Breaking
Fri. Mar 29th, 2024

இந்தியாவின் உள்ள எக்ஸ் தளத்தின் சிறந்த ஹேஸ்டாக்குகள் : ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு முதலிடம்

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் – புதிய சாதனைகளை நிகழ்த்துவதிலும், பல சாதனைகளை முறியடிப்பதிலும் ஏனைய நட்சத்திர நடிகர்களில் தனித்து நிற்கிறார். அவருடைய பிரத்யேகமான ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பின் காரணமாக.. பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முறியடிப்பதுடன், இந்திய அளவில் மட்டும் இல்லாமல் உலகளவில் அவருடைய திரைப்படத்தை ரசிகர்களுக்காக கொண்டு செல்வதிலும் தனித்துவத்தை பின்பற்றுகிறார்.

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் – தெலுங்கு திரையுலகின் வணிக எல்லையிலிருந்து பான் இந்திய அளவிலான சந்தையின் நட்சத்திர ஐகானாக உயர்ந்திருக்கிறார். ட்விட்டர் இந்தியா நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியாவில் உள்ள எக்ஸ் தளத்தின் ( முன்னர் ட்விட்டர் ) சிறந்த ஹேஸ்டாக்குகளின் பட்டியலில் அவருடைய புகழ் சிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பிரபாஸ் பொழுதுபோக்கு வகைகளில் சிறந்த 10 ஹேஸ்டாக்குகளை பெற்ற ஒரே நட்சத்திர நடிகராக உருவெடுத்திருக்கிறார்.

இந்த சாதனை… பிரபாஸின் சமூக வலைதளம் மற்றும் சமூக ஊடகங்களில் அவரது செல்வாக்கிற்கு சான்றாகியிருக்கிறது. இது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸின் நடிப்பில் ‘கல்கி 2898 AD’ மற்றும் ‘ ராஜா ஸாப்’ ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டுகளுடன்.. பிரபாஸ் பார்வையாளர்களை மேலும் கவர்ந்து, அந்த வெற்றியை தன்னுடைய ரசிகர்களுடன் கொண்டாடவிருக்கிறார்.

“ஹார்ட் பீட்” சீரிஸ் இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான ‘ஹார்ட் பீட்’ சீரிஸை, தற்போது ஸ்ட்ரீம் செய்யத் தொடங்கியுள்ளது.

ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களைச் சுற்றி, நடக்கும் பரபரப்பு சம்பவங்கள் தான், ஹார்ட் பீட் சீரிஸின் கதைக்களம் ஆகும்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், மனதைக் கவரும் இந்த சீரிஸை, மார்ச் 8 ஆம் தேதி, சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டமாக ஸ்ட்ரீம் செய்யத் துவங்கியுள்ளது.

இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மன், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘ஏ டெலி பேக்டரி’ நிறுவனம் இந்த சீரிஸை தயாரித்துள்ளது, இந்தத் சீரிஸை இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்போது “ஹார்ட் பீட்” சீரிஸை, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டுகளியுங்கள்.

“அமீகோ கேரேஜ்”  படத்தின்  பத்திரிக்கையாளர் சந்திப்பு !  

People Production House சார்பில் முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், NV Creations நாகராஜன் இணைந்து தயாரிக்க இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’. அனைவரும் ரசித்து மகிழும் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. Action Reaction நிறுவனம் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் தமிழகமெங்கும் இப்படத்தினை வெளியிடுகிறார். இந்நிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வினில்

நடிகர் மகேந்திரன் பேசியதாவது…
நான் என்றும் ஹீரோ இல்லை உங்கள் வீட்டுப் பையன் தான். இந்த 30 வருடத்தில் எனக்கு எப்போதும் உங்கள் ஆதரவு தந்து கொண்டே இருக்கிறீர்கள், அதற்கு நன்றி. கொரோனா காலத்தில் சினிமாவை நினைத்து பயந்து விட்டேன். என்ன செய்யப்போகிறேன் என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தான் இயக்குநர் பிரசாந்த் வந்தார். முதலில் டாக்குமெண்ட்ரி எடுக்கனும் என்றார், நான் தான் படமெடுக்கலாம் என சொன்னேன். சரி என்றார். அவர் அப்பா புரடியூசராக வந்தார். பல நண்பர்களும், அவர் குடும்பத்தினரும் இணைந்து தயாரிக்க முன்வந்தனர். பல கஷ்டங்களுக்கு பிறகு, இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இங்கிருக்கும் எல்லோருமே பணத்திற்காக வேலை செய்யவில்லை. இந்தப்படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இப்படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி.  

இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் பேசியதாவது…
இது என் முதல் குழந்தை, என் முதல் படம். முதல் படம் எத்தனை முக்கியம் என அனைவருக்கும் தெரியும். பல கஷ்டங்களுக்கு பிறகு தான், இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளோம். ஒரு நல்ல படமாக உருவாக்கியிருக்கிறோம். ஒரு கதை எழுதிவிட்டு காத்திருந்தபோது, மகேந்திரன் அண்ணாவைச் சந்தித்தேன் அங்கு தான் இப்படம் ஆரம்பித்தது.  இப்படத்திற்காக பல தயாரிப்பாளர்களைச் சந்தித்தோம், ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை. அப்புறம் பல நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கலாம் என்றார்கள். பலரும் இணைந்து தான் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். மகேந்திரன் ஒரு நடிகராக இல்லாமல், தன் படமாக இன்று வரை தாங்கி வருகிறார். அவருக்கு என் நன்றி. ஜி எம் சுந்தர் அண்ணா மிக முக்கியமான பாத்திரம் செய்துள்ளார். கமல் சார் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் நடித்தவர் அவர். ஷீட்டிங்கில் அவரிடம் எனக்குத் தேவையானதை எப்படி வாங்குவது என்ற தயக்கம் இருந்தது, ஆனால் என்னிடம் மிக எளிமையாகப் பழகி, படத்திற்கு தேவையானதைத் தந்தார். தாசரதி என் முதல் ஷார்ட் ஃபிலிமிலிருந்து இருக்கிறார், நல்ல நண்பர் நல்ல ரோல் செய்துள்ளார். நாயகி ஆதிரா நன்றாக நடித்துள்ளார். இந்த படத்தின் பெரிய பலம் பாலமுரளி அண்ணாவின் இசை தான். அவருக்கும் எனக்கும் நல்ல வேவ் லென்த் இருந்தது. பாடல்களுக்கு இப்போது கிடைத்து வரும் வரவேற்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. கு கார்த்திக் பாடல் தரும்போதே ஐந்து சரணம் தந்துவிடுவார், அவருக்கு என் நன்றி. விஜய குமார் மிகச் சிறந்த நண்பர். அவருடன் ஆறு வருட பயணம், அட்டகாசமான ஒளிப்பதிவை தந்துள்ளார். அசோக் அண்ணா, நல்ல ஆக்சன் ப்ளாக் தந்துள்ளார். எல்லோருமே எனக்காகக் கடுமையான உழைப்பைத் தந்துள்ளனர். இந்த ட்ரெய்லருக்கு வாய்ஸ் தந்த மைம் கோபி அண்ணாவிற்கு நன்றி. இப்படம் 3 வருட உழைப்பு, என் அப்பா இல்லை என்றால் இது எதுவும் நடந்திருக்காது. இப்படம்  கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

NV Creations தயாரிப்பாளர் நாகராஜன் பேசியதாவது…
இங்கு வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள். இப்படத்தின் இயக்குநர் என் மகன். அமீகோ என்றால் என்ன என்று அவனிடம் கேட்டேன்,  அமீகோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் ஃபிரண்ட் என அர்த்தம் என்றார். இது நண்பர்கள் சம்பந்தமான படம். மாஸ்டர் மகேந்திரன் ஒரு நடிகராக எங்களிடம் அறிமுகமானார், இன்று எங்கள் குடும்பத்தில் ஒருவராகிவிட்டார். படத்தில் பணியாற்றிய அனைவரும் ஒரு குடும்பமாக தான் பழகுகிறார்கள். இந்தப்படம் எடுக்கும் போது தான் ஒரு படம் எடுப்பது எத்தனை கடினமானது என்பது புரிந்தது. என் மகன் எடுத்துள்ள இந்த படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.  

