Breaking
January 22, 2025

May 2024

விமல், கருணாஸ் நடிப்பில்  “போகுமிடம் வெகு தூரமில்லை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.

Shark 9 pictures சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மை பாத்திரங்களில் நடிக்க,  அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”.  விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.

நடிகர் விமல் மற்றும் கருணாஸ் கதாபாத்திரங்களின் பின்னணியில்  ஒரு காரும் இடம்பெற்றிருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பார்த்தவுடனே உணர்வுப் பூர்வமான கதைக்களத்தில் அற்புதமான அனுபவம் தரும் திரைப்படமாக இருக்குமென்பதை உறுதி செய்வதாக இருந்தது. மிக வித்தியாசமானதாக அமைந்துள்ள ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது.

இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும், மார்ச்சுவரி  வேன் ஓட்டும் நாயகன் விமல், தனது அவசரப் பணத்தேவைக்காக,  திருநெல்வேலி வரை ஒரு முக்கியமானவரின்  உடலை எடுத்துச் செல்கிறார்.  சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு உடலை எடுத்துச் செல்லும் பயணம் தான் இந்த படத்தின் மையம்.  அந்தப் பயணத்தில் அவர் சந்திக்கும் மனிதர்கள், அவருக்கு ஏற்படும் அனுபவங்கள் மற்றும் தடங்கல்களை  தாண்டி அவர் எப்படிச் சென்றடைகிறார் என்பது தான் இப்படத்தின் கதை.

தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்சியல் அம்சங்களில் இருந்து மாறுபட்டு ஒரு வித்தியாசமான களத்தில், மனதில் புன்னகை வர வைக்கும், வாழ்க்கை அனுபவங்களுடன்,  அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா.

சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் பயணம் படத்தின் மையம் என்பதால், படம் தமிழ்நாடு முழுக்க பட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.   திருநெல்வேலி மற்றும் சென்னையில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது.

இதுவரையிலான  திரைப்பயணத்தில் தான் ஏற்றிராத வித்தியாசமான பாத்திரத்தில் நாயகனாக விமல் நடித்துள்ளார். கருணாஸ் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் முழு படப்படிப்பும் முடிந்த நிலையில், தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.  படத்தின் டீசர், டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில்நுட்ப வல்லுநர்கள்

இயக்குநர்: மைக்கேல் K ராஜா
தயாரிப்பாளர்: சிவா கிலாரி (Shark 9 pictures)
இசையமைப்பாளர்: N.R.ரகுநந்தன்
ஒளிப்பதிவாளர்: டெமில் சேவியர் எட்வர்ட்ஸ்
தொகுப்பாளர்: M.தியாகராஜன்
கலை இயக்குநர்: சுரேந்தர்
ஸ்டண்ட் டைரக்டர்: மெட்ரோ மகேஷ்
நடன மாஸ்டர்: ரிச்சி ரிச்சர்ட்சன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : ராகேஷ் ராகவன்
நிர்வாக தயாரிப்பாளர்: வெங்கி மகி
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’

இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது !!

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘பைசன் காளமாடன்’ திரைப்படம் இனிதே துவங்கியது !!

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தங்களின் முதல் திரைப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இந்நிறுவனங்கள் பல புதிய திரைப்படங்களை இணைந்து தயாரிக்கவுள்ளனர். முன்னணி நட்சத்திர இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் முதல் படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மே 6ஆம் தேதி தொடங்குகிறது. பரியேறும் பெருமாள் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்திற்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் தயாரிப்பாளர் பா ரஞ்சித்துடன் இணையும் படம் இது என்பது குறிப்பிடதக்கது. அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து, அமைதிக்கான பாதையைத் தேடிய, ஒரு போர்வீரனின் கதையை, நம் கண்களுக்கு விருந்தாக கொண்டுவருகிறது.

இப்படத்தில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் மற்றும் அருவி மதன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கும் இப்படத்திற்கு, எழில் அரசு K ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டராக சக்திகுமார், மூத்த கலை இயக்குநர் குமார் கங்கப்பன் கலை இயக்கத்தையும், ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளராக ஏகன் ஏகாம்பரம் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் வழங்கும், “பைசன் காளமாடன்”, அற்புதமான படைப்பாளியான மாரி செல்வராஜின் இயக்கத்தில், மனித ஆத்மாவின் வெற்றி வேட்கையைப் பேசும் கலைப்படைப்பாக, மிக உன்னதமான அனுபவத்தை வழங்கவுள்ளது.

”அமீரை இப்போது தாவூத் இப்ராஹீமாக மாற்றி விட்டார்கள்”

ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா.

அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார்.

இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

Pvr inox பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. வரும் மே-10ஆம் தேதி உலகெங்கிலும் இப்படம் வெளியாக இருக்கிறது.. இந்தநிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்தநிகழ்வில் நாயகன் அமீர், நாயகி சாந்தினி, இயக்குநர் ஆதம்பாவா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் பொன்வண்ணன், இயக்குநர்கள் கரு.பழனியப்பன், எஸ்.ஆர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் நடிகரும் இயக்குனருமான சரவண சக்தி பேசும்போது, “அமீர் அண்ணன் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே நானும் இயக்குனர் ஆதம்பாவாவும் அவரிடம் கதை சொல்வதற்காக சென்றோம். ஆனால் அன்று அவரை சந்திக்கவே முடியவில்லை. இன்று அவரை வைத்து படம் இயக்கும் அளவிற்கு நண்பர் ஆதம்பாவா உயர்ந்திருக்கிறார். ஆளில்லாத சிக்னலில் கூட அத்துமீறி சென்று விடக்கூடாது என நினைக்கிற ஒரு மனிதர் தான் அமீர் அண்ணன்.. அவரது சுய ஒழுக்கத்தை பார்த்து நான் பல விஷயங்களை திருத்திக் கொண்டேன்” என்று கூறினார்.

நாயகி சாந்தினி ஸ்ரீதரன் பேசும்போது, “இந்த படத்தின் ஹீரோ அமீர், இயக்குனர் ஆதம்பாவா உள்ளிட்ட அனைவருடனும் படப்பிடிப்பு தளத்தில் செம ஜாலியாக இருந்தது. ஒரு குடும்பமாகத்தான் இந்த படக்குழுவை நான் உணர்ந்தேன். நிச்சயமாக இந்த படம் உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என கூறினார்.

நடிகர் இமான் அண்ணாச்சி பேசும்போது, “நகைச்சுவை கலந்த ஒரு காதல் கதையை இயக்குனர் ஆதம்பாவா இதில் கொடுத்துள்ளார். படத்தில் அமீருடன் கூடவே வரும் கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்கிறீர்கள் என இயக்குனர் ஆதம்பாவா கூறினார். ஆனாலும் பருத்திவீரன் படத்தில் ஒரு காட்சி சரியாக வரவில்லை என்றால் பல டேக்குகள் எடுப்பார் என கேள்விபபட்டுள்ளேன். என்னுடன் அவர் சரியாக பழகுவாரா என்கிற ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் ஒரே நாளில் என் எண்ணத்தை மாற்றிவிட்டார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களை புரட்சித்தலைவர் பற்றிய பாடல் இனி அவருக்கான தேசிய கீதம் ஆக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. படம் முடிவதற்குள் கதாநாயகி சாந்தினி தமிழில் நன்றாக பேசிவிட்டால் ஒரு மோதிரம் தருவதாக கூறி இருந்தேன். இப்போது நன்றாக பேசியுள்ளார். படம் ரிலீஸ் ஆன பிறகு அந்த பாக்கியை செட்டில் பண்ணி விடுகிறேன்” என்றார்

நடிகர் கஞ்சா கருப்பு பேசும்போது, “அமீர் அண்ணன் படங்களில் எனக்கு நல்ல வேடங்கள் கொடுத்து நடிக்க வைத்தார். வாழவந்தான் என எனக்கு ஒரு பட்டம் கொடுத்து நல்லா வாழ்ந்துக்கடா என்று கூறினார். அவருக்கு நான் புரட்சி வேந்தன் என்கிற ஒரு பட்டத்தை இந்த இடத்தில் கொடுக்கிறேன்” என்றார்.

இயக்குநர் எஸ்.ஆர் பிரபாகரன் பேசும்போது, “அமீர் அண்ணன் எனது மானசீக குருநாதர். வாழ்க்கையில் ஏதாவது ஒரு இக்கட்டான பிரச்சனை என்றால் கூட துணையாக வந்து நில்லுங்கள் என அழைக்கும் முதல் நபர் என்றால் அது அமீர் அண்ணன் தான். அப்படி வெளியே தெரியாத பல தருணங்களில் அவரிடம் சென்று நின்று இருக்கிறேன்.. எந்தவித நிபந்தனையும் இன்றி அன்புக்காக மட்டுமே அவரும் வருவார். என்னுடைய பல பட விழாக்களில் கடைசி நேரத்தில் அழைத்தால் கூட தனது வேலையை ஒத்தி வைத்து விட்டு தவறாமல் வந்து விடுவார். அதனால் இந்த படத்தின் விழாவிற்கு என்னை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் வரவேண்டும் என நான் முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் என்னை மறக்காமல் அவரை அழைத்து விட்டார். உடனே வருகிறேன் எனக் கூறிவிட்டேன். இதுபோன்ற ஒரு சூழலில் அவர் அருகில் என்னை போன்றவர்கள் இருக்க வேண்டியதை ஒரு கடமையாக நினைக்கிறேன். அவருடன் இருந்த சில பேர் அவரை விட்டு இப்போது சென்று விட்டார்கள் என வெளியில் சில பேர் கூறி வருகிறார்கள். ஆனால் யாரும் அவரை விட்டு எங்கேயும் போகவில்லை. அவருடனேயேதான் இருக்கிறோம்.

இந்த படத்தின் டிரைலர், பாடல்களை பார்க்கும்போது அமீர் சாருக்கு இது இரண்டாவது ரவுண்டு ஆரம்பிப்பது போன்று எனக்கு தோன்றுகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து பி அண்ட் சி சென்டர்களுக்கான கதைகள் அமீர் அண்ணனை நோக்கி நிறைய வரும். அதை தவிர்க்காமல் அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பல ஹீரோக்கள் தற்போது பான் இந்தியாவை நோக்கி நகர்ந்து விட்டார்கள். மண் சார்ந்த கதைகளுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள். அமீர் அண்ணன் அப்படிப்பட்ட படங்களில் நடிக்க வேண்டும்” என்று பேசினார்.

நடிகர் பொன்வண்ணன் பேசும்போது, “சினிமாவுக்கு வருவதற்கு முன் நல்லவர்களாக இருந்து இங்கே வந்து பாதை மாறியவர்கள் பலர் உண்டு. ஆனால் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு எல்லாத் தவறுகளையும் பண்ணியவர்தான் அமீர். ஆனால் சினிமா துறைக்குல நுழைந்த போது மிகச்சிறந்த ஆன்மீகவாதியாகவும் தனிமனித ஒழுக்கம் கொண்டவராகவும் அப்படியே மாறிவிட்டார். மதுரையில் ஒரு வாழ்க்கை, மதுரைக்குப் பிறகு ஒரு வாழ்க்கை என ஒரு பாட்ஷா போல அமீர் எப்போதும் ஒரு நேர்மையுடன் தான் பயணிக்க விரும்பி இருக்கிறார். பணத்திற்காக மற்றும் வேறு எதற்காகவும் அவர் தனது தனிமனித ஒழுக்கத்தை விட்டுக் கொடுத்தது இல்லை. அதனால் தான் காலம் இன்று அவருக்கு ஒரு செக் வைக்கும்போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவர் மீது கூறப்படும் எந்த ஒரு தவறுக்கும் அவர் நிச்சயம் உடந்தையாக இருந்திருக்க மாட்டார். இப்படி ஒரு எதிர்பாராத தாக்குதல் வரும்போது நம்மில் பலர் நிலை குலைந்து போய் விடுவோம். ஆனால் அவர் மிக நிதானமாக தன் மீது உள்ள மிகப்பெரிய நம்பிக்கையோடு அதை கடந்து சென்ற விதம் பிரமிக்க வைக்கிறது. ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் கதையில் எனது கதாபாத்திரமும் இருந்தது. நானும் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தேன். ஆனால் கிராமத்திலிருந்து நகரத்திற்கு என கதை மிகப்பெரிய அளவில் மாற்றம் அடைந்தபோது எங்களது கதாபாத்திரங்கள் அதிலிருந்து விடுபட்டு விட்டன. ஆனால் ஆதம்பாவா ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் மிகப்பெரிய போராட்டத்திற்கு இடையில் இந்த படத்தை முழுமையான படமாக உருவாக்கியுள்ளார்” என்று கூறினார்.

