Cinema

அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் ‘ஒன்ஸ்மோர்’

தமிழில் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஹேஷாம் அப்துல் வஹாப்

தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பான் இந்திய இசையமைப்பாளரான ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் உருவாகி, ‘ஒன்ஸ்மோர்’ எனும் படத்தில் இடம்பெற்ற ”வா கண்ணம்மா..’ எனும் பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருவதுடன் ஆயிரக் கணக்கிலான ‘ ரீல்ஸ் ‘களிலும் இடம் பிடித்து புதிய மைல்கல் பயணத்தை தொடங்கி இருக்கிறது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ஒன்ஸ்மோர் ‘ எனும் திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் , அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ்கமல் கவனித்திருக்கிறார். இளமை துள்ளலுடன் கூடிய பொழுதுபோக்கு படைப்பாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கிறார்.

‘ஹிருதயம்’, ‘குஷி’, ‘ஹாய் நன்னா ” ஆகிய பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற படங்களுக்கு இசையமைத்து முன்னணி நட்சத்திர இசையமைப்பாளராக உயர்ந்திருக்கும் ஹேஷாம் அப்துல் வஹாப் ‘ ஒன்ஸ்மோர் ‘ படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவரின் இசையில் ‘ ஒன்ஸ்மோர் ‘ படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி, இசை ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து திருமண வைபவத்தை கொண்டாடும் வகையில் ‘ வா கண்ணம்மா..’ என்ற பாடலை படக் குழுவினர் பொங்கல் விடுமுறை தினத்தன்று வெளியிட்டனர். இந்த பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுத , இசையமைப்பாளரும் பின்னணி பாடகருமான ஹேஷாம் அப்துல் வஹாப் மற்றும் பின்னணி பாடகி உத்ரா உன்னிகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் – பண்பாடு – இசை- திருக்குறளுடன் தொடங்கும் பாடல் வரிகள்- இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப்பின் திரை தோன்றல்- என பல சுவாரசியமான அம்சங்கள் இடம் பிடித்திருப்பதால் இந்தப் பாடல் இதுவரை ஐந்தரை மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. அத்துடன் இந்த பாடலை இளைய தலைமுறையினரின் சமூக வலைதள நடவடிக்கையை ஊக்குவிக்கும் வகையில் படக்குழுவினர் இந்தப் பாட்டுக்கு நடனமாடி ரீல்ஸாகவும் வெளியிட்டனர். இதனால் உற்சாகமடைந்த 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைய தலைமுறையினர் இந்த பாடலுக்கு நடனம் ஆடி அதனை அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றினர். இதுவும் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

இந்த பாடலுக்கான மெட்டு- பாடல் வரிகள் – இசை – நடனம் – காட்சி அமைப்பு – என அனைத்தும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இருந்ததால் ‘வா கண்ணம்மா..’ சமூக வலைதளவாசிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் உற்சாகமடைந்த இசை ரசிகர்கள் அனைவரும் தமிழில் அறிமுகமாகும் ஹேஷாம் அப்துல் வஹாப்பிற்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் ஹாட்டின் + பூங்கொத்து இமோஜிகளுடன் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. விரைவில் படத்தின் முன்னோட்டம் மற்றும் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக கூடும் என படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

அர்ஜுன் தாஸ்- அதிதி ஷங்கர் – ஹேஷாம் அப்துல் வஹாப் – மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – கூட்டணியில் தயாராகி வரும் ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் இடம்பெற்ற ‘வா கண்ணம்மா..’ எனும் பாடல் புதிய சாதனையை படைத்து வருவதால் இசையமைப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள “தருணம்” படம், ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகிறது !!

விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ரொமாண்டிக் திரில்லர் “தருணம்” படம், ஜனவரி 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது !!

ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள “தருணம்” திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது.

தேஜாவு திரில்லர் படம் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் ஒரு அருமையான காதல் கதை மூலம் மகிழ்விக்கவுள்ளார்.

வாழ்வே பல தருணங்களால் ஆனது ஆனால், ஒரு தருணம் மொத்த வாழ்க்கையையும் மாற்றும் அப்படியான ஒரு தருணத்தை, காதல் கலந்து சொல்லும் அருமையான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

தமிழ்த்திரையுலகில் கால்பதித்துள்ள ZHEN STUDIOS நிறுவனம் சார்பில் புகழ் மற்றும் ஈடன், பெரும் பொருட்செலவில் இப்படத்தை உயர்தரமான படைப்பாகத் தயாரித்துள்ளனர்.

ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, உலகமெங்கும் எண்ணற்ற திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில் நுட்ப கலைஞர்கள்

எழுத்து, இயக்கம் – அரவிந்த் ஶ்ரீநிவாசன்
ஒளிப்பதிவாளர் – ராஜா பட்டாசார்ஜி
இசை – தர்புகா சிவா
பின்னணி இசை – அஸ்வின் ஹேமந்த்
படத்தொகுப்பு – அருள் E சித்தார்த்
கலை இயக்குனர் – வர்ணாலயா ஜெகதீசன்
சண்டைப்பயிற்சி – Stunner சாம்
தயாரிப்பாளர் – புகழ் A, ஈடன் (ZHEN STUDIOS )
மக்கள் தொடர்பு – சதீஸ், சிவா (AIM)

“தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள், ZEE5 ல் ஸ்ட்ரீமாகவுள்ளது !!

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, “சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தினை, பார்வையாளர்கள் எளிதாக ரசிக்கும் வகையில், அவர்களின் உள்ளூர் மொழியில் கொண்டு வருகிறது. இயக்குநர் தீரஜ் சர்னா இயக்கத்தில், விக்ராந்த் மாஸ்ஸி, ராஷி கண்ணா மற்றும் ரித்தி டோக்ரா ஆகியோரின் நடிப்பில், 24 ஜனவரி 2025 அன்று திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம், இந்தியாவின் மிகவும் வேதனையான மற்றும் சர்ச்சைக்குரிய சோகங்களில் ஒன்றான 2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை, பின் களமாகக் கொண்ட அரசியல் டிராமா திரைப்படமாகும். நீதியின் உண்மை முகத்தை, ஊடகங்களின் பார்வையை, உண்மையின் விலையை அழுத்தமாகப் பேசும், இந்தத் திரைப்படம் நாடு முழுதும் சிறப்பான பாராட்டுக்களைப் பெற்றது. குடியரசு தினத்தன்று “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தை ZEE5 பார்வையாளர்களுக்குத் தெலுங்கு மற்றும் தமிழில் வழங்குகிறது.

59 அப்பாவி பயணிகளின் உயிரைக் கொன்ற 2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் பின்னணியில் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிக்கொணரும் ஆர்வமுள்ள பத்திரிகையாளர் சமர் குமாரை (விக்ராந்த் மாஸ்ஸி) சபர்மதி ரிப்போர்ட்ஸ் படம் பின்தொடர்கிறது. சமர் ஆழமாக ஆராயும்போது, ​​உண்மையை மறைக்க ஊடக விவரிப்புகளைக் கையாளும், சக்திவாய்ந்த அரசியல் பிரமுகர்களை உள்ளடக்கிய ஒரு ஆபத்தான சதியை அவர் கண்டுபிடிக்கிறார். அவரது கண்டுபிடிப்புகள் அவரது ஆசிரியரான மணிகா ராஜ்புரோஹித் (ரித்தி டோக்ரா) மூலம் முடக்கப்படும்போது, ​​சமரின் வாழ்க்கை அழிக்கப்பட்டு, அவர் தெளிவற்ற ஒரு நிலைக்குத் தள்ளப்படுகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, நிருபர் அம்ரிதா கில் (ராஷி கண்ணா) சமரின் மறைக்கப்பட்ட அறிக்கையின் மீது ஈர்க்கப்பட்டு, உண்மையான கதையை அம்பலப்படுத்த அவருடன் இணைந்து கொள்கிறார். ஒன்றாக, ஊழல், வஞ்சகம் மற்றும் துரோகம் ஆகியவற்றின் வலையை அவிழ்க்க அவர்கள் பணியாற்றும்போது பெருகிவரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள், நீதியை வெளிச்சத்திற்குக் கொண்டுவர எல்லாவற்றையும் பணயம் வைக்கிறார்கள். இந்த அதிரடியான உண்மைகளை விவரிக்கிறது “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படம்.