Action Reaction நிறுவனம் சார்பில் ஜெனிஷ் பேசியதாவது..
அமீகோ பெயரே இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. விஷுவல்களும் சூப்பராக வந்துள்ளது. வியாபாரத்திற்காக பேசும்போது எல்லா இடத்திலும் நல்ல வரவேற்பு உள்ளது. திரை வட்டாரத்தில் நல்ல பெயரை இந்தப் படம் பெற்றுள்ளது. ஆக்சன் ரியாக்சன் சார்பில், இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறோம். நல்ல டீம் மிகச்சிறந்த ஆதரவைத் தந்தார்கள். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நாயகி ஆதிரா ராஜ் பேசியதாவது…
2 வருடங்களாக நாங்கள் காத்திருந்த படம், இப்போது ரிலீஸுக்கு ரெடி ஆகியிருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப் படம் ஆரம்பிக்கும் போது, எனக்கு தமிழ் தெரியாது, இப்போது கொஞ்சம் பேச ஆரம்பித்து விட்டேன். இந்தப் படம் எல்லோரும் இணைந்து ஒரு குடும்பமாக இணைந்து  மகிழ்ச்சியுடன் உருவாக்கியுள்ளோம். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

நடிகர் முரளி பேசியதாவது…
மகேந்திரன் ஃபிரண்டாக தான் இங்கு வந்தேன். இந்தப்படத்தின் கனெக்டிங் பீப்பிளாக அவன் தான் இருந்திருக்கிறான். எல்லா நண்பர்களுக்கு வாய்ப்பு வாங்கி தந்துள்ளான், அவருக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் இல்லை அப்பா என்று  தான் சொல்ல வேண்டும். எல்லாருக்கும் இப்படி ஒரு அப்பா கிடைக்க மாட்டார்கள், எனக்கு இயக்குநரைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது. இயக்குநர் பிரசாந்தும் நானும் நிறையப் பேசியிருக்கிறோம், நல்ல படம் எடுத்துள்ளார். கண்டிப்பாக இந்தப்படம் உங்களை ஆச்சரியப்பட வைக்கும் அனைவருக்கும் நன்றி.  

ஒளிப்பதிவாளர் விஜய குமார் சோலைமுத்து பேசியதாவது…
இது என் முதல் மேடை. இந்த வாய்ப்பிற்காக இயக்குநருக்கு என் நன்றி. ஒரு நல்ல படம். எல்லோரும் கடினமாக உழைத்துள்ளனர். இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் பாலமுரளி பாலு பேசியதாவது…
மகேந்திரன் என் தம்பி மாதிரி. அவன் தான் எனக்கு போன் செய்து, ஒரு நல்ல கதை நீங்கள் இசையமைக்க வேண்டும் எனக் கேட்டான். அவனுக்குப் பண்ணாமல் எப்படி ? அப்படி தான் நான் இப்படத்திற்குள் வந்தேன். அதன் மூலம் இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் எனும் இன்னொரு தம்பி கிடைத்தார். தயாரிப்பாளர் முரளி மிகப்பெரிய ஆதரவு தந்தார். அவரோடு சென்னையில் எல்லா ஹோட்டல்களிலும் சாப்பிட்டிருக்கிறேன். இந்த படத்தில் பணியாற்றியது மிக இனிமையான அனுபவமாக இருந்தது. கு கார்த்திக் எல்லாப்பாடல்களையும் அழகாக எழுதித் தந்தார். எப்போதும் ஒரு பாடலுக்கு 5 சரணங்கள் எழுதித் தந்து விடுவார். படம் மிக நன்றாக வந்துள்ளது படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

ஸ்டன்ட் இயக்குநர் டான் அசோக் பேசியதாவது…
அனைவருக்கும் என் வணக்கம். அமீகோ கேரேஜ் பற்றிச் சொல்ல நிறையச் சொல்ல இருக்கிறது. விஷுவல், பாடல்கள் எல்லாம் அருமையாக வந்துள்ளது. ஆக்சன் காட்சிகள் எல்லாம் சூப்பராக வந்துள்ளது. மகேந்திரன் எந்த ஷாட்டாக இருந்தாலும், ரெடியாக இருப்பார். நிறைய ஒத்துழைப்புத் தந்தார் ஆக்சன் காட்சிகளில் அசத்தியுள்ளார். இயக்குநர் பழகப் பழக ஒரு குடும்பமாகவே ஆகிவிட்டார். இப்போது அவர் வீட்டில் நாங்கள் சமைத்து சாப்பிடும் அளவு நெருக்கமாகிவிட்டார். படம் மிக நன்றாக வந்துள்ளது படத்திற்கு உங்கள் ஆதரவை  தாருங்கள்.

பாடலாசிரியர் கு கார்த்திக் பேசியதாவது…
அமீகோ கேரேஜ் மிக ஜாலியாக வேலை பார்த்த படம். இதுவரை இசையமைப்பாளர் பால முரளி உடன் காமெடி கமர்ஷியல் என செம்ம ஜாலியான படமாகத்தான் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் இது ஆக்சன் டிராமா படம், பால முரளியிடம் நமக்கு நல்ல வாய்ப்பு என்றேன். இப்படி ஒரு படத்தில் பணியாற்றியது மிக மகிழ்ச்சியாக இருந்தது. மிக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தோம், பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளது. இப்படத்தைப் பத்திரிக்கையாளர்கள், மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். தயாரிப்பாளர், இயக்குநர் அனைவருக்கும் என் நன்றி .

ஒலிப்பதிவாளர் டோனி பேசியதாவது…
அமீகோ கேரேஜ் மிக நல்ல படமாக வந்துள்ளது. எல்லோரும் திரையரங்கில் இப்படத்தைப் பார்த்து படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் தாசரதி பேசியதாவது…
இது என்னுடைய முதல் மேடை. இயக்குநர் பிரசாந்த் எனக்கு லைஃப் சேஞ்சிங் மொமண்ட் தந்துள்ளார். அவர் என் நண்பன், இங்கு எல்லோருமே நண்பர்கள் தான்.  இது நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய படம். படத்தை அனைவரும் இணைந்து அர்ப்பணிப்புடன் உருவாக்கியுள்ளோம், இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் முரளிதரன் சந்திரன் பேசியதாவது…
இயக்குநர் பிரசாந்த் இந்த கேரக்டர் பற்றிச் சொன்னபோது, எனக்கு நடிக்கத் தெரியாது என்றேன். வாங்கப் பார்த்துக் கொள்ளலாம் என்றார். என்னை நடிகனாக்கி விட்டார். இப்போது எல்லோருமே நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டார்கள், இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

ஶ்ரீக்கோ உதயா பேசியதாவது…
ஊடக நண்பர்களுக்கு நன்றி. கொரோனா டைமில் மகேந்திரன் போன் செய்து 2 நாள் வேலை இருக்கிறது வாருங்கள் என்றார். என்னை மிக நன்றாகக் கவனித்தனர். கொரோனா சமயம் ஆனால் எல்லோரையும் அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார்கள். அமீகோ கேரேஜில் நானும் நடித்திருப்பது மகிழ்ச்சி. பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளது. இசையமைப்பாளர் பாடலாசிரியர் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.  இயக்குநர் இசை ஞானம் கொண்டவர், படத்தையும் அருமையாக எடுத்துள்ளார். இப்படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.

