். இவரின் தூவல் படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்றனர். அது தமிழ்நாட்டின் சாபம், ஏதோ மொழி புஷ்பா படத்திற்கு 500 திரையரங்குகள் தந்துள்ளார்கள். முதலில் தமிழ்ப்படத்திற்குத் திரையரங்குகள் தாருங்கள், எத்தனை காலம் புஷ்பா மாதிரி படங்கள் உங்களைக் காப்பாற்றும்? அதனால் எப்போதும் தமிழுக்கு முக்கியத்துவம் தாருங்கள். தமிழ் நடிகர்களை நடிக்க வையுங்கள். அதன் பிறகு மற்ற மொழிகளுக்கு வாய்ப்பு கொடுங்கள். இப்போதெல்லாம் நல்ல கதையுள்ள சின்ன படங்கள் தான் ஜெயிக்கிறது. லப்பர் பந்து படம் பெரிய படங்களைத் தாண்டி ஜெயித்தது. அதை மக்கள் தான் ஜெயிக்க வைத்தார்கள். அது போல் இந்தப்படத்திலும் எல்லா மனமும் மிக நன்றாக உள்ளது. படம் கண்டிப்பாக ஜெயிக்கும் வாழ்த்துக்கள். கடந்த வாரம் ஒரு பெரிய படத்தைப் பத்திரிக்கையாளர்கள் தோற்கடித்துவிட்டதாகச் சொன்னார்கள். படம் நன்றாக இருந்தால் யாராலும் அதன் வெற்றியைக் குறைக்க முடியாது. நல்ல படம் எடுங்கள் பத்திரிக்கையாளர்கள் ஆதரவு தருவார்கள் என்றேன். அதே போல் நல்ல படமெடுத்த இந்தக்குழு ஜெயிப்பார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் ராஜகுமாரன் பேசியதாவது…

சீகர் பிக்சர்ஸ் கமலா குமாரி அம்மா, ராஜ்குமார் மற்றும் இயக்குநர் ராஜவேல் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். தெளிவாகத் திட்டமிட்டுச் சரியாக வேலை செய்பவர்கள் கண்டிப்பாக ஜெயிப்பார்கள். அந்த வகையில் திட்டமிட்டு நல்ல படைப்பைத் தந்துள்ள இந்தக்குழுவினரும் ஜெயிப்பார்கள் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் ராஜ்குமார் நன்றாக நடித்துள்ளார், தொடர்ந்து நடியுங்கள். படத்தில் எல்லோரும் நன்றாக பணியாற்றியுள்ளனர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த Xtreme படம் Xtreme வெற்றி அடையட்டும் வாழ்த்துக்கள்.

நடிகை ரக்‌ஷிதா மஹாலட்சுமி பேசியதாவது…

பிக்பாஸ் முடிச்சு வந்தபோது தான் இயக்குநர் எனக்கு போன் செய்தார். அவருக்கு முதலில் என்னை யாரென்று தெரியவில்லை. எனக்கு லுக் டெஸ்ட் எல்லாம் வைத்தார். அவருக்கு என்ன வேண்டும் என்பதில், மிகத் தெளிவாக இருந்தார். அவருக்கடுத்து சிவம் மிகக் கடினமாக உழைத்துள்ளார். இந்தப்படத்தில் மியூசிக் மிக அற்புதமாக வந்துள்ளது. டிரெய்லர் பார்த்த எல்லோரும் பாராட்டினார்கள். நான் நடிக்காமலிருந்தாலும் இந்தப்படத்தை வியந்து பார்த்திருப்பேன். அந்தளவு நல்ல கதையம்சம் உள்ள படம். எல்லோரும் எவ்வளவு கடுமையாக இப்படத்திற்காக உழைத்துள்ளனர் என அருகிலிருந்து பார்த்துள்ளேன். படம் மிக அருமையாக வந்துள்ளது. உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் கமலா குமாரி பேசியதாவது…

மேடைப்பேச்சு தான் எங்களுக்குச் சோறு போடும் தொழில். அதிலிருந்து தான் வந்துள்ளோம். என் கணவர் கனவும் என் கனவும் நனவாக வேண்டும் என்பது தான் ஆசை. அவருக்கு நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை, அதற்காகத் தான் இப்படத்தைத் தயாரித்தோம், ஆனால் அதை மிக நல்ல படைப்பாகத் தர வேண்டும் என்று தான் உழைத்துள்ளோம். ராஜவேல் மிக நல்ல படைப்பைத் தந்துள்ளார். இப்படத்திற்காக ஒத்துழைப்பைத் தந்த ரக்‌ஷிதாவுக்கு நன்றி. படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

