Breaking
June 7, 2026

Cinema

ஜெயம் ரவி, ‘அயலான்’ இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் ‘டபுள் டக்கர்’ திரைப்படத்தின் இசை வெளியீடு



கோடை விடுமுறை ரிலீசுக்கு படம் தயாராகி வரும் நிலையில், 8000 மாணவர்கள் முன்னிலையில் ஆரவாரம் பொங்க சென்னையில் பிரம்மாண்ட முறையில் இசை வெளியீடு நடைபெற்றது

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ். பாஸ்கர், முனிஷ்காந்த், காளி வெங்கட் சுனில் ரெட்டி, ஷா ரா, கருணாகரன், யாஷிகா ஆனந்த், ஜார்ஜ் விஜய், டெடி கோகுல் உள்ளிட்டோர்  நடித்திருக்கும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் ‘டபுள் டக்கர்’.  கோடை விடுமுறையில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீடு வெள்ளிக்கிழமை (மார்ச் 15) மாலை சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் 8000 மாணவர்கள் முன்னிலையில் ஆரவாரம் பொங்க பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு…

நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது…

“எனக்கு இருக்கும் மிகச்சில  நெருங்கிய நண்பர்களில் ஒருவர் தீரஜ். அவருக்காக இங்கு வருவதற்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருப்பது சந்தோஷம். விரைவில் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன்.

‘டபுள் டக்கர்’ எனும் தலைப்பு இவருக்காகவே உருவானது போல் இருக்கிறது, ஏனென்றால் மருத்துவர், நடிகர் என்று இரண்டு பரிமாணங்களிலும் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தீரஜ். வித்யாசாகர் அவர்களின் இசைக்கு சிறு வயது முதல் இருந்து ரசிகன் நான். அவர் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. இளைஞர்களுடன் இணைந்து அவர் பணியாற்றியுள்ளார். அவரது இசை இந்த படத்திற்கு கட்டாயம் பெரிய பக்கபலமாக இருக்கும்.”

‘அயலான்’ இயக்குநர் ரவிக்குமார் பேசியதாவது…

“‘அயலான்’ திரைப்படத்தை இயக்கி உள்ளதால் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும். அதை செய்துள்ள ‘டபுள் டக்கர்’ குழுவினருக்கு வாழ்த்துகள்.

தீரஜ் அவர்களை ஒரு இருதய சிகிச்சை மருத்துவராக நான் அறிவேன். ஓய்வில்லாமல் உழைக்க வேண்டிய மருத்துவர் பணியையும் நடிப்பையும் அவர் மேற்கொள்வது மிகவும் சவாலானது. ஆனால் அதை அவர் திறம்பட செய்து வருகிறார். இருதய சிகிச்சை நிபணரான அவர் திரைப்படங்களின் மூலம் மக்களின் இதயங்களையும் வெல்வார் என்று நம்புகிறேன். மிகவும் வித்தியாசமான, கடின உழைப்பு தேவைப்படுகிற இந்த முயற்சியை சாத்தியமாக்கி உள்ள இயக்குநர் மீரா மஹதி மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்.”

இசையமைப்பாளர் வித்யாசாகர் பேசியதாவது…

“‘டபுள் டக்கர்’ படத்தின் நாயகன் தீரஜ்ஜை ஒரு சிறுவனாக தெரியும், பின்னர் மருத்துவராக தெரியும். ஒரு நாள் அவர் என்னிடம் வந்து தான் திரைப்படங்களில் நடிப்பதாகவும் ‘டபுள் டக்கர்’ திரைப்படத்திற்கு நான் இசையமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பின்னர் இயக்குநர் மீரா மஹதி இப்படத்தின் கதையை என்னிடம் விவரித்தார். எனக்கு மிகவும் பிடித்ததால் இசையமைக்க ஒப்புக்கொண்டேன்.

‘டபுள் டக்கர்’ படத்தில் பணியாற்றி உள்ள அனைவரும் சிறப்பான பங்காற்றி உள்ளார்கள். குறிப்பாக தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு அபாரமானது. கடந்த 34 ஆண்டுகளாக எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ரசிகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இசைக்கு வயதே கிடையாது, நல்லிசைக்கும் மெல்லிசைக்கும் தமிழ் மக்கள் என்றுமே ஆதரவு அளிப்பார்கள். உங்களின் அன்பும் ஆதரவும் தான் என்னை இங்கே நிற்க வைத்துள்ளது. ‘டபுள் டக்கர்’ படத்தில் இடம்பெற்றுள்ள நான்கு பாடல்களும் நான்கு வகையானவை. இசையையும் படத்தையும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன், நன்றி.”

படத்தின் நாயகன் தீரஜ் பேசியதாவது…

“ரஜினி, கமல், விஜய், ஷாருக்கான் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பிறகு என்னுடைய படத்திற்கு இந்த மேடையை வழங்கிய சாய்ராம் கல்லூரிக்கு நன்றி. ‘டபுள் டக்கர்’ படத்திற்கு அருமையான இசையை தந்த வித்யாசாகர் அவர்களுக்கு மிக்க நன்றி.

நிகழ்ச்சிக்கு வந்து ஆதரவு தெரிவித்த இயக்குநர் ரவிக்குமார், ஜெயம் ரவி அவர்களின் அன்புக்கு நன்றி. இப்படத்தைப் பற்றி கூற வேண்டும் என்றால் டபுள் டக்கரை திரையரங்கில் பாருங்கள், மகிழுங்கள், மகிழ்ச்சியுடன் திரையரங்கை விட்டு செல்லுங்கள். ஒரு கலகலப்பான படத்தை தர வேண்டும் என்ற எங்களது ஆசை நிறைவேறி உள்ளது. என்னுடன் பணியாற்றிய மூத்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் என்று நம்புகிறேன், நன்றி.”

நாயகி ஸ்முரிதி வெங்கட் பேசியதாவது…

“எல்லோருக்கும் வணக்கம். மாணவர்கள் முன்னிலையில் இப்படத்தின் இசை வெளியிடப்படுவது மிக்க மகிழ்ச்சி. சிறு வயது முதலே வித்யாசாகர் அவர்களின் மிகப்பெரிய ரசிகை நான். அவரது இசையில் நடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி.