நடிகர் மதன கோபால் பேசியதாவது…
எங்கள் குழுவே அமீகோ கேரேஜ் படத்திற்காக வெயிட் பண்ணிக்கொண்டிருந்தோம். இந்த படக்குழு எனக்கு புதியது, மகி மட்டும் தான் நண்பர். ஆனால் படப்பிடிப்பு முடிந்து, இப்போது எல்லோரும் குடும்பமாகிவிட்டார்கள். இந்த டீமில் நானும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

சக்தி கோபால் பேசியதாவது…
இந்தப் படம் ஃபிரண்ட்ஸ் இல்லாவிட்டால் நடந்திருக்காது. இயக்குநர் பிரசாந்த் தான் அனைவருக்கும் வாழ்க்கை தந்துள்ளார். எல்லோரும் கடுமையாக உழைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.  

கேங்ஸ்டர் வாழ்வை சுற்றிய ஒரு இளைஞனின் பயணமாக,  சுவாரஸ்யமான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது அமீகோ கேரேஜ். இப்படத்தில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, GM சுந்தர், தசரதி,  அதிரா ராஜ், ஶ்ரீக்கோ உதயா, முரளிதரன் சந்திரன், மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை முரளி ஶ்ரீனிவாசன் தயாரித்துள்ளார். ராமசந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஷ்வின் குமார் VG இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்க, விஜய குமார் சோலைமுத்து ஒளிப்பதிவு செய்ய,  ரூபன் எடிட்டிங் செய்துள்ளார்.

இப்படம் வரும் மார்ச் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. Action Reaction நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தினை வெளியிடுகிறது.

ச. பிரேம்குமார், ’96’ படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குனர்.

அன்புக்குரிய ஊடகத்துறை நண்பர்களுக்கு,

வணக்கம்,

நான் ச. பிரேம்குமார், ’96’ படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குனர். கடந்த மார்ச் – 7’ஆம் தேதி ‘Cheyyaru Balu official’ என்ற Youtube Channel’ல், ‘உங்களுக்கு ஆண்மை இல்லீயா, என் பாட்டை யூஸ் பண்ணி இருக்கீங்க.. நாக்க புடுங்கறா மாதிரி கேட்ட இளையராஜா’ என்ற தலைப்பில் ஒரு காணொளி வெளியானது. https://youtu.be/lqdaTuw3FsQ?si=6Z958bJXU5mtTyf. அதில் திரு.செய்யாறு பாலு வெளியான மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் நான் எழுதி இயக்கி 2018-ல் வெளியான 96 திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு நாங்கள் முறையான அனுமதி பெறாதவாறு பேசியுள்ளார்.

குறிப்பாக, ’96 பற்றி பேசும்போது, இசைஞானி இளையராஜா அவர்கள் சொன்னதை மேற்கோள் காட்டியதோடு நிறுத்தாமல், இன்னொரு வார்த்தை, ‘பொ’ என்கிற வார்த்தையை வேற யாராவது இருந்தா யூஸ் பண்ணி இருப்பாங்க’ என்றும் பேசியுள்ளார். மேலும் அதற்கு 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மன்னிப்பு கேட்டதாகவும் சொல்கிறார். வன்மம் நிறைந்த இந்த கருத்துகளுக்கு பதில் சொல்லாமல் என்னால் கடந்து செல்ல இயலவில்லை.

திரு. செய்யாறு பாலு அவர்கள் குறிப்பிட்டுள்ள மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கும், 96 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களுக்கும் Think Music வாயிலாகவும், அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் மூலமாகவும், இரண்டு திரைப்படங்களும் வெளியாவதற்கு முன்னரே அதற்கான அனுமதியை பணம் செலுத்தி பெற்றுவிட்டோம்.

ஒரு மூத்த பத்திரிகையாளராக இருந்துகொண்டு இந்த முக்கியமான தகவலை கூட விசாரிக்காமல், அல்லது அந்த உண்மையை உள்நோக்கத்துடன் மறைத்து பொய் கூறியதேன்? ஒரு காணொளியின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்கு ஒரு செய்தியாளரின் அடிப்படை அறத்தை விட்டுக்கொடுப்பதா?

அந்த காணொளி இசைஞானி இளையராஜா அவர்களை பற்றியது. அவருடைய பெருமையை பேசுவதற்கு அவர் இசையமைத்த ஆயிரம் திரைப்படங்களிலிருந்து ஏதோ ஒரு பாடலே போதுமானது. அப்படி இருக்க, முறையாக ஒரு செயலை செய்த எங்களை சிறுமைப்படுத்துவதேன்? ஒன்றை உயர்த்த இன்னொன்றை தாழ்த்த வேண்டும் என்பது அடக்குமுறை அல்லவா…..

மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் 96 திரைப்படங்களில் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தினோம் என்பதை விட, அது அவருடைய இசைக்கான எங்கள் சமர்ப்பணம். இசைஞானியின் இசையை கேட்டு பிறந்து, வளர்ந்த தலைமுறை நாங்கள்.

’96 பற்றி இசைஞானி இளையராஜா Daring’ஆக ஒரு அறிக்கை வெளியிட்டார் என்று திரு. செய்யாறு பாலு சொல்கிறார்.

தவறு,

அது ஒரு நேர்காணலில் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில். அதற்கான உரிய விளக்கத்தை நாங்கள் கொடுத்த பிறகு அந்த சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டது.

மேலும், அதற்கு ’96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் மன்னிப்பு கேட்டதாக ஒரு பொய்யான தகவலையும் சொல்கிறார் திரு. செய்யாறு பாலு. முதலில் 96 படத்தின் இசையமைப்பாளர் பெயர் கோவிந்த் வசந்தா. கோவிந்த் வசந்த் அல்ல. அடுத்ததாக அவர் எந்த மன்னிப்பும் கேட்கவே இல்லை.

திரு. செய்யாறு பாலு எங்களைப் பற்றிய உண்மையைதான் சொல்ல வேண்டும் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை. ஆனால், எங்களைப் பற்றி பொய் சொல்ல வேண்டாம்.

சினிமா என்பது திரைத்துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமானது அல்ல. சினிமாவைப் பற்றி விமர்சித்து செய்தி வழங்கும் செய்தியாளர்களுக்கும் அது சொந்தமானதுதான்.

சினிமாவை பாதுகாப்பது இருவரின் கடமைதான்.

கடந்த காலத்தில் 96 திரைப்படத்திற்கு வந்த ஒரு முக்கியமான பிரச்சினையை, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின் துணையோடுதான் தீர்வு கண்டு, மீண்டு வர முடிந்தது.

அந்த நன்றியை நான் மறக்கவே மாட்டேன்.

ஐந்து வருடங்கள் கடந்தும், மீண்டும் ஒரு பிரச்சினை திரு. செய்யாறு பாலுவின் மூலமாக வந்துள்ளது.

தன்னிலை விளக்கம் அளிக்கவும், உண்மையை நிலைநாட்டவும் எனக்கு வேறு வழி தெரியவில்லை,உங்களையே மீண்டும் நாடுகிறேன்.

உண்மை விளங்கட்டும்.

நன்மை விளையட்டும்.

