
- கரு: தமிழியல் பன்னாட்டு மாநாடு 2021.
வாழ்வியல் மேம்பாட்டிற்குத் தமிழின் கொடை
என்னும் கருப்பொருளில் இயங்கலை மாநாடு
எதிர்வரும் நவம்பர் 24 முதல் 28 வரை (5 நாட்கள்) மலேசிய நேரம் மாலை மணி 7.00 முதல் இரவு 10.00 மணி வரை (இந்திய நேரம் மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை) வாழ்வியல் மேம்பாட்டிற்குத் தமிழின் கொடை என்னும் கருப்பொருளில் இயங்கலை மாநாடு (WEBINAR) நடைபெறவுள்ளது.
இணையவழி நடத்தப்படும். இப்பன்னாட்டுத் தமிழியல் மாநாட்டை, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, மலேசியத் தமிழர் சங்கம், மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைத்தலைவர் முனைவர் சு. மணிமாறன், மலேசியத் தமிழர் சங்கத்தலைவர் வழக்கறிஞர் எம்.ஜெ. கணேசன், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் கு.பழனி ஆகியோர் தலைமையில் ஏற்பாட்டுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு மாநாட்டுப் பணிகள் ஆக்கப்பூர்வமாக நடைபெற்று வருகின்றன.
வாழ்வியல் மேம்பாட்டிற்குத் தமிழின் கொடை என்னும் முதன்மைப்பொருளுக்கு ஏற்ப; தமிழ் மொழியின் தொன்மை, கலை பண்பாட்டுச் செம்மை, சமய மாண்பு, பண்பாட்டுக் கீர்த்தி, அறிவியல் ஆளுமை, வர்த்தகத் தொழில்நுட்பத்திற்குத் தமிழின் பங்கு, உலக உயர்ச் சிந்தனைக்கு வித்திடும் தமிழ் போன்ற பல்வேறு கூறுகள் தமிழ் மொழியில் எவ்வாறு தொழில்படுகின்றன என்பதை இம்மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகள் வெளிப்படுத்திக் காட்டும். இதுவரை 120 ஆய்வுக் கட்டுரைகள் பல உலக நாடுகளிலிருந்து பெறப்பட்டுள்ளன. இக்கட்டுரைகள் முறைப்படுத்தப்பட்டு இரு மொழிகளில் (தமிழ்/ஆங்கிலம்) நூலாகப் பதிப்பிக்கப்பட்டு உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் விநியோகிக்கப்படும்.
எதிர்வரும் நவம்பர் 24ஆம் தேதி மாலை மணி 7.00க்கு (இந்திய நேரம் மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை) இம்மாநாடு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டு அமைச்சர் பெருமக்கள் மற்றும் மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம். சரவணன் ஆகியோர் தொடக்கி வைத்து உரையாற்றுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இம்மாநாட்டில் அறிஞர் பெருமக்களின் முதன்மை சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளன. உலக நாடுகளில் வாழும் தமிழர்களும் தமிழ் உணர்வாளர்களும் இயங்கலை வழி இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாநாட்டுக் குழு அழைப்பு விடுத்துள்ளது. மேல் விவரங்களுக்கு +601135231429 என்ற கைத்தொலைபேசி வழி மாநாட்டுச் செயலாளர் திரு பரமசிவம் மருதையுடன் தொடர்பு கொள்ளலாம்.
தமிழோடு உயர்வோம்! தரணியை வெல்வோம்!!