கவிஞர் சினேகன் பேசும்போது, “இந்த படம் முடிந்த பிறகு தான் இந்த படத்திற்குள்ளே நான் வந்தேன். இந்த படத்திற்கு புரமோஷன் பாடல் ஒன்றை தயார் செய்ய வேண்டும் என ஆதம்பாவா இந்த படத்தின் காட்சிகள் பலவற்றை போட்டுக் காட்டினார். அவற்றைப் பார்த்தபோது மீண்டும் ஒரு அமைதிப்படை படம் மாதிரி இது அமைந்திருக்கிறது என தோன்றியது. அமைதிப்படைக்குப் பிறகு ஒரு அரசியல் நக்கல் கலந்த படம் வரவில்லையே என்கிற குறையை இந்த உயிர் தமிழுக்கு போக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதிகப்படியான படைப்புகளை கொடுக்காவிட்டாலும் ஆளுமையான படைப்புகளை கொடுத்து அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் அமீர். சத்யராஜ் சொன்னது போல சொல்ல வேண்டும் என்றால் ‘பாண்டியர் பரம்பரையில் ஒரு எம்எல்ஏ’ என்பது போல நடித்துள்ளார் அமீர். நிரபராதியாக இருந்து விட்டால் எங்கேயுமே அச்சப்பட தேவையில்லை. ஓடி ஒளிய வேண்டிய தேவை இல்லை. ஒரு மனிதன் அமைதியாக இருப்பதனாலேயே என்ன வேண்டுமானாலும் இந்த உலகம் பேசுமா என்கிற பெரிய வருத்தம் இருக்கிறது. அமீரும் ஆதம்பாவாவும் இந்த படத்தில் துணிந்து இருக்கிறார்கள். நிச்சயம் வெல்வார்கள்” என்று கூறினார்.

இயக்குநர் ஆதம்பாவா பேசும்போது, “என்னை உயிர் தமிழுக்கு படம் மூலம் இயக்குநராக்கி அழகு பார்த்த எனது குரு, மக்கள் போராளி அமீர் சாருக்கு நன்றி. அவருடைய மௌனம் பேசியதே பட இசை வெளியீட்டு விழா தான் எனது சினிமா வாழ்க்கையின் முதல் என்ட்ரி. எனக்கு விவரம் தெரிந்து அவரை நாற்பது வருடங்களாக எனக்கு தெரியும். நான் நான் சினிமாவில் உதவி இயக்குநராக நுழைய முடிவெடுத்தபோது எங்களது உறவினர் மூலமாக இயக்குநர் பாலாவிடம் சேர்த்து விட சொன்னேன். பாலாவும் என்னை சென்னைக்கு வரச் சொல்லிவிட்டார். காரை எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்த உதவி இயக்குநர் நானாகத்தான் இருக்கும். அண்ணா நகரில் உள்ள பாலாவின் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன்.. அவர் மாடியில் இருந்தாலும் பல மணி நேரம் கீழே காத்திருந்தேன். அப்போது நான் கடவுள் பட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதில் முதலில் பேசப்பட்ட அந்த மிகப்பெரிய ஹீரோ அந்த சமயத்தில் அங்கே வந்தார். ஆனால் அங்கே சாப்பிட சொல்லாமல் கூட பல மணி நேர காத்திருப்பு ஏற்பட்டதால் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். ஆனால் பாலா எனக்கு வைத்த பரீட்சை அது என்று உறவினர் கூறினாலும் பாலாவிடம் வேலை பார்க்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு அமீரிடம் சேர்த்து விடுமாறு உறவினரிடம் கூறினேன்.

அந்த சமயத்தில் பருத்திவீரன் படத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. நான் அமீரை பார்க்க சென்றதும் அவர் எனக்காக காத்திருப்பார், நான் வந்ததுமே பருத்திவீரன் ஸ்கிரிப்ட்டை கொடுத்து படித்துவிட்டு வா என்று கூறி மதியம் என்னுடன் டிஸ்கஷன் செய்வார் என்கிற நினைப்பில் சென்றேன். ஆனால் அமீரும் என்னை வரச் சொல்லிவிட்டு பல மணி நேரம் காக்க வைத்தார். அதன் பிறகு வெளியே வந்தவர் என்னை பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார். இந்த இரண்டு இடங்களிலும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் நானே தனியாக ஒரு அலுவலகத்தை துவங்கினேன்.

அதன் பிறகு இயக்குனர் சரவண சக்தியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் என்னவெல்லாம் பண்ணக்கூடாது என்பதை இங்கிருந்து கற்றுக் கொண்டேன். ஆனாலும் இந்த படம் இவ்வளவு நேர்த்தியாக வந்ததற்கு கூடவே இருந்து வழி நடத்திய அமீர் சார் தான் காரணம். இன்று கூட இந்த படத்தை பார்த்த கதாநாயகி சாந்தினி இப்படி ஒரு படத்திலா நான் நடித்தேன் என ஆச்சரியப்பட்டார். அந்த அளவிற்கு இந்த படத்தை எடுத்து முடித்து ரிலீசுக்கு கொண்டு வந்து விட்டோம்.

ஆனால் இந்த சமயத்தில் மதுரையில் பாஷாவாக சென்னையில் மாணிக்கமாக இருந்த அமீரை இப்போது தாவூத் இப்ராஹீமாக மாற்றி விட்டார்கள். அதனால் இந்த படத்தின் வியாபாரமே பாதிக்கப்பட்டது. அமீரால் உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்பாளரே இந்த படத்தின் ரிலீஸை எவ்வளவு தடுக்க முடியுமோ அந்த அளவிற்கு வேலை பார்த்தார். ஆனால் என்னிடம் நன்றாக தான் பேசுவார். அவர் இந்த படத்தை பற்றி பேசிய ஆதாரம் என்னிடம் இருக்கிறது. ஆனால் காலம் தான் அவருக்கு பதில் சொல்லும்.

தமிழ் சமூகத்திற்காக சிறைக்கு சென்றவர் அண்ணன் அமீர். அவருடன் கூடவே சிறைக்கு சென்ற சீமான் இன்று ஒரு கட்சித் தலைவராக இருக்கிறார். ஆனால் சினிமா மீது இருக்கும் காதலால் இங்கேயே இருந்து கொண்டு பத்து வருடம் அந்த வழக்குக்காகவே அலைந்தார். அவரை விடுதலை செய்த நீதிபதியே இதற்காக நீங்கள் பயந்து விட வேண்டாம், தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுங்கள் என்று நற்சான்றிதழ் கொடுத்தார். தமிழக மக்களின் இதயங்களில் இருக்கிறார் அமீர். மக்கள் போராளி அமீர் என்கிற ஒரு புத்தகமே எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் அது வெளியாக இருக்கிறது.

மக்களுக்கான எல்லா போராட்டங்களிலும் எப்போதும் முன்னால் நின்றிருக்கும் இவருக்கு இந்த மக்கள் போராளி பட்டத்தை கொடுக்கவில்லை என்றால் வேறு யாருக்கு கொடுப்பது ? அரசியல் நையாண்டி பின்னணியில் இழையோடினாலும் முழுக்க காதல் படம் தான் இது. சிவகார்த்திகேயனுக்கு டப் கொடுத்திருக்கிறார் அமீர் அண்ணன். அவர் அடுத்தடுத்து எந்த மாதிரி கதைகளை படமாக்க போகிறார் என்பது எனக்கு தெரியும். அவரை வேலை செய்ய விடுங்கள்.. மக்களுக்கு பயனுள்ள திரைப்படங்கள் வரும்..

கதாநாயகி சாந்தினி தயாரிப்பாளருக்கு எந்த வித கஷ்டமும் கொடுக்காத ஒரு நடிகை.. மன்னன் விஜயசாந்தி, சவாலே சமாளி ஜெயலலிதா போல இதில் அமீருக்கு இணையாக காதலியின் கதாபாத்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமா அவரை பயன்படுத்தி கொள்ளும் என நினைக்கிறேன். இந்த படத்தில் படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இமான் அண்ணாச்சிக்கு இதில் ஃபுல் மீல்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இனி பல படங்களில் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க அவருக்கு அழைப்பு வரும். கஞ்சா கருப்புவும் பல காட்சிகளில் காமெடியில் பட்டையை கிளப்பி இருக்கிறார். பல பிரச்சினைகள் காரணமாக இந்த படத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டும் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படத்தை நீங்கள் தான் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இயக்குநர் கரு.பழனியப்பன் பேசும்போது, “இயக்குநர் ஆதம் பாவாவின் பேச்சு எப்படி சிரிக்க சிரிக்க இருந்ததோ அதேபோலத்தான் இந்த படமும் இருக்கும். நான் சினிமாவிற்குள் வந்த காலகட்டத்தில் தன்னுடைய இஸ்லாமிய பெயரை மறைக்காமல் அதே பெயரில் படம் இயக்கிய அமீரை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. இரவு நேரத்தில் யாரோ ஒருவர் குரல் தழும்ப பேசினாலே அடுத்த அரை மணி நேரத்தில் அவருக்கு ஏதோ பிரச்சனை, தான் அவருடன் சென்று நிற்க வேண்டும் என கிளம்பி வந்துவிடுவார் அமீர். அவரை பார்த்து தான் இப்போதும் நான் அதை பின்பற்றுகிறேன். இந்த மேடையில் எஸ்.பி ஜனநாதன் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். எங்கள் மூவருக்கு எப்போதுமே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருந்ததில்லை.

தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் கதையில் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் ரஜினிகாந்த் நடித்த போது இந்த படம் நமக்கு செட் ஆகுமா என்கிற சந்தேகம் அவருக்கு இருந்தது. ஒரு கட்டத்தில் அதை தயாரிப்பாளரிடமும் கேட்டு விட்டார். ஆனால் பஞ்ச அருணாசலம் இந்த படம் தோல்வியடைந்தால் எனக்குத்தான் நட்டம்.. உனக்கு என்ன பிரச்சனை..? ஆனால் இந்த படம் வெற்றி பெற்றால் இனி நீ கடைசியாக நடிக்கும் படம் வரை 15 நிமிடம் காமெடி பண்ணிவிட்டு தான் மற்ற வேலைகளை பார்க்க முடியும் என்று கூறினார். அது இப்போது வரை தொடர்கிறது. அப்படித்தான் சீரியஸான அமீரை, இயக்குநர் ஆதம்பாவா, என்னுடைய படத்தில் நீங்கள் காமெடியாக தான் நடிக்கிறீர்கள்.. இது வெகுஜனத்தால் ரசிக்கப்படும் என என முழுதாக நம்பி அவரை முழுதாக மாற்றி இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு ஆதம்பாவா முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கும் இயக்குநராக மாறிவிடுவார்” என்று கூறினார்.

இயக்குனர் அமீர் பேசும்போது, “என்னுடைய திரை பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, அரசியல் பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து நான் சந்தித்திராத ஒரு புதிய மேடை இது. இந்த சூழலில் நான் யார் என யோசித்தால், ராமாயணத்தில் வரும் சீதையும் நானும் கிட்டத்தட்ட உடன் பிறந்தவர்கள் போல தான். அவர் அக்னியில் மிதந்து தன்னுடைய கற்பை நிரூபித்தார். அவராவது ஒரு முறை நிரூபித்தார்.. நான் வாரா வாரம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறேன். மாய வலை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்த போது தான் பருத்திவீரன் பிரச்சனை துவங்கியது. அதன் பிறகு இப்போது வேறு ஒரு பிரச்சனையுடன் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. என்னை சுற்றி என்ன நடக்கிறது ? ஒன்றுமே புரியவில்லை.

கோகுலம் ஸ்டுடியோவில் இறைவன் மிக பெரியவன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இன்னும் எட்டு நாட்கள் படப்பிடிப்பிற்காக ஒரு செட் ஒன்றை போட்டு ஒரு நாள் படப்பிடிப்பு நடத்தினோம். மறுநாள் மாலையில் இருந்து இந்த பிரச்சனை துவங்கியது. தன்னிலை விளக்கமாக ஒரு அறிக்கை ஒன்று கொடுக்கலாமா என கரு. பழனியப்பனிடம் கேட்டேன்… அப்படி ஒரு அறிக்கை கொடுத்த பிறகு எங்கிருந்து அதற்கு எதிர்ப்பு வருகிறது என பார்த்தால் கடந்த 15 வருடங்களில் என்னை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத ஆட்கள் எல்லாம் வெளியே வர ஆரம்பிக்கிறார்கள். பத்திரிக்கையாளர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. என்னிடம் நேரில் தொடர்பு கொண்டு பேசும் அளவிற்கு அவர்களுடன் நட்பு இருக்கிறது. ஆனால் இன்று ஊடகங்கள் பெருகிவிட்ட நிலையில், சிலர் வயிற்றுப் பசிக்காக ஏதேதோ செய்ய வேண்டி இருக்கிறது.

இறைவன் மிக பெரியவன் தயாரிப்பாளருடன் எனக்கு தொடர்பு இருக்கிறதா என்றால், ஆமாம் இருக்கிறது என்று சொல்வேன். ஆனால் அவர் மீது சாற்றப்பட்ட குற்றத்துடன் எனக்கு தொடர்பு இருக்கிறதா என்று கேட்டால் இல்லைடா வெண்ணைகளா என்று சொல்வேன். அந்த தைரியமும் திமிரும் எப்போதும் என்னிடம் இருந்து கொண்டே இருக்கிறது. சந்தேக நிழல் என் மீது விழுவதில் தவறு இல்லை.. ஆனால் நீங்களாகவே தீர்ப்பு எழுதுகிறீர்களே, அது தான் ரொம்ப ஆபத்தானது. உங்களுக்கு யார் அந்த அதிகாரம் கொடுத்தது ?

