தேவி பிரசாத் இசையில் “ஓ பெண்ணே” பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார்

டி.எஸ்.பி யின் “ஓ பெண்ணே” சுயாதீன ஆல்பம் பாடல் வெளியீடு !!

T- Series சார்பில் பூஷன் குமார் தயாரிப்பில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் “ஓ பெண்ணே” பாடல் வெளியீட்டு விழா இன்று பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் அரங்கேறியது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான உலகநாயகன் கமல்ஹாசன் இப்பாடலை வெளியிட்டார்.

இந்த பாடல் ஒரு பான்-இந்திய பாப் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் தமிழ் பதிப்பை இன்று கமல்ஹாசன் வெளியிட்டார். இந்த பாடலின் ஹிந்தி பதிப்பை ரன்வீர் சிங் முன்னரே வெளியிட்டு இருந்தார். இந்த பாடலின் தெலுங்கு பதிப்பு திரு நாகார்ஜூனாவால் இன்று மாலை வெளியாக இருக்கிறது.

வெளியீட்டு விழாவினில்…

இசையமைப்பாளர் தேவிஶ்ரீபிரசாத் கூறியதாவது…

“கமல் சாருக்கு எனது அன்புகளும் நன்றிகளும். நான் எந்த பணியை மேற்கொண்டாலும் அவர் எனக்கு உறுதுணையாகவும், உத்வேகம் கொடுக்க கூடியவராக எப்போதும் இருக்கிறார். இந்த சர்வதேச பாடல் உடைய ஐடியாவை முதன் முதலில் அவரிடம் தான் கூறினேன். அவருடைய உத்வேகம் தான் நான் இந்த பாடலை முடிக்க காரணமாக இருந்தது. அவருக்கு இசையின் மேல் இருக்கும் பிரியம் தான், என்னையும் அவரையும் ஒன்றிணைத்தது. அதனால் தான் அவர் இதை வெளியிட வேண்டும் என்று விரும்பினேன். சுயாதீன கலைஞர்கள் வெளியே வர வேண்டும் என்பதற்காக தான் கொரோனா காலத்தில் ராக்ஸ்டார் என்ற நிகழ்வை நடத்தினேன். இந்த பாடலின் நோக்கமே சுயாதீன கலைஞர்கள் எல்லா மொழிகளிலும் தங்கள் திறமையை காட்ட வேண்டும் என்பது தான். இனிமேல் வரும் சுயாதீனகலைஞர்களும் பல மொழிகளில் தங்கள் பாடல்களை உருவாக்க வேண்டும். பல மொழிகளை கற்று கொண்டு, பல மொழிகளில் இசையமைக்க வேண்டும். இந்த பான் இந்தியன் பாப் ஆல்பத்திற்கு உங்கள் ஆதரவு தேவை. சமீபத்தில் ஹிந்தியில் இந்த பாடல் வெளியானது, அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. T Series-க்கு இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். பூஷன் குமார் அவர்களுக்கும் எனது நன்றிகள். உங்களது அன்பும் ஆதரவும் எங்களுக்கு தேவை. அனைவருக்கும் நன்றி.

நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது…

“தேவிஶ்ரீபிரசாத்தை எனக்கு பல நாட்களாக தெரியும். இவர் என்னை அதிகமாக வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறார். பல சாதனைகள் படைத்து அடுத்து அடுத்து என உத்வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கிறார், அது சிறந்த இசை கலைஞர்களுக்கே உண்டான சிறப்பம்சம். இவருக்கு வெற்றி கண்டிப்பாக வந்தே தீர வேண்டும், இவருக்கு வெற்றி தாமதாகிறது எண்ணி நான் வருத்தப்பட்டு இருக்கிறேன். இவருக்கு உங்களது ஆதரவு கண்டிப்பாக தேவை. திரை இசை பாடல்களை தாண்டி, சுயாதீன பாடல்கள் நிறைய வர வேண்டும், இசை கலைஞர்கள் அதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. திரை இசை அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு தான், சுயாதீன பாடல்கள் தான் இசை கலைஞர்கள் தங்களுடைய முழு திறமையும் வெளிகாட்ட ஒரு பாதையாக இருக்கும். மற்ற நாடுகளில் திரை பிரபலங்களை விட சுயாதீன கலைஞர்கள் பிரபலமாகி இருக்கிறார்கள். திரைப்படங்களை விட மிகபெரிய துறையாக இசை துறை வளர வேண்டும், அதற்கு உண்டான தகுதி அதில் இருக்கிறது. அதனால் அதற்கு உங்கள் அனைவரது ஆதரவு தேவை. பழைய காலத்தில் இது அதிகமாக இருந்தது, இப்போதும் மீண்டும் அது வர வேண்டும். தேவிஶ்ரீபிரசாத் உடைய இந்த பாடல் பெரும் வெற்றி பெற வேண்டும், தமிழ் சினிமாவிலும் இவர் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டும். இந்த பாடலுக்கு உறுதுணையாக இருந்த பூஷன் குமாருக்கு நன்றி. இந்த பாடலுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
YouTube
LinkedIn
Share
Instagram
WhatsApp