பேரன்புடன்,

ச.பிரேம்குமார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் – அனுபமா பரமேஸ்வரன்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் – அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கிறார். இந்த திரைப்படம்- அப்ளாஸ் என்டர்டெய்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இடையேயான பல திரைப்படத் தயாரிப்பின் கூட்டு ஒப்பந்தத்தின் தொடக்கத்தை குறிப்பிடுகிறது.

கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரும் வெற்றியை பெற்ற ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்- தமிழின் தரமான திரைப்படங்களை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட படைப்பாளி பா. ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் அதிதி ஆனந்த்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பல திரைப்படங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் தொடக்கமாக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் விளையாட்டை மையப்படுத்திய திரைப்படத்தை, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ என தொடர்ந்து வெற்றி பெற்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாரிக்கிறது.

படைப்பாளி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படத்தின் பணிகள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கியது. கபடி விளையாட்டை மையப்படுத்திய படைப்பாக உருவாகிறது. அனைத்து தரப்பிலும் எதிரிகள் சூழ்ந்த இந்த உலகத்தில் துணிச்சலையும், தைரியத்தையும் வாழ்வியலாக கொண்ட இளைஞனின் கதையை சொல்கிறது இந்த திரைப்படம். இந்தக் கதை- ஒரு மனிதன் விளையாட்டையே துப்பாக்கி போன்ற வலிமை மிக்க ஆயுதமாக ஏந்தி, வன்முறையற்ற.. அமைதியான.. மரணமற்ற வாழ்க்கையை வாழ்வதற்காக போராடும் போராட்டத்தை விவரிக்கிறது.

தனித்துவம் மிக்க நட்சத்திர நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘பிரேமம்’, ‘குரூப்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.

திரைப்படத்தைப் பற்றி அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சமீர் நாயர் பேசுகையில், ” நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடனான எங்களது ஒத்துழைப்பு.. அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்டுகான ஒரு அற்புதமான அத்தியாயத்தை குறிக்கிறது. இந்தக் கூட்டணி ஒரு அசாதாரணமான விளையாட்டை மையப்படுத்திய திரைப்படத்துடன் தொடங்கி, தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை தேர்வு செய்வதில் எங்களது அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டுகிறது. இயக்குநர் மாரி செல்வராஜின் திறமை மற்றும் திறன் மிகு தொழில்நுட்ப குழுவினரின் ஆதரவுடன் தென்னிந்திய சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தையும் அமைக்கிறது” என்றார்.

நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர்கள் பா.ரஞ்சித் மற்றும் அதிதி ஆனந்த் பேசுகையில், ” பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நீலம் ஸ்டுடியோஸ், மாரி செல்வராஜுடனும் இணைந்து பணியாற்றுவது உற்சாகமாக இருக்கிறது. அர்த்தமுள்ள சினிமா மற்றும் உண்மையான கதைகளுக்கான எங்களின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டு காட்டும் வகையில் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்டுடன் இந்தப் பயணத்தை மேற்கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றனர்.

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், ” பரியேறும் பெருமாள்- பா ரஞ்சித் அண்ணாவுடன் நான் இணைந்த முதல் திரைப்படம். இப்படம் இவ்வளவு உயரம் எட்டியதற்கு பா. ரஞ்சித்தும் ஒரு முக்கிய காரணம். என்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு அது ஒரு படிக்கல்லாக அமைந்தது. அவருடன் மீண்டும் ஒரு முறை இணைந்து பணியாற்றுவது உற்சாகத்தை அளிக்கிறது. இப்போது என்னுடைய ஐந்தாவது படத்திற்காக அவருடனும், மற்றொரு வலிமையான கூட்டாளியான அப்ளாஸ் என்டர்டெய்ன்மெண்ட்டுடனும் இணைந்திருக்கிறேன். மீண்டும் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. பரியேறும் பெருமாள் முதல் என்னுடைய அனைத்து படைப்புகளையும் அதிதி ஆனந்த் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். அவர் ஒரு நல்ல தோழியும் கூட. மேலும் அவருடைய உள்ளார்ந்த ஆதரவுடன் இந்தத் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திரைப்படம் கபடி என்னும் விளையாட்டின் வேர்களைத் தேடிச் செல்லும் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இருக்கும். மேலும் துருவுடன் இணைந்து பணியாற்றுவது என்பதும் மகிழ்ச்சி. இந்தத் திரைப்படத்தில் வலிமையாகவும்.. திறமையான இளைஞனாகவும் துருவ் விக்ரம் வித்தியாசமான கோணத்தில் திரையில் தோன்றுவார். இந்த திரைப்படம் நம் அனைவருக்கும் ஒரு முக்கியமான மைல் கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை” என்றார்.

அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பற்றி…

தொலைக்காட்சி தொடர், தொலைக்காட்சி நிகழ்ச்சி, இணைய தொடர், திரைப்படம், ஆவண படங்கள் மற்றும் அனிமேஷன் படைப்புகளுக்கு உள்ளடக்கம் மற்றும் கதை கருவினை வழங்கும் முன்னணி ஸ்டூடியோவாக அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் திகழ்கிறது. இது ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு பிரிவாக இயங்குகிறது. மேலும் ஊடகத்துறை நிபுணரான சமீர் நாயரின் வழிகாட்டலில் செயல்படுகிறது.
இந்த ஸ்டுடியோ ஏராளமான தொடர்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. வெவ்வேறு ஜானரில்… வெவ்வேறு மொழிகளில்… நிகழ்ச்சிகளையும் வழங்கி இருக்கிறது. குறிப்பாக ‘ருத்ரா : தி எட்ஜ் ஆப் டார்க்னெஸ்’, ‘கிரிமினல் ஜஸ்டிஸ்’, ‘ஸ்கேம் 1992 : தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி’, ‘ஸ்கேம் 2003 : தி தெஹல்கி ஸ்டோரி’, ‘உன்டேகி’, ‘கஃபாஸ்’ என பல தொடர்கள் பார்வையாளர்களின் பாராட்டுகளையும், வரவேற்பையும் பெற்றது. அத்துடன் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், நந்திதா தாஸ் இயக்கத்தில் நடிகர் கபில் சர்மா நடிப்பில் ‘ஸ்விகாடோ’ எனும் திரைப்படத்தை தயாரித்து, உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியிட்டு, விமர்சன ரீதியாக பெரும் பாராட்டையும் பெற்றது. இதனுடன் இந்த நிறுவனத்தின் முதல் தமிழ் சினிமாவான ‘போர் தொழில்’ திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற்றதுடன், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் அமோக வரவேற்பையும் பெற்றது. மேலும் அபர்ணா சென் இயக்கத்தில் உருவான ‘தி ரேப்பிஸ்ட்’ எனும் திரைப்படம் அண்மையில் பூஸன் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு மதிப்புமிக்க கிம் ஜிஜோக் விருதை வென்றது. அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் – டிஜிட்டல் தள உலகில் முன்னணியில் திகழும் நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, சோனி லைவ், எம் எக்ஸ் ப்ளேயர், ஜீ5 மற்றும் வூட் செலக்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஆக்கபூர்வமான படைப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்களிப்பை செய்து வருகிறது.

