சினிமாவில் இசை காலக்கட்டத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது – இசையமைப்பாளர் டி.எம்.உதயகுமார்

நான் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே பொள்ளாச்சியில் தான். 5-ஆம் வகுப்பு படிக்கும்போது மருவூரால் கோலாட்ட குழு, கிராமிய பண்பாட்டு குழுவில் சேர்ந்தேன். AP விட்டல் கந்தசாமி பிள்ளை தான் என்னுடைய குரு. அந்த குழுவில் நடனங்கள் ஆடினாலும், எனக்கு வாத்தியங்களின் மீது அதிக ஆர்வம் இருந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த வாத்திய கருவிகளை இசைத்துக் கொண்டிருப்பேன். அப்படியே நடனத்திலிருந்து இசைக்கு மாறினேன்.

எதிர்பாராதவிதமாக தான் சென்னைக்கு வந்தேன். திரும்ப ஊருக்கே சென்று விடுவோம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், இசை என்னை சென்னையிலேயே வசிக்க வைத்து விட்டது.

ஆரம்பத்தில் சவுண்ட் இன்ஜினியரிங் பணியோடு நிறைய படங்களுக்கு ஃப்ரீலான்ஸராகவும்,
ஆல்பம் படங்களுக்கும் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

என்னுடைய நண்பர் Friends talkies studio முகில்மித்ரன் எனக்கு பேருதவி செய்து வருகிறார். அப்படி நண்பர்கள் மூலமாக பிரண்ட்ஷிப் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதோடு குழலி படத்திலும் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், முதலில் பிரண்ட்ஷிப் படம் வெளியானது. அப்படத்தின் இசையை அனைவரும் என்னை பாராட்டி, ஊக்கப்படுத்தினார்கள். ஆகையால், சிறந்த புதுமுக இசையமைப்பாளர் என்ற எடிசன் விருது கிடைத்தது. இதற்கு முக்கிய பங்கு பத்திரிக்கையாளர்களுக்கு உண்டு.

குழலி படத்தின் இயக்குநர் சேரா கலையரசன் நண்பர்கள் மூலம் அறிமுகமானார். அப்படித்தான் இப்பட வாய்ப்பு கிடைத்தது. படம் முழுக்க முழுக்க கிராமிய மணம் கமழும் திரைப்படம். அதற்கு ஏற்றார்போல் இசையமைத்து இருக்கிறேன். புல்லாங்குழலை வைத்து வித்தியாசமாக முயற்சி எடுத்திருக்கிறேன். கிராமிய இசையை புதிதாக உணரலாம்.

மேலும், திண்டுக்கல், மதுரை, வத்தலகுண்டு பகுதிகளுக்கு சென்று கும்மி, தப்பிசை, குலவை போன்ற விஷயங்களை பிரத்யேகமாக பதிவு செய்தோம்.

நானும் கலை சாரும் இருக்கும் உறவு ஒரே குடும்ப உறுப்பினர்கள் போல் தான் பழகி வருகிறோம். அதேபோல் சினிமாவிலும், இசையிலும் எங்களுடைய எண்ணங்களும் ஒரே மாதிரி இருக்கிறது. அது இப்படத்தின் இசைக்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது.
குழலி படத்திற்கு மொத்தம் 16 விருதுகள் கிடைத்துள்ளது. அதில் சிறந்த இசை மற்றும் சிறந்த பாடல்களுக்காக எனக்கு 4 விருதுகள் கிடைத்துள்ளது. மாநில விருதும் கிடைக்கும் என்று படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

குழலி படத்திற்காக நடிகர், நடிகைகள் மட்டுமல்லாது தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவரும் இரவு பகல் பாராது தங்களுடைய முழு உழைப்பையும், ஒத்துழைப்பையும் கொடுத்திருக்கிறார்கள்
. குறிப்பாக, என்னுடைய இசை குழுவினர்கள் மிகவும் உறுதுணையாக இருந்தார்கள்.

இன்னமும் இசையை நான் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். பெரிய (Concert) இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பல இயக்குநர்கள், நடிகர்களுடனும் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. இது தவிர பெரிய ஸ்டூடியோ அமைக்க வேண்டும் என்று எதிர்காலத் திட்டம் உள்ளது.

சினிமாவில் காலகட்டத்திற்கு ஏற்ப இசை மாறிக்கொண்டே வருகிறது. தற்போது இசையில் கற்றுக் கொள்வதற்கு எக்கச்சக்கமான விஷயங்கள் வந்துவிட்டது.

என்னுடைய வளர்ச்சிக்கு என்னுடைய அப்பா அம்மா மற்றும் நண்பர்கள் பெரிதும் உறுதுணையாக இருக்கிறார்கள். அதேபோல, என்னுடைய மனைவியும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். என்னுடைய திருமணம் காதல் திருமணம். ஒரு மகள், ஒரு மகன் என 2 குழந்தைகள். மனைவி நின்ஸி வின்சென்ட் பின்னணி பாடகியாக இருக்கிறார். இசைஞானி இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், தேனிசைத் தென்றல் தேவா மற்றும் பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறார். குழலி படத்திலும் அவர் பாடியிருக்கிறார். அவரும் இதே துறையில் இருப்பதால் இந்தத் துறையில் இருக்கும் நேர்மறை எதிர்மறை விஷயங்களை நன்கு அறிந்து உள்ளதால் என்னுடைய துறையில் நான் பணியாற்ற உதவியாக இருக்கிறது.

தற்போது, நடிகர் ஆர்.எஸ். கார்த்திக் நடிக்க, மதி இயக்கத்தில் அஜினமோட்டோ படத்தை இசையமைத்திருக்கிறேன். மைடியர் லிசா படத்தில் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்திருக்கிறேன். இது தவிர இன்னும் இரண்டு பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறேன். ஆனால் அப்படங்களை பற்றி அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
Facebook
YouTube
YouTube
LinkedIn
Share
WhatsApp