நிகழ்ச்சிக்கு வந்துள்ள ஜெயம் ரவி அவர்கள் மற்றும் இயக்குநர் ரவிக்குமார் அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. ‘டபுள் டக்கர்’ படத்தை பற்றி கூற வேண்டும் என்றால் இந்த படம் உங்களை மகிழ்விக்கும், உற்சாகப்படுத்தும், கட்டாயமாக ஏமாற்றாது. இப்படத்திற்காக மிகச் சிறந்த குழுவுடன் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது, அனைவரும் திரையரங்குகளில் இப்படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”

இயக்குநர் மீரா மஹதி பேசியதாவது…

“என்னுடைய முதல் படத்திற்கு இசையமைத்து எனக்கு மிகப்பெரிய பெருமையை வழங்கி இருக்கிற வித்யாசாகர் சாருக்கு நன்றி. இங்கு வந்து சிறப்பித்துள்ள இரண்டு ரவிகள் ஆகிய ஜெயம் ரவி சார் மற்றும் இயக்குநர் ரவிக்குமார் அவர்களுக்கு மிக்க நன்றி.

இளம் தலைமுறையாகிய உங்களை நம்பித்தான் இந்தியாவிலேயே புதிய முயற்சியாக ‘டபுள் டக்கர்’ திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். கிராபிக்ஸ் கதாபாத்திரங்களை நடிகர்களுடன் நடிக்க வைத்துள்ளோம். உங்கள் குடும்பத்துடன் வந்து இப்படத்தை ரசிக்கலாம்.”

நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசியதாவது…

“இந்த படம் ஒரு அருமையான குழுவின் கூட்டு முயற்சி. இதில் எனக்கு சின்ன பாத்திரம் தான், ஆனால் மிகவும் சிறந்த வேடம். கிராபிக்ஸ் பாத்திரங்களை வைத்து ஒரு புதுமையான முயற்சியை ‘டபுள் டக்கர்’ குழுவினர் எடுத்துள்ளனர். ஏப்ரல் மாதம் வெளியாகியுள்ள இப்படத்தை ரசிகர்களாகிய நீங்கள் பார்த்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் இன்னும் நிறைய படங்களை உருவாக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி. நாயகன் தீரஜ் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். வித்யாசாகர் அவர்களின் இசையில் எத்தனையோ படங்களில் நான் நடித்துள்ளேன். அவரது அற்புதமான இசை இப்படத்தை மெருகேற்றி உள்ளது.”

நடிகர் காளி வெங்கட் பேசியதாவது…

“இப்படத்தில் நடித்தது ஒரு வித்தியாசமான அனுபவம். பெயருக்கு ஏற்ற மாதிரி டபுள் டக்கர் மிகவும் சிறப்பான திரைப்படமாக இருக்கும். வித்யாசாகர் அவர்களின் இசையில் நடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி. எங்கள் வீட்டில் அனைவருமே அவரது ரசிகர்கள். தீரஜ் அவர்களின் சுறுசுறுப்பு ஆச்சரியமானது. இயக்குநர் மீரா மஹதி வித்தைக்காரர். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை இந்த படத்தை அனைவரும் ரசிக்கலாம்.”

நடிகர் கருணாகரன் பேசியதாவது…

“எங்களின் கல்லூரி நாட்களை தன் இசையால் இனிமையாக்கிய வித்யாசாகர் அவர்களுக்கு நன்றி. உங்கள் பாடல்களுக்கு நாங்கள் அனைவரும் தீவிர ரசிகர்கள். புதுமையான அனிமேஷன் படமான டபுள் டக்கரில் நடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி. பல இதயங்களை சரி செய்த தீராஜ் அவர்கள் இப்படத்தின் மூலம் இன்னும் பல இதயங்களை வெல்வார்.”

திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் மற்றும் இணை எழுத்தாளர் சந்துரு பேசியதாவது…

“இப்படத்தை நான் பார்த்து விட்டேன், மிகவும் சிறப்பாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்துள்ள ஜெயம் ரவி அவர்களுக்கும் இயக்குநர் ரவிக்குமார் அவர்களுக்கும் மிக்க நன்றி. ‘டபுள் டக்கர்’ டீசரை நீங்கள் அனைவரும் பார்த்து ரசித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். படத்தை வெகு விரைவில் உங்களுக்கு வழங்க காத்திருக்கிறோம்.

இந்த விழாவின் நாயகன் வித்யாசாகர் சார் தான். அவரை 90ஸ் கிட்ஸின் உள்ளம் கவர்ந்த இசையமைப்பாளர் என்று சொல்வார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் அவரது பாடல்கள் ஒளிபரப்பப்பட்ட போது 2கே கிட்ஸும் மிகவும் வைப் செய்தார்கள். இதன் மூலம் தலைமுறைகளை தாண்டி அவரை ரசிக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இந்த வருட கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிக்க ஏற்ற இடமாக ‘டபுள் டக்கர்’ படத்தை திரையிடும் திரையரங்குகள் இருக்கும்.”

நிர்வாக தயாரிப்பாளர் எஸ் சேதுராமலிங்கம் பேசியதாவது…

“மிகவும் சவாலான கதைக்களம் என்பதால் அனைத்தையும் முன்னரே முறையாக திட்டமிட்டோம். இயக்குநரும் குழுவினரும் மிகவும் கடினமாக உழைத்துள்ளனர். படம் வெற்றி பெற வாழ்த்துகள்.”

ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரன் பேசியதாவது…

“இது என்னுடைய இரண்டாவது படம், மிகவும் அருமையாக வந்துள்ளது. அனைவரும் குடும்பத்தோடு திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். இதில் பணியாற்றியது சற்றே சவாலானது, ஏனென்றால் கிராபிக்ஸ் பாத்திரங்கள் படப்பிடிப்பின் போது இருக்காது என்பதால் அனைத்தையும் கற்பனையில் செய்ய வேண்டும். வித்யாசாகர் அவர்களின் பாடல்களை மிகவும் ரசித்து ஒளிப்பதிவு செய்தேன் ‘டபுள் டக்கர்’ திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.”

படத்தொகுப்பாளர் வெற்றிவேல் ஏ எஸ் பேசியதாவது…

“அனைவருக்கும் நன்றி. வாய்ப்பளித்த தீரஜ், சந்துரு, மற்றும் மீரா மஹதி ஆகியோருக்கு நன்றி. ‘டபுள் டக்கர்’ மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது, வித்யாசாகர் சாரின் இசை மிகவும் அருமை. அனைவரும் இந்த படத்தை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன், நன்றி.”