2007ல் பருத்திவீரன் முடித்த சமயத்தில் கமல் ரஜினி சார் ஆகியோர் என்னுடன் படம் பண்ண வேண்டும் என்றார்கள். ஆனால் ஹீரோக்களுடன் பயணிக்காமல் நான் எனக்காக ஒரு பாதையை தேர்ந்தெடுத்து எனக்கான வாழ்க்கையை வாழ வேண்டும் என வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பணம் சம்பாதிப்பதா என் நோக்கம் ? ஜாபர் ஒருத்தன் தான் தமிழ்நாட்டிலேயே பணக்காரனா ? ஜாபர் வந்த பிறகு தான் இவரது வாழ்க்கையை மாறிவிட்டது என்கிறார்கள். 2014ல் தான் அவர் வந்தார். ஆனால் விருமாண்டி ரிலீஸ் ஆன சமயத்திலேயே கொடைக்கானலில் ராம் படப்பிடிப்பு நடந்தபோது மதுரைக்கு இரண்டு லட்சம் செலவு செய்து படம் பார்க்க வந்தவன் நான்.. என்னைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு ? உதவி இயக்குனர்களாக நானும் பாலாவும் சினிமாவுக்கு வந்தபோது கஷ்டப்பட்டவர்கள் என்பதால் ஏதோ சென்னைக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் போல நினைத்துக் கொள்கிறார்கள். சினிமாவிற்கு வந்ததால் வீட்டில் காசு வாங்காமல் சுயமரியாதையுடன் வந்தவர்கள் நாங்கள்..

ஒரு குற்றவாளி, அவருடன் உங்களுக்கு என்ன தொடர்பு இருக்கிறது என்று கேட்டால் பதில் சொல்ல போகிறோம். ஆனால் உங்களுக்கு இந்த வருமானம் எப்படி வந்தது என கேட்பதற்கு இவர்கள் என்ன வருமான வரித்துறையினரா ? காண்ட்ராக்டர் ஆக இருக்கும் என்னுடைய அண்ணன் ஒரு சொத்து வாங்கினாலே இந்த பணம் எப்படி வந்தது என நான் அவரிடம் கேட்க முடியாது. நான் இறை நம்பிக்கை கொண்டவன். கரு பழனியப்பன் ஒரு பெரியாரிஸ்ட்.. ஜனநாதன் ஒரு கம்யூனிஸ்ட்.. மூன்று பேரும் ஒன்றாக சுற்றிய காலகட்டத்தில் கூட நீ எப்படி பணம் சம்பாதிக்கிறாய் என ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டதில்லை. பணம் சம்பாதிக்கவா இந்த திரையுலகத்திற்கு வந்தேன் ? அதற்காக நான் வரவில்லை.. என் வாழ்க்கையை என் விருப்பம் போல வாழ வேண்டும் என இந்த நிமிடம் வரைக்கும் நான் ஆசைப்படுகிறேன்.

கடந்த பத்து நாட்களாக ஒவ்வொரு விசாரணைக்கும் சென்று கொண்டு இருக்கிறேன். இடையில் ஷாப்பிங் சென்று எனக்கு பிடித்த ஆடைகளை நான் வாங்குகிறேன். வேறு எந்த பழக்கங்களும் எனக்கு இல்லை. இன்னொருவருடைய பணத்தை நம்பி, அதுவும் ஒரு குற்றப் பின்னணி கொண்டவரின் பணத்தை நம்பி வாழ வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்படவில்லை. அப்படி ஒரு வாழ்க்கையை வாழ நான் விரும்பவும் மாட்டேன். இதை உங்களிடம் கூறி நான் நிரபராதி, என்னை நம்புங்கள் என்பதற்காகவும் இதை கூறவில்லை.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று அவநம்பிக்கையுடன் நினைக்காமல், எனக்கு ஏன் இது நடந்தது என்று இறை நம்பிக்கையுடன் யோசிக்க கூடியவன் நான். இந்த இடத்தில் இருந்து இன்னும் என்னை சரி செய்து கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அதனால் அதை நோக்கித்தான் நான் பயணிக்கிறேன். என்னைப் பற்றி பல தகவல்கள் கிடைத்தது என யூடியூப் சேனலில் பலவாறாக பேசிய ஒரு நபருக்கு, அவரை தேனியில் கைது செய்ய வரபபோகிறார்கள் என்கிற தகவல் மட்டும் எப்படி தெரியாமல் போனது ? அந்த நபர் சொல்லும் போய் செய்தியை தினசரி 2 லட்சம் பேர் பார்க்கிறார்கள். பல பேர் கமெண்ட்டுகளில் அமீரை எப்போது கைது செய்யப் போகிறீர்கள் என கேட்கிறார்கள். சிறை என்ன எனக்கு புதிதா ? நான் அப்போதும் தயாராக இருந்தேன். இப்போதும் தயாராக இருக்கிறேன்.. ஆனால் நான் வெறுக்கின்ற ஒரு குற்றத்தில் என்னை தொடர்பு படுத்துவதை தான் குற்ற உணர்ச்சியுடன் உணர்கிறேன். எனக்குள்ளும் வேதனை இருக்கிறது.

சமூகத்தை சீரழிப்பது போதை. அதை நான் வெறுக்கிறேன். என்னுடைய உதவியாளர்கள் சிகரெட் பிடித்தாலே என்னுடைய அலுவலகத்திற்குள் நுழைய விட மாட்டேன். கரு பழனியப்பனும் ஜனநாதனும் என் முன்பாக சிகரெட் பிடிக்காமல் கீழே சென்று பிடித்துவிட்டு வருவார்கள். அப்படி நான் வெறுக்கின்ற ஒரு விஷயத்தில் என்னை தொடர்புப்படுத்தும் போது, அது என்னை மட்டும் அல்ல அதனால் என்னுடைய குடும்பத்தையும் பாதிக்கிறது. என்னுடைய பிள்ளைகள் வேலைக்கு போகும் இடத்திலும் கல்லூரி செல்லும் இடத்தில் பாதிக்கிறது. என்னை சந்தேகப்படாதீர்கள் என்று நான் சொல்லவில்லை. விசாரியுங்கள்.. நன்றாக கேள்வி கேளுங்கள். ஆனால் நீங்கலாக தீர்ப்பு எழுதாதீர்கள்.. கடுமையான விசாரணைகளை சந்தித்து விட்டு தான் இங்கே வந்து நிற்கிறேன். இத்தனை ஆண்டு வாழ்க்கையில் நான் சந்தித்திராத ஒரு புது அனுபவம். விசாரணை செய்த அதிகாரிகளை பொறுத்த வரை அவர்கள் என்னை கண்ணியமாகத்தான் தான் நடத்தினார்கள். என் மனது வலிக்கின்ற மாதிரியான கேள்விகளை கேட்டார்கள் என்பது உண்மைதான். ஓரிடத்தில் கலங்கிப் போய் நின்றேன் என்பதும் உண்மை. ஆனால் அவர்களுக்கு என்னை காயப்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் கிடையாது. அது அவர்களுடைய வழக்கமான கடமை. பின் எப்படி குற்றவாளியை கண்டுபிடிப்பது ?

இந்த வழக்கு சம்பந்தப்பட்ட விவரங்கள் அதிகாரிகளை தவிர வேறு யாருக்கும் தெரியாது ? வேறு யார் சொன்னாலும் நம்பாதீர்கள். இந்த வழக்கு குறித்த விவரங்களை நான் சேகரித்து கொண்டிருந்த சமயத்தில் ரமலான் நோன்பிற்காக என் குடும்பத்தினர் ஊருக்கு சென்று விட்டார்கள். ஒரு நாள் காலையில் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது விழித்து பார்த்தால் திடீரென அமலாக்கத் துறையினர் என் முன்னாடி துப்பாக்கியை நீட்டிக் கொண்டு நின்றார்கள். அதன் பிறகு என்னுடைய அலுவலகத்திற்கு வந்தார்கள். அதை முடித்துவிட்டு தான் ரமலான் நோன்புக்காக மதுரைக்கு சென்று வந்தேன்.

எனக்கு முதலில் வந்த சம்மனை கூட எனது வழக்கறிஞர் மூலமாக நான் சொன்ன பிறகுதான் வெளியே தெரிந்தது.. ? ஆனால் தங்களுக்கு ஏதோ டெல்லி வட்டாரத்தில் இருந் சோர்ஸ் மூலமாக தகவல் வந்தது என்பது போல பலர் பேசினார்கள்.. இப்போது சொல்கிறேன், எனக்கு இன்னொரு சம்மன் கூட வந்திருக்கிறது. புலனாய்வு புலிகள் என்று சொல்லிக் கொள்கிற பலருக்கு இது இன்னும் தெரியாது. இந்த சம்மனுக்கும் நேரில் சென்று பத்தரை மணி நேரம் விசாரணையை முடித்துவிட்டு தான் இங்கே வந்திருக்கிறேன். அதிகாரிகள் அவர்களது கடமையை செய்கிறார்கள்.. நான் அதற்கு முதல் நாளில் இருந்தே ஒத்துழைக்கிறேன்.. இந்த வழக்கை முடித்து விட்டு தான் எங்கேயும் வெளியே செல்வேன்.. நான் கூறும் கருத்துக்களை உங்களால் எதிர்கொள்ள முடியவில்லை.. அதனால் என்னை குற்றவாளி ஆத்துகிறீர்கள்.. அதனாலேயே ஏன் நான் குற்றவாளி ஆகிவிட முடியுமா ?

இந்த காலகட்டம் உண்மையிலேயே கடுமையான காலகட்டம் தான். என்னை சுற்றி இருந்த பல நண்பர்கள், உறவினர்கள் ரொம்ப தூரமாக சென்று விட்டனர். என்னிடம் இருந்த 2000 தொலைபேசி எண்களில் 1950 பேரிடம் இருந்து அழைப்பு வருவதே இல்லை. ஒரு மரத்தின் அருகில் வெடி சத்தம் கேட்டதும் பறவைகள் அனைத்தும் சிதறி ஓடும். அதன்பிறகு வெகு சில பறவைகள் மட்டுமே மீண்டும் திரும்பி வரும். அதுபோலத்தான் என் வாழ்க்கையிலும் சில நண்பர்கள் மட்டுமே தேடி வந்தார்கள். ஆனால் இன்னும் பலர் சந்தேகப்பட்டு கொண்டு தூரமாகவே நிற்கிறார்கள். அவர்களை எல்லாம் தயவுசெய்து இங்கே வந்துவிடாதீர்கள். அங்கேயும் நின்ருவிடுங்கள் என கேட்டுக்கொள்கிறேன். என் வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதனால் இந்த வழக்கு, பிரச்சனைகள் எல்லாம் இதுவும் கடந்து போகும் என்று தான் நினைக்கிறேன்,

இந்த படம் பற்றி சொன்னால் பெரிய கலை நயத்துடன் காவியமாக இருக்கும் என்று எதிர்பார்த்து எல்லாம் வர வேண்டாம். ஆனால் உங்களை ஜாலியாக சிரிக்க வைக்கும் என்பது மட்டும் உறுதி. ஒரு சிக்கலான காலகட்டத்தில் இந்த திரைப்படத்தை திரையரங்குகளுக்கு கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்த தயாரிப்பாளர், இயக்குனர் ஆதம் பாபாவுக்கு நன்றி” என்று கூறினார்

அடுத்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அமீரிடம், “பத்து வருடங்களாக உங்கள் நண்பராக ஒருவர் இருந்திருக்கிறார்.. ஆனால் அவரிடம் எப்படி இவ்வளவு பணம் வந்திருக்கிறது என்று உங்களுக்கு சந்தேகம் வரவே இல்லையா என்று கேட்கப்பட்டது. இந்த கேள்வியை நீங்கள் லைக்கா நிறுவனம் சுபாஷ்கரனிடம் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா ? ஒரு கார்ப்பரேட் நிறுவனம் வந்தால் அவர்களிடம் கேள்வி கேட்க மாட்டீர்கள்.. ஒரு தனி நபர் எனும்போது கேள்வி கேட்பீர்கள் என்றால் என்ன நியாயம் ? அவர் மீதும் லண்டனில் ஒரு குற்றப்பதிவு இருக்கிறது. ஆனால் அது பற்றி ரஜினி, விஜய் யாராவது கேட்டார்களா ? என்னிடம் மட்டும் ஏன் கேட்கிறீர்கள் ? சமரசம் இல்லாத என்னுடைய வாழ்க்கை தான் இவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது என நான் நம்புகிறேன். ஆனாலும் அதை நான் விரும்பி ஏற்றுக் கொள்கிறேன். நான் பிறருக்கு தொல்லை தருகிறேனா என்று பாருங்கள். இத்தனை ஆண்டுகளில் அப்படி ஏதாவது செய்தி வந்திருக்கிறதா ?” என்றார்.

