‘வெள்ளிமலை’ ட்ரைய்லர் வெளியீட்டு விழா

இயக்குநர் ஓம் விஜய் இயக்கத்தில் சூப்பர் குட் சுப்ரமணி கதையின் நாயகனாக நடித்திருக்கக்கூடிய ‘வெள்ளிமலை’ படத்தின் ட்ரைய்லர் வெளியீட்டு விழா  சமீபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பேரரசு, கே.எஸ். ரவிக்குமார், சீமான் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது, “இந்தப் படத்தைப் பார்க்கும்போது என்னுடைய முதல் படம் வந்தது போல எளிமையாக உள்ளது. இந்தப் படத்தில் நடித்த சுப்ரமணி என் மனதுக்கு நெருங்கிய நண்பர். ’பிசாசு’ உட்பட என்னுடைய பல படங்களில் நடித்திருப்பார். இயக்குநரை நான் பார்த்தபோது வேட்டியுடன் வந்திருந்தார். தயாரிப்பாளர் படித்து முடித்து சம்பாதித்த பணத்தை சினிமாவில் கொண்டு வந்தார். அவருக்கு பாராட்டுகள். இந்த வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. எப்படி வாழ்ந்து தீர்ப்பது எனத் தெரியவில்லை. நாம் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய ஒரே இடம் திரையரங்குதான். அதனால், இந்தத் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய வெற்றிப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். படத்தின் இரண்டு பாடல்களும் எனக்குப் பிடித்திருக்கிறது. இன்றைய கதைக்களத்தை நான் கவனித்துதான் வருகிறேன். என்றாவது அத்தி பூத்தாற்போலதான், தான் வளர்ந்த கண்ட களத்தை கதையாக கொண்டு வர வேண்டும் என்று நினைப்பார். அப்படி வந்த இயக்குநர் தான் கண்ட கனவை மெய்ப்படுத்தி இருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். இது போன்ற படங்களை தியேட்டரில் பார்க்க வேண்டும். ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்பது ரவுடித்தனம். சாமி இல்லாத ஒரே இடம் தியேட்டர்தான்.

பெரிய படங்கள், அதிகம் செலவழிக்கக்கூடிய படங்களுக்குதான் இப்போது தியேட்டர்களுக்கு போகிறார்கள். இப்போது நான் மருத்துவம் பற்றி அதிகம் படித்துக் கொண்டிருக்கிறேன். மனிதர்களை குணப்படுத்த யாரும் இல்லை சுரண்டத்தான் இருக்கிறார்கள். எந்த ஒருவன் எந்த ஒரு பொருளைப் படைக்கிறானோ அது மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைப்பதோ அதுதான் சிறந்த பிராண்ட். அப்படிதான் சினிமாவும். அந்த கதை அவர்களுக்கு பயன்பட வேண்டும். திரையில் அவர்களுக்கு அது உதவ வேண்டும். அது போன்ற படமாகதான் இதை பார்க்கிறேன். நாம் ‘கடைசி விவசாயி’ படத்தைப் பலரும் பார்க்காமல் விட்டு விட்டோம். சர்வதேச அங்கீகாரங்கள் பலதைப் பெற்றிருக்கிறது. பார்க்காத நாம் வெட்கித் தலை குனிய வேண்டும். அதை போல, இந்தப் படமும் நன்றாக இருந்தால் போய்ப் பார்த்து வெற்றிப் பெற செய்யுங்கள். சுப்ரமணியனை கதாநாயகனாக்கி படமாக்க இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும். இதை நாம் பாதுகாக்க வேண்டும்” என்றார்.

தயாரிப்பாளர் ராஜகோபால் இளங்கோவன் பேசியதாவது, “இந்தப் படத்தின் அழைப்பை ஏற்று வந்திருக்கக்கூடிய அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. ‘வெள்ளிமலை’ படக்குழுவினரின் ஒத்துழைப்பிற்கும் நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் தேனப்பன் பேசியதாவது, “சூப்பர் குட் சுப்ரமணி என்று சொல்வது போல, நானும் சூப்பர் குட்டில் இருந்துதான் வந்தேன். அவர் கதாநாயகன் ஆனது நானே ஆனது போல மகிழ்ச்சியாக இருக்கிறது. மிஷ்கின் சொன்னதுபோல, படத்தின் ட்ரைய்லர் நன்றாக உள்ளது. உங்கள் ஆதரவு படத்திற்கு வேண்டும்”.