கலை இயக்குநர் சுப்பிரமணிய சுரேஷ் பேசியதாவது…

“எல்லோருக்கும் வணக்கம். வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. ‘டபுள் டக்கர்’ மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது.”

‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்திற்காக தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசிய கவுண்டமணி


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்

சினி கிராஃப்ட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சாய் ராஜகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் ‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள அரசியல்-நகைச்சுவை திரைப்படமான ‘ஒத்த ஓட்டு முத்தையா’ போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், இப்படம் விறுவிறுப்பாக வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

சென்னையில் உள்ள பரணி’ டப்பிங் ஸ்டூடியோவில் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் டப்பிங் பணிகளில் பங்கேற்ற கவுண்டமணி, தொடர்ந்து எட்டு மணி நேரம் உற்சாகத்துடன் டப்பிங் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

தற்கால அரசியலை தனக்கே உரிய பாணியில் நையாண்டி செய்யும் வேடத்தில் கவுண்டமணியும் அவருடன் நெருக்கமாக பயணிக்கும் பாத்திரத்தில் யோகி பாபுவும் நடிக்கின்றனர். கவுண்டமணிக்கும் யோகி பாபுவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி மிக நன்றாக அமைந்திருப்பதாகவும் அவர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைக்கும் என்றும் இயக்குநர் சாய் ராஜகோபால் தெரிவித்தார். இவரும் இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை ஜோடிக்கு பிறகு கவுண்டமணி-யோகி பாபு கூட்டணி மிகவும் பேசப்படும் என்று தெரிவித்த இயக்குநர், இரு நடிகர்களும் தங்கள் காட்சிகளை மிகவும் ரசித்ததாக கூறினார்.

ஒட்டு மொத்த குடும்பத்துடன் கண்டு ரசிக்கக் கூடிய வகையில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்கின்றனர்.

கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். மாறுபட்ட ஒரு நகைச்சுவை பாத்திரத்தில் சிங்கமுத்துவும், நல்லதொரு வேடத்தில் சித்ரா லட்சுமணனும் நடிக்கின்றனர். மேலும், மொட்டை ராஜேந்திரன்,  O A K. சுந்தர், ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை,  டாக்டர் காயத்ரி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் களம் இறங்கியுள்ளது.

படம் குறித்து பேசிய இயக்குநர் சாய் ராஜகோபால், “சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன். மணிவாசகம், அர்ஜுன், டி பி கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் பணியாற்றி உள்ளேன். எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, ‘பாய்ஸ்’ மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் ‘கிச்சா வயசு 16’ ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.

‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் கதையை கவுண்டமணி அவர்களிடம் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு நடிப்பதற்கும் உடனே சம்மதம் தெரிவித்தார். ஆறு முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக இது இருக்கும். இப்படத்தை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்து தங்களது பேராதரவை தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.

இத்திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்க, ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். கலை இயக்கத்திற்கு மகேஷ் நம்பியும், படத்தொகுப்புக்கு ராஜா சேதுபதியும் பொறுப்பேற்றுள்ளனர். பி ஜி துரை, தீனா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் அசோசியேட்டுகளாக பணியாற்றுகின்றனர். தயாரிப்பு மேலாளர்: ராஜன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன். கோவை லட்சுமி ராஜன் இணை தயாரிப்பில் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பிரைம் வீடியோ திகில் நிறைந்த க்ரைம் டிராமா “இன்ஸ்பெக்டர் ரிஷி”

பிரைம் வீடியோ திகில் நிறைந்த க்ரைம் டிராமா “இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் மார்ச் 29 தேதி அன்று வெளியிடப்படவிருப்பதை அறிவித்தது

நந்தினி ஜே.எஸ் உருவாக்கத்தில், மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ், சுக்தேவ் லஹிரியால் தயாரிக்கப்பட்ட இந்த ஒரிஜினல் தமிழ் திரைப்படத்தில், சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோருடன் இணைந்து நவீன் சந்திரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி நடித்துள்ளார்.

“இன்ஸ்பெக்டர் ரிஷி” இந்தியா மற்றும், உலகம் முழுவதிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மார்ச் 29 தேதி அன்று பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

அறிவிப்பை இங்கே பதிவிறக்கம் செய்யுங்கள்
https://x.com/PrimeVideoIN/status/1768134578726678603?s=20

மும்பை, இந்தியா- மார்ச் 14, 2024 – இந்தியாவில் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு மையமாக திகழும் பிரைம் வீடியோ, வரவிருக்கும் அதன் தமிழ் ஒரிஜினல் திரைப்படமான “இன்ஸ்பெக்டர் ரிஷி” வெளியிடப்படும் தேதியை இன்று அறிவித்தது. நந்தினி ஜே.எஸ் (Nandhini JS,) உருவாக்கத்தில் தயாரிக்கப்பட்ட இந்த திகிலூட்டும் க்ரைம் டிராமாவில் பல்துறை திறன் கொண்ட நடிகர் நவீன் சந்திரா(Naveen Chandra) வுடன் இணைந்து சுனைனா(Sunainaa), கண்ணா (Kanna ) ரவி (Ravi), மாலினி (Malini ) ஜீவரத்தினம், (Jeevarathnam) ஸ்ரீகிருஷ்ண தயாள்(Srikrishna Dayal,) மற்றும் குமரவேல் (Kumaravel) உள்ளிட்ட திறமைவாய்ந்த நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். பத்து எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது “இன்ஸ்பெக்டர் ரிஷி” பிரைம் மெம்பர்ஷிப்பில் சமீபத்தில் இணைக்கப்பட்ட புத்தம் புதிய திரைப்படமாகும். இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள், ஒற்றை உறுப்பினர் சந்தாவாக ஆண்டுக்கு ₹1499 மட்டுமே செலுத்தி சேமிப்பு, வசதி மற்றும் பொழுதுபோக்கு அனைத்தையும் அனுபவித்து மகிழலாம்.