தயாரிப்பாளர், இயக்குநர் ஆதம்பாவா பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசும்போது, “காலில் விழாத அரசியல்வாதிகள் யாராவது இருக்கிறார்களா? சுயமரியாதை கட்சியாக இருக்கட்டும்.. பகுத்தறிவு பேசுகின்ற கட்சியாக இருக்கட்டும்.. அங்கேயே தலைவர்களின் கால்களில் விழுவதை நீங்கள் எல்லாம் பார்த்திருக்கிறீர்கள்.. அந்த நேரத்தில் அந்த காட்சி எடுக்கும் போது அப்படி ஒரு வசனம் மனதில் தோன்றியது. அதை படமாக்கி இருக்கிறோம். அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதில் சம்பந்தப்பட்டதாக நீங்கள் யாரை நினைக்கிறீர்களோ அவர்களே பார்த்தால் கூட சிரித்துக் கொண்டே சென்று விடுவார்கள். இந்த படத்தை வெளியிட விடாமல் தடுப்பவர்கள் யார் என நான் பெயர் குறிப்பிட விரும்பவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் ஏதாவது பேசட்டும்.. அதற்கு நான் அப்போது பதில் சொல்கிறேன்” என்றார்.

இன்டிபென்டென்ட் மியூசிக்கை ஊக்குவிக்கும் யுவன் சங்கர் ராஜா

யுவன் சங்கர் ராஜா பாடி, இசையமைத்து, நடித்திருக்கும் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பம் -‘ மணி இன் தி பேங்க்’

இசையுலகில் திரைப்பட பாடல்களுக்கு நிகராக தற்போது இன்டிபென்டென்ட் மியூசிக்கல் ஆர்டிஸ்ட்டால் உருவாக்கப்படும் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பங்களுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடத்தில் மறைந்திருக்கும் இசை திறமையை வெளிக்கொணரும் வகையிலும், அவர்களுக்கு புத்துணர்வு அளித்து ஊக்கமளிக்கும் வகையிலும் தமிழ் திரையிசையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரும், பாடகருமான யுவன் சங்கர் ராஜா, ‘மணி இன்‌ தி பேங்க்’ எனும் பெயரில் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘மணி இன் தி பேங்க்’ எனும் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலில் யுவன் சங்கர் ராஜா நடித்திருப்பதுடன் பாடலை எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார்.

ஈவீஈஜி எண்டர்டெயின்மெண்ட், நஞ்சுண்டப்பா ரெட்டி & பிரதர்ஸ் வழங்கும், நடிகர் கிருஷ்ணா நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 1’!

தனது நடிப்பு திறமைக்கு தீனி போடும் வகையிலான தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் கிருஷ்ணா. அந்த வகையில் ஈவீஈஜி எண்டர்டெயின்மெண்ட், நஞ்சுண்டப்பா ரெட்டி & பிரதர்ஸ் வழங்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் துவங்கியுள்ளது.

படத்திற்கு தற்காலிகமாக ‘புரொடக்‌ஷன் நம்பர் 1’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த திரைப்படம் காமெடி, ஃபேண்டஸி மற்றும் திகில் ஜானரில் உருவாக இருக்கிறது. இயக்குநர் ஏ. வெங்கடேஷிடம் ஐந்து படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ள துரை. சரவணன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

படம் குறித்து தயாரிப்பாளர் நஞ்சுண்டப்பா ரெட்டி கூறுகையில், “ஓசூரில் பிசினஸ் செய்து வரும் நாங்கள் முதல்முறையாக தமிழ் சினிமாவில் ஈவீஈஜி எண்டர்டெயின்மெண்ட் என்ற கம்பெனி தொடங்கி தொடர்ந்து படங்கள் தயாரிக்க உள்ளோம். கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஆதியா பிரசாத் நடிக்கிறார். இவர் ‘நிழல்’ உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார். புதுமுக நடிகராக சந்தோஷ் இத்திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார். இவர்களோடு மாறன், இமான் அண்ணாச்சி, ஆதித்யா கதிர், சாம்ஸ், இயக்குநர் ஏ. வெங்கடேஷ் மற்றும் பலர் இத்திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். உங்களுடைய முழு ஆதரவு படத்திற்கு தர வேண்டும்” என்றார்.

தொழில்நுட்பக் குழுவினர்:

இயக்குநர்: துரை. சரவணன்,
தயாரிப்பு பேனர்: ஈவீஈஜி எண்டர்டெயின்மெண்ட்,
தயாரிப்பாளர்கள்: நஞ்சுண்டப்பா ரெட்டி & பிரதர்ஸ்,
ஒளிப்பதிவு: எஸ்.ஆர். சதீஷ் குமார் (பேராண்மை, மீகாமன்),
எடிட்டர்: விஜய் வேலுக்குட்டி (வலிமை, துணிவு, மார்க் ஆண்டனி),
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த்தேவா.

‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு.

கோபுரம் பிலிம்ஸ் G.N.அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் பிரம்மாண்ட தயாரிப்பில், நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம், ‘இங்க நான் தான் கிங்கு’. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மே 10 அன்று பிரமாண்டமான முறையில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வினில்….

எழுத்தாளர் எழிச்சூர் அரவிந்தன் பேசியதாவது…

கோபுரம் பிலிம்ஸ் தயாரித்த முதல் படமான ‘வெள்ளக்கார துரை’ எழுத்தாளரும் நான் தான். 10 வருடம் கழித்து அடுத்த வெற்றிப்படமான ‘இங்க நான் தான் கிங்கு’ படத்திற்கு எழுதியுள்ளேன். அன்புசெழியன் சாரிடம் கதை சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்தது, உடனே எல்லாம் ஆரம்பித்துவிட்டது. என்னுடன் இக்கதைக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள் இந்த காலத்தில் ஒரு படத்திற்கு உயிர் கொடுக்கும் தயாரிப்பாளர் இன்னொரு கடவுள். கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் மற்றும் சுஷ்மிதா அன்புசெழியன் இருவருக்கும் என் நன்றிகள். அடுத்ததாக இப்படம் முழுமை பெற மிகமுக்கிய காரணமான, எனக்கு வழிகாட்டியாக இருந்த சந்தானம் சாருக்கு நன்றி. என் இயக்குநர் ஆனந்த் சார், எங்களுக்குள் எப்போதும் ஊடல்கள் இருக்கும். என் கதையை முழுமையான சினிமாவாக மாற்றியுள்ள அவருக்கு நன்றி. தம்பி ராமையா சார் அருமையாக வேலை பார்த்துள்ளார் அவருக்கும் என் நன்றிகள். பாடலில் பட்டையை கிளப்பியுள்ள இமான் சாருக்கு என் நன்றிகள். அழகான தமிழ் பேசும் ஹீரோயினுக்கு வாழ்த்துகள். இந்தப்படம் மிகப்பெரிய ஹிட்டாகும். படத்தின் நிறை குறைகளை கூறி ஆதரவு தாருங்கள், அனைவருக்கும் நன்றி.

சரிகமா நிறுவனம் சார்பில் ஆனந்த் பேசியதாவது….

கோபுரம் பிலிம்ஸ் உடன் சரிகமாவின் முதல் படம் இது. அன்புசெழியன் சாருக்கு நன்றி. இந்த சம்மருக்கு மிகப்பெரிய விருந்தாக இப்படம் இருக்கும். சந்தானம் சார் கேங் கலக்கியிருக்கிறார்கள். நல்ல பாடல்கள் தந்துள்ள இமானுக்கு நன்றி. இந்தப்படம் எல்லோரும் கொண்டாடும் படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.

நடிகர் கூல் சுரேஷ் பேசியதாவது…

இந்த படத்தில் நடித்ததற்கு நான் மிக சந்தோஷப்படுகிறேன் எனக்கு நல்ல சம்பளம் தந்தார்கள். இதற்கு முன் ‘வெள்ளக்கார துரை’ படம் செய்தேன், என்னை நன்றாக பார்த்துக் கொண்டார்கள். மிகச்சிறந்த தயாரிப்பாளர். சந்தானம் சாரை புகழ்ந்து கொண்டே இருக்கிறீர்கள் எனக் கேட்கிறார்கள் அவர் உங்களுக்கு அதிகம் வாய்ப்பு தரவில்லை என சொல்கிறார்கள் ஆனால் என் வாழ்க்கைக்கே அவர் தான் அதிகம் வாய்ப்பு தந்துள்ளார். இந்தப்படத்திற்கும் அவர் தான் வாய்ப்பு வாங்கி தந்தார். அவருக்கு என்றும் நன்றியுணர்வுடன் இருப்பேன். இப்படத்தில் இமான் சார் நல்ல பாடல்கள் தந்துள்ளார். என்னை தியேட்டருக்கு வராதே என பலர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் இந்தக்காலத்தில் நேரடியாக சென்று விளம்பரம் செய்தால் தான் படத்திற்கு கூட்டம் வரும். நான் என்னால் முடிந்ததை செய்வேன். ‘இங்க நான் தான் கிங்கு’ மிகப்பெரிய வெற்றியடையும்.

ஒளிப்பதிவாளர் ஓம் நாராயண் பேசியதாவது…

இது ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர் மூவி. அத்றகேற்றாற் போல கேமரா செய்துள்ளேன். நான் சந்தானம் சாரின் ரசிகன். அவரின் நடிப்பை ஷூட்டிங்கில் பார்த்து சிரித்து விடுவேன். இந்த படத்தில் வாய்ப்பு தந்த அன்பு சாருக்கு நன்றி. சந்தானம் மற்றும் இயக்குநருக்கு நன்றிகள்.

இயக்குநர் ஆனந்த் நாராயண் பேசியதாவது…

இதுவரையிலும் படத்திற்கு ஆதரவு தந்து வரும் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் அன்பு சார் கதை கேட்கிறார் என்றதும் அவரை நெருங்க முயற்சித்தேன். செந்தில் சார் மூலம் தான் அவரை சந்தித்தேன். ஒரு படம் செய்வதாக கதை சொன்னார்கள், உடனே ஒப்புக்கொண்டேன். எனக்காக முழு டீமையே கொடுத்தார்கள். படம் டாக்கி போர்ஷன் முடித்தவுடன் என்னைக் கூப்பிட்டு பாராட்டினார். சந்தானம் சாரை ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்திற்காக சந்தித்துள்ளேன், அவருக்கு நான் ரசிகன். இப்போது அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. முதல் நாளே என்னைக் கூப்பிட்டு பாராட்டினார். ஷூட்டிங்கில் செட்டிலேயே இருந்து என்னுடன் விவாதிப்பார். அவர் டீமுக்கு முக்கியமாக நன்றி. இமான் சார் மியூசிக் அட்டகாசமாக வந்துள்ளது. சந்தானம் சார் எமோஷன் காட்சி ஒன்று இருக்கிறது, அதில் சந்தானம் சாரா இசையா என போட்டியே இருக்கும். சந்தானம் சாருக்கு இணையாக புதுமுகம் லயா சூப்பராக நடித்துள்ளார். தம்பி ராமையா சார் அருமையாக நடித்துள்ளார். எல்லோருடைய பெஸ்ட் இந்தப்படத்தில் தந்துள்ளனர் அனைவருக்கும் என் நன்றிகள். தொழில்நுட்ப குழுவினர் அனைவருக்கும் நன்றி. கண்டிப்பாக குடும்பத்தோடு சந்தோஷமாக கொண்டாடும் படமாக இது இருக்கும், அதற்கு ரைட்டருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். மே 10 படம் பார்த்து ஆதரவு தாருங்கள்.

இயக்குநர் செல்லா அய்யாவு பேசியதாவது…

கோபுரம் பிலிம்ஸ் தயாரித்த ‘வெள்ளக்கார துரை’ படத்தில், நான் அஸிஸ்டெண்ட். தயாரிப்பாளர் அன்பு சார் சினிமாவை எவ்வளவு நேசிப்பார் என்பது தெரியும். ஒரு படம் வெற்றி பெற்றால் அதைப்பற்றி நிறைய பேசுவார். திரைத்துறையில் இருப்பவர்களுக்கு பொறுப்பு மிக அதிகம் என்பதை எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார். கொஞ்ச காலத்திற்கு பிறகு இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளார் வருடத்திற்கு நாலைந்து படங்கள் செய்ய வேண்டும். இந்தப்படம் நான் பார்த்துவிட்டேன். சந்தானம் சார் ரசிகன் நான். இந்தப்படத்தில் எல்லோரும் சிரித்து கொண்டே இருக்கலாம். அவருடன் இணைந்து விரைவில் படம் செய்வேன். படம் வெற்றிபெற வாழ்த்துகள்.