நீலம் ஸ்டுடியோஸ் பற்றி…

இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோரால் தொடங்கப்பட்ட நீலம் ஸ்டுடியோஸ் – புதிய இளம் திறமையாளர்களை கண்டறிந்து, அவர்களின் திறமையை.. நிலையான வணிக நடைமுறைகளுடன் உருவாக்கி, வெற்றி பெற வைப்பதுடன்.. நீலம் சினிமாடிக் யுனிவர்ஸ் மூலம் இந்தியத்தனத்துடன் கூடிய சுதந்திரமான உள்ளடக்கத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர அடையாளங்களில் ஒருவராக ஜொலிக்கும் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘நட்சத்திரங்கள் நகர்கிறது’ ஆகிய படைப்புகள் வெளியாகி இருக்கிறது. விரைவில் சீயான் விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ எனும் திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

அதிதி ஆனந்த் – தொழில் முனைவோர், லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளராவார். அவரது தயாரிப்பில் ‘தேரே பின்லேடன்’, ‘நோ ஒன் கில்ட் ஜெசிக்கா’, ‘பான் சிங் தோமர்’, ‘சில்லார் பார்ட்டி’ மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான ‘தி ஜேர்னி ஆப் த ஃபக்கீர்”, ‘பெரனீஸ் பெஜோ’, ‘பர்கத் அப்ட்டி’ மற்றும் ‘எரின் மோரியாரிட்டி’ ஆகிய திரைப்படங்கள் உருவாகி இருக்கிறது.

பா. ரஞ்சித் – அதிதி ஆனந்த் ஆகிய இருவரும் இணைந்து, இயக்குநர் பிராங்கிளிங் ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘ரைட்டர்’ எனும் விமர்சன ரீதியாகவும், வணிகரீதியாகவும் பாராட்டைப் பெற்ற திரைப்படத்தை தயாரித்தனர். மேலும் நீலம் ஸ்டுடியோஸ் சார்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, தினேஷ் நடிப்பில் உருவான ‘ஜே பேபி’ எனும் திரைப்படம் அண்மையில் வெளியாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து கலையரசன், தினேஷ், ஷபீர், ரித்விகா மற்றும் வின்சு ரேச்சல் ராம் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தண்டகாரண்யம்’ எனும் திரைப்படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது.

‘ரெபல்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெபல்’. இப்படம் வரும் மார்ச் 22ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..,

ஸ்டுடியோ கிரீன் நிர்வாக இயக்குநர் தனஞ்செயன் பேசியதாவது…
ரெபெல் திரைப்படம் இயக்குநர் நிகேஷ் உடைய ஒரு கனவு. இந்திய சினிமாவின் ரெபெல் ஜீவியை வைத்து ஒரு அருமையான படத்தைத் தந்துள்ளார். ஜீவி மிகப்பெரிய போராளி, தொடர்ந்து இசை, நடிப்பு என அவரது சுறுசுறுப்பு உழைப்பு, அர்ப்பணிப்பு அளப்பரியது. இப்படத்திற்கு அவர் தந்த உழைப்பு மிகப்பெரியது. அவரைத்திருப்திப் படுத்துவது தான் எங்கள் வேலையாக இருந்தது. தயாரிப்பாளர் ஞானவேல் இங்கு வேலை காரணங்களால் வரமுடியவில்லை. மும்பையில் ஸ்டூடியோ க்ரீன் சார்பில் சில திரைப்படங்கள் ஆரம்பிக்கிறது அதனால் தான் வரமுடியவில்லை. அவருக்கு இந்த வருடம் மிகச் சிறப்பான வருடமாக அமையும். இங்கு வாழ்த்த வந்துள்ள எங்கள் இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களுக்கு நன்றி. ஒரு இயக்குநராக மட்டுமில்லாமல், அவர் ஒரு நிறுவனம் மூலமாக 10க்குமேற்ப்பட்ட அறிமுக இயக்குநர்களைத் திரை உலகிற்குத் தந்துள்ளார். அவரளவிற்கு இல்லாவிட்டாலும் அது போல் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இந்தப்படம் மூலம் நிகேஷ் பெரிய அளவில் சாதிப்பார். 1980களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இந்தப்படம் உருவாகியுள்ளது. ஜீவி பிரகாஷ் அட்டகாசமான ஆக்சன் செய்துள்ளார். இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்.

இயக்குநர் நிகேஷ் பேசியதாவது…
நான் கதை சொல்லப் போனபோது எனக்கு 24 வயது தான், ஆனால் ஞானவேல் ராஜா சார் என்னை நம்பி கதை கேட்டார். 10 நாள் ஷீட் செய்து, அவரிடம் காட்டினேன். அதன் பிறகு படம் முடியும் வரை, என்னிடம் கேள்வியே கேட்கவில்லை. ஞானவேல் ராஜா சாருக்கு இந்த நேரத்தில் என் நன்றியைக் கூறிக்கொள்கிறேன். இப்படத்தின் அனைத்து பணிகளிலும் எப்போதும் உறுதுணையாக இருந்த தனஞ்செயன் சார், அவருக்கு நன்றி. ஜீவி பிரகாஷ் அண்ணா என்னை நம்பி இந்தக்கதை கேட்டார், கேட்டவுடன் தமிழுக்கான கதையில் நான் நடிக்கிறேன் என்று வந்தார். அவருக்கு என் நன்றி. இந்த மொத்தப்படமும் அவர் மீது தான் பயணிக்கிறது. நாயகி மமிதா பைஜு, மிக ஆழமான அழுத்தமான கேரக்டர், ஆனால் அதைப் புரிந்து நடித்த தந்தார் அவருக்கு என் நன்றிகள். பா ரஞ்சித் அண்ணா என் படத்தின் பூஜைக்கு வந்தார், இப்போது இங்கு வாழ்த்த வந்துள்ளார் நன்றிகள். கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், என ஒவ்வொருவரும் அற்புதமாக நடித்துள்ளனர். அருண் மிக அற்புதமான ஒளிப்பதிவைத் தந்துள்ளார்.
உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் நன்றி.

பின்னணி இசை கலைஞர் ஓஃப்ரோ பேசியதாவது…
ஜீவி மற்றும் ஞானவேல் சார் இருவருக்கும் நன்றி. அவர்கள் தான் என்னை இப்படத்திற்குள் அழைத்து வந்தார்கள். பா ரஞ்சித் சார் அறிமுகப்படுத்திய கலெக்டிவ் காஸ்ட்லெஸ் மூலம் தான் நான் அறிமுகமானேன். அவருக்கு என் நன்றிகள். இந்தப்படத்தில் 5 மாதம் வேலை பார்த்துள்ளோம். மிகச்சிறப்பான படைப்பு, உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் பேசியதாவது…
எனக்கு இந்த வாய்ப்பளித்த ரஞ்சித் சார் மற்றும் இயக்குநர் நிகேஷ் சாருக்கு நன்றி, என்னுடைய குழுவினருக்கு நன்றி, ஜீவி பிரகாஷ் சாருடன் பணி புரிந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, இப்படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.

கலை இயக்குநர் உதய் குமார் பேசியதாவது…
முதலில் இந்தப் படத்தில் நான் பணி புரிய முக்கிய காரணம், தயாரிப்பாளர் சார் அவருக்கு எனது நன்றி. இந்தப் படத்தின் கதை 1980 இல் நடப்பது போல் இருந்தது, அந்த காலகட்டத்தைத் திரையில் கொண்டுவருவது எங்களுக்கு அது சவாலாக இருந்தது. ஒவ்வொரு ஃபிரேமும் பார்த்துப் பார்த்து உருவாக்கியுள்ளோம். இயக்குநர் நிகேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள், கண்டிப்பாகப் படம் உங்களுக்கு ஒரு புதுமையான உணர்வைக் கொடுக்கும், நன்றி.