மர்மங்களால் சூழப்பட்ட சிக்கலான மற்றும் விசித்திரமான நிகழ்வுகளை எதையும் சந்தேகக் கண்களுடன் அணுகும் ரிஷி நந்தன், என்ற காவல் ஆய்வாளர் ஆராயத் தொடங்கும் போது, அவரது உறுதியான கருத்துக்களுக்கு எதிரான சவால்களை எதிர்கொள்ள நேரும் அவரது பயணத்தின் ஒரு அழுத்தமான கதையை “இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படம் விவரிக்கிறது. மனதை நிலைக்குலையச்செய்யும் இந்த திகில் மற்றும் மர்மம் நிறைந்த வழக்கின் விசாரணையின் ஊடே, குற்றத்தின் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் போதும் தனது ஆழ்மனதில் பீறிட்டு எழும் உணர்வுகளை கையாளும் போதும் இருநிலைகளிலுமே இன்ஸ்பெக்டர் ரவி அச்சமூட்டும் மாபெரும் தடைகளை எதிர்கொள்கிறார்,

“நாடு முழுவதிலுமிருந்து வரும் வளமான, ஆழமாக வேரூன்றிய மற்றும் கலாச்சார ரீதியாக மனதை ஆழ்ந்து போகச்செய்யும் கதைகளின் வரிசையை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இங்கே பிரைம் வீடியோவில், நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் பிராந்திய உள்ளடக்கத்தோடு கூடிய எங்களின் கலைத் தொகுப்பை நாங்கள் தொடர்ந்து விரிவாக்கம் செய்து கொண்டிருக்கும் வேளையில், நந்தினி ஜே.எஸ் உருவாக்கிய முதுகுத்தண்டை சிலிர்க்கச் வைத்து உறையச்செய்யும் திகில் நிறைந்த தமிழ் ஒரிஜினல் டிராமா தொடரான “இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படத்தை வெளியிடுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.” என்று இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பிரைம் வீடியோ ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித் கூறினார். “அமானுஷ்ய நிகழ்வுகளின் கூறுகள் நிறைந்த இந்த மனதைக் கொள்ளைகொள்ளும் கிரைம் தொடரின் புலன் விசாரணைக்கு நந்தினி வழங்கும் ஒரு தனித்துவமான பெண்ணியப் பார்வைக் கோணம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த சினிமா அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்கிறது.”

“ஒரு படைப்பாளியாக, “இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படத்தில் பணிபுரிந்தது ஒரு ஆழ்ந்த மகிழ்ச்சிகாரமான அனுபவமாக இருந்தது மற்றும் இந்த கூட்டாண்மைக்கு நான் மிகவும் நன்றி பாராட்டுபவனாக இருக்கிறேன். திகில் மற்றும் மர்மங்களுடன் போலீஸ் நடைமுறைகளை ஒருங்கிணைத்து வழங்கியது கதை சொல்லல் செயல்பாடுகளில் இன்ஸ்பெக்டர் ரிஷியின் அச்சமூட்டும் விந்தையான உலகத்தினுள் மேலும் ஆழமாக சென்று ஒரு புதிய பரிமாணத்தை ஆராய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.” என்று நந்தினி ஜே.எஸ்.கூறினார் “நவீன் சந்திரா, சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள், குமரவேல் உள்ளிட்ட நடிகர்களின் உன்னதமான நடிப்பும், படக் குழுவினரின் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சிகளும் எனது பார்வைக் கோணத்தை திரையில் அழகாக காட்சிப்படுத்த உதவியிருக்கிறது.”

இணையம் முழுக்க பேசுபொருளான இனிமேல் ஆல்பம் பாடல் !!

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம், சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் ‘இனிமேல்’ என்ற தலைப்பில் ஒரு பாடலை அறிவித்தது. உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைப் பெற்ற விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் RKFI இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. போஸ்டரில் குறிப்பிட்டுள்ளபடி லோகேஷ் ஒரு நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘இனிமேல்’ பாடல் நவீன நகர்ப்புற ரிலேஷன்ஷிப்பில், காதலின் அனைத்து நிலைகளையும் அதன் ஏற்ற இறக்கங்களுடன் சித்தரிக்கும் பாடலாகும். ஸ்ருதி ஹாசன் பாடி, இசையமைத்துள்ள இனிமேல் பாடலை, கமல்ஹாசன் எழுதியுள்ளார். இப்பாடல் தற்போதைய தலைமுறையில் காதல் இயங்கும் விதத்தைக் கச்சிதமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. எட்ஜ், ஷீ இஸ் எ ஹீரோ மற்றும் மான்ஸ்டர் மெஷின் போன்ற வெற்றிகரமான சுயாதீன ஆல்பம் பாடல்களை ஸ்ருதிஹாசன் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பு RKFI நிறுவனம் இனிமேல் பாடல் குறித்து அறிவித்ததிலிருந்தே, இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் பரவலான பாராட்டுக்களைப் பெற்றதுடன் இணையம் முழுக்க பெரும் பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்த சிங்கிள் பாடல் மூலம் இந்திய சினிமாவின் மூன்று முக்கிய ஆளுமைகள் இணைகிறார்கள் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இனிமேல் பாடலின் வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை, எனினும் தயாரிப்பாளர்கள் மூன்று ஆளுமைகள் இணையும் இப்பாடலைப் பெரிய அளவில் எடுத்துச்செல்வதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

நடிகர் வெற்றி நடிக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு ஆசியளித்த இயற்கை

‘எட்டு தோட்டாக்கள்’ வெற்றி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் விரைவில் வெளியாகும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் சிவா .ஆர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தில் வெற்றி, மதுரா, விவேக் பிரசன்னா, ஹரிஷ் பெராடி, ‘அருவி’ மதன் குமார், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். கே. உதயகுமார் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை காசி விஸ்வநாத் மேற்கொண்டிருக்கிறார். ரொமான்டிக் ட்ராமா ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை 3 S பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் சிவா. ஆர் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் படத்தின் வெளியிட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” ஆலன் ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை தேடல்… மற்றும் ஓர் அழுத்தமான காதல் களம்… இந்தக் களம் படமாக்கப்பட்டபோது கொடைக்கானலில் கடும் மழையும், குளிரும் உடன் பயணித்தது. சென்னையில் படமாக்கப்பட்ட போது புயலும், காற்றும் இந்த காதலை ஆரத் தழுவியது. வாரணாசியிலும், ரிஷிகேசிலும் படமாக்கப்பட்ட போது பனிக்காற்றும், கடும் குளிரும் கூடவே இருந்து தாலாட்டியது. இப்படி இயற்கை அன்னை ஆசீர்வதித்த இந்த காதலை தமிழ் ரசிகர்களின் பார்வைகளுக்கு பரிமாற.. இறுதி கட்ட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறோம்.