விக்ராந்த் மாஸ்ஸி கூறுகையில்..,
“தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” மூலம், தற்போதைய நிலைக்கு எதிரான, சங்கடமான உண்மைகளை எதிர்கொள்ளத் தூண்டும் ஒரு கதையை நாங்கள் சொல்கிறோம். இது பத்திரிகையின் சக்தியையும், எவ்வளவு இழந்தாலும் நீதிக்காக நிற்பதன் முக்கியத்துவத்தையும் நினைவூட்டுகிறது. இந்த படம் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் ஆழமாக எதிரொலித்தது, ஊடக மாஃபியா மற்றும் உண்மையைப் பின்தொடர்வது பற்றிய முக்கியமான உரையாடல்களைத் தூண்டியது. இந்தக் கதை தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்களை அவர்களின் உள்ளூர் மொழியில் சென்றடைவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இது நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை ஊக்குவிக்கும் மற்றும் ஈர்க்கும் என நம்புகிறேன்.”

நடிகை ராஷி கண்ணா கூறுகையில்..,
“அம்ரிதா கில் ஒரு உறுதியான மற்றும் அச்சமற்ற பத்திரிகையாளர், தனிப்பட்ட இழப்பைப் பொருட்படுத்தாமல் உண்மையை வெளிக்கொணர வேண்டும் என நினைப்பவர். இந்த பாத்திரத்தில் நடித்ததன் மூலம், அடக்குமுறை நிறைந்த உலகில் எது சரியானது என்பதற்கு ஆதரவாக நிற்க எடுக்கும் தைரியத்தை ஆராய என்னை அனுமதித்தது. நீதியை நம்பும் எவருக்கும் இது மிக முக்கியமான பாத்திரம். இப்படம் இப்போது இந்தியில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கிலும் ரசிகர்களுக்குக் கிடைக்கும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

ரிதி டோக்ரா கூறுகையில்..,
“தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பார்வையாளர்களுக்கு அவர்கள் விரும்பும் சொந்த மொழியில் கிடைக்கும். நான் குறிப்பாக ஆர்வமாக இருந்தது உண்மையைச் சுற்றி நடக்கும் நாடகம் மீதானது தான். உண்மை எப்போதும் நிலையானது வலுவானது. பரப்பப்படும் செய்திகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதையும், எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு பெரிய நிறுவனம் எவ்வாறு உள்ளது என்பதையும் பார்வையாளர்கள் அறிந்து கொள்வதும் முக்கியம். எப்போதும் ஒரு செய்தி மக்களுக்குத் தீனியாக்கப்படுகிறது.

இப்படத்தில், மாணிக்கா ராஜ்புரோஹித் தீவிரமான ஒரு வேலையைச் செய்கிறார், பல தடைகளைத் தாண்டி, மிகப்பெரிய சதி வலையின் உண்மைகளை, வெளியே கொண்டுவரப் போராடுகிறார். நடிகர்களாக இல்லாமல், உண்மையான மனிதர்களைத் திரையில் கொண்டு வருவது, எனக்கு மிகச் சுவாரஸ்யமாக இருந்தது. உற்சாகமாகவும் இருந்தது” ஒரு நடிகராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

உண்மை மற்றும் நீதியின் பின்னணியிலான அழுத்தமான இந்தக் கதையைத் தவறவிடாதீர்கள் – ZEE5 இல் தமிழ் மற்றும் தெலுங்கில் திரையிடப்படும் “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தை ட்யூன் செய்யுங்கள்!

“அகத்தியா” படத்தின் 3 வது சிங்கிள் “செம்மண்ணு தானே” கல்ச்சுரல் பாடல் வெளியானது. !!


 
பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் ஃபேன்டஸி-ஹாரர்- திரில்லர் படமான “அகத்தியா” படத்தின் மூன்றாவது சிங்கிள், “செம்மண்ணு தானே”, பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. புகழ்மிகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் பாடல், நம் மண்ணின் கலாச்சாரம் மற்றும் மருத்துவ செழுமையைக் கொண்டாடும் தலைசிறந்த படைப்பாக, ரசிகர்களையும், விமர்சகர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. பாடலின் ஆழமான வேரூன்றிய கருப்பொருள்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன், இந்தப் பாடல் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான “அகத்தியா” படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. பான்-இந்திய பிரம்மாண்ட படைப்பான “அகத்தியா” படம், பிப்ரவரி 28, 2025 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியிடப்படுகிறது.