தம்பி ராமையா பேசியதாவது…

‘இங்க நான் தான் கிங்கு’, குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். இப்போது படங்கள் நிறைய விவாதிக்கப்படுகிறது. மலையாள படங்கள் பற்றி சொல்கிறார்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் தாய் தமிழ் சினிமா தான். முன்பெல்லாம் தயாரிப்பு தரப்பில் கதை இலாகா இருக்கும். ஒரு கதை தயாராக பல அடுக்குகள் இருக்கும் தேவரய்யா ஆரம்பித்து ஆர் பி சௌத்திரி வரை கதையை தேர்ந்தெடுத்து தயாரிப்பதில் மிகுந்த கவனம் இருக்கும். அது போல் கோபுரம் பிலிம்ஸ் தேர்ந்தெடுத்து படம் செய்கிறார்கள். அன்புசெழியன் சார் தனது மகளை இந்த துறைக்கு கூட்டி வந்துள்ளார். தெளிவானவராக இருக்கிறார், வாழ்த்துகள் மகளே. இப்படம் காம வாடை இல்லாத காமெடிப்படம். நல்ல கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். அன்பு தம்பி இமான் பெரிய அளவில் சிறப்பான பாடல்கள் தந்துள்ளார். சந்தானத்தின் வெற்றிக்கு காரணம் அவர் மனது தான். அவர் நிஜ ஹீரோ. தன் பழைய நண்பர்களை வைத்து காப்பாற்றுவது மிகப்பெரிய விஷயம். ஒரு காட்சியை கடைசி ரசிகன் வரை ரசிக்க வெண்டும் என்பதில் கடும் முயற்சி செய்வார் சந்தானம். அவருடன் பயணிப்பது மிகுந்த சந்தோஷம். லியா அறிமுக நடிகை என்ற தயக்கம் இல்லாமல் எங்களுக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளார், நல்ல எதிர்காலம் உள்ளது வாழ்த்துகள். இப்படத்தில் முழு நீள காமெடி பாத்திரம் செய்துள்ளேன். அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். மே 10 அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள், நன்றி.

நடிகை பிரியாலயா பேசியதாவது…

இந்த நாள் எனக்கு மிக முக்கியமான நாள். என் முதல் பட மேடை, கடவுளுக்கும் என் அப்பா அம்மாவுக்கும் நன்றி. என் தயாரிப்பாளர் அன்பு சார், சுஷ்மிதா மேடம் இருவருக்கும் நன்றி. எப்போதும் ஆதரவாக என்னை விசாரித்து பார்த்துக்கொண்டார்கள். கோபுரம் பிலிம்ஸில் என் முதல் படம் செய்ததை பெருமையாக நினைக்கிறேன். எல்லோருக்கும் பிடித்த சந்தானம் சார், அவருடன் பழகிய யாருக்கும் அவரை பிடிக்காமல் போகாது. அவ்வளவு எளிமையானவர். முதலில் செட்டில் என்னுடன் இங்கிலீஷில் பேசினார். அவருக்கு நான் தமிழ் என்பது தெரியாது, நான் சொன்ன பிறகு ஜாலியாக பேசினார் அவருடன் நடித்தது மகிழ்ச்சி. கேப்டன் கூல் ஆனந்த் சார் ஜாலியாக பேசி வேலை வாங்கி விடுவார். தம்பி ராமையா சாரின் எனர்ஜி பிரமிப்பாக இருக்கும். அவர் தமிழுக்கு ரசிகை நான். இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். மியூசிக் தான் படத்தின் ஆன்மா. இமான் சாருக்கு என் நன்றிகள். படம் பார்த்து ஆதரவு தாருங்கள்.

இசையமைப்பாளர் இமான் பேசியதாவது…

கோபுரம் பிலிம்ஸில் ‘வெள்ளக்கார துரை’ படம் செய்துள்ளேன். ஒரு இடைவேளைக்குப் பிறகு அன்புசெழியன் சாருடன் இணைகிறேன். என் மீது அவருக்கு தனித்த அன்பு இருக்கிறது. அவர் எல்லாப் படத்திலும் என் இசை இருக்க வேண்டுமென நினைப்பார். அவருக்கு என் நன்றிகள். இப்படம் மூலம் அறிமுகமாகும் சுஷ்மிதாவிற்கு வாழ்த்துக்கள். சந்தானம் சார் காமெடி தான் என் வீட்டில் ஓடிக்கொண்டே இருக்கும், அவருடன் வேலை பார்க்க வேண்டுமென பல காலமாக ஆசைப்பட்டேன், அது இந்தப்படத்தில் அமைந்தது மகிழ்ச்சி. ஒரு ஹீரோயினுக்கு ஒரு வெற்றிப்பாடல் அமைந்தால் அது மிகப்பெரிய விளம்பரமாக இருக்கும் ‘மாயோன்…’ பாடல் லயாவுக்கு மிக அருமையான பாடலாக அமைந்துள்ளது. சந்தானம் சாரும் கலக்கியுள்ளார். இப்படத்தில் மூன்று பாடல்கள். ‘மாயோன்…’ எனக்கு நெருக்கமான பாடல், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பாடியுள்ளார், அவருக்கு நன்றி. இந்தப்படத்தில் காமெடியைத் தாண்டி எமோஷனல் காட்சிகளிலும் சந்தானம் அசத்தியுள்ளார். இசையில் பல காட்சிகள் சவாலாக இருந்தன. மிக மகிழ்ச்சியாகவும் இருந்தது.

சுஷ்மிதா அன்புசெழியன் பேசியதாவது…

என்னை தயாரிப்பாளராக்கிய அப்பாவுக்கு நன்றி. நான் படம் பார்த்து விட்டேன். குடும்பத்தோடு என்ஜாய் செய்து பார்க்கும் படமாக இருக்கும். சந்தானம் சார் கலக்கியிருகிறார். லயா அருமையாக நடித்துள்ளார். ஒரு கலக்கலான விருந்தாக இப்படம் இருக்கும்.

தயாரிப்பாளர் அன்புசெழியன் பேசியதாவது…

சந்தானம் சாரை வைத்து ஒரு படம் செய்ய ஆசைப்பட்டேன். கொஞ்ச காலம் தயாரிப்பில் இல்லை. இந்தக்கதை வந்த போது சந்தானம் சரியாக இருப்பார் எனத் தோன்றியது. அவர் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார். என்னுடைய பார்ட்னராக சரிகமா ஆனந்த் இணைந்துள்ளார், அவருக்கு நன்றி. தம்பி ராமையா சார், நாயகி லயா, கூல் சுரேஷ் எல்லோருக்கும் வாழ்த்துகள். இமான் சார் அருமையான பாடல்கள் தந்துள்ளார். சந்தானம் சார் இந்தப்படத்திற்காக ஸ்பெஷலாக உழைத்து தந்தார், நன்றி. செல்லா இந்தப்படத்திற்காக எனக்காக வந்து உழைத்து தந்தார் அவருக்கு என் நன்றிகள். அவருடன் படம் செய்ய பேசிக்கொண்டிருக்கிறேன். அடுத்தடுத்து இன்னும் நிறைய படம் செய்யவுள்ளேன், உங்கள் ஆதரவைத் தாருங்கள். முதன் முதலாக தனது எக்ஸ் தளத்தில் இப்படத்தைப் பற்றி பதிவிட்டு எங்களுக்கு ஆதரவு தந்த உலக நாயகன் கமலஹாசன் சாருக்கு நன்றி. என் மகள் சுஷ்மிதா இப்படம் மூலம் திரைத்துறைக்கு வந்துள்ளார் அவருக்கு ஆதரவு தாருங்கள். படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி.

நடிகர் சந்தானம் பேசியதாவது…

‘இங்க நான் தான் கிங்கு’ படத்தில் ஹீரோ என்னவோ நான் தான் ஆனால் கிங்கு அன்புசெழியன் சார் தான். தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ அவர் தான். அவர் ஆபிஸுக்கு வராத ஹீரோவே இல்லை. அவரிடம் நானே காசு கேட்டுதான் போனேன், என்னை அவருக்கு பிடித்தது, வீடு வாங்க காசு கேட்டுப்போனேன், ஆனால் அப்படி செய்யாதீர்கள், படத்திற்கு அட்வான்ஸ் தருகிறேன், படம் செய்யலாம் என்றார். அவர் மனதளவில் மிக நல்ல மனிதர். என்னுடன் எப்போதும் ஜாலியாக பேசுவார். அவர் என்னிடம் இந்தப்படம் செய்யலாம் என்றார், எனக்கும் பிடித்திருந்தது என்றவுடன் உடனே செய்யலாம் என்றார். அவருடன் இணைந்து படம் செய்தது சந்தோஷம். படம் பார்க்க வருபவர்கள் சிரித்துவிட்டு போக வேண்டும் என்றார், தயாரிப்பாளராக இல்லாமல் தியேட்டர் ஓனராக இப்படத்தை எடுத்துள்ளார். சுஷ்மிதா என் படம் மூலம் தயாரிப்பாளராக வந்துள்ளார், வாழ்த்துகள். இமான் இதுவரை என் படத்தில் இல்லாத கலரில் எனக்கு மிக வித்தியாசமான இசையை தந்துள்ளார், நன்றி. இயக்குநர் ஆனந்த் அருமையாக படத்தை எடுத்துள்ளார். தம்பி ராமையா சார் மாதிரி இண்டலிஜண்ட் பார்க்க முடியாது, அவருடன் பேசும்போது பிரமிப்பாக இருக்கும். அவர் இப்படத்தில் அருமையான பாத்திரம் செய்துள்ளார். ஹீரோயின் லயா நம்ம சேலத்துப் பெண், அவரை பாலிவுட் என நினைத்தேன் நன்றாக நடித்துள்ளார். என் படத்தில் எப்போதும் இருக்கும் மாறன், சேஷு, கூல் சுரேஷ், மனோபாலா என நிறைய பேர் இதிலும் இருக்கிறார்கள். ‘கட்டா குஸ்தி’ படம் ஹிட் தந்துவிட்டு இப்படத்தில் வந்து எங்களுக்காக உழைத்து தந்த செல்லா அய்யாவு சாருக்கு நன்றிகள். 90 கிட்ஸ் 2K கிட்ஸ் லைஃப் எப்படி இருக்கும் என்பது தான் இந்தப்படம். எல்லோரும் ரசிக்கும்படியான மேஜிக்காக இப்படம் இருக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி.

தம்பி ராமையா, சேஷு, முனீஷ்காந்த், கூல் சுரேஷ், பால சரவணன், விவேக் பிரசன்னா, மாறன், சுவாமிநாதன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது.

சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். D. இமானின் இசையில் பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. கதை, திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியுள்ளார். பல்வேறு வெற்றி படங்களுக்கு இவர் எழுத்தாளராக பங்காற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு – ஓம் நாராயண், எடிட்டிங் – எம். தியாகராஜன்,
கலை – எம். சக்தி வெங்கட்ராஜ், ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல், பிரமாண்டமான பாடல் காட்சிகளுக்கு நடனம் அமைத்து இயக்கியுள்ளனர் கல்யாண் – பாபா பாஸ்கர்.

‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்கியுள்ளார். கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரித்துள்ளார். மே 10 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர் அர்ஜூன் தாஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அநீதி, போர் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களில் அசத்தி வருகிறார். விரைவில் அவரது நடிப்பில், மௌனகுரு சாந்தகுமார் இயக்கத்தில், ரசவாதி படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தனக்கு ஆதரவாக, தனக்கு ஊக்கமளித்துவரும் பத்திரிக்கை ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வினில்

நடிகர் அர்ஜூன் தாஸ் பேசும்பொழுது….
என்னுடைய இந்தத் திரைப்பயணத்தில் நீங்கள் எனக்கு மிகப்பெரும் உந்துதலாக இருந்துள்ளீர்கள், என் குரலைக் குறிப்பிட்டு பாராட்டி, தனித்தனியாக நான் செய்த எல்லாப்பாத்திரங்களின் நிறை குறைகளை பகிர்ந்து, எனக்கு பெரும் ஊக்கமாக இருந்துள்ளீர்கள். என் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் நீங்கள் தான் அதற்காக உங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய இந்தப்பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்த அனைத்து இயக்குநர்களும் எனக்காக சிறப்பான பாத்திரங்கள் தந்துள்ளார்கள். அதற்குக் காரணமும் நீங்கள் தான் அதற்கும் நன்றி என்றார்.

மேலும் பத்திரிக்கையாளர்களுடன் உரையாடியவர், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

லோகேஷ் இயக்கும் எல்லாப்படத்திலும் நீங்கள் இருப்பீர்கள், ரஜினி சாரை வைத்து லோகேஷ் இயக்கும் புதிய படத்தில் நீங்கள் இருக்கிறீர்களா ?
லியோவிலேயே நான் இல்லையே சார், லோகேஷ் எப்போதும் எனக்கு சிறந்த நண்பர் தான், அவர் அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் ஆனால் இப்போதைக்கு அப்டேட் எதுவும் இல்லை. ரஜினி சார் படத்தில் இருக்கிறேனா? என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்.

நீங்கள் முன்பு டப்பிங் செய்து கொண்டிருந்தீர்கள் ? இப்போது டப்பிங்கை தொடர்கிறீர்களா ?
இப்போதைக்கு நான் வாய்ஸ் டப்பிங், எதுவும் செய்யவில்லை. நடிப்பு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதில் கவனம் செலுத்தி வருகிறேன், ஆனால் லோகேஷ் ஏதாவது காட்சிக்காக கூப்பிட்டால் மறுக்க முடியாது, கண்டிப்பாக செய்வேன்.