‘இசைப்புதல்வன்’ மனோஜ் கிருஷ்ணாவின் இசை மெட்டிற்கு கவிஞர் கார்த்திக் நேத்தா பாடல் வரிகளை எழுத, பின்னணி பாடகர் சங்கர் மகாதேவனின் வசீகர குரலில் ‘வாரணாசியில் மனித பிறப்பின் ரகசியங்களை சிவனைப் பார்த்து கேட்பது போல்..’ ஒரு பாடலும்.., இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தன் காந்தக் குரலால் காதலில் பரிதவிக்க ஒரு பாடலும்… . பாடகிகள் சின்மயியும், மும்பை நிகிதா காந்தியும் தங்களின் தேனினும் இனிய குரலால் காதலை ஆரத் தழுவ தலா ஒரு பாடலும்..என இந்த நான்கு கானங்களும் உங்கள் செவிகளுக்கு செந்தமிழில் உள்புக.. இசையின் தாளலயங்களில் தாலாட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. விரைவில் உங்கள் செவி வழியாக இதயத்தில் தஞ்சமடையவும் காத்திருக்கிறது.

இந்த காதல் காவியத்தில் ‘எட்டு தோட்டாக்கள்’ வெற்றி கதையின் நாயகனாகவும், நாயகிகளாக ஜெர்மன் மதுரா மற்றும் அனு சித்தாராவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஹரிஷ் பெராடி, மதன்குமார், விவேக் பிரசன்னா, கருணாகரன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை காண காத்திருங்கள்.‌ உங்களை ‘ஆலன்’ வெகு விரைவில் வெண் திரையில் சந்திப்பான்.. காதலின் வாசத்துடன்…” என்றார்.

Top Hashtags on X in India: Rebel Star Prabhas stands No 1

Rebel star Prabhas stands out among all star heroes with numerous records and achievements. Whether it’s unique collaborations, smashing box office records, or extensive pan-global film projects, he consistently leads the pack.

This has elevated Prabhas from a Tollywood sensation to a pan-Indian icon. His popularity was recently highlighted in X’s (formerly Twitter) list of Top Hashtags in India, where Prabhas emerged as the sole hero featured in the entertainment category’s top 10 most utilized hashtags, according to a release by Twitter India.

This achievement is seen as a testament to Prabhas’ massive social media influence, much to the delight of his fans. With highly anticipated blockbusters like Kalki 2898 AD and Raja Saab on the horizon, Prabhas is set to further captivate audiences and celebrate with his fans.

இந்தியாவின் உள்ள எக்ஸ் தளத்தின் சிறந்த ஹேஸ்டாக்குகள் : ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு முதலிடம்

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் – புதிய சாதனைகளை நிகழ்த்துவதிலும், பல சாதனைகளை முறியடிப்பதிலும் ஏனைய நட்சத்திர நடிகர்களில் தனித்து நிற்கிறார். அவருடைய பிரத்யேகமான ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பின் காரணமாக.. பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முறியடிப்பதுடன், இந்திய அளவில் மட்டும் இல்லாமல் உலகளவில் அவருடைய திரைப்படத்தை ரசிகர்களுக்காக கொண்டு செல்வதிலும் தனித்துவத்தை பின்பற்றுகிறார்.

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் – தெலுங்கு திரையுலகின் வணிக எல்லையிலிருந்து பான் இந்திய அளவிலான சந்தையின் நட்சத்திர ஐகானாக உயர்ந்திருக்கிறார். ட்விட்டர் இந்தியா நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியாவில் உள்ள எக்ஸ் தளத்தின் ( முன்னர் ட்விட்டர் ) சிறந்த ஹேஸ்டாக்குகளின் பட்டியலில் அவருடைய புகழ் சிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பிரபாஸ் பொழுதுபோக்கு வகைகளில் சிறந்த 10 ஹேஸ்டாக்குகளை பெற்ற ஒரே நட்சத்திர நடிகராக உருவெடுத்திருக்கிறார்.

இந்த சாதனை… பிரபாஸின் சமூக வலைதளம் மற்றும் சமூக ஊடகங்களில் அவரது செல்வாக்கிற்கு சான்றாகியிருக்கிறது. இது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸின் நடிப்பில் ‘கல்கி 2898 AD’ மற்றும் ‘ ராஜா ஸாப்’ ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டுகளுடன்.. பிரபாஸ் பார்வையாளர்களை மேலும் கவர்ந்து, அந்த வெற்றியை தன்னுடைய ரசிகர்களுடன் கொண்டாடவிருக்கிறார்.

“ஹார்ட் பீட்” சீரிஸ் இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான ‘ஹார்ட் பீட்’ சீரிஸை, தற்போது ஸ்ட்ரீம் செய்யத் தொடங்கியுள்ளது.

ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களைச் சுற்றி, நடக்கும் பரபரப்பு சம்பவங்கள் தான், ஹார்ட் பீட் சீரிஸின் கதைக்களம் ஆகும்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், மனதைக் கவரும் இந்த சீரிஸை, மார்ச் 8 ஆம் தேதி, சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டமாக ஸ்ட்ரீம் செய்யத் துவங்கியுள்ளது.

இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மன், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘ஏ டெலி பேக்டரி’ நிறுவனம் இந்த சீரிஸை தயாரித்துள்ளது, இந்தத் சீரிஸை இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்போது “ஹார்ட் பீட்” சீரிஸை, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டுகளியுங்கள்.

“அமீகோ கேரேஜ்”  படத்தின்  பத்திரிக்கையாளர் சந்திப்பு !  