“செம்மண்ணு தானே” என்பது வெறும் மெல்லிசை பாடல் மட்டும் அல்ல; இது நமது நிலத்தின் பாரம்பரியத்திற்கான ஒரு ஆத்மார்த்தமான பயணம். எண்ணற்ற நோய்களைக் குணப்படுத்த மண்ணிலிருந்து மூலிகைகள் மற்றும் இயற்கை வளங்களைப் பயன்படுத்திய முனிவர்கள் மற்றும் இயற்கை மருத்துவர்களின் நம்பமுடியாத பங்களிப்பை இந்தப் பாடல் அழகாக சித்தரிக்கிறது – அவற்றில் சிலவற்றை நவீன மருத்துவம் இன்னுமே தீர்க்கப் போராடுகிறது. யுவனின் அற்புதமான இசையில், நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உணர்வுப்பூர்வமான மெல்லிசையாக இப்பாடல் நம் மனதை ஆட்கொள்கிறது.

தீபக் குமார் பதியின் அசத்தலான ஒளிப்பதிவு பாடலின் தரத்தை உயர்த்துகிறது, இப்பாடல் கேட்க மட்டுமல்ல, காட்சி விருந்தாகவும் அமைந்துள்ளது. படத்தின் கதையுடன் கலாச்சார அம்சங்களைத் தடையின்றி கலந்திருக்கும், பா.விஜய் எழுதியுள்ள இதயப்பூர்வமான வரிகளால், பாடலின் சாராம்சம் மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது.

 
இயக்குநர் பா விஜய் கூறியதாவது…
இந்தப் பாடல் வெறும் இசையல்ல, இது நமது நிலத்தின் ஆழமான வேரூன்றிய கலாச்சார பாரம்பரியத்தின் வழியாக ஒரு பயணம். எண்ணற்ற நோய்களைக் குணப்படுத்தும் அபாரமான மருத்துவ மூலிகைகளை நமக்குத் தந்த, நம் மண்ணின் சாரத்தை வெளிப்படுத்த விரும்பினேன். இது குறித்து நான் யுவனுடன் பகிர்ந்து கொண்டேன், அவர் அதை கமர்ஷியலாகவும், கலாச்சார ரீதியாகவும் குறிப்பிடத்தக்க ஒரு மெல்லிசையாக உருவாக்கித் தந்தார். நமது மண்ணின் ஆற்றலால் மனித குலத்திற்குப் பங்காற்றிய ஞானிகளுக்கும், குணப்படுத்துபவர்களுக்கும் இப்பாடல் காணிக்கையாகும்.

“பா.விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது எப்போதுமே மிக இனிமையான அனுபவம். நம் மண்ணின் அசாத்தியமான மருத்துவ மற்றும் பண்பாட்டு மதிப்பைப் பற்றிய கதைகளை அவர் பகிர்ந்துகொண்டபோது, எனக்கு ஆழ்ந்த பொறுப்புணர்ச்சி ஏற்பட்டது. ‘செம்மண்ணு தானே’ தடைகளைத் தாண்டிய, ஒரு மெல்லிசை. நம் முன்னோர்களின் ஆத்மா மற்றும் அவர்களின் பங்களிப்புகளால் வழிநடத்தப்படுவது போல், இந்த இசை சிரமமின்றி மிக எளிமையாக வந்தது. இது எனது சிறந்த இசையமைப்பில் ஒன்று என்று நான் நம்புகிறேன், பார்வையாளர்கள் இப்பாடலைக் காண பெரும் ஆவலுடன் உள்ளேன்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவன தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே. கணேஷ் கூறியதாவது…

“அகத்தியா மிக முக்கியமான லட்சிய திரைப்படம், இந்தப் படத்தின் ஒவ்வொரு அம்சமும் உலகத் தரம் வாய்ந்த அனுபவத்தை அளிக்கும் வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘செம்மண்ணு தானே’ இந்தத் திரைப்படத்தின் மையம், கதையின் கலாச்சார சாரத்தை அழகாகப் பொதித்து வைத்திருக்கும் பாடல். தனிப்பட்ட முறையில், இந்தப் பாடல் நம் மண்ணின் அபாரமான பங்களிப்பை எடுத்துரைப்பதோடு, எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றிய குணப்படுத்துபவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். நமக்கு பலவற்றைக் கொடுத்த மண்ணுக்கு இப்பாடல் சமர்ப்பணம்.”

 வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் வாமிண்டியா (வைட் ஆங்கிள் மீடியா பிரைவேட் லிமிடெட்) இணைந்து தயாரித்துள்ள “அகத்தியா” திரைப்படம் இதுவரையில்லாத வகையிலான புதுமையான சினிமா அனுபவத்தை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பா.விஜய் இயக்கத்தில் இப்படம், கற்பனை, திகில் மற்றும் மாயங்கள் கலந்து, தேவதைகள் மற்றும் பிசாசுகளின் போரில் பார்வையாளர்களை மயக்கும் பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

டீசர் மற்றும் முந்தைய சிங்கிள்கள் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பைப் ஏற்படுத்தியுள்ளது, தற்போது “செம்மண்ணு தானே” பாடல் ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 28 ஆம் தேதி திரையில் அகத்தியா படத்தை கண்டுகளியுங்கள் !!

’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ பட விமர்சனம்

அயோத்தியின் மன்னனாக பதவி ஏற்க இருக்கும் நிலையில் ராமர், பலவிதமான சூழ்ச்சியின் காரணத்தால் 14 ஆண்டுகள் காட்டுக்கு (வனவாசம்) அனுப்பப் படுகிறார்.
ராவணன் ராமரின் மனைவி சீதாயை கடத்துகிறார்.
கடத்தப்பட்ட சீதையை தேடிச் செல்லும் ராமர், அனுமான் படைகளின் உதவியுடன் இலங்கையில் உள்ள ராவணனை வீழ்த்தி, அங்கு இருக்கும் சீனாவையும் மீட்டதோடு, அங்கு மாட்டிக் கொண்டிருக்கும் அடிமைகளையும் மீட்டது, என ராமாயணத்தின் கதையை அனிமேஷன் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும்படியாக ’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மன்னன் ராவணனின் தம்பி கும்பகர்ணனின் பிரமாண்ட உருவம், வடிவமைப்பு சீதையை ராவணன் கடத்திச் செல்லும் போது அவரை காப்பாற்ற முயற்சிக்கும் ஜடாயு பறவை, பிரம்மாண்டமாகவும் மூலிகைக்காக மலையையே எடுத்து வரும் ஹனுமானின் சாகசங்கள் என ராமாயணத்தின் முக்கிய அம்சங்களை அனிமேஷன் மூலம் மிக அருமையாகவும் மிக நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
ராமர் கதாபாத்திரத்திற்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கும் செந்தில் குமார், சீதா கதாபாத்திரத்திற்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கும் டி.மகேஷ்வரி, ராவணனுக்கு கதாபாத்திரத்திற்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கும் பிரவீன் குமார், லக்ஷ்மனனுக்கு கதாபாத்திரத்திற்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கும் தியாகராஜன், ஹனுமானுக்கு கதாபாத்திரத்திற்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கும் லோகேஷ் மற்றும் ராமாயண கதையை வாய்ஸ் ஓவர் ரவூரி ஹரிதா என அனைவரும் தங்களது பணியை மிகவும் சிறப்பாக கையாண்டு இருக்கிறார்கள்.
சிறுவர்களுக்கு பிடித்த 2டி அனிமேஷன் மூலம் போர் நடக்கும் காட்சிகள் மற்றும் அதில் ஈடுபடும் வானரப் படைகளின் செயல்கள் கண்டிப்பாக சிறுவர்களை மகிழ்விக்கும் என்பது உறுதி.
குறிப்பாக, கும்பகர்ணனிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் வானரப் படைகளின் காட்சிகள் சிறுவர்களை திரைப்படத்தை கண்டிப்பாக திரும்ப திரும்ப அனைவரையும் பார்க்க வைக்கும்
இந்திரஜித் மற்றும் லக்ஷ்மன் இடையே நடக்கும் வான் சண்டையும், ராவணனின் புஷ்பக விமானம், கோட்டை என அனைத்துமே அனிமேஷன் மூலம் மிக நேர்த்தியாக காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒலி வடிவமைப்பும் அனிமேஷன் தொழில்நுட்பங்கள் மற்றும் அதில் பயன்படுத்தியிருக்கும் கலர்கள் காட்சி அமைப்பு அனைத்தும் சிறுவர்கள் மட்டுமல்லாமல் அதையும் தாண்டி பெரியவர்களையும் கண்டிப்பாக ரசிக்க வைக்கும் படியாக அமைந்துள்ளது.

’குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ திரை விமர்சனம்

அரசியல்வாதியாக இருக்கும் யோகி பாபுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கும் போது, வீட்டில் வேலை பார்க்க வந்த வடமாநில பெண்ணுடன் கள்ள உறவு வைத்துக் கொள்கிறார்.இதனால் வடமாநில பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க அந்த வடமாநில பெண்ணை யோகி பாபு மனைவி வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார் .
யோகி பாபுவின் மகன் இமயவர்மன் தன் தந்தையைப் போல் தானும் அரசியல்வாதியாகி ஆட்சி அதிகாரத்தில் உட்கார வேண்டும். என்ற ஆசையோடு வளர்ந்து வருகிறான்.கள்ள உறவில் உள்ள மனைவியின் மகனும் அரசியல்வாதியாகி தந்தையை விட பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறான்
யோகி பாபுவின் இரண்டு மகன்களும் ஒரே பள்ளியில் படிக்க, பள்ளிக் காலம் முதலே, தலைவர், விளம்பரம், தேர்தல், சதி என்று அரசியல்வாதிகளுக்கான அனைத்து அம்சங்களுடன் வளர்ந்து வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் நினைத்தது போல் இவர்களது எதிர்காலம் அமைந்ததா?, அமையவில்லையா? என்பதுதான் இந்த‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்தக் குழந்தைகள் முன்னேற்ற கழகம் திரைப்படத்தில் கதாநாயகனாக இமய வர்மன் நடித்திருக்கிறார்.யோகி பாபு கதாநாயகனாக நடித்திருந்தாலும், திரைப்படத்தின் சில காட்சிகளில் திடீர் திடீரென்று தலைக்காட்டி விட்டு மறைந்து விடுகிறார்.யோகி பாபு வழக்கம் போல், உடல் கேலி செய்து சிரிக்க வைக்க முயற்சித்து சில காட்சிகளில், பல இடங்களில் அவரது காமெடிக் காட்சிகள் கடியாக மாறி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு வலியை ஏற்படுத்துகிறது.
நகைச்சுவை நடிகர் செந்தில், அரசியல் கட்சித் தலைவராக நடிப்பில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.
அத்வைத் ஜெய் மஸ்தான் இருவரும் கேமரா பயம் இல்லாமல் மிக தைரியமாக நடித்திருக்கிறார்கள்.
சிறுமி ஹரிகா பெடடாவின் திரை இருப்பும், நடிப்பும் திரைப்படத்திற்கு கூடுதலாக பலம் சேர்த்திருக்கிறது.
சுப்பு பஞ்சு, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, வைகா ரோஸ், அஸ்மிதா சிங், லிஸி ஆண்டனி, சரவணன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜெ.லக்ஷ்மண் குமாரின் ஒளிப்பதிவின் மூலம் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளார்
இசையமைப்பாளர் சாதகப் பறவைகள் சங்கரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.
தமிழக போட்டி அரசியல் மற்றும் குடும்ப அரசியலை, சிறுவர்கள் எதிர்காலம் ஆகியவற்றை நகைச்சுவையாக சொல்லி பார்வையாளர்களை சிரிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர் என்.சங்கர் தயாள்.