வில்லனாக புகழ் பெற்றீர்கள், இப்போது ஹீரோ ஆகிவிட்டீர்கள் மீண்டும் வில்லனாக கூப்பிட்டால் நடிப்பீர்களா ?
இப்போதைக்கு நான் வில்லன் இல்லை. நடிப்பில் வில்லன் என இப்போதைக்கு எதுவுமே வரவில்லை. தொடர்ந்து பல படங்கள் மெயின் பாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. லோகேஷ் கூப்பிட்டால் வில்லனாகத்தான் கூப்பிடுவார், அவர் கூப்பிட்டால் கண்டிப்பாக செய்வேன்.

பல நல்ல இயக்குநர்களோடு வேலை பார்த்துள்ளீர்கள், எப்படி அவர்களை தேர்ந்தெடுக்கிறீர்கள்?
நானாக தேர்ந்தெடுத்து எந்த இயக்குநருடனும் வேலை பார்க்கவில்லை. வசந்தபாலன் சார் முதல், அவர்களாக கூப்பிடுகிறார்கள் நான் நடிக்கிறேன் அவ்வளவு தான். எனக்கு மிகச்சிறந்த இயக்குநர்கள் அமைந்தது என் பாக்கியம். இப்போது தான், நிறைய கதைகள் கேட்டு வருகிறேன், எனக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்து எல்லோரையும் மகிழ்விப்பேன்.

ரசவாதி எப்படி வந்துள்ளது ? சாந்த குமாருடன் வேலை பார்த்தது குறித்து கூறுங்கள் ?
இயக்குநர் சாந்தகுமார் உடன் வேலை பார்த்தது அட்டகாச அனுபவம். மௌனகுரு எனக்கு பிடித்த படம். அவர் கூப்பிட்ட போது சந்தோசமாக இருந்தது. கதை எனக்கு பிடித்திருந்தது. அவர் படத்தில் நடிப்பது உண்மையில் எனக்கு பெருமை. படத்தைப் பொறுத்தவரையில் ஒரு டாக்டர் ஓய்வுக்காக ஒரு இடத்திற்கு செல்கிறார், அங்கு என்ன நடக்கிறது என்பது தான் கதை. இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது. படம் பார்த்து நீங்கள் சொல்லுங்கள்.

லோகேஷிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டதாக ஒரு பேட்டியில் கூறினீர்கள், இயக்குநர் ஆகும் எண்ணம் இருக்கிறதா?
கமல் சாரை அவர் நடிப்பதை நேரில் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை. விக்ரமில் நான் இருப்பது எனக்கு தெரியாது, அதனால் உதவி இயக்குநராக வேலை பார்த்தால் அவரைப் பார்க்கலாம், அதனால் தான் லோகேஷிடம் கேட்டேன். ஆனால் அவர் என்னை நடிக்க வைத்தார், கமல் சார் நடிப்பதை நேரில் பார்த்தேன். இயக்குநர் ஆகும் எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை.

தொடர்ந்து நெகடிவ் அல்லது ஆக்சன் கதாப்பாத்திரங்களாக செய்கிறீர்களே, ரொமான்ஸ் எப்போது ?
ரசவாதி படத்தில் ரொமான்ஸ் நிறைய இருக்கிறது. நானும் ரொமான்ஸ் செய்துள்ளேன், அடுத்து மதுமிதா மேடம் படத்திலும் ரொமான்ஸ் இருக்கிறது, பார்த்து விட்டு சொல்லுங்கள்.

வில்லனாக வந்து ஹீரோவாக வளர்ந்துள்ளீர்கள் எப்படி இருக்கிறது இந்த அனுபவம் ?
நான் வளர்ந்திருக்கிறேனா எனத் தெரியவில்லை. துபாயில் தியேட்டரில் தமிழ்ப்படம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு இங்கு வந்து, திரையில் நடிக்க முயற்சித்தேன். உங்கள் ஆதரவால் தான் எனக்கு வாய்ப்புகள் வருகிறது. எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்து வருகிறேன் என நினைக்கிறேன் அவ்வளவு தான். நான் பெரிதாக வளர்ந்ததாக நினைக்கவில்லை. இப்போது தான் என் பயணம் ஆரம்பித்துள்ளது. இன்னும் திரைப்பயணத்தில் நிறைய சாதிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

திரைத்துறையில் ஆரம்ப காலகட்டங்களில் கஷ்டபட்டிருக்கிறீர்களா ?
நானும் நிறைய ரிஜக்சனை சந்தித்துள்ளேன். நிறைய பேர் என் வாய்ஸ் எனக்கு மைனஸ் என சொல்லியிருக்கிறார்கள், இப்போது அது ப்ளஸாக மாறியுள்ளது. இது எல்லார் வாழ்விலும் நடக்கும், திரைத்துறை அப்படித்தான். ஒவ்வொரு நாளும் திரைத்துறையில் நிறைய கற்றுக்கொண்டு வருகிறேன்.

நடிகராக இருப்பது மகிழ்ச்சியா ? இல்லை வேறு துறையில் விருப்பம் உள்ளதா?
நடிகராக இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. திரைத்துறையில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது, கண்டிப்பாக இது தான் எனக்கு சந்தோசம்.

ஏன் உங்கள் படங்கள் அதிகம் வருவதில்லை ?
ஒரு நேரத்தில் ஒரு படம் தான் செய்கிறேன் அது என் பழக்கம். கடந்த வருடம் நிறைய நடித்திருக்கிறேன். இந்த வருடம் நிறையப் படங்கள் தொடர்ந்து வரும்.

உங்கள் நண்பர் லோகேஷ் நடிகர் ஆகிவிட்டாரே? தொடர்ந்து நடிப்பாரா ?
அந்த ஆல்பம் சாங் வரும் முன்னரே என்னிடம் காட்டினார். உண்மைய சொல்லு மச்சி, எப்படி இருக்கிறது எனக்கேட்டார். நடிப்பதில் அவர் நெர்வஸாக இருந்தார். மாஸ்டரில் நடிக்கவே அவர் நிறையத் தயங்கினார். தொடர்ந்து நடிப்பது பற்றி அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். ஆனால் அவர் நடிப்பாரா எனத் தெரியவில்லை. நடித்தால் எனக்கு மகிழ்ச்சி.

லோகேஷ் பற்றி அதிகம் பேசுகிறீர்களே ஏன்?
அவரிடம் தான் இந்த என் நடிப்பு ஜர்னி ஆரம்பித்தது. கைதி தான் நான் இந்த மேடையில் இருக்கக் காரணம், அவர் எனக்கு நிறைய வாய்ப்புகள் தந்துள்ளார். அவர் எனக்கு மிகச்சிறந்த மெண்டார். எனக்கு வாய்ப்பு தரும் இயக்குநர்கள் தான் என் மெண்டார். விக்னேஷ் சாரும் என் மெண்டார் தான். லோகேஷுடன் அதிகம் வேலை செய்ததால் அவரைப் பற்றி அதிகம் சொல்கிறேன். என் திரைப்பயணம் முழுக்க அவர் இருக்கிறார் என்பது தான் காரணம்.

கைதி 2 வருகிறதா ?
கைதி 2 இருக்கிறது என லோகேஷும் சொல்லியிருக்கிறார். கார்த்தி சாரும் சொல்லியிருக்கிறார். விக்ரமில் உயிருடன் வந்ததால் நான் இருப்பேன் என நினைக்கிறேன்.

என்ன மாதிரியான பாத்திரங்கள் நடிக்க ஆசை ?
எனக்கு அப்படி வித்தியாசமாக எந்த ஆசையும் இல்லை. வரும் கதாப்பாத்திரங்களில் எனக்கு செட் ஆகும் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் அவ்வளவு தான்.

உங்களுடைய அடுத்தடுத்த படங்கள் பற்றி?
மதுமிதா மேடம் உடன் ஒரு படம் செய்கிறேன். அதற்கடுத்து, விஷால் வெங்கட்டுடன் ஒரு படம் செய்கிறேன். இன்னும் சில படங்கள் பேச்சு வார்த்தையில் இருக்கிறது. இப்போது ரசவாதம் வெளியாகவுள்ளது. படம் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.

ஜோதிகா நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’

பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜோதிகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் இந்தி திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்வை திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இயக்குநர் துஷார் ஹிர நந்தானி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், ஜோதிகா, ஆலயா எஃப், சரத் கெல்கர், ஜமீல் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரதம் மேத்தா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆனந்த் மிலிந்த், தனிஷ் பக்ஷி, சாஸெட் -பரம்பரா மற்றும் வேத் சர்மா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.‌ பார்வை திறன் சவாலுள்ள மாற்றுத்திறனாளி தொழிலதிபரான ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை டி சீரிஸ் மற்றும் சாக் இன் சீஸ் பிலிம் புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், கிருஷ்ணகுமார் மற்றும் நிதி பார்மர் ஹிராநந்தானி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை விமான நிலையத்தில் உள்ள பிவிஆர் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது ஜோதிகா, இயக்குநர் துஷார் ஹிராநந்தானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகை ஜோதிகா பேசுகையில், ” ஸ்ரீகாந்த் திரைப்படம் மிகவும் இன்ஸ்பிரேஷனான ஸ்டோரி. துணிச்சலாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் நானும் பங்களிப்பு செய்ததற்காக பெருமிதம் கொள்கிறேன்.

என்னுடைய திரையுலகப் பயணத்தில் இந்த திரைப்படம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீகாந்த் பொல்லாவின் கதை கேட்டதும் எனக்கு வியப்பு ஏற்பட்டது. அவரை நேரில் சந்தித்து பேசியதும், அவரது வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை கேட்ட பிறகு வாழ்க்கை பற்றிய எனது பார்வை முற்றாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக பார்வைத்திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்த என்னுடைய பார்வை மாறிவிட்டது. அவர்கள் எவ்வளவு திறமை வாய்ந்தவர்கள் என்பதையும் .. பொதுவெளியில் அவர்கள் அவர்களை எப்படி நாம் நடத்துகிறோம் என்பதையும் குறித்தும் பல வினாக்களை என்னுள் எழுப்பியது.

இந்தத் திரைப்படம் பலருக்கும் அவர்களது அகக்கண்களை திறந்து விடும் படைப்பாக இருக்கும். இந்தப் படம் வெளியான பிறகு பார்வைத்திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளை பற்றி நாம் கொண்டிருக்கும் பார்வையில் நிச்சயம் மாற்றம் ஏற்படும்.

இந்த திரைப்படத்தில் நான் ஆசிரியை வேடத்தில் நடித்திருக்கிறேன். ‘ காக்க காக்க”, ‘ராட்சசி’ அதன் பிறகு ‘ஸ்ரீகாந்த்’ எனும் இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக ஆசிரியையாக நடித்திருக்கிறேன்.

பாலிவுட் திரையுலகில் நான் நடிக்கும் மூன்றாவது இந்தி திரைப்படம் இது.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் இனிமையானது. அற்புதமானது. பணியாற்றுவதற்கு மொழிகள் தடையில்லை. மலையாள திரையுலகமாக இருந்தாலும்.. தமிழ் திரையுலகமாக இருந்தாலும்.. பாலிவுட் திரையுலகமாக இருந்தாலும்.. திறமையான கலைஞர்களுடன் தான் பணியாற்றியிருக்கிறேன். இந்த திரைப்படத்தை டி சிரீஸ் நிறுவனமும் , நிதி ஹிராநந்தனியும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். துஷார் ஹிராநந்தனி இயக்கியிருக்கிறார். மே பத்தாம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் துஷார் ஹிராநந்தானி பேசுகையில், ” ஸ்ரீகாந்த் பொல்லாவின் சுயசரிதையை திரைப்படமாக உருவாக்குவதற்காக ஹைதராபாத்தில் அவரை சந்தித்தேன். மூன்று நாட்கள் அவருடன் செலவழித்தேன். நிறைய விசயங்கள் குறித்து விவாதித்தோம். அதன் போது அவர் திரைப்படத்தை உருவாக்குவதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். ” என்றார்.

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் சாகர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் பாபின், இணை தயாரிப்பாளர் தீபக், இயக்குநர் இளன், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ், நாயகன் கவின், நடிகைகள் அதிதி பொஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன், நடிகர்கள் ‘ராஜா ராணி’ பாண்டியன், தீப்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் இளன் பேசுகையில், ‘ எனக்கு’ மிகவும் எமோஷனலான தருணம் இது. நம் எல்லோரிடத்திலும் கனவு ஒன்று இருக்கும். ஒரு வீடு வாங்க வேண்டும்… ஒரு கார் வாங்க வேண்டும்… கடை ஒன்றை திறந்து வியாபாரம் செய்ய வேண்டும்.. என ஏதாவது ஒரு கனவு இருக்கும் தானே.. அந்த கனவை நோக்கி பயணிக்கிற அனைவருமே ஸ்டார் தான். இதைத்தான் இந்த படம் சொல்கிறது. அந்தப் பயணத்தில் நாம் யாரையும் காயப்படுத்தி விடக் கூடாது. அன்புடன்.. அந்த கனவை விட்டுக் கொடுக்காமல்… பிடிவாதமான மனதுடன்.. அந்தப் பயணம் இருந்து கொண்டே இருக்கும் அல்லவா..! அதைத்தான் இந்த படம் பேசுகிறது.