People Production House சார்பில் முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், NV Creations நாகராஜன் இணைந்து தயாரிக்க இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’. அனைவரும் ரசித்து மகிழும் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. Action Reaction நிறுவனம் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் தமிழகமெங்கும் இப்படத்தினை வெளியிடுகிறார். இந்நிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வினில்

நடிகர் மகேந்திரன் பேசியதாவது…
நான் என்றும் ஹீரோ இல்லை உங்கள் வீட்டுப் பையன் தான். இந்த 30 வருடத்தில் எனக்கு எப்போதும் உங்கள் ஆதரவு தந்து கொண்டே இருக்கிறீர்கள், அதற்கு நன்றி. கொரோனா காலத்தில் சினிமாவை நினைத்து பயந்து விட்டேன். என்ன செய்யப்போகிறேன் என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தான் இயக்குநர் பிரசாந்த் வந்தார். முதலில் டாக்குமெண்ட்ரி எடுக்கனும் என்றார், நான் தான் படமெடுக்கலாம் என சொன்னேன். சரி என்றார். அவர் அப்பா புரடியூசராக வந்தார். பல நண்பர்களும், அவர் குடும்பத்தினரும் இணைந்து தயாரிக்க முன்வந்தனர். பல கஷ்டங்களுக்கு பிறகு, இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இங்கிருக்கும் எல்லோருமே பணத்திற்காக வேலை செய்யவில்லை. இந்தப்படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இப்படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி.  

இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் பேசியதாவது…
இது என் முதல் குழந்தை, என் முதல் படம். முதல் படம் எத்தனை முக்கியம் என அனைவருக்கும் தெரியும். பல கஷ்டங்களுக்கு பிறகு தான், இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளோம். ஒரு நல்ல படமாக உருவாக்கியிருக்கிறோம். ஒரு கதை எழுதிவிட்டு காத்திருந்தபோது, மகேந்திரன் அண்ணாவைச் சந்தித்தேன் அங்கு தான் இப்படம் ஆரம்பித்தது.  இப்படத்திற்காக பல தயாரிப்பாளர்களைச் சந்தித்தோம், ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை. அப்புறம் பல நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கலாம் என்றார்கள். பலரும் இணைந்து தான் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். மகேந்திரன் ஒரு நடிகராக இல்லாமல், தன் படமாக இன்று வரை தாங்கி வருகிறார். அவருக்கு என் நன்றி. ஜி எம் சுந்தர் அண்ணா மிக முக்கியமான பாத்திரம் செய்துள்ளார். கமல் சார் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் நடித்தவர் அவர். ஷீட்டிங்கில் அவரிடம் எனக்குத் தேவையானதை எப்படி வாங்குவது என்ற தயக்கம் இருந்தது, ஆனால் என்னிடம் மிக எளிமையாகப் பழகி, படத்திற்கு தேவையானதைத் தந்தார். தாசரதி என் முதல் ஷார்ட் ஃபிலிமிலிருந்து இருக்கிறார், நல்ல நண்பர் நல்ல ரோல் செய்துள்ளார். நாயகி ஆதிரா நன்றாக நடித்துள்ளார். இந்த படத்தின் பெரிய பலம் பாலமுரளி அண்ணாவின் இசை தான். அவருக்கும் எனக்கும் நல்ல வேவ் லென்த் இருந்தது. பாடல்களுக்கு இப்போது கிடைத்து வரும் வரவேற்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. கு கார்த்திக் பாடல் தரும்போதே ஐந்து சரணம் தந்துவிடுவார், அவருக்கு என் நன்றி. விஜய குமார் மிகச் சிறந்த நண்பர். அவருடன் ஆறு வருட பயணம், அட்டகாசமான ஒளிப்பதிவை தந்துள்ளார். அசோக் அண்ணா, நல்ல ஆக்சன் ப்ளாக் தந்துள்ளார். எல்லோருமே எனக்காகக் கடுமையான உழைப்பைத் தந்துள்ளனர். இந்த ட்ரெய்லருக்கு வாய்ஸ் தந்த மைம் கோபி அண்ணாவிற்கு நன்றி. இப்படம் 3 வருட உழைப்பு, என் அப்பா இல்லை என்றால் இது எதுவும் நடந்திருக்காது. இப்படம்  கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

NV Creations தயாரிப்பாளர் நாகராஜன் பேசியதாவது…
இங்கு வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள். இப்படத்தின் இயக்குநர் என் மகன். அமீகோ என்றால் என்ன என்று அவனிடம் கேட்டேன்,  அமீகோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் ஃபிரண்ட் என அர்த்தம் என்றார். இது நண்பர்கள் சம்பந்தமான படம். மாஸ்டர் மகேந்திரன் ஒரு நடிகராக எங்களிடம் அறிமுகமானார், இன்று எங்கள் குடும்பத்தில் ஒருவராகிவிட்டார். படத்தில் பணியாற்றிய அனைவரும் ஒரு குடும்பமாக தான் பழகுகிறார்கள். இந்தப்படம் எடுக்கும் போது தான் ஒரு படம் எடுப்பது எத்தனை கடினமானது என்பது புரிந்தது. என் மகன் எடுத்துள்ள இந்த படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.  

Action Reaction நிறுவனம் சார்பில் ஜெனிஷ் பேசியதாவது..
அமீகோ பெயரே இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. விஷுவல்களும் சூப்பராக வந்துள்ளது. வியாபாரத்திற்காக பேசும்போது எல்லா இடத்திலும் நல்ல வரவேற்பு உள்ளது. திரை வட்டாரத்தில் நல்ல பெயரை இந்தப் படம் பெற்றுள்ளது. ஆக்சன் ரியாக்சன் சார்பில், இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறோம். நல்ல டீம் மிகச்சிறந்த ஆதரவைத் தந்தார்கள். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நாயகி ஆதிரா ராஜ் பேசியதாவது…
2 வருடங்களாக நாங்கள் காத்திருந்த படம், இப்போது ரிலீஸுக்கு ரெடி ஆகியிருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப் படம் ஆரம்பிக்கும் போது, எனக்கு தமிழ் தெரியாது, இப்போது கொஞ்சம் பேச ஆரம்பித்து விட்டேன். இந்தப் படம் எல்லோரும் இணைந்து ஒரு குடும்பமாக இணைந்து  மகிழ்ச்சியுடன் உருவாக்கியுள்ளோம். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

நடிகர் முரளி பேசியதாவது…
மகேந்திரன் ஃபிரண்டாக தான் இங்கு வந்தேன். இந்தப்படத்தின் கனெக்டிங் பீப்பிளாக அவன் தான் இருந்திருக்கிறான். எல்லா நண்பர்களுக்கு வாய்ப்பு வாங்கி தந்துள்ளான், அவருக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் இல்லை அப்பா என்று  தான் சொல்ல வேண்டும். எல்லாருக்கும் இப்படி ஒரு அப்பா கிடைக்க மாட்டார்கள், எனக்கு இயக்குநரைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது. இயக்குநர் பிரசாந்தும் நானும் நிறையப் பேசியிருக்கிறோம், நல்ல படம் எடுத்துள்ளார். கண்டிப்பாக இந்தப்படம் உங்களை ஆச்சரியப்பட வைக்கும் அனைவருக்கும் நன்றி.  