‘வல்லான்’ திரை விமர்சனம்

தொழிலதிபர் கமல் காமராஜ், கொடூரமாக மர்மமான முறையில் கொலை செய்து விடுகிறார்கள்.கொலை வழக்கை பற்றி விசாரிக்கும் காவல்துறையினர் தடையங்கள் கிடைக்காமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை ஆய்வாளர் சுந்தர்.சி அவர்களிடம் காவல்துறை உயர் அதிகாரி தொழிலதிபர் கமல் காமராஜ், கொலை வழக்கை பற்றி விசாரிப்பதற்காக ஒப்படைக்கிறார்.
சுந்தர்.சி பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தாலும், கொலை வழக்கின் பற்றிய பின்னணியில், தன்னுடைய தனிப்பட்ட பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கலாம் என்ற நோக்கத்தில் விசாரணை மேற்கொள்ளும் சுந்தர்.சி, அடுத்தடுத்த நடக்கும் கொலைகளால் மேலும் பல மர்மங்கள் சுந்தர்.சியை சூழ தொடர்கிறது.
கமல் காமராஜ்யிடம் இருக்கும் ஏதோ ஒரு விஷயத்திற்காக அரசியல்வாதி, மற்றும் சில காவல்துறை அதிகாரிகளும் சதி திட்டம் தீட்ட, அவைகள் அனைத்தையும் முறியடித்து அந்த கொலையாளியை கண்டு பிடித்தாரா ?என்பதுதான் ‘வல்லான்’ திரைப்படத்தின் கதை.
இந்த வல்லான் திரைப்படத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுந்தர்.சி, ஆக்ஷன் காட்சிகளிலும், கொலை வழக்கை விசாரிக்கும் காட்சிகளிலும் நேர்த்தியாக நடித்திருந்தாலும், தனது வருங்கால மனைவியின் கொடூர கொலையை பார்த்து கதறும் காட்சியில் நடிப்பின் மூலம் சற்று தடுமாறியிருக்கிறார்.
திரைப்படத்தில் கதாநாயகியாக தன்யா ஹோப் நடித்திருக்கிறார்.காட்சிகள் மிக குறைவு என்றாலும் அதை மிக நிறைவாக நடித்திருக்கிறார்.
ஹெபா பட்டேல், கவர்ச்சிக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.
தொழிலதிபராக நடித்திருக்கும் கமல் காமராஜ், அவரது மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிராமி வெங்கடாச்சலம், மற்றும் சாந்தினி தமிழரசன், அருள் டி.சங்கர், கோச்சிருக்கதா பத்திரத்தில் தலைவாசல் விஜய், ஜெயக்குமார், டி.எஸ்.கே என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப் பெரிய அளவில் பங்கு வகித்திருக்கிறார்கள்.
கதைக்கான திரைக்கதையை பல திருப்பங்களுடன், கொலையை சுற்றி நடக்கும் சன்பென்ஸ் திரில்லர் ஜானரை மிக தெளிவாக புரியும்படி
எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் வி.ஆர்.மணி சேயோன்,

‘கைக்குட்டை ராணி’ ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருதை வென்றது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருதை வென்றது

நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படம் ‘கைக்குட்டை ராணி’ ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருதை வென்றது

இசைஞானி இளையராஜா இசையில் பி. லெனின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘கைக்குட்டை ராணி’ குழந்தைகளின் உணர்வுகளை பேசுகிறது

திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு மொழிகளில் சுமார் 100 படங்களில் நடித்துள்ள நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படமான‌ ‘கைக்குட்டை ராணி’ 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைபப்ட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது.

டி ஃபிலிம்ஸ் பேனரில் தேவயானி தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள ‘கைக்குட்டை ராணி’ திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, பிரபல எடிட்டர் பி. லெனின் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். ராஜன் மிர்யாலா ஒளிப்பதிவையும், லட்சுமி நாராயாணன் ஏ.எஸ். ஒலி வடிவமைப்பையும் கையாண்டுள்ளனர்.

சுமார் இருபது நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளை திரையில் சொல்கிறது. தாயை இழந்த, தந்தை வெளியூரில் பணிபுரியும் ஒரு பெண் குழந்தை எத்தகைய சிக்கல்களை சந்திக்கிறது என்பதை உணர்ச்சிப்பூர்வமாக இப்படம் வெளிப்படுத்தியுள்ளது.

‘கைக்குட்டை ராணி’ குறும்படத்தை பார்த்த 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா நடுவர் குழுவினர் குழந்தைகளுக்கான சிறந்த குறும்படத்திற்கான விருதுக்கு இதை தேர்ந்தெடுத்திருப்பதோடு தேவயானி மற்றும் குழுவினரை வெகுவாக பாராட்டினர்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த தேவயானி, “எத்தனையோ படங்களில் நான் நடித்திருந்த போதிலும், முதன்முறையாக நான் இயக்கிய குறும்படம் சர்வதேச‌ அளவில் விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சையையும் பெருமையையும் அளிக்கிறது. இதில் பங்காற்றியுள்ள மூத்த கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இதர சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் இப்படத்தை கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்,” என்றார்.