சக்தி ஃபிலிம் பேக்டரியின் சக்திவேலன், “இது எளிய மக்களுக்கான படம். நண்பர் விஜய் பல நல்ல கதைகளை வைத்திருப்பவர். இந்தப் படத்திற்கு தெய்வீகமான இசை தேவைப்படுகிறது என ரவிநந்தன் சாரை இசையமைப்பாளராக கொண்டு வந்திருக்கிறார்கள். மிஷ்கின் சார் சொன்னதுபோல, எளிமையான மனிதர்களைக் கொண்டு எடுக்கப்படும் கதைகள் குறைந்து வருகிறது. அந்த வரிசையில், மண்ணின் கதைகளையும் மனிதர்களையும் கலாச்சாரத்தையும் ‘வெள்ளிமலை’ படம் பிரதிபலிக்கும். ‘விஸ்வாசம்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ போன்ற படங்களின் விநியோகஸ்தர் நான்தான். குடும்ப பார்வையாளர்களை மையமாகக் கொண்டு வர இருக்கும் ‘வாரிசு’ படத்திற்கு அதிக வசூல் இருக்கும் என திரையரங்க உரிமையாளர்கள் கணித்துள்ளனர். அதுபோல, நம் மண்ணின் தொன்மையை சொல்லும் இந்தப் படத்தையும் உயர்த்திப் பிடிக்க வேண்டும்”.

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியதாவது, “இந்தப் படத்திற்காக இத்தனை திரையுலகப் பிரபலங்கள் கூடியிருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இதில் கதாநாயகனாக நடித்திருக்கக்கூடிய சூப்பர் குட் சுப்ரமணி. அத்தனை வருடங்கள் அவர் சினிமாவில் போராடினார். அத்தனைக்கும் சேர்த்து அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அவரது வாழ்க்கையில் இந்தப் படம் மிகப் பெரிய திருப்புமுனையாக அமையப்போகிறது. இந்தப் படத்தை தயாரிப்பாளர் பார்த்ததை விட அதிகமுறை நான்தான் பார்த்திருக்கிறேன். அதற்குக் காரணம் இதன் இயக்குநர் ஓம் விஜய். அவர் கடுமையான உழைப்பாளி. அவருக்குச் சரியான நேரத்தில் வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. அனைவரும் இந்தப் படத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டும். சீமானுடைய பேச்சை நேரில் கேட்பதற்காகவும்தான் வந்திருக்கிறேன்” என்றார்.

அடுத்து பேசிய இயக்குநர் பேரரசு, “சூப்பர் குட் சுப்ரமணியத்துக்காகதான் நான் வந்தேன். சூப்பர் குட் மூலமாகதான் நானும் இயக்குநராக அறிமுகமானேன். சூப்பர் குட் என்றாலே விஸ்வாசம்தான். இந்தப் படத்தில் திண்டுக்கல் லியோனி அய்யா பாடலும் பாடியிருக்கிறார். பல சினிமா படங்களில் பாடல் மூலமாக இவர் சாடியிருக்கிறார். என்னுடைய பாட்டை இவர் கிண்டல் செய்து பட்டிமன்றத்தில் பேசியிருக்கிறார். இப்போது இவரே பாடல் எழுதி இருக்கிறார். மருத்துவர், வழக்கறிஞர், பேச்சாளர் என அனைவரையும் சினிமா அரவணைக்கும். ஆனால், அமைச்சர் வர மாட்டார். இங்கிருந்துதான் அமைச்சர் ஆவார்கள். அடுத்து அண்ணன் சீமான். தமிழகத்தில் எந்த பிரச்சனை நடந்தாலும் முதல் கேள்வி அவரிடம் இருந்துதான் வரும். தமிழ் சினிமாவைப் பொருத்தவரை மலை என்றாலே வெற்றிதான். ‘வெள்ளிமலை’ படமும் இதில் சேரும். இந்தப் படத்தின் கதை நாட்டு மருத்துவர்கள், மருந்து அதைப் பற்றின கதையாக இருக்கும். நாட்டு மருத்துவம், விவசாயம் இதை அடுத்து தமிழ் அழிந்து வருகிறது. இதைத்தான் சீமானும் சொல்லி வருகிறார். தமிழ் பெற்றோருக்கு பிறந்தால் மட்டுமே தமிழனாகி விட முடியாது. தமிழ் பேசி, எழுதினால்தான் நீ தமிழன். தனியார் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயமாக்க வேண்டும். அழித்து விடாமல் காக்க வேண்டும். கொரோனாவில் நிறைய பேரைக் காப்பாற்றியது நாட்டு மருத்துவம்தான். ஆங்கில மருத்துவம் நம்மை அடிமைப்படுத்துகிறது. இதனாலேயே, ‘வெள்ளிமலை’ வெற்றியடைய வேண்டும்”.

