முதல் நீ முடிவும் நீ- திரைப்பட விமர்சனம்

நினைவுகள் மனிதனுக்கு மட்டுமே இயற்கை வழங்கியிருக்கும் ஒப்பற்ற விசயங்களின் ஒன்று . எல்லோருக்கும் நமது பள்ளி பருவ நாள்களை அசைபோட்டுப் பார்ப்பதில் ஒருவித அலாதி சுகம் இருக்கவே செய்கிறது. அப்படியாக 90கால கட்டத்தின் பள்ளி நாள்களை இனிமையாக கோர்த்து சினிமாவாக்கியிருக்கிறார் இயக்குநர் தர்புகா சிவா.

விநோத், சைனீஸ், ரிச்சர்ட், அனு, கேத்தரின் இவர்கள் எல்லோரும் இக்கதையில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள். ஒரே பள்ளியில் படிக்கும் இவர்களது பள்ளி நாட்கள் நமக்கு கத  களமாக கிடைக்கிறது. பொதுவாக இதுபோன்ற கதைகளில் புதுமையான காட்சிகள் இடம்பெறுவது கடினம். காரணம் கிட்டத்தட்ட எல்லோருடைய பள்ளி நாள்களிலும் நட்பும் காதலுமே நிறைந்து இருக்கும். முதல் நீ முடிவும் நீ அதற்கு விதிவிலக்கு அல்ல.  அதன் வீச்சு முடிவாகிறது. 96 ஒரு விதம் என்றால் அழகி ஒரு ரகம் என்றால் ஆட்டோகிராப் இன்னொரு ரகம்.

இதில் முதல் நீ முடிவும் நீ எங்கு வேறு படுகிறது என்றால். மிகப் பெரிய சோக காட்சிகள் இல்லாமல் ரசிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளது. அதுவே இப்படத்தின் முதல் பலம் ஆறுதலும் கூட. டீ சீரிஸ் கேஸட்டில் பாடல் பதிவு செய்வது. சட்டையில் இங்க் தெளிப்பது. போன்ற உண்மையில் பள்ளி பருவத்தில் நடைபெறும் விசயங்களே காட்சிகளாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. அனு, விநோத் ஜோடி நல்ல தேர்வு. 90களின் அசல் முகமாக அனைவருமே இருக்கிறார்கள். முகம் சுளிக்க வைக்கும் வசனங்கள், காட்சிகள் இல்லாமல் தென்றல் தீண்டும் சுகம் போல மென்மையாக காட்சிகளை நகர்த்தியிருக்கிறார் தர்புகா சிவா.

முதல் பாதி இப்படி மயிலிறகு போல வருடினாலும் இரண்டாம் பாதி நம்மை கொஞ்சம் வேக காற்று. மாணவர் மீண்டும் சந்திக்கும் காட்சிகளின் நீளத்தை கொஞ்சம் அதிகம். பதினொன்றாம் வகுப்பு மாணவர்களை வளர்ந்தவர்களாக இரண்டாம் பாதியில் காட்டியிருக்கிறார் இயக்குநர். நல்வாய்ப்பாக அனைவருக்கும் ஒப்பனை சரியாக அமைந்து இருக்கிறது. வானம்பாடி பறவைகள் போல பாடித் திரிந்த அவர்களது வாழ்க்கையில் தனித்தனியே சொல்ல சில சோகக் கதைகளும் சேர்ந்து கொள்கின்றன.

பள்ளி காலத்தில் நடந்த சின்ன காதல் முறிவு.,  அம்முறிவு மனதில் பெரிய பாரத்தை அவர்களது மனதில் ஏற்றி விடுகிறது எனக் காட்டியிருக்கிறார்கள். விநோத்தாக நடித்திருக்கும் கிஷன் தாஸ் சிறப்பாகவே நடிப்பை வழங்கியிருக்கிறார். மாணவ பருவத்திலும் சரி ஒரு குடும்பஸ்தனாக மாறிய பிறகும் சரி நடிப்பில் நல்ல உழைப்பு தெரிகிறது. அனுவாக வரும் அம்ரிதாவும்  நடிப்பை மிக சரியாக வழங்கியிருக்கிறார்.

ரிச்சர்ட், சைனீஸ் போன்ற பாத்திரங்கள் எல்லா வகுப்புகளிலும் உண்டு. அது தர்புகாவின் வகுப்பறையிலும் இருக்கிறது. தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்த முறையான பதிவையும் இப்படம் செய்திருக்கிறது.

90களின் கால கட்டத்தை மிகப் பொறுத்தமான ஒளியமைப்புடன் வழங்கியிருக்கிறார் சுஜித் சரங். மன்மதன் கதாபாத்திரம் மூலம் இருவேறு கதை முடிவுகளை கொடுத்திருப்பது நாஸ்டாலஜி வகை கதைகளில் புதுமையான அணுகுமுறை. படத்தின் பிற்பாதியில் இன்னுமே நிறைய சுவாரஸ்யங்களைச் சேர்த்து ரசிகர்களை எங்கேஜ் செய்திருக்கலாம் என்றாலும் அது ஒரு குறையாகப் படவில்லை. பின்னனி இசை இதம்.

கதை, திரைக்கதை, பாத்திரங்களுக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்டிருக்கும் முகங்கள், ஒளிப்பதிவு, இசை என எல்லாமே முடிந்த வரை சரியாகவே அமைந்திருக்கிறது. ‘முதல் நீ முடிவும் நீ’ நல்ல முயற்சி. உள்ளங்கைக்குள் ஒரு ஸ்பூன் தேனை ஊற்றி உறிஞ்சுவது போல இனிப்பான சினிமா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
YouTube
LinkedIn
Share
Instagram
WhatsApp