படத்தின் இயக்குநர் ராஜவேல் பேசியதாவது…

எனது பிழை படத்தை சென்னையில் ஒரு வாரம் கஷ்டப்பட்டு ஓட வைத்த என் முதல் பட தயாரிப்பாளர் தாமோதரன் அவர்களுக்கு நன்றி. என் வாழ்வில் முக்கியமானவர் சிவம் சார் அவர் தான் இந்தப்படத்தின் தயாரிப்பாளர்கள் கமலகுமாரி, ராஜ்குமார் அவர்களிடம் அழைத்துச் சென்றார். முதலில் ஒரு ஷார்ட் ஃபிலிம் தான் எடுத்தோம் அதற்கே ராஜ்குமார் சார் என்ன கேட்டாலும் தருவார், இந்தப்படத்திற்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்துள்ளார். என் டீம் எனக்காக எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுப் பார்த்தனர். அனைவருக்கும் நன்றி. ஒரு குறுகிய காலத்தில், சின்ன பட்ஜெட்டில் படம் செய்ய முடிந்ததற்குக் காரணம் இவர்கள் தான். பெண்களுக்கான படம் இது, தப்பாகப் போய்விடக்கூடாது என்று தயாரிப்பாளர் தெளிவாக இருந்தார். நானும் கண்டிப்பாகத் தவறாகிவிடாது எனச் சொன்னேன். இன்று ஆடியன்ஸ் மாறிவிட்டனர் ஆனால் திரையரங்குகள் மாறவில்லை. பெரிய அளவில் திரையரங்குகள் கிடைக்காத போதும் வெளியூர்களில், எனது தூவல் படம், இரண்டாவது வாரம் நன்றாக ஓடுகிறது. ஆனால் சென்னையில் திரையரங்குகள் தரவில்லை. உலகநாடுகள் முழுதும் 40 விருதுகள் வழங்கி அங்கீகரித்த திரைப்படம், இங்கு மக்கள் ஆதரவு இருந்தும், திரையரங்குகள் தராதது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர்கள் நல்ல படத்திற்குத் திரையரங்குகள் தருவதில்லை. நல்ல திரைப்படங்களைத் திரையிடுங்கள். எனக்கு இந்தப்படத்தில் கிடைத்த வரம் ரக்‌ஷிதா மேடம் தான், அவருக்குள் ஒரு இரும்புப் பெண் இருக்கிறார். உப்புக்கருவாடு படத்தில் கலக்கியிருந்தார் அதைப்பார்த்துத் தான் நான் அவரை இப்படத்திற்குத் தேர்ந்தெடுத்தேன். அபி நட்சத்திரா, ஆனந்த் நாக் எல்லோரும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர். தயாரிப்பாளருக்கு வெற்றி வரவேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். அதை மனதில் வைத்துத் தான் உழைத்துள்ளோம். ஒரு நல்ல படைப்பு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் பேரரசு பேசியதாவது…

இயக்குநர் படத்தை மிகக் குறைந்த காலத்தில் எடுத்ததாகக் கூறினார். இந்த காலகட்டத்தில் ஒரு படத்தை மிக அழகாக பிளான் செய்து, மிக சிக்கனமாக எடுப்பது தான் மிகச்சிறந்த இயக்குநருக்கான திறமை. இவர்கள் அதைத் திறம்படச் செய்து நல்ல படத்தைத் தந்துள்ளார்கள். ரக்‌ஷிதா கண் பயங்கர ஈர்ப்பாக இருப்பதாகச் சொன்னார் ஆர் வி உதயகுமார் சார், அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். ரக்‌ஷிதா நன்றாகவும் நடித்துள்ளார். பெண்களுக்கான நல்ல விசயத்தைச் சொல்லும் படமாக இப்படம் வந்துள்ளது. சினிமா தான் நம் நாட்டில் உயர்ந்த விசயம், பெண்ணிற்குப் பாதுகாப்பை, குடியின் தீமையை, அம்மா அப்பா பாசத்தை என பல நல்ல விசயங்களை, சினிமா தான் சொல்கிறது. அரசியல்வாதி நடிக்க வந்தால் ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் சினிமாக்காரன் அரசியலுக்கு வந்தால் ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?. எல்லோரையும் எல்லா காலகட்டத்திலும் கூத்தாடிகள் எனத் தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். கூத்தாடி தான் நாட்டுக்கு நல்லது சொல்கிறான். கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் இன்று விஜய் என எல்லோருமே கூத்தாடிகள் தான். ஜாதியைப் பேசுவது எப்படி தவறோ?, அது போல் கூத்தாடியை இழிவாகப் பேசுவது தவறு தான். அரசியல்வாதியை விட சினிமாக்காரன் எவ்வளவோ மேல். ஒரு நல்ல விசயத்தைப் பேசும் இப்படத்தை ஆதரியுங்கள் நன்றி.