நடிகர் ஆதித்யா பாஸ்கர் பேசியதாவது…
இந்தப்படத்தின் கதை 2 1/2 வருடம் முன்னாடி முடிவானது. இந்த 2 1/2 வருடங்களில் இப்படத்திற்காகப் போராடிப் படத்தை அருமையாகக் கொண்டு வந்துள்ள இயக்குநர் நிகேஷ் அவர்களுக்கு நன்றி. ஜீவி அண்ணா அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் அவர் நேரில் தம்பி போல் என்னைப் பார்த்துக்கொண்டார். ரஞ்சித் அண்ணாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்களை வாழ்த்த வந்த அவருக்கு நன்றி. மமிதா பைஜு இன்னும் நிறைய வெற்றிப்படங்கள் தர வாழ்த்துக்கள். நிறைய மலையாள நண்பர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். படம் மிக அருமையாக வந்துள்ளது எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.

சரிகம நிறுவனம் சார்பில் ஆனந்த் பேசியதாவது…
ரெபெல் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு மக்களிடம் உருவாகியுள்ளது, இப்படத்தின் விழாவில் நாங்களும் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது , பாடல்கள் எல்லாம் மிக அருமையாக வந்துள்ளது. இசையமைப்பாளருக்கும் இயக்குநருக்கும் எனது வாழ்த்துகள். ஒட்டு மொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துகள் நன்றி.

நடிகர் கல்லூரி வினோத் பேசியதாவது..,
ஜீவி பிரகாஷ் சாருக்கு வணக்கம் , இந்தப் படத்தில் நான் தான் இறுதியாகக் கலந்து கொண்ட கதாபாத்திரம், இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமான படம், ரஞ்சித் அண்ணாவை எனக்கு மிகவும் பிடிக்கும் , அவரது படம் போல இந்தப் படமும் ஒரு முக்கியமான அரசியலை மைய்யாமாக வைத்து உருவாகியுள்ளது, அது மட்டுமில்லை அதில் ரசிக்கும்படி பாடல்கள் சண்டைக் காட்சிகள் என அனைத்தும் உள்ளது. இயக்குநர் நிகேஷ் சாருக்கு நன்றி, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கும் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும் நன்றி. ஜீவி பிரகாஷ் சாரின் ரசிகன் நான். வெயில் படத்தின் பாடல்கள் முதல் இன்று வரை அவரது பாடல்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவருடன் பணி புரிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் – நடிகர் சுப்பிரமணிய சிவா பேசியதாவது…
முதல் படம் ஒரு அரசியல்மயப்படுத்தப்பட்ட படமாக, பொதுவுடைமை கருத்தைத் தைரியமாகச் சொல்லும் படமாக இயக்கியிருக்கிறார் நிகேஷ். முதல் படத்தில் இதை செய்வது மிகப்பெரிய விசயம். தமிழை முதல் படத்தில் இவ்வளவு தைரியமாகப் பேசி எடுப்பது பெரிய விசயம் நிறைய ஹீரோக்கள் இதைச் செய்யப் பயந்திருப்பார்கள். ஆனால் மிகத் தைரியமாகச் செய்துள்ள ஜீவிக்கு நன்றி. அவர் சமூகத்தில் சின்ன சின்ன விசயங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். இவரால் மட்டும் தான் இப்படி ஒரு படத்தில் நடிக்க முடியும். இந்தப்படம் பார்க்கும் போது எனக்கு நாயகன் தான் ஞாபகம் வந்தது. அந்தப்படமும் மும்பையில் தமிழ் கஷ்டங்களைப் பேசும் படம். ரனினிக்கு பில்லா மாதிரி ஜீவிக்கு இது பெயர் சொல்லும் ஆக்சன் படமாக இருக்கும். ரஞ்சித் எனக்கு மிகப்பிடித்த இயக்குநர். தமிழ் சினிமாவில் ஆர் பி சௌத்திரிக்குப் பிறகு அதிக இயக்குநர்களை அறிமுகப்படுத்தி வருகிறார் ரஞ்சித் அவருக்கு என் நன்றி. இந்தப்படம் தான் உண்மையான மஞ்ஞும்மள் பாய்ஸ். தமிழ் பசங்க கேரளா போவது தான் கதை. ஒரு அருமையான போராளிப்படம். இப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும் நன்றி.

நாயகி மமிதா பைஜு பேசியதாவது…
இது எனது முதல் தம்ழிப்படம். எனக்கு மனதுக்கு மிக நெருக்கமான படம். ஜீவி பிரகாஷ் சார் அருமையான கோ ஸ்டார். எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். எல்லோரும் அர்ப்பணிப்புடன் வேலை பார்த்துள்ளனர். இந்தப்படம் அருமையாக வந்துள்ளது, தியேட்டரில் எல்லோரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது…
இந்தப்படத்தின் முதல் பிரதியைப் பார்த்தேன், முதல் காட்சியிலேயே ஒளிப்பதிவாளர் மிரட்டி விட்டார். ஒரு போராளிக்கதை அதை தனித்த கண்ணோட்டத்தில், பார்க்கும் திறமையுடன் இருக்கக்கூடியவர், ஆனால் முழுக்க முழுக்க கமர்ஷியலான ஒரு படாமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் நிகேஷ். இது தெறிக்கும் கமர்ஷியல் படம். ஜீவி பிரகாஷ் சார் முழுக்க ஆக்சன் ஹீரோவாக மாறியிருக்கிறார். படத்தில் 200 பேரை அடிக்கிறார். ஆனால் அதை அத்தனை நம்பும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அந்தக்காட்சிக்கு தியேட்டரில் கைதட்டல் பறக்கும். ஞானவேல் சாரின் நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது. இடையில் சில வருடங்கள் அவருக்குப் பல கஷ்டங்கள் இருந்தது, ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்த வருடம் அவருக்கு மிகச் சிறப்பாக இருக்கும். இப்படம் மூலம் ஒரு அருமையான புதுமுக இயக்குநர் கிடைத்துள்ளார். ஜீவியுடன் அடுத்தடுத்து இரண்டு படங்கள் செய்கிறேன். இரண்டுமே அட்டகாசமாக வந்துள்ளது. பா ரஞ்சித் சார் வந்துள்ளார். அவரின் சமீபத்திய தயாரிப்பான ஜே பேபி படத்தை நான் தான் ரிலீஸ் பண்ணியிருக்கிறேன். ஒரு படத்தில் புதுமுகங்கள் பெயர் பெற வேண்டும் என்பதற்காக, உழைக்கும் அவர் பண்பு வியக்கவைத்தது. தொடர்ந்து சிறப்பான படங்களைப் புதுமுகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள். ரெபல் படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.

அம்மா கிரியேஷன்ஸ் T சிவா பேசியதாவது…
ரெபல் படத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன் உண்மையான ரெபல் பா ரஞ்சித் பற்றிப் பேச நினைக்கிறேன், உண்மையில் புதிய முகங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தும் அவரது இந்த புரட்சி பாராட்டுக்கும் மதிப்புக்கும் உரியது. அவரை சரோஜா படத்தில் உதவி இயக்குநராகப் பார்த்தேன். இன்று அவர் பல இயக்குநர்களை உருவாக்குவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது , அவர் மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் , தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்த பட வெற்றியின் மூலம் அடுத்த கட்டத்திற்குப் போவார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை, இந்த படம் அவருக்கு மிகப்பெரிய பொருளையும் வெற்றியையும் ஈட்டித் தரும். இந்தப் படம் 80 கால கட்டங்களில் நடப்பது போலப் படமாக்கப்பட்டுள்ளது , ஒட்டு மொத்த படக்குழுவினரின் உழைப்பு படத்தின் இந்த டிரெய்லரில் தெரிந்து விட்டது, படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள் நன்றி.