ஒளிப்பதிவாளர் விஜய குமார் சோலைமுத்து பேசியதாவது…
இது என் முதல் மேடை. இந்த வாய்ப்பிற்காக இயக்குநருக்கு என் நன்றி. ஒரு நல்ல படம். எல்லோரும் கடினமாக உழைத்துள்ளனர். இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் பாலமுரளி பாலு பேசியதாவது…
மகேந்திரன் என் தம்பி மாதிரி. அவன் தான் எனக்கு போன் செய்து, ஒரு நல்ல கதை நீங்கள் இசையமைக்க வேண்டும் எனக் கேட்டான். அவனுக்குப் பண்ணாமல் எப்படி ? அப்படி தான் நான் இப்படத்திற்குள் வந்தேன். அதன் மூலம் இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் எனும் இன்னொரு தம்பி கிடைத்தார். தயாரிப்பாளர் முரளி மிகப்பெரிய ஆதரவு தந்தார். அவரோடு சென்னையில் எல்லா ஹோட்டல்களிலும் சாப்பிட்டிருக்கிறேன். இந்த படத்தில் பணியாற்றியது மிக இனிமையான அனுபவமாக இருந்தது. கு கார்த்திக் எல்லாப்பாடல்களையும் அழகாக எழுதித் தந்தார். எப்போதும் ஒரு பாடலுக்கு 5 சரணங்கள் எழுதித் தந்து விடுவார். படம் மிக நன்றாக வந்துள்ளது படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

ஸ்டன்ட் இயக்குநர் டான் அசோக் பேசியதாவது…
அனைவருக்கும் என் வணக்கம். அமீகோ கேரேஜ் பற்றிச் சொல்ல நிறையச் சொல்ல இருக்கிறது. விஷுவல், பாடல்கள் எல்லாம் அருமையாக வந்துள்ளது. ஆக்சன் காட்சிகள் எல்லாம் சூப்பராக வந்துள்ளது. மகேந்திரன் எந்த ஷாட்டாக இருந்தாலும், ரெடியாக இருப்பார். நிறைய ஒத்துழைப்புத் தந்தார் ஆக்சன் காட்சிகளில் அசத்தியுள்ளார். இயக்குநர் பழகப் பழக ஒரு குடும்பமாகவே ஆகிவிட்டார். இப்போது அவர் வீட்டில் நாங்கள் சமைத்து சாப்பிடும் அளவு நெருக்கமாகிவிட்டார். படம் மிக நன்றாக வந்துள்ளது படத்திற்கு உங்கள் ஆதரவை  தாருங்கள்.

பாடலாசிரியர் கு கார்த்திக் பேசியதாவது…
அமீகோ கேரேஜ் மிக ஜாலியாக வேலை பார்த்த படம். இதுவரை இசையமைப்பாளர் பால முரளி உடன் காமெடி கமர்ஷியல் என செம்ம ஜாலியான படமாகத்தான் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் இது ஆக்சன் டிராமா படம், பால முரளியிடம் நமக்கு நல்ல வாய்ப்பு என்றேன். இப்படி ஒரு படத்தில் பணியாற்றியது மிக மகிழ்ச்சியாக இருந்தது. மிக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தோம், பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளது. இப்படத்தைப் பத்திரிக்கையாளர்கள், மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். தயாரிப்பாளர், இயக்குநர் அனைவருக்கும் என் நன்றி .

ஒலிப்பதிவாளர் டோனி பேசியதாவது…
அமீகோ கேரேஜ் மிக நல்ல படமாக வந்துள்ளது. எல்லோரும் திரையரங்கில் இப்படத்தைப் பார்த்து படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் தாசரதி பேசியதாவது…
இது என்னுடைய முதல் மேடை. இயக்குநர் பிரசாந்த் எனக்கு லைஃப் சேஞ்சிங் மொமண்ட் தந்துள்ளார். அவர் என் நண்பன், இங்கு எல்லோருமே நண்பர்கள் தான்.  இது நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய படம். படத்தை அனைவரும் இணைந்து அர்ப்பணிப்புடன் உருவாக்கியுள்ளோம், இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் முரளிதரன் சந்திரன் பேசியதாவது…
இயக்குநர் பிரசாந்த் இந்த கேரக்டர் பற்றிச் சொன்னபோது, எனக்கு நடிக்கத் தெரியாது என்றேன். வாங்கப் பார்த்துக் கொள்ளலாம் என்றார். என்னை நடிகனாக்கி விட்டார். இப்போது எல்லோருமே நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டார்கள், இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

ஶ்ரீக்கோ உதயா பேசியதாவது…
ஊடக நண்பர்களுக்கு நன்றி. கொரோனா டைமில் மகேந்திரன் போன் செய்து 2 நாள் வேலை இருக்கிறது வாருங்கள் என்றார். என்னை மிக நன்றாகக் கவனித்தனர். கொரோனா சமயம் ஆனால் எல்லோரையும் அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார்கள். அமீகோ கேரேஜில் நானும் நடித்திருப்பது மகிழ்ச்சி. பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளது. இசையமைப்பாளர் பாடலாசிரியர் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.  இயக்குநர் இசை ஞானம் கொண்டவர், படத்தையும் அருமையாக எடுத்துள்ளார். இப்படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.

நடிகர் மதன கோபால் பேசியதாவது…
எங்கள் குழுவே அமீகோ கேரேஜ் படத்திற்காக வெயிட் பண்ணிக்கொண்டிருந்தோம். இந்த படக்குழு எனக்கு புதியது, மகி மட்டும் தான் நண்பர். ஆனால் படப்பிடிப்பு முடிந்து, இப்போது எல்லோரும் குடும்பமாகிவிட்டார்கள். இந்த டீமில் நானும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

சக்தி கோபால் பேசியதாவது…
இந்தப் படம் ஃபிரண்ட்ஸ் இல்லாவிட்டால் நடந்திருக்காது. இயக்குநர் பிரசாந்த் தான் அனைவருக்கும் வாழ்க்கை தந்துள்ளார். எல்லோரும் கடுமையாக உழைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.  