Xtreme என்றால் உச்சக்கட்டம், தீவிரம், அளவுக்கு அதிகம்னு சொல்லுவோம்.
எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. ஆனால் அதை மீறும்போது நடக்குற விளைவுதான் இந்த படத்தின் கதை.

இந்த படத்தில் சரவணன் மீனாட்சி தொடர் மற்றும் பிக்பாஸ் 6 வது சீசன் மூலம் பிரபலமான ரக்ஷிதா மஹாலஷ்மி மற்றும் சமீபத்தில் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற அயலி படத்தின் மூலம் பிரபலமான அபி நட்சத்ரா, நேரம் படத்தைத் தொடர்ந்து ரெஜினா படங்கள் உட்படச் சிறந்த படைப்புகளில் நடித்துவரும் ஆனந்த் நாக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மற்றும் இவர்களுடன் அம்ரிதா ஷெல்டர், ராஜ்குமார், சிவம் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு : D.J. பாலா
சந்தானம் நடித்த பிஸ்கோத், காசேதான் கடவுளடா போன்ற படங்களுக்கு இசையமைத்த ராஜ் பிரதாப் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.
டம்ளர் குத்து மற்றும் ஹிப்ஹாப் ஆதி நடித்த ஆகிய படங்களுக்கு நடனம் அமைத்த சிவ்ராக் சங்கர் நடனம் அமைக்கிறார்.
சண்டை பயிற்சியை சிவம் மேற்கொள்கிறார்.
மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்
தயாரிப்பு நிறுவனம் : SIEGER PICTURES
தயாரிப்பாளர்கள் : கமலகுமாரி, ராஜ்குமார்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – ராஜவேல் கிருஷ்ணா.
இவரது முதல் படமான ” பிழை “சென்னை திடைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது படமான ” தூவல் ” உலகம் முழுக்க 40 க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்டிரீம் ( Xtreme) திரைப்படம் இம்மாதம் 20 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகிறது.

நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம்

“எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. குறிப்பாக “தேவைக்கு கிடைக்காததும்… தேவைக்கு அதிகமாக கிடைக்கிறதும்…
எப்பவுமே ஒரு வலிதான்…” என பாரதிராஜா குறிப்பிடும் வசனம் மக்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்தி வைரலாகி கொண்டு வருகிறது.

திரு.மாணிக்கம் படம் மாஸ்டர் பீஸ் நிறுவனம் மூலம் தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் பெருவாரியான திரையர‌ங்குகளில் வெளியிடப்படுகிறது.

மேலும் ZEE தொலைக்காட்சி நிறுவனம் திரைக்கு வரும் முன்னரே திரு.மாணிக்கம் திரைப்படத்தை பார்த்து இதயம் கரைந்து இந்தப் படம் எல்லா தரப்பினருக்கும் ஏற்ற படமாகவும் மனதை நெகிழவைக்கும் படமாகவும் இருக்கும் என்பதை உணர்ந்து, திரு.மாணிக்கம் திரைப்படத்தின் OTT மற்றும் SATELLITE உரிமையை வாங்கி உலகமெங்கும் வெளியிடவிருக்கிறார்கள்…

‘ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் கதை மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குனர் நந்தா பெரியசாமி திரு.மாணிக்கம் திரைப்படத்தை விறுவிறுப்பான திரைக்கதையாக எழுதி இயக்கியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி, போன்ற எழில் கொஞ்சும் இயற்கையான பல இடங்களை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார் அள்ளிக் கொண்டு வந்து படம் பிடித்திருக்கிறார்.

ஆதங்கம்… ஆற்றாமை… தவிப்பு… தடுமாற்றம் என பல வித உணர்வுகளோடு கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார். ஒரு முக்கியமான கதாப் பாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜாவும், நாசரும் இதுவரை நாம் பார்க்காத தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள். இவர்களுடன் அனன்யா, தம்பி ராமையா, வடிவுக்கரசி, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரன், இரவின் நிழல் சந்துரு..ஆகியோர் வேறொரு புதிய பரிமாணத்தில் காட்சியளிக்கிறார்கள்.

‘சீதா ராமம்’ படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் இந்தப் படத்திலும் கவரவிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட இசைகலைஞர்களை வைத்து ஹங்கேரியில் பின்னணி இசையை இரவு பகல் பாராது உயிரோட்டத்துடன் உருவாக்கியுள்ளார்.

பாடலாசிரியர்கள் சினேகன், ராஜு முருகன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும் சொற்கோ ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியை கேள்வி கேட்கும் அற்புதமான இத்திரைப்படத்தை ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.