இயக்குநர் பா ரஞ்சித் பேசியதாவது…
ரெபெல் படப்புகழ் மேடையா ? என்னைப் புகழும் மேடையா? எனத் தெரியவில்லை, இந்தப்பாராட்டுக்கள் மூலம் நான் என் வேலையைச் சரியாகச் செய்கிறேன் என்று நினைக்கிறேன். இப்படத்தின் விஷுவல், டிரெய்லர், எடிட்டிங் எல்லாமே மிக நன்றாக இருக்கிறது. முல்லைப் பெரியாறு பகுதியில், இரு மாநிலங்கள் கலக்கும் பகுதியில் அங்குள்ள பிரச்சனையைப் பேசும் பின்னணியில், இந்தக்கதையை செட் செய்துள்ளார்கள். வாழ்த்துக்கள். ஜீவியை எனக்கு தங்கலான் மூலமாகத் தான் தெரியும், எல்லோரும் அவரை நல்ல மனிதன் எனச் சொல்வார்கள், ஆனால் நேரில் பழகியபிறகு தான் தெரிந்தது, மிக மிக நல்ல மனது கொண்ட மனிதர். அவர் இன்னும் நிறைய ஜெயிக்க வேண்டும், நிறையப் பேருக்கு நல்லது செய்ய வேண்டும். தயாரிப்பாளர் ஞானவேல் பலரது வாழ்வில் மிக முக்கியமான மனிதராக இருந்துள்ளார். என் வாழ்வில் அவர் முக்கியமானவராக இருந்துள்ளார். இந்தப்படத்தில் நிறைய முக்கியமான மனிதர்கள் பங்கேற்றுள்ளார்கள். எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள். இன்றைய சினிமாவில் சின்ன படங்களைக் கொண்டு சேர்ப்பது, என்பது மிகக் கஷ்டமாகத்தான் இருக்கிறது, இந்த நிலையில் தான், சக்திபிலிம் சக்திவேலன் தொடர்ந்து நல்ல படங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். அவர் இந்த வேலையை நிறையச் செய்ய வேண்டும். நிகேஷ் இப்படத்தில் இருமொழியைப்பிரச்சனையைக் கவனமுடன் பேசியிருப்பார் என நம்புகிறேன். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

நடிகர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் பேசியதாவது…
இங்கு எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் என் நன்றிகள். ரஞ்சித் சாருடன் பணியாற்றும், தங்கலான் மிரட்டலான படமாக வந்திருக்கிறது. அவருடன் அவர் தயாரிப்பில் இன்னொரு படம் செய்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. சக்தி அண்ணா ரெபல் படம் பார்த்துவிட்டார், அதனால் தான் இவ்வளவு சந்தோஷமாகப் பேசுகிறார். இந்தப்படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. தமிழ் பற்றிப் பேசும் கதை, இது என்னிடம் வந்தபோது சந்தோஷமாக இருந்தது, இயக்குநர் நிகேஷ் அவரது சொந்தக்காரரின் வாழ்வில் நடந்த உண்மைக்கதையை எடுத்து திரைப்படமாகச் செய்துள்ளார். மமிதா பைஜு மிக அழகாக இந்த ரோலைச் செய்துள்ளார். ஆதித்யா இந்தப்படத்தின் மையமே அவன் தான். அவனது கேரக்டர் சரியாக அமைந்ததால் தான், இந்தப்படமே சரியாக வந்துள்ளது. அட்டகாசமாகச் செய்துள்ளான். நடிகர் வினோத் போனில் பேச ஆரம்பித்தால் அரை மணிநேரம் ஆனாலும் வைக்க மாட்டான், நல்ல பையன். நன்றாக நடித்துள்ளான். மிக நீண்ட வருடம் கழித்து ஸ்டூடியோ கிரீன் உடன் படம் செய்கிறேன், அவர் தான் டார்லிங்க் படத்தில் நடிகனாக என் வாழ்வை ஆரம்பித்து வைத்தார். அவருக்கு இந்த வருடம் வெற்றிகரமாக அமையும். நிகேஷ் படம் பார்த்துவிட்டு என் தயாரிப்பில் படம் செய்ய அட்வான்ஸ் தந்துள்ளேன். அத்தனை சிறப்பாகச் செய்துள்ளார். ஓஃப்ரோ மிகச்சிறப்பான பின்னணி இசை தந்துள்ளார், சித்துக்குமார் கேரளா சாங் செய்துள்ளார். அதை நான் தான் டிரெய்லரில் வைக்கச் சொன்னேன். வெங்கடேஷ் என்னிடம் எல்லாம் பேச மாட்டான் எப்போதும் பெண்களுடன் தான் பேசுவான். நல்ல நடிகன். எல்லோருமே மிக அர்ப்பணிப்போடு உழைக்கும் போது அந்தப்படம் சிறப்பாக வரும். மமிதா பைஜு அழகாக தன் கதாபாத்திரத்தைப் புரிந்து நடித்துள்ளார். ஆண்டனி அண்ணா லவ் ஸ்டோரி சொல்வார் பிரமிப்பாக இருக்கும். ஒரு குழுவாக எல்லோரும் விரும்பி உழைத்திருக்கும் படம். தமிழ் உரிமை பற்றிப் பேசும் அழுத்தமான படம் உங்கள் எல்லோருக்கும் இப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.

இப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை உதயா கவனிக்க, பட தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டிருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

மகாகவிதை’க்கு ரூ 18 லட்சம் விருது: கவிஞர் வைரமுத்து மலேசியாவில் பெருந்தமிழ் விருது பெற்றார்

‘மகாகவிதை’ நூலுக்காக மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து 1 லட்சம் வெள்ளி (இந்திய மதிப்பில் ரூ 18 லட்சம்) வழங்கின

கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதிய ‘மகாகவிதை’ நூல் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் பாராட்டு பெற்றதை தொடர்ந்து கடல் தாண்டியும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து கவிப்பேரரசு வைரமுத்துவின் சாதனை படைப்பான ‘மகாகவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது’ மற்றும் 1 லட்சம் வெள்ளி (இந்திய மதிப்பில் ரூ 18 லட்சம்) மலேசியாவில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வழங்கின.

தான்ஶ்ரீ டாக்டர் எஸ் .ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் முன்னிலையில் கோலாலம்பூரில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது மற்றும் பரிசுத் தொகை கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டது. பஞ்சபூதங்களை பற்றி விரிவாக பேசும் ‘மகாகவிதை’ நூலை படித்து மகிழ்ந்த மலேசிய பல்கலைக்கழக தமிழ் அறிஞர்கள் ஐந்து பேர் நூல் குறித்து சிறப்புரை வழங்கினார்கள்.

நீர் குறித்து இஸ்லாமிய கல்விக் குழுத் தலைவர் டத்தோ ஶ்ரீ இஃபாலும், காற்று குறித்து மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை பேராசிரியர் முனைவர் இராஜேந்திரனும், தீ குறித்து சுலுத்தான் இதுரீசு கல்வியல் பல்கலைக்கழகம்
தலைவர், மலேசியத் தமிழ்ப் புலவர் சங்கத்தை சேர்ந்த முனைவர் மனோன்மண தேவி அண்ணாமலையும், பூமி பற்றி மேனாள் காவல்துறை ஆணையர்
புலவனின் புவி காக்கும்
வேட்கை மதிப்புமிகு டத்தோ ஶ்ரீ
தெய்வீகன் ஆறுமுகமும், ஆகாயம் குறித்து மலேசியத் தமிழ்நெறிக் கழகம் தேசியத் தலைவர் தமிழ்ப்பெருந்தகை இரா திருமாவளவனும் விரிவாக பேசி கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்பை வெகுவாக பாராட்டினர்.

