தலைக்கூத்தல் திரைப்பட விமர்சனம்


தமிழ்நாட்டில் பல கிராமங்களில் நடந்த… தற்போதும் நடக்குமா என்கிற கேள்வியுடன் நடக்கும் கொடூரமான கருனை கொலை என்கிற பெயரில் நடக்கும் சம்பவம்தான் இந்த தலைக்கூத்தல்.
வயது முதிர்ந்து படுத்த படுக்கையாகி விடும் முதியோர்களைஅவர்கள் திரும்பவும் குணமடைய மாட்டார்கள் என்னும் நிலையில் அவர்களுக்கு நல்லெண்ணையை தலையில் தேய்த்து குளிர்ந்த நீரை ஊற்றி மேலும் குடிப்பதற்கு இளநீரை தந்து ஜன்னி வர வைத்து உயிரை நீக்குவதே இந்த தலைக்கூத்தல் எனப்படும் தலைக்கு தண்ணீர் ஊற்றிஉயிரைப் பறிக்கும் நிகழ்வு
அப்படியான ஒரு நிகழ்வையும் வாழ்வையும் மிகவும் எதார்த்தமாகவும் படம் பார்ப்பவர்களை கனத்த இதயத்துடனும் யோசிக்க வைக்கும்படி இந்த படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்
கோவில்பட்டியில் நிகழ்கிற கதை. கட்டிடம் கட்டும் மேஸ்திரியான சமுத்திரகனிக்கு உதவி செய்ய செல்லும் அவரது அப்பா மாடி மேலிருந்து தவறி விழுந்து படுத்த படுக்கையாகி விடுகிறார்.சுயநினைவின்றி இருக்கும் அவருக்கு இயற்கை உபாதைகளையும் படுக்கையை சரி பண்ணவும் அவரை பராமரிக்கவும் நேரம் செலவழிக்கும் சமுத்திரகனிக்கு வேலைக்குச் சென்று சம்பாதிக்க முடியாமல் போகிறது. எனவே இரவு நேரத்தில் ஒரு ஏடிஎம் காவலாளியாக வேலைக்கு செல்கிறார். அவரது மனைவியும் ஒரு தீப்பெட்டி கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறார் இவர்கள் இருவருக்கும் ஒரு மகள்.
இந்த நிலையில் இருவரது வருமானமும் போதாத நிலையில் சமுத்திரகனியின் மாமனாரும் மச்சானும் சேர்ந்து சமுத்திரகனியின் தந்தையை கருணை கொலை செய்து விடலாம் அதாவது தலைக்கு ஊற்றி விடலாம் என்று கூற, சமுத்திரகனி அதற்கு சம்மதிக்காமல் இயற்கையாக வந்த உயிர் தானாகவே பிரிய வேண்டும் அதை கொல்ல யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என்று போராட, அவரால் தந்தையை காப்பாற்ற முடிந்ததா அல்லது உறவினர்கள் எடுத்த முடிவுக்கு வீழ்கிறாரா என்பது கதை.
எத்தனையோ உணர்வுபூர்வமான வேடங்களில் சமுத்திரகனி நடித்திருந்தாலும், இந்த படத்தில் ஒரு தந்தையை பாதுகாக்கும் மகனாகவும் குழந்தை போல் இருக்கும் தந்தைக்கு தகப்பனாகவும் வாழ்ந்திருக்கிறார்.மரணப் படுக்கையில் இருக்கும் தனது தந்தை எப்படியாவது மீண்டு விடுவார் என்ற ஒரு தவிப்பில் அவருக்கு பணிவிடை செய்யும் இடத்தில் கண் கலங்க வைக்கிறார்.
மனைவியாக வரும் வசந்தரா தனது கணவன் செய்யும் செயலினை பார்த்து ஒரு கட்டத்தில் வெறுக்கும் போதும், தன்னுடைய தந்தையும் தம்பியையும் அழைத்து மாமனாரை கொன்று விடலாம் என்றும் கூறும் போதும்நடிப்பில் யதார்த்தமாக நிற்கிறார்.
ஒரு கட்டத்தில் தன் மாமனாருக்கு சற்றே சுயநினைவு திரும்பும் பொழுது, தான் பேசியதெல்லாம் அவருக்கு கேட்டு இருக்குமோ என்கிற தவிப்பும், அதற்காக அவர் சென்று மன்னிப்பு கேட்பதும் ஒரு கையாலாகாத மருமகளாகவே இருக்கிறார்.
சமுத்திரகனியின் மகளாக நடித்திருக்கும் அந்த குட்டி பெண் தன் தாத்தாவின் மீது வைத்திருக்கும் பாசம் நெகிழ்ச்சியாக இருக்கிறது.
மரணப் படுக்கையில் இருக்கும் சமுத்திரகனியின் அப்பாவின் நினைவுகள் அவ்வப்போது பின்னோக்கி சென்று வருவது தன்னுடைய காதலை நினைத்துப் பார்ப்பது ஒரு நல்ல கதை அம்சமாக உள்ளது
சமுத்திரகனியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி, நண்பனாக நடித்திருக்கும் ஆடுகளம் முருகதாஸ், வசுந்தராவின் அப்பாவாக நடித்திருக்கும் பெரியவர், குறி சொல்லும் திருநங்கை வையாபுரி என்று ஒவ்வொரு பாத்திரமும், மிகச் சரியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
மார்ட்டின் துன்ராஜின் ஒளிப்பதிவுகண்ணன் நாராயணனின் இசையும் மிகச் சரியான விகிதத்தில் நம்மை ஊடுருவி செல்கிறது இதைப் போன்ற தரமான படங்களை தரும் ஒய் நாட் சசிகாந்த் பாராட்டுக்குரியவர்.
தலைக்கூத்தல் நினைவு தப்பாமல் தான் சாகப்போவது தெளிவாக தெரிந்தும் கையறு நிலையில் இருக்கும் மனிதனின் கொடுமையான குளியல்
—டெக்கான் சரவணன்