கேங்ஸ்டர் வாழ்வை சுற்றிய ஒரு இளைஞனின் பயணமாக,  சுவாரஸ்யமான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது அமீகோ கேரேஜ். இப்படத்தில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, GM சுந்தர், தசரதி,  அதிரா ராஜ், ஶ்ரீக்கோ உதயா, முரளிதரன் சந்திரன், மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை முரளி ஶ்ரீனிவாசன் தயாரித்துள்ளார். ராமசந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஷ்வின் குமார் VG இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்க, விஜய குமார் சோலைமுத்து ஒளிப்பதிவு செய்ய,  ரூபன் எடிட்டிங் செய்துள்ளார்.

இப்படம் வரும் மார்ச் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. Action Reaction நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தினை வெளியிடுகிறது.

ச. பிரேம்குமார், ’96’ படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குனர்.

அன்புக்குரிய ஊடகத்துறை நண்பர்களுக்கு,

வணக்கம்,

நான் ச. பிரேம்குமார், ’96’ படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குனர். கடந்த மார்ச் – 7’ஆம் தேதி ‘Cheyyaru Balu official’ என்ற Youtube Channel’ல், ‘உங்களுக்கு ஆண்மை இல்லீயா, என் பாட்டை யூஸ் பண்ணி இருக்கீங்க.. நாக்க புடுங்கறா மாதிரி கேட்ட இளையராஜா’ என்ற தலைப்பில் ஒரு காணொளி வெளியானது. https://youtu.be/lqdaTuw3FsQ?si=6Z958bJXU5mtTyf. அதில் திரு.செய்யாறு பாலு வெளியான மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் நான் எழுதி இயக்கி 2018-ல் வெளியான 96 திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு நாங்கள் முறையான அனுமதி பெறாதவாறு பேசியுள்ளார்.

குறிப்பாக, ’96 பற்றி பேசும்போது, இசைஞானி இளையராஜா அவர்கள் சொன்னதை மேற்கோள் காட்டியதோடு நிறுத்தாமல், இன்னொரு வார்த்தை, ‘பொ’ என்கிற வார்த்தையை வேற யாராவது இருந்தா யூஸ் பண்ணி இருப்பாங்க’ என்றும் பேசியுள்ளார். மேலும் அதற்கு 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மன்னிப்பு கேட்டதாகவும் சொல்கிறார். வன்மம் நிறைந்த இந்த கருத்துகளுக்கு பதில் சொல்லாமல் என்னால் கடந்து செல்ல இயலவில்லை.

திரு. செய்யாறு பாலு அவர்கள் குறிப்பிட்டுள்ள மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கும், 96 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களுக்கும் Think Music வாயிலாகவும், அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் மூலமாகவும், இரண்டு திரைப்படங்களும் வெளியாவதற்கு முன்னரே அதற்கான அனுமதியை பணம் செலுத்தி பெற்றுவிட்டோம்.

ஒரு மூத்த பத்திரிகையாளராக இருந்துகொண்டு இந்த முக்கியமான தகவலை கூட விசாரிக்காமல், அல்லது அந்த உண்மையை உள்நோக்கத்துடன் மறைத்து பொய் கூறியதேன்? ஒரு காணொளியின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்கு ஒரு செய்தியாளரின் அடிப்படை அறத்தை விட்டுக்கொடுப்பதா?

அந்த காணொளி இசைஞானி இளையராஜா அவர்களை பற்றியது. அவருடைய பெருமையை பேசுவதற்கு அவர் இசையமைத்த ஆயிரம் திரைப்படங்களிலிருந்து ஏதோ ஒரு பாடலே போதுமானது. அப்படி இருக்க, முறையாக ஒரு செயலை செய்த எங்களை சிறுமைப்படுத்துவதேன்? ஒன்றை உயர்த்த இன்னொன்றை தாழ்த்த வேண்டும் என்பது அடக்குமுறை அல்லவா…..

மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் 96 திரைப்படங்களில் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தினோம் என்பதை விட, அது அவருடைய இசைக்கான எங்கள் சமர்ப்பணம். இசைஞானியின் இசையை கேட்டு பிறந்து, வளர்ந்த தலைமுறை நாங்கள்.

’96 பற்றி இசைஞானி இளையராஜா Daring’ஆக ஒரு அறிக்கை வெளியிட்டார் என்று திரு. செய்யாறு பாலு சொல்கிறார்.

தவறு,

அது ஒரு நேர்காணலில் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில். அதற்கான உரிய விளக்கத்தை நாங்கள் கொடுத்த பிறகு அந்த சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டது.

மேலும், அதற்கு ’96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் மன்னிப்பு கேட்டதாக ஒரு பொய்யான தகவலையும் சொல்கிறார் திரு. செய்யாறு பாலு. முதலில் 96 படத்தின் இசையமைப்பாளர் பெயர் கோவிந்த் வசந்தா. கோவிந்த் வசந்த் அல்ல. அடுத்ததாக அவர் எந்த மன்னிப்பும் கேட்கவே இல்லை.

திரு. செய்யாறு பாலு எங்களைப் பற்றிய உண்மையைதான் சொல்ல வேண்டும் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை. ஆனால், எங்களைப் பற்றி பொய் சொல்ல வேண்டாம்.

சினிமா என்பது திரைத்துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமானது அல்ல. சினிமாவைப் பற்றி விமர்சித்து செய்தி வழங்கும் செய்தியாளர்களுக்கும் அது சொந்தமானதுதான்.

சினிமாவை பாதுகாப்பது இருவரின் கடமைதான்.

கடந்த காலத்தில் 96 திரைப்படத்திற்கு வந்த ஒரு முக்கியமான பிரச்சினையை, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின் துணையோடுதான் தீர்வு கண்டு, மீண்டு வர முடிந்தது.

அந்த நன்றியை நான் மறக்கவே மாட்டேன்.

ஐந்து வருடங்கள் கடந்தும், மீண்டும் ஒரு பிரச்சினை திரு. செய்யாறு பாலுவின் மூலமாக வந்துள்ளது.

தன்னிலை விளக்கம் அளிக்கவும், உண்மையை நிலைநாட்டவும் எனக்கு வேறு வழி தெரியவில்லை,உங்களையே மீண்டும் நாடுகிறேன்.

உண்மை விளங்கட்டும்.

நன்மை விளையட்டும்.

பேரன்புடன்,

ச.பிரேம்குமார்.