Trailer Link ▶️ https://youtu.be/_vRPCVjGs-4?si=-2XhqsaCPiM-KAIR

ராஷ்மிகா மந்தனாவின் “தி கேர்ள்பிரண்ட்”

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா மற்றும் திறமைமிகு நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் “தி கேர்ள்பிரண்ட்”. பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை, கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மெண்ட் பேனர்கள் இணைந்து தயாரிக்கிறது. ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள “தி கேர்ள்பிரண்ட்” படம் ஒரு அழகான காதல் கதையைச் சொல்கிறது. இப்படத்தை தீரஜ் மொகிலினேனி மற்றும் வித்யா கோப்பினிடி ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இன்று, பிரபல முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா “தி கேர்ள்பிரண்ட்” படத்தின் டீசரை வெளியிட்டார்.

படம் குறித்து விஜய் தேவரகொண்டா கூறியதாவது.. “”தி கேர்ள்பிரண்ட்” டீசரில் உள்ள ஒவ்வொரு காட்சியும் வெகு சுவாரஸ்யமாக உள்ளது. இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். 8 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்தில் ராஷ்மிகாவை சந்தித்தேன். பல பெரிய வெற்றிகளைப் பெற்றாலும், இன்னும் அவர் மிகவும் அடக்கமாகவே இருக்கிறார். “தி கேர்ள்பிரண்ட்” படம், ஒரு நடிகையாக அவருக்கு அதிக பொறுப்பை அளித்துள்ளது, அந்த பொறுப்பை அவர் முறையாக ஏற்றுக்கொண்டு, தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்களின் இதயங்களைக் கவரும் “தி கேர்ள்பிரண்ட்” படத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துகள்,” என்று அவர் கூறியுள்ளார்.

“தி கேர்ள்பிரண்ட்” டீஸர் ராஷ்மிகா கல்லூரி விடுதிக்குள் நுழைவதிலிருந்து தொடங்குகிறது. டீசர் ஹீரோ தீக்ஷித் ஷெட்டி மற்றும் ராஷ்மிகாவின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது, அவர்களுக்கு இடையேயான அழகான உறவைக் காட்டுகிறது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் முன்னணி ஜோடியின் உணர்வுபூர்வமான பயணம் இதயப்பூர்வமான தருணங்களுடன் அவர்களின் உறவைச் சித்தரிக்கிறது. கவித்துவமான உரையாடல்களுடன் விஜய் தேவரகொண்டாவின் குரல்வளம் நம்மை கவர்கிறது. ஹேஷாம் அப்துல் வஹாப்பின் பின்னணி இசையும், டீசரின் முடிவில் ராஷ்மிகாவின் உரையாடலும் அனைவரையும் கவர்வதாக அமைந்துள்ளது. வித்தியாசமான காதல் கதையாக உருவாகி வரும் “தி கேர்ள்பிரண்ட்” விரைவில் திரைக்கு வர உள்ளது.

Cast: Rashmika Mandanna, Deekshith Shetty, and others.

நடிகர்கள்: ராஷ்மிகா மந்தனா, தீக்ஷித் ஷெட்டி மற்றும் பலர்.

தொழில்நுட்ப குழு:

  • ஒளிப்பதிவு: கிருஷ்ணன் வசந்த்
  • இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
  • ஆடைகள்: ஷ்ரவ்யா வர்மா
  • தயாரிப்பு வடிவமைப்பு: எஸ். ராமகிருஷ்ணா, மௌனிகா நிகோத்ரி
  • மக்கள் தொடர்பு : யுவராஜ்
  • மார்கெட்டிங் : முதல் காட்சி
  • வழங்குபவர் : அல்லு அரவிந்த்
  • தயாரிப்பு பேனர்கள் : கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ், தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட்
  • தயாரிப்பாளர்கள்: தீரஜ் மொகிலினேனி, வித்யா கோப்பினிடி

– எழுத்து & இயக்கம் : ராகுல் ரவீந்திரன்

சீயான் விக்ரம் நடிக்கும் ‘ வீர தீர சூரன் ‘

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீர தீர சூரன் – பார்ட் 2 ‘எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , துஷாரா விஜயன், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜி. கே. பிரசன்னா மேற்கொள்ள, கலை இயக்கத்தை சி. எஸ். பாலச்சந்தர் கவனித்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் ஏற்கனவே வெளியாகி பதினான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ எனும் இந்த திரைப்படத்தின் டீசரில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வியப்பில் ஆழ்த்தி இருப்பதால்… படத்தைப் பற்றிய ஆர்வத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.‌

சீயான் விக்ரம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.