1980 களில் ஒரு பையன்.. அவனுக்கு 20 வயது இருக்கும். பெரிய நடிகராக வேண்டும் என்ற கனவுடன் மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார். எண்பது 90 ஆகிறது. 2000 ஆகிறது. 2010யும் கடக்கிறது. கடந்து போகிறது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேல் இந்த பயணம் தொடர்கிறது. இப்போது அவருக்கு 55 வயதாகிறது. இந்த வயதில் அவருக்கு ‘ராஜா ராணி’ எனும் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. பல வருஷமாக தேக்கி வைத்திருந்த அவருடைய கனவு நனவாகிறது. திரையரங்கில் அவருடைய நடிப்பிற்கு ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். அவர்தான் என்னுடைய அப்பா ‘ராஜா ராணி’ பாண்டியன்.

இந்தப் படத்தை அவருக்காக அர்ப்பணிப்பதைத் தான் நான் விரும்புகிறேன். இந்தப் படத்திற்கு இன்ஸ்பிரேஷன்.. என்னுடைய அப்பா தான். அவருடைய இந்த பயணத்தில் ஏராளமான அனுபவங்களை சந்தித்திருப்பார். அவமானங்களை எதிர்கொண்டிருப்பார்.‌

ஒரு முறை என் அப்பா என்னிடம், ‘இந்த முகத்தை வைத்துக்கொண்டு எப்படி நடிக்க வந்தாய்?’ என ஒருவர் கேட்டுவிட்டதாக வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார். அந்த நபர் கேட்ட அந்த கேள்விதான் என் அப்பாவிற்கு மிகப்பெரிய மோட்டிவேஷனாக இருந்திருக்கிறது. ஒருத்தர் முகத்துக்கு நேராக இப்படி கேட்டுவிட்டாரே..! என்ற ஒரே காரணத்திற்காக, எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற உறுதி அவர் மனதில் ஏற்பட்டு விட்டது. அந்த மனவுறுதியை விவரிப்பதுதான் இந்த ஸ்டார் திரைப்படம்.

ஒரு கனவை நாம் எப்போதும் தனியாக வென்று விட முடியாது. அதற்கு ஆதரவளிக்க நிறைய பேர் தேவை. உதவி செய்வதற்கும் ஆட்கள் தேவை. அதைவிட மற்றவர்களின் ஆசியும் முக்கியம்.‌ இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் கவின், ‘காசு இல்ல சார்..!’ என டயலாக் பேசுவார். அது எங்க அப்பா வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவம். அதன் போது எங்க அம்மா தான் அவருக்கு ஆதரவாக இருந்து அவரையும் பார்த்துக் கொண்டார். எங்களையும் பார்த்துக் கொண்டார். எங்களை பொறுத்தவரை அவரும் ஒரு ஸ்டார் தான்.

அடிப்படையில் நம்மை சுற்றி ஏராளமான ஸ்டார்கள் இருக்கிறார்கள். இவர்களை நினைவுபடுத்தும் வகையில் தான் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது.

இதனால் இந்த திரைப்படத்திற்கு அனைவரும் அவர்கள் குடும்பத்தினருடனும், காதலருடனும், நண்பர்களுடனும், உறவுகளுடனும் வருகை தந்து ரசிக்கும் ஒரு அழகான படமாக ‘ஸ்டார்’ இருக்கும் என நான் நம்புகிறேன்.

தயாரிப்பாளர் சாகரிடம் இந்த கதையை சொல்லிவிட்டு இரண்டு நாட்களில் பதிலை சொல்லி விடுங்கள் என நிபந்தனை விதித்தேன். அவர் ஒரே நாளில் இந்த படத்தை தயாரிக்கிறேன் என பதிலளித்தார். அந்தத் தருணத்தில் அவர் எடுத்த விரைவான முடிவு தான் இன்று வரை எனக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு தருணத்திலும் அவர் எடுக்கும் வேகமான முடிவு இப்படத்தை நேர்த்தியாக உருவாக்குவதற்கும் உதவி இருக்கிறது.

அவர் மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்காக பொறுப்பேற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் தங்களது பணியை முழு அர்ப்பணிப்புடன் செய்து ஒத்துழைப்பு வழங்கினர்.‌ அனைவரும் தங்களின் மனமார்ந்த பங்களிப்பை இப்படத்திற்காக அளித்துள்ளனர். இதற்காக இந்த தருணத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படத்தை நான் ஒரு அழகான காதல் கதையாக தான் பார்க்கிறேன். லவ் என்றதும் ஒரு அப்பாவின் அன்பு… ஒரு அம்மாவின் அன்பு… ஒரு நண்பனின் அன்பு… ஒரு மனைவியின் அன்பு… ஒரு காதலியின் அன்பு… என ஏகப்பட்ட அன்பு இப்படத்தில் இருக்கிறது.

இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக யுவன் தற்போது துபாயில் இருக்கிறார். நான் என்ன கேட்டாலும் எனக்காக அவர் செய்வார். அவர் என்ன கேட்டாலும் அவருக்காக நான் செய்வேன்.‌ அந்த அளவிற்கு எங்களுக்குள் நட்பு இருக்கிறது. எனக்கு அவர் ஒரு சகோதரர்.. நலம் விரும்பி.. நண்பன்.. ஆன்மீக வழிகாட்டி.. இப்படி அவரைப் பற்றி பட்டியலிட்டு கொண்டே செல்லலாம்.‌ இந்த உலகத்தில் எனக்குப் பிடித்தமானவர்களின் பட்டியலில் யுவன் முதலிடத்தில் இருக்கிறார். அவரைப் போல ஒருவரை என் வாழ்க்கையில் சந்தித்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன்.‌ அவர் எப்போதும் அன்பாகவும், இனிமையாகவும், எளிமையாகவும் பழகக்கூடியவர்.‌

இவரைத் தொடர்ந்து கவின். ஸ்டார் ஆகி இருக்கும் கவினை, ‘டாடா’ படத்திற்கு பிறகு தான் அவரை சந்திக்கிறேன். இப்படத்தின் கதையை அவரிடம் சொல்லும் போது, முழு கதையும் கேட்டுவிட்டு… ‘இந்த கதையில் வரும் பல சம்பவங்கள் என் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது’ என்றார். படத்தின் கதை தான் கவினை நாயகனாக தேர்ந்தெடுத்திருக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் கவின் நடிக்கும் போது எங்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருப்பார். ஒரு நடிகராக என்னை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பட குழுவினரையும் தன் நேர்த்தியான நடிப்பால் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருப்பார். இதற்கு சாட்சி படத்தின் முன்னோட்டம். இதற்காக கவினுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு சிறிய அளவிலான எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகள் இருக்கிறது. அதை படம் பார்த்த ரசிகர்கள்.. மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அன்பாக வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார் .

தயாரிப்பாளர் சாகர் பேசுகையில், ” இயக்குநர் இளன், ‘ஸ்டார்’ படத்தின் கதையை சொல்வதற்கு முன்பே அவருடன் தொடர்பில் இருந்தேன். அப்போது காணொளி மூலமாக ஒரு கதையை என்னிடம் சொல்லி இருக்கிறார். அவர் கதை சொல்லும் விதம்.. அதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்ளும் பாணி.. இதெல்லாம் எனக்குப் பிடித்திருந்தது. இது தொடர்பாக எஸ்கியுடிவ் ப்ரொடியூசர் வினோத்திடம் இளனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனச் சொன்னேன்.

சிறிது நாள் கழித்து என்னை சந்தித்து ஸ்டார் திரைப்படத்தை உருவாக்கலாமா? என கேட்டார்.‌ அவர் இந்த படத்தின் கதையை முழுவதுமாக விவரித்தார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. யார் ஹீரோ? என கேட்டேன். அவர் கவின் என்று சொன்னார். அப்போது ‘டாடா’ படம் வெளியாகி வெற்றி பெற்றிருந்த தருணம். ‘டாடா’ படத்தை பார்க்கும் போதே தமிழ் திரையுலகத்திற்கு நம்பிக்கையான ஒரு நடிகர் கிடைத்திருக்கிறார் என மகிழ்ச்சி அடைந்தேன். இளனும் கவின்தான் நாயகன் என்று சொன்னவுடன் நான் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டேன்.

அவர் சொன்னது போல் எனக்கு இரண்டு நாள் தான் டைம் கொடுத்தார். அவருக்கு வேறு திசைகளில் இருந்து அழுத்தம் இருந்ததை உணர முடிந்தது. அப்போது இந்த படத்தின் கதை மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இளன்+ கவின் காம்பினேஷன் மீதும் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

அண்மையில் இந்தத் திரைப்படத்தை பார்த்தேன். கதையை உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறார். எல்லா பிரிவினரும் அன்பாக ஒன்றிணைந்து உருவாக்கிய படைப்பு இந்த ஸ்டார். இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

பட தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ் பேசுகையில், ” லவ் டுடே படத்தின் முன்னோட்டத்தை ஒரு வாரத்தில் நிறைவு செய்து விட்டேன். ஆனால் இந்தப் படத்தின் முன்னோட்டத்திற்கு இருபது நாள் எடுத்துக் கொண்டேன். இளனின் திரைக்கதையை முழுவதுமாக படித்து விட்டேன். படத்தையும் பார்த்து விட்டேன். கவினின் அற்புதமான நடிப்பை பார்த்து வியந்து விட்டேன். இந்த கூட்டணியுடன் பணியாற்றும் போது எனக்கு பொறுப்புணர்வு அதிகம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். முன்னோட்டத்தை பத்து நாட்களில் முடித்து விட்டேன். இருந்தாலும் அதன் மீது எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இளனுக்கு போன் செய்து, ‘எனக்கு இன்னும் ஒரு ஐந்து அல்லது ஆறு நாட்கள் கொடுங்கள் எனக்கு முழு திருப்தி இல்லை’ என்று சொன்னேன். என் மேல் எனக்கு நம்பிக்கை இல்லாமல் போனதுக்கு காரணம் இவர்கள்தான். அந்த அளவிற்கு படத்தின் கதை, திரைக்கதை, நடிப்பு என அனைத்து அம்சங்களும் நேர்த்தியாக இருந்தது.

படத்தின் முன்னோட்டத்தை நிறைவு செய்தவுடன் எனக்கு ஒரு விசயம் தோன்றியது. திறமையான சமையல் கலை நிபுணராக இருந்தாலும்.. நல்ல இன்கிரிடியன்ஸ் இருந்தால்தான் நல்ல உணவை தயாரிக்க முடியும். அதுபோல் இந்த படத்தின் முன்னோட்டம் பேசப்படுவதற்கு இவர்கள் வழங்கிய கன்டென்ட் தான் காரணம். இதற்காக இயக்குநர் இளன், நடிகர் கவின் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகை அதிதி பொஹங்கர் பேசுகையில், ” இயக்குநர் இளன் திறமையானவர். வசனத்தையும்… வசனத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதையும் .. அதனுடன் உணர்வுபூர்வமாக எப்படி நடிக்க வேண்டியதையும் தெளிவாக குறிப்பிடுவார். இந்தப் படத்தில் சுரபி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் மேடை நாடகத்திலிருந்து வந்திருக்கிறேன். ஒத்திகை முக்கியம் என்பதை நன்கறிவேன். படப்பிடிப்பு தளத்தில் பட குழுவினருடன் பழகிய தருணங்கள் மறக்க இயலாதவை. படக்குழுவினர் அனைவரும் நட்புடன் பழகினர். கவின் ஒரு சக நடிகராக இருந்தாலும்.. மிகத்திறமையானவர். மே பத்தாம் தேதி ஸ்டார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து எங்களுக்கு ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில், ” இன்று எனக்கு மிகவும் ஸ்பெஷலான நாள். நான் நடித்த முதல் திரைப்படம் வெளியாகிறது. ஓராண்டிற்கு முன் யாராவது என்னை சந்தித்து, ‘நீங்கள் தரமான படத்தில் முதன்மையான வேடத்தில் நடிப்பீர்கள்’ என்று சொன்னால் ..நான் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் அது இன்று சாத்தியமாகி இருக்கிறது. இதற்காக என்னுடைய பெற்றோருக்கும், வாய்ப்பு அளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களுக்கும், ஸ்டார் பட குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரைப்படத்தின் நடித்தவுடன் எனக்கு ஓரளவு மன திருப்தி ஏற்பட்டிருக்கிறது. நான் இயக்குநர் இளனின் வழிகாட்டுதலின்படி தான் நடிகை ஆகியிருக்கிறேன். இந்தப் படம் வெளியான பிறகு கவினுக்கு ரசிகர்களின் கூட்டம் அதிகரிக்கும். அவர் பெரிய ஸ்டாராகி விடுவார்.

படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் போதெல்லாம் படக்குழுவினரிடம் இருக்கும் பாசிட்டிவிட்டி… என்னை வியப்படையச் செய்தது. இதனால்தான் படங்களை உணர்வு பூர்வமாக உருவாக்க முடிகிறதோ..! என்றும் எண்ணி இருக்கிறேன். இந்தப் படத்திலும் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பை வழங்கி இருக்கின்றனர். அதனால் இந்த படம் நிச்சயமாக பெரிய வெற்றியைப் பெறும். ” என்றார்.

இயக்குநரின் தந்தையும், நடிகருமான ‘ராஜா ராணி’ பாண்டியன் பேசுகையில், ” என்னை திரைத்துறைக்கு கைபிடித்து அழைத்து வந்து ஸ்டில்ஸ் ரவிக்கு முதல் வணக்கம். இளன் – ‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை எண்ணற்றோன் கொல் எனும் சொல்’ எனும் வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப என்னை உயர்த்தி விட்டார். இளன் சிறிய வயதிலேயே பேன்சி டிரஸ் காம்பெடிஷனில் கலந்து கொள்வான். அதற்கு நான் அவனை அழைத்துக் கொண்டு செல்வேன். நடிகை நளினி இதை பார்த்து என்னிடம், ‘உன் ஆசை எல்லாம் உன் மகன் மூலமாக தீர்த்துக் கொள்கிறாயா? ‘ என கிண்டலுடன் கேட்பார். அவன் வீரசிவாஜி வேடம் அடைந்திருந்த போது, தலை வலிக்கிறது என்றான். நான் அவருடைய கிரீடத்தை தாங்கிப் பிடிக்க.. உடனே, ‘மேடையில் நீங்கள் வந்து தாங்கி பிடிப்பீர்களா?’ என கேட்டுவிட்டு கையை எடுத்து விட சொன்னார். அந்த அளவிற்கு அவனை நான் தயார்படுத்திருந்தேன். அவனும் தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தான்.

நடிப்பை தொடர்ந்தாலும் கல்வி விசயத்தில் நான் உறுதி காட்டியதால் அவன் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் முடித்த பிறகு தான் என்னை வைத்து குறும்படம் ஒன்றை இயக்கினான்.

படிப்பை முடித்த பிறகு தான் இந்தத் துறையில் வரவேண்டும் என நிபந்தனை விதித்திருந்தேன். அதனையும் ஏற்றுக் கொண்டான். அத்துடன் பட்டதாரியான பிறகு வேலை தேடுவதற்கு நான்கு ஆண்டுகள் ஆகலாம். அதன் போது எனக்கு சோறு போடுவீர்களா! என கேட்டார். போடுவோம் என்றேன். அது போல் நினைத்து எனக்கு இரண்டு ஆண்டுகள் சோறு போடுங்கள். நான் இயக்குநராகி காட்டுகிறேன் என்றார். ஆனால் ஒரே வருடத்தில் இயக்குநராகி விட்டார்.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால்.. பெற்றோர்கள் பிள்ளைகளின் விருப்பத்தை உணர்ந்து அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அந்த வகையில் நான் அவருக்கு வாய்ப்பு அளித்தேன் அதனை அவர் பயன்படுத்தி இயக்குநராகிவிட்டார். இதை மறுத்து என்னுடைய கருத்தை மட்டுமே திணித்துக் கொண்டிருந்தால்.. அவருடைய வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கும்.

எல்லோரும் சினிமாவை நோக்கி வருகிறார்கள். பலரும் தொழிலதிபராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். சிலர் டாக்டராக வேண்டும் என்று நினைக்கிறார்கள்.‌ இதில் இலக்கை நோக்கி பயணிப்பவர் பலர். ஆனால் சென்றடைபவர் சிலர்தான். கடைசி வரை அந்த நோக்கத்தில் இருந்து விலகாமல் பயணிப்பவர்கள் தான் சென்றடைகிறார்கள்.
என்னுடைய மகன் இந்த துறையில் இயக்குநராக வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி தான்.

நான் இன்று இந்த நிலைமையில் இருப்பதற்கும் ஸ்டில்ஸ் ரவியின் தொழில் பக்தி தான் காரணம். அவர் ஒவ்வொரு நிமிடமும் தொழிலில் அக்கறை காட்டுபவர். அவரிடம் உதவியாளராக பணியாற்றிய போதும் நடிக்க வேண்டும் என்று என்னுள் இருந்த ஆர்வத்தை கைவிடவில்லை. இதனால் அவரிடம் பலமுறை திட்டு வாங்கியிருக்கிறேன். பிறகு அவரை சமாதானப்படுத்தி அவரிடம் தொடர்ந்து பணியாற்றி இருக்கிறேன்.

‘ராஜா ராணி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதும் பல நெருக்கடிகளை எதிர் கொண்டேன். ஆனால் நல்ல கதாபாத்திரம் என்பதால் அனைத்தையும் துறந்து விட்டு, அதில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தேன். இந்தப் படத்தில் நடித்ததற்காக சம்பளத்தை வாங்கிய போது.. காசாளர் நம்பிக்கையுடன் நீங்கள் நல்லா வருவீர்கள.! என்று சொன்னார். இந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில் நான் கலந்து கொண்டேன். அந்த விழாவில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த யூகி சேது தான், ‘பந்தா’ பாண்டியாக இருந்த என்னை என்னை ‘ராஜா ராணி’ பாண்டியன் என மாற்றினார். இதற்காக யூகி சேதுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒருவர் செய்த உதவியை நன்றி மறக்காமல் காலம் முழுதும் நினைத்துக் கொண்டே இருந்தால் நாம் முன்னேறி விடுவோம். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும், வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி.” என்றார்.

நடிகர் கவின் பேசுகையில், ” டாடாவிற்கு பிறகு ஸ்டார். இயக்குநர் இளன் கதை சொல்ல வரும்போது அவருடன் எதனையும் எடுத்துக் கொண்டு வரவில்லை. பொதுவாக கதை சொல்ல வரும் இயக்குநர்கள் தங்களது கைகளில் லேப்டாப்… ஒன்லைன் ஆர்டர்.. ஸ்கிரிப்ட் புக்.. என ஏதாவது ஒன்றை கையில் வைத்திருப்பார்கள். மூன்று மணி நேரம் பொறுமையாக.. விரிவாக கதையை சொன்னார். அவர் இதயத்தில் இருந்து கதையை சொல்கிறார் என்று கதையை கேட்டு முடிந்த பிறகு தான் தெரிந்தது. அவர் சொன்ன கதையில் ஜீவன் இயல்பாகவே இருந்தது. பெரிதாக எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன்.

படத்தின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை.. என்னை தேடி வந்து கதை சொன்ன பிறகு வைத்த நம்பிக்கை.. என அனைத்தையும் காப்பாற்றி இருக்கிறேன் என நினைக்கிறேன்.

படத்தின் இணை தயாரிப்பாளர் தீபக் வெளிநாட்டில் தான் இருப்பார். ஆனால் படப்பிடிப்பு பணிகளை நேர்த்தியாக அங்கிருந்தே ஒருங்கிணைத்து விடுவார்.

இந்தப் படத்தின் கதையை கேட்டு முடித்தவுடன் மிகவும் பொறுமை தேவை என்பதை உணர்ந்தேன். படைப்பும் பெரிது. அதற்கான உழைப்பும் நேரமும் அதிகம். அனைவரும் இதனைப் புரிந்து கொண்டு பொறுமையாக இருந்து பணியாற்றியதற்காக இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் விக்ரம் பிரபுவுடன் இணைந்து ‘ஷத்ரியன்’ என்றொரு படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தில் யுவன் இசையில் எனக்கொரு பாடல் காட்சியும் இருந்தது. அது படமாக்கப்பட்டது. பிறகு படத்தொகுப்பில் நீக்கப்பட்டது. நான் நடித்த முதல் படம். அதில் பாடல் காட்சி நீக்கப்பட்டதால்.. மனதில் வலி இருந்தது. யுவனை நேரில் சந்திக்கும் போது இதைப்பற்றி விவரித்தேன்.

பொதுவாக ஆறுதலுக்காக சொல்வார்கள் அல்லவா… ‘இன்று நடக்கவில்லை என்றால், நாளை இதைவிட பெரிதாக நடக்கும் என்று’… அதைப் பற்றிய தவறான புரிதல் எனக்குள் இருந்தது. ஆனால் அந்த வார்த்தைகள் எல்லாம் உண்மைதான் என்பது இப்படத்தில் தெரிந்து கொண்டேன். யுவன் சங்கர் ராஜா இசை என்றவுடன் என்னுடைய ஆசையும், கனவும் நிறைவேறிவிட்டது. இந்த படத்திற்காகவே யுவன் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். அதை நீங்கள் முன்னோட்டத்திலேயே பார்த்து ரசித்திருக்கலாம். படம் பார்க்கும்போதும் அவருடைய உழைப்பு உங்களுக்கு தெரிய வரும் என நினைக்கிறேன்.

எழில் அரசு தான் ஒளிப்பதிவு என்றவுடன்.. எனக்கு முழு நம்பிக்கை வந்து விட்டது. ஏனென்றால் ‘டாடா’ படத்திற்கு அவர்தான் ஒளிப்பதிவாளர்.

படத்தின் கதை யதார்த்தமாக இருக்கும். அதில் இடம்பெறும் சின்ன சின்ன சண்டை காட்சிகளும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக சண்டை பயிற்சி இயக்குநர் விக்கி மாஸ்டர் கடினமாக உழைத்திருக்கிறார்.

எனக்கு டான்ஸ் மாஸ்டர் என்றால் பயம் தான். எனக்கு நடிப்பின் மீது இருக்கும் நம்பிக்கை… நடனத்தின் மீது இல்லை. நிறைய ஒத்திகையை பார்ப்பேன். இந்தப் படத்தில் மூன்று டான்ஸ் மாஸ்டர்களும் எனக்காக பொறுமையுடன் சொல்லிக் கொடுத்து நடனமாட வைத்தார்கள்.

லால் மற்றும் கீதா கைலாசம் இருவரும் நடித்திருக்கும் காட்சிகள் உயிரோட்டமாக இருக்கும். அதில் அவர்களின் அனுபவிக்க நடிப்பு மேலும் யதார்த்தமாகவும், அழகாகவும் இருக்கும். இது ரசிகர்களிடமும் சரியாக பிரதிபலிக்கும் என நம்புகிறேன்.

படத்தில் நடித்த சக நடிகைகளான பிரீத்தி மற்றும் அதிதிக்கும் நன்றி. உடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் நடித்த அனைவரும் திரையுலகத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. ஏனெனில் நல்ல கன்டென்ட் இருந்தால் அந்தப் படத்திற்கு நீங்கள் அபரிமிதமான ஆதரவை தருவீர்கள். இதற்கு ‘டாடா’ உட்பட பல படங்களை உதாரணமாக சொல்லலாம்.

இவற்றையெல்லாம் கடந்து ஒரே ஒரு சிறிய விசயத்தை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ‘சினிமாவை வைத்து சினிமா எடுத்தால் ஒடாது’ என பொதுவாக சொல்வார்கள். இது எந்த அளவிற்கு உண்மை என எனக்குத் தெரியவில்லை. படம் நன்றாக இருந்தால் ஓடும். ஓடியிருக்கிறது. ஆனால் இது போன்ற விசயம் எப்படி உருவாகிறது என தெரியவில்லை. ஒருவேளை ஒட்டுமொத்த சதவீதத்தின் அடிப்படையில் சொல்லி இருக்கலாம் என நினைக்கிறேன்.

இந்தப் படத்திற்கும் அது நடந்தது. தயாரிப்பாளர் சாகரிடம் கதை செல்வதற்கு முன் சிலர் இந்த விசயத்தை சொன்னார்கள். அதுவரைக்கும் நான் மிகவும் நம்பிக்கையாக தான் இருந்தேன். தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகரும் கதையைக் கேட்டு விட்டு .. இது போன்ற கருத்தை சொல்லி விடுவாரோ..! என பயந்தேன். ஆனால் இந்த படத்தை தயாரிக்க ஒரே நாளில் அவர் ஒப்புக்கொண்டவுடன் எனக்கு இருந்த பயம் விலகி, நம்பிக்கை அதிகரித்து விட்டது. கலையை கலையாக பார்க்கிற.. அதை மிகவும் நேசிக்கிற.. பட குழு மீது தயாரிப்பாளர் நம்பிக்கை வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கை தான் இந்த படத்தை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது என நினைக்கிறேன். அந்த விசயங்களை எல்லாம் கடந்து இந்த படைப்பின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைதான் வெற்றியை தரும் என நம்புகிறேன்.

ரசிகர்கள் மீதும் பெரும் நம்பிக்கை இருக்கிறது. தயாரிப்பாளர்களின் முதலீட்டிற்கும், ரசிகர்களின் முதலீட்டிற்கும் நியாயமாக உழைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய குரு எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். இதற்காகவே ஒட்டுமொத்த பட குழுவும் நம்பிக்கையுடன் பணியாற்றியிருக்கிறது.

இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல முறையில் ஓடி.. சினிமாவைப் பற்றி சினிமா எடுத்தால் ஓடும் என்கிற பட்டியலில் இந்த திரைப்படம் இடம் பெறும். இதை நான் ஆத்மார்த்தமாக நம்புகிறேன். ” என்றார்