‘கைக்குட்டை ராணி’ குறும்படத்தில் நிஹாரிகா வி.கே. மற்றும் நவீன் என் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சவுண்ட் எஃபெக்ட்ஸ் வடிவமைப்பு: சி., சேது, டிஐ கலரிஸ்ட்: ஆன்டனி பேபின் ஏ. திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கொண்டு செல்லும் பணியை உலக சினிமா பாஸ்கரன் ஏற்றுள்ளார்.

பாரதிராஜா – நட்டி- ரியோ ராஜ் – சாண்டி- கூட்டணியில் ‘நிறம் மாறும் உலகில் ‘

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘ நிறம் மாறும் உலகில் ‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் பிரிட்டோ J B இயக்கத்தில் உருவாகி வரும் ‘ நிறம் மாறும் உலகில் ‘ எனும் திரைப்படத்தில் பாரதிராஜா, நட்டி என்கிற நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர் , விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், ‘ஆடுகளம்’ நரேன், மைம் கோபி , வடிவுக்கரசி , விக்னேஷ் காந்த், ரிஷிகாந்த், கனிகா, ஆதிரா, காவ்யா அறிவுமணி ,துளசி, ஐரா கிருஷ்ணன் , லிசி ஆண்டனி, நமோ நாராயணன் , சுரேஷ் சக்கரவர்த்தி , ஏகன், விஜித், ஜீவா சினேகா, திண்டுக்கல் சரவணன், பாலாஜி தயாளன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மல்லிகா அர்ஜுன்- மணிகண்ட ராஜா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராம் -தினேஷ் – சுபேந்தர் -ஆகிய மூவர் கலை இயக்குநர்களாக பணியாற்றி இருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் ஏற்றிருக்கிறார். ஹைபர் லிங்க் பாணியிலான இந்த திரைப்படத்தை சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

நான்கு விதமான வாழ்க்கை – நான்கு கதைகள் – அதை இணைக்கும் ஒரு புள்ளி – என நம் வாழ்வில் உறவுகளின் அவசியத்தை உணர்வுபூர்வமாக விவரிக்கும் கமர்சியல் படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. மும்பை – வேளாங்கண்ணி – சென்னை- திருத்தணி – என நான்கு வெவ்வேறு களங்களில் இப்படத்தின் கதை நடைபெறுகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்திருக்கிறது என பிரத்யேக காணொளியை வெளியிட்டுள்ளனர். இந்த காணொளி மூலம் படத்தின் தரம் சர்வதேச அளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருக்கிறது என்றும்,
விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தனித்துவமான கதை சொல்லும் பாணியில் உருவாகும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் படைப்பில் பாரதிராஜா -நட்டி -ரியோ ராஜ் -சாண்டி மாஸ்டர்- ஆகிய திறமைசாலிகள் ஒன்றிணைந்திருப்பதால் .. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ் ‘

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ ஏஸ் ‘ (ACE) எனும் திரைப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ஏஸ்’ (ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ் , திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.கே. முத்து கவனித்திருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. இந்த தருணத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஏஸ் ( ACE) படத்தின் பிரத்யேக காணொளியை படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து மலேசிய நாட்டின் விமான நிலையத்திற்குள் நடந்து செல்வதும்…பின் அங்கு பிரபலமான வணிக வளாகங்களில் அதிரடி சண்டை காட்சியில் ஈடுபடுவதும்… ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களில் உற்சாகமாக நடனமாடுவதும், சாலையில் துணிச்சலுடன் செல்வதும்… காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் அவருடைய ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது. அத்துடன் இந்த காணொளி மூலம் ‘ஏஸ்’ திரைப்படம் நூறு சதவீதம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகி இருக்கிறது என்பதும் தெளிவாக தெரிய வருகிறது.
மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘போல்டு கண்ணன்’ என்பதால்.. அந்த கதாபாத்திரம் குறித்த ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்பும் ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

இந்திய ரசிகர்களை மட்டுமல்லாமல் சீன நாட்டின் ரசிகர்களையும் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் கவர்ந்திருக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஏஸ்’ (ACE) படத்திற்கு தமிழக ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்தியா, மலேசியா மற்றும் சர்வதேச ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.