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேசியதாவது, “இங்கு நான் வந்ததற்கு முக்கியக் காரணம் சூப்பர் குட் சுப்ரமணிதான். நான் அங்கு உதவி இயக்குநராகதான் உள்ளே நுழைந்தேன். அப்போதிருந்தே சுப்ரமணி அங்கு இருப்பார். என்னிடமும் நிறைய கதைகள் சொல்லி இருப்பார். அரைமணி நேரத்தில் ஐந்தாறு கதைகள் கமல் சாருக்கு அடுத்து சொல்லக்கூடியவர் இவர்தான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக படங்களில் நடிக்க வந்திருக்கிறார். இப்போது படங்களில் அவர் ஸ்டில்லை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘வெள்ளிமலை’ தங்கமலையாக உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்”.

திண்டுக்கல் லியோனி பேசியதாவது, “’வெள்ளிமலை’ படத்தின் தயாரிப்பாளரின் வயதுக்கும் ஸ்டைலுக்கும் சூப்பர் குட் சுப்ரமணியை எப்படி கதாநாயகனாகத் தேர்ந்தெடுத்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. எளிமையான இயக்குநர், கதாநாயகன், தயாரிப்பாளர் என அனைத்தும் அமைந்த படம் ‘வெள்ளிமலை’தான். இன்று நிகழ்விற்கு அழைத்திருக்கும் விருந்தினர்களும் எளிமை விரும்பிகள்தான். என்னை இந்தப் படத்தில் பின்னணிப் பாடகராக மாற்றிய ரகுநந்தன் சாருக்கும் நன்றி. இந்தப் பாடலை அரைமணிநேரத்தில் பாட வைத்தார். இந்தப் படம் தேசியவிருது பெறும் படமாக மாறட்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநரும் நடிகரும் அரசியல்வாதியுமான சீமான் பேசியதாவது, “அனைத்து மருவத்தையும் மிஞ்சியது நம் இயற்கை மருத்துவம்தான். புற்றுநோய், எய்ட்ஸ் போன்றவற்றிற்கு மருந்து இல்லை. அப்படி இருக்கும்போது கொரோனாவிற்கு மட்டும் எப்படி மருந்து கண்டுபிடித்தார்கள் என்பதை நம்பினீர்கள்? இயற்கை பிரசவம் என்பதே இன்று இல்லை. கல்வி என்பது மானுட உரிமை. அதைக் கொடுக்க வேண்டியது அரசின் உரிமை. கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை. அறிவை வளர்க்கும் கல்வி நம் அனைவருக்கும் கிடைக்காமல் இருப்பது மாபெரும் அவலம். டெலிஃபோனை கிராஹாம்பெல் கண்டுபிடித்தபோது யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுபோல பல உதாரணங்கள் சொல்லலாம். எதையும் பழமை என்று ஒதுக்க முடியாது. அதுபோல, நாட்டு மருந்துகளையும் மக்கள் ஏற்பார்கள்.  நம் தாய்மொழியை நாம்தான் பேச வேண்டும் என்ற உறுதி மொழியை ஏற்க வேண்டும். என் தம்பி, இயக்குநர் வினோத்திடம் கூட, ஹெச்.வினோத் என்று பெயரைப் போடக்கூடாது என்று சொல்லி இருக்கிறேன். ஒரு எழுத்தைக் கூட தமிழில் மாற்ற முடியாத தமிழன் எப்படி நாட்டை மாற்ற முடியும். உலகில் உள்ள எந்தவொரு மொழிகளைக் காட்டிலும் தனித்து இயங்கக்கூடிய மொழி தமிழ் மொழி” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
YouTube
LinkedIn
Share
Instagram
WhatsApp