இவ்விழாவில் தமிழ் அறிஞர்கள், படைப்பாளிகள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

விருதினைப் பெற்றுக் கொண்டு ஏற்புரை ஆற்றிய கவிப்பேரரசு வைரமுத்து, மலேசிய தமிழ் இலக்கிய காப்பகம் மற்றும் தமிழ் பேராயத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியவர்களுக்கும் பங்கேற்ற அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்காக சமீபத்தில் மலேசியா வந்தடைந்த கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு
‘டத்தோ’ ஶ்ரீ எம் சரவணன் தலைமையில் விமான நிலையம் முதல் தங்கி இருக்கும் ஹோட்டல் வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


‘கார்த்தி26 ‘ பட தொடக்கம்.

‘விழாவின் காணொளி வெளியீடு!

கார்த்தியுடன் இணையும் இயக்குநர் நலன் குமாரசாமி!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 27ஆவது படத்தில் கார்த்தி!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் ‘கார்த்தி 26’ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழாவுடன் தொடங்கியது என்றும், இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது என்றும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

கதை சொல்லும் உத்தியில் புதிய பாணியை பின்பற்றி வெற்றி பெற்ற படைப்பாளியான நலன் குமாரசாமி இயக்கத்தில், முதன் முதலாக கார்த்தி இணைந்திருப்பதாலும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சர்வதேச தர முத்திரையுடன் தயாராவதாலும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

‘கல்கி 2898 AD’ படத்தில் ‘பைரவா’வாக நடிக்கிறார் பிரபாஸ்.

‘கல்கி 2898 A.D.’ படத்தில் ‘பைரவா’வாக பிரபாஸ் !!

மகா சிவராத்திரியின் மங்களகரமான நிகழ்வினைக் கொண்டாடும் வகையில், முன்னணி படைப்பாளி நாக் அஸ்வின் இயக்கத்தில், இதிகாச கதையின் அடிப்படையில் உருவாகும் ‘கல்கி 2898 A.D’ படத்திலிருந்து, ஒரு அற்புதமான அப்டேட் ஒன்றை, தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்களின் வழியே, தயாரிப்பாளர்கள், சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகும் இப்படத்திலிருந்து, முன்னணி நடிகர் பிரபாஸின் கதாபாத்திரத்தின் பெயரை அறிவித்துள்ளனர். ‘கல்கி 2898 A.D.’ படத்தில் ‘பைரவா’ என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார் பிரபாஸ். ‘பைரவா’வை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, படக்குழுவினர் அனைவருக்கும் மகா சிவராத்திரி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்!. படத்திலிருந்து வெளியான அற்புதமான அப்டேட், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபாஸ் ரசிகர்கள் இணையம் முழுக்க இந்த செய்தியினைப் பகிர்ந்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த செய்தியினை சமூக ஊடகங்களில் ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் ‘பைரவா’ படத்தைப் பகிர்ந்து, காசியின் எதிர்கால தெருக்களிலுருந்து, ‘கல்கி 2898 AD’ இன் பைரவா உங்களுக்காக என தெரிவித்துள்ளது படக்குழு.

Prabhas #ki2898ADonMay9”

புகைப்படத்தின் ஒவ்வொரு சிறு அம்சமும் முழுக்க முழுக்க மிரட்டலாக இருக்கிறது. முழுமையான கறுப்பு நிற ஆடையுடன், தலையில் கேப்புடன், தொழிற்சாலை பின்னணியில், பிரபாஸ் அட்டகாசமாக அமர்ந்திருக்கும் தோற்றம், படத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.

Check it out here:
https://x.com/kalki2898ad/status/1766066282846400865?s=46

சமீபத்தில்தான் நடிகர் பிரபாஸ், நடிகை திஷா பதானி, இயக்குநர் நாக் அஸ்வின் மற்றும் தயாரிப்பாளர் பிரியங்கா தத் ஆகியோர் இப்படத்தின் ஒரு பாடலைப் படமாக்க இத்தாலிக்குச் சென்றிருந்தனர்.

இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படம், ஒரு பன்மொழித் திரைப்படமாக இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகிறது. புராணக் கதைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் நடக்கும் சயின்ஸ் பிக்சன் கதையாகும். இப்படம் மே 9, 2024 அன்று பான்-இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 300 மில்லியன் நிமிடங்களைக் கடந்து சாதனை !!

~தி கேரளா ஸ்டோரி ZEE5 இல் தென்னிந்தியப் பிராந்தியத்தில் அதிகம் பார்க்கப்பட்ட ஹிந்தித் திரைப்படமாகச் சாதனை படைத்துள்ளது தி கேரளா ஸ்டோரி திரைப்படம்~

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5 தளம்,
சமீபத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தினை, உலகளவில் டிஜிட்டல் வெளியீடு செய்தது. இப்படம் தென்னிந்தியப் பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்கச் சாதனையைச் செய்துள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், ஒரு அழுத்தமான படைப்பாக அனைவராலும் பாராட்டைப் பெற்றது. பிப்ரவரி 16 ஆம் தேதி உலகம் முழுக்க டிஜிட்டல் வெளியீடாக வெளியான இப்படம், வெளியான இரண்டு வாரங்களுக்குள் 300 மில்லியன் பார்வை நிமிடங்களைத் தாண்டியது மட்டுமல்லாமல், இந்திய நாட்டின் தென் பகுதியில் குறிப்பாகத் தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் அதிகம் பார்க்கப்பட்ட ஹிந்தித் திரைப்படமாகச் சாதனைப் படைத்துள்ளது. விபுல் அம்ருத்லால் ஷாவின் தயாரிப்பில், சுதிப்தோ சென் இயக்கிய இப்படம், கேரளாவில் இளம் இந்துப் பெண்களைத் தீவிரவாதிகளாக ஆக்கி, மதமாற்றம் செய்வதாகக் கூறப்படும் உண்மைச் சம்பவங்களைச் சுற்றி, அமைக்கப்பட்ட அழுத்தமான படைப்பாகும்.

இப்படம் திரையரங்கில் வெளியானபோது, ​​பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது டிஜிட்டல் வெளியீட்டிலும் அதன் வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறது. உலகளாவிய பார்வையாளர்களுக்குச் சிறப்பான படைப்புகளைத் தொடர்ச்சியாக வழங்கி வரும் ZEE5 இன் மகுடத்தில் மற்றொரு கிரீடமாக அமைந்துள்ளது.

நடிகை அடா ஷர்மா கூறுகையில்.., “ZEE5 இல் கேரளா ஸ்டோரி படத்திற்குக் கிடைத்து வரும் வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இப்படம் திரையரங்குகளில் பல சாதனைகளைச் செய்தது, இப்போது OTT யிலும் பல சாதனைகளைச் செய்து வருவது மகிழ்ச்சி. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், பலர் இப்படத்தின் வாயிலாக எங்களுக்கு அவர்களின் இதயத்தில் நிரந்தர இடத்தைத் தந்துள்ளனர். பார்வையாளர்கள் மூன்றாவது மற்றும் நான்காவது முறையாகப் படத்தைப் பார்ப்பதாக வரும் செய்திகள், பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஒவ்வொருவரையும் கவரும் அழுத்தமான இப்படத்தினை ZEE5 உலகம் முழுவதும் உள்ள மக்களின் வீடுகளுக்குக் கொண்டு சேர்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! “

மிகச் சக்தி வாய்ந்த கதையுடன், நம் சிந்தனையைத் தூண்டி விடும், கேரளா ஸ்டோரி ZEE5 இல் தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் இதயங்களை வென்று, வரவேற்பைக் குவித்து வருகிறது. வெளியான இரண்டு வாரங்களுக்குள் 300 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து பெரும் சாதனை படைத்துள்ளது.