Breaking
November 19, 2024

காமிக்ஸ் வடிவில் அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு

அப்போலோ நிறுவனரான பிரதாப் சி. ரெட்டியின் பிறந்தநாளன்று, ‘அப்போலோவின் கதை’ எனும் பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்திய மருத்துவதுறையில் புரட்சியை ஏற்படுத்தியவரும், மருத்துவத்துறை ஆற்றிய சேவைக்காக பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும் கிளைகளை நிறுவி, மில்லியன் கணக்கிலான மக்களுக்கு இடையறாத மருத்துவ சேவையை வழங்கி வரும் அப்போலோ மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர் பிரதாப் சி. ரெட்டியின் 91 ஆவது பிறந்த நாள் இன்று கோகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை கீரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற அவரின் பிறந்த நாள் விழாவின் போது, அவரின் பேத்தியும், ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரணிண் மனைவியுமான உபாசனா காமினேனி கொனிடேலா கலந்து கொண்டார். இதன் போது எழுத்தாளர் நிம்மி சாக்கோ எழுதி, அமர் சித்ரா கதா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பதிப்பித்திருக்கும் ‘அப்போலோவின் கதை’ எனும் காமிக்ஸ் வடிவிலான புத்தகம், தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டது. அப்போலோ மருத்துவமனை உருவானது முதல் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்திருக்கும் அப்போலோ மருத்துவமனையின் வரலாறைக் கொண்ட இந்த புத்தகத்தை அம்மருத்துவமனையின் நிறுவனரான பிரதாப் சி. ரெட்டி வெளியிட்டார்.

இந்நிகழ்வில் திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா பேசுகையில்,“ எங்களுடைய தாத்தாவின் பிறந்த நாளான இன்று.. எங்களுக்கு மிகவும் உணர்வுபூர்வமான நாள். அவருடைய பிறந்த நாளை எதிர்காலத்தில் தொழிலதிபர்களாக வேண்டும் என கனவு காணும் இன்றைய இளம் தொழில் முனைவோர்களும், இளம் பெண்களும் எங்களுடன் இணைந்து கொண்டாடுகிறார்கள். இன்று வெளியிடப்பட்டிருக்கும் ‘அப்போலோவின் கதை’ எனும் புத்தகத்தில் ஒரு மனிதனின் சாதனைப் பயணம் எழுதப்பட்டிருக்கிறது. இந்த புத்தகம் தந்தையானவர்.. தன்னுடைய மகள்களின் மீது வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடு. இந்த புத்தகம் அவரின் தொழில் வாழ்க்கையையும், சொந்த வாழ்க்கையும் எப்படி சமாளித்து வெற்றிப் பெற்று சாதனை படைத்தார் என்பது இடம்பெற்றிருப்பது சிறப்பானது. அவருடைய பெண் வாரிசுகளான நாங்கள்.. மருத்துவ துறையில் அவர் உருவாக்கிய சாம்ராஜ்யத்தை மேலும் விரிவுப்படுத்தவும், அவர் காட்டிய பாதையில் சொந்த வாழ்க்கையையும், தொழில் ரீதியிலான வாழ்க்கையும் திறம்பட சமாளித்து அவரின் கனவை நனவாக்கவும் கடுமையாக உழைத்து வருகிறோம். ஒவ்வொரு குழந்தைகளும் இந்த புத்தகத்தை வாசிக்கவேண்டும். இது இந்தியாவின் கதை. ஒவ்வொரு மகள்களும் இதனை வாசிக்கவேண்டும். ஒவ்வொரு தந்தைமார்களும் இதனை படிக்கவேண்டும். இந்த புத்தகம் ஒவ்வொரு மகள்கள் மீதும் அவர்களது தந்தை வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு.” என்றார்.

டாக்டர் பிரதாப் சி. ரெட்டி பேசுகையில்,“ இன்று என்னுடைய வாழ்வில் முக்கியமான நாள். மருத்துவராக மட்டுமல்ல.. இந்திய சுகாதாரத்துறையின் சிறந்த அடையாளமாக அப்போலோ உருவாகியிருக்கிறது. உலகத்திலேயே மருத்துவ சேவையளிப்பதில் இந்திய சுகாதாரத்துறையின் பங்களிப்பு அதிகரித்திருக்கிறது. இது தொடர்பாக அண்மையில் பாரதபிரதமர் பேசும் போது ,‘இந்தியா- உலகளவில் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கும் நாடு’ என் தெரிவித்தார். இதற்காக நான் இந்தியனாக பெருமைப்படுகிறேன். நாற்பது.. நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இந்த மருத்துவமனையை உருவாக்கும் போது, வெளிநாடுகளிலும் சேவையை அளிப்போம் என நினைக்கவில்லை. தற்போது உலகம் முழுவதும் மருத்துவசேவையை வழங்கி வருகிறோம். இதற்கான நான் தற்போது மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு மக்கள், மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள்… என அனைவரின் ஆதரவும் கிடைத்தது. தொடர்ந்து கிடைத்தும் வருகிறது. இதற்காக இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது இந்தியா.. உலகளவில் மருத்துவ சேவைகளை வழங்கிவருவதில் முன்னணியில் இருக்கிறது. அதனால் எதிர்காலத்தில் இந்திய மருத்துவர்களுக்கும், இந்திய செவிலியர்களுக்கும், இந்திய மருத்துவமனைகளுக்கும் என தனி அடையாளம் உருவாகும்.” என